எல்லாம் கணக்குத்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 20,697 
 
 

கண் விழித்த எனக்கு, ஒரே கும்மிருட்டாகவும், கண்களின் எதிரே பூச்சி பறப்பது போலவும், எங்கும் ஒரே கூக்குரல் சத்தம் மட்டுமே கேட்டது. தலையை உயர்த்தி பார்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை, உயிர் போகும் வேதனைதான் இருந்தது. இப்படி படுத்திருப்பதற்கு உயிர் போயிருக்கலாம என்ற எண்ணம் உதித்தது.கூடாது, மனதை விட்டு விடக்கூடாது, உதவிக்கு யாராவது வருவார்கள், சிறிது சத்தம் இட்டு பார்ப்போம் என்று எண்ணி “உதவி” “உதவி” என்று வாய் விட்டு கூவினேன், எப்படி கேட்கும்? என்னைப்போல் ஒரு சிலரும் உயிர் போகும் வேதனையில் அலறிக்கொண்டிருந்தனர். என் குரல் எப்படி போய் சேர்ந்து என்னை காப்பாற்ற வருவார்கள்? நான் எங்கிருக்கிறேன் என்பதே பிடிபடவில்லை,பக்கத்தில் சத்தம் கேட்பதிலிருந்து விபத்து நடந்த அருகாமையில்தான் விழுந்து கிடக்கவேண்டும் என்று அனுமானம் செய்தேன். உடலில் செடிகளின், முட்கள் உரசுவது தெரிந்தது. செடி கொடிகளுக்கிடையேதான் என் உடல் கிடக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். தண்ணீர் தாகம் வேறு வாட்டியது. யாராவது ஒரு வாய் தண்ணீர் ஊற்றூவார்களா என்று மனசு அலை மோதியது.

டார்ச் வெளிச்சம் அங்கும் இங்கும் அலைவது என் கண்ணுக்கு புலனானது.நம்பிக்கை கீற்று வர மீண்டும் உதவி என்று வாய் விட்டு கூவினேன். இப்பொழுது சர சர வென சத்தம் கேட்ட்து. டார்ச் வெளிச்சம் என அருகே வருவது தெரிந்த்து.இங்க ஒருத்தர் கிடக்கறாரு, குரல் செவிகளில் விழ அப்பாடி என்ற மன நிலைக்கு வந்தேன்.

இருவரா மூவரா என்று தெரியவில்லை, என் உடல் மீது டார்ச் அடித்து பார்ப்பது தெரிந்தது. கால்ல அடிபட்டிருக்குன்னு நினைக்கிறேன், தூக்கிடலாமா? குனிந்து முதுகுக்கு கீழ் கை கொடுப்பது தெரிந்தது. உடல் மேலம் கீழும் ஆடுவதும் மூவருக்கும் உயரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கவேண்டும்.என் கீழ்புறம் இறக்கத்தில் இருப்பது போல் உணர்ந்தேன், அல்லது என்னை கீழ்புறம் தூக்குபவர் தாழ்வாக இருக்க வேண்டும், அதனால் கூட உடல் கீழ்வாக்கில் இருக்கலாம். இவர்கள் சிரமப்பட்டு நடப்பது தெரிந்தது. என் உடல் ஆட்டத்தினால் வேதனை அதிகமாக தெரிந்த்து. வலி தாங்காமல் அலறினேன்.வந்துட்டோம் வந்துட்டோம் என்று அவர்கள் கூறிக்கொண்டே நடந்தார்கள்.ஐந்து நிமிடமானது. இப்பொழுது சமதளத்தில் நடப்பதை உணர முடிந்தது. வலி கொஞ்சம் குறைந்திருப்பதாக தெரிந்தது.

வாகனங்கள் சத்தமும், நிறைய ஆட்கள் பேசிக்கொள்வதும் கேட்டது.“இங்க வாங்க” என்று கூப்பிடுவது கேட்கிறது. அப்படியே என்னை படுக்க வைப்பதும் அதை வண்டிக்குள் திணிப்பதையும் உணர்ந்தேன்.அதற்கப்புறம் என்ன நடந்த்து என்பதே தெரியவில்லை. அப்படியே மயக்க நிலைக்கு போய்விட்டேன்.

விழித்த போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்பதை உணரவே அரை மணி நேரம் ஆனது.கால் இரண்டிலும் ஏதோ பெரிய பாரம் ஏற்றி வைத்த்து போல உணர்ந்தேன். கண்களை கீழே குனிந்து பார்க்க முயற்சி செய்தேன். முதுகில் வலி சுரீர் என உறைத்த்து. பேசாமல் படுத்துக்கொண்டேன். யாரோ குனிந்து என் முகத்தை பார்ப்பதை உணர்ந்தேன்.

உங்க பேரு?, குரலின் தோரணை போலீஸ் அதிகாரியாய் இருக்கவேண்டும் என்று ஊகித்தேன், ராம் பிரசாத், மெல்ல முணங்கினேன்.அவர் காதை என் வாயருகே கொண்டு வந்து உற்று கேட்பது புரிந்த்து, என்ன சொன்னீர்கள்? மறுபடியும் அவர் கேள்வி என்னை அலுப்பேற்றியது. ராம் பிரசாத் என்று மீண்டும் முணங்கினேன்.ராம் பிரசாத் என்று மீண்டும் வாயில் சொல்லிக்கொண்டே எழுதிக்கொண்டார்.

சட்டென விழித்தபோது நெஞ்சில் ஸ்டெதஸ்கோப் வைத்து மருத்துவர் சோதித்து கொண்டிருந்தார். ‘டாக்டர்’..மெல்ல அழைத்தேன். அவர் அதை கண்டு கொள்ளாமல் தோளை தட்டி யூ ஆர் ஆல் ரைட், மேன், இன்னும் இரண்டு நாள் இருந்தா போதும், உடம்பு நார்மல் ஆயிடுச்சு, கால் ரெடியாகறதுக்கு இன்னும் மூணு மாசம் ஆகும், சொன்னதை கேட்டவுடன் அதிர்ச்சியுடன் கீழே பார்க்க முயற்சி செய்தேன். நோ..நோ உங்க முதுகுகிட்ட கொஞ்சம் அடி பட்டிருக்கு, அங்க பேண்டேஜ் போட்டிருக்கோம், பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை, இரண்டு காலுலயும் பிராக்சர் ஆயிருக்கு, அது சீக்கிரமே கூடிடும். கவலை வேண்டாம். சொல்லிக்கொண்டே என் கட்டிலை விட்டு அடுத்த கட்டிலுக்கு சென்றார்.

மருத்துவ மனையில் சேர்த்து இரண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டன. இப்பொழுது கட்டிலில் உட்கார சொல்லி விட்டார்கள். உட்கார்ந்த நிலையிலேயே அந்த இடத்தை கவனிப்பது என் வேலையாகி விட்டது. யாரோ என் அருகே வரும் அரவம் கேட்டு மெல்ல திரும்பி பார்த்தேன். போலீஸ் அதிகாரி நின்று கொண்டிருந்தார்.அனேகமாக அன்று வந்தவராகத்தான் இருக்க வேண்டும். அலுப்புடன் கண்ணை மூடிக்கொண்டேன்.

என் அலுப்பை உணர்ந்தவர் போல் அவர் காணப்படவில்லை. மிஸ்டர் ராம் பிரசாத், ராம் பிரசாத்தானே உங்க பேரு? இந்த கேள்விக்கு அவரே தன்னை பாராட்டிக்கொள்வது போல சிரித்துக்கொண்டவர், சொல்லுங்க ராம் பிரசாத், எப்படி நடந்துச்சு இந்த ஆக்சிடெண்ட், உங்களோட அடிபட்டவங்க ஒருத்தரு கூட பிழைக்கல, பெரிய அதிசயம் ரோட்டை விட்டு ரொம்ப தூரம் தள்ளி விழுந்த உங்களுக்கு வெறும் கால் ப்ரக்சரோட தப்பிச்சிருக்கறீங்க, ஆனா உங்க கூட வந்த நாலு பேரும் அடிபட்ட இட்த்துலயே இரண்டு மூணு மணி நேரத்துல இறந்துட்டாங்க. கார் அந்த புளிய மரத்துல போய் மோதியிருக்கு. எப்படி நடந்துச்சுன்னு ஞாபகம் வருதா?

அலுப்புடன் சாரி இன்ஸ்பெக்டர், அந்த காருக்குள்ள அஞ்சு பேர் வந்துகிட்டிருந்தோம், அது ஞாபகம் இருக்கு, நான் வலது புறம் பின்னாடி சீட்டுல உட்கார்ந்துட்டு வந்தது ஞாபகம் இருக்கு, வண்டிய ஓட்டிட்டு வந்தது காளியப்பன், என்னோட நண்பந்தான். எதோ பேசிகிட்டு வந்தவன் சடாருன்னு எங்களை திரும்பி பார்த்து ஏதோ சொல்லணும்னு திரும்பினான், அவ்வளவுதான் தெரியும், அதுக்கப்புறம் என்ன நடந்த்துன்னு தெரியல. நான் கீழே கிடந்துதான் கண் முழிக்கும்போது உணர முடிஞ்சது. ஆயாசமாய் சொல்லி கண்ணை மூடினேன்.

அவங்க உங்க நண்பர்கள்தானா? இன்ஸ்பெக்டரை ஒரு பார்வை பார்த்தேன்.அவங்க எல்லோரும் என்னோட நண்பர்கள், அதுவுமில்லாம நாங்க “வேலவன் டிரேடர்” அப்படீன்னு ஒரு ஏஜன்ஸி எடுத்து பத்து வருசமா நடத்திட்டு வர்றோம். சென்னையில இருந்து திருப்பதி போயிட்டு வரும்போது இப்படி நடந்துடுச்சு, சொல்லிக்கொண்டே தலை குனிந்து உட்கார்ந்து கொண்டேன்.

இன்ஸ்பெக்டர் வியப்புடன் திருப்பதி போயிட்டு அப்படீனு சொல்றீங்க, ஆனா அந்த காருக்குள்ள ஆல்கஹால் பாட்டில் இருந்துச்சு, அதுவுமில்லாம அவங்க டிரிங்க்ஸ் யூஸ் பண்ணதா தெரியுதே, நீங்க கூட இரத்த டெஸ்ட்ல பார்த்தப்பவே டிரிங்க்ஸ் யூஸ் பண்ணியிருக்கீங்க, குரலில் குற்றம் சாட்டுவது போல் இருந்தது.

சாரி இன்ஸ்பெக்டர், நாங்க எல்லாருமே கொஞ்சம் டிரிங்க்ஸ் யூஸ் பண்ணியிருந்தோம், மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, அதுக்கான பலனை இப்ப அனுபவிச்சுட்டோம். சொன்னவன் துக்கம் மிகுதியால் கண்ணீர் வடிக்கலானேன்.

சிறிது நேரம் பேசாமல் இருந்த இன்ஸ்பெக்டர் ஓகே என்று சொல்லி கட்டிலை விட்டு நகர்ந்து விட்டார்.

மருத்துவர்களின் யோசனைப்படி நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். நன்றாக இப்பொழுது நடக்க முடிகிறது. இங்கு வந்து மூன்று மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் இரண்டு நாட்களில் டிஸசார்ஜ் செய்யலாம் என்று சொல்லி விட்டார்கள். பழையதை மறக்க முயற்சி செய்து கொண்டுள்ளேன். மருத்துவ செலவுகள் அனைத்தையும் கட்டி விட்டதாக என் கம்பெனி மானேஜர் வந்து சொல்லிவிட்டு சென்றார். அதை கேட்டுக்கொண்டு மெல்ல கண்ணை மூடிக்கொண்டேன்.

அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தவனின் கவனத்தை கவர்ந்தது டெலிபோன் மணி சத்தம். எடுத்து காதில் வைத்தவனுக்கு பாங்க் மானேஜர் சார் இப்ப பாங்குக்கு வரமுடியுமா? என்று தயக்கத்துடன் கூப்பிட வருகிறேன், என்று சொன்னவன் டேபிள் மேல் இருந்த பெல்லை அமுக்கினேன். தலை காட்டிய உதவியாளனிடம் யாராவது கேட்டால் பாங்குக்கு போயிருப்பதாக சொல். சொல்லிவிட்டு வெளியேறி என் காரை நோக்கி நடந்தேன்.

பாங்க் மேனேஜர் “ சார் உங்க கம்பெனி கணக்கை முடிச்சுக்கறதா கடிதம் கொடுத்திருக்கறீங்க, என்று கேட்கவும், நான் வருத்த்துடன் என்ன சார் பண்ண சொல்றீங்க பார்ட்னர்ஸ் பூரா இறந்துட்டாங்க, இனி அந்த ஏஜன்சிய நடத்தறதுக்கு எனக்கு விருப்பமில்லை.சொல்லிவிட்டு அவர் முகத்தை பார்த்தேன். சரி சார் மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு டெபாசிட் பணம் ஐம்பது லட்சத்தை கொடுத்துடறோம், குரலில் ஏமாற்றம் தெரிய சொன்னவரை அனுதாபத்துடன் பார்த்துவிட்டு வெளியே வந்தவன் திகைத்து நின்றேன்.

இன்ஸ்பெக்டர் புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தார். எங்க சார் மேனேஜர் ரூமுல இருந்து வர்றீங்க, கேள்வியில் கிண்டல் கலந்திருப்பது போல தென்பட்டது.சார் ஏஜன்சிய குளோஸ் பண்ணிடலாமுன்னு மானேஜரை பார்க்க வந்தேன். குரலில் சுரத்தில்லாமல் சொன்னேன்.ஏன் சார்? அவர் குரலில் வருத்தமா,சந்தேகமா? தெரியவில்லை.நண்பர்கள் போன பின்னால அதை நடத்தறதுக்கு எனக்கு மனசு வரல சார். சொல்லிவிட்டு சாரி தப்பா நினைச்சுக்காதீங்க, ஆபிசுல அவசர வேலை, விடை பெற்றேன்.

ஒரு வழியாக பாங்கின் விதிமுறைகளை தகுந்த நபர் மூலம் சரி செய்து ஏஜன்சி சார்பாக போட்டிருந்த பணத்தை பெற்றுக்கொண்டு வெளியே வந்த பொழுது இன்ஸ்பெகடர் நின்று கொண்டிருந்தார். சார் ராம் பிர்சாத் உங்க மேலை எங்களுக்கு சந்தேகம் விழுந்திருக்கு, நான் எந்த பர பரப்பும் இல்லாமல் என்ன சந்தேகம் சார் உங்களுக்கு? நான் வக்கீல் வச்சு பேசலாமா? நோ நோ எங்களுக்கு சின்ன சந்தேகம் மட்டும் தான், என்று சொன்னவர் வாங்க அங்க போய் உட்கார்ந்து பேசலாம் என்று சொல்லி அங்கிருந்த சோபாவுக்கு கூட்டி சென்றார்.

அன்னைக்கு நீங்க மட்டும்தான் பிழைச்சிருக்கீங்க, உங்க நண்பர்கள் எல்லாரும் நல்லா டிரிங்க்ஸ் யூஸ் பண்ணியிருக்காங்க, நீங்க மட்டும்தான் கொஞ்சமா டிரிங்க்ஸ் யூஸ் பண்ணியிருக்கீங்க, அது மட்டுமில்ல, இப்ப அவசர அவசரமா உங்க ஏஜன்ஸிய குளோஸ் பண்ணி ஐமபது லட்சம் வாங்கிட்டு போறீங்க, இதுக்கு என்ன அர்த்தம்? அன்னைக்கு நான் கொஞ்சமாகத்தான் டிரிங்க்ஸ் யூஸ் பண்ணுனேன், அதுக்கு காரணம் எனக்கு டிராவல்ஸ்ல குடிப்பது ஒத்துக்காது, இரண்டாவது இந்த பணத்தை பத்தி என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நான்கு பெண்மணிகள் இவர்கள் இருக்குமிடம் வர நான் எழுந்து சார் இவங்க அன்னைக்கு விபத்துல இறந்து போன என்னோட நண்பர்களுடைய மனைவிகள். இந்த பணத்தை இவங்களுக்கு உடனே பிரிச்சி குடுக்கணும்னுதான் இவங்களை பாங்குக்கே வரச்சொன்னேன்.என்றவன் இப்ப இன்ஸ்பெக்டர் கையாலவே எல்லாத்துக்கும் செக் கொடுத்துடலாம் என்று சொல்லி இன்ஸ்பெகடர் கையால் ஒவ்வொருவருக்கும் செக் கொடுக்க வைத்தேன்.அவர்கள் நன்றி கூறி விடை பெற்று சென்றனர். சிறிது நேரத்தில் இன்ஸ்பெகடரும் விடை பெற்று சென்று விட்டார்.

அப்பாடி என்று பெருமூச்சு விட்டவன் இந்த ஏஜன்சி ஆரம்பித்து இதுவரை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் இனி எனக்கே சொந்தம், என்று மன நிம்மதியுடன் அந்த சோபாவிலேயே சாய்ந்தேன். இதற்காக இத்தனை ஏற்பாடுகள் செய்தது மட்டுமில்லாமல் அன்று அவர்கள் அனைவருக்கும் போதையேற்றி, காருக்கு ஸ்டியரிங்கை லாக் எல்லாம் செய்து வைத்து,சந்தேகம் வராமல் இருக்க நானும் கதவை திறந்து குதித்து தப்பிப்பதற்குள், அடிபட்டு மூன்று மாதம் மருத்துவ மனையில் விழுந்து…. அப்படியே கண்ணை மூடி அந்த சோபாவிலேயே சாய்ந்து உட்கார்ந்தேன்..

ஆனால் அன்று இரவு எட்டு மணிக்கு அரசு ஐநூறு, ஆயிரம் செல்லாது என்று அறிவித்து விட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *