அப்பாவிடம் பொய்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 7,753 
 
 

எனக்கு வயது பதினைந்து. இரண்டு தங்கைகள்.

என் அப்பா எங்களிடம் எப்போதும் தமாஷாகப் பேசுவார். ஆனால் மனிதர்களின் தோற்றத்தை வைத்து அவர் கிண்டல் பண்ணுவது எனக்கு அறவே பிடிக்காது. அந்தமாதிரி சமயங்களில் எனக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்வார்.

உதாரணமாக டி.வியில் டாக்டர் தமிழிசையைப் பார்த்தால் நாலடியார்; வைரமுத்துவைப் பார்த்தால் கறுப்புமுத்து; பொன் ராதாகிருஷ்ணனை டீசல் கறுப்பு என பட்டப் பெயர் வைத்துக் கிண்டலடிப்பார். மனிதர்களின் நிறத்தையும், உடலமைப்பையும் பற்றி அவர் அப்படிப் பேசுவது எனக்கு வேதனையாக இருக்கும்.

அப்பா ஒரு சமயம் திருச்செந்தூருக்கு ஒரு கல்யாணத்துக்கு போய்விட்டு வந்தார். அங்கு அவருடைய பழைய பள்ளிக்கூட நண்பர் கணேசன் என்று ஒருத்தரைப் பார்த்தாராம். அவரைப்பற்றி எங்களிடம் “ஒலகத்துல உயரமான முதல் பத்துபேர்ல என் நண்பன் கணேசனும் ஒருத்தனா இருப்பான்… பனை மரத்துல பாதீன்னா பாத்துக்குங்க…” என்றார்.

அம்மா, “அப்ப அவரோட சம்சாரமும் அவருக்கேத்த மாதிரி நல்ல உசரமா?” என்று கேட்டாள்.

“கணேசன் ஏனோ கல்யாணமே பண்ணிக்கலை…ஏலே, ராமையா இங்கன வா.” திடீரென்று அப்பா என்னைக் கூப்பிட்டார்.

“என்னப்பா?”

“அந்தக் கணேசன் எவ்வளவு ஒசரம் இருப்பான்னு சொல்லு பார்க்கலாம்.”

“அஞ்சரை அடி இருப்பாரா?”

“போடா கிறுக்குப் பயலே, அஞ்சரை எல்லாம் ஒரு ஒசரமாடா?”

“அப்போ ஆறு அடி?” என் தங்கை கேட்டாள்.

“ஆறரை அடி?” – அம்மா.

“ஒலகத்துலையே ஒசரமான பத்துபேர்ல ஒருத்தன்னு சொல்றேன்…ஆறரை அடின்னு சொல்றியே?”

“……………………”

“எல்லோரும் கேட்டுக்குங்க கணேசனோட ஒயரம் ஏழடி ரெண்டு அங்குலம்…”

“அடேங்கப்பா !”

எங்கள் எல்லோருக்கும் மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. அப்பா ஒரு ஸ்கேலை எடுத்துவந்து சுவரில் ஏழு அடி ரெண்டு அங்குலம் என்றால் எவ்வளவு உயரம் என்று அளந்தே காட்டினார். அதைப்பார்த்த எங்களுக்கு மேலும் ஆச்சர்யம்.

“பல்ப் ப்யூஸ் ஆயிடுச்சின்னா அதைக் கழட்டிட்டு புது பல்ப் போடறதுக்கு கணேசனுக்கு ஸ்டூலே வேண்டியதில்லை. தரையில் நின்னபடியே கழட்டி மாட்டுவான். அவங்கூட ஒரு மணிநேரம் பேசிட்டு இருந்தோம்னா அவனை நிமிர்ந்து பார்த்துப் பார்த்தே நமக்கு கழுத்து வலிக்கும்… அப்படின்னா பாத்துக்குங்க கணேசன் எம்புட்டு உயரம்ன்னு… அவன் ஒசரத்துக்கு சட்டை தைக்கவே துணியெடுத்து மாளாது. தையக்கூலி குடுத்து கட்டுப்படி ஆகாது அவனுக்கு. டபிள் ரேட் கேப்பானுங்க டெய்லருங்க. செருப்பு வாங்க கால் அளவைக்காட்டி ஆர்டர்தான் குடுப்பான். சடக்குன்னு புதுசா ஒரு செருப்புகூட வாங்கமுடியாது அவனால். பாவம்… ரொம்ப வளந்துட்டாலும் கஷ்டம்தான்.”

“அதனாலேயே அவருக்கு கல்யாணம் ஆகலையோ என்னமோ?” – அம்மா.

“இருக்கலாம்…. எதுக்காக இப்ப கணேசனைப் பத்தி இவ்வளவு தூரம் சொல்றேன்னா, அடுத்தவாரம் ஒரு கல்யாணத்துக்கு திருநெல்வேலி வருவானாம். வந்தா, கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வாடான்னு சொல்லிட்டு வந்தேன்… வர்றதுக்கு முந்தி எனக்கு மொபைல்ல போன் பண்ணிட்டு வரேன்னான்.”

எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கணேசன் சார் வருகையை எதிர்பார்த்து நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.

புதன்கிழமை அவர் அப்பாவுக்கு போன் செய்து சனிக்கிழமை மாலை எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொன்னார்.

கணேசன் உயரம் பற்றி நானும் பெருமையாக என் பள்ளி நண்பர்களிடம் அப்பா சொன்னது பூராவையும் சொல்லிவிட்டு, வரும் சனிக்கிழமை மாலை எங்கள் வீட்டிற்கு அவர் வருவார் என பீற்றிக்கொண்டேன்.

சனிக்கிழமையும் வந்தது….

சாயந்திரம் நான்கு மணிக்கு அப்பா கணேசன் சாரை அழைத்துவர பேருந்து நிலையத்திற்கு கிளம்பியவாறே, “எல்லோரும் ரெடியா இருங்க… நான் போய் அவரைக் கூட்டியாரேன்” கிளம்பிப் போனார்.

என் பள்ளி நண்பர்களும் ஆவலுடன் தெருவில் வந்து காத்திருந்தனர்.

பேருந்து நிலையத்திலிருந்து எங்கள் வீடு ரொம்பத் தூரம். ஆட்டோ ரொம்பக் காஸ்ட்லி. குதிரை வண்டியில்தான் வரவேண்டும். நானும் என் இரண்டு தங்கைகளும் வாசல் திண்ணையில் உட்கார்ந்து குதிரைவண்டி தூரத்தில் தென்படுகிறதா என எதிர்பார்த்து ஆசையுடன் கவனித்துக் கொண்டிருந்தோம்.

தூரத்தில் ஒரு குதிரை வண்டி எங்கள் தெருவை நோக்கித் திரும்புவது தெரிந்தது. நானும் தங்கைகளும் திண்ணையில் இருந்து கீழே குதித்து நின்றோம். குதிரை வண்டிக்குள் அப்பா அமர்ந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் கணேசன் சார் இருப்பது சரியாகத் தெரியவில்லை. நான் குதிகாலை நன்றாக உயர்த்தி எம்பிப் பார்த்தேன். கணேசன் சாரைக் காணமுடியவில்லை. ஒரு வேளை அவர் வரவில்லையோ? அப்பா வேறு யாரையாவது அழைத்து வந்திருக்கிறாரோ?

குதிரை வண்டி எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. எனக்குள் ஏதோ மாதிரியான பயம் நெஞ்சு பூராவும் பரவியது. குதிரை வண்டியில் இருந்து அப்பா முதலில் இறங்கி நின்று எங்களையெல்லாம் பார்த்துச் சிரித்தார். பின் குதிரை வண்டிக்குள் பார்த்து, “எறங்கு கணேசா… நீயா எறங்கிடுவியா இல்லை நான் எறக்கி விடட்டுமா?”

நாங்கள் எல்லோரும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம். ரொம்பவும் குள்ளமாக இருந்த அந்தக் கணேசன் குதிரை வண்டியில் இருந்து சிறு பையன் போலக் குதித்து நின்று எங்களைப் பார்த்து கனிவுடன் சிரித்தார்.

அப்பா அம்மாவிடம் குரலை உயர்த்தி, “கண்ணம்மா இங்க வந்து பாரு… என் ப்ரென்ட் கணேசன் வந்திருக்கான். உள்ள வா கணேசா.”

கடைசியில் இவர்தானா கணேசன்? தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணேசனின் மொத்த உயரமே இதுதானா? ஏழடி இரண்டு அங்குலம் என்று அப்பா சொல்லியிருந்த கணேசனின் நிஜ உயரம் வெறும் நான்கே அடிகள்தானா?

என்னுடைய பள்ளி நண்பர்கள் வாயைப் பொத்தியபடி சிரிப்பை அடக்க மாட்டாமல் அங்கிருந்து ஓடினார்கள்.

நினைக்க நினைக்க எனக்கு அவமானமாக இருந்தது.

கணேசன் சாரின் முகம் பெரிய ஆளின் முகம் போலவே மீசையுடன் இருந்தாலும், அவரின் உடம்பு குள்ளமாக இருந்தது. என் தங்கைகள் இருவருக்கும் அவரைப்பார்த்து அடக்க முடியாத சிரிப்பு. என் அம்மாவிற்கு அதைவிடச் சிரிப்பு. அவர்கள் எல்லோரும் சிரிப்பதைப் பார்த்த கணேசன் சாருக்கும் குதூகலமாகத்தான் இருந்தது. பதிலுக்கு அவரும் பெரிதாகச் சிரித்தார்.

கணேசன் ஏழடி ரெண்டு அங்குலம் என்று அப்பா எங்களிடம் கதை விட்டதை அப்பாவே சிரித்துச் சிரித்து அவரிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அதைக்கேட்டும் கணேசன், “அப்படியா சொன்னே?” என்று கேட்டு தானும் பெரிதாகச் சிரித்தாரே தவிர, கொஞ்சம்கூட கோபித்துக் கொள்ளவில்லை. அவரின் முகத்தைப் பார்த்தால் அவருக்கு கோபமே வராது என்று தோன்றியது.

கணேசன் சார் எங்களுடன் இருந்த இரண்டு நாட்களும் என் தங்கைகள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாடினார்கள். அம்மாவும் ரொம்ப சகஜமாக அவருடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அவரும் எங்களிடம் ரொம்ப இயல்பாக ஒட்டிக்கொண்டார்.

நான் மட்டும் அவரை நெருங்கவே இல்லை. மனதில் மிகமிக உயரமான கணேசன் சாரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் காத்திருந்த என்னால், மிகவும் குள்ளமான அவருடன் போய்ப் பேசக்கூட வேதனையாக இருந்தது. அதனால் விலகி விலகியே நின்றேன். ஆனால் அவரையே வெறித்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா விவரித்திருந்த அநியாயப் பொய் எனக்குள் ஊறிப்போய்க் கிடந்தது.

சும்மா ஒரு வேடிக்கைக்காகத்தான் கதை விட்டதாக அப்பா மறுபடியும் மறுபடியும் என்னிடம் தெளிவு படுத்தினாலும், மனிதர்களின் உருவத்தை வைத்து அதுவும் நண்பனின் உருவத்தை வைத்து அவர் கேலி செய்ததை என்னால் தாங்க முடியவில்லை. அந்த வயதில் பசுமரத்தாணியாக என்னுள் அது பதிந்து விட்டது. மிகவும் துக்கமும் வேதனையும் அடைந்தேன். சக மனிதர்களின் உருவத்தையும், நிறத்தையும் பழித்துப் பேசி கிண்டலடிப்பது எவ்வளவு பெரிய கேவலம்? ஆனால் யாருமே என்னை உணர்ந்துகொள்ளவில்லை.

இரண்டு நாட்களை வேடிக்கையாக கழித்துவிட்டு கணேசன் ஊருக்கு கிளம்பினார். குதிரை வண்டியில் ஏறி விடை பெறும்போது “கவலைப் படாதீங்க உங்க அப்பா சொன்னாப்ல அடுத்தவருடம் கண்டிப்பா நான் ஏழடி வளந்துருவேன்…” இதைக்கேட்டு என்னைத் தவிர அனைவரும் சிரித்தார்கள். ரொம்பப் பெரிய சிரிப்பு சிரித்தது அப்பாதான்.

என் இரண்டு தங்கைகளும் கணேசன் சாரைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்கள். குதிரைவண்டி வேகமாக ஓடி பார்வையில் இருந்து மறைந்தது.

வீட்டில் எல்லோரும் சேர்ந்து கணேசன் உயரத்தைப் பற்றிப் பேசிப்பேசி மகிழ்ந்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். நான் ஒருமுறைகூட சிரிக்கவில்லை. வேதனையாக இருந்தது.

தருணம் வாய்க்கிற போதெல்லாம் அப்பாவையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்மேல் அளவு கடந்த மனக்கசப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பா கதைவிட்டதை ஒரு வேடிக்கையாக என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

கண்ணியமில்லாத கசட்டுத் தனமாகத்தான் அப்பாவின் பொய்யை என்னால் கருத முடிந்தது. அப்பாவின் அசிங்கமான மனசை கசட்டுத் தனமாகப் பார்க்கக்கூட தெரியாத கணேசனின் அறியாமை அப்பாவின் பொய்யை என்னுள் மேலும் பெரிதாக்கிக் காட்டியது. என்னுடைய மனம் பூராவுமே அப்பாவின் இந்தப் பொய்யே நிறைந்து போயிருந்ததால் அதை நீக்கிவிட்டு அப்பாவை அணுகுகிற சகஜம் எனக்குள் நேரிடவே இல்லை. அப்பாவின் செயல் என்னுடைய மனதை வெகுவாகக் காயப்படுத்தி விட்டது.

அப்பாவைப் பார்க்கிற ஒவ்வொரு நிமிஷமும் இந்தக் காயத்தின் வலி அதிகமாக்கிக் கொண்டே இருந்தது. இந்த வலிக்கு திருப்பி அவரை ஏதாவது ஒரு வழியில் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வுவேகம் எனக்குள் எழுந்தது. அப்பாவையும் ஏமாற்றி மோசடி செய்யவேண்டும். அவரிடமும் பொய்கள் பேசி நன்றாக அவரை அவமதிக்க வேண்டும் என்கிற துவேஷம் என் மனதிற்குள் பீறிட்டு பொங்கின.

அதன் முதல்படியாக ஒருமுறை மதியம் வகுப்பை கட் அடித்துவிட்டு, ஒரு சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்கு லேட்டாக வந்தேன். அப்பா, “எங்கடா போனே… எங்க சுத்திட்டு வர்ற, ஆளையே காணோம்? என்றார்.

“பாடத்துல சந்தேகம் இருந்திச்சி… அதான் வாத்யார் வீட்டுக்கு போய்ட்டு வரேன்…”

இதுதான் அப்பாவிடம் நான் சொல்ல ஆரம்பித்த முதல் பொய். தொடர்ந்து பல வருஷங்களில் எத்தனையோ பெரிய பெரிய பொய்களெல்லாம் சொல்லிவிட்டேன். அப்படியும் அவரிடம் பொய்தான் பேச வேண்டும் என்கிற உணர்வுவேகம் என்னிடம் தணியவில்லை. அதனால், இன்றும் அப்பாவிடம் வாய் கூசாமல் பொய்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒன்று; அப்பாவிடம் தவிர வேறு யாரிடமும் நான் சின்னப் பொய்கூடச் சொன்னதில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *