ஆள வந்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2023
பார்வையிட்டோர்: 805 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கள்ள மார்க்கெட் ஒழிக! 
பதுக்கல்காரனைச் சிறையிலடை! 

என்றெல்லாம் தொண்டை கிழியக் கோஷமிட்டுக் கொண்டு சென்றது, ஒரு ஊர்வலம். அன்று ஆகஸ்ட் இருபத்து மூன்றாம் தேதி. சுதந்திரம் வந்து பத்து தினங்கள்கூட ஆக வில்லை. அதற்குள் நெல்லை ஜில்லாவில் பட்டினிப் பட்டாளம் திரண்டுவிட்டது. ஊரிலே பல ரேஷன் கடைகள் திறக்கப்பட வில்லை; ரேஷன் கடைக்காரர்கள் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு, ஈ விரட்டத் தயாராயில்லை. வயிற்றுக்கு உத்தரவாதம் அளித்த ரேஷன் கார்டுகள் வலியிழந்து விட்டன. பஞ்சம் பல்லிளித்தது! ‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை யாற்றங்கரையிலே’ பஞ்சம்!…… 

கள்ள மார்க்கெட் ஒழிக ! 
பதுக்கல்காரனைச் சிறையிலடை ! 

அனவரத விநாயகம் பிள்ளையின் வீட்டுப் பக்கம் வந்ததும் அந்தப் பட்டினிப் பட்டாளத்தின் குரல் உச்ச ஸ்தாயியை அடைந்தது. உரக்கக் கோஷமிட்டுவிட்டு, அவர் வீட்டு நடையில் காறி உமிழ்ந்து விட்டுச் சென்றார்கள், மக்கள். 

உள்வீட்டு முற்றத்திலே, ஈஸிசேரில் சாய்ந்துகொண்டு பக்பக்கென்று மணிலாச் சுருட்டை இழுத்துக் கொண்டிருந்த பிள்ளையவர்களின் காதிலும், அந்தக் கோஷங்கள் விழுந்தன. சுருட்டைக் கவ்வியிருந்த உதட்டுக் கோணத்தில் ஒரு விகார மான புன்னகை விரிந்து வதங்கியது. 

”சாவுறதுக்குப் பள்ளிவாசல் இல்லாத பயலுக. நாய் களுக்கு – குலைக்கத்தான் தெரியும்!” என்று தமக்குள் முனகிக் கொண்டார். அவருடைய எண்ணத்திலே இடி விழுந்தது மாதிரி, வழுக்கை விழுந்த உச்சந்தலையிலே ஒரு சொட்டு மழைத் தண்ணீர் விழுந்தது. இடியும் இடித்தது. 

வானத்தை அண்ணாந்து பார்த்தார். 

சூலுற்ற கருமேகங்கள் கூடிக் குமுறிக் கறுத்துக்கொண் டிருந்தன. மழைக்கு ஆரம்பமாக ஒன்றிரண்டு துளிகளும் விழுந்தன. 

உடனே முற்றத்தைவிட்டு எழுந்து, தாரிசாவுக்குச் சென்று சாய்ந்து கொண்டார். “மளெ வார மாதிரி யிருக்கே. இன்னம் ராசையா பள்ளிக்கூடத்திலிருந்து வரக் காணமே. இந்த வேலுப் பயலும் எங்கெயோ தொலைஞ்சு பொயிட்டான். இல்லாட்டி, அவனையாவது போயி பார்த்துட்டு வரச்சொல்லலாம்’ என்று எண்ணியவாறு, கண்ணை ஏறச் சொருகி, நாக்கில் கூடிநின்ற புகையிலையின் சுவாரசியக் கசப்பை அனுபவித்துக் கொண்டிருந்தார். 

அனவரத் விநாயகம் பிள்ளை திருநெல்வேலி சைவ வேளாளப் பிள்ளைமார்களில் செயலும் செல்வமும் மிக்க வர். அனவரதமும் விநாயகப் பெருமானாகவே செழித்து வளரும் ஆரோக்கிய திடகாத்திர முடையவர். வீடு வாசல் முதலிய சொத்துக்கள் போக, அம்பாசமுத்திரம் சரகத் தில் நிறைய நில புலன்களும் உண்டு. கன்னடியன் காலின் முதல் பாசனப் பயிர் ஆனதால், தீய்வு என் பதையே அறியாத வயல்கள் அவை. ஊரிலே உள்ள பெரிய மனிதர்களில் அவரும் ஒருவர்தான் என்றாலும், எல்லா நிலச் சுவான்தார்களையும் போலவே, அவரும் சர்க்காருக்கு டிமிக்கி கொடுத்து நெல்லை ஒதுக்கிக்கொண்டு போனவர்தான். ஒரு காலத்தில் பிராமணத் துவேஷியும் ஜஸ்டிஸ் அனுதாபியுமாயிருந்த பிள்ளையவர்கள், சிறை வாசம், தடியடி முதலிய தண்டனைகள் இனிமேல் கிடை யாது என்ற தைரியம் ஏற்பட்டவுடன் தாம் ஒரு காலத்தில் பழித்த ‘வங்காளஞ் சாக்கை’-கதரை, உடுத்த ஆரம் யித்ததோடு, தமது வீட்டிலும் வில் வண்டியிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தூய கதராடை அவருடைய நடவடிக்கைகளுக்குச் சரியான திரையாகப் பயன்பட்டது. சர்க்கார் அதிகாரிகளிடம் ஒரு மணி தானியங்கூட இல்லை என்று கைவிரித்தவர்களில் அவரும் ஒருவர். எனினும், ஊரில் மட்டும் அவர் வீட்டுக்குள் நிலவறை ஒன்று கட்டி, மூட்டை மூட்டைகளாக அடுக்கி வைத்திருக்கிறார் என்பது எல்லோரும் பரிமாறிக்கொள்ளும் பகிரங்க ரகசியம். 

ராசையா அவருடைய செல்லப் பேரன். ஆண் வாரீசு அற்றவராதலால், அவருடைய மகள் கோமதியின் பிள்ளை யான ராசையாதான் அவருடைய சொத்தை ஆளப் பிறந்தவனாக இருந்தான். தாயும் தந்தையும் அரியநாயக புரத்திலே இருந்தாலும், ராசையா தாத்தா வீட்டிலே தான் வளர்ந்து வந்தான். அனவரத விநாயகம் பிள்ளைக்குப் பேரன்மேல் அபார வாஞ்சை; உயிர். ராசை யாவும் தாத்தாவிடம் அத்தனை பிரியத்தோடு நடந்து கொள்வான். 

பிள்ளையவர்கள் அவனைத்தான் எதிர்நோக்கி யிருந் தார். ஆனால் மழை ராசையாவுக்கும் முந்தி விட்டது. தோல் கிழிந்த கமலையைப்போல், மழை கொட்ட ஆரம் பித்தது. பிள்ளையவர்கள் நிலைகொள்ளாமல் தவித்தார். பேரப்பிள்ளை எங்கே அகப்பட்டுக் கொண்டானோ என்ற பயம் ஒரு புறம்; புழக்கடையில் உள்ள நிலவறையில் எங்கே தண்ணீர் பொத்துக்கொண்டு இறங்கிவிடுமோ என்ற பதைப்பு ஒரு புறம். 

எழுந்திருந்து கீழும் மேலும் நடந்தார். 

மழை தணிந்து, தூற்றலாக மாறும் வேளை ராசையா பைக்கூட்டைத் தலைமேல் வைத்துக் கொண்டு, உடம்பெல் லாம் நீர் சொட்டச் சொட்டப் படியேறி வந்தான். மழையிலே நனைந்து வந்தாலும் பயல் வீடு வந்துவிட்டான் என்ற திருப்தியோடு, அவனைப் பார்த்து, “ஏண்டா இப்படி நனைஞ்சிக்கிட்டு வாரே? எங்கேயாவது நின்னு வந்தா என்ன?” என்று கேட்டுக்கொண்டே, அவனுடைய நிக்கரைக் கழற்றினார். 

“நின்னுதான் வந்தேன். ஆனா, நின்ன இடத்திலியும் மளெ கொட்டிச்சி!” என்றான் பேரன். 

“சரி சரி, வீட்டுக்குள்ளே ஆச்சி இருக்கா. போயி குடுத்துணி வாங்கிக்கிட்டு வா” என்று கூறிவிட்டு, அவன் உடம்பு முழுவதையும் நன்றாகத் துவட்டி விட்டார். ராசையா வீட்டுக்குள் போய் சட்டை மாட்டிக் கொண்டு வந்தான். 

வந்தவன் தாத்தாவோடு உற்சாகமாகப் பேச ஆரம்பித்து விட்டான்; அப்பலியே வந்திருப்பேன் தாத்தா. ஆனா, சந்திப் பிள்ளையார் கோயில் பக்கம் ஒரு ஊர்கோலம் போச்சி… 

“நீயும் அதோட போனியா?” என்று செல்லக் கோபத்தோடு அதட்டினார், கிழவர். 

“ஆமா” என்று தைரியமாக ஆமோதித்துவிட்டு, “தாத்தா, அந்தச் சனங்களுக்கெல்லாம் சாப்பிட்றதுக்கு. அரிசி இல்லியாம். பட்டினி கிடக்காஹளாம். ஊரிலே அரிசி இல்லியாம்… தாத்தா, நிசம்மாவே நம்ம ஊரிலே அரிசி இல்லியா, தாத்தா?” என்று கேட்டான். 

“ஆமாண்டா கண்ணு! இருந்த அரிசி யெல்லாம் காலியாப் போச்சு. அதனாலெத்தான் அவனுக எல்லாம் இப்படிப் பட்டினி பட்டினின்னு கத்துரானுக. 

“அப்படின்னா, நாமுங்கூடப் பட்டினி கிடக்கணுமோ தாத்தா?” 

“நாம ஏண்டா பட்டினி கிடக்கணும்? நமக்குத்தான் அரிசி இருக்கே.” 

“நமக்கு மாத்திரம் எங்கேருந்து தாத்தா, அரிசி வருது?” 

“ராசா, அண்ணைக்கி ஒரு எறும்புக் கதை சொன்னேன், பாரு. ஞாபகமிருக்கா? எறும்பு மழை காலத்துக்குன்னு முன்னமேயே அரிசி, குறுணை எல்லாத்தையும் தன் புத்துக்குள்ளே சேத்து வச்சிக்கும். ஈ இருக்கே – அது முழுச்சோம்பேறி. அது சேத்து வச்சிக்காது. நாமெல்லாம் எறும்பு மாதிரி; அவங்கள்ளாம் ஈ மாதிரி. சும்மா காவாலித்தனமா, சுத்திட்டுத் திரிஞ்சி இப்போ அரிசி இல்லேன்னு கத்துறானுக!” என்று உபாக்கியான ரீதியில் விளக்கினார் பிள்ளை. 

“அப்போ – நீ எந்தப் புத்துலே தாத்தா அரிசி வச்சிருக்கே?” 

கிழவருக்குத் தமது நிலவறையின் ஞாபகம் வரவே உடம்பு புல்லரித்தது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு “பிறகு சொல்லுதேன். நீ போயி, ஆச்சி காப்பி போட்டுட் டாளான்னு பாத்துட்டுவா” என்று அவனை மடியிலிருந்து இறக்கி விட்டார். 

பையன் வீட்டினுள் ஓடினான். பிள்ளை தமது வழுக் கைத் தலையைத் தடவிக் கொண்டு, ‘பய வெடிப் பயலா யிருக்கானே. தர்ப்புத்தியாகி, தீர்க்காயுசா பிழைச்சுக் கிடந்தா. வக்கீல் வேலைக்குப் படிக்க வைக்கணும்’ என்று சிந்தித்துக் கொண்டார். 

ராசையா தனக்கும் தாத்தாவுக்குமாக, முறுக்கும் காப்பியும் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். பேரப் பிள்ளையின் சூட்டிகத் தன்மையை ரசித்துக் கொண்ட தாத்தா, பேரன் முதுகிலே தட்டிக் கொடுத்துவிட்டு, முறுக்கை எடுத்துக் கடித்தார். பேரனும் ஒரு முறுக்கைக் கறும்பினான். 

‘முதலாளி’ 

யாரோ கூப்பிட்ட குரல்கேட்டு, தலையை வாசல் நடைக்குத் திருப்பினார் கிழவர். வாசல் நடையில் கூப்பிய கையும் குறுகும் உடம்புமாய் ஒருத்தி நின்றாள். 

“யாரது?” என்று கண்களைத் தீட்டிக்கொண்டு கேட்டார்.  

“சந்தணத்தோட மக, முருவாயி” என்று பணிவாகச் சொன்னாள், வந்தவள். 

“முருகாயியா? ஏட்டி, அங்’னே ஏன் நிக்கே? இப்பிடிக் கிட்ட வா” என்று கூப்பிட்டார் கிழவர். 

அந்தப் பெண் முற்றத்துக்கு வந்து தூணை ஒட்டி நின்றாள். 

கிழவர் அவளைக் கூர்ந்து நோக்கிக் கொண்டே கேட் டார்: “ஏட்டி, சந்தணம் சௌக்கியமாயிருக்காளா?” அவர் உடம்பில் புதுப் பலம் ஊறுவது மாதிரி இருந்தது. 

“அவ படுக்கையிலே விழுந்துதான் மாசம் ஒண்ணாகுதே.” 

“அப்படியா? சரி. இந்த மளையிலெ வந்திருக்கியே, என்ன விசயம்?” 

“வயிறு இருக்குதில்லெ, எசமான். வீட்டிலே ஒரு அரிசி இல்லெ. ஊரிலே சடையைப் பூட்டிட்டான். ரேசன் ரேசன்னு எங்க வாயிலெ மண்ணைப் போட்டுட்டான் வெறும் ரேசன் கார்டை வச்சிக்கிட்டு நாக்கையா வளிச் து? வீட்டிலெ உலையேத்த வளியில்லெ. அம்மைக்குத் தெளுவுத் தண்ணி காய்ச்சிக் குடுக்கக் கூட அரிசி இல்லெ.” 

“இந்த ரேசன் வந்தவேளை வச்சி, உங்களுக்கும் எங்களுக்கும் சங்கடம். இது ஒளிஞ்சாத்தான்…” என்று சொன்னார் கிழவர். 

”அரிசி இல்லியா? அப்ப நீ பட்டினியாவா கிடக்கே!” என்று முருகாயியைப் பார்த்துக் கேட்டான் ராசையா. 

“இன்னிக்கு ராத்திரியேனும் உலையேத்தலேன்னா பட்டினிதான்” என்று பதிலளித்து விட்டு, “அதுக்குத்தான் முதலாளி வீடு தேடி வந்தேன். ஆச்சியம்மாளைக் கண்டு கேட்டேன். எல்லாம் அய்யாட்டெதான் கேக்கணும்ணுட்டாக. அதான்…” என்று கூறிக் கையைப் பிசைந்தாள் முருகாயி. 

“இங்கே ஏது புள்ளே, அரிசி?” என்று கிழவர் வெடுக் கென்று பதில் கொடுத்தார். 

“என்ன தாத்தா, நீதான் புத்துக்குள்ளே அரிசி வச்சிருக்கேன்னியே!” என்றான் பேரன். 

“போடா, அது நம்ம சாப்பாட்டுக்கில்ல இருக்கு” என்று மடக்கிவிட்டு, ‘விவரம் தெரியாத புள்ளெ!’ என்று மனசுக்குள் முனகிக் கொண்டார். 

“நீங்கள்தான் எப்படியாவது வளி பண்ணணும். கையோடே பணமும் கொண்டாந்திருக்கேன். ஒண்ணுக்கு அரைன்னாலும் பாதகமில்லெ!” 

கிழவருக்கு நாக்கில் ஜலம் ஊறியது. யோசித்தார்: நேற்றுக்கூட, ரூபாய்க்கு முக்கால் படின்னுதான் வித்திருக்கு. இன்னைக்கி – ஒரு நாள் நெருக்கடியில் – ரூபாய்க்கு அரைப் படி வாங்க ஆள் தயாராயிருக்கே – நாளை ரூபாய்க்குக் காலும் வாங்கத் தயாராயிருப்பாங்களா? நாளாக… நாளாக…அப்படித்தான் இவள் எத்தனை கோட்டை வாங்கப் போகிறாள்? ஒன்றிரண்டு படி இருக்கும். மேல கரத்திலிருந்து வந்த புள்ளி கோட்டைக்கு நாற்பத்தஞ்சு வரை ஒத்துக்கிட்டான். அவனிடம் இருநூறு, முந்நூறைத் தள்ளிட்டா-? என்னமோ வீடு வீடாச் சோதனை போடப் போறதாகச் சொல்லிக்கிட்டாங்க. அப்படி ஏதாவது நடந்தா?- நம்ம வீட்டிலே நடையேறுதற்கு எந்தப்பெய துணிஞ்சிறுவான்? – ஏறினாலும் பாத்துக்கலாம் ஆனா. எளவு இந்தக் கம்யூனிஸ்டுப் பயலுக என்ன அநியாயம் பண்ணுதானுக. அவனுக ஏதாச்சும் இடக்குப் பண்ணுவானு களோ?- காங்கிரஸ் கொடி வீட்டிலே பறக்கயிலே!- இந் தக் கம்யூனிஸ்டுப் பிசாசுக்கு, காங்கிரஸ் கொடிதானே வேப்பிலை! – ஆனா, ஊரு கிடக்கிற கிடையிலே, இவ குடுக் கிற பணத்தை வச்சி நாம வாழப் போறதில்லே. ஆனா, மூதி மறைச்சிக்கொண்டு போவத் தெரியாமெ,ஆப்பிட்டுக் கிட்டா? 

“என்ன முதலாளி யோசிக்கிய? பொளுது சாஞ்சப் புறம் தந்தாலும் போதும். பணம் வேணுமின்னாலும் -“

 “சேச்சே. நம்பிக்கை இல்லேன்னா நினைச்சே. அரிசி இருந்தாத் தானே குடுக்க முடியும்? எங்கள்ட்டெ இருந்த நெல்லைத்தான் கசக்கிப் பிளிஞ்சி, கவர்மெண்டுக்காரன் கொண்டு போயிட்டானே. சாப்பாட்டுக்கு அளந்த நெல்லு கூட எங்க தேவைக்குக் காணுமோ, காணாதோ?” என்று அளக்க ஆரம்பித்தார் பிள்ளை. 

முருகாயி விடவில்லை.”நீங்க மனசு வச்சா” என்று அவள் கெஞ்சினாள். 

ராசையா இருவரையும் திருகத் திருகப் பார்த்தான். “தாத்தா, அவளெப் பாக்கப் பாவமாயிருக்கு. நம்ம அரிசி யிலே இத்தினிப் போலக் குடுத்தா என்ன?” என்று கேட்டான். 

கிழவர் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, “சரி, இப்ப ஒண்ணும் முடியாது. பொழுது சாஞ்சப்புறம் வா. யோசிச்சிச் சொல்றேன் ” என்று விறைப்பாகப் பதிலளித்தார். 

”எசமான் – கை விட்டிறப்பிடாது!” என்று வேண்டிக் கொண்டே நடை இறங்கினாள் முருகாயி. 

கிழவருக்குப் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்ட மாதிரி இருந்தது. இரவு பேரனைச் சீக்கிரமே படுக்க வைத்தார். ஆனால், இரவு முழுவதும் சிறுவன் சள் சள்ளென்று இருமினான். காலையில் பையன் மார்பு கொதியாய்க் கொதித்தது. 

“ராசையா, இன்னைக்கி நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம் உடம்பு காயுது” என்று பேரப்பிள்ளையிடம் சொல்லி விட்டு, ‘நேற்று மழையிலே நனைந்ததுதான் காரணம்’ என்று தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார் பிள்ளை. 

தாத்தா பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்று சொல்லியது பேரப்பிள்ளைக்கு அதிகத் தெம்பையும், உற்சா கத்தையும் கொடுத்தது. காலையில் காப்பி குடித்து முடிந் ததும், அக்கம் பக்கத்து வளைவிலுள்ள பையன்களை யெல் லாம் ஒன்று திரட்டிக் கொண்டு விளையாட ஆரம்பித்து விட்டான் ராசையா. 

கிழவர் வீட்டு முற்றத்தில் ஈஸிசேரில் சாய்ந்தவாறு. ஹிந்துப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தார். 

சிறிது நேரத்தில் ராசையா ஒரு மூங்கில் கழியில், காகிதத்தில் செய்த மூவர்ணக் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு, தனது கோஷ்டியுடன் வீட்டு வராந்தாவில் ஊர்வலம் நடத்த ஆரம்பித்து விட்டான். 

கள்ள மார்க்கெட் ஒழிக! 
பதுக்கல்காரனைச் சிறையிலடை! 

என்ற கோஷங்கள் பிள்ளையவர்களின் காதில் விழுந்தன. 

‘ஹிந்து’வை மார்பின்மேல் போட்டுவிட்டு, பேரப் பிள் ளையின் திருவிளையாடலைக் கவனித்தார். “ஜேய் ஹிந்த்! அல்லாஹு அக்பர்! செங்கொடிக்கு ஜே!” என்றெல்லாம் சர்வ கட்சிக் கோஷங்களையும் கொடுத்துக்கொண்டு ஊர்வலம் நடத்தினான் செல்வச் சிரஞ்சீவி ராசையா. 

‘கள்ள மார்க்கெட் ஒழிக! பதுக்கல்காரனைச் சிறை யிலடை!’ என்ற கோஷங்கள் பிள்ளையவர்களின் மானத்தையும் மனத்தையும் உலுப்பியாட்டின. 

“அய்யா, ராசையா!” என்று அருமையாய் அழைத்தார்.  

கொடியைத் தோளில் சாத்தியவாறு கம்பீரமாக நடந்து தாத்தாவிடம் சென்றான் ராசையா. 

“இந்த மாதிரியெல்லாம் விளையாடக் கூடாதின்னு, அன்னைக்கிச் சொன்னேனா இல்லியா?” என்று செல்லமாய்க் கேட்டார். 

“நீ மட்டும் சுதந்திர தினத்தன்னைக்கி சந்திப்பிள்ளை யார் கோயில் கூட்டத்திலே, காந்தித் தொப்பி காந்திச் சட்டைல்லாம் போட்டுக்கிட்டுப் போயிருந்தியே!” என்று திருப்பியடித்தான் ராசையா. 

“அது அன்னைக்கி மட்டுந்தாண்டா, கண்ணு. இனிமே, இந்த மாதிரியெல்லாம் நீ செஞ்சேன்னா உன்னெ போலீஸ் காரன் புடிச்சிட்டுப் போயிருவான்” என்று பயமுறுத்தினார் கிழவர். 

“நுக்ஞே! என்னையா புடிப்பான்? உன்னைத்தான் புடிச்சிட்டுப் போவான்!” என்றான் ராசையா. 

கிழவருக்குத் திடுக்கென்றது; எதிரே இருந்த ஜன்னல் கம்பிகள் திடீரென்று வளர்ந்து தன்னை வழி மறைப்பதாக சிறை செய்வதாகத் தோன்றியது. 

“சீ படுக்காளிப் பயலே!” என்று கிழவர் அதட்ட வாயெடுத்தார். குரலில் வேகமில்லை. “சரி சரி, காய்ச்சல் அடிக்குதின்னு வீட்டிலெ இருக்கச் சொன்னா, இப்படியா விளையாடுறது?” என்று கூறிக்கொண்டே அவன் கையி லிருந்த கொடியைப் பிடுங்கினார். ஆனால் ராசையா அதற் குள் கண்ணைக் கசக்கத் தயாராய் விட்டான். 

“எப்படியும் போ” என்று சலித்துக் கொண்டு கொடியை அவன் கையில் கொடுத்தார்; மீண்டும் ஹிந்துப் பத்திரிகையில் தலையைப் புதைத்துக் கொண்டார்,பிள்ளை. 

ராசையாவின் ஊர்வலம் கள்ள மார்க்கெட் ஒழிக!’ என்று கோஷமிட்டுக் கொண்டு, வீட்டைவிட்டு இறங்கி, சந்திப் பிள்ளையார் கோயிலைப் பார்க்கத் திரும்பியது!.. 

ராசையா விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் அனவரத விநாயகம் பிள்ளை நெஞ்சில் கைவைத்துப் பார்த்தார். நெஞ்சு அனலாய்க் கொதித்தது. ‘சொன்னாக் கேட்டாத் தானே!’ என்று சலித்துவிட்டு, அவனைப் படுக்கையில் கொண்டுபோய்ப் படுக்க வைத்தார். 

ஆனால் ராசையா படுக்கையில் படுத்தவன்தான். சாயந்திரத்துக்குள் ஜுரம் விறுவிறென்று ஏறியது. மார்பு கொதிப்பேறிக் கனன்றது; கண்கள் சிவந்து, கண்ணீர் கசிந்தது; அனல் மூச்சு வாங்கியது… 

டாக்டர் வந்து பார்த்தார். 

ஒருநாள்…மறுநாள்… இரண்டுநாள்…மூன்றுநாள். 

ஜுர வேகம் தணியவில்லை. நாலாம் நாள் இரவு பையன் கண்ணையே திறக்கவில்லை. எட்டு மணிக்கு டாக்டர் வந்து பார்த்தார். ஏதோ மருந்தெழுதிக் கொடுத்து, உடனே வாங்கிக் கொடுக்கும்படி சொன்னார். இருக்கும் ஜுர வேகத்தில் இரவில் நிலைமை மோசமாகக்கூடும் என்றும், அந்த மருந்தைக் கொடுத்த பின்னர்தான், காலையில் எதுவும் நிச்சயம் சொல்ல முடியும் என்றும் சொல்லிப் போய்விட்டார். 

உடனே வண்டிக்கார வேலுவை அழைத்து, பணத் தையும் சீட்டையும் கொடுத்து விரட்டினார் கிழவர். வேலு கடைகடையாய் ஏறி இறங்கினான். மருந்து கிடைக்க வில்லை. வெள்ளை மார்க்கெட்டும், கள்ள மார்க்கெட்டும் கை விரித்தன. பதில் கூறச் சிலர் தயங்கினர்; பிகு. பண்ணினர்; மறுத்தனர். 

மணி எட்டு, எட்டரை, ஒன்பது, ஒன்பதரை… ஜங்ஷன்-டவுன் – பாளையங்கோட்டை மூன்றையும் வேலு சுற்றி வந்துவிட்டான். மருந்து கிடையாது. 

இரவு பத்து மணிக்கு வெறுங் கையோடு திரும்பினான் வேலு. கிழவருக்கு ஆத்திரமும் கவலையும் பெருகின. தானே சென்று வரலாமென எண்ணினார். ஆனால் மணி பத்தரை. மருந்துக் கடைகள் பூட்டியிருக்கும். மேலும் தனக்கும் கடைக்காரர்கள் அதே ‘பேப்பே’ பாடந்தானே ஒப்புவிப் பார்கள் என்ற எண்ணம் அவர் மனசைக் கொந்திற்று. 

பிள்ளையவர்கள் தலையில் கைவைத்தவாறு, இடிந்து போய் உட்கார்ந்தார். மனம் நிலை கொள்ளாமல் தள்ளாடியது. தமது அருமைப் பேரன், சொத்தை ஆளப் பிறந்தவன், குலம் தழைக்க வந்த கொழுந்து, தம் ராசையா- அவன் படுக்கையில் கிடப்பதைக் கண்டு அவர் மனம் வெந்தது: நொந்தது. 

பதினொன்று மணி வாக்கில் பிள்ளையவர்களின் செல்ல மகள் கோமதி ஓடோடியும் வந்து “அப்பா, ராசா என்ன மில்லாமோ புலம்புதான். கண் முளியெல்லாம் ஏறச் சொருகுது” என்று பரிதபித்தாள். 

கிழவர் எழுந்திருந்து படுக்கைப் பக்கம் போனார். ராசையா கண்களை மூடியவாறே புலம்பிக் கொண்டிருந் தான். வார்த்தைகள் முதலில் தெளிவாகக் கேட்கவில்லை. 

“ராசாக்கண்ணு. இந்தா பாரு. தாத்தால்’லெ” என்று குரல் கொடுத்துத் தம்மை அறிமுகப்படுத்தி, ஜன்னியை உணர முயன்றார். குரல் தொண்டைக் குழியில் விக்கியது. 

ராசையா புலம்பினான்: “நீ எந்தப் புத்திலே தாத்தா, அரிசி வச்சிருக்கே!” 

கிழவர் கண்ணில் நீர் ததும்ப, “நம்ம வீட்டிலெ தாண்டா கண்ணு!” என்று சொன்னார். 

அவனுடைய புலப்பம் அதிகரித்தது. 

“கள்ள மார்க்கெட்” – சிறுவன் கத்தினான். 

“ஏலே ரெட்டை மண்டை! ஒழிகன்னு சொல்லுடா!” என்று தனக்குத்தானே சத்தமிட்டான். 

 “ராசா என்னடா சொல்லுதே? இந்தா, அம்மா வந்திருக்கேன். கண்ணெத் திற” என்று அங்கலாய்த்தாள் கோமதி. 

ராசையா புலம்பினான்: “கள்ள மார்க்கட்” 

கிழவர் அவனுடைய புலப்பத்தை அவன் வழியிலேயே விட்டுத் திருப்ப எண்ணினார்; “ஒழிக” என்றார். 

”கள்ள மார்க்கெட்” என்றான் சிறுவன். “ஒழிக” என்றார் கிழவர். 

“பதுக்கல்காரனை” என்றான் பேரன். 

“சிறையிலடை’ என்றார் தாத்தா. 

“செங்கொடிக்கு” என்றான் ராசையா. 

“ஜே!” என்றார் அனவரத விநாயகம்பிள்ளை. 

எனினும், ராசையாவின் ஜன்னி வேகம் குறையவில்லை. புலப்பம் தெளிவு குலைந்து, வார்த்தைகள் உள்வாங்கின.. பிறகு வெறும் முனகல். கிழவர் பையனைப் பார்த்துக் கொண்டே இருந்தார். புலப்பம் நின்றது; மூச்சு மட்டும். திக்கித் திணறி வந்தது; பிறகு அதுவும் ஊசிமாதிரி இழைய ஆரம்பித்தது. 

இரவு பன்னிரண்டு மணிக்கு- 

மகனைப் பறிகொடுத்த கோமதியின் கதறல் பிள்ளை யவர்கள் வீட்டை உலுக்கியது; ஆளப்பிறந்த ராசையாவின் சில்லிட்ட உடலின்மேல், பிள்ளையவர்களின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு வெந்நீர் விழுந்து தெறித்தது. 

– 1947 – ரகுநாதன் கதைகள் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *