“நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும் குடித்தனமுமாகத்தான் இருக்கீங்க…ஆனா இவ்வளவு காலமா இல்லாம இப்ப ஊர்வம்பு வாசல்தேடி வந்து நிக்குது…அக்கம் பக்கம் இளக்காரமா பார்க்கறாங்க …என்ன பண்ணீங்க சொல்லுங்க?”கண்ணீர் வழிய மூக்கை உறிஞ்சியபடியே வழிமறித்து நின்றாள் நளினி.
“தப்பு தான் நளினி…நான் எதுக்காக அப்படி பண்ணினேன்னா…”பீடிகையோடு ராகவன் ஆரம்பிக்க இடைமறித்தாள் நளினி.
“நீங்க ஒன்னும் சால்ஜாப்பு சொல்ல வேணாம்..நம்ம தெரு பசங்ககிட்ட ஒயின்ஷாப்ல கலாட்டா பண்ணியிருக்கீங்க..அவனுங்க நம்ம பையன்கிட்ட..’உன் முகத்துக்காகதாண்டா உங்க அப்பாவை சும்மா விட்டோம்’னு சொல்லிட்டு போனப்ப…தலைக்கு உசந்த பிள்ளை எப்படி கூனிக்குறுகி நின்னான் தெரியுமா?”
“நளினி…உன் ஆதங்கம் சரிதான்..!அந்த பசங்களோட நம்ம ரவி கூட காலேஜ்ல படிக்குற அரவிந்தனும் வந்திருந்தான்..குடும்ப கஷ்டத்தை நெனச்சு லீவுநாட்கள்ல அந்த பையன் பெயிண்டிங் வேலைக்கு போறான்…இன்னிக்கு சாயங்காலம் சம்பளம் பிரிக்கும் போது ஆயிரம் ரூபாய் நோட்டை சில்லரை மாத்த ஒயின்ஷாப்புக்கு வந்தானுங்க..அவனுங்க எல்லோரும் குடிக்க பழகினவனுங்க…அதனால அந்த அரவிந்தன் மட்டும் ஒதுங்கி தூரமா போனான்..ஆனா அவனுங்க விடல..சும்மா பாருக்குள்ள வந்து ஒரு ஆப்பாயில் சாப்பிட்டு கம்பெனி கொடுடான்னு அவனை வற்புறுத்துனானுங்க..அவனும் இவனுங்க கூடவே உள்ளே வந்துட்டான்.”
“இந்த மாதிரி சூழல்தான் படிப்படியா என்னையும் குடிகாரனா மாத்துச்சு…அதே நிலமை அரவிந்தனுக்கும் ஏற்பட்டுடாம தடுக்கனும்னு நினைச்சேன்..அதான் போதை ஏறினது மாதிரி நடிச்சு…அவனுங்க டேபிள்ல இருந்ததையெல்லாம் தட்டிவிட்டேன்..முதல் அனுபவமே கசப்பானதாக இருந்தா அடுத்த முறை அந்த இடத்துக்கு வர அரவிந்தன் கூச்சப்படுவான்..என்னை மாதிரி நாத்த அகழியில அவனும் விழுந்து..அதன் மூலமா அவனைச்சேர்ந்தவங்களும் அவமானப்பட வேணாம்னு நினைச்சேன்..அது தப்பா நளினி.!?”என்றார் ராகவன்.
பக்கத்து அறையில் கேட்டுககொண்டிருந்த ரவி அவசரமாக ஒரு பிளாஸ்டிக் பையை ஜன்னல் வழியே வீசியெறிந்தான்.’களீ’ரென்று சப்தத்தோடு விழுந்து நொறுங்கியது மது பாட்டில்.!
தான் சாக்கடையில் விழுந்தாலும்..தனக்கு அடுத்த தலைமுறை சந்தனமாய் மணக்கவேண்டும் என நினைக்கும் தகப்பன் கிடைத்ததை எண்ணி பூரிப்படைந்தான் ரவி.பெருமிதம் கலந்த ஆனந்த கண்ணீரோடு ஆதரவாய் கணவனின் கரம்பற்றி வீட்டுக்குள் அழைத்துச்சென்றாள் நளினி.
– தினத்தந்தி_குடும்பமலர்: 20.1.2013