ஆண்களே அப்படித்தான்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 2,242 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பூம், பூம்!” என்ற கார் ஹாரன் சப்தம் கேட்டு, தர்வான் வந்து ‘கேட்’ கதவைத் திறந்ததும் கார் உள்ளே புகுந்து பங்களா வாசலில் நின்றது. 

டைரெக்டர் குஞ்சிதபாதம் காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றார். 

கைக்குட்டையில் எம்பிராய்டரி வேலை செய்வதில் ஈடு பட்டிருந்த ரமாதேவி, பூட்ஸ் காலடி ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்துவிட்டு, எழுந்து வரவேற்று ஆஸனத்தில் அமரச் செய்துவிட்டுத் தானும் உட்கார்ந்தாள். 

டைரெக்டர் மிகவும் மகிழ்ச்சியுடன், “மிஸ் ரமாதேவி, படத்தின் வெற்றிக்கு உங்கள் நடனம்தான் பிரதான காரண மாக மதிக்கப்படுகிறது…..” என்றார். 

“வெறுமனேயாவது சொல்லாதீர்கள், புரூரவஸாக நடித்த ராவையும், ஊர்வசியாக நடித்த கலாவதியையும் விடவா நான்……” 

‘முழுதும் கேட்குமுன் இடைமறித்துப் பேசினால் நான் என்ன செய்கிறது ?……” 

“சரி, சரி. சொல்லுங்கள்……” 

“புரூரவஸும், ஊர்வசியும் இன்னொன்றும் பற்றி எனக்கு அக்கறையில்லை. உங்களை கதாநாயகியாகப் போட்டு நானே கதை வசனம் எழுதி, ஒரு படம் எடுக்கப் போகிறேன்……’ 

“சந்தோஷம்; இப்பொழுது எங்கிருந்து வருகிறீர்கள் ?”

“பாரதி டாக்கிஸிலிருந்து”. 

“சினிமா பார்க்கப் போனீர்களா?” 

“இல்லை; பொதுஜன அபிப்பிராயம் அறிவதற்காக- காட்சி முடியும் தருணத்தில் கொட்டகை வாசலில் நின்று…” 

“ஓஹோ! அப்படியா ?” என்று கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “மணி பத்தரையாகி விட்டதே, இருங்கள்; இதோ வருகிறேன்” என்று எழுந்தாள் ரமாதேவி. 

“பரவாயில்லை, வீட்டில் சாப்பாட்டிற்குக் காத்திருப்பார்கள். போகிற வழியில் நீங்களிருப்பதால் மனதில் தோன்றிய தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” 

“அதனாலென்ன? நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரப் போவதில்லை… மேலும் எங்கள் வீட்டிலெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா?” என்று கண்களை சிமிட்டி, முகத்தை ஒரு மாதுர்ய அபிநயத்தில் வலித்துக் காட்டினாள். 

சிரித்துக்கொண்டே நாற்காலியை விட்டு எழுந்து பீரோவைத் திறந்து சிற்றுண்டி சிலவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து, பிளாஸ்கிலிருந்து காப்பியை டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வந்து மேஜைமீது வைத்து, “சாப்பிடுவீர்களல்லவா?” என்று பார்வையைக் குறுக்கே வெட்டி நின்றாள் ரமாதேவி. 

டைரெக்டர் தம்மை மறந்தவராக, அவளது கன்னத்தை லேசாகத் தட்டிவிட்டு, “இவ்வளவு பொல்லாத்தனம் உனக்கு எப்பொழுது வந்தது?” என்று கேட்டார். 

“பொல்லாத்தனம் புதிதாக வரவில்லை, நான் பிறக்கும் போது என்னுடனேயே பிறந்து விட்டதே!” 

”பொய்! ஸ்டுடியோவில் ஒத்திகையின் பொழு தெல்லாம், பெட்டிப் பாம்பாக இருப்பாயே நீ……” 

“அது காரியார்த்தமாக;… இது தான் என் சுயரூபம்…” 

“ஊஹும், அப்படியா ? இருக்கட்டும் பார்ப்போம்…”

“அப்படியென்றால்?” 

“அது அப்புறம் தெரியும், சாப்பாடு இருக்கிறதா?”

“இல்லை; இருந்தாலும் போடமாட்டேன். டிபன் சாப்பிடுங்கள்…” 

“வேண்டாம்.” 

“ஏன்?” என்று வாஸ்தவமாகவே பிரமித்துப்போய் கேட்டாள் ரமாதேவி. 

“விலைக்கு வாங்கிய இதெல்லாம் யாருக்கு வேண்டும்?” 

ஒரு வினாடி ஒன்றும் விளங்காமல் விழித்துக்கொண்டு நின்றான் ரமாதேவி. மறுக்ஷணம் ஊகித்துக் கொண்டவள் போல, “அவ்வளவு நான் புண்ணியம் செய்யவில்லையே, ஸார்?” என்றாள் முகச் சுணக்கத்துடன். 

“ஏனில்லை? நிச்சயமாக நீ பாக்கியசாலிதான். நாளை காலையில் பத்து மணிக்கு வருவேன். உன்னிடம் ஒரு இரண்டு மணிநேரம் படக் கதையைப் பற்றி யோசிக்க வேண்டும். இன்று மாதிரி சாப்பாடு இல்லையென்று சொல்லி விடாதே, என்ன?” என்று எழுந்தார் டைரெக்டர். 

“புறப்பட்டு விட்டீர்களா?” என்று ரமாதேவியும் எழுந்தாள். 

அவளுடய குரலில் தொனித்த ஒரு சுக வேதனையும், பரவச உணர்ச்சியும் டைரெக்டரை பித்தனாக்கின. மையல் மயக்கத்துடன் ஊடுருவிய ஒரு பார்வையுடன் அவளையே பார்த்துக்கொண்டு நின்றார் அவர். 

ரமாதேவி சட்டென்று நினைவடைந்தவளைப் போல காப்பி டம்ளரை எடுத்து அவர் கையில் வைத்து, “இது விலைக்கு வாங்கியதல்ல ; எனக்காக என்று நான் தயாரித்தது” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள். 

புல்லரித்துப் போன நிலைமையில் அதைப் ப்ரீதியுடன் உறிஞ்சிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டார் டைரெக்டர். 

அவர் போன திசையையே பார்த்துக் கொண்டு மெய் மறந்து நின்றாள் ரமாதேவி. 


தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை வீரிட்டு அழுதுகொண்டு எழுந்தது. 

“த்ஸொ த்ஸொ!” என்று படுக்கையிலிருந்தபடியே தொட்டிலை ஆட்டி விட்டாள் கௌரி. “குழந்தையா இது; இரவும் தூக்கமில்லே, பகலும் தூக்கமில்லே, பிராணனை வாங்கிண்டு…பீடை!” என்று அலுத்துக் கொண்டே எழுந்து குழந்தையை எடுத்துப் பக்கத்தில் விட்டுக்கொண்டு படுத்தாள் கெளரி. 

அழுகுரலும் பேச்சு சத்தமும் கேட்டு விழித்துக்கொண்ட ருக்மணி அம்மாள், “ஏண்டி, உன் ஆத்துக்காரர் வந்தாச்சோ ?” என்று கேட்டாள். 

“ஆத்துக்காரரையும் காணோம். ஒண்ணும் காணோம்…” என்று முனகினாள் கௌரி. 

“ஒரு நாளைப் போல மணி பதினொண்ணாகிறது வரத்துக்கு; நிசி வேளையிலே திங்கற சோறு உடம்பிலே தான் ஒட்டுமா? என்ன உத்தியோகம், என்ன சம்பாத்தியம் வேண்டியிருக்கு!” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே குழறினாள், கௌரியின் தாயார் ருக்மணி அம்மாள். 

“சினிமாக் கொட்டகை வாசல்லே போய் நின்னுண்டு கிடக்கட்டும்…”

“எதுக்கு?” என்று அதிசயித்தாள் தாயார். 

“எதுக்குன்னா, படத்தைப் பத்தி அபிப்பிராயம் சேர்க்கணுமாம். அதிலேயிருந்து அடுத்த படத்தை எடுக்கத் தோது தெரியுமாம். படத்திலே அந்தத் தொம்பக் குட்டி டான்ஸ்தான் பிரமாதப் படறது!” 

“தொம்பக் குட்டியா?” 

“ஆமாண்டி, போன தடவை நீ வந்தப்போது நம்ப ஆத்து வாசல்லே ஆடினாளோல்லியோ…” 

“ஆமாம்.”

“அந்த குட்டிதான்! நீயும் நானும் அன்னிக்குக் கீழே யிருந்து வேடிக்கை பார்க்கலையா ? என் அகத்துக்காரர் கூட மாடியிலேருந்து வச்ச கண் வாங்காமல் பார்த்தாரே! சினிமா விலே ஆடற கண்றாவி டான்ஸைவிட இது தேவலைன்னே நீ. அந்தக் குட்டியைப் பிடிச்சுப் படத்துக்கு வேண்டிய டான்ஸுக்கு ஏற்பாடு பண்ணலாமேன்னு சட்டுன்னு உன் மாப்பிள்ளைக்குத் தோணித்தாம்.” 

“அப்படின்னா நம்ப படத்திலே ஆடற குட்டி அவதானா?”

“ஆமாம், ஆமாம், ஆமாம்! ராமியாக கழைக் கூத்தாடின தொம்பச்சி மிஸ். ரமாதேவி ஆயிட்டா இப்போ !” 

“போடு சக்கை! பிச்சை எடுக்கிற தொம்பச்சிக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தையாடீ !” அதுவரை பேசாமல் சோபாவில் படுத்திருந்த அவள் தம்பி, “அதிருஷ்டம்னா அப்படி இப்படிப்பட்ட அதிருஷ்டமில்லே! அத்திம்பேர் எடுக்கப்போற அடுத்த படத்திலேகூட அவதான் ராணி! படத்திலே மட்டுமில்லாமே….அத்திம்பேருக்குக் கூட அவதான் ராணி…” 

“என்ன?” என்று பதறி எழுந்து கேட்டாள் கௌரி.

“என்னடா உளர்றே?’ என்று இடை செருகினாள் தாயார். 

“நான் ஒண்ணும் உளரல்லே! நடக்கிறதைத் தான் சொல்றேன்… அத்திம்பேர் அடிக்கடி, அவ வீட்டுப் பக்கம் போறதை நான் கவனிக்கிறேன்…கார்சத்தம் கேக்கறது…எழுந்து கதவைத்திற” என்றான் தம்பி. 

“நீதான் போய் திற வேண்டா” என்று கூறிவிட்டு, பொத்தென்று படுக்கையில் சாய்ந்தாள் கௌரி அம்மாள். 

உள்ளே உடைகளை மாற்றிக் கொண்டே “பசி குடலைத் தின்னுண்டிருக்கு, தட்டலம்பி வை, கௌரி” என்றார் டைரெக்டர். 

பதில்பேசாமல் எழுந்து சென்று தட்டுவைத்துப் பறிமாறினாள் கௌரி. 

சாப்பாடு முடிந்து படுக்கைக்கு வந்ததும், வெற்றிலையைக் கொடுத்துவிட்டு, “ஒண்ணும் வேண்டாமே, படுத்துக்கப் போகட்டுமா?” என்று சுவற்றைப் பார்த்துக்கொண்டு கேட்டாள் கௌரி. 

“எங்கே படுத்துக்கப் போறடீ ?” என்று கிண்டலாகக் கேட்டார் குஞ்சித பாதம். 

“கூடத்திலே தான்.” 

“ஏன்?” 

“இனிமேல் நான் அங்கேயேதான்….” என்று மேலே பேச முடியாமல் துக்கம் நெஞ்சையடைக்க ஒரு அடி எடுத்து வைத்தாள் கௌரி. 

“இந்தா,இந்தா, இங்கே வா” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு, “என்ன சேதி?” என்பது போல சைகை செய்து கேட்டார். 

பதில் சொல்லாமல் கண்ணீர் உதிர்த்துக் கொண்டு நின்றாள் கௌரி. 

குஞ்சிதபாதத்திற்குக் கொஞ்சம் கோபம் வந்தது. “சொல்ல இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம்… வரவர நீ நடந்து கொள்கிற மாதிரி ஒன்றுமே நன்றாக இல்லை…” என்று கொஞ்சம் கடும் குரலில் சொன்னதும், கௌரிக்கும் ஆத்திரம் வந்துவிட்டது. 

“நீங்கள் நடந்துகொள்ளுகிற மாதிரி மட்டும் நன்றாக இருக்கிறதோ? – ஆயிரம் சத்தியம் செய்து விட்டு?” என்று அழுது கொண்டே கேட்டாள் கௌரி. 

“சத்தியம் தவறி நான் என்ன செய்து விட்டேன்?” 

“உங்கள் மனச்சாட்சியையே கேட்டுப் பாருங்களேன்?”
 
“எனக்குத் தான் மனச்சாட்சி என்பதே கிடையாது என்று ஊர்ஜிதமாகி விட்டதே உன் கேள்வியில்?” 

“பேசக் கற்றவர் நீங்கள். மொத்தத்தில் ஒரே வார்த்தையிலே முடிச்சுடறேன். இப்போ எனக்கு இருக்கிற கௌரவத்திலே இருந்து இன்னும் கீழே போகாமல், என் மனசைப் புண்படுத்தாமல் போக்யம், ஆசாபாசமெல்லாம்…அடைய ரமாதேவி கொடுத்து வைச்சிருக்காள். குசாலா அனுபவிக்கட்டும்…” என்று நிறுத்தினாள் கௌரி. 

”ஊம், இவ்வளவுதானா?” என்று கோபம் கொண்டவர் போல வினவினார் குஞ்சிதபாதம். 

பெண்மையின் கர்வத்துடன் நின்று நிமிர்ந்து கண்களை மலர்த்தி கணவனைப் பார்த்தாள் கௌரி. 

“இதோ பாருங்கள். நான் பெண். பொறுக்க-எது நேர்ந்தாலும் சகிக்க வென்று – பிறந்தவள்; சகிப்பேன். அதோடு எனக்கும் கொஞ்சம் ஞானம் இருக்கிறது; என்ன வென்கிறீர்களா? சூழ்நிலையே மனுஷனை ஆக்குவதும், அழிப்பதும் என்கிற தத்துவம் எனக்குத் தெரியும், ஆனால்…” என்று நிறுத்தினதும் மார்பைத் தட்டிக் கொண்டு கண்களில் தணல் வீச “என் கை பிடிச்ச ஆண்பிள்ளை உத்தமன், நித்தியா அநித்தியத்துவம் தெரிந்த அறிவாளி; மானுஷிக உண்மை தெரிஞ்ச விவேகி என்று இறுமாந்து – மண்டைக் கர்வம் பிடித்துத் திரிந்தேன். இன்னியிலே யிருந்து – எல்லாரையும் போல என் ஆம்பிடயானும் ஒரு ஆண் பிள்ளை என்று எண்ணி-மனசைப் பட்டினி போட்டுக் கொல்லணும். அது என்னால் முடியும்… அவ்வளவுதான் விஷயம். பேசினது தப்பாக இருக்கலாம். நீங்கள் தாலி கட்டின பெண்டாட்டி என்ற இரக்கத்தோடு அதை மன்னிச்சுடுங்கோ…இன்னிக் கோடே இந்தப் பிரச்னை சரி. இனிமேல் தலையெடுக்காது… நாழியாச்சு தூங்குங்கோ…” என்று கூறி முடித்து விட்டு, அவரது பதிலுக்கு எதிர் பார்க்காமலே கதவை மெல்ல மூடிக் கொண்டு கூடத்திற்கு வந்தாள் கெளரி. 

வாழ்க்கைப் பிரவாகத்தில் ஆனந்தமாக அதுவரையில் நீந்தி விளையாடிக் கொண்டு வந்த குஞ்சிதபாதம் கண்மூடித்தனமாக ஊர்ந்து வந்து சுழலில் அகப்பட்டுக்கொண்டது போல உணர்ந்து திடுக்கிட்டார். கௌரியின் பொருள் பொதிந்த சொற்கள் ஒருபுறம் அவரைக் கொத்தி எடுத்தன. குஞ்சிதபாதத்தின் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் முதன் முதலாக சிக்கல் விழுந்தது!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *