கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2023
பார்வையிட்டோர்: 4,810 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

அத்தியாயம்-13

தெருக்கோடியை அடைந்துவிட்டார்கள் மூர்த்தியும் அவன் மாமா சிவராமையரும். தெருக்கோடியில் தென்னண்டைச் சரகத்திலிருந்த வீடு, வாசலில் தென்னை மரமும், புதிதாகக் கல்போட்டுச் செப்பனிடப்பட்ட கிணற்றடியும், இரண்டொரு மல்லிகை முல்லைப் புஷ்பச் செடிகளுமாக அழகாக இருந்தது. அதைப் பார்த்துப் பரவசமாக நின்றான் மூர்த்தி. 

சிவராமையர் எதிரில் இருந்த பிள்ளையார் கோயிலின் முன் நின்று, கால் செருப்பைக் கழற்றிவிட்டு, இரண்டு குட்டுக் குட்டிக் கொண்டார்; இரண்டு தோப்புக்கரணம் போட்டார். 

அவரைப் பின்பற்றி மேஜர் மூர்த்தியும் இரண்டு குட்டுக் கொண்டான். 

கிழக்கு மேற்கான தெருவிலே பிள்ளையார் கோயிலுக்கு மேற்கே வீடுகள் கிடையாது; நிழலடர்ந்த குறுகிய ஒரு சந்து, சமீபத்தில் மழை பெய்து தரை காய்ந்திருந்தது. பூமியின் வளம் பார்ப்பதற்கே தெரிந்தது. தெருவின் இருபுறமும் நெருக்கமாக மாமரங்களும் தென்னைமரங்களும் இருந்தன. முக்கியமாகத் தென்னஞ்சோலைதான் இருபுறமும். 

“என் தாத்தா காலத்தில் இந்த இடத்திலுங்கூட வீடுகள் இருந்ததாகச் சொல்லக் கேள்வி” என்றார் சிவராமையர். 

“இப்போ அப்படி இருந்த சுவடே தெரியவில்லையே!” என்றான் மூர்த்தி. 

“இந்தப் பூமியைப் பாழாய்ப் போட்டு வைக்க யாருக்குத் தான் மனசு வரும்? மூன்று தலைமுறையில் உழுது பயிரிட்டு விட்டார்கள்; தென்னந்தோப்பாக்கிவிட்டார்கள் சிலர்” என்றார் சிவராமையர். 

“மண்ணைப் பார்த்தாலே தெரிகிறதே! இது உண்மையில் பொன் விளையும் பூமிதான்” என்றான் மேஜர் மூர்த்தி, 

“காவேரிப் படுகை நிலம் அது. ஆனால், நம்ப நாளில் காவேரியின் வளங்கூடக் குறையத் தொடங்கிவிட்டதென்பது தான் நம் அதிருஷ்டம்” என்றார் சிவராமையர். 

“மனிதனுடைய வளம் குறைந்திருப்பதால்தானே காவேரியின் வளமும் குறைகிறது? ஆதாரக் காரணம் மனித வளம் குறைந்திருப்பது தான்” என்றான் மேஜர் மூர்த்தி. 

சிவராமையர் பதில் சொல்லவில்லை. 

மூர்த்தி ஒரு நிமிஷம் கழித்துத் தொடர்ந்து சொன்னான். “நான் ஜர்மனியில் படிக்கும்போது மேலைநாடுகளில் வளம் இருப்பதாக நினைத்தேன். சண்டை வந்து மனிதன் மிருகம் ஆனபிறகுங்கூட எனக்கு என் கண் திறக்கவில்லை. ஜப்பானிலும் மலேயாவிலும் பர்மாவிலும் மனிதன் மிருகத்துக்கும் கேவலமாக இருப்பதைத்தான் கண்டேன். வேறு எதையும் நான் காணவில்லை. நான் இங்கே வந்து உங்களுடன் சிறிது நேரம் பேசி, ஓர் இரவையும், ஒரு காலைப் பொழுதையும் கழித்த பிறகுதான் புரிகிறது, எனக்கு மனிதனுடைய வளம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று.” 

“எனக்கு எட்டாத விஷயங்களை எல்லாம் பேசுகிறாய் நீ!” என்றார் சிவராமையர். 

“உங்களுக்கு எட்டாத விஷயங்கூட உண்டா என்ன?” என்று கேட்டான் மேஜர் மூர்த்தி, 

நிர்மானுஷ்யமான அந்தப் பகுதியைக் கடந்து வடக்குத் திருப்பம் திரும்பினார்கள். இரண்டொரு குடிசைகள் இருந்தன. 

“இது மேட்டுத் தெருவின் ஆரம்பம். எங்களூர் மேட்டுத் தெருவுக்குப் பேரும் புகழும் நிறைய உண்டு” என்றார் சிவராமையர். 

“என்ன அப்படி? சொல்லுங்கள்.” 

“தஞ்சாவூர் ஜில்லாவின் கடைசித் தீவட்டிக் கொள்ளைக்காரன் என்று பெயர் பெற்ற பிச்சாண்டி இந்த மேட்டுத் தெருவான்தான்” 

“அப்படியா? இறவாத புகழ்தான் அது!” 

சிவராமையர் தொடர்ந்து சொன்னார். “சமீப காலத்தில் சோமு முதலி என்று ஒருத்தன் தோன்றி, பெயரும் ஏராளமாகப் பணமும் சம்பாதித்தான். திடீரென்று அத்தனையையும் விட்டு விட்டுச் சாமியார் ஆகி, சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டான்.” 

“அப்படியா?” 

“இந்த மேட்டுத் தெரு இரண்டு மூன்று தலைமுறைகளில் சாதித்திருப்பதைப்போல எந்தக் காரியத்தையும் சாவமானிய அக்கிரகாரம் சாதிக்கவில்லை. அது ஏன் என்பது கொஞ்சம் ரஸமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டும்” 

அதாவது பிச்சாண்டியோ, யார் அது – சோமு முதலியோ மேட்டுத் தெருவில் தோன்றுவானேன்? அக்கிரகாரத்தில் அது அசாத்திய மாக இருப்பானேன் என்று கேட்கிறீர்கள்? இல்லையா?’ என்றார் சிவராமையர். 

தவிர.” 

“ஆமாம்..” 

“வேறு என்ன சொல்வது? காலத்தின் நியதி என்பதைத் இதற்குள் தெற்கு வடக்காக இருந்த சிறிய தெருவை இருவரும் கடந்துவிட்டார்கள். “இது சின்ன அக்கிரகாரம். இப்போது சின்ன அக்கிரகாரம் என்று பெயர் தாங்கி, இருபது இருபத்தைந்து பாழ்மனைகளும் இரண்டு மூன்று வீடுகளுமாகக் காட்சியளிக்கிற இந்த அக்கிரகாரம் ஒரு காலத்தில், அதாவது, இருநூறு வருஷங்களுக்கு முன் வரையில் பெரிய தெருவாகத்தான் இருந்தது. நாயக்க ராஜாக்கள் காலத்தில் தஞ்சை சமஸ்தான வித்துவான் ஒருவருக்குச் சர்வமானியமாக அளிக்கப்பட்டது இந்தக் கிராமம். அந்த வித்துவானும் அந்த வித்துவானின் சந்ததிகளும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு வளமாக விளங்கினார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய வளம் குன்றிவிட்டது. அவர்களுடைய அரண் மனையே பாழ்த்துவிட்டது. பின் வந்தவர்கள் ஒவ்வொன்றாக விற்றுச் சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் கட்டிய அரண்மனை இடிந்து, அது இருந்த இடத்தில் இப்போது ஒரு குதிரை வண்டிக்காரன் குதிரை கட்டியிருக்கிறான்; இதோ!” என்று சிவராமையா சுட்டிக் காட்டினார். 

“அந்த வித்துவான் எப்படியோ நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் குதிரை நன்றாக இருக்கிறது. நல்ல குதிரை!” என்றான் மூர்த்தி. சிவராமையர் சொன்னார்: “இவ்வளவு சாவகாசமாகப் பேசிக் கொண்டே போனால் அவள் கோபித்துக்கொள்வாள். சீக்கிரம் போய்ச் சேரவேண்டும். மருமானுக்கு விருந்து சீக்கிரம் செய்து போடவேண்டிய அவசரம் அவளுக்கு” 

“எனக்கு என்னவோ ஒரே நாளில் இந்தக் கிராமத்து மனிதர்களில் ஒவ்வொருவரைப்பற்றியும் எல்லா விஷயத்தையும் தெரிந்துகொண்டுவிட வேண்டும் என்றும், ஒவ்வோர் அடி மண்ணின் சரித்திரத்தையும் அறிந்து கொண்டு விட வேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது” என்றான் மேஜர் மூர்த்தி. 

சிவராமையர் அவளுடைய கோபத்துக்குப் பயந்தவர் மாதிரி சற்று வேகமாகவே பேச்சுக் கொடுக்காமல் நடக்க முயன்றார். 

மூர்த்தி தொடர்ந்து சொன்னான்: “இந்த ஆவலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ சாத்தனூருக்கும் எனக்கும் இதுகாறும் நான் அறிந்துகொள்ளாத ஒரு பிணைப்பு இருக்கிற மாதிரியும் அந்தப் பிணைப்பு இறுகப் போகிறது என்கிற மாதிரியும் இன்று காலை முதல் எனக்கு ஒரு சிந்தனை மனத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. அது ஏன் என்றுதான் தெரியவில்லை. தெய்வாதீனமாக நான் இங்கே வந்து சேர்ந்தேன் என்பதைத் தவிர வேறு பிணைப்புக்கு எவ்விதமான காரணமும் இல்லையே!” 

சிவராமையர் சிரித்தார். “அம்மாமியின் யோசனை பலித்து விடுகிறதோ என்னவோ? பேத்திகளில் யாராவது ஒருத்தியை உன் கழுத்தில் கட்டினாலும் கட்டிவிடுவாள்” என்றார். 

திரும்பத் திரும்ப இந்தத் திருமணப் பேச்சு வருகிறதே என்று சிந்தித்தவனாக மேஜர் மூர்த்தியும் மௌனமாக நடந்தான். 

சாத்தனூர் கோயில் எதிர்ப்பட்டது. தூரத்திலிருந்து பார்த்துக் கும்பிட்டுவிட்டு, கடைத்தெருவைக் கண்டார்கள். வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு, சற்று அவசரமாகவே வீடு திரும்பினார்கள். 

சிவராமையர் சிந்தனைகளின் முடிவை எட்டிவிட்டவர். மேஜர் மூர்த்தி சிந்தனைகளின் தொடக்கத்தில் இருந்தான். இருவரும் மௌனமாக, வந்த வழியே வீடு திரும்பினார்கள். 

சிவராமையர் வாழ்க்கை வழிகளை நிர்த்தாரணம் செய்து கொண்டு விட்டார். மேஜர் மூர்த்தி அனுபவங்களோ)மட்டும் நின்று விட்டவன். பரந்த அநுபவத்தின் மேல் அவன் எவ்விதமான மாளிகையும் இன்னும் எழுப்பவில்லை. வாழ்க்கை வழிகளைப்பற்றி அவன் மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருந்தானே தவிர, இன்னும் எவ்வித முடிவுக்கும் வரவில்லை. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் என்கிற அநுபவம், ஒரு முடிவுக்கு வரத தனக்கு உதவுமா என்கிற சிந்தனை அவன் மனசில் விசுவரூபம் எடுத்தது. 

அத்தியாயம்-14

தன்னைப்பற்றிச் சிவராமையரிடம் விசாரித்தவர்களை எல்லாம் பற்றி மேஜர் மூர்த்தி விரிவாக விசாரித்து அறிந்து கொண்டான். 

அவன் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தின் வெளித் தோற்றத்தை மட்டும் அல்ல; அகத்தோற்றத்தையும் உள் வாழ்வையும் அந்தராத்மாவையும் அறிந்துகொள்ள விரும்பினான். 

அவன் விருப்பத்தை அறிந்தவர்போல், ஏற்றுக்கொண்டவர் போல், சிவராமையரும் ரஸமான விஷயங்களையும் ரஸமில்லாத விஷயங்களையும் அவன் கேட்கக் கேட்கச் சொல்லிக்கொண்டே வந்தார். தெருவையும் தெருவின் ஆத்மாவையும் தெருவாரின் பழக்க வழக்கங்களையும் தெருவாரின் ஆசை அபிமானங்களையும் பற்றிப் பூராவும் தான் ஒரே பொழுதில் அறிந்து கொண்டுவிட ஆசைப்பட்டான். இதே அறிவுத் தாகந்தான் அவனை அந்த நாளில் பேராசிரியர் மேனனுடன் ஜர்மனிக்கு அழைத்துச் சென்றது. 

ஆகாத காரியத்தைச் செய்து முடிப்பதற்கு மனிதனுக்கு இருக்கக் கூடிய ஆர்வந்தான் என்ன? ஆகாது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இருந்தாலும் நம்மால் ஆகும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் தொடங்குகிறான். 

மனிதனுடைய மனசில் ஒரு பகுதியிலே அவனுக்குத் தேவையேயில்லாத பல விஷயங்கள் பதுங்கிக் கிடக்கின்றன. அநாவசியமான அறிவும் அவசியமான அறிவும் அவன் மனத்திலே போரிட்டுப் பதுங்கிக் கிடக்கின்றன. 

சாத்தனூரையும் சாத்தனூர்வாசிகளையும் பற்றி அறிந்து கொள்ள அவர்களுடன் அதிக நெருக்கமான சம்பந்தம் கொள்ளாத இந்த மேஜர் மூர்த்திக்குத்தான் என்ன வேகம்? என்ன தாகம்? அவனுடைய மாமா சிவராமையர் அங்கே வசித்தார் என்பது உண்மைதான். ஆனால், அன்றுவரையில் அவனுக்கும் அவன் மாமாவுக்குங்கூட அவ்வளவாக நெருங்கிய சம்பந்தம் இருந்ததில்லையே! திடீரென்று க்ஷணச்சித்தத்தின் விளைவாக அவன் கிளம்பிச் சாத்தனூர் வந்துவிட்டான். வந்த இடத்தில் மாமாவும் மாமியும் அவர்களுடைய பேரன் பேத்திகள் அடங்கிய குடும்பமும் நல்லதோர் குடும்பமாக அவனுக்குப் பட்டது. அதற்காக? 

அதற்காக அவனும் சாத்தனூர்வாசி ஆகிவிடுவது என்று தீர்மானித்துவிட்டான் என்று ஏற்பட்டுவிடுமோ? 

அல்லது, அதுதான் சரி சாத்தனூரில் குடியேறி, தன் மாமாவின் வழியைப் பின்பற்றுவது என்று தீர்மானித்து விட்டான் என்று ஏற்படுமா? 

தன் வழிகள் தவறு என்று அவன் இன்றுதான் உணர்ந்தான் என்று சொல்ல முடியாது. எப்பொழுதுமே ஜர்மனி போய்ச் சேர்ந்த நாள் முதலே தன் வாழ்க்கை வழி, தான் பின்பற்ற நினைத்த வாழ்க்கை லட்சியம் தவறானதாக இருக்கலாம் என்கிற சிந்தனை அவன் மனத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் காலத்தின் சதி, ஒவ்வோர் அடியாக அவனை உந்தித் தள்ளிக் கொண்டு நடந்தது. மேலே நடப்பது சாத்தியமில்லை என்று ஏற்பட்ட பிறகுதான் கழுத்தில் அந்தக் கையின் பிடிப்புத் தளர்வது போல் இருந்தது. 

அந்தப் பிடிப்பு, சற்று அதிகமாகவே தளர்ந்திருக்கும்போது மூர்த்தி எப்படியோ தப்பித்துக்கொண்டு சாத்தனூருக்கு ஓடிவந்து விட்டான். சாத்தனூரில் தஞ்சம் புகுந்துகொண்டான். தன்னை அதுவரை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த லட்சியங்கள், ஆசைகள், கொள்கைகள் முதலியவற்றிலிருந்து. 

சாத்தனூர் எப்படிப்பட்ட தஞ்சம் தரும் தனக்கு என்று பூரணமாக ஆராய்ந்து பார்க்க அவனுக்கு ஆவல். 

ஆனால் வாழ்க்கை சுத்த வாழ்க்கையாக இருந்தது என்பது உலகில் எங்கேதான் உண்டு? ஓர் ஊரில், ஒரு தெருவில் ஏன் ஒரு வீட்டிலேயுங்கூட எத்தனை மனிதர்கள் இருந்தார்களோ அத்தனை லட்சியங்களும் நோக்கங்களும் ஆட்சி செலுத்தின. சில சமயம் திடப்படாத ஒரே மனிதனுக்குங்கூடப் பலவிதமான லட்சியங்களும் நோக்கங்களும் இருந்தன. 

இதிலே மனிதன் தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளுகிற நோக்கங்களும் லட்சியங்களும் வேறு – பிறர் நலனுக்காகச் சந்தர்ப்ப விசேஷங்களால் கற்பிக்கும் நோக்கங்களும் லட்சியங்களும் வேறு வேறு. 

மனிதனைப் படைத்த கடவுள் ஏன் இப்படி வேற்றுமைப் பட்ட உள்ளங்களைப் படைத்திருந்தான்? மனிதர்களுடன் மனிதர்களைப் போராட விட்டு அந்த ஈசன் கண்ட இன்பந்தான் என்ன? அலகிலா விளையாட்டு என்றால் பொறுப்பற்ற விளையாட்டா? 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் சின்னத் தெரு தான் ரொம்பப் பெரிய தெரு அல்ல. இருந்த வீடுகளிலும் பாதிக்குமேற்பட்டவைகளில் ஒரு நபருக்கு மேல் குடியிருப்பு இல்லை. தெருவின் மொத்த ஜனத் தொகை நூற்றுக்குள்தான் இருக்கும் ஆண், பெண், குழந்தைகள் உள்பட. இந்த நூறும் ஒன்றுக்கொன்று எவ்வளவு வித்தியாசப்பட்டவை! 

நூறும் நூறுவிதம். 

அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. 

லட்சமும் லட்ச விதங்களாக இருப்பதைப் பார்த்துப் பழகியவன் அவன். அதிலும் தவறில்லை. 

அந்த லட்ச விதங்களான லட்சங்களையும், கோடி விதங்களான கோடிகளையும் ஒரு மனிதன் அடக்கி ஆண்டு ஒரேவிதமாக்கியதையும் அவன் பார்த்திருந்தான். 

ஹிட்லரின் ஜர்மனியில் லட்சம் சுபாவங்களாகத் தொடங்கிப் பதினாயிரமாகி, ஆயிரமாகி, நூறாகி, ஒன்றாகி அந்த ஒன்றும் ஹிட்லரே யாகிக் குறுகிய பிற்பகுதியை அவன் நேரில் கண்டவன் – பட்டு அநுபவித்தவன். 

மற்றவர்கள் எப்படியோ? படித்துப் பட்டம்பெற ஜர்மனி போயிருந்த மாணவன் மூர்த்தி, ஹிட்லரின் லட்சங்களில், கோடிகளில் ஒன்றாக இருக்கவேண்டியதில்லைதான் – ஆனால் பிரசார வேகம் அவனையும் கட்டுப்படுத்தியது – கட்டிப் பிடித்திருந்தது. 

இந்திரஜித்தின் அஸ்திரத்தால் கட்டுண்டு ராவணதர்பாருக்கு வந்த பலமிழந்த பலசாலியான ஹனுமான்போல அவன் – பிரசாரப் பிசாசுக்கு, சைத்தானுக்கு – அடிமையாகி விட்டான். 

பிரசாரம் என்றால், என்ன பிரசாரம்? 

கடவுளின் தெய்வத்தன்மையையே மாற்றக்கூடிய பிரசாரமே யன்றோ அது ! 

மனிதனின் மனிதத்தன்மையைப் பரிபூரணமாக அழித்து விட்ட பிரசாரம். 

ஆறேழு வருஷங்களுக்கு மேல் ஹிட்லரின் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டுத் திணறியவன் மூர்த்தி. அடிமை என்கிற உணர்ச்சி சிறிதளவு கூட ஏற்படாதவாறு நடந்த பிரசாரம் அன்றோ அது? 

சுபாஷ்சந்திரபோஸின் வருகையால் அந்த அடிமைத் தளை யிலிருந்து மூர்த்தி விடுபட முடிந்தது. 

விடுபட்டுப் பயன்? 

ஒரு நுகத்தடியிலிருந்து கழற்றிக்கொண்டு இன்னொரு நுகத் தடிக்குக் கழுத்தைக் கொடுத்த கதை அது. 

ஓர் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை இன்னோர் அடிமைத் தனத்துக்கு வாழ்நாளை அர்ப்பணிக்க ஏற்பட்ட விடுதலை அது. 

சுபாஷ்சந்திரபோஸ் ஒரு சின்ன ஹிட்லர். அவருடைய சாம்ராஜ்யத்திலே ஆட்சி செலுத்தியதும் அதே கொள்கைதான் ஹிட்லரின் கொள்கைதான் – லட்சத்தையும் கோடியையும் குறுக்கிக்குறுக்கி ஒன்றாக, அந்த ஒன்றும் ஹிட்லராகச் செய்கிற வித்தைதான். 

சுபாஷ்சந்திரபோஸின் வித்தைத் திறன், ஹிட்லருடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவுதான். ஆனால் இந்தியா என்கிற மந்திரம் அவருக்கு உதவி செய்தது. பிரசார வேகம் அதிகம் இல்லாயிலே அவர் ஓரளவு, ஒரு குறுகிய காலத்திற்குள். ஒரு குறுகிய ஜனப்பகுதியிலே தம் லட்சியங்களை நிறைவேறச் செய்ய வழி தேடிக்கொள்ள முடிந்தது. 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்திலே சிவராமையரின் வீட்டுத் திண்ணைச் சாய்மானத்தில் சாய்ந்து கொண்டு, மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான் மேஜர் மூர்த்தி அவன் தன்னுடைய பழைய நாட்களின் வாழ்க்கையைப்பற்றி இதுவரை இப்படி எண்ணிப் பார்த்ததே இல்லை. 

ஹிட்லரின் பிரசார ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கும்போது அதுவே உண்மை என்கிற கொள்கையில் தானாக வலியப் போய் அடிமைத்தளையைப் பூட்டிக் கொண்டவன் அவன். மனம் இருந்திருந்தால் அவன் அப்போதே ஜர்மனியைவிட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அவன் வர விரும்பவில்லை. ஹிட்லரின் ஜர்மனியே சொர்க்கம் என்று எண்ணி இருந்துவிட்டான். 

அந்த நாட்களில் அந்த நம்பிக்கை உண்மை என்றுதான் பட்டது. 

ஜர்மனிதான் பூலோக சொர்க்கம், மேஜர் மூர்த்தியைப் பற்றிய வரையில். 

சுபாஷ்சந்திரபோஸ் ஜர்மனி வந்து தன்னை அழைத்த பின், யோசித்துப் பார்க்கும்போது, ஹிட்லரின் ஜர்மனி நரகமாகக் காட்சி அளித்தது. தன் தேசம், தன் மக்கள் என்று இல்லாமல் இருப்பவன் மனிதனா என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டான் மேஜர் மூர்த்தி. அடிமைப்பட்டிருக்கும் இந்தியாவின் விடுதலைதான் ஒவ்வோர் இந்தியனுக்கும் முதல் கடமையாகும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. 

இந்தியாவுக்கு எதிர்பாராத விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால் எவ்வளவு பெரிய ஆனால் அது? 

இந்தியா, சுதந்தரம் பெற்றபின் யோசிக்கும்போது, தன் லட்சியங்கள், ஜர்மனிக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, சரியானவை தாமா என்று முடிவு கட்டத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டான் மூர்த்தி. 

கூட்டத்தோடு கோவிந்தா போட்டதோடு சரிதானா? லட்சியம், கொள்கை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் வெறும் பேச்சுத்தானே! வேறு என்ன? 

ஹிட்லரும் போஸும் சிந்தித்த சிந்தனைகளுக்கும் பிரசாரம் என்கிற ஒரே நோக்கத்துடன் பரப்பிய கொள்கைகளுக்கும், ஒன்றன் பின் ஒன்றாக, அடிமைப்பட்டிருந்ததைத் தவிர மேஜர் மூர்த்தி, தன் வாழ்க்கையில் முப்பத்தைந்து வருஷங்களில் சாதித்துவிட்டதுதான் என்ன? 

சாத்தனூருக்குச் சரித்திரப் பிரசித்தம் இல்லை. பூகோளப் பிரசித்தமும் இல்லை. 

சாத்தனூரில், அதுவும் சாமானிய அக்கிரகாரத்தில், ஆடெல்ப் ஹிட்லரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸையும் போன்ற பெரிய மனிதர்கள் இல்லை. 

சரித்திரத்தில் பொன்னெழுத்துகளாலும் கரிக்கோடுகளாலும் வரைய வேண்டிய சம்பவங்கள் இல்லை. 

இந்த தலைமுறையின் ஞாபகத்திலே சாத்தனூரிலே ஞாபகம் வைத்துக்கொள்ளும்படியாகப் பொதுக்காரியங்கள் எதுவும் இல்லை. 

ஆனால் மனிதர்கள் தனித்தனி மனிதர்களாக வாழ்ந்தார்கள். தங்களுக்குத் தாங்களே தவிர வேறு எவ்விதத்திலும் யாருக்கும் அடிமைப்படாமல் வாழ்க்கை நடத்தினார்கள். 

தனித்தனி மனிதர்களும் தனித்தனி மனிதர்களாக ஒரு நூறு பேர்வழிகள், நூறு பேர்வழிகளாக வசித்து வந்தார்கள். 

மேலை நாட்டு அரசியல் கொள்கைகளின் விளைவுகளாக, சமூக, சமுதாயக் கொள்கைகளின் விளைவுகளாக, சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரம் அடிமைப்பட்டுவிட வில்லை. 

முப்பது தலைமுறைகளில் அதிக மாறுதல் இல்லாமலே சாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரகாரத்தில் வாழ்க்கை நடைபெற்று வருகிறது. 

இது குடும்பம் என்று, தனி மனிதனின் வாழ்க்கை என்று மகத்தானதோர் லட்சியமாகப் பட்டது மூர்த்திக்கு. 

‘இப்பொழுது பட்டது’ என்று தனக்குள்ளேயே சேர்த்துக் கொண்டான் மூர்த்தி. 

முந்திய லட்சியங்கள் பொய்த்துப் போனதுபோல இதுவும் பொய்த்துவிடலாம். 

பொய்த்துவிடலாந்தான். ஆனால் சிவராமையரையும் அம்மாமியாரையும் பார்க்கும்போது பொய்த்துவிடாது என்றுதான் தோன்றிற்று. 

அத்தியாயம்-15

“வெந்நீரில் குளிக்கிறாயா கிட்டா? அல்லது காவேரிக்குப் போகலாமா?” என்றார் சிவராமையர். 

“வெந்நீரெல்லாம் வேண்டாம், பேசாமல் இரண்டு பேருமாகப் போய் ஆனந்தமாகக் காவேரியிலே குளித்துவிட்டு வாங்கோ”என்றாள் அம்மாமி. 

“நிறையத் தண்ணி இருக்குமா?” என்றான் மூர்த்தி. 

“ஐப்பசி மாசம். தண்ணி நிறைய இருக்கணும். ஆனால் மழையே பெய்யல்லையே! தண்ணிக்கு எங்கள் ஊரிலே – காவேரி தீரத்திலே கூடப் பஞ்சந்தான்” என்றார். சிவராமையர். 

“முன்னெல்லாம் ஐப்பசி மாசத்திலே என்றால் கொல்லையில் நம்பாத்தில் கிணற்றுக்குக் கயிறே தேவையில்லை. குனிந்து சொம்பில் ஜலம் மொண்டுகொள்ளலாம். இப்போ…” என்றாள் மாமி. 

“இப்போதும் கிணற்றில் தண்ணி மேலேதான் இருக்கு – ஐந்தடிக்குள்தானே இருக்கிறது!” என்றான் மூர்த்தி. 

“சில சமயம் முன்னெல்லாம் பிடிமட்டத்துக்குக் கூடத் தண்ணி வந்துவிடும்” என்றாள் மாமி. 

வெயில் சுள்ளென்று அடித்தது. ஐப்பசி மாசத்து வெயிலாக இல்லை அது. 

“மணி பத்தாகவில்லை. அதுக்குள்ளே வெயில் இப்படிக் காயறதே!’என்றாள் மாமி. 

தெருவில் நிழல்கள் குறுகிக்கொண்டிருந்தன. வெயில் பட்ட பிரதேசம் அதிகமாகிக்கொண்டிருந்தது. எதிர்ச் சரகத்து வீட்டுக் கூரை மேடுகள் இப்போது – இந்த வெளிச்சத்தில் வானத்தைத் தொடாமல் தூரத்திலிருந்தே கைகூப்புபவைபோல் இருந்தன. காலை ஒளியின்மையால் அழகாகத் தெரிந்த அவை இப்போது, விகாரமாக, லட்சியவாதி என்று சொல்லிக்கொள்பவன் முடிவில் அறிந்துகொள்கிற உண்மைபோல், கோர சொரூபத்தில் காட்சியளித்தன. 

“எனக்கென்னவோ பார்க்கப் பார்க்க இந்தத் தெரு ரொம்பவும் பிடித்திருக்கு” என்றான் மேஜர் மூர்த்தி. 

“தெருவிலே மனிதர்கள் என்று சொல்லிக்கொண்டு விஷப் பாம்பும் நண்டுவாக்காளியுந்தான் வசிக்கின்றன. நீ தெரியாமல் தெரு பிடிச்சிருக்கு என்கிறாய்!” என்றாள் மாமி. 

“உலகம் பூராவுமே விஷப்பாம்புகளும், நண்டு வாக்காளிகளுந்தான் மனிதர்கள் என்கிற மாறுபெயரில் நடமாடுகின்றன” என்றார் சிவராமையர். 

“இந்த மாதிரி, நம்பிக்கை இழந்து, உயிரை உறிஞ்சுகிற சிந்தனை களுடன் வாழ்வதைவிட, வாழவே வேண்டாம் என்றுதான் நான் நினைப்பேன்” என்றான் மூர்த்தி. 

சிவராமையர் நிமிர்ந்து பார்த்தார் அவனை. ஒரு நிமிஷம் கழித்துச் சொன்னார்: “இதோ பார் நீ வாலிபம். உனக்கு இன்னமும் கல்யாணம் என்கிற அநுபவங்கூட ஏற்படவில்லை. அதனால்தான் இப்படிப் பேசுகிறாய்” என்றார். 

“ஆனால் இந்த அநுபவங்கள் ஏற்பட்டு, மனிதன் வளர்ந்து, பெரியவனாகப் போவதற்கும், பெரியவனான பின் இதே முடிவுக்கு வருவதற்குந்தான் – கடவுள் என்று ஒருவர் உண்டானால் – கடவுள் நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறாரா? நம்பிக்கை தருகிற வேறு ஒரு முடிவுக்கு வருவதற்கு நம்முடைய வாழ்க்கையே, அநுபவங்களை உபயோகிக்க முடியாதா?” 

“சாதாரணமாகப் பலரால் முடிவதில்லை. இரண்டொரு பேர் – அதிருஷ்டசாலிகள் – தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் அதுகூட இங்கே சாத்தியமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் சிவராமையர். 

“ஏதாவது பேசினால் கேட்டிண்டிருக்கிறவாளுக்குப் புரியற மாதிரி பேசப்படாதோ?” என்று கோபித்துக்கொண்டாள் மாமி. 

“மாமி சொல்வதுதான் சரி” என்று கூறிச் சிரித்தான் மேஜர் மூர்த்தி. “இந்த விவாதங்களாலெல்லாம் நமக்கு லாபம் கிடையாது.’ 

“ஆனாலும் இப்படி விவாதம் செய்யத்தானே தோன்றுகிறது? அதுதான் மனித சுபாவம்.” 

“அதாவது?” 

“லாபம் உண்டோ இல்லையோ, லாபம் இருக்கலாம் என்கிற நம்பிக்கையில்தான் நாம் எதைப்பற்றியுமே பேசித் தீர வேண்டியிருக்கிறது. பசி, தாகம், தூக்கம் என்கிற மாதிரி, பேச்சு என்பதும் தவிர்க்க முடியாத ஒரு தேவை. மனிதன் பேச்சால்தான் வாழ்கிறான் என்று சொல்லுவது ஒரு விதத்தில் பொருந்தும்” என்றார் சிவராமையர். 

“பேச்சால் என்று சொல்லுவதைவிட வார்த்தைகளால் என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றான் மூர்த்தி. 

மாமி குறுக்கிட்டாள்: “உங்க மாமா எப்பவுமே இப்படித் தான் பேசிண்டிருப்பார். நாள் பூராவும் புரிந்த விஷயங்களையும் புரியாத விஷயங்களையும், புரிந்து கொள்கிறவர்களிடமும், புரிந்து கொள்ளாதவர்களிடமும் இப்படியேதான் பேசிக்கொண்டிருப்பார். அவர் பேச்சிலே அர்த்தத்தை எதிர்பார்க்காமல் இருப்பது எனக்குப் பழக்கம் ஆகிவிட்டது” என்றாள். 

“உன் மருமானும் இந்த அர்த்தமற்றப் பேச்சு விஷயத்தில் தன் மாமாவைத் தாண்டியம்மா கொண்டிருக்கிறான். உன்மாதிரி எனக்கும் அடுப்பங்கரையில் ஒரு நாளில் அறுபது நாழிகை நேரமும் வேலை இருந்தால், பேச்சு அவசியமாயும் இராது, சாத்தியமாயும் இராது. வேறு வேலை இல்லாததால்தான் பேச்சுத் தேவையாக இருக்கிறது; என்ன பண்றது?” என்றார் சிவராமையர். 

மூர்த்திக்கு இப்போதுதான் புரிந்தது. அவன் மாமா சொன்னது உண்மைதான். வேறு காரியம் இல்லாததனால்தான் போலும், அவனுக்குச் சதா பேச்சுத் தேவையாகவே இருந்தது. 

வாய்விட்டுப் பேச யாரும் அகப்படாவிட்டால் தனக்குத்தானே – ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிற இரண்டாவது மனிதனுடன் ஒவ்வொருவனும் பேசிக் கொள்ளத் தொடங்கி விடுவான். ரஸமான பேச்சு, ரஸமான முடிவேயில்லாத விவாதங்கள். பேசுவதற்கு ஆள் இருந்துவிட்டாலோ அவனும் அவன் மாமி சொன்ன தைப்போலவேதான். புரிந்த விஷயங்களையும் புரியாத விஷயங்களையும் புரிந்து கொள்ளுகிறவர்களிடமும் புரிந்து கொள்ளாதவர்களிடமும் பேசத் தொடங்கிவிடுவான். புரியாத விஷயங்கள்கூடச் சிலசமயம் பேச்சால் புரியத் தொடங்கி விடுவதுபோல இருக்கும் – உண்மைதான். 

சொல் என்றால் மந்திரம் என்றுதான் அர்த்தம். சொல்லுக்குக் கட்டுப்படாத விஷயம் விஷயமே அல்ல. நாம் தெளிவாகச் சொல்லால் கட்டுப்படுத்திவிட்டால் எவ்விஷயமும் எளிதாகி விடுகிறது. 

மாமியிடம் சிவராமையர், “உனக்கு எந்த விஷயந்தான், என்றைக் குத்தான் புரியப்போகிறதோ!” என்று அலுத்துக் கொண்டார். “புரியவேண்டிய விஷயங்களெல்லாம். எனக்குப் புரிகிற அளவு உங்களுக்குப் புரிந்துவிட்டால் போதுமே” என்றாள் மாமி. 

‘பேஷ் மாமி’ என்றான் மூர்த்தி. 

அவனுக்கும் இது தெளிவாகவே தெரிந்தது. மனிதன் தேட வேண்டாததை எல்லாம் தேடிக்கொண்டு, நாட வேண்டாததை எல்லாம் நாடிக்கொண்டு, அலைந்து திரிந்து வாழ்நாளை வீணாக்கிக் கொண்டிருக்கிறான். மனத்தில் அலைந்து திரிந்தால் என்ன? ஆத்மாவில் அலைந்து திரிந்தால் என்ன? பூகோள ரீதியில் அலைந்து திரிந்தால் என்ன? ஆசை அபிலாஷைகளில் அலைந்து திரிந்தால் என்ன? 

ஆடெல்ப் ஹிட்லர் அநாவசியமான ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க முயன்று அலைந்து திரிந்து கெட்டான். அவனை எதிர்த்து நின்று போராடி வென்றுவிட்டவர்களும் வேறு ஒன்றும் பிரமாதமாகச் சாதித்து விடத்தான் இல்லை. 

நேதாஜியின் ஓட்டமும் சேனை திரட்டலும் பாடுபட்டதும் எல்லாம் பெயரளவில் புகழ்தரப் பயன்பட்டதே தவிர, மனித குலத்திற்கு வேறு எந்தவகையில் – உண்மையான வகையில் – லாபம் தந்தது? 

மூர்த்தியும் தான் படித்துப் புரட்டிவிடுவதாக எண்ணற்ற ஆசைகளுடன் ஜர்மனி போய்ச் சேர்ந்தான். அந்த ஆசை, யுத்தத்தின் வருகையுடன் அழிந்துவிட்டது. 

யுத்தம் வேறு பல ஆசைகளைக் கொணர்ந்தது. 

யுத்தத்தின் முடிவு அவற்றை அழித்துவிட்டது. 

யுத்தத்திற்குப் பிறகு தன் சுயதேசத்தில் பெயரும் புகழும் தரக் கூடிய பங்கு தனக்குக் கிடைக்கும் என்றுதான் எண்ணினான் மூர்த்தி. அதுகூடக் கிட்டவில்லை. 

‘ஏது, ஏது? சாத்தனூர் சர்வமானிய அக்கிரகாரமும் மாமா அம்மாமியினுடைய வார்த்தைகளும் என் வாழ்க்கையையே திருத்தி அமைத்து விடக்கூடிய அநுபவமாக அமைந்து விடும்போல் இருக்கிறதே’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் மூர்த்தி. 

கடைசியாக மாமி சொன்னாளே, அது எவ்வளவு நிஜம்! புரிய வேண்டிய விஷயங்களெல்லாம் அவளுக்குப் புரிந்த அளவு மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் உலகமே பிரகாசம் அடைந்து விடுமே என்றுதான் தோன்றியது மூர்த்திக்கு. 

வாழ்க்கை வழிகளை ஓரளவுக்கு முடிவாக, மாற்ற முடியாதபடி, ஒருவன் அமைத்துத் தந்துவிட்டானானால் தேவலையே என்று தோன்றிற்று மூர்த்திக்கு. ஒரு காலத்தில் பல நூறு வருஷங்களுக்கு முன் மனு என்று ஒருவன் அழுத்தமாக, ‘இப்படித்தான் மனிதன் வாழவேண்டும்’ என்று முடிவுகட்டிக் கூறிவிட்டுப் போய்விட்டான். அவன் கூறிய வழிகளைப் பின்பற்றி ஒரு சமூகம் பல நூறு வருஷங்கள் ஆடாமல் அசையாமல், எவ்விதமான பூகம்பத்துக்கும் குலைந்துவிடாமல், நிலைத்து வர முடிந்தது. 

மனு, மோஸஸ், குருகங் மூவரும் அசைக்கமுடியாத அஸ்திவாரத் தின்மேல் மனிதனை நிலைநிறுத்த முயன்று, ஓரளவு வெற்றியும் பெற்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். 

ஆனால் அவர்கள் இட்ட அஸ்திவாரங்கூட, இன்று கிருஸ்துவுக்கும் ஆயிரத்துத் தொள்ளாயிரம் வருஷங்களுக்குப் பிறகு இரண்டு மகா யுத்தங்களுக்குப் பிறகு, அணுக்குண்டுக்குப் பின்னர்- தகர்ந்து கொண்டிருந்த மாதிரிதான் தோன்றியது. 

நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு மனுவோ மோஸஸோ குருகங்கோ தங்கள் சட்டங்களை இயற்றவில்லை. தங்களுக்கு எட்டிய வரையில் நியாயம் தர்மம் என்கிற நியதி வழுவாமலும், மனித சுபாவம் என்கிற அறிய முடியாத ஒரு தத்துவத்தை ஒட்டியும், ஒரு தெய்விக பலத்தினால், சுயநலமற்ற ஆன்ம பலத்தினால், சிந்தனை என்கிற தபோபலத்தினால் அவர்கள் அறிந்தபடி வாழ்க்கை வழிகளை மனிதனுக்கு வகுத்துத் தந்தார்கள். ‘இது சரியான பாதை, நட’ என்றார்கள். 

இப்போது இன்று அவர்களுடைய தெய்விகத் தன்மையையும், தபஸையும், நியாயத்தையும் தர்மத்தையும், நாம் சந்தேகிக்கத் தொடங்கி விட்டோம். 

வாழ்க்கை வழிகள் இன்று கரடுமுரடாகிக் கொண்டிருக்கின்றன. 

ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி தலைக்குத் தலை தேடி, மேட்டில் ஏறிப் பள்ளத்தில் விழுந்து, முள்ளைக் குத்திக் கொண்டு பாறையில் மோதிக் கொண்டு ஒவ்வொருவனும் தனிப்பாதை வகுத்துக்கொள்ள முயலுகிறான். 

பலிக்குமா? சுலபமாகப் பலிக்கிறமாதிரியில்லை. 

தேரோடும் வீதியிலே மனிதன் தனிவழி தனக்கென்று தேடிக் கொண்டு நடக்கலாம். தேரும் ஓடும் அதிலே, தெருவடைச்சானும் ஓடும் அதிலே. நின்று கும்பிட விரும்புகிறவர்களுக்கும் தெருவுக்குள்ளே இடமுண்டு. 

தேரோடும் வீதியிருக்க, நான் வீடுகளின் கூரைமோட்டின் மேலேயே நடந்துதான் தெருக்கோடியை அடைவேன் என்று யாராவது சொன்னால்? 

நிமிர்ந்து பார்த்தான் மூர்த்தி. எதிர்வீட்டுக் கூரைமேல் கூனிக் குறுகிக்கொண்டு இரண்டு குரங்குகள் உட்கார்ந்திருந்தன. மட்டை உரிக்காத தேங்காய்க்குள் ஒரு கையைவிட்டு, பல்லால் எதையோ கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது ஒரு குரங்கு. இன்னொன்று சுவாரசியமாக வயிற்றைச் சொரிந்துகொண்டு சூரியனை மட்டும் பார்க்காமல் மற்றப் பக்கங்களிலெல்லாம் சட்டுச் சட்டெனத் திரும்பிப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது. 

மூர்த்திக்குச் சிரிப்பு வந்தது; சிரித்தே விட்டான்! 

அத்தியாயம்-16

“பார்த்தியாடியம்மா உன் மருமான் லக்ஷணத்தை!’ என்றார் சிவராமையர். “பார்த்துக்கோ. அவன் தன் மாமாவைத்தான் கொண்டிருக்கான். பாதி பேசிண்டிருக்கச்சே திடீர்னு மௌனமாயிடறான். திடீரென்று சிரிக்க ஆரம்பிச்சுடறான்; பார்த்துக்கோ!” என்றார். 

மாமியோ மூர்த்தியோ பதில் சொல்லுமுன் தெருவில் சின்னப் பையன்கள் கூட்டம் ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் வந்துவிட்டது. குரங்கைக் கண்டுவிட்ட கும்மாளம் அவர்களுக்கு. 

பன்னிரண்டு வயசிலிருந்து இரண்டு இரண்டரை வயசு வரையில் இருக்கும் பையன்களும் பெண்களும் அங்கே வந்து விட்டார்கள். இருபது இருபத்திரண்டு பேர்களாவது இருப்பார்கள். 

குரங்குகளைக் கண்டு அவர்களுக்குக் கும்மாளம் அதிகமா? குழந்தைகளைக் கண்டு குரங்குகளுக்கு கும்மாளம் அதிகமா என்று விவாதிக்க வேண்டியது அவசியம் என்று பட்டது மூர்த்திக்கு. இரண்டும் சரிசமமாக இருக்கும்போலத்தான் இருந்தது. 

குழந்தைகளும் குரங்குகளைத் துரத்திவிட விரும்பின மாதிரி எதுவும் செய்யவில்லை. கல்லெடுத்து வீசினவர்கள்கூடக் குரங்கின்மேல் பட்டுவிடக் கூடாதே என்று வீசியமாதிரிதான் இருந்தது. ஒரு கல்லை ஒரு குரங்கு கையை நீட்டி லாவகமாகப் பிடித்து, திருப்பி எறிந்தது. 

“குரங்குகளைப் பார்த்தால் நன்றாக இல்லையாடா கிட்டா?” என்றாள் மாமி. 

மாமியின் பேத்தி, பேரன்கள் இதற்குள் குரங்கு பார்க்க வெளியே வந்துவிட்டார்கள். அவர்களில் பெரிய பெண்கூடக் குரங்கு பார்க்கிற ஆசையில் வெட்கத்தை மறந்துவிட்டு, மூர்த்தி தன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்கிற நாணத்தையும் விட்டு, விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள். 

மூன்று வயதுப் பேரனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு சிவராமையர் குரங்கைக் காட்டினார். பையன் பொக்கைவாய்ப் பல்லெல்லாம் தெரியச் சிரித்தான் – கையைக்  கொட்டினான் ஆனந்தத்தில்: “அதில் எந்தக் குரங்குடா அம்மம்மா மாதிரி இருக்கு?” என்று அவனைக் கேட்டார் சிவராமையர். 

பையன் சிறிது நேரம் என்ன சொல்வது என்று அறியாமல் விழித்தான். பிறகு தன், ‘அம்மம்மா’ நின்றுகொண்டிருந்த பக்கம் திரும்பி அவளையே சுட்டிக் காட்டினான். 

“அம்மமாவேதான் குரங்கு என்கிறாயா! பலே ராஜா’ என்றார் சிவராமையர், 

“எதிர் வீட்டுக் கூரைமேல் இரண்டு குரங்குதான் இருக்கு. அதில் ஒன்று நான் என்றால், இன்னொன்று..” என்று சொல்லி முடிக்காமல் நிறுத்தினாள் மாமி. 

தன் கௌரதையைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று சிரித்தான் மேஜர் மூர்த்தி. 

“மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான். குரங்கு இனம் மனித இனத்துக்கு உறவுதான் என்று முடிவுகட்டியிருக்கிறார்கள் அறிஞர்கள். நான் உன்னைக் குரங்கு என்று அப்படி ஒன்றும் இளப்பம் பண்ணுகிற நோக்கத்துடன் சொல்லவில்லை” என்றார் சிவராமையர். மேஜர் மூர்த்தி சொன்னான்: “மனிதனைப் படைத்துப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மனிதன் சிந்திக்கவும் உச்சாணிக் கிளையை எட்டித் தொட ஆசைப்படவும் தொடங்கிய பின், கடவுள் குரங்கைச் சிருஷ்டித்தார் என்று எனக்குத் தோன்றுகிறது.” 

“நான் கேள்விப்பட்டதில்லை, இந்த மாதிரி. நான் கேள்விப் பட்டது வேறுவிதம்” என்றார் சிவராமையர். 

மாமி ஏதாவது சொல்வாளோ என்று மூர்த்தி அவளைத் திரும்பிப் பார்த்தான். எதுவும் சொல்லவில்லை என்று கண்ட பின் அவன், “மனிதனுக்கு, தான் என்கிற தனி அகம்பாவம் ஏறிவிட்டபின் அதை அடக்குவதற்காகக் கடவுள் அவனைப் போலவே குரங்கையும் சிருஷ்டித்தார் என்பது என் கட்சி” என்றான். 

“சொல்லு” என்றார் சிவராமையர். 

குரங்குகள் எதிர்வீட்டுக் கூரைமோட்டிலிருந்து பக்கத்து வீட்டுக் கூரைமோட்டுக்குத் தாவிவிட்டன. குழந்தைகளின் கூட்டம் கண்ணெதிரிலிருந்து கலைந்துவிட்டது. ஆனால் அவர்களுடைய கூக்குரல் மட்டும் காதில் விழுந்துகொண்டிருந்தது. சிவராமையரின் பேரன், பேத்திகளில் ராஜாவையும் ஏழு வயசு மீனாட்சியையும் தவிர மற்றவர்கள் உள்ளே போய்விட்டார்கள். 

மாமியும் சமையல்காரியத்தைக் கவனிக்க உள்ளே கிளம்பினாள்.ஆனால் கிளம்புமுன், “அதிக வெயிலாறதுக்குள்ளே கிளம்பு கிட்டா; குளித்துவிட்டு வந்துவிடு. இல்லாவிட்டால் ஏதாவது டிபன் பண்ணித் தரேன்; சாப்பிடு. பிறகு மத்தியானம் எவ்வளவு நேரம் கழித்து வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என்றாள். 

“நீங்கள்ளாம் வழக்கமாகச் சாப்பிடற மாதிரி எனக்கும் போட் டால் போதும். இப்போ ஒண்னும் எனக்கு டிபன் வேண்டாம்” என்றான் மூர்த்தி. 

“சாப்பிடற அவசரத்துக்காகச் சொல்லல்லே நான். நாழி கழித்துப் போனால் காவேரியிலே ஸ்நானம் பண்ணறது அவ்வளவா சுகமாக இராது” ன்று சொல்லிவிட்டு மாமி உள்ளே போய்விட்டாள். “காவோம்” என்றார் சிவராமையர். “என்னவோ குரங்கைப் பற்றிச் சொன்னாயே, சொல்லு கேட்கலாம்” 

மேஜர் மூர்த்தி சொன்னான்: “வெறும் கற்பனைக் கதைதான். எங்கேயோ படித்தது சட்டென்று ஞாபகம் வந்தது; சொன்னேன். அவ்வளவுதான்.”

“ஞாபகம் வந்த கதையைச் சொல்லு. எனக்கும் மீனாட்சிக்கும் கதை கேட்கப் பிடிக்கும். இந்த ராஜுப் பயலுக்கும் அப்படித்தான்” என்று சொல்லிக்கொண்டே சிவராமையர் தன் மருமானுக்கு எதிரில் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்துவிட்டார். 

மூர்த்தி சொன்னான்: “எப்பொழுதோ முன் ஒரு காலத்தில் ஓர் ஓவியன் இருந்தானாம். உலகத்திலேயே மிகச் சிறந்த ஓவியன் என்று பெயர் வாங்கியவன் அவன். அவனுக்கு வயசும் ஐம்பதுக்கு மேல் இருக்கும். அப்படியும் அவனுக்கு விளையாட்டுப் புத்தி போகவேயில்லையாம்!” 

“என்னைப்போல” என்றார் சிவராமையர். 

“பொறுப்பில்லாமல் பல காரியங்களைச் செய்துவிட்டு. சின்னப் பையன் மாதிரி கைகொட்டிச் சிரித்து ஆனந்திப்பானாம் அவன், ஐம்பது வயசு ஆனபிறகுங்கூட, பெரிய பெரிய மனிதர்கள் கூட அவனுடைய இந்த விளையாட்டுக்கு இலக்காகி அவஸ்தைப் பட்டிருக்கிறார்களாம். சபையில் பல பேருக்கு நடுவில்கூட மன்னனிடங்கூட இம்மாதிரி விளையாடுவானாம் அவன். மகாப் பெரிய ஓவியனாயிற்றே என்று எல் லோரும் பொறுத்திருந்தார்கள். அவசியமானால் ஒழிய அவனை யாரும் சந்திப்பதே கிடையாது. அவன் கேலி செய்யவே இடம் கொடுக்காமல் நடந்து கொள்வார்களாம். அவனிடம் அவ்வளவு பயம் அவர்களுக்கு” 

“ம்…” என்றார் சிவராமையர். 

ஒரு நாள் மன்னன் புதுசாகக் கட்டிய கோயில் ஒன்றில் ஓவியங்கள் தீட்டுவதற்கென்று இந்த ஓவியன் அமர்த்தப்பட்டான். அவனுக்கு அப்போது வயசு சற்றேறக்குறைய அறுபது இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தன்னுடைய கடைசிப் பெரிய வேலையாக இருக்கும் அது என்பது தான் அவனுடைய ஞாபகம். உலகம் என்றென்றைக்கும் புகழும்படியாக பிரமாதமான சிற்பங்களால் சுவாமி சந்நிதியின் நான்கு சுவர்களையும் நிரப்பிவிட வேண்டுமென்று அவன் வேலை செய்தான். சிறந்த ஓவியனின் கைதேர்ந்த ஓவியங்கள் – ஓவியக் கலையின் எல்லை என்றே சொல்லும்படியாக – சுவர்களில் தோன்றத் தொடங்கின. முதலில் சில நாட்கள் வரை கைங்கரியம் சரிவர நடந்து வந்தது.” 

“ம்…” என்றார் சிவராமையர். 

“ம்…” என்றான் ராஜுப்பயல், ஏதோ புரிந்துகொண்ட மாதிரி. 

நான் உள்ளே போறேன்” என்று கூறிக்கொண்டு, மீனாட்சி எழுந்து போய்விட்டாள். 

மேஜர் மூர்த்தி தொடர்ந்து கதையைச் சொன்னான்: “இப்படி இருக்கையில் ஓர் ஓவியத்தை, நடுநாயகமான ஓர் ஓவியத்தைச் சிறப்பாகத் தீட்டிவிட்டு, ‘அஸ்தமித்து விட்டது; நாளை வந்து கடைசி வரிகளை தீட்டி முடித்துக்கொள்ளலாம்’ என்று கிளம்பினான் ஓவியன். ஆனால் அவன் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அவனுக்கே பரிதாபமாக இருந்தது. நடுநாயகமாக மிகச் சிறந்ததாக இருக்கவேண்டுமென்று அவன் தீட்டியிருந்த ஓவியத்தில் குறுக்கும் நெடுக்குமாகக் கண்டபடியெல்லாம் சலாகையால் இஷ்டப்பட்ட வர்ணங்களை எல்லாம் இழுத்திருந்தது.” 

“ம்…” 

“பிரமித்துப் போனான் ஓவியன். முழுவதையும் அழித்து விட்டு முன்னிலும் அதிஜாக்கிரதையாக அதிஅழகான உருவம் ஒன்றை அஸ்தமன சமயத்தில் பாதி முடிந்த வகையில் தீட்டி விட்டு, கோயிலுக்குள் அன்றிரவு யாரும் வந்துவிடாமல் பூட்டிக் காவல் காக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினான் ஓவியன். மறுநாள் அதிகாலையிலேயே அவன் கவலையினால் எழுந்துவிட்டான் என்று சொல்லவும் வேண்டுமா? போய்ப் பார்த்தால், முந்தின தினம்போலவே நடந்திருந்தது. காவலாளிகளை எல்லாம் கூப்பிட்டு விசாரித்தான். யாரும் இரவில் அங்கே வந்திருக்க வழியே கிடையாது என்பது ஏற்பட்டது. 

“அடே!” என்றார் சிவராமையர். 

“இதற்குள் விஷயம் இரண்டு நாட்களாகக் கோயிலில் ஓவியன் எழுதுகிற ஓவியங்கள் சின்னாபின்னப்படுத்தப்படுகின்றன என்கிற விஷயம் – மன்னன் காதுவரை எட்டிவிட்டது. ‘இனி இப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன், காவல் சரிவரப் போட்டுவிடுகிறேன்’ என்று மன்னன் உறுதிமொழி கூறியதன் பேரில் ஓவியன் மூன்றாவது நாளும் நடுநாயகமான உருவத்தை வரைந்தான்.” “மூன்றாவது நாள் இரவு போய்க் காலையில் வரும்போது முன் போலவே இருந்ததாக்கும்?” 

“ஆமாம், இதற்குள் விஷயம் ஊரெல்லாம் பரவிவிட்டது. மன்னாதி மன்னர்களையும் கேலி செய்த ஓவியச் சக்கரவர்த்தியை, யாரோ இழிவுப்படுத்திக் கேலி செய்கிற விஷயம் ஊரெல்லாம் பரவிவிட்டது. அவனுடைய மிகச் சிறந்த ஓவியத்தைப் பார்க்க எவ்வளவு பேர் திரண்டு வருவார்களோ, அவ்வளவு பேரும் அதற்கும் அதிகமாகவே அவனுடைய சின்னாபின்னப்படுத்தப்பட்ட ஓவியத்தைப் பார்க்க வந்து கூடிவிட்டார்கள். ஓவியன் மிகவும் தலையிறக்கமாக நண்பகல்வரை உட்கார்ந்திருந்து விட்டான். பிறகு, ‘இது என்ன ரகசியம்?’ என்று கண்டுபிடித்து விட வேண்டும் என்று தீர்மானித்தவனாக, சாயங்கால வேளையில் வழக்கப்படி நடுநாயகமான உருவத்தை வரைந்தான். வரைந்தவன் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு இரவு நாலைந்து நாழிகைக்கெல்லாம் கோயிலுக்கே வந்து விட்டான். தன்னை அவமானப்படுத்துகிற உத்தேசத்துடன், தன் ஓவியத்தில் குறுக்கும் நெடுக்கும் கோடிழுத்துச் சின்னாபின்னப்படுத்திய திருடன் யார் என்று அன்றிரவு அங்கே கண்விழித்துக் காத்திருந்து கண்டுபிடித்து விடுவது என்பது அவன் உத்தேசம்.” 

“அப்புறம்?” 

“இரவு, கோயிலில் கர்ப்பக்கிருகத்தில் ஒரே ஓர் எண்ணெய் விளக்கு மட்டுந்தான் எரிந்துகொண்டிருந்தது. நள்ளிரவுக்குச் சற்று முன் ஓவியன் சற்றே கண்ணயர்ந்திருப்பான். அவன் கண் திறந்து பார்த்தபோது அவன் ஓவியத்துக்கு முன் யாரோ ஒரு குட்டையான மனிதன் உட்கார்ந் திருப்பது அந்த மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. பதற்றமடையாமல் கவனித்தான் ஓவியன். சலாகைகளை எடுத்து, தலையை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக்கொண்டே, வர்ணங்களில் தோய்த்து இரண்டொரு பட்டை களைத் தீட்டியவுடனேயே அந்த ஓவியனுக்குத் தெரிந்து விட்டது. கோயில் நந்தவனத்தில் வெகுநாளாகக் குடியேறியிருந்த ஒரு கிழக்குரங்கு அது. தான் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கும்போது அந்தக் குரங்கு பல தடவைகளில் வந்து, கழுத்தை நீட்டித் தலையைச் சாய்த்துக் கொண்டு கவனித்திருக்கிறது என்கிற விஷயம் ஓவியனுக்கு ஞாபகம் வந்தது. இப்போது கூட அந்தக் குரங்கு அசப்பிலே பார்த்தால், தான் உட்கார்ந்திருக்கிற மாதிரியேதான் உட்கார்ந்திருக்கிறது என்று தோன்றிற்று அவனுக்கு.” 

“பேஷ்! நல்ல கதைதான்!” என்றார் சிவராமையர். 

“தான் படேபடே ஆசாமிகளைக் கிண்டல் செய்து கேலி பண்ணி நகைத்தது போலத் தன்னை ஒரு கிழக்குரங்கு இப்படி அவமானப்படுத்தி விட்டதே என்று ஓவியனுக்கு முதலில் பிரமாதமான கோபம் வந்ததாம். பிறகு தெய்வம் தனக்குச் செய்த உபதேசம் அது என்று ஏற்றுக் கொண்டு, அதற்குப் பிறகு யாரையும் எவ்விதமான கேலியோ கிண்டலோ செய்வதில்லை என்று அந்த ஓவியன் தீர்மானித்தானாம். அந்தக் கோயிலில் தீட்டிய ஓவியங்கள்தான் அவன் கடைசியாகத் தீட்டியவை என்றாலும் அவன் அதற்குப்பிறகு பல வருஷங்கள் உயிரோடு இருந்தான் என்றும் தனக்குத் தெரிந்த வித்தைகளை எல்லாம் அதற்குப் பிறகு பலருக்குக் கற்றுக் கொடுத் தான் என்றும் எங்கேயோ படித்திருக்கிறேன்.” என்று கதையை மூடித் தான் மூர்த்தி. 

சிவராமையர் எழுந்து ராஜுப்பயலை உள்ளே விட்டுவிட்டு வந்தார். பிறகு சொன்னார்: “மனிதனுடைய அகங்காரமும் ஆணவமும் வளர்ந்து, பேயாட்டம் ஆடுவதைக் கண்ட பிரம்மதேவன், மனித உருவத்திலேயே, அவன் செய்யக்கூடியதில் அநேகமாக எல்லாவற்றையுமே செய்யக் கூடியதாகக் குரங்கு இனத்தைப் படைத்திருக்கலாந்தான். ஆனாலும் அந்த ஓவியன் குரங்கின் செய்கையைக் கடவுள் தனக்குத் தந்த படிப்பினை என்று ஏற்றுக்கொண்ட மாதிரி மனிதன் குரங்கை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதன் இன்னும் திருந்திவிடவில்லை” என்றார். 

“என்றாவது ஒரு நாள் திருந்தித்தானே ஆகவேண்டும்?” என்றான் மூர்த்தி. 

அப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருப்பவனை நான் அதிருஷ்டசாலி என்றுதான் கருத வேண்டும்” என்றார் சிவராமையர். 

“குளிக்கப் போகலாமே கிட்டா” என்றார் சிவராமையர். “போகலாம்; டவல், சோப்பு எல்லாம் எடுத்து வருகிறேன்” என்று உள்ளே போனான் மூர்த்தி. 

உள்ளே கூடத்தில் யாரையும் காணவில்லை. குழந்தைகள், வயதாகாத பெரியோர்கள் எல்லோரும் எங்கெங்கேயோ அவரவர்கள் காரியங்களில் ஈடுபட்டிருந்தனர். சமையல் அறையில் ஏதோ பாத்திரங்கள் ஒன்றோடொன்று உராயும் சப்தம் கேட்டது. கொல்லையில் கிணற்றடியில் குரல்கள் கேட்டன. 

உலகத்தில் அவரவர்களுக்கென்று ஏற்பட்டிருக்கிற காரியங்களை உரிய காலத்தில் செய்து கொண்டிருந்தார்களானால் மனிதகுலம் உய்யாமல் என்ன செய்யும்? 

மனித குலம் உய்வதில் நம்பிக்கை வைப்பவனை அதிருஷ்டசாலி என்றார் சிவராமையர். 

அதாவது மனித குலம் உய்யாது, உய்யவே உய்யாது என்று அவர் கருதுகிற மாதிரி தோன்றியது. 

ஏன் அப்படி? 

இத்தனை காலமும், மண்ணில் மனிதன் தோன்றிய காலம் முதலாக, கண்டிருக்கிற கரைகள் எல்லாம், பட்டிருக்கிற ஆசையெல்லாம் வியர்த்தந்தானா? அர்த்தமற்றவைதாமா? 

சாத்தனூர் சர்வமானிய அக்கிரஹாரத்திலே நேர்மையான பாதையிலே வாழ்க்கை நடத்திய சிவராமையர் இப்படிச் சொன்னால்? 

இந்த நம்பிக்கையின்மை எதனுடைய சின்னம்? 

மனிதனுடைய வாழ்க்கை வழி எங்கே நேர்ப்பாதையில், தருமமும் நியாயமும் தழைக்கச் சென்றுகொண்டிருக்கிறது என்று சற்று முன் மூர்த்தி எண்ணினானா, அங்கே இந்த நம்பிக்கையின்மை எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? 

மனித குலத்தை ஆட்கொள்ள இருந்த அழிவுச் சக்திகளின் சின்னமா இந்த நம்பிக்கையின்மை 

நல்லது என்பதிலும் நியதி என்பதிலும் நேர்மை என்பதிலும் நம்பிக்கை இருந்ததே சிவராமையருக்கு? 

உடன் இருந்தவர்களில் வேறு யாருக்கும் நம்பிக்கை இல்லை இவற்றில், என்பதால் அவருக்கு மனித குலத்திலேயே நம்பிக்கை இல்லாது போய்விட்டதா? 

பின் என்ன? 

தனக்கு மட்டும் நம்பிக்கை இருந்ததா? ‘ஏன் இருந்தது? எப்படி வந்தது அந்த நம்பிக்கை?” என்று தன்னையே கேட்டுக் கொண்டு மாடிப் படி ஏறினான் மூர்த்தி. 

மாடியில் பெட்டி திறந்தபடியே இருக்க மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் அவன், வந்த காரியத்தை மறந்துவிட்டு. 

மனிதனுடைய சரித்திரம் என்பது என்ன? 

அந்தச் சரித்திரத்தின் முடிவுதான் என்ன? 

எவ்வளவு தீர்க்கதரிசிகள், ஆசாரியர்கள் எந்த எந்தக் காலங்களில் எங்கெங்கெல்லாம் தோன்றி என்ன என்ன சொல்லியிருக்கிறார்கள்? 

நம்பத்தகுந்த விதமாகக் கூறியிருக்கிறார்கள். ஏதோ மனிதன் தன் அறிவினாலும் அறிவுக்கு அப்பாற்பட்ட வேறு ஏதோ ஒன்றினாலும் அனுமானிக்கக்கூடிய வகையிலே கொஞ்சம் சொல்லியிருக்கிறார்கள்; அவ்வளவுதான். 

இதோ இதுதான் உண்மை’ என்று கூற யாரும் துணியவில்லை. 

துணிந்த சில இடங்களிலும் நன்மை பயப்பதற்குப் பதில் இப்படி அடித்துக்கூறிய உண்மை, மனித குலத்துக்குத் துன்பத்தையே விளைவித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த உண்மை உண்மையாக அதிக காலம் ஆட்சி செலுத்தவில்லை. 

உண்மைக் கடவுள் தன் தன்மையை, தன் சுயசொரூபத்தை ஏன் ஒளித்து வைத்துக்கொள்ள வேண்டும்? 

எல்லோரும் காண, கண்டு களிக்க, களித்துப் பருக, ஏழைக்கு எளியவனாக, அறிவிலிக்கும் அறிவுதரக்கூடியவனாக ஏன் அவன் நம் மிடையே வருவதில்லை? 

‘மனிதகுலத்தின் நல்லகாலம் கடந்து விட்டது; இனி இல்லை’ என்று நம்புகிறவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். மனிதர்களிடையே கடவுளும் நடமாடிய காலம் உண்டு; கலி முற்ற முற்றக் கடவுள் நகர்ந்து விட்டார்’ என்று. 

நகர வேண்டிய அவசியம்? 

சென்றுவிட்ட காலமும் வரப்போகிற காலமும் நிகழ்கின்ற காலத்திலே சந்திக்க வேண்டாமா? 

அப்படிச் சந்திக்காவிட்டால் நிகழ்காலம் ஏது? 

கலி முற்றுவது மனிதனால்தான் என்றால், கலி மாறுவதும் மனிதனால்தானே ஏற்படவேண்டும்? 

கடவுளையோ அல்லது அந்தப் பெயர் பிடிக்காவிட்டால் மனித குலத்துக்கு நன்மை செய்யக்கூடிய ஒரு சக்தியையோ மனிதர்களுக்கிடையே ஆவிர்ப்பவிக்கச் செய்யவேண்டியது யாருடைய கடமை? 

மனிதர்களுடைய கடமையே அல்லவா அது? 

மனிதர்களுடைய சிந்தனைகள், உலக அரங்கிலே நடத்துகிற நாடகங்களுக்குத்தானே நாம் சரித்திரம் என்று பெயர் கொடுக்கிறோம்? ஹிட்லர் ஒரு கேலி நாடகம் நடத்திவிட்டு மறைந்து விட்டான். 

கேலி நாடகம் என்று அது சிலருக்குப் படாமல் இருக்கலாம். நாடகம் என்கிற மட்டில் ஒப்புக்கொண்டு விடுவார்கள். 

அணுகுண்டும் ஸ்டாலினும் அடுத்த நாடகத்துக்கு அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருந்தார்கள் என்று தோன்றியது மூர்த்திக்கு 

அடுத்த நாடகத்தின் முடிவு எங்கே? ஆரம்பம் எங்கே? 

இறந்ததெல்லாம் இறந்ததுதானா? 

நிகழப்போவதெல்லாம் நிகழப் போவது மட்டுந்தானா?

இரண்டும் இன்று, இப்போது, இவ்விநாடியில் இல்லையா

இல்லையானால் இருக்கச் செய்யவேண்டியது அவசியமா இல்லையா? 

எப்படிச் செய்வது? 

யார் செய்வது? 

நம்பிக்கையே அற்றுப் போனவர்கள் எப்படி, என்ன, செய்ய முடியும்? 

“என்ன செய்யணும் இப்போ?” என்று கேட்டுக்கொண்டே சிவராமையர் மாடிக்கு வந்த பிறகுதான் மூர்த்திக்குப் புரிந்தது தான் தனது சிந்தனை வேகத்தில் இரைந்து பேசிவிட்டது. இருந்தாலும் சிவராமையர் பூனைபோல அவ்வளவு மெதுவாகவும் மாடிப்படி ஏறி வந்திருக்கக் கூடாது தான்! 

“பெட்டியைத் திறந்து வைத்துக்கொண்டு என்ன யோசனையில் ஆழ்ந்துவிட்டாய்?” என்றார் மீண்டும். 

பதில் சொல்லாமல் இருந்துவிடுவது என்றுதான் முதலில் நினைத்தான் மூர்த்தி, பிறகு தன் சிந்தனையைச் சொல்லத்தான் சொல்லுவோமே என்று சொன்னான் இதுதான் எனக்கு யோசனை; நம்பிக்கையற்றுப் போய் விட்ட மனிதர்கள் நம்மிடையே அதிகமாக இருக்கும்போது எப்படி உலகம் இந்தப் படுகுழியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறப்போகிறது என்கிற யோசனை எனக்கு” என்றான். 

‘அடே கெடுத்தாயே!” என்ற சிவராமையர் சிரித்தார். ‘உலகம் படுகுழியில் விழுந்துவிட்டதைப்பற்றியும் அது எப்படி முன்னேறும் என்பது பற்றியும் நீயும் நானும் கவலைப்பட வேண்டியதில்லை. அது குழியில் விழும்; தானாக எழுந்திருக்கும்; தானாகவே வைத்தியம் செய்து கொள்ளும்; தானாகவே முன்னிலும் அதிவேகமாக நடக்கும்; நடந்துவிட்டு மீண்டும் ஒரு படுகுழியில் விழும். நீ அதைப்பற்றிப் பிரமாதமாகக் கவலைப்பட ஆரம்பித்து விடாதே! அதற்கு அப்புறம் நீ மீளமுடியாது” என்றார் சிவராமையர். 

அவர் கேலி செய்வதன் அர்த்தம் என்ன என்று அவர் முகபாவத்திலிருந்து கண்டுகொள்ள முயன்றான் மூர்த்தி. முடியவில்லை. பெட்டியிலிருந்து சோப்புப் பெட்டியையும் ஒரு டவலையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். படி இறங்கி வாசலுக்கு வந்தார்கள். 

சிவராமையர் வீட்டுக்கு நேர்எதிர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே ஒரு பெண், வயசு இருபதுக்குள்தான் இருக்கும், ஒரு கூடைக்காரியிடம் ஏதோ பேசிக்கொண்டு நின்றவள், இவர்கள் வெளியே வந்ததும் அவசரமாக உள்ளே போய் விட்டாள். 

சிவராமையர் மூர்த்தியைக் கேட்டார். “அந்தப் பெண்ணைப் பார்த்தாயா கிட்டா?” என்று. 

“பார்த்தேன்” என்றான் மூர்த்தி. பிறகு தான் விடியற் காலையில் கீழே இறங்கி வந்தபோது பார்த்த பெண் உருவம் அவளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொன்னான். 

சிவராமையர், ‘அந்தப் பெண்ணுக்குங்கூட வாழ்விலே நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது” என்றார். 

“அப்படியென்றால்? “அந்தப் பெண்ணுக்கு வயது ஏழெட்டு இருக்கும்போது கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். அவள் கணவன் இரண்டொரு வருஷங்களில் இறந்துவிட்டான். ஆயுள் பூராவும் அவள் கணவன் இல்லாமலேயே கழிக்கவேண்டியவள்.” 

“அடடா! அப்படியா?” என்றான் மூர்த்தி. 

“அவளைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நமது பரிதாபத்துக்கு அர்த்தமோ பலனோ கிடையவே கிடையாது. இந்தச் சமூகத்தில் மனிதனுக்கு நினைவு தெரிந்த நாளாக இந்த மாதிரி பரிதாபப்படக்கூடிய நிலைமையில் ரொம்பப் பேர் இருந்திருக்கிறார்கள்” என்றார் சிவராமையர். 

“நீங்கள் இன்று இப்படிச் சொல்வது அழகில்லை” என்றான் மூர்த்தி. 

“இதற்குப் பரிகாரம் தேடேன். தேடிப் பிடி. என்ன ஆகப் போகிறது என்கிறாய்? இந்த மாதிரியான பரிதாபக் காரணங்கள் ஒழிந்து விடும். வேறு ஒரு விதமான அவஸ்தை வந்து புகுந்து கொண்டுவிடும்” “அதற்காக இது இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதா?’ என்று கேட்டான் மூர்த்தி, ஆத்திரமாக. 

அவனுடைய ஆத்திரத்தைக் கண்டு சிரித்தார் சிவராமையர். “உன் ஆத்திரம் உனக்குப் பெருமை தருவதாக இருக்கிறது. எனக்கும் திருப்திதான். பொறு. இதற்கு வழி எப்படித் தேடுவாய்? எனக்குத் தெரிகிறது; ‘விதவா விவாகம் செய்து கொள்ளலாம்’ என்று சொல்லுவாய். சரி; விதவாவிவாகம் அநுமதிக்கிற சமூகங்களிலே பெண்களைப் பற்றிய வரையிலே வேறு பயங்கரமான, பரிதாபகரமான பிரச்னைகள் வந்துவிடுகின்றது அல்லவா?” 

“அது சரி, ஆனாலும் இந்தமாதிரி, பரிதாபகரமான விஷயத்திலே அவனவன் யோசித்து ஏதாவது செய்யத்தானே வேண்டும்? இதுமாதிரி வேறு பல ரகமான பிரச்னைகள் வேறு பல சமூகங்களில் உண்டு என்பதற்காக, நாம் சும்மா இருந்து விடுவதா? நம் ஆண்மைக்கு அடுக்குமா அது?” என்றான் மூர்த்தி பதற்றமாக. 

“உன் ஆண்மை என்ன செய்ய முடியும்,கிட்டா? ஒரு விதவையை வேண்டுமானால் நீ மணந்துகொள்ளலாம். இந்தத் தெருவில் இதே போலச் சற்றேறக்குறைய இதே வயசில் இன்னும் ஒரு விதவை இருக்கிறாள். இந்த ஊரிலே இன்னும் நாலைந்து பேர் இருப்பார்கள். தேசத்திலே நூற்றுக்கணக்கில் இருப்பார்கள்” என்றார் சிவராமையர். 

“நீங்கள் கணக்கெடுக்கும்போது எனக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த மாதிரி ரத்தம் கொதிக்கிற ஆசாமிகள் நூற்றுக்கணக்கில் அகப்பட மாட்டார்கள் என்கிறீர்களா?” என்றான் மூர்த்தி. 

“அகப்படுவார்கள், அகப்பட்டு? இப்படி மணம் செய்து கொள்கிற வாலிபர்கள் உயிர் இழக்காமல் இருக்க வேண்டும் என்று யாராவது சட்டம் செய்ய முடியுமா?” 

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதே புரியவில்லை” என்றான் மூர்த்தி. 

“இந்தப் பங்கஜத்தையே எடுத்துக்கொள். இவள் கணவனை இழந்துவிட்டாள். வாழ்வில் சுகத்தையே அறியாமல் ஐம்பது வருஷமோ அறுபது வருஷமோ இருந்துவிட்டுச் சாகத் துணிவு கொள்கிறாள். வேறு வழியில்லை என்று ஞாபகம் இருக்கும் வரையில் அவள் இப்படியே வாழ்ந்துவிடுவாள். நல்ல வாழ்வு: ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள், பிறர் போற்ற, பிறருடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு வாழ்ந்து விடுவாள். வேறு வழியுண்டு. நீ இப்படி வேண்டாம். நான் உன்னை மணந்து கொள்ளுகிறேன்’ என்று ஓர் ஆண்சிங்கம் வருவதாக வைத்துக்கொள். அவனை நம்பி, இறந்துவிட்ட தன் ஆசைகளை அவள் உயிர்ப்பித்துக்கொள்கிறாள். மறுபடியும் அவள் வாழத் தயாராகிறாள். ஆனால் ஒரு தரம் ஆனமாதிரி மறுபடியும் ஆகாது என்கிற நிச்சயம் ஏது? இரண்டு வருஷ வாழ்வுக்குப் பிறகு புதுக்கணவனும் போய்விடுகிறான் என்று வைத்துக் கொள்….” என்று சிவராமையர் சொல்லும்போது மேஜர் மூர்த்தி சற்றுக் கோபமாகவே குறுக்கிட்டான். “அப்படித் தான் நடக்கும் என்று நீங்கள் நிச்சயமாகவே சொல்லிவிடுவீர்கள் போல் இருக்கே” என்றான். 

சிவராமையர் சிறிது தயங்கினார். பிறகு கேட்டார்: “கிட்டா! உனக்கு ஜோசியத்திலே நம்பிக்கை உண்டா?” என்று. 

“ஹிட்லருக்குங் கூடத்தான் ஜோசியத்தில் நம்பிக்கை இருந்தது. என்ன பலன்? ஜோசியம் உண்மையா என்பதுதானே பிரச்னை?’ என்றான் மூர்த்தி, 

“அதுதான் கேட்கிறேன். ஜோசியம் என்பது உண்மை என்று உனக்குத் தோன்றியதுண்டா?” 

“மனிதனுடைய அறிவுக்கு எட்டாத எத்தனையோ விஷயங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக ஜோசியமும் இருக்கலாம். ஆனால் இன்று, நடைமுறையில் நாம் பார்க்கிற ஜோசியக்கலை நம்பிக்கை தருவதாக இல்லை” என்றான் மூர்த்தி. 

“அது போகட்டும். விதி என்பதில் நம்பிக்கை உண்டா உனக்கு?” என்றார் சிவராமையர். 

“இதிலெல்லாம் நம்முடைய நம்பிக்கை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? தெரியாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது” என்றான் மூர்த்தி. 

“நீ உலகெலாம் சுற்றிவந்திருக்கிறாய்; சரிதான்; மனிதன் மிருக மாகிச் சஞ்சரிக்கிற போர்க்களங்களையும் பட்டாளங்களையும் பார்த்திருக்கிறாய். சரிதான். ஆனால் மனிதன் மனிதனாக மகத்தான துக்கங்களை அநுபவிப்பதைப் பார்த்ததில்லை; உன் மட்டில் அநுபவித்ததும் இல்லை” என்றார் சிவராமையர். 

மேலே என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தான் மூர்த்தி, பொறுமையற்றவனாக. 

சிறிது நேரம் மௌனமாக இருந்தார் சிவராமையர். பிறகு, “இதோ பங்கஜத்தின் தகப்பனார் வருகிறார் வெளியே. பார்;கிழவர். தன் பெண்ணின் விதவைக் கோலமும் கஷ்டமும் விதி என்பதை எண்ணி அவரால் சகித்துக் கொள்ள முடிகிறது. கடவுள் தந்தார் இன்பம், கடவுள் தந்தார் துன்பம் என்று, விதியின் பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பது மகத்தான ஒரு மனித சாதனை!” என்றார். 

“காவேரிக்குப் போய்க் கொண்டே பேசலாம். அப்புறம் ரொம்ப நேரம் ஆகிவிடும். அம்மாமி கோபித்துக் கொள்வாள்” என்றார் சிவராமையர். 

இருவரும் ஆளோடியை விட்டு இறங்கித் தெருவிலே கிழக்கு நோக்கி நடந்தார்கள். 

மனித வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது விதி என்கிற சித்தாந்தம். 

உண்மைதான். 

ஆனால் விதியின் பெயரால் சகித்துக் கொள்ளப்படும் எண்ணிக்கையற்ற துன்பங்களுக்கு வேறு மாற்றே கிடையாதா? 

குற்றமற்ற சமூக வாழ்வைச் சமைப்பதென்பது மனிதனால் ஆகாத காரியமா? 

எப்படிப்பட்ட சமூகத்தை வகுத்துக் கொண்டாலும் அதிலே ஒரு பகுதி இன்னல்களுக்கும் இழிவுகளுக்கும் தீமைகளுக்கும் அடிமைப் பட்டுத்தான் கிடக்கவேண்டுமா? 

மனிதனால் பூரணமான அறிவோடு கூடிய வாழ்க்கை இன்னல்களற்ற, தீமைகளற்ற, இழிவுகளேயற்ற வாழ்க்கை – நடத்த இயலாதா? 

“விதியைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விட்டாயாக்கும் நீ” என்று கேலி செய்தார் சிவராமையர். 

மூர்த்தி பதில் அளிக்கவில்லை. 

சிவராமையர் ஒரு வீட்டைக் குறிப்பிட்டுக் காட்டினார். “இதோ இந்த வீட்டைப் பார்த்துக்கொள். இதனுடைய சொந்தக்காரர்களைப் பற்றி நான் கொஞ்சம் சொல்கிறேன் கேள்” என்றார். 

அவர் சுட்டிக் காட்டிய வீட்டைப் பார்த்தான் மூர்த்தி.

– தொடரும்…

– ஒரு நாள் (நாவல்), முதற் பதிப்பு: 2004, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *