
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார்.
இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி கதை கட்டுரைகள் எழுதினார்.
தாய் தந்தையர் மாயாண்டியம்பலம், பொன்னம்மாள், தநதை வழி பாட்டன் பாட்டி ஆறுமுகம், கருப்பாயி, தாய் வழிப் பாட்டி, பாட்டன் நாகம்மாள் முத்தையா ஆகியோர் இவருக்கு இலக்கிய அறிவை ஊட்டியவர்கள்.
1967ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவரின் முதல் படைப்பான தீவிலி எனும் சிறுகதை தமிழ் முரசில் வெளியானது. அதனைத் தொடர்ந்து சிறுகதை, நாவல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தி நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
பெற்ற பரிசுகள் / விருதுகள்
- 1982-தென் கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் விருது
- 1999 – தமிழவேள் விருது
- 2004 – சிங்கப்பூர் இலக்கிய பரிசு.
- 2005 – அரசாங்கத்தின் கலாசார விருது
- 2013 – கரிகாலன் விருது
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:
- குருவிக் கோட்டம் – 2011
- பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்? – 2006
- சிங்கை மா இளங்கண்ணனின் சிறுகதைகள் 1, 2 – 2006
- சுற்றிப்பார்க்க வந்தவர் – 2004
- கண்ணில் தெரியுது வானம் – 2004
- இலட்சியங்களின் ஊனங்கள் – 2001
- தூண்டில் மீன் – 2001
- நினைவுகளின் கோலங்கள் – 1999
- உணர்வின் முடிச்சுகள் – 1993
- வைகறை பூக்கள் – 1990
- கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன – 1978
- சிங்கப்பூர் இலக்கியகளம் சிறுகதைகள் – 1977
- குங்குமக் கன்னத்தில் – 1977
- அலைகள் – 1976
- வழி பிறந்தது – 1975
அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:
இவர் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
என்னுரை – குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.
‘நன்மை எது? தீமை எது?’ என எடை போட்டு நல்வழிப்பட்டோர் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்.
வழி தவறி நடப்போர் சீரற்று, சிறப்பிழந்து அல்லலுறுகின்றனர். முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கொப்ப அவர்கள் செய்யும் அனைத்துமே கோணலாகிவிடுகின்றன. பாதை தவறி தவிக்கின்றனர்; தடுமாறுகின்றனர். சேற்றிலேயே உழன்று கண்ணீர் சிந்துகின்றனர் நல்லோர் சேர்க்கை இருந்தும் அவர்களின் நல்லுரையை ஒதுக்கிவிட்டு ‘காலம் வரும்’ என்று காத்திருக்கின்றனர்.
இவ்வகைப்பட்ட கதைமாந்தர்கள் இந் நூலிலே இடம்பெற்றுள்ள கதைகளிலும் உலவுகின்றனர்; சிங்கப்பூர்ச் சூழலில்!
இந்நூல் சிறப்போடு வெளிவர எல்லாவகை யாலும் உதவிய மறைமலை பதிப்பக உரிமையாளர் நட்புத்திரு இறைவாணன் அவர்கட்கும், மதிப்புரை நல்கிய தமிழ்நெஞ்சர் திரு தி.செல்வகணபதி அவர்கட்கும், அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த பொன்முடி அச்சகத்தார்க்கும், கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் வண்ண ஓவியம் தீட்டித் தந்த ஓவியர் ஈசுவரிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.
சிங்கப்பூர்,
2008 வைகாசி 1
14 மே 1977
அன்பன்,
சிங்கை மா இளங்கண்ணன்