உறவே! உயிரே!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 3,411 
 

அன்று திங்கட்கிழமை.

இரண்டுமணிக்குபிறகு போனால் முதலாளி நிற்பார்..போய் கேட்கலாம்…

நீ எழுத்தாளனெண்டா கொம்பு முளைச்சிருக்கோ?

விற்கக் கொடுத்த புத்தகத்தைப் பற்றிக் கேட்கப்போய்..கடைசியில கடைக்காறன் இப்படிக்கேட்டுவிட்டான்.

செத்துவிடலாம் போலிருந்தது.

கொஞ்சமாய் சில சமயம் கனக்க கர்வம் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கும்.

எம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட பிம்பத்தை யாரோ ஒருவர் உடைத்தெறிகிறபோது அத்திவாரமே ஆடிப்போவதாய் ஒரு உணர்வு கொப்பளிக்கும்.கடைசியில் தன் மீதே கோபம் வந்துவிழும்..விரக்தி தலைதூக்கும்..

ஒவ்வொரு எழுத்தையும் யாரும் விலைகூறி விற்பதில்லை..ஆனாலும் அந்த ஒவ்வொரு எழுத்தையும் நாம் கட்டியமைக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டிருக்கிறோம் என்பதாவது யாருக்கும் புரியாதபோது மனதின் மூலையில் வலிக்கும்.

‘விற்காட்டி தாங்கோவன்..கஸ்டத்தோட கஸ்டமாக சமாளித்துக் கொள்கிறேன்’ என்பதற்காகத்தானே அவரிடம் கேட்டேன்..அது ஏன் கோபமாயிற்று?

அப்பப்பா புகையிலையை மடிச்சு சுருட்டாக்கி நெருப்புப்பெட்டியிலிருந்து குச்சியை உருவி அதனை உரசி தீப்பிடிக்கச் செய்து சுருட்டை பற்றவைத்து ஒருக்கால் உள்ளிழுத்து அதுவே ஒரு சுகானுபவமாய் புகையை வெளியில் விடுவார்.பிறகு ஆடு மாட்டை பார்க்கப் போய்விடுவார்…தோட்டத்திற்கு தண்ணீர் இறைக்கப் போய்விடுவார்..மாலையானதும்…மூக்கு முட்ட கள்ளைக் குடித்துவிட்டு வாசலில் குந்தியிருந்து பாடத்தொடங்கிவிடுவார்.உற்றுக்கவனித்தால் கவிதையின் அழகு தெரியும்.கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்..அவர் அது பற்றி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை.எங்கிருந்த ஊற்றெடுக்கிறது என்று அதிசயமாய பார்ப்பதுண்டு.

குரல் கரகரத்திருந்தாலும் பாடியும்,வசனமாய் சொல்லியும் பிறரை மகிழ்விப்பதாய் உணர்வார்.எனினும் யாரும் கவனிப்பதே இல்லை..அவர் வாயிலிருந்து வெளிவந்த சொற்களின் ஆழம் மனதை வசீகரிக்கும்..எல்லாமே வாய்மொழிகள் தான்.சாப்பிட்டதும் அப்படியே தூங்கிவிடுவார்.மறுநாள் அது பற்றிய ஞாபகமும் இருக்காது. அவர் இறக்கும் வரை மருத்துவர்களை நாடிச் சென்றதில்லை.அப்படி ஒன்றும் திடகாத்திரமானவரில்லை.ஆனாலும் இயல்பாகவே இருந்தமையும் அவரின் வாழ்க்கை சீராக இருந்ததாகச் சொல்லலாம்.

ஆனால் நாமோ எழுதியது அச்சில் வரவேண்டும்..பிறர் பாராட்டவேண்டும் என்பதே மனதின் ஆழத்தில் இருந்திருகிறது.

அம்மா திட்டினாள்..

கவிதை எழுதியதால் நண்பர்கள் விலகிப்போனது மாதிரி உணர்வு ஏற்பட்டது..

‘எழுதாமலேயே இருந்திருக்கலாம்’

திலகன் ஆண்டுவிழாவில் நடிக்க நாடகம் எழுதித்தரச்சொன்னான்..

‘ம் ம்’

‘மண்ணெண்ணை வாங்கக் காசில்லை…கைவிளக்கை கனநேரம் எரியவிடாமல் நூத்துப் போட்டுப் படுங்கோ’ அம்மாவின் குரல் வழமைபோல ஒலித்தது.

ஒன்றுவிட்ட அண்ணர் வாங்கித்தந்த ‘ரொலங்கா’ரேடியோவை பாட்டுக்கேட்க உருட்டினாலும் ஒலிக்க ஐஞ்சு பத்து நிமிசமாகும்…பற்றி வேலை செய்யாது..வெயிலில அடிக்கடி காயவிட்டுத்தான் பாவிக்கிறது’

கரகரக்கும்..இதையும் விட்டால் பாட்டும் கேட்கேலாது..

திடிரென்றுரேடியோ முனகியது..

‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து..’

அப்பாடா..பாட்டு வந்திட்டுது…

படியில நெடுக குந்தியிருந்து பல்லுத் தோண்டிக்கொண்டு இருக்காத..வீட்டு வேலையைப் பார்க்கலாமே’

வீட்டு வானொலியில் இப்படித்தான் கேட்கும்..

‘என்ன செய்ய?’

‘மாட்டைப் பாக்கலாம்…தோட்டத்தைக் கொத்தலாம்..முத்தத்தைக் கூட்டலாம்’

வானொலியை நிறுத்தமுடியாது.

பின் வளவுக்குச் சென்றுவிட்டேன்..வானம் ரம்மியமாக இருந்தது..புளியமரத்துக்குக் கீழே விழுந்திருந்த புளியம்பழத்தை எடுத்து கோதை உடைத்து உள்ளிருந்த பழத்தைச் சுவைத்தேன்..சாடையாய் புளிப்பும் இனிப்பும் கலந்திருந்த சுவை அது…பக்கத்து வீட்டு மணியம் மாமா காவோலையைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்..

மணியம் மாமாவும் சும்மா இருக்கமாட்டார்.

‘ஏன் தம்பி….கொம்மா கத்துறதும் நியாயம்தானே.ஏதாவது வேலைக்குப் போகலாம் தானே…உது சோறு போடாது’

இவருக்குப் பதில் சொல்லி ஏன் அவரைக் காயப்படுத்துவான்…மனமே சிறந்தது…அவரின் வீட்டு வாழை குலைதள்ளி நின்றது.பப்பாமரம் காய்த்து காகம் கொத்தியதயையும் கண்டேன்.

‘அரபு நாட்டிற்கு ஆக்கள் எடுக்கினமாம்..அப்ளை பண்ணிப்பாக்கலாம் தானே?’

‘பாப்பம் மாமா’

பேச்சை நீடிக்கவிடவில்லை..

எங்கள் வீடும் எல் மாதிரி வடிவமைப்பைக் கொண்ட வீடு.ஒரு சாமி அறை..ஒரு படுக்கை அறை..குசினியுடன் கூடிய சிறிய அறை ஒன்று.படுக்கை அறையிலிருந்து சன்னலைத் திறந்தால் காற்று முகத்தில் அறைகிற மாதிரி முகம் சில்லிடும்..பின்னால் வளர்ந்த மருதமரம்..அப்பாச்சி இருக்கும் மட்டும் பூம்பாளையால்தான் சருகுகளைக் கூட்டுவாள்.பார்வை குன்றிய காலத்தில்குப்பைகளுடன் பாம்பையும் சேர்த்து அள்ளி கடகத்திற்குள் போடுவதைப் பார்க்க நமக்குப் பயம் வரும்.அப்பாச்சி எதுவும் உணராமல் கூட்டுவாள்.கடகம் நிறையும் மட்டும் அள்ளிப் போடுவாள்.கூனல் முதுகை இயலுமட்டும் நிமிர்த்தி துவரந் தடியால் ஊன்றியபடி சென்று குப்பை போடும் கிடங்கில் நிதானமாகப் போடுவாள்.

நகச்சுத்து வந்துவிட்டால் அப்பாச்சி குமுழமரத்துப் பழத்தை எடுத்து வெட்டி கையில் கட்டிவிடுவாள்.சீக்கிரம் நோ ஆறிவிடும்.நகச்சுத்தும் போய்விடும்.அப்பாச்சி போனதற்குப்பிறகு கைவைத்தியம் எல்லாம் போய்விட்டது.தொட்டதற்கெல்லாம் ஆஸ்பத்திரிதான்..காயமெண்டால் சந்தைக்குப்பக்கத்தில் இருக்கிற நாதன் டிஸ்பென்சரிதான்..

&&

மாமா சொல்லி சிற்றம்பலம் மாஸ்டரைச் சந்தித்தேன்.மாமாவின் பெயரைச் சொன்னதும் மாஸ்டரும் தெரிந்துகொண்டார்..’அடுத்த வாய்ப்பு ஆறுமாதம் முடியத்தான்..விபரங்களை கொடுத்துவிட்டுப் போம்..கூப்பிடுறம்’

அவரிட்ட பதிந்த ஆக்களை கெதியில அனுப்புவார் என்று பலரும் சொன்னாலும் சிலரை ஏமாற்றிய கதையும் உண்டு..ஏனோ என்னிடம் அட்வான்ஸ் கேட்கவில்லை…

பஸ்நிலையம் நோக்கி நடந்தேன்..

பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது.அரபு நாட்டுப் பயணம் ஏனோ சுவாரஸ்யமாகப் படவில்லை.

அடுத்த மாதம் ஐ பி (Institute Of Bookkeepers)எக்ஸாம் பற்றி ஜோசேப் நினைவூட்டினான்.பாஸ் பண்ணினால் நல்ல வேலைக்குப் போகலாம்..கணிசமான சம்பளமும் கிடைக்கும்..ராசன் நல்ல வேலையிலயும் இருந்து கொண்டு புதிதாக நாவல் ஒன்றையும் வெளியிட்டிருந்தான்..அதனால் மரியாதையும் ஊருக்குள்ள இருப்பதாக உணர்ந்தேன்.இப்படியிருந்தால் எனக்கும் மரியாதை இருக்காது..

அம்மாவிடமே உறவுக்காரர்கள் கேட்டிருக்கினம்…’உங்கட மகன் என்ன காவலி மாதிரி நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறான்..படிப்பைக் கோட்டை விட்டிடப்போறான்..’

அம்மா உள்ளுக்குள் அழுதபடி எதையும் வெளிக்காட்டாமல் வந்து ‘ஓ’வென்று கதறி அழுதது மனதைப் பிசைந்தது.

‘சனத்துக்கு வேற வேலையில்லை’ அம்மாவை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப்போனேன்.

‘படங்களை விரும்பிப் பார்க்குதுகள்..ரமணிச்சந்திரன்,பாலகுமாரன் எண்டு ஒண்டுவிடாமல் வாசிக்குதுகள்.ரேடியோ நாடகங்களையும் விடாதுகள்..ஆனால் நான் நாடகம் போட்டால்..கதை எழுதினால்..சலிச்சுக் கொட்டுதுகள்’

வாளால் வெட்டிச் சாய்ச்சால் என்ன? எனக் கோபம் வரும்..

அம்மாவின் முகம் அக் கோபத்தை அடக்கிவிடும்.

‘சமூகத்தைப் பகைச்சுக்கொண்டு வாழேலாது’

சமூகம் மற்றவர்களோடு ஒத்துப் போகத்தான் வேணும்..ஆனால் மற்றவையின்ர மூக்குக்க விரல் விட்டுத்துழாவக்கூடாது’

எரிச்சலாய் வந்தது..

மௌனமானேன்

அன்றிரவு அம்மா சோற்றை குழைத்துக் கொண்டு கூப்பிட்டாள்.அம்மாவைப் பார்க்கிற தைரியம் இல்லையெனினும் பயந்தபடி அம்மாவின் முன் குந்தினோம்.பூவரசம் இலையை உள்ளங்கையில் வைத்திருக்க அம்மா கறிகளுடன்,ஊறுகாயையும் சேர்த்துக் குழைத்த சோற்றை வைத்தாள்..

ஒவ்வொரு தடவையும் இப்படிக் குழைத்துண்ணும் போது நாக்கில் எச்சில் ஊறும்..

அம்மாவின் கிராமத்திற்குப் போனால் பெரியம்மா பறணில் வைத்திருக்கும் முரள் மீன்வத்தலுடன் சோற்றைத் தருவாள்..

அம்மா பாவம்தான்.அப்பா போனதிற்குப் பிறகு அம்மா தனித்தே நின்றாள் தனிமரமாய்..அப்பாவின் பக்கத்திலும் ,அம்மாவின் கிராமத்திலும் நிறைய உறவுக்காரர்கள் இருக்கவே இருக்கிறார்கள்.ஆனாலும் உதவி என்று கேட்டு அவர்களிடம் போவதை அம்மா விரும்பவில்லை.இப்ப இல்லாவிடிலும் ஒரு நாள் சொல்லிக்காட்ட நேரிட்டால் அவமானமாயிருக்கும்..பெரியம்மா கோயில் திருவிழாவிற்காக வரும் போது ஏதாவ்து கொண்டுவருவார்.நாங்களும் திருவிழா அல்லது காரியமாய் அங்கு போனாலும் வெறும்கையுடன் திருப்பி அனுப்பாமல் ஏதாவது தந்தனுப்புவார்கள்.

இப்போதெல்லாம் அம்மா எல்லாவற்றையும் தவிர்த்துவந்தாள்.கோயிலுக்கும் போவதில்லை..செத்தவீடென்றால் மட்டும் போவாள்..அதிக நேரம் நிற்காமல் வந்துவிடுவாள்.

அம்மா மாதர்சங்கத்தில் அங்கத்தவராய்ச் சேர்ந்து அங்கு கொடுத்த அரிநெல்லிமரம் காய்த்துக் குலுங்கியது..முற்றத்தில் செம்பரத்தையுடன்,நந்தியாவர்த்தையும் பூத்து அழகு சேர்த்தன..

அப்பா கோபக்காரர்தான்.சுடுக்கென்று கோபம் வந்துவிடும்..என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘கொப்பர் மாதிரி..ஒன்றரைக்கண்ணா.. மூக்கும் அப்படியே கிடக்கு’ அப்பாச்சி சொல்லும்..அப்படிச் சொல்வதில் அவளுக்கு பிரியம் அதிகம்தான்.

அப்பா முழுகேக்கை ஒரு மேசைக்கரண்டியால சாராயத்தை ஊத்தி கிளாஸ் முட்ட தண்ணியை கலந்து எங்களுக்கும் தருவார்..’மருந்து மாதிரி’ என்பார்.அவரும் மருந்து மாதிரித்தான் குடிப்பார்.அம்மா ஒன்றும் சொல்வதில்லை..சம்பளம் எடுக்கிற நேரத்தில ரவுனுக்குக் கூட்டிப்போவார்.விருப்பமானதை வாங்கித்தருவார்..கொத்துரொட்டி அப்பாவிற்குப் பிடிக்கும்..’சாப்பிடுங்கோ நல்லா இருக்கும்’ என்று வாங்கித்தர சாப்பிடுவோம்.

இன்று அப்பா இல்லை..

அப்பா இருந்திருக்கலாம்.

யாவரும் கூட வருவோம்..கைப்பிடித்து வாழ்க்கை முழுவதும் ஒன்றாக இருப்போம் என்று நினைக்கையில் மகிழ்வாக இருக்கும்..

கணப்பொழுதுதான்..

எல்லாம் இடிந்து தரைமட்டமாகிவிடும்.

அம்மா கேட்டாள்.

‘போய் அன்னபூரணம் மாமியிடம் காசுக்குச் சொன்னனான்.வாங்கியாவன்’

மாட்டன் எண்டு சொல்லேலாது.ஆனால் அம்மாவிடம் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளவும் முடியாது. மாட்டன் எண்டு சொன்னாலும் அம்மா திகைத்துவிடவும் மாட்டாள்.அம்மாவுக்கும் தெரியும்..சின்னனில மாமி வீட்ட போய் அவேயின்ர பிள்ளைகளோட பள்ளிக்கூடம் போவது வழக்கம்.அப்படியொரு நாளில் மாமி வைத்த நகையைக் காணேல்ல எனவும்,நான் எடுத்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.அப்பா அது பற்றிக் கேட்டுவிட்டு எனது பதிலுக்குக் காத்திருக்காமலே சீமைக்கிழுவைத் தடியால் விளாசிவிட்டார்.உடம்பெல்லாம் காயம்.அழுகை பீறிட்டது.தடுக்க வந்த அம்மாவையும் அடிக்க கையோங்கினார்.’நீதான் அவனைபழக்கிவைத்திருக்கிறாய்’ என்று சன்னதமாடினார்.

அன்று யாரும் யாருடனும் பேசவேயில்லை..

‘நான் களவெடுக்கேல்லை.. அப்ப ஏன் பழிசுமத்துகினம்?’.

புரியாத புதிராகவே இருந்தது.

வாரம் ஒன்று கடந்தது.நாட்கள் யுகமெனக் கடந்தது என்றே சொல்லவேண்டும்.

மாமியின் மகள் ஞாபகமறதியாக எங்கோ வைத்துவிட்டு வேறெங்கோ தேடிக் காணவில்லையென நினைத்து பழி இலகுவாக என்மீது விழுந்துவிட்டது.

இது தெரியவந்தும் யாரும் அது பற்றிப் பேசவும் இல்லை.மன்னிப்புக் கேட்டிருக்கலாம்..அப்பா அடித்த காயம் மாறவே நாட்களாயிற்று.வலியும் தொடர்ந்தது.

‘அவையள் சொறி சொல்லியிருக்கலாம்’

மனதுள் வன்மம் எழுந்தது.அதுவே இன்றுவரை கோபமாக வளர்ந்துவிட்டது..

‘எப்படிப்போவது? மாமியின் வீட்டு முற்றம் மிதிப்பதில்லை என்ற வைராக்கியம் இருக்கும் போவது அம்ம ஏன் கேட்கிறா?அவவே போய் வாங்கலாம் தானே?

அப்பா இல்லையென்றபடியால் தானே அம்மா மாமியிடம் கடன் கேட்கிறா.

‘அம்மா பாவம்’

‘அப்பாவின் இழப்பு நடந்திருக்ககூடாது’

படலையைத் திறந்து வீதிக்கு வந்தேன்..மாமியின் வீடு இடதுபக்கத் தெருவால் போய் கிறவல் கை ஒழுங்கைக்குள் திரும்பவேண்டும்..வயிரவர் கோயில் முனையில் இருந்தது வீடு.

மாமியிடம் பணத்தை வாங்கிவிட்டு திரும்புகையில் ‘இப்பவும் கவிதை எழுதித்திரியிறியோ?.

பதில் ஏதும் தரும் மனநிலையில் நான் இல்லை..கோபமே மிகுதியாயிற்று.

அம்மா சொன்னதால் வந்துள்ளேன்.திருப்பிக் கதைத்தால் கனக்க கதைக்கவேண்டிவரும்.அப்பாவின் ஒன்றுவிட்ட அக்காதான்.பணத்தில் மிதப்பவள்.இயல்பாகவே திமிர்.’என்னை நாறடித்துவிடுவார்’

பெரிய இரும்புக் கேற்றைத் திறந்த போது

‘கூலிவேலைக்குப் போனாலும் நாலு காசுவரும்..கவிதை கிவிதையெண்டு ஊர் சுத்திறதை விடலாமெல்லே’இப்படிச் சொல்லி மாமி ..முடிக்கவில்லை..திரும்பி முறைத்தேன்.காசைத் திருப்பி முகத்தில் எறிந்துவிடலாமோ என நினைத்தேன்.

அம்மாவின் முகம் கண்முன்னால் நின்றது..

‘உங்களிட்டை காசுக்கு வந்து நக்கிறபடியாலதான்… நடந்தேன்.கோபத்தில் காலில் கிறவல் குத்தியதும் வலிக்கவில்லை.

வயிரவர் கோயிலில் பூசை நடந்துகொண்டிருந்தது..

திரும்பிப் பார்க்கவில்லை.

அப்பா இருந்திருந்தால் அப்பாவே எல்லாம் சமாளித்திருப்பார்.அம்மா தன்னால்முடியாத ஒருகட்டத்தில்தான் மாமியிடம் கேட்டிருக்கிறார்.மாமியைப் பற்றித் தெரியாமலில்லை.வேறு யாரிடமாவது கேட்டிருக்கலாம்..யாரிடம்கேட்பது?..அவர்களும் என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டால்?

கோயில் மணி ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

பினான்ஸ் கம்பனி வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

வரச்சொல்லியிருந்தார்கள்.

கடிதத்தைத் திரும்பத்திரும்ப வாசித்தும் முழுமையாக விளங்கவில்லை.ஆங்கிலத்தில் தட்டச்சு பண்ணி அனுப்பி இருந்தார்கள்.மாமாவிடம் காட்டி கேட்கலாம்.அவர் கொஞ்சம் படித்தவர்.அவர் மகனும் கச்சேரியில் நல்ல வேலையிலிருந்தார்.

ஆனால் பினான்ஸ் கம்பனிக்கு வேலைக்குப் போகிறாய்..ஆங்கிலம் தெரியாமல் என்ன செய்யப்போகிறாய்?’கிண்டல் செய்யவும் வாய்ப்பிருக்கும்.தாசனைச் சந்தித்தால் சொல்லுவான்.நண்பன் தான்.பகிடி பண்ணினாலும் நண்பனே.

பினான்ஸ் கம்பனியில் வேலைசெய்பவர்கள் அதிகமாக யாவரையும் கவரும் விதத்தில் உடையணிந்திருந்தார்கள்.ஆங்கிலம் சகஜமாக பேசியதை அவதானித்தேன்.

‘வேலை கிடைச்சா கொஞ்ச நாளிலேயே ஆங்கிலம் பேசிப்பழகிவிடலாம்.நல்ல உடை உடுத்தலாம்.நறுக்கிய மீசை…அளவாக ,அழகாக தாடி…….தனிப்பிறவி எம் ஜி ஆர் தாடி..கவிஞர் சாரதி மாதிரி கையில் சீரியஸானபுத்தகக்கட்டுடன்..அவனும் தாடிவைத்திருந்தான்..ஜேசுதாஸ் தாடி பிடிக்கவில்லை..

பைலை வேண்டாவெறுப்பாக வாங்கிப்பார்த்தவர் கடிதம் போடுகிறோம் என ஒற்றைச்சொல்லுடன் அனுப்பிவைத்தான்..முடிவைச் சொல்லியிருக்கலாம்..

வாசலில் அழகிய பெண் ஒருத்தி புன்னகைத்தபடி நகர்ந்தாள்.

அப்பா இருந்தபோது தனது தந்தையின் திதியை மறக்காமல் வருடா வருடம் வீட்டிற்கு ஐயரை அழைத்து பூசைகள் செய்வார்.நிரந்தர பூசைக்காக பேச்சியம்மன் கோயிலுக்கும்,சிவன் கோயிலுக்கும் பணம் கட்டியிருப்பார்.தான் இல்லாக்காலத்திலும் தொடரவேண்டும் எனவும் விரும்பியிருந்தார்.ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை அன்றும் விரதம் இருப்பார்.அம்மா மறக்கவில்லை.ஐயரை அழைத்து பூசை செய்தால்.அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.அழுதிருந்தாள்.முகம் வீங்கியிருந்தது.கண்கள் சிவந்திருந்தன.அப்பாவின் உடலுக்கு முன்னால் நின்று அம்மா கதறி அழுதது இப்போதும் நினைக்கையில் நெஞ்சு கனத்தது.

அம்மா பாவம்.அப்பாவுடன் வாழ்ந்து மகிழ்வாய் இருந்தாள் என்றும் சொல்லிவிடமுடியாது.அதை வெளிக்காட்டியவளுமில்லை.அப்பா அருகில் இருந்தார் என்கிற நம்பிக்கையே அவளை வழிநடத்தியது..இப்போது தனிமரமாய் நிற்பது போல உணர்கிறாளோ?நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்லமுடியவில்லை..அம்மாவை நன்றாக வைத்திருக்கவேண்டும்தான்..

‘சாபம் இருக்குப்போல..சாமியாரைக்கூப்பிட்டு சாந்தி செய்யுங்கோ.. எல்லாம் சரியாகிவிடும்..உவனுக்கும் வேலை கிடைச்சிட்டால் போதும்’ கனகசபாபதி மாமாவின் மனைவி வீட்டிற்கு வந்திருந்தபோது அம்மாவிற்கு சொல்லிப் போனார்.அம்மா கோயிலுக்குப் பூசைக்குக் கொடுத்துவிட்டு அமைதியானாள்.

படலையில் யாரோ தட்டுவது கேட்டது.

தபால்காரர் மணியடித்தும் நாம் வராததால் பக்கத்துவீட்டில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.சஞ்சிகை ஒன்றிற்கு சிறுகதை எழுதியிருந்தேன்..அது வந்திருக்குப்போல..பிரித்துப் பார்க்கையில் 37ஆம் பக்கத்தில் எனது சிறுகதை அழகிய ஓவியத்துடன் இருந்தது..

பூமியில் தரித்து நிற்கமுடியாமல் இருந்தது..யாரிடமாவது சொல்லி மகிழவேண்டும் என்று மனது துடித்தது..வீட்டில் யாரும் கேட்டு மகிழும் நிலையில் இல்லை..

ஒரு படைப்பாளியின் எழுத்து அச்சில் வந்த நிகழ்ச்சி வாரத்தையில் சொல்லமுடியாது..நெஞ்சில் அணைத்துக்கொள்ளத்தோன்றும்.காதலியை ஸ்பர்சிப்பது போல அங்கம் முழுவதும் வருடிக்கொடுத்து சுகம் அனுபவிப்பது போல ஒவ்வொரு சொற்களாக வலதுகை சுட்டுவிரலால் தடவியபடி இருந்தேன்..நேரம் போனதே தெரியவில்லை…

கிண்டலடித்த மாமியிடம் காட்டவேண்டும்.அவர்களின் பிள்ளைகளுக்குக் காட்டவேண்டும்..ஆனால் வருமானம் தராத தொழில் ஒரு தொழிலே.. என்பார்கள்.அவர்களுக்கு பணமே பிரதானம்.. ‘.மாமியின் கடைசி மகள் அணடிக்கும் கொடுப்புக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிண்டவள்..லொஞ்சம் அழகிதான்.மாம்பழ நிறம்..சிறிதேவி எண்டு எல்லோரும் கதைப்பினம்..ஆனாலும் மாமியின்ர குணத்தில கொஞ்சமாவது இருக்கும்’

பின்னேரம் நண்பர்களிடம் காட்டலாம்..மனம் அமையானது..பின் வளவுப் பக்கம் போனேன்..

முள்முருக்கை பூத்திருந்து அழகு காட்டியது.

வாழைமரம் குலை தள்ளக் காத்திருந்தது.

புளியமரத்து இலையின் குருத்தைப் பிடுங்கி வாயில போட்டபடி நடந்தேன்.

மாமா கேட்டார்..’சோதினை எடுக்கபோறன் எண்டனீர்..என்ன மாதிரி?’

பின் வளவிற்கு வந்தால் வேலிக்கால தலையை நீட்டியவாறு மாமா கேள்விகள் கேட்டு நோண்டிவிடுவார்.மாமியும் விடுப்புத்தான்..

‘போகவேணும்…அட்மிஷன் கார்ட் வரப் போகோணும்’ இது நான்.

‘அப்ப..வெளிநாடு போற அலுவல்?’ இழுத்தார்.

மாமாவிடமிருந்து தப்பிக்கவேண்டும்.

அம்மா கூப்பிட்டாள்.

‘அப்பாடா.தப்பித்தேன்’

‘இந்தப் பலகாரத்தை மாமி வீட்டைக் கொடுத்துவிட்டு வா’

கிணற்றில் தண்ணீர் அள்ளும் சத்தம் கேட்டது.

அம்மாவிற்கு மாமியை விட்டால் வேறு தெரிவும் இல்லை.மாமியை பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை.மாமிக்கும் அம்மாவை விட்டால் பேச்சுத்துணை என்று பெரிதாக யாரும் இருப்பதாக தெரியவில்லை.

பரீட்சைக்குப் போகவேணும்..வெளிநாடு போகவேண்டும்.பணம் ஒரு பிரச்சினையாக வரும்..அதுவே பிரளயத்தையும் ஏற்படுத்தலாம்.

‘மாமியே சரணம் ஐய்யப்பா’

பலகாரப் பார்சல் கனமாகத் தெரியவில்லை.

ஓய்வான ஒரு பொழுதில் அப்பாவிடம் கேட்டோம்..

அப்பா!.உங்கள் அபிமான நடிகை யார்?’

உள்ளுக்குள் ரசித்தபடி ‘சரோஜாதேவி’..

அப்பாவுக்கு எப்ப கோபம் வரும் என்று சொல்லமுடியாது.ஆனாலும் அன்று அப்படிக் கேட்கும் பொழுதும்,தைரியமும் கிடைத்தது.

அம்மா சிரித்துக்கொண்டாள்.

அம்மாவிடம் கேட்டோம்..

அம்மாவின் முகத்தில் எப்படி வெட்கம் வந்து ஒட்டியது?

‘முத்துராமன்’ சொல்லிவிட்டு செல்லமாக சினுங்கினாள்.

வந்திருந்த மாமி ‘சிவாஜி’ என்றார்..

எல்லோரும் சிரித்துக்கொண்டோம்..

அம்மாவிடம் ‘பாட்டுப் பாடுங்கோ’ என்றால்

குரலில் தெளிவில்லையென்றாலும்,அப்பாவிற்கு முன்னால் நடுக்கம் இருந்ததையும் உணர்ந்தோம்.

வெட்கப்பட்டபடியே பாடினாள்.

‘பரவாயில்லை..பாடுங்கோ’

” மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா

கொடிக்கு காய் பாரமா

பெற்றெடுத்த

குழந்தை தாய்க்குப் பாரமா ”

ஏனோ எல்லோரும் அமைதியானார்கள்.அம்மா வழமையாக சமைக்கும் போது பாடும் பாடல்தான்.ஆனாலும் அமைதியானார்கள்..சூழலில் இறுக்கம் தெரிந்தது.

இன்று நினைக்கையில் அழுகையே வந்தது.பாடச்சொல்லி கேட்கும் சூழல் இல்லை..வானொலியைக் கூட நிறுத்திவிடுவாள்.

அம்மா உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.எனது பயணம் முடிவானதும் பறணில் எப்போதோ வைத்த ப்தோலிலான பயணப்பையை எடுத்து தூசுதட்டி,ஈரச்சீலையால் துடைத்து தயார்படுத்தினாள்.அப்பா வேலை விடயமாக பயணிக்கும்போதெல்லாம் இரண்டு மாற்றுடை,முகம் துடைக்க துவாய், பல்பொடி இத்தியாதிகளைத் தயாராய் வைத்திருப்பார்.அப்பா காலமாகியபின் பாவிப்பார் இன்றி பறணில் தூங்கிய பையை அம்மா எனக்காகத் தயார்படுத்தினாள்.அப்பாவிற்கு யாரோ கொடுத்த சேர்ட்டை மடிப்புக் குலையாமலேயே பத்திரப்படுத்தியிருந்ததையும் வைத்தாள்.அப்பாவின் ஞாபகமாக சில பொருட்களை பத்திரப்படுத்திவைத்திருப்பதை அறிவேன்.அப்பாவின் ஜீன்ஸையும் எனக்களவாக வெட்டித் தைத்துமிருந்தாள்.அதைப் போடுவதில் உடன்பாடில்லை.என்றாலும் அம்மாவின் ஞாபக நினைவுகள் என்னால் அறுந்துவிடக்கூடாது என்பதால் மௌனமாகவே இருந்தேன்.எப்போதோ வாங்கிவைத்திருந்த ஜீன்ஸையும் உடுக்கலாம்.

‘என்னோட வாற பொடியள் நல்லா உடுத்துவினம்…அப்பா இருந்தாலாவது..’இதயம் கனத்தது..

அறைக்குள் இருந்த சிறிய கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன்.முகத்தைத் திருப்பியும்,பக்கவாட்டில் திருப்பியும்,தலையைக் கவிழ்த்து கண்களை உயர்த்தியும் பார்க்கையில் முகம் பார்க்கப் பரவாயில்லை போலிருந்தது.அப்பா மாதிரி ஏறு நெத்திதான்..அப்பா இறக்குமட்டும் தலைமயிர் கொட்டவில்லை…அப்பாவின்ர அப்பாவிற்கு மயிர் அடர்த்தி குறைவானதால் எனக்கும் அதுமாதிரி வரப்பார்க்கும்…யாரோ சொன்னது ஞாபகம் வந்தது..

‘மொட்டை வராட்டிச் சரி’

பாஸ்போர்ட்டிற்குப் போட்டோ எடுக்கேக்க மெல்லமா பிரபா அண்ணரிடம் ‘இப்படியும் போட்டோ எடுத்துத் தாங்கோ..புத்தகம் அடிக்கேக்க போடலாம்’ என்று எடுத்துவைத்ததும் நல்லதாய்ப்போய்ச்சு..

‘அம்மா அறிஞ்சாப் பேசும்’

அம்மாவைத் திரும்பிப்பார்த்தேன்.

கிழிஞ்ச சாரத்தைத் தைத்துக் கொண்டிருந்தாள்.

புகைவண்டிப் பயணம் அலாதியானதுதான்.கடந்துசெல்லும் வானம்,நட்சத்திரங்கள்,தந்திக்கம்பங்கள்,தூங்குவதற்கு இடம் தேடும் பயணிகள்,கிழிந்து போனாலும் கடைசிவரை வாசித்து முடித்துவிடவேண்டும் என முகத்தை பத்திரிகைக்குள் நுழைத்த பெரியவர்,கண்களாலேயே பலகதைகள் பேசி காதலைக் கொண்டாடும் இளசுகள்,சிற்றுண்டிகள் விற்கும் சிறுமிகள்,சிறுவர்க்கான விளையாட்டுச் சாமான்களை விற்கும் கிராமத்துச் சிறுவர்கள்,சலசலத்து ஓடும் நதிகள்,அங்கும் இங்கும் அலையும் டிக்கட் செக்கர்கள்,இன்னும்..இன்னும் அழகிய பயணம்தான்..ஒன்றில் சன்னல் ஓரம் இடம் கிடைக்கவேண்டும் அல்லது கதவைத் திறந்து வாசல் படிக்கட்டில் உடகார்ந்து பயணிப்பது ஒரு சுகம்தான்.இப்படிப் பயணிப்பது முதல் தடவையல்ல..அப்பாவுடன் பயணித்திருக்கிறேன்..சித்தப்பா வீட்டில் தங்கமுடியும்..அப்பாவுடன் போகும் போது அங்கால இங்கால பார்க்காமல் கடிவாளம் போட்டிருக்கவேண்டும்.

அப்பாவின் மறைவிற்குப்பிறகு இப்போது தனிமையில் ஒரு பயணமாக போயிருந்தது.’கவனமாகப் போ தம்பி’ அம்மா கண்ணீருடன் வழியனுப்பிவைத்தாள்.சாப்பாடு கட்டித்தந்திருந்தாள்..எனக்கு விருப்பம் என நினைத்து கூழ் காய்ச்சியிருந்தும்,குடிக்க மனம் இடம்தரவில்லை.பயணம் பிழைத்துவிடும் என்ற பயம்.. பயணம் சிறப்பாக இருக்கவேண்டும் என அம்மாளாச்சிக்கு பொங்கியுமிருந்தாள்.

‘மாமிக்கும் சொல்லிப் போட்டு வா. அவையின்ர உதவியை மறக்கக்கூடாது.நன்றியாய் இருக்கவேணும்..’

ஒன்பது மணி நேரப் பயணம் அதிகாலையில் நிறைவுபெற்றது.வெளியில் வந்தேன்..

அதிகாலை வெளிச்சத்துடன், சிறிதான குளிரும் உடம்பில் உரசியது.

வீதியோரம் நின்றவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தபடி இருந்தனர்.அங்கு கூட்டத்தில் நின்றவன் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தைத் திணித்தான்.தூரத்தே உண்ணாவிரதத்தை யாரோ நடத்திக்கொண்டிருந்ததையும்,இன்னும் சிலர் கோசமிட்டுக்கொண்டுமிருந்தனர்.பயணக்களைப்பு வேறு.ஊரிலிருந்து புறப்படுமுன் பாஸ்கரன் சொல்லியனுப்பிய அஜந்தா லொட்ஜில் தங்குவதென்று முடிவுடன் நடந்தேன்.கவுண்டரில் அடையாள அட்டையைக் காட்டிப்பதிந்துகொண்டேன்..அதிசயமாக பாஸ்போர்ட்டையும் கேட்டுப் பார்த்துப் பதிந்துகொண்டனர்.இரண்டாவது மாடியிலிருந்த ஒரு மூலை அறையினைக் காட்டிய அறைப் பையனை அனுப்பிவிட்டு அறைக்கதவைப் பார்த்தேன்.

அறை எண் 132..ஞாபகத்தில் வைத்துக்கொண்டேன்..வெளியில் போய்விட்டு வரும்போது தடுமாற்றம் ஏற்படும்.பொதுவாகவே எல்லா அறைகளும் ஒரே மாதிரி இருக்கும்.பக்கத்து அறையிலிருந்து கூச்சலும் பாட்டும் அதிகமாகக் கேட்டது.நண்பர்கள் கூடி கொண்டாடிக்கொண்டிருக்கலாம்.அறை பெரிதாயிருந்தால் குடும்பங்களும் வெளிநாட்டு உதவிகளுடன் தங்கியிருக்கலாம்.

நிற்கச் சங்கடமாக இருந்தது.அசதி வேறு.அறையைத் திறந்து அங்கிருந்த மேசையின் மீது கைப்பையை வத்துவிட்டுக் கட்டிலில் தொப்பென்று விழுந்தேன்.

‘அப்பாடா’

உயரே காற்றாடி சுழன்றுகொண்டிருந்தது.

தனிய படுத்திருக்கவே பயமும் இருந்தது.

சித்தப்பா வீட்டை தங்கியிருந்தால் பாதுகாப்பு உணர்வும் இருக்கும்..வீட்டுச்சாப்பாடு. சின்னம்மா பாப்பாசிப்பழத்தில் ஒரு கறிவைப்பாள்.முதல் நாள் சுவை இருக்கவில்லை..பிறகு சுவை பிடித்துப்போற மாதிரி கதைப்பாள்.சின்னம்மா வாங்கித்தந்த சேர்ட்டை கனநாள் கிழியக் கிழிய பாவித்தது ஞாபகம்.

சித்தப்பா உறவுக்காரர் வீடுகளுக்கும் அழைத்துசெல்வார்.கோயிலுக்குப் போகலாம். கடற்கரைக்குப் போகலாம்.சினிமாவிற்குப் போகலாம்.புகையிரதம் போகும் தடங்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கலாம்.சித்தப்பாவின் புத்தக அலுமாரியில் உறைபோட்ட புத்தகங்கள் வாசிக்கலாம். சித்தப்பா நிறைய வாசிப்பார்.வானொலி கேட்பார்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது கதைகள் எழுதிப் பரிசு பெற்றத்காக அப்பா சொல்லியிருந்தார். நான் எழுதுவது பற்றிச் சித்தப்பாவிற்குச் சொன்னதில்லை..அவர் எழுதியவராக இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்காது என்று நம்பினேன்.அவருக்கு இது பற்றித் தெரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.அவரைப்பற்றிக் கேட்கப்போய் என்னைப்பற்றிய பேச்சுவர சொல்லவேண்டிவரலாம்.மௌனமாகவே இருந்தேன்..

பாபா என்கிற சாமியார் வந்திருப்பதாக ஒருநாள்மூன்று பஸ் எடுத்து அழைத்தும் சென்றிருந்தார்..எனக்கு அதில் நாட்டம் இல்லை என்று சொல்லவில்லை..எடக்குமுடக்காய் கதைக்க பிரச்சினையாகலாம்..வன்மமாகவும் மாறிவிடலாம்.அவரவர் நம்பிக்கைகள்..

சித்தப்பா மாற்றலாகி ஊருக்கு வந்துவிட்டார்.

அப்பாவுடன் அவரின் உறவு நிலையும் தூரமாகிவிட்டது.

மனதில் வெறுமை தெரிந்தது.

குளிக்கவேண்டும்.ஊரில் கிணற்றில் குளிப்பதுபோல குளிக்கமுடியாது..அவசரக்குளியல்தான்.காகக்குளியல் என்றும் சொல்லலாம்.கிணற்றுத்தண்ணீரைக் குடிக்க சுவையாக இருக்கும்..இங்கு கொஞ்சம் வித்தியாசமாக சுவை குறைவாக இருக்கும்.

வெளியில் போகவேண்டும்..

பரீட்சை முடிய, ஏஜண்டைப் பார்க்கவேண்டும்..

தோல்பைக்குள் இருந்த உடைகளை மேசையில் எடுத்துவைத்தபோது ஒவ்வொன்றையும் பத்திரமாக அடுக்கிவைத்திருந்த அம்மாவின் ஞாபகம் வந்தது..பாவம் அம்மா.நிறைய கஸ்டப்படுகிறா…அவவுக்கான நிறையச் செய்யவேண்டும்.

‘கடவுளே.நல்ல காலத்தைக் காட்டு’

வீபூதியை ஒரு சரையாகக் கட்டிவைத்திருந்தாள்.அம்மா பட்ட கடனையெல்லாம் அடைத்துவிட்டால்தான் நிம்மதி.தூரமாகிப் போன உறவுக்காறரெல்லாம் உறவுகளைப் பேணும்படியான காலம் வரல்வேண்டும்.

எழுந்து போய் சன்னலைத்திறந்தேன்..துர்நாற்றமே வந்தது.நெருங்கியபடி கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் காற்றோட்டமின்றி காய்ந்தும்,காயாமலும் இருக்கும் ஈரம் குளியலறையிலிருந்தோ கழிப்பறையிலிருந்தோ கசிந்திருக்கலாம்..சன்னல் கதவை இறுக்கிச் சாத்திவிட்டுத் தயாரானேன்.

பசித்தது..உணவகத்திற்குச் சென்று சுடச்சுட சாப்பிடவேண்டும்.

வெளியே சப்பாத்துக் கால்களின் சத்தம் கேட்டது.ஒவ்வொரு கதவாகத் தட்டப்பட்டது.கதவைத்திறந்தேன்..திபுதிபுவென உள்ளேவந்த காவல்துறையினரைப் பார்க்க பயத்தை வரவழைத்தது.அவர்களின் சிரிப்பின்றி முரட்டுத்தனம் நிறைந்திருந்தது.கைகளில் துவக்கு எந் நேரமும் வெடித்துவிடும் நிலையில் தயாராய் இருந்தது.

அடையாள அட்டையை ஒருவன் பார்க்க,இன்னொருவன் பாஸ்போர்ட்டைத் துருவினான்.பரீட்சைக்கான அனுமதிப்பத்திரத்தையும் காட்டினேன்.

திருப்தியின்மையையே சூழல் காட்டியது.திடிரென்று ஒருவன் மேசை மீதிருந்த துண்டுப்பிரசுரத்தைப் பார்த்துவிட்டான்.புகையிரத நிலையத்தில் தந்தார்கள்.இன்னும் பார்க்கவில்லை..அவர்கள் நம்பவில்லை.

வெளியே வரச்சொன்னர்கள்.கீழே பெரியதொரு விறாந்தை மாதிரியான இடத்தில் பலரும் குழுமியிருந்தனர்.இதே லொட்ஜில் தங்கியிருந்தவர்கள்.யாரோ ஒருவரின் அறையில் துண்டுப்பிரசுரங்கள்,துப்பாக்கிகள்,பதாகைகள் இருந்ததாம்.அதனால் இளைஞர்களாக இருந்தவர்கள் அனைவரையும் சந்தேகத்தின் பேரில் கைது என்ற பேரில் விசாரணைக்காக பெரிய வானில் ஏற்றினார்கள்.

இன்று விடிந்திருக்கவே கூடாது..நல்ல லொட்ஜ் என்று நம்பித்தானே தங்க வருகிறோம்..

அழுகை பீரிட்டது..தலை குனிந்தபடி இருந்த என்னை துவக்கால் தட்டி முறைத்தான்..

மௌனமாக இருந்தேன்..

பொலபொலவென கனவுகள் கண்முன்னே உடைந்து நொறுங்கிகொண்டிருந்தன.

– 14/08/2014

(யாவும் கற்பனை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *