பக்கத்து சீட் தேவதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 42,789 
 
 

பேருந்தில் என் பக்கத்து சீட்டில் வந்தமர்ந்த சிகப்பு நிற சுடிதார் தேவதையைப் பார்த்தவுடனே சட்டென்று மாறுது வானிலையாகி விட்டது எனக்கு. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே விட்டு அவளை கவனிக்க ஆயத்தமானேன். வேக நடையில் வந்திருக்க வேண்டும். மூச்சிரைத்தது அவளுக்கு. முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன. நான் பார்த்துக் கொண்டிருந்ததை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவளது செயல்கள் பின் வருமாறு இருந்தன. ஹேண்ட் பேக் திறந்து கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்துக் கொண்டாள். செல்போன் எடுத்து முகம் பார்த்தாள் (என்னைக் கேட்டாலே சொல்லியிருப்பேன்!). ஜன்னலுக்கு வெளியே அங்குமிங்கும் பார்த்தாள். எழுந்து தனது ஹேண்ட்பேகை மேல் தட்டில் வைத்தாள். கால் மேல் கால் போட்ட படி கைகளைக் கட்டி அமர்ந்து கொண்டாள்.

நான் கவனித்துக் கொண்டிருந்ததை, அவள் உள்மனது போட்டுக் கொடுத்திருக்க வேண்டும். திடீரென்று திரும்பி என்னைப் பார்த்தாள். நான் சுதாரித்து பார்வையை எதிரில் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மேல் திருப்பினேன். அவனது கண்களில் பொறாமைத் தீ கனன்று கொண்டிருப்பது கண் கூடாகத் தெரிந்தது. ‘‘என்னம்மா சீட் கிடைச்சுதா?’’ ஜன்னலுக்கு வெளியே பெண் குரல் கேட்டது. செல்போனில் மூழ்கியிருந்த அவள் (என்ன பெயரா இருக்கும்?) குரலுக்கு நிமிர்ந்து வெளியில் பார்த்தாள். நானும் அவளை காப்பி அடித்தேன். ‘‘ம். கிடைச்சது. உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்…’’ அவளது உற்சாகமான வார்த்தைகள் என்னைத் தாண்டி வெளியில் சென்றன. அங்கே நின்றிருந்தவர்கள் அவளது பெற்றோர்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.

‘‘ரிசப்ஷன் முடியறதுக்கு லேட்டாயிடுச்சும்மா…’’ அந்த மனிதர் தாமதமாய் வந்த காரணத்தை கெஞ்சலோடு சொன்னார்.‘‘ஓகே டாடி. அதான் உங்களை எதிர்பார்க்காம நானே கிளம்பி வந்துட்டேன்…’’‘‘உன் தம்பி கொண்டாந்து விட்டுட்டு போனானா இல்லியா?’’ -அப்பா.‘‘அவன்தான் கொண்டு வந்து விட்டான். இதோ வரேன்னு சொல்லிட்டு போயிருக்கான்…’’ ஜன்னலுக்கு வெளியே அங்குமிங்கும் பார்த்து அவனைத்தேடினாள்.‘‘அதுக்குள்ளே புதுசா என்ன வேலை வந்திருச்சாம் அவனுக்கு?’’ அப்பா வார்த்தைகளில் எரிச்சலை வீசியடித்தார்.‘‘என்ன பண்றது. வயசுப் பசங்க இல்லியா… அப்படித்தான் இருப்பாங்க. நாமதான் வந்துட்டோமில்ல…’’ அம்மா சமாதான கேடயத்துடன் அவரது எரிச்சலை எதிர்கொண்டார்.

‘‘எதுனா வாங்கிட்டு வரணுமா ப்ரியா?’’ அப்பா கேட்டார்.‘‘ம்ஹூம்…’’ தலையாட்டினாள். காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் அவள் தலையாட்டலுக்கு ஏற்ப ஆடியது.பெயர் ப்ரியா. ப்ரியா என்ற பெயர் கொண்டு எப்போதோ நான் எழுதி வைத்த கவிதைக்கு அப்போது கிடைக்காத வார்த்தைகள் எல்லாம் இப்போது வரிசை கட்ட ஆரம்பித்தன. அவர்களுக்கிடையே நான் இருந்தது அவளுக்கு (எனக்கும்) ஒரு மாதிரி சங்கோஜமாக இருப்பதை அவளது முகபாவனை உணர்த்தவே,‘‘நான் வேணும்னா எழுந்துக்கவா?’’ என்றேன்.

“நோ, தேங்க்ஸ்…’’ என்னைப் பார்க்காமலே வார்த்தைகளை மட்டும் எறிந்தாள். எதிரில் உட்கார்ந்திருந்தவன் பொறாமைத்துப்பாக்கியால் இன்னும் என்னை சுட்டுக் கொண்டே இருந்தான். ‘டேய், அவ உன் பக்கத்துல உட்காரலைனா அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்..?’எழுந்து போய் அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைக்க வேண்டும் போலிருந்தது எனக்கு.

‘‘லேடீஸ் சீட் ஒண்ணும் காலியா இல்லியா..?’’‘‘நோ மா. எல்லாருமே தம்பதி சமேதரா வந்திருக்காங்க. பிரிக்கிற பாவம் நமக்கெதுக்கு..?’’ செல்போனில் விரல்களை நடனமாட விட்டபடி அம்மாவுக்கு பதில் சொன்னாள்.அந்த அம்மாவின் வார்த்தைகளை போயும் போயும் இவன் பக்கத்திலே உட்கார்ந்திருக்கே என்பதாக பொருள் கொண்டு என்னை அவஸ்தைக்குள்ளாக்கவே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பேருந்து நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்த பேருந்தை நோக்கி பயணிகள் ஓடிக் கொண்டிருந்தனர். ப்ரியாவின் அம்மா, தன் கணவரிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். ப்ரியாவின் அப்பா என்னைப் பார்த்தபடி ஏதோ பதில் சொல்வது தெரிந்தது.

‘‘பார்த்து பத்திரம். நடுவில எதுனா பிரச்னைனா உடனே போன் பண்ணு…’’ ப்ரியாவின் அப்பா சொல்ல, அவள் அம்மாவும் அதையே ரிப்பீட்ட மறுபடி ப்ரியாவின் ஜிமிக்கி ஆடியது.

‘நடுவில பிரச்னைனு போன் பண்ணா காப்பாத்த பறந்து வருவாரோ’ என்ற எனது மைண்ட் வாய்ஸ் தடைப்பட்டது. ப்ரியாவின் அப்பா கூப்பிட்டார். ‘‘தம்பி…’’போலியாக வரவழைத்துக் கொண்ட பவ்யம் அப்பொழுது என் உடல் மொழியாக, ‘‘சொல்லுங்க…’’ என்றேன்.

‘‘நீங்க சென்னைதான் போறீங்களா?’’
‘‘நான் மட்டும் இல்லே. இந்த பஸ்சே சென்னைதான் போகுது!’’ புன்னகைத்தபடி பதிலளித்தேன். அவர் அவஸ்தையாய் சிரித்தார்.
‘‘பொண்ணை கொஞ்சம் பார்த்துக்குங்க…’’
‘‘ஓகே. டோன்ட் ஒர்ரி…’’ என் வார்த்தைகள் அவர்களுக்கு நிம்மதி அளித்தது போல் தோன்றினாலும் ப்ரியா அதை விரும்பாதவளாக கோப முகம் காட்டினாள். ‘கோபத்துல கூட இவ்வளவு அழகா நீ?!;

‘‘எல்லா இடத்துக்கும் நாங்களே வரமுடியாதேம்மா. அதான் தம்பிகிட்டே சொன்னோம்…’’ ப்ரியாவை சமாதானப்படுத்தும் விதமாக அப்பா சொன்னார்.அடுத்து ப்ரியாவின் அம்மா என்னைப் பார்த்த படி சொன்ன வார்த்தைகள் என் எண்ணங்களுக்கு விழுந்த சம்மட்டி அடியானது. ‘‘பக்கத்துல இருக்கிறவங்கதான் தாய் தகப்பனா இருந்து பார்த்துக்க வேணும்!’’ கண்டக்டர் விசிலடிக்க பேருந்து நகர ஆரம்பித்தது. பேருந்தின் கூடவே அவளது பெற்றோர் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள்.

‘‘நீங்க கிளம்புங்க…’’ என்ற ப்ரியாவின் வார்த்தைகள் காற்றில் கலந்து அவர்களை நோக்கி விரைய ஆரம்பித்தன. பஸ் திருப்பத்தில் திரும்பி அவர்களை மறைத்து விட்டாலும் ‘பக்கத்துல இருக்கிறவங்க தான் தாய் தகப்பனா இருந்து பார்த்துக்க வேணும்…’ அவரது வார்த்தைகள் மட்டும் காதருகில் ஒலித்துக் கொண்டிருக்க, நான் முதல் வேலையாகஅவளை விட்டு தள்ளி ஜன்னலோடு ஜன்னலாய் ஒட்டி அமர்ந்து கொண்டேன்.
ப்ரியா திரும்பி என் னைப் பார்த்துக் கேட்டாள்.

‘‘என் ஃப்ரண்டு வந்திருக்கார். நீங்க எதிர் சீட்ல மாறி உட்கார்ந்துக்கறீங்களா..?’’நான் எதிர்ப்பு ஏதும் காட்டாமல் ‘‘ஓகே…’’ என்றபடி தோள்களைக் குலுக்கிக் கொண்டு எழுந்தேன்.‘‘ஹாய் வினோத்… கமான்…’’ என்று உற்சாகக் குரல் கொடுத்தாள் ப்ரியா. யாரை இந்தப் பெண் அழைக்கிறாள் என்று நிமிர்ந்து பார்த்தேன்.எதிர் சீட் பொறாமைக்காரன்தான் அந்தக் குரலுக்கு எழுந்தான்.

அதிர்ச்சியுடன் நான் அவன் சீட்டுக்கு செல்ல, அந்த வினோத் விசிலடித்தபடி என் சீட்டில் ப்ரியாவோடு அமர்ந்து கொண்டான்.ப்ரியா அவன் கையோடு கை கோர்த்துக்கொண்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். வினோத் காற்றில் பறந்தபடி ப்ரியாவின் முகத்தில் வந்து விழுந்த தலைமுடியை ஒதுக்கி அவளோடு ரகசியம் பேச ஆரம்பித்தான்.‘பக்கத்துல இருக்கிறவங்கதான் தாய் தகப்பனா இருந்து பார்த்துக்கணும்…’ அந்தத் தாயின் சொற்கள் மட்டும் காற்றில் அங்குமிங்கும் அலைந்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

– ஆகஸ்ட் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *