அப்பாவைக் கொன்றவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 13,902 
 
 

தாவணியை வைத்து சித்திரை முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ஊருக்குள்ளே இருந்து பழவூர் விலக்கு வரை நடந்து வருவது என்றால் கொஞ்சம் தூரம் அதிகம்தான். அதுவும் உச்சிப்படை வெயில்.

இந்த டவுன் பஸ் இப்பிடி வராமல் காலை வாரும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆல மரத்தடி ஸ்டாப்பில் இவள் பள்ளிக்கூடப்புத்தகமும் கையுமாக நிற்பதைப் பார்த்துவிட்டு, பால் பண்ணைக்குப் பால் எடுக்கப் போகிற அடைக்கலம் தான், டவுன் பஸ் வராது. ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் ஒரே கலாட்டா அடிதடி என்று சொன்னான்.

இந்த பரீட்சை இல்லாவிட்டால் கூட சித்திரை அவ்வளவு கண்டிப்பாகப் பள்ளிக்கூடம் போக வேண்டியது இருந்திருக்காது. பரீட்சை எவ்வளவு பயத்தைக் கொடுத்ததோ அவ்வளவு சந்தோஷத்தையும் ஒவ்வொரு தடவையும் கொடுக்கிறது. ஆனால் எத்தனை தடவை பரீட்சை எழுதினாலும் ஒவ்வொரு தடவை பரீட்சை வரும்போதும் சித்திரைக்குப் பயம் மட்டும் போகமாட்டேன் என்கிறது.

“அப்படி என்ன தூக்குலயா போட்டுருவாங்க பெயில் ஆனா . ஏன் இப்பிடிப் பயந்து சாகுது?” என்று தவசிப் பெரியப்பா கூடக் கேட்டார்கள். பல்லைக் குத்திக் கொண்டே, வெற்றிலைக் காவியும் நரைத்த தாடியுமாகப் பெரியப்பா அப்படிக் கேட்கும் போது வெட்கமாகத்தான் இருக்கும். ஆனால், ஒன்றும் சொல்லத் தோன்றாது.

“இவளுக்குப் பரீட்சை வந்துட்டுதுன்னா ஏதாவது பேய் கீய் புடிச்சிடுமோ என்னமோ, சாப்பாடு தண்ணியுமுல்லா இறக்கமத்துப் போகுது” என்று ஒவ்வொரு தடவையும் அம்மா சொல்லத்தான் செய்கிறாள். ஒவ்வொரு தடவையும் சித்திரை ஒன்றுக்குப் பாதியாகச் சாப்பிட்டு விட்டுத்தான் புறப்படுவாள்.

“அணில்பிள்ளைகூட ரெண்டு பருக்கை அதிகமாகக் கொறிக்கும்” என்று அம்மா சொல்வது பின்பக்கம் கேட்கும்.

“பார்த்துப்போ” என்று சத்தம் கேட்கிறது என்றால், அம்மா குனிந்து வெளியே வந்து நடையில் இவளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாள் என்று அர்த்தம். சித்திரை திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பிப்பாள். இந்திரா வாசகசாலைப் பக்கம் தரையில் விரிக்கப்பட்ட தினசரி பேப்பர்களும் அதன் மேல் பதிந்த கைகளும் தெரியும். குனிந்து கொண்டே சித்திரை நடந்து போனால் பஞ்சாயத்துப்போர்டு பஸ் ஸ்டாப்பில், சின்னப் பூ டீச்சரும் இன்னும் ஏழெட்டுப் பிள்ளைகளும் நிற்பார்கள்.

டீச்சரைப் பார்த்தால் சித்திரைக்குச் சந்தோஷமாக இருக்கும். வணக்கம் கூடச் சொல்லமாட்டாள். டீச்சருக்கும் அதெல்லாம் தேவையாக இருக்கவில்லை. டீச்சருக்குப் பின்னால் போய் சித்திரை நின்று கொள்வாள். எப்போதாவது ஒரு தடவை சின்னப்பூ டீச்சர் சித்திரையின் கையை லேசாகப் பிடிப்பார்கள், அநேகமாக அது லீவு முடிந்து பள்ளிக்கூடம் திறந்து பரீட்சை பேப்பர் எல்லாம் திருத்திக் கொடுத்த சமயமாக இருக்கும்.

சித்திரை கால் பரீட்சையில் கணக்கில் எழுபத்தெட்டு மார்க் எடுத்திருந்தாள். ‘குட்’ என்று சித்திரையின் தலையைத் தடவிக் கொடுத்தார்கள். “நூறு எடுத்திரணும் அரையாண்டுத் தேர்வுல” என்றார்கள். சித்திரை கீழே தரையைப் பார்த்துக் கொண்டே, “சரி” என்று சொல்லியிருந்தாள். நாளைக்குத்தான் கணக்குப் பரீட்சை.

இன்றைக்குப் பார்த்து பஸ்ஸையே காணோம். இன்றைக்கு அறிவியல் சரியாக எழுதாவிட்டால் நாளைக்குக் கணக்கும் சரியாக எழுத ஓடாது.

வழியெங்கும், இரண்டு பக்கமும் ஆலமரங்கள் சாய்ந்திருந்தன. குட்டை குட்டையா ஒவ்வொன்றும் ரோட்டுப் பக்கமாகவே சாய்ந்திருப்பது எதனால் என்று தெரியவில்லை.

நடுப் பழவூர் பக்கமாகப் பார்க்கும் போது சரிவுகளில் இரண்டு மூன்று கொத்துக்களாக மேய்கிற ஆடுகள். என்ன கோயில் என்று தெரியவில்லை. பாழடைந்து ‘கிடந்த கோயிலுக்குள்ளிருந்து மஞ்சணத்தி மரம் அடர்த்தியாக முளைத்து வெயிலில் அசைந்தது. கல் மண்டபத்தில் ஆள் இல்லாமல் இரண்டு பெரிய கறுப்பு சாராய கேன்கள் மட்டும் இருந்தன.

அவங்களும் விலக்கிலிருந்து ஊருக்குள் தார்ரோடு போட ஆரம்பித்திருந்தார்கள். கருங்கல் ஜல்லிகள் பரப்பிக்கிடக்கிற அந்த பாதையைச் சித்திரைக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

பத்து நாட்களாகக் காலனியில் இருந்தும், சுதந்திராபுரத்தி லிருந்தும் பஸ் ஏறி தூக்குச்சட்டியும் கையுமாக நிறையப் பேர் இங்கே இறங்குகிறார்கள். எப்போதும் சிவப்புச் சேலையே கட்டிக் கொண்டிருக்கிற சீவலப்பேரியாள், ‘மகள் கூட நானும் பள்ளிக்கூடம் வரலாமானு பார்த்தேன். இன்னிக்குச்சிலேட்டுக் குச்சி எடுத்துட்டுவர அயத்துப்போச்சு. நாளைக்குக் கண்டிப்பா வாரேன்’ என்று சித்திரையிடம் சொல்லிவிட்டுச் சிரித்தபடியே பஸ்ஸைவிட்டு இறங்கி வேலைக்குப் போனாள்.

அம்மா ஏன் இப்படியெல்லாம் சிரிக்க மாட்டேன் என்கிறாள்? நடவு எங்கே, அறுப்பு எங்கே என்று ஏன் எப்போதும் அலைந்து கொண்டிருக்கிறாள்? சித்திரைக்கு யோசனையாக இருந்தது. சின்னப்பூ டீச்சர் வீட்டுக்கு வந்த அன்றைக்கு அம்மா காய்ச்சலில் படுத்திருந்தாள். சித்திரை ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை என்று விசாரிக்கத்தான் டீச்சர் வந்தார்கள் போல. அவசரம் அவசரமாக ஆட்டுக்குட்டியை அவிழ்த்துப் பூவரசமரத்தில் கட்டினாலும், டீச்சர் உட்கார்ந்த இடத்தில் நாலைந்து புழுக்கை கிடக்கத்தான் செய்தது.

“டாக்டர்கிட்டே காட்டி ஊசி போட்டுக்கிட்டா நல்லதுதானே” என்று டீச்சர் சொன்னபோது.

“அதான் கம்பவுண்டர்சைக்கிள்ளே வந்து ரெண்டு நாளாக குழாய் மாத்திரை எல்லாம் கொடுத்தாரே” என்று அம்மா முனகினாள். “நான் இருந்து என்ன செய்யப்போகிறேன்” என்று அழுதாள்.

“துள்ளத்துடிக்க அந்த ஆள் செத்ததுக்கு இந்தப் பொட்டப்பிள்ளை இல்லேன்னா நானும் என்னிக்கோ போயிச் சேர்ந்திருப்பேன்” என்று சேலையைச் சுருட்டி வாயில் வைத்துக் குலுங்கினாள்.

அம்மா அழ அழ சித்திரைக்கு அழுகை அழுகையாக வந்தது. ஆனால், அழவே கூடாது என்றும் தோன்றிற்று. உதட்டைக் கடித்துக் கொண்டே தலைமாட்டில் உட்கார்ந்திருந்தாள். தாங்கமுடியாமல் போனபோது, டீச்சர் கையைப் பிடித்தாள். பதிலுக்கு டீச்சர் சித்திரையின் கைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள்.

“ஓடிப்போய் டீ வாங்கியாரதுக்கு லாயக்கில்லாமல் போச்சே. இப்படி எந்திரிக்க முடியாமக் கிடையிலே கிடக்கேனே தாயி. என் கூடச் சேர்ந்து இந்தச் சின்னப் பிள்ளையும் கசங்குது” அம்மா சொல்லும்போது டீச்சர், “ஒரு கசங்கலும் இல்லை” என்று தலையை நீவி விட்டார்கள். அப்படித் தடவிவிட்டதிலேயே எல்லாம் சரியாகப் போய்விட்டது போல இருந்தது சித்திரைக்கு.

ஒரு தடவை இப்படித்தான் ரொம்பக் கசங்கிப்போன பரீட்சைப் பேப்பரை பள்ளிக்கூட டெஸ்க்கில் வைத்து சித்திரை தடவித் தடவிக் கொடுத்தாள். என்னதான் முயற்சி செய்தாலும் பரீட்சை எழுதும் போது, கசங்கின இடத்தில் எல்லாம் முக்குமுக்காகப் பள்ளம் கிடந்தது. படித்தது எல்லாம் அந்தப் பள்ளத்தில் முட்டிக் கொண்டு மறந்து போய் விடுமோ என்று சித்திரைக்குத் தோன்றியது. அப்படியெல்லாம் ஆகவில்லை. தான் அந்த பேப்பர் மாதிரி இருப்பதாக நினைத்துக் கொண்டாள்.

சித்திரை உள்கழுத்து வரை துடைத்துக்கொண்டு விலக்க ரோட்டுக்கு இரண்டு பக்கமும் பார்த்தாள். ரூட் பஸ்கூட ஓடுகிற மாதிரித் தெரியவில்லை . இடதுபக்கம் தென்பத்து இறக்கத்திலும் நடமாட்டமே இல்லை.

தூரத்தில் யாரோ குடையைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தார்கள். அதைத் தவிர காக்காய் கூடப் பறக்கவில்லை. அமைதியாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது.

ரோட்டுக்கு எதிர்ப்பக்கத்து பெட்டிக்கடையிலிருந்து குரல் வந்தது. கடைக்காரர் ‘கிட்டேமுட்ட ரொம்ப நேரமாப் பஸ்ஸே காண்கலையே’ என்று சித்திரையைப் பார்த்துச் சொன்னார். நாட்டு வாழைப்பழத் தார் ஒன்று வெயிலுக்குக் கறுத்துப் போய்த் தொங்கிக் கொண்டிருந்தது. கோலி சோடாபாட்டில்கள் பச்சையாகத் தெரிந்தன.

சித்திரைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சேர்ந்தா நல்லூர் ஸ்பின்னிங் மில்லுக்குப் போகிறவர்கள், வருகிறவர்கள் தென்பட்டால் விவரம் கேட்கலாம். பஸ் வருமா வராதா என்று தெரியும். பஸ் வராமல் எப்படிப் பரீட்சை எழுத?

குடையை வைத்துக் கொண்டு வந்தவர் எதிர்த்த பெட்டிக்கடையில் போய் நேராக இரண்டு பழத்தைப் பிய்த்துச் சாப்பிட்டார். பழத்தொலியை எங்கே போடுவது என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக எறிந்தார். சட்டைப்பையிலிருந்து காசு எடுத்துக்கொடுத்த படியே, எதிரே நிற்கிற தன்னைப் பற்றி ஏதோ கேட்கிறாரா அல்லது பஸ் வருவதைப் பற்றிக் கேட்கிறாரா என்று சித்திரைக்குத் தெரியவில்லை.

அங்கேயே நின்று பீடியைப் பற்றவைத்துக் கொண்டு, மிக அவசரமான இழுப்பாக இரண்டு மூன்று தடவை இழுத்துவிட்டுப் பீடியை வீசினார். சர்பத் டம்ளருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் வாங்கி அண்ணாந்து குடித்தார். நனைந்த மீசையை மேல் துண்டால் துடைத்துக் கொண்டு பெட்டிக்கடைக்காரரைக் கும்பிட்டார். ரோட்டை குறுக்காகத் தாண்டி இந்தப் பக்கம் வந்து சித்திரைக்கு இடதுபக்கம் நாலடி தள்ளி நின்றார்.

சித்திரை தாவணியைச் சரிசெய்து கொண்டாள். புத்தகங்களையும் பரீட்சை அட்டையையும் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். பஸ் சீக்கிரம் வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. ரூட் பஸ்ஸில் கட்டணம் அதிகம். அதையும் தயாராகக் கையில் எடுத்து வைத்திருந்தாள்.

பீடி குடிக்காவிட்டாலும், பீடி குடித்த வாசம் அடிக்கத்தானே செய்கிறது. இடதுபக்கம் நின்றவர் குடையைத் தணிவாகக் கையில் வைத்துக்கொண்டு இவள் பக்கம் வந்து,

“இப்போ மேலமடைக்கு பஸ் இருக்காதாயி?” என்று கேட்டார்.

“இருக்கு” என்று சொன்னாள்.

“பரீட்சை எழுதப் போகணுமோ” என்று சொன்னவரே, “பஸ் வராவிட்டால் கஷ்டப்படுமே தாயி” என்று வருத்தப்பட்டார்.

“எந்தப் பள்ளிக்கூடம்” என்று அவர் கேட்ட போது, சித்திரைக்குப் பதில் சொல்ல முடிந்தது.

சித்திரை கொஞ்சம் திரும்பி நின்று அவருடன் பேச ஆரம்பித்த போது, அந்த ஆள் இவளைப் பாராமல் கீழே குனிந்து கொண்டே பேசிக்கொண்டிருந்தார். கையிலிருந்த குடையின் கீழ் நுனியால், தரையில் கிடந்த சீனிக்கற்களை ஒவ்வொன்றாகத் தட்டிக்கொண்டே இவளுடன் பேசினார். அடர்ந்து காதுவரை சேர்ந்திருந்த மீசைகூட முறுக்கின்றித் தளர்ந்தது போல இருந்தது. ஒரு பக்கம் காதுமடல் கடித்து எடுத்தது போலச் சற்றுக் கொறுவாயாக இருந்தது. தலையில் அடர்த்தி குறைந்த முடி காற்றில் அலைந்தது. சிவப்புச் சுண்ணாம்பு சேர்ந்து வெற்றிலை போடுகிறவரோ என்னவோ, வலது சுட்டுவிரல் நுனி ரோஸ் சிவப்பாக இருந்தது.

“ஊர்க்காவலன் மகளாதாயி நீ?” என்று அப்பா பெயரைச் சொல்லி அந்த ஆள் இவளிடம் கேட்கும்போது, சித்திரை அவளைச் சுற்றித் தொங்குகிற ஆலம்விழுதுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். விழுதுகளின் நுனிகளில் வெள்ளைக் குச்சி மாதிரி துளிர்த்து இறங்கிக் கொண்டிருந்த பகுதியை மட்டும் சித்திரை அசையாமல் பார்த்தாள்.

எவ்வளவோ காலத்துக்குப் பிறகு இன்னார் மகளா என்று அவளை யாரோ கேட்கிறார்கள்.

“தவசி எப்படி இருக்கான்?” என்று அப்பாவுடைய அண்ணனையும் பற்றி அந்த ஆள் கேட்டார்.

“நல்லா இருக்காரு” என்று சித்திரை சொல்லும்போது தூரத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் வர ஆரம்பித்திருந்தன. ஏதாவது பஸ்ஸும் வந்துவிட்டால் பரீட்சை எழுதிவிடலாம் என்று தோன்றிய சந்தோஷத்தில்…

“அவருதான் என்னையப் படிக்க வச்சுக்கிட்டிருக்காரு” என்று சித்திரை அதிகப்படியாகச் சொன்னாள்.

“நல்லா இருக்கட்டும்” – குடைக்கம்பின் வளைவின் மேல் கைகளை அசைத்து ஆசீர்வதித்த அந்த ஆள், முகத்தைத் திருப்பி, ஆலமரம் மூட்டுப் பக்கம் போய் அதிர்கிற மாதிரி மூக்கைச் சிந்தினார். நாசியில் கோர்த்திருந்த நீர் சிதறச் சிதற மேல்துண்டால் மூக்கையும் கண்ணையும் துடைத்தார்.

எதிரே உள்ள பெட்டிக்கடைக்காரர் இந்தப் பக்கம் வந்து நின்று கொண்டு, “வண்டி வார மாதிரி இருக்கே’ என்றார்.

தூரத்திலிருந்து வேகமாக வந்த முதல் வண்டி, இவர்கள் கையைக் காட்டியும் நிற்காமல் போயிற்று. அதற்குப் பின்னால் வந்த வண்டி, ஆலமரத்துக்கு அந்தப்புறம் இருபதடி தள்ளிப் போய் ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டு நின்றது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டே அந்த ஆள் பஸ் பின்னாலேயே ஓடினார். கம்பியைப் பிடித்துக் கொண்டு படியில் தொற்றி ஏறினார். குடையும் கையுமாகச் சித்திரையைப் பார்த்து கை அசைத்து விடைபெற்றார். ரொம்ப நேரத்துக்கு முகம் இந்தப் பக்கமாகவே திரும்பிக்கொண்டிருந்தது. சித்திரை அந்த பஸ்ஸையே பார்த்துக் கொண்டு நின்றாள். பஸ் புறப்பட்டு சற்றுத்தள்ளிப் போவதற்காகவே காத்துக் கொண்டு இருந்தது போலப் பெட்டிக் கடைக்காரர் சித்திரையிடம் வந்து..

“உன்கூட நின்னு இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தது யாருன்னு தெரியுமா?” என்று பதட்டத்துடன் கேட்டார்.

“தெரியாது” என்று சித்திரை தலையை அசைத்தாள்.

பெட்டிக்கடைக்காரர் அதே பதட்டத்துடன் மேலும் சொன்னார்.

“இவன்தான் சிவனுப்பாண்டி. உங்க அப்பாவைக் கொன்னவன்!”

சித்திரை பஸ் போன பக்கம் பார்த்தாள். முகம் இவள் பக்கம் இருக்க, படியில் தொங்கிக் கொண்டு, ஒரு குடையும் கையும் அசைவது மாதிரி தெரிந்தது.

– ஆனந்த விகடன் – நவம்பர் 1997

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *