பட்டால் தான் தெரியுமா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 13,420 
 

மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.!

எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப் போட்டுக் கொண்டு கோலம் போட ஆரம்பித்தால் அவள் கோலம் போட்டு முடிக்க இரவு மணி மூன்றாகி விடும்.

ரோடு முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டு இரவு முழுவதும் கோலம் போடுவாள்.

கோலம் போட்டு முடித்தவுடன் சாந்தி , வீடு கட்டப் போட்டிருக்கும் பெரிய பெரிய கருங்கற்களை தேடிப் பிடித்து கஷ்டப் பட்டு தூக்கி வந்து, கோலத்திற்கு சுற்றிலும் வேலி போல் வரிசையாக தெருவை அடைத்துக்கொண்டு அடுக்கி வைப்பாள்.

அவர்கள் வசிக்கும் காலனி ரோடு வழியாகத்தான், பக்கத்து தெருவாசிகள் மெயின் ரோட்டிற்கு நடந்தும், டூவீலரிலும் போவார்கள். அதனால் ரோட்டில் பெரிய கற்களை கொண்டு வந்து போடாதே! அது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று பாண்டியன் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்து விட்டான். சாந்தி கேட்பதாகத் தெரிய வில்லை!.

“ உங்களுக்கு என்ன தெரியும்?….விடிய விடிய கஷ்டப் பட்டு கோலம் போடுபவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்!..” என்று சொல்லி அவன் வாயை அடைத்து விடுவாள்.அதன் பின் பாண்டியன் அதைப் பற்றிச் சொல்வதில்லை!

ஆபிஸ் வேலையாக பாண்டியன் சென்னை போயிருந்தான். சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் விடியற்காலை நான்கு மணிக்குத் தான் கோவை வரும். அதில் வரும் பாண்டியன் ஸ்டேசனில் நிறுத்தி வைத்திருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு வீடு வர நாலரை மணியாகி விடும். அதனால் விடியற்காலை மூன்று மணிவரை வாசல் லைட்டைப் போட்டுக் கொண்டு சாந்தி நிம்மதியாக கோலம் போட்டாள்.அதன் பின் கற்களால் வேலி அமைத்து விட்டு, விளக்கை அணைத்து விட்டுப் போய் படுக்கும் பொழுது, மணி மூன்று முப்பது. அன்று அம்மாவாசை. தெரு விளக்கு வேறு எரியவில்லை.கும்மிருட்டு.

மணி நாலரை இருக்கும். “ஐய்யோ!…..அப்பா!…”.என்று சாந்தி வீட்டு வாசலில் பாண்டியனின் அலறல்!. விளக்கைப் போட்டுக் கொண்டு சாந்தி வாசலுக்கு ஓடி வந்தாள்..

அங்கே பாண்டியன் பைக்கோடு ஒரு கூரான கருங்கல் பக்கத்தில் விழுந்து கிடந்தான். அவன் தலையில் காயம் பட்டு தரை எங்கும் ரத்தம் பரவிக் கொண்டிருந்தது!

கஷ்டப் பட்டு முக்கி முணகி எழுந்து உட்கார்ந்தான் பாண்டியன்.

“ ஐயோ!…என்னங்க ஆச்சு?…”என்று பதறினாள் சாந்தி.

“ இருட்டில் பைக்கை தெரியாமல் ஒரு பெரிய கல் மேல் ஏற்றிவிட்டேன்! அது தடுக்கி கல் மேலேயே விழுந்து விட்டேன்!.”

“ச்சே!…சனியன் பிடிச்ச கற்கள்!..” என்று கோபத்தில் கல்லை ஓங்கி உதைத்த சாந்தி “ஐயோ!..” என்று அவளும் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்!

– 2014 ஜூலை 25-31 இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *