அசட்டுத்துணிச்சல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 2,032 
 
 

தீவிரவாதிகள் நடமாட்டமுள்ள, நாட்டின் எல்லையில் உள்ள கிராமத்து பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தபோது பயப்படாமல் ஒத்துக்கொண்ட சகானா தன் தாயுடன் வேலைக்கு முதலாக பேருந்தில் புறப்படத்தயாரானபோது உறவுகளும், நட்புகளும் தடுத்தனர்.

“இளங்கண்ணு பயம் அறியாதுன்னு சொல்லுவாங்க. அவளுக்குத்தான் புத்தியில்லீன்னா உனக்கு எங்க போச்சு? ஆம்பளைகளே போக பயப்படற மனுச மிருகங்கள் வாழற எடத்துக்கு ரெண்டு பொம்பளைங்க போறேன்னு சொல்லறதோட, கெளம்பவே தயாராயிட்டீங்களே….? யாரையாச்சும் அனுபவம் உள்ளவங்களைப்பார்த்து ஒரு வார்த்தை அந்த ஊர் நெலம எப்படின்னு விசாரிச்சீங்களா? உங்களுக்கு அங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சமாச்சும் தெரியுமா? கண்ணால வயசுல இருக்கற ஒரு பொண்ணால அவப்பேரு வந்துட்டா தாங்கமுடியுமா உன்னால? இத பாரு ராஜம், நான் உங்கூடப்பொறந்த தோசத்தால உன்ற சந்தோசம் கெட்டுப்போகப்பிடாதுன்னு சொல்லிப்போட்டேன் ஆமா. ஒன்னி உங்க இஷ்டம்” என பயம் கலந்த கவலையுடன் தன் சகோதரியுடன் பேசினார் முன்னாள் ராணுவ வீரரான ராணா.

“அக்கா டெய்லியும் குண்டு வெடிக்கும். ராணுவமும், தீவிரவாதிகளப்பிடிக்க சண்டை போடற போது பொது மக்கள பிணையா வெச்சு தீவிரவாதிகள் பிரச்சினை பண்ணுவாங்க. நிம்மதியா தூங்க முடியாது. உன்னக்கல்யாணம் பண்ணிக்க யாரும் பொண்ணு கேட்டு வர மாட்டாங்க” என சகோதரன் முறையுள்ள சித்தப்பா மகன் சிகன் சொல்லியும் தன் முடிவில் உறுதியாக இருந்ததால் அங்கேயே தங்கத்தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு பேருந்தில் தன் தாயுடன் ஏறினாள் சகானா.

சகானாவுக்கு சிறு வயதிலிருந்தே துணிச்சல் அதிகம். யாராவது தன்னிடமோ, பிறரிடமோ தவறாக நடந்து கொண்டால் தட்டிக்கேட்பாள். ஏமாற்றுவது, பொய் சொல்வது அறவே அவளுக்குப்பிடிக்காது என்பதால் பேரழகியாக இருந்தும் அவளிடம் காதலைச்சொல்ல பலரும் தயங்கினர் என்பதை விட பயப்பட்டனர். பள்ளி கல்லூரியிலும் அடுத்தவர்களது பிரச்சினைகளையும் தீர்க்க போராடி வெற்றி பெறுவாள். ராணுவத்தில் சேர வேண்டும் என நினைத்தவளுக்கு இப்படியொரு பிரச்சினைகள் நிறைந்த ஊரிலுள்ள பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது பிடித்திருந்தது.

வேலை கிடைத்த கிராமத்துக்கு நகரத்திலிருந்து நடந்து காட்டுப்பாதை வழியே செல்ல வேண்டும். தனது தாயையும், கொண்டு சென்றிருந்த பைகளையும் ஒரு கழுதையின் மீது ஏற்றி தான் நடந்தே சென்ற போது துப்பாக்கியுடன் சிலர் பாதையருகே பதுங்கியிருந்தது மனதுக்கு சிறிது அச்சமாக இருந்தாலும் தைரியமாக அவர்களைக்கடந்து சென்றாள்.

பகலிலேயே கடும் குளிர். தகரங்களால் உருவாக்கப்பட்டிருந்த சிறிய வீடு பள்ளியருகே கொடுத்தார்கள். இவர்களைக்கண்டதும் ஊர் மக்கள், முக்கியமாகப்பெண்கள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியைக்காட்டினார்கள். குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்த உணவுப்பண்டங்களைக்கொண்டுவந்து கொடுத்தார்கள். சிலர் பழங்கள் கொடுத்தார்கள். சிலர் தங்கள் வீடுகளில் தங்கிக்கொள்ள அழைத்தார்கள். ஊர் மக்களின் அன்பில் திக்குமுக்காடிப்போனாள் சகானா.

சில பெண்கள் சகானாவின் தைரியத்தை பாராட்டினார்கள். அவளது அழகை மெச்சினார்கள். அவளது நீளமான கூந்தல் தங்களுக்கு இல்லையென சில பெண்கள் வருந்தினார்கள். ‘முடி வளர மூலிகை உள்ளதா?’ என சிலர் கேட்டார்கள்.

ராணுவ வீரர்கள் வந்து ஊரில் உள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடு பட்ட போது ஒருவரும் பிடிபடவில்லை என்பதை உறுதி செய்து விட்டு கிளம்பிச்சென்றார்கள்.

“நீங்கள் வந்த நேரம் எங்களுக்கு பரவாயில்லை. இல்லையென்றால் எங்களை விசாரிப்பார்கள். முன்பெல்லாம் பணம் வாங்கிக்கொண்டு தீவிரவாதிகளுக்கு எங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுப்போம். ஒரு முறை அவர்கள் குண்டு வைத்த போது பல பேர் செத்துப்போனதை பேப்பரில் படித்த பிறகு அவர்களை வீட்டிற்குள் விடுவதில்லை” என பெண்கள் பேசியது சகானாவுக்கு அவர்களைப்பிடித்துப்போக காரணமானது.

பின்னர்தான் தெரிந்து கொண்டாள் வீட்டிற்குள் விடுவதில்லை என சொன்னது தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தம் கணவன்களை என்பது.

பள்ளியில் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் நேரம் போக மற்ற நேரங்களில் குழந்தைகளின் அம்மாக்களுக்கு பணம் தரும் விவசாயப்பயிர்களை விளைவிக்க கற்றுக்கொடுத்தாள். தீவிரவாத செயல்களில் ஈடு பட்டு தங்களது கணவன் கொடுக்கும் பணத்தையும் வாங்க மறுத்த போது, இதற்கு பள்ளி ஆசிரியை சகானா தான் காரணம் என கருதியவர்கள் ஒரு நாள் இரவில் திறந்திருந்த வீட்டிற்குள் திடீரென நுழைந்தவர்களைக்கண்டு சகானாவின் தாய் அலறியபோதும் சகானா துணிச்சலாக அவர்களை எதிர் கொண்டாள். 

அவளைப்பார்த்து முதலில் புன்னகைத்து அவர்களிடமிருந்த பணத்தை அவளிடம் கொடுத்து, இந்த ஊரிலுள்ள பெண்களுக்குப்பிரித்துக்கொடுக்கச்சொன்னது போக சகானாவுக்கும் தனியாக பணம் கொடுத்த போது வாங்க மறுத்ததும், ஒருவன் துப்பாக்கியைக்காட்டி ‘சுட்டுக்கொன்று விடுவேன்’ என மிரட்டிய போது வாங்கிக்கொண்டதும், அடுத்த நொடியே அந்த இடத்தைக்காலி செய்தனர்.

அவர்கள் கொடுத்த பணத்தில் தன்னிடம் படிக்கும் குழந்தைகளுக்கு படிக்கத்தேவை எனக்கூறி சிறிய ரக லேப்டாப் வாங்கிக்கொடுத்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என சொல்லிக்கொடுத்தாள். அதில் ஒருவருக்கொருவர் தகவல்களைப்பறிமாறிக்கொள்ள ஏதுவாக ரகசிய இடத்தில் எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத படி உள்ள சேட்டிலைட் லிங்க் ராணுவத்தினர் மூலம் ஏற்படுத்தி, மாணவர்களுக்குள் மட்டும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் படியும், அந்த எண்களில் வேறு யாரும் பேசவோ, தகவல்களைப்பகிறவோ முடியாத படி செய்தவள் தனது எண்ணில் மட்டும் இணைத்து பாடங்களை அனுப்பியதோடு, இரவு நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் அப்பாவிகளைப்பற்றிய வீடியோக்களை ஒளிபரப்பிக்காட்டினாள்.

நன்றாகப்படிக்கும் குழந்தைகளை நகரத்துக்கு அனுப்பி சிறப்பு பயிற்ச்சி கொடுத்து, பின் மற்ற மாணவர்களுக்கு அவர்கள் மூலம் கற்றுத்தரச்செய்தாள்.

ஒருநாள் மழை அதிகமாகப்பெய்ததால் பள்ளிக்கும் ஊருக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டு விட பள்ளியிலிருந்து லேப்டாப் மூலமாக பாடம் நடத்திக்கொண்டிருந்த போது முகமூடி அணிந்த இரண்டு பேர் வந்து சகானாவை சிறுத்தையைப்பிடிக்கும் கூண்டு போன்ற ஒரு பெட்டியில் உட்கார வைத்து பெட்டியைப்பூட்டியவர்கள், ஒரு பைப்பை அதில் சொருகி ஆளுக்கு ஒரு பக்கமாகத்தூக்கிச்சென்றனர். அப்போது அவளது தாய் காய்கறி பறிக்கச்சென்றிருந்ததாலும், சகானாவின் வாயில் டேப்வைத்து பேசமுடியாமல் ஒட்டியதாலும் நடந்த சம்பவம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லையென்றாலும் வீட்டிற்குள் வந்த சகானாவின் தாய் மகளைக்காணாமல் பதறினாள், கதறினாள், கத்தினாள். தூரத்தில் ஊர் இருந்ததால் யாருக்கும் கேட்கவில்லை. பள்ளத்துக்கு பாலம் போட சிலர் மறு புறம் வேலை செய்த போதும் சத்தமிட்டது கேட்கவில்லை.

வெகுதூரம் சகானாவை சுமந்து சென்றவர்கள் “அந்தக்காலத்துல மகாராணிகளையும், இளவரசிகளையும் தூக்கிட்டு இப்படித்தான் போயிருப்பாங்க. பொண்ணு செம பிகரு. யாருக்கு கொடுத்து வெச்சிருக்கோ? இவளைக்கட்டிக்கப்போற மகாராஜா யாரோ?” என பேசிக்கொண்டதை அவர்கள் பேசும் மொழியைக்கற்றிருந்ததால் ‘இவர்கள் நம்மைக்கொல்லப்போவதில்லை’ என்பதை மட்டும் புரிந்து கொண்டாள்.

ராணுவ ஹெலிகாப்டர் பள்ளியிருக்கும் பக்கம் வந்து இறங்கியது. அதிலிருந்து சில ராணுவ வீரர்கள் இறங்கி வந்தனர். அவர்களிடம் ஓடிச்சென்று ‘ஒரு வாரமாக தன் மகளைக்காணவில்லை’ என கதறினாள் சகானாவின் தாய் ராஜம்.

அதுவரை செய்தியை அறிந்திராத ராணுவத்தினர் செய்தியை தலைமைக்கு அனுப்பினர். ‘விசயம் வெளியில் தெரிந்தால் பிரச்சினை அதிகமாகி மக்களும், ஊடகங்களும் பெரிது படுத்தி விடுவார்கள்’ என கூறிய ராணுவத்தலைமை, அனைத்து விதமான தேடுதல்களுக்கும், விசாரணைக்கும் உத்தரவிட்டது. 

மிருகங்களால் ஆபத்தில்லை. மண் சரிவில் சிக்கியிருக்க வேண்டும் அல்லது தீவிரவாதிகள் கடத்தியிருக்க வேண்டும். இதுவரை தாங்கள் கடத்தியதாக எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராணுவத்தினர் மூலமாக விசயம் ஊர் மக்களுக்குத்தெரிய வர அனைவரும் பதறிப்போனார்கள். சகானாவுக்கு தங்கள் கணவன்களான தீவிரவாதிகளால் ஏதாவது நேர்ந்தால் குடும்பத்துடன் தீக்குளிக்கப்போவதாக வீட்டிற்கு முன் எழுதி ஒட்டினர்.

சகல வசதிகளுடன் கூடிய ஸ்டார் ஹோட்டல் போன்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சகானாவை திறந்து விட்டதும் அவர்களில் ஒருவனை ஓங்கி அறைந்தாள் சகானா. அதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவளை அடிக்க முனைந்த போது “நிறுத்துங்க” என ஒரு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தாள். அடிக்கடி தொலைக்காட்சிகளிலும், பத்திர்க்கைகளிலும் காட்டப்படும் தீவிரவாதிகளின் தலைவனின் முகம்.

தாடி எதுவும் இல்லாமல் சிறு வயது இளைஞனாக தன் முன் வந்து நின்று கைகூப்பி வணங்கியவனைப்பார்த்து தானும் வணங்கினாள். அவளிடம் பேசாதவன் சிலரை அழைத்து சகானாவை ஓரிடத்துக்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டான்.

“அவளைக்கொல்லவும் முடியாது. வைத்துக்கொள்ளவும் முடியாது. வெளியில் விட்டால் வெளியுலகைச்சொல்லிக்கொடுத்து நம் குடும்பப்பெண்களையும் , குழந்தைகளையும் நமக்கெதிராக மாற்றி விடுவாள். ஏற்கனவே மாற்றியதால் தான் இவளுக்காதரவாக உண்ணாவிரதம் கூட இருக்கப்போவதாக முதல் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இறுதிப்போராட்டம் தீக்குளிப்பதாம். அந்தளவுக்கு பெண்களின் மனதை மாற்றி‌ வைத்துள்ளாள்.சதிகாரி” என நாட்டிற்க்கு எதிராக சதி செயலில் ஈடுபடும் ஒரு தீவிரவாதி ஒருவன் சொன்னதைக்கேட்ட தீவிரவாதிகளின் தலைவன் சகு நேராக சகானா தங்கியுள்ள அறைக்குள் நுழைந்தான்.

அந்த நொடி ராணுவம் அந்தப்பகுதியைச்சுற்றி வளைத்திருந்தது. சகானா கழுத்தில் துப்பாக்கியை வைத்தான் தீவிரவாதிகளின் தலைவன். “நீ உண்மையிலேயே யார்? ராணுவத்தோட ஆளா?” எனக்கேட்டான். இது வரை வராத உயிர் பயம் இப்போது சகானாவுக்கு வந்ததும் பீதியில் “காப்பாத்துங்க…” என கத்தினாள். 

அறைக்கதவு பல பேரால் ‘படபட’ வென தட்டப்பட்டதும் கண் விழித்தவள், ஆடைகளை சரி செய்து கதைவைத்திறந்த போது அம்மா தவிர அபார்ட்மெண்ட்லிருந்த பக்கத்து வீட்டினர் பலரும் கலவரமான முகத்துடன் நின்றிருந்ததைக்கண்டு அசடுவழிந்தவாறு “கனவு” என்றாள் சகானா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *