கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2023
பார்வையிட்டோர்: 1,817 
 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எஹ் ஹேஃவ்…! ஹே…வ்”

சதைக் கனதிமிக்க குரல்வளையில் சிக்கித் தடுமாறிப் பீறிக்கொண்டுவருகின்ற காரணத்தால் அந்த ஏப்பம் பயங் கரமாக ஒலித்தது. அது, மச்சு வீட்டின் கொங்கிறீட் மேல் தளத்திலும் சுவர்களிலும் மோதி அதிபயங்கரமாக எதி ரொலித்தது. அண்ணாந்து, தாடைகளிரண்டும் விட்டுப் போய்விடுமோ என்ற அளவுக்கு வாயைப் பிளந்து, ஏப்பம் விடும்போது, மகுமூதுலெவ்வை மரைக்காரைப் பார்ப்போ ருக்குப் பரிதாபம் மேலிடும். தொனியின் பயங்கரம் மறு கனமே அவர்களைப் பய உணர்வில் வக்கிரமாகத் தள்ளி விடும்.

‘எஹ்….. ஹேய்..வ்…! ஹ்வ்…!’

மீண்டும் அதே யயங்கரம். அதிபயங்கரம். அப்பாடா! என்ன சுகம். என்ன இதவு, கனமான எதையோ திரணையாக்கித் தினிப்பதுபோல, நெஞ்சுக்குழலும் தொண்டைக் குழியும் அடைத்தன. மூச்சு தடைப்பட்டுவிடுமோ என்ற பயப்பிராந்திகூட ஏற்பட்டது. ஏப்பமா அது! இடம், பொருள் அறிந்து பிரசன்னமாகி, இடர்ப்பாட்டைத் துவம் சம் செய்து துடைத்தெறிந்த தெய்வம்.

பின் என்ன. அச்சை, பிச்சையான சாப்பாடா. மரைக்காருக்கும் வயது ஐம்பதுக்குமேல் ஆகப்போகிறது. இந்த அரை நூற்றாண்டு அனுபவத்தில் இவ்வளவு சுவையான மாட்டிறைச்சியை அவர் உண்டதேயில்லை. மறி நாம்பன் களையும், பட்டிக்காரனையும் ஒரு சேர ஏய்த்துக் காலங் கடத்திய மூர்க்கப்பசு – மலட்டுப்பசு: நேற்று மாலை அது பொதுமக்கள் பார்வைக்காகச் சந்தையிலே கட்டப்பட் டிருந்தது. கழுக்கு முழுக்கென்று கொழுத்திருந்த அதனைப் பார்த்து பசுவா. யானைக் குட்டியா என்று எல்லோரும் சிலாகித்துக்கொண்டார்கள்,

பசுவைக் கண்டதும் மரைக்கார் செய்த முதல் வேலை, ‘புச்சருக்’கு செய்தி அனுப்பியது தான். அவனும் நாரிச் சதையில் மூன்று இறாத்தலும், நெஞ்சுக் குருத்து எலும்பில் ஓர் இறாத்தலும், ஈரல் மாங்காய் ஒன்றரை இருத்தலும் நிறுத்துப் பொட்டலமாக்கி அனுப்பிவிட்டுத்தான், முண்டி யடித்துக்கொண்டு நின்ற மற்றவர்களுக்கு விற்பனையை ஆரம்பித்தான். வல்லவன் பம்பரம் மணலில் மட்டுமா ஆடும்? கசாப்புக்கடைச் சகதியில் ஆடாதா என்ன?

பகல் இறைச்சிக் கறியும் ஈரல் பொரியலும், மரைக் கார் அவர் மனைவி மனைவியின் தாயான கிழம், இந்த மூவராலும் ஒருவேளையோடு சமாளிக்கமுடியாதே. மதியச் சாப்பாட்டுக்குப் பிறகுதான் பசுவின் மூளையை அனுப்பி வைத்தான். மூளையை நெய்யில் பொரித்தோ வதக்கியோ உண்பதும் அவருக்குப் பிடிக்காது. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு, எலுமிச்சம்புளி கலந்து வறுவல் செய்து உண்பது மரைக்காரைப் பொறுத்த வரை தவிர்க்கமுடியாதது.

நொறுங்கங் குற்றி வெண்பட்டுப் போலத் தீட்டிய சீனட்டி அரிசிச் சோற்றை இந்த முக்கறிகளோடு உண்ட பின், முன்னங்கைப் பருமனான கோழிக்கூட்டு வாழைப் பழங்களையும் உள்ளே தள்ளியபின் உண்டான திக்குமுக் காட்டைத் தொடர்ந்து வந்த ஏப்பங்கள் ஓரளவுக்குச் சரி செய்தன.

இரவு எட்டு மணிக்கு மேலாகியும் கொங்கிறீட் மேல் தளத்தின் காங்கை இன்னும் அடங்கியபாடாயில்லை. பனை யோலை விசிறி செய்பவர்களுக்குப் புத்தி மட்டுத்தான்! பருத்த உடற்காரர்களின் வசதியை உத்தேசித்துச் சுளகள விலும் விசிறிகளைச் செய்தாலென்ன? விசிறியுங் கையுமாக ஆனை நடை பயில்கிறார்.

“உப்….!”

மயிரடர்ந்த நெஞ்சில் வாயால் ஊதிவிட்டார்:

“மெம்பராகிறத்துக்கும் சேர்மனாகிறத்துக்கும் வந்து கெஞ்சிறானுகள். இந்த எலக்ரிக்கப் போட்டுத்தொலைக்கி றானுகளா? கேட்டா, அன்னா வருது…. இன்னா வருது… பொழப்புச் செய்யுறாங்க இருக்கட்டும் வாறமுறைக்கு நாம சேமனாகிட்டுப் பார்ப்போம் ம்… புள்ள….! பல்லுக்குத்த ஈக்கில் இல்லையா?”

“ம்க்ங்… ஈக்கில் வேலியில் இரிக்கும்.”

சமையல்கட்டுப் பக்கமிருந்து மனைவி ஆமினா உம்மா, அவர் கோரிக்கையை உதாசீனம் செய்து பதில் கொடுத் தாள். சீறிவந்த சினத்தை அடக்கிக்கொண்டு வெளியே போனார், வேலியிலே ஈர்க்கில் துண்டைத் துணித்துப் பல் இடுவல்களில் சிக்கி இருந்த இறைச்சிச் சிராய்களைக் குத்தி எடுத்தார். பின் கிணற்றடிக்குப்போய் வாய் கொப்பளித்து விட்டு உள்ளே வந்தார்.

சிரமப்பட்டுப் பாயில் அமர்ந்தார். எட்ட இருந்த வாட்டாவையும் படிக்கத்தையும் முனகிக்கொண்டு இழுத் தெடுத்துக்கொண்டார். பாக்குச் சீவத்தொடங்கினார்.

“புள்ளே ! புள்ளேய்”

மனைவியை விளித்தார்.

“என்ன. புள்ளயுங் கிள்ளயும். சும்மா கிடங்க”

இந்த வார்த்தைகள் உள்ளேயிருந்து ஒலித்தன.

“அதுக்கில்ல புள்ள. உங்களுக்குஞ் சேர்த்துப் பாக் குச் சீவுறன் எண்டத்தச் சொல்லத்தான் புள்ள”

‘சீவினாச் சீவி வைக்கிறதானே, நான் வந்து எடுத் துக்குவேன்’

“புள்ளே! உம்மாவிய இரிக்காங்களா புள்ளே”

“இரிக்காம என்ன மகுத்தாவ போனாங்க?”

“அதுக்கில்ல புள்ள ! உம்மாவியள சுவரோரத்துக்கு வரச்சொல்லுங்க. உம்மாவியளோட ஒரு முக்கியமான சங் கதி பேசவேண்டும்”

தாம்பூலந் தயாரித்து, மனைவிக்கென்று, ஒரு கூறை ஒதுக்கி வைத்துவிட்டு, மீதியை வாயிலே திணித்து ஓர் அதக்கு அதக்கினார். எச்சிலை பீச்சியடித்து படிக்கத்தினுள் சளுக்கென்று உமிழ்ந்துவிட்டு, கடைவாயைத் துடைத்து விட்டார். பின் கைப்புத் துண்டையும் புகையிலைக் கிள்ளையும் வாயிலே தள்ளினார். மனைவி ஆமினா முன்றானை இடையி லிருந்தே பின்னால் இழுபட்டுவர, கைகளைப் பின்னுயர்த்தி கூந்தலை முடிந்தவண்ணம் வந்தாள். சட்டையின் மேல்வாய் கூடத் திறந்தே கிடக்க, அவள் வந்த கோலம் அவரது நரம்புகளை நீவிவிட்டிருக்கவேண்டும். அவரது அடர்ந்த புரு வங்களுக்குக் கீழே சுழலும் மணித் தக்காளிபோன்ற விழி கள் விரகக் கணையை வீசத்தொடங்கின.

“என்னை முறைக்கிறத்தப் போட்டுட்டு உம்மாவோட கதைக்கவேணுமெண்டத்தக் கதைங்க. அங்கால வந்திருக் காங்க” என்று கூறிவிட்டு அருகமர்ந்தவள் தயாராக இருந்த தாம்பூலத்தைச் சுவைக்கத் தொடங்கினாள். முன்பின் தெரியாத யாராவது இருவரையும் பார்க்கநேர்ந் தால் நிச்சயமாகத் தம்பதிகள் என்ற முடிவுக்கு வரமாட் டார்கள். தகப்பனும் மகளும் என்றோ , மாமனும் மருகியும் என்றோதான நினைப்பா.

எலுமிச்சம் பழ வண்ணத்தில் வடித்தெடுத்த அங்க அமைவுகளுடன் நிறைவு பெற்றிருக்கும் தன் மகளுக்கு, திரண்ட சொத்துக்கு அதிபதியான அவள் தகப்பன், மகுமூது லெவ்வையை மாப்பிள்ளையாக எதற்காக எடுத்தார் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த வீட்டில் முற்றிய தேமல் முதிரையில் கருங்காலி வைரத்தால் அழகு செய்த பெட்டகங்களும் அலுமாரிகளும் இருக்கின்றன. அவற்றோடு பழகிய தோஷம், மகளுக்கு மாப்பிள்ளை எடுப் பதிலும் செல்வாக்கைப் பிரயோகித்து விட்டது போலும்.

லொறி டயர்களை ஒன்றன் மேலொன் றடுக்கி, உச்சி யிலே பெரிய பனங்காயைத் தூக்கிவைத்தது போன்ற தோற் றப் பொலிவுள்ள மாப்பிள்ளை, பூப்பெய்தாத தனது மக ளின் கழுத்தில் தாலி கட்டிய சுபவேளையில் அவள் மயக்கம் போட்டு விழுந்த வேளையிலாவது இந்தச் சோடிப் பொருத் தத்தைப்பற்றி அவள் தகப்பன் சிந்திக்கவில்லை.

“இல்லடி புள்ள ! உம்மாவியளுக்கு அல்லாகுத்த ஆலா என்ன கொறைய வச்சான். அவியளுக்குக் கிடைச்ச பேரான வாழ்வு வேற யாருக்குக் கிடைத்தது. அக்கிளி புக்கிளியா உண்டாங்க, உடுத்தாங்க, நகைநட்டுப் போட் டாங்க. வாக்கு வடிவான மகளப் பிள்ளைப் பாக்கிசமாக ஆண்டவன் குடுத்தான், உங்களை நெற செல்வமா வளத்து நிகாஹ் செய்து கண்குளிரப் பார்த்தாங்க. அவங்கட கண் ணோட வாப்பாவங்களையும் நல்லடக்கம் செய்து, செய்ய வேண்டிய கடமைகளை யெல்லாஞ் செய்தாங்க. இனி உம்மா வங்களுக்கு இந்த ஒல்கத்தில என்ன வேண்டிக்கிடக்கு. அவங்க போற வழிக்கு ஏதாவது தேடவேணும். அவங்க ளுக்கு ஆண்டவன் சொர்க்க வாசலைத் தொறந்து வைக்க வேணும்” என்று. புருவங்களை நெளித்து கண்களை உருட்டி, கடைவாய்களில் எச்சில் வழியக் கூறிமுடித்தார் மகுமூது லெல்வை மரைக்கார். படிக்கத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே உமிழ்ந்து தள்ளினார். அதைக் கீழே வைத்து விட்டு, கடைவாயை விரலால் துடைத்துவிட்டார்.

“எஹ்… ஹே….வ்… ஹே…வ்…..”

“என்ன எங்க உம்மா கண்ணுக்கெதிரே கிடப்பது கரிக்கிறதோ? கெதியா மட்த்தாகச் சொல்றயள?”

“அஸ்தஃபிரல்லா. நானப்படிச் சொல்லுவன? உங்க வாப்பா மவ்த்தானதுக்கு எத்தனை நாள் அழுதேனென்டு தெரியுந்தானே. அவங்க உங்களுக்கு மாத்திரம் உம்மா இல்ல புள்ள, எனக்கும் அவங்க உம்மா, மாமிக்கு மாமி. அவங்க நீடித்த ஹயாத்தா இருந்து நம்ம ரெண்டு பேரை யும் ஒண்டா வச்சி அழகு பார்க்கணும்.”

அவர் பேச்சுக்குக் குறுக்கீடு செய்யும் விதத்தில் முன் னால் பாய்ந்தாள் ஆமினா. பாய்ந்தவள் படிக்கத்தை இழுத் துக் காறிக் கனைத்து உமிழ்ந்தாள். அவர் விசிறியை வேக மாகச் சுழற்றிக்கொண்டே,

“என்ன புள்ள. வெத்திலை தெகக்கிப் போட்டுத ? போயிலயக் கனக்கப் போடவேணாமென்டு எத்தின தரம் சொல்லியிருக்கேன்.”

“நீங்க ஒங்கட வேலயப் பாருங்க. இப்படித்தான் அந்த மனுஷனுக்கும் கொழையடிச்சிக் கொழையடிச்சித், தான் சாக மருந்து தின்னச்செய்தீங்க. மகள் குடும்பம் நடுத்துற அழகத் தாங்கிக்க ஏலாமத்தான் எடையில் பாதி யில் மண்மறஞ்சி போனார்.”

மனைவியின் பேச்சு மகுமூது மரைக்காரை வெல வெலக்கச் செய்துவிட்டது. விசனத்தோடு நெற்றி வியர் வையை வழித்தெறிந்தார். பின்,

“என்ன புள்ள நீங்க கதைக்கிற கத. இப்புடியெல் லாம் கதைக்க ஆகும புள்ள? அல்லாவுக்குப் பொருந்தக் கதையுங்க புள்ள” என்று மனைவியைத் ததாஸ்து பண்ணினார். தொடர்ந்தும் அவரே பேசத்தொடங்கினார்.

“புள்ள! இந்தத் தடவை, உம்மாவங்கள மக்கா வுக்கு அனுப்புவம் புள்ள. அங்கே போன உடனே தெரிஞ்சி செய்த, தெரியாமச் செய்த பாவம் எல்லாம் நீங்கி பிறந்த பாலாவரசிபோல வருவாங்க. அந்த வல்ல பெரிய நாயன் சொர்க்க வாசலத் திறந்துவிடுவான்.”

தகப்பனயுந் திண்டிட்டிருக்கிறன். கண்முன்னால உசும்பித் திரியிற இந்தக் கட்டயப் பார்த்துத்தான் என்ட மனசு கொஞ்சம் ஆறுதலடையது. அங்கயும் இங்கயும் அனுப்பி உசிர வாங்கி எண்ட மன ஆறுதலக் கெடுக்கா புள்ள எண்ட கோபத்தக் கிளப்பாதங்க. மக்கா வுக்குப் போய் ஹஜ்ஜுச் செய்யிற பாக்கிசம் எல்லாருக்குங் கெடக்காது. மவ்த்தத் தட்டவும் ஆராலயும் ஏலாது. மக்காவுக்குப் போன எடத்திலதான் அந்த மெளத்து வரவேணு மெண்டிருந்தா வரட்டுமே. அந்தப் பாக்கிசமும் எல்லாருக் குங் கிட்டாது. மாமி வங்க…!”

“ஓய்…ய்… என்ன வாப்பா”

மருமகனின் அழைப்புக்கு மாமி உள்ளே இருந்து குரல் கொடுத்தாள். மரைக்கார் மாமியின் குரலால் தெம் படைந்தவராய், தனது தொண்டையைத் தடவிக்கொடுத்த வண்ணம் பேச்சைத் தொடங்குகிறார்.

“மாமி ஒங்க மகள்ள பேச்ச கருத்துக்கெடாதங்க, நீங்க எனக்கு உம்மா மாதிரி. நீங்க இல்லாதபோது உண் ணுற சோறும் என்ட உடல்ல ஒட்டாது. நீங்க நூத்துக்கு மேல வாழவேணும். உங்கள அல்லா சரீர சொகத்தொட கொண்டுவந்து சேர்ப்பான். நீங்க இந்தமொற மக்கத்துக் குப் போகத்தான் வேணும். வேற ஒரு கதையும் வேணாம்”

பேச்சு மனிதனுக்கு அசதியைத் தராதா என்ன? உண்ட களையும், மனைவியின் எடுத்தெறிந்த பேச்சில் விளைந்த ஆத்திரமும் சேர்ந்து மூச்சுவாங்கத் தொடங்கிவிட்டது. உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டுகிறது. இருந்த இருப்பி லேயே உடலை வெகு சிரமத்துடன் முன்வளைத்து, சாரத் தின் கால்மாட்டுப் பகுதியால் முகம், வயிறு, கழுத்து, மார்பு, கட்கம் ஆகிய அங்கங்களைத் துடைத்துக்கொண்டார்.

“தம்பி, நீங்க சொன்னதெல்லாம் சரிதான் மனே. பெருநாள் கொத்வாக்குக்கூட நான் ஒழுங்காப் போனதில்லை. வாசல் கடந்து தெருவில் போறது நம்மளுக்கு ஒழுக்கமு மில்லை. நம்மளுக்குப் பவுறுமில்ல எண்டு ஓங்கட மாமாவிய என்ன வெளியே போக உடுறதில்ல. இப்படிப்பட்ட நான் மக்கா ராச்சியம் போய் சமாளிக்கிற எப்படி?”

மாமி தன் ஆற்முமையை அப்பட்டமாகவே சொல்லி வைத்தாள்,

“நீங்க தனியப் போறதில்ல. ஆன சுட்டார்ர ஆதங் கண்டும் பொண்டாட்டியும் போறாங்க. நெல்லுச்சப்பியர்ர பொண்டாட்டியும் போறா. ஹஜ்ஜு செய்யவேண்டிய முறை களையும் ஓதவேண்டிய ஓதல்களையும் நான் சொல்லித் தாறன். காலையிலே சுபகுத் தொழுகையைத் தொழுங்க, இருக்கிற இவ்வளவு நாளுக்கும் ஒழுங்காகத் தொழவேணும். என்ன செய்யிற, செலவப் பார்த்தா ஆகுமா? கொஞ்சத் தான தருமமுஞ் செய்யத்தான் வேணும்.”

“பிச்சைக்காரர் ஐயக்காரர் வந்திருவாங்க எண்டு பகலக்கெல்லாம் தலாவாசல் கதவப் பூட்டிவைக்கிற ஓங்களுக்குத் தான தருமஞ் செய்யவும் மனம் வருகுதா?”

மனைவி ஆமினா தூக்கிப்போட்டாள் ஒரு போடு. அதற்குச் சூடாகப் பதிலளித்துக் கதவடைப்புத்தான் ஐஸ் வரியம் திரள்வதற்கு அடிப்படையென்பதை நிலை நாட்ட அவர் நெஞ்சம் உந்தியது. தினமும் படியேறிவரும் ஏழை களுக்குக் கொடுக்கும் எவனையாவது உலகம் கொடையாளி என்று சொல்கிறதா? இறுக்கவேண்டிய விதமாகவெல்லாம் இதயத்தை இறுக்கிப் பேர் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பத்தில் மாத்திரம் நுகைப்பது தான் தம்போன்றவர்களுக்கு அழகு என்பதை அறியாத மக்காக இருக்கிறாளே! இவள் ஒரு பணக்காரன் பெற்ற பிள்ளையா? என்ற நினைவுப் பின்னல் அவர் சிந்தனையை ஆக்கிரமித்து, அவள் முன் தன் சுய மதிப்பை அடக்கியடக்கிப் பழகிப்போன அவரால் அந்த உந்தலையும் இலகுவாக அடக்கமுடிந்தது.

நோன்புப் பெருநாளின் ஆரவாரம் அடங்கிவிட்டது. ஆறு நோன்பும் நேற்றோடு முடிவடைந்தது. மஃமூது மரைக் காரின் வீட்டில் பெருநாளின் மகிழ்ச்சி ஆரவாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அந்த வளவு ஜனவெள்ளத்தால் பொங்கி வழிகிறது. வருகிறவர்களும் இருப்பவர்களும் போகின்றவர் களுமான ஜன நெரிசலுக்கு அந்த மாளிகைபோன்ற வீடே போதவில்லை. முற்றத்திலே தற்காலிகமாகக் கட்டியிருக்கும் ஒழுகாப் புரைக்கொட்டில் மாத்திரம் இல்லை யென்றால் நிலைமை படுமோசந்தான். மூன்று நாட்களாக ஊற்றிய தேநீருக்குத் தினசரி ஓர் அந்தர் சீனியும் மூன்றரை இறாத் தல் தேயிலையும் செலவாகியிருக்கும். ஒரு நாளுக்கு ஐம்பது பகளி வெற்றிலைக்குமேல் சப்பித் துப்பப்பட்டுள்ளன. இதில் ஒன்றும் மரைக்காரின் கையைக் கடிக்கவில்லை. வருபவர்கள் வெறுங்கையோடு வருவதில்லை. ஏழு இறாத்தல் சீனியைக் கொண்டுவந்த ஒருவருக்குத் தேநீர் கொடுக்க ஓர் அவுன்ஸ் சீனிதான் செலவாகியிருக்கும் என்பதை உதாரணமாகக் கொண்டால் நிலைமை புரிந்துவிடும்.

இன்று மர்ஹும் (காலஞ்சென்ற) சீனிமுகம்மது முத் லாளியின் மனைவியும் அரசாங்கக் கொந்துறாத்தர் மஃமூது மரைக்காரின் மாமியாரும் ஆமினா உம்மாவின் தாயுமான அலிமா நாச்சி மக்கா யாத்திரைக்குப் புறப்படுகிறார். அவ ரைக் கண்டு சலாஞ்சொல்லி, கைமுகந்து, அன்பைப் பெற வும், ஆசி பெறவும், விடை அனுப்பவும் வந்து போகிறவர் களின் கூட்டமென்றால் கேட்கவாவேணும்?

கடவலடியில் கார்கள் வந்து தகையும் ஆரவாரமும், ஹோன் சப்தமும் மனிதக் கும்பலின் ஆரவாரத்தை ஒரு புறம் ஒதுக்குகின்றன.

“கார்…. கார், கடப்படிய கார்.”

சிறுவர்கள் வாய்கள் பட்டாசுக் கட்டுகளாகப் பொரிந்து தள்ளுகின்றன.

“கார்…. கார்…”

“நேரமாகுதுகர்… வெளிக்கிடுங்ககர்.ம்…. ஆயத்தப்படுங்க”

“சலாங் குடுக்கிறாக்கள். குடுத்து முடியுங்க” என் றெல்லாம் குரல்கள் தனித்தும் ஒன்று கலந்தும் எழும் ஒலிப் பிரவாகங்கள் செவிடு தட்டச் செய்கின்றன.

“ஆ…! ஆயத்தந்தான் ! ம்….! வெளிக்கிடுங்க. கன்னத்து ரெண்டு றக்காயத்துத் தொழுங்க!” வீட்டின் நடு அறையிலிருந்து இவ்வார்த்தைகள் வெளிப்போந்தன.

“உடுங்ககா! போதுங்கா புள்ளய உடுங்க கா.” தாயை நோக்கி மகள் ஆமினா முன்னேறினாள். அவள் மத னிக்காரி கும்பலை விலக்கி வழிகாட்டிக்கொடுத்தாள். தாயும் மகளும் நேருக்குநேர் நெருங்கி நின்றார்கள். இருவர் விழி களும் கசிந்துகுத்தன. ஒருவர் தோளில் ஒருவர் முகம் புதைத்துக் கேவி அழுதனர். விசிப்பை அடக்கமாட்டாமல் அடக்கிக்கொண்டு முகங்களைப் பெயர்த்தனர். தாய் பேசி னாள்..

“நான் போறன் மகள். அல்லா என்னக் கொண் டந்து சேர்ப்பான். என்ட பேரில இருந்த சொத்தையெல் லாம் ஒனக்கும் மச்சானுக்கும் எழுதியிருக்கிறன், நான் திரும்பி வந்தா என்ன சாகுமட்டும் பார்த்துக்க மகள்.”

“உம்மா இதென்ன பேச்சு? இந்த சொத்தில எல் லாம் எனக்கு விருப்பமில்ல உம்மா. இந்தச் சொத்த வச் சிக்கிட்டு வாழ்க்கையிலே என்ன சொகத்தக் கண்டன். நீங்க உசிரோட..”

“ம்…கோச்சிக்கு நேரமாகுது. வெளிக்கிடுங்க!” மகுமூது மரைக்காரின் உத்தரவு உரையாடலுக்கு முத்தாய்ப்பு வைத்தது.

(யாவும் கற்பனை]

– தினகரன் 1968

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *