குருடர்கள் எவ்வளவு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,825 
 

ஒரு நாள், மன்னர் அக்பர் ஒரு ஐயத்தை எழுப்பினார்.

”உலகத்தில் குருடர்கள் தொகை எவ்வளவு?”

இந்த வினாவுக்குச் சபைலிருந்தவர்களுள்பெரும் பகுதியினர், உலத்தில் குருடர்களின் தொகை எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கூறுவது கடினம். ஆனால், கண் பார்வை உள்ளவர்களைவிட கண்பார்வையற்றவர்கள் தொகை மிகமிகக் குறைவாகத்தான் இருக்கும் என்னும் கருத்தைத் தெரிவித்தனர்.

அக்பர், ”பீர்பால் ! உம் கருத்து என்ன?” எனக் கேட்டார்.

பீர்பல் எழுந்து, ”மன்னர் பெருமானே ! இப்போது இங்கு சொல்லப்பட்ட கருத்தே குருட்டுத்தனமானதாகும். உலகத்தில் கண்பார்வையற்ற குருட்டுகளின் தொகைதான் மிகமிக அதிகம். குறிப்பாகச் சொல்வதானால், இந்த உலகத்தில் பெரும்பகுதியினர் குருடர்கள்தாம்” என்றார்.

”பீர்பால்! உமது கருத்து விநோதமாய் இருக்கிறதே ! உம் கருத்துப்படி இந்தச்சபையில் இருப்பவர்களுள் பெரும் பகுதியினர் குருடர்கள் தாம் என்று கூறுவீர் போலிருக்கிறதே?” என்றார் அக்பர்.

“அதிலென்ன சந்தேகம்?” என்றார் பீர்பால்

”அப்படியானால் நானும் ஒரு குருடானா?” என்றார் அக்பர்.

அதற்கு, ”பொதுவாக ஒரு மனிதனை என்ன காரணத்தைக்கொண்டு குருடன் என்று கூறுகிறோம்?” என்று வினா எழுப்பினார் பீர்பால்.

”ஒரு பொருளை, அது இன்ன பொருள்தான் என்று சரியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாதவனைப் பொதுவாகக் குருடன் என்று கூறுகிறோம் ” என அக்பர் மறுமொழி சொன்னார்.

”இப்போது ஒரு சோதனை செய்து பார்ப்போம் ” என்று கூறினார் பீர்பால். பிறகு ஒரு துணியை எடுத்து, “மன்னர் அவர்களே ! இது என்ன?” என்று கேட்டார்.

”அது ஒரு துண்டுத் துணி!” எனறார் மன்னர்.

பீர்பால், அதே துணியைத் தமது தலையில் ஒழுங்காகச் சுற்றிக் கட்டிக்கொண்டு, ”இது என்ன ?” என்று கேட்டார்.

”அது ஒரு தலைப்பாகை !” என்றார் மன்னர்.

பீர்பால் அதே துணியைக் கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு, ” இப்போது இது என்ன?” என்றார்.

”அது கழுத்துக்குட்டை அல்லது சவுக்கம்” என்றார் அக்பர்.

பீர்பால், கழுத்துத் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார்.

”இப்போது இது என்ன துணி” என்றார் பீர்பால்

”இப்போது அது லுங்கி அல்லது வேஷ்டி என்று கூறலாம்” என கூறினார்

பீர்பால் அக்பரை நோக்கிப் பணிவான குரலில், ” மன்னர் பெருமானே! என் கையில் இருக்கும் இந்தத் துண்டுத் துணியைப் பற்றி உங்களால் ஒரே மாதிரியான கருத்தைக் கூற முடியவில்லை. கண்களால் இதனை நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஒரு பொருளைப் பற்றிப்பலவிதமான கருத்துக்களைக் கூறினீர்கள். ஒரு குருடனின் நிலையும் இதுதானே. தனக்கு பார்வையில்லாத காரணத்தால், ஒரு பொருளைப் பற்றித் தெளிவான கருத்தை அவனால் கூற முடியவில்லை. இப்போது தங்கள் நிலையும் அதுவாகத்தானே இருக்கிறது ? பார்வையுள்ளவர்கள் என்று கர்வப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் – என்னையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். கண் இருந்தும் குருடர்களாத்தான் இருக்கிறோம். இந்தக்கண்ணோட்டப்படி பார்த்தால், குருடர்களைவிடக் கண் பார்வையுள்ள குருடர்களின் தொகை மிகவும் அதிகம் என்று நாம் கருதலாமல்லவா?” என்று கூறினார்.

ஆழ்ந்த சிந்தனை வளத்துடன் கூடிய, உண்மைகள் நிறைந்த பீர்பாலின் அந்தச் சொற்களைக் கேட்டு, மிகவும் பாராட்டினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *