கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 15,439 
 

இன்று, நான் பிறந்ததற்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வரும் ஏப்ரல் 15-ம் நாள். ஜன்னல்கள் குலுங்கிக் கடகடக்க இரயில் வண்டி இருளைக் கிழித்தபடி என் ஒருவனுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த வேகத்தின் தாக்கம் ஒவ்வொரு இரும்புப் பலகையிலும் பரவியிருக்க வேண்டும். எல்லாமும் சேர்ந்து பயங்கரமாக அதிர்ந்து துடிக்கின்றன.

நானும் அசைந்து அதிர்கிறேன். அந்த அதிர்வுகள், என் உடலின் ஆழத்தில் எங்கோ பரவி என் உறுப்புகளின் அமைப்பை சுருளச் செய்து, மின்னோட்டம் பாய்ந்ததைப் போலச் சீண்டிக் கிளறி, நோய் அணுக்களின் ஆக்ரமிப்பைப் போலத் துடிக்க வைக்கின்றன. நானே அவையாக, அந்த அதிர்வுகளின் சிறிய, கூர்மையான அலைகள், என் உடலின் பகுதிகளிலும், என் எலும்புகளிலும், என் நரம்புத் தொகுதிகளிலும் பயணிக்கின்றன. கடுமையான வேகம். நீண்ட கத்தியின் கூரிய பகுதியைப் போல சிலீரென்று, தூய, பிரம்மாண்டமான ஏதோ ஒன்று என்னிலிருந்து கிளம்புகிறது. நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கும் முன், நடந்துகொண்டே என் முகம் மேலும் மென்மையோடிருந்தது. ஒருவேளை அது ஏற்கெனவே அதிக மென்மையடைந்திருக்கலாம். தொடை எலும்பும் முழங்காலுக்குக் கீழேயுள்ள எலும்பும் சுருங்கி, என் வயிற்றுத் தோல் மேல் நோக்கி மடிந்து போயிருந்தது. இன்னும் ஒன்றுமில்லை… நான் மேலும் நடக்கிறேன்.

இப்போது என் இதயம், என் இதயம், போதுமான அளவு வேகமாக, குறிப்பிடும்படியான வலிமை குறைந்த அளவில் அடித்துக் கொள்கிறது. என் நுரையீரல்கள் சட்டென்று சுருங்கிவிட்டன. எனக்குள்ளிருந்து வேகம், இடைவிடாத வேகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சிக்கலான, தோல்விகரமான சித்திரங்கள் உருவாகியபடி உள்ளன. நீண்ட நேரம் ஒலிக்கும் சத்தம், கர்ஜனைகள், ஒவ்வொரு வேளையில் எரியும் தீயிலிருந்து கிளம்பும் காற்று எழுப்புவதைப் போன்ற ஒலி. அதேதான்: அரைவாசி நகரத்தை விழுங்கிக் கொண்டிருந்த பூதாகாரமான ஊழித்தீயை நான் எதிர்கொள்கிறேன்.

தீ முன்னோக்கிப் பரவுகிறது, பிறகு பின்னோக்கிப் பரவுகிறது. 20, 19, 18, 17, 16, 15 ஏதோ ஒன்று சுருங்கிக் குறைகிறது, வேகமாகக் குறைகிறது என்னால் அதைத் தடுக்க முடியவில்லை. நானே உறிஞ்சப்படுவதைப்போல, பேராசை கொண்ட ஒரு ஜீரணக் கருவியினால் இழுக்கப்படுவதுபோல இருந்தது. நான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலவில்லை, முயலவேயில்லை. எதுவுமே சாத்தியப்படுவதாயில்லை.

ரயில் வண்டி, நான்தான். இப்போது எனக்குப் புரிகிறது. அதைப்பற்றி என்னால் என்ன செய்ய முடியும்? ஒரு ரயில் வண்டியுடன் போராட யாரால் முடியும்? ஆற்றல் மிக்க மூச்சு, பயங்கரமாக நீண்ட, நேரான தண்டவாளங்கள், சுக்கரங்களையும் கிரீச்சிடும் இருசுகளையும், அதிர்வைத்தாங்கும் சாதனங்களையும், இருளும் காற்றும் கலந்த திறந்தவெளிக்குள்ளும் பனிப்பரப்புகளுக்குள்ளும், அசைவுகளற்ற வான்வெளிக்குள்ளும் கருப்புச் சதுரங்களாகத் திறந்துகொள்ளும் இடைவெளியுடன் கூடிய ஜன்னல்களும் எல்லாவற்றையும் தெறித்துத் தூளாக்கும் வன்முறை உணர்வை எனக்குள் செலுத்திய தண்டவாளங்கள் திறந்துகிடக்கும் கிராமாந்திரப் பகுதிகளின் ஊடாக சிரமமின்றித் தன் சுமையை இழுத்துக்கொண்டு செல்லும் இன்ஜின் நேராக, அப்படியே நேராகச் சென்று கொண்டிருந்தது. அது அனைத்தும் நானே. வலிமையோடு மோதுகிற, வெறிகொண்ட, அச்சமூட்டும், மதம் கொண்ட எருமையைப் போலாகியிருந்த நானேதான்.

நான் நகரங்களை, வெளிச்சம் ஒளிசிந்தி அவ்வப்போது தங்கள் இடத்தை மாற்றிய சங்கிலியாக அமைந்த பல நகரங்களை வேகமாகக் கடந்து செல்கிறேன். என் கண்களுக்கு முன்பு கம்பிகள் உயர்வதும் தாழ்வதும் உயர்வதும் தாழ்வதுமாக இருக்கின்றன. இத்தியாதி. அந்த அசைவோடு குளிர் என் உடலைத் துளைத்துப் புகுந்தது. நான் தரையின் மீது நெடுங்கிடையாக தரையோடுத் தரையாக அப்பி வைக்கப்பட்டேன். நான் அங்கு பரவி நிற்கும் நீர்ப்பெருக்கைப் போல நின்றேன். நான் எல்லாத் திசைகளிலும் ஓடுகிறேன். என்னைத் தடுத்து நிறுத்த எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. துவாரங்களுக்குள் ஓடி நான் குன்றுகளின் மீது இடறித் தடுமாறி விழுகிறேன். நான் பரவுகிறேன், மிதக்கிறேன், எனக்குள் அலை வீசுகிறது.

பின்னோக்கிய வரிசையில் என்னுள்ளிருந்து அதே எண்கள் தப்பித்து வெளியேறுகின்றன. வார்த்தைகளால் விவரிக்க முடியாத, எல்லாவற்றையும் பிளக்கிற கோடுகளை வரைந்து அழிக்கும், நிலப்பரப்புகளை வகிர்ந்துபோடும் தோல்விகரமான கணங்கள் இருக்கவே இருக்கின்றன. அதைக்காட்டிலும் எதுவும் எப்போதும் இருந்ததேயில்லை.

நான் அறிந்திராத ஒரு குரல் எனக்குக் கேட்கிறது. அது என் பெயரை சிதைத்தும், குறைத்தும், சுருக்கியும் உச்சரிக்கிறது நான் எங்கேயோ போவதாக நான் உணர்கிறேன். எங்கே என்று எனக்குத் தெரியாது. களைப்புறச் செய்யும் தன் காந்த ஈர்ப்பினால் தவிர்க்க முடியாதபடி ஈர்க்கும், வெளியேயுள்ள ஒரு நிச்சயமான புள்ளி அது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.

ஹென்ரி பியர் தூசேன்
ஹென்ரி பியர் தூசேன்
ஹென்ரி பியர் தூசேன்
றி ஊஸ்
ரியர் தூசேன்
யர் தூசேன்
தூஸ்
தூஸ்
ஊஸ்
ஸ்ஸ்

நானே அதுவாகிவிட்டேன். ஒரு கொழும்பாகுக் குவியலைப் (யிமீறீறீஹ்) போல நானே குறுக்கப்படுகிறேன். எனக்குள்ளேயிருந்து நிறையப் பொருட்கள் வெளியேறுகின்றன. என்னிலிருந்து தங்களை வெளியே வீசியவாறு என்னை வெற்றிடமாக்கியபடி அவை கிளம்புகின்றன. கடலுக்குள் முழ்கும் கப்பலிலிருந்து பயத்தால் பீடிக்கப்பட்டு வெளியேறி வெகு தொலைவு சிதறிக் கிடக்கும் ஜனங்களையும் எலிகளையும் காணும் கப்பலின் உடற்பகுதியென நான் என்னை உணர்கிறேன். நான் ஒரு பாலைவனப் பகுதியாக, எங்கோ தொடங்கி அகன்ற ஆழமான பாதாளத்தில் முடியும், நீண்டு ஒடுங்கும் செங்குத்தான வான்வழியாக நான் ஆகப் போகிறேன்.

என் உடலின் பெரும்பகுதியை நான் இப்போது இழந்துவிட்டேன். நான் அவை இளைத்து, சிறுத்து இனமாகி உதிர்வதைக் காண்கிறேன். தசை முழுவதும் கிட்டத்தட்ட மறைந்து போகிறது. என் கைகள் குட்டையாகவும், சதுரமாகவும் ஆகின்றன. ஒரு காலத்தில் புடைத்துக் கிளம்பும் நரம்புகள் இப்போது வெண்ணிறத் தோலுக்குள் புதைந்து கிடக்கின்றன. எல்லாம் விரைவாக அசைகின்றன. எல்லாம் எளிமையாகவும் சிக்கல்கள் ஏதுமில்லாமலுமேயே நகர்கின்றன. குறைந்துவரும் எண்ணிக்கை என்னை மேலும் மேலும் உரித்துப்போட நான் பின்னால், பின்னால், பின்னால் இருந்த நிலைமைக்கே மேலும் மேலும், பின்னோக்கி, பின்னோக்கிப் போகிறேன். நெடுங்கிடையாக இடையறாமல் விழுந்த வண்ணம் இருக்கிறேன்.

நான் இதற்குமுன் கேட்டிராத அழுகுரல்கள் என்னைச் சூழ்கின்றன. வடிவங்களும் உறைந்து ஒரு திரளாக மாறுகிறது. அவை மென்மையாக ஆவியாகிக் கொண்டிருக்கின்றன. ஆவியான பின் வெப்பமின்றி, வேகமின்றி, நீர்ப்பரப்பில் சின்னச்சின்ன உருண்டைகளாக உருவாகி பற்களைப் போலத் தேய்த்துப் பளப்பளபாக்கப்பட்ட உருவாக்கப்பட்டு துணுக்குகளே எஞ்சி நிற்கின்றன.

வேகமும் செயல்பாடுகளும்தான் என்னை இன்னமும் இயங்கச் செய்கின்றவையா? என்னால் இப்போது ரயில் வண்டியையோ, தண்டவாளங்களையோ, திசைகளையோ காண முடியவில்லை. மாறாக நான் இப்போது அசைவுகள் இல்லாமல் ஒரு குழைத்த மண்பரப்பில் இடுப்புவரை புதைபட்டிருப்பதைப்போல உணர்கிறேன். நான் ஆழத்தில் மூழ்குகிறேன். இடுப்புப் பகுதி, மணிகட்டுகள், விலா, மார்பு, தோள்கள். கழுத்தின் கீழ்ப்பகுதி, கழுத்து, கழுத்தின் பிற்பகுதி, தொண்டை பிறகு என் மோவாய். என் வாய், என் நாசித் துவாரங்கள், அவற்றை மூடும் இரண்டு பொறிகளின் கதவுபோல மண்ணினால் மூழ்கி மூடப்படுகின்றன. எல்லாம் என்னை அழுத்துகின்றன.

நான் மூழ்கிக் கொண்டே இருக்கிறேன். நான் நீரிறைக்கும் இந்தக் கிணற்றில், நீர் தேங்கி நிற்கும் இந்தப் பள்ளத்தில், என்னை துளித்துளியாக, குளிர்ச்சியாக, கதகதப்பாக கரைத்து தன் அதிர்ந்து துடிக்கும் பளீரென்ற வண்ணமுடைய கரியச் சேர்மானம் மிகுந்த எச்சத்தில் கரைக்கும் அந்த வளம் மிக்க இரும்பால் ஆன நீண்ட குடலைக் கொண்ட உயிரோடிருக்கிற மிருகத்துக்குள் விழுகிறேன். என் கன்னங்கள், என் கண்கள், என் கண்கள் மண்ணுலகைக் காண முடியாதவையாக மூடிக் கொண்டுவிடுகின்றன.

நான் மறந்துவிடுகிறேன். காலம் நகர்கிறது. அது தன் பெண்டுல அசைவுகளை என்னிடமிருந்து நீக்கிக்கொண்டுவிடுகிறது. குரல் இன்னமும் பின்னோக்கி எண்ணிக்கையைக் கூறியபடி உள்ளது 15, 14, 13, 12, 11, … எல்லாமும் மிகவும் குறுகலாகவும் வெண்மையாகவும் ஆகிவிட்டது. சூரிய ஒளி சிந்தும் பகுதியின் மையத்தில் நான் ஒரு கூடைநாற்காலியில் அமர்ந்துகொண்டிருக்கிறேன். கடூரமான, குழப்பமான ஒலிகள் என் வாய்க்குள் வந்து கலக்கின்றன. வார்த்தைகள் உருக்கொண்டு, கொக்கியினால் இறுக்கப்பட்டவை போலாகி, இரண்டாக மடிந்து கரைகின்றன.

சிகரெட் வாட்டி உலர்த்தப்பட்டது. தவிர்க்கப்படவேண்டியது. முட்கள், பாய்கள். கூச்சல் எழுப்புதல். வாடகை, டகை. கை.

`ஆப்கன். செடான். யூ.ஐ.ஆர்.அமெரிக்கன். 5, காரஸ் 15% இலக்கியம். ஆரிஸ்.ஈர்ரனா.’ ஏதும் அவர்களை அழைக்கவில்லை. இருந்தும் அவர்கள் வருகிறார்கள், அங்கு நுழைகிறார்கள், அகன்ற, இருண்ட வயல்வெளிகளிலிருந்து வந்த அவர்கள் அங்கே இருக்கிறார்கள். பூ உலகில், ஈரநிலப் பரப்புகளிலிருந்தும், குப்பைக் கூளங்கள் சிதறிக்கிடக்கும் பாழ்நிலப் பரப்பிலிருந்து வந்தனவை. நானும் அங்கிருந்துதான் வந்திருக்கவேண்டும். அவைதான் எனக்குப் பெற்றோர். எனக்குப் பெற்றோர் இருக்கும் பட்சத்தில் இந்தக் குவியலில் இருந்துதான் நான் அவர்களைத் தேடியாக வேண்டும்.

பின் வாங்கு. மேலும் அதிகமாகப் பின் வாங்கு. இப்போது ஒரு மெல்லிய, ஒளிபுகாத மென்திரை என் கண்களுக்கு மேல் படர்ந்திருக்கிறது. தொலைப் பார்வைக் கோளாறுக்கான கண்ணாடியைப் போல அது என் பார்வையை மங்கச் செய்கிறது.

நான் இறுதியில் உருவமும் தன்மையும் மாறிய என் பெயரைக் கவனித்துக் கேட்கிறேன்: `ஆன்ரி! ஆன்ரி!’ ரி! ரி! ரி! அதுதான் என் பெயர். ஜனங்கள் என்னை அந்தப் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். என் வாய் திறக்கிறது. பைத்தியக்காரத்தனமான சிரிப்பு இடித்துத் தள்ளிக்கொண்டு தொண்டையிலிருந்து கிளம்பி இடிபோல உருண்டு, குறுகி, மீண்டும் எழும்பி, என் உதடுகளில் வெடித்துப் புறப்பட்டு காற்றினூடே பாடலாகக் கலந்து கண்ணுக்குப் புலப்படாத காற்றின் திரைச்சீலைகளை பின்னோக்கித் தள்ளுகிறது. பிறகு அந்தச் சிரிப்பு வலியாக, நுரையீரல் அறைகளின் அழுத்தத்தில் தோன்றி ஈரலின் கீழே அமைந்துள்ள உந்து சவ்விலிருந்து கிளம்பும், மிகுந்த வலியாக உருமாறி நெடுநாள் உள்ளிருந்த விரைத்துக்கிட்டிப்போகச் செய்யும் பிணியை பின்னுக்குத் தள்ளித் துரத்தியதுபோல என் உடலிலிருந்து ஆத்மாவை வேருடன் அழித்து வெளியேற்றுகிறது.

ஹலோ! நான் மேலும் சற்று சுருங்கிப்போகிறேன். எவ்வளவு என்று சொல்ல என்னால் முடியாது. ஆனால் சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் திடீரென்று பூதாகாரமான தோற்றம் கொள்கின்றன. நான் உயரமான உருவம் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது மேசை என் மூக்கின் மட்டத்துக்கு வருகிறது. ஆனால் நான் வியப்புகூட அடையவில்லை. இல்லை. இந்தத்தடவை காலம் இவ்வாறு என்னைக் கையாள்வதை நான் அனுமதிக்கிறேன். நான் மேசை, நாற்காலிகள், இழுப்பறைகள், படுக்கை ஆகிய ெ பாருட்களுக்கு நடுவே அவை ஏதோ மரங்கள் என்பதாகவும் அது ஒரு காடு என்பதுபோலவும் நடமாடுகிறேன். அவற்றின் அடிமரங்கள் பிரம்மாண்டமாகப் பருத்தும் பெரியவையாகவும் நான் சின்னஞ்சிறியவனாகவும் இருக்கிறேன்.

மிகவும் பிந்தியகாலத்திய தகவல்கள் இப்போது வருகின்றன. ஏற்கெனவே கொஞ்சகாலமாக நான் நானாக இருப்பது இல்லாதுபோன விஷயமாகிவிட்டது. எப்படிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அழுகுரல்களும், அழைப்போசையும், நடனமிட்டவாறு இருக்கின்றன. கைகள். எங்கும் குழப்பம் நிலவுகிறது. இத்தகைய வெற்றிடம் என் கண்கள், வாய், காதுகள் மற்றும் மூக்கின் இடைவெளியில் புகுந்து தண்ணீரைப் போல என் மண்டைக்குள்ளும், உடலெங்கும் பரவிவிட்டது. 10,9,8,7,…

நான் பூமியுடன் ஒரு சலவைக்கல்லால் ஆன தூணால் தொடர்புறுத்ப்பட்டிருக்கிறேன். எனக்கு ஒட்டுறவு உள்ளது. அல்லது ஒரு வேளை நான் ஒரு புகைப்படத்தில் என் முகம் கீழேயிருக்கக் கவிழ்ந்து படுத்தபடி பனியாகக் குளிர்ந்துபோயிருக்கிறேன்.

ஆம். ஒரு துறைமுக சரக்கு மேடையில் நான் ஒரு பெண்ணுக்குப் பக்கத்தில் நீர்பரப்பின் ஓரத்தில் என் முழங்கையை ஒரு திண்டின் மீது இருந்தியபடியிருக்கிறேன். எனக்குப் பின்னால் மலைகளும், தலைக்கு மேல் கச்சிதமான செவ்வக வடிவில் மேகங்களே இல்லாத வானமும் உள்ளன. இப்போது என் முகம் மென்மையாகவும், தலைமுடி நெருக்கமாக கத்தரிக்கப்பட்டும் இருக்கிறது. என் கண்களுக்குக் கீழே கருப்பு வளையங்கள் உள்ளன. நான் மூச்சுவிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். அதுதான்:

நான் என் சொந்த உலகத்துக்குள் ஒதுங்கிக்கொண்டேன். உங்களுக்கே தெரியும், கல்லாகிவிட்ட அந்தக் காட்சி, கார்கள் இயக்கமற்று, அருகே நடமாடியவர்களின் நடமாட்டம் நிறுத்தப்பட்டு, பறவைகளின் இயக்கம் சட்டென நின்று, எல்லாமும் இனிமையானதோர் விதத்தில் தட்டையாகி, நிறுத்தப்பட்டு, ஒரேமாதிரியாக, சீராக அமைக்கப்பட்டு, தேய்ந்துப் பளபளப்பாக்கப்பட்டு, சிறைப்பட்டு, தீண்டப்படாததாகிவிட்ட அந்தக் காட்சி.
இன்னமும் அதே வெளியே போய்க்கொண்டிருக்கிறது, தப்பித்துக் கொண்டு, ஓடும் மிருகமாக, பறந்து தப்பி, தன்னைப் புனரமைத்துக் கொள்கிறது. நான் அப்புறம் பின்வாங்கவில்லை என்று எவராவது சொல்லக்கூடும். இல்லை. அந்த மாபெரும் வெளியேற்றம் நின்றுவிட்டது. சற்று நேரத்துக்கு முன் பின்னோக்கி நிகழ்ந்துகொண்டிருந்த இயக்கம் இப்போது சுழன்று திரும்பிக்கொண்டது. ஒரு மாதிரியான இடைவெளிக்குப்பின் அது பாய்வதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொண்டது. இருளில் பதுங்கி ஊர்ந்து சட்டென முன்னோக்கிப் பாய்ந்து, மேலே நகர்ந்தது. மீண்டும் பழையபடி அதே சுழற்சியை ஆரம்பித்தது. இம்முறை என்னையும் தன்னோடு இணைத்துக்கொண்டது. அதற்கு எவ்விதமும் தடையும் இப்போது இல்லை. நான் விடுதலை பெற்றுவிட்டேன். முழுமையான விடுதலை பெற்றுவிட்டேன். எனக்கு இப்போது எதற்காகவும் காத்திருக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. என் தசைகள் அதற்கு மேலும் ஒரு தடையாக இருக்கவில்லை.

நான் மோதி உருண்டு தலைதெறிக்கும் வேகத்தில் புதிய நேரான, கால்சுவடுகள் படாத சாலையில் வெண்ணிறமான அமைதியான நெடுஞ்சாலையில் செல்கிறேன். சரியான வேகம். எதுவும் என்னை தடை செய்யாது. விநாடிகள் சீரான லயத்துடன் படபடவென்ற சத்தத்துடன் நகர்வதையும் நான் என் இதய குண்டின் தட் தட்டெனும் கூர்மையற்ற மழுங்கிய ஒலியையும் கேட்கிறேன். எண்கள் ஓடுகின்றன, ஏறுகின்றன, குவிகின்றன.

101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117,…

நான் எங்கேயிருக்கிறேனோ அங்கே இரவும், பகலும் இல்லை, எதுவுமே இல்லை. தேதியிடப்படாத, எதையும் குறிப்பிடாத, எவரையும் சித்தரிக்காத மௌனமான புகைப்படங்கள் மட்டும் வரிசையாக நகர்கின்றன. அங்கு முகங்களையோ, பொருட்களையோ, நிலப்பரப்புகளையோ எவரும் காண இயலாது. பெரிய சாம்பல் வணண் அட்டைத்தாள்கள். நான் அவற்றுக்குள் வேகமாகப் புகுவேன். அதைக்காட்டிலும் வேகமாக வெளியேறியும் விடுவேன். ஆயிரம் கதவுகள் கொண்ட அசல் முற்றம். நான் அங்கு அரசர்களுக்கேயுரிய தோரணையுடன் செல்வேன்.

இப்போது, இன்னும் கீழே. ஆம், மிகவும் கீழே. நான்கு கால்களில் தவழ்ந்தபடி. ஏங்கும் சுழல்காற்றுகள். நான் அவற்றில் ஒன்று. வெம்மை. குளிர்ச்சி வலி, குத்தும் முட்கள். கூச்சம் தரும் தீண்டல். ஏன் நாக்கு வாய்க்குள் சுருண்டு கொள்கிறது. மூச்சு வெளியேறுவதே சிரமமாக இருக்கிறது. வார்த்தைகள். எங்கே அவை? அவை மறைந்து போயின. விதவிதமான ஒளிவட்டங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு விட்டு வைக்கப்படவில்லை. ஆம். பொருட்களைச் சூழ்ந்திருக்கும் பலவிதமான ஒளிவட்டங்கள். உடல் முழுவதையும் தூக்கி இலக்கை நோக்கி வழுக்கியபடி செல்லுமாறு உயர்த்தும் தன்னுணர்வுகள், பொருட்களுக்கு நடுவே அதை எறிந்து எல்லாவற்றையும் ஒரு சேரப் பிசைந்துவிடுகிறது.

நான் ஒரு குள்ளன். எனக்குக் கொஞ்சம் கூட வலிமையில்லை. உடலின் ஒவ்வொரு பாகமும் வெடவெடவென நடுக்கம் கொள்கிறது. அது பயம். என்னை இந்த என் பொந்திற்குள்ளேயே அவர்கள் விட்டு விடட்டும். அதை அறவே மறந்து போகட்டும். நினைவுகூரப்படுவதற்கோ, அணுகப்படுவதற்கோ, காணப்படுவதற்கோ இனிமேலும் நான் தகுதியில்லாதவன். என்னை மறந்துவிடுங்கள்.

எல்லாம் மிகப் பெரியவையாக உள்ளன. வெளிச்சம் என் கண்களை வலிக்கச் செய்கிறது. அது வேகமாக நகர்கிறது. சில சமயங்களில் மெதுவாகத் தன்னுடைய நிலையான வெண்மை நிறத்தின் சுவடுகளை முத்துப்போன்ற ஆடைகளை என் விழித்திரையில் விட்டுச் செல்கிறது. மின்னல்கள். மின்சார சூரியன்கள். இடது புறத்திலும், வலதுபுறத்திலும் நறநறவென்ற சப்தம். மரங்களைச் சீவும் கரகரப்பு ஒலி. நான் ஒரு அகன்றமையொற்றும் தாளுக்குள் பிடிபட்டிருக்கிறேன். மையின் புளித்த வாடை வீச்சுக்கிடையே துசுகள் கிளம்புகின்றன. எனக்குள்ளிருந்து அனைத்தும் மேலெழும்புகின்றன.

ஏதேதோ அமிலங்கள் வயிற்றுக்குள்ளிருந்து பாய்ந்து எழுகிறது. வழுவழுப்பான சவ்வுத் தடுப்புகளைக் கடந்து மேலும் மேலும் உயர்கின்றன. நான் இப்போது மறுபடியும் பயங்கரமாக ஏப்பங்கள் விடுகிறேன். நான் வெள்ளத்தில் மூழ்குகிறேன் பிறகு அழைக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, கலக்கமடையச் செய்யப்படுகிறேன். தொட்டிலில் இடப்பட்டு, ஆட்டப்படுகிறேன். பிறகு நீராவிப்படலம் வலையெனத் தோன்றுகிறது. எரிமலைக் குழம்பைப் போல லேசாகப் பறந்தபடி ஒரு ஹிப்னாடிசத் திரைபோல என் தலை மேல் விழுந்து மூடிக்கொள்கிறது.

எண்ணிக்கை என்ன? ? ? 2 ? 1 ? அல்லது அதைவிடக் குறைவா?

சதுப்பு நிலம் உண்மையிலே மிகவும் பரந்ததாக இருக்கிறது. அதற்குள்ளிருந்து நீராவி எல்லாத்திசைகளிலும் கிளம்புகிறது இனிப்பின் மணமும், மசாலா மணமும் அதற்கு மேல் சூழ்ந்து சுழல்கிறது. சேற்றிலிருந்து சோம்பல் மிக்க மிருகங்கள் கிளம்புகின்றன. அவற்றின் மறு போன்ற திரள்தசையின் மீது நீர் முத்துகள் காட்சியளிக்கின்றன. அந்த மிருகங்கள் தங்கள் கழுத்துகளை சேற்றுக்கு மேல் நீட்டுகின்றன. தங்களுடைய அவலட்சணமான நீண்டு மெலிந்த முதுகை வளைத்து பக்கவாட்டில் இப்படியும் அப்படியும் நோக்கியவாறு சேற்றுப் படலத்தைக் கிழித்துக்கொண்டு அவை தங்கள் கண்களைத் திறக்கின்றன.

ஆவி சூழ்ந்த வானத்தில் கனத்த குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. கெட்டியான, கரிப்புகை படர்ந்த கட்டிகள் காற்றில் மெல்லக் கரைகின்றன. சில இடங்களில் சூழலில் பனிக்கட்டிகளைத் தோற்றுவிக்கும் அளவுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக, ஏதோ ஜன்னல் கதவுகளில் பனி படிவதுபோலத் தோன்றுகிறது. மாறாக மற்ற இடங்கள் சூடாக, நீர்ப்பதமேறிய காற்றுடன், தினறச்செய்யும் கோடை வெம்மையாக மண்ணே வெப்பத்தால் உருகித் தேங்கி சுழல்வது போல இருக்கிறது. குமிழிகள் மோதி, போராடி வெடித்து சுற்றிலும் அழுக்கை அள்ளித்தெளிக்கின்றன. எல்லாம் கொதித்து ஒலியெழுப்பிக் கொணிடிருந்தன. நிதானமான அலைகள் நிலப்பரப்பின் மேலிருந்த கண்ணுக்குத் தெரியாத திறப்புகளின் மூலம் வழிகண்டு உள்நோக்கி கிலோமீட்டர் கணக்கில் இருந்த ஆழம்வரை போயின.

பசி, தாகம் வியர்வையில் குளித்து புரண்டுபடுத்தேன். காய்ச்சல். என்ன காய்ச்சல். உணவுக்குழல் அகலமாகத் திறந்தது, காற்றையும், உயிரையும், சத்துமிக்க திரவங்களையும் உறிஞ்ச விரிவடைந்தது. குடலில் பற்றியெரியும் தீயை அணைக்க, சிவந்துபோன இடங்களை தடவித்தர, தோலுரிந்துபோன இடங்களைச் சீராக்க, உலர்ந்துவிட்ட தோல் மடிப்புகளில் பாய, சுவாசிக்க, நீர்பாய்ச்ச, சுற்றுச்சூழலில் உயிருடன் நுழைய, நீந்த, பறக்க, ஊர்ந்து செல்ல, மிதக்க, பரவ, அதிகரித்துப் பெருக, வாழ, வாழ! இனிமையற்ற கடூரமான அந்தக் கூச்சலுக்கு ஒரு எதிர்க்கூச்சல் கிளம்பியது. கல்லுடைப்பவனின் முனகல் ஒலி. இந்த இரண்டு ஒலிகளும் ஒன்றுசேர்ந்து கூரையை நோக்கி உயர்ந்தன.

பிறகு, நேர சாவின் திசையை நோக்கி, ஜீரோ வருடம்.

ஆசிரியர் குறிப்பு

ஜே.எம்.ஜி. லெ க்லேசியோ ஃபிரான்சின் நீஸ் நகரில் 1940-ல் ஏப்ரல் 13-ம் தேதி பிறந்தார். நீஸ் பல்கலைக்கழக கல்லூரியிலும், பிரிஸ்டல் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். அவர் ஆங்கிலத்தையும் கற்றிருந்ததனாலேயே, `ப்ரி ரெனேதோ’ உயர்விருதைப் பெற்ற அவருடைய முதல் நாவலான `குற்றவிசாரணை’ (the interrogation) எனும் படைப்பின் ஆங்கில மொழிப்பெயர்ச்சியாளருடன் அவரால் இணைந்து பணியாற்ற முடிந்தது. அதற்குப் பின் அவர் புகழ்பெற்றவையான நாற்பது படைப்புகளைத் தந்துள்ளார். அவை முப்பத்தியாறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.லெ க்லேசியோ, நீஸ், பாழீஸ், பிரிட்டானியா, நியூ மெக்சிகோ, மொரிஷியஸ் என்று பயணம் செய்ய வண்ணம் இருப்பவர்.இலக்கிய விருதுகளிலேயே சிறப்பிடம் பெற்ற நோபல் விருதை இவர் 2008-ம் ஆண்டில் பெற்றார்.

– ஜே.எம்.ஜி. லெ க்லேசியோ – தமிழில் திலகவதி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *