அது 1960 ம் வருடம் என்று நினைவு…
கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார்.
குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது ‘குன்னியூர் ஹவுஸ்’ என்ற பங்களாவில் சகலவிதமான வசதிகளுடன் நாலைந்து நாட்கள் பெரியவாளைத் தங்கவைத்து உபசரித்தார்.
அப்போது ஒருநாள் காலையில், காந்தி சாலையில் உள்ள தேசிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் வாசலில் நின்று பூர்ணகும்ப மரியாதையுடன் மஹா பெரியவாளை வரவேற்றுப் பள்ளிக்குள் அழைத்துச் சென்றார்.
பெரியவாளிடம், “இந்த இடம் ஒரு காலத்தில் பெரிய கீற்றுக் கொட்டகையாக இருந்தது. ‘சங்கர ஹால்’ என்று பெயர். அது தீப்பற்றி எரிந்துவிட்டது. அந்த இடத்தில் மீண்டும் கீற்றுக் கூரை வேயப் பயமாக இருக்கிறது. நல்லதாக ஒரு கட்டிடம் கட்டியாக வேண்டும்… அது இன்னமும் நிறைவேறவில்லை. பல தடங்கல்கள். ஸ்வாமிகள்தான் அனுகிரகிக்க வேண்டும்…” என்றார்.
“கவலைப் படாதே, அதுக்குன்னு ஒருத்தர் வருவார்; எல்லாம் நல்லபடியாக நடக்கும். இந்தா இதை வைத்துக்கொண்டு ஆரம்பி…” என்றவாறு ஒரு சிறிய தட்டைத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார். அதில் ஒரு ஆப்பிள் பழமும், ஒற்றை ரூபாய் நாணயமும்!
உடனேயே நன்கொடை வசூலைத் தொடங்கி விட்டனர். அப்போது ஒரு அதிசயம்!! அந்தப் பள்ளி வாத்தியாரின் ஒரு நண்பரைப் பார்த்து நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர் ஐநூறு அல்லது ஆயிரம் நன்கொடை தருவார் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் அவரோ பள்ளியையே நேரில் பார்க்க வந்துவிட்டார். தலைமை ஆசிரியர் கட்டிட வேலைகளை சுற்றிக் காண்பித்து அவரிடம் விளக்கினார்… சுற்றிப் பார்த்து முடிந்தவுடன் அவருக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை.
உடனே சொன்னார், “பள்ளிக்கு தற்காலிக கூரையெல்லாம் வேண்டாம்… நிரந்தரமாக ஒரு சிறந்த கட்டிடம் கட்டி, மேலேயும் ஒரு மாடி கட்டிடலாம். அதற்கு உண்டான எஸ்டிமேட் தயாரிச்சு என்னிடம் கொடுங்க..” என்றார்.
அவ்வளவுதான்… அடுத்த சில நாட்களில் எஸ்டிமேட் அங்கீகரிக்கப் பட்டு, உடனே மேலும் கீழுமாகப் பள்ளி சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. தவிர இரண்டு பெரிய ஹால்கள் கொண்ட ‘சங்கரஹால்’ உருவாகிப் பள்ளிக்கே அழகும் பெருமையும் சேர்த்து விட்டது. இதையெல்லாம் தாண்டி ‘சாரதி கலையரங்கம்’ என்ற பெயரில் ஒரு பிரும்மாண்டமான கலையரங்கம் வேறு. ஐந்நூறு ஆயிரம் என நன்கொடை எதிர் பார்த்தவரிடமிருந்து ஒரு பெரிய பள்ளியே லட்சணத்துடன் சீக்கிரம் கிடைத்துவிட்டது.
“கவலைப் படாதே, அதுக்குன்னு ஒருத்தர் வருவார்; எல்லாம் நல்லபடியாக நடக்கும்…”
மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனமான வேதவாக்கு பலித்தது.
சென்னையிலுள்ள ஒரு பிரபல ஸ்கின் டாக்டர் மஹா பெரியவரை தரிசிக்கச் சென்றார்.
“எவ்வளவு காணிக்கை வைத்திருக்கிறாய்?”
“நூற்றியோரு ரூபாய்…”
“இவ்வளவுதான் கொடுப்பாயோ? நீ எவ்வளவு பெரிய டாக்டர்?”
“பெரியவா உத்திரவுப்படி செய்கிறேன்.”
“அதற்காகத்தான் கேட்டேன். கும்பகோணம் மடத்தின் சார்பில் அனாதைப் பிரேத ஸம்ஸ்காரம் நடக்கிறது. கடைசி கர்மாக்களை செய்கிற இடம் திறந்தவெளியாக இருக்கிறது… அதற்கு காம்பவுண்டு சுவர் கட்டித்தர முடியுமா?”
“பெரியவாளின் ஆக்ஞை.”
ஆனால் அதற்குள் வேறொரு பக்தர் தானே முன்வந்து அந்தப் பணியை நிறைவேற்றி விட்டார் என்பது தெரிய வந்ததும், “சரி, வேற வேலை இருந்தால் சொல்கிறேன்…” என்று டாக்டரை அனுப்பிவிட்டார் பெரியவா.
சிவராம சாஸ்திரிகள் என்பவர் ஒரு ரிக்வேத விற்பன்னர். அந்த டாக்டரிடம் தோல்நோய் சிகிச்சை பெற்று வந்தார். சம்ஸ்க்ருத பாடசாலையில் பேராசிரியராகவும் வேலை பார்த்து வந்தார். அந்த டாக்டர் ஒருமுறை பாடசாலை மாணவர்களிடம், “நான் சாஸ்திரிகளை மட்டுமல்ல, அவரிடம் இருக்கும் ரிக் வேதத்தையும் சேர்த்துக் காப்பாற்ற விரும்புகிறேன்…” என்று விளையாட்டாகச் சொன்னார்.
டாக்டரின் இந்தப் பேச்சு பெரியவா செவிகளுக்கு எப்படியோ போய்விட்டது.
அடுத்த தடவை டாக்டர் தரிசனத்திற்கு போனபோது, “நீ சாஸ்திரிகளைக் காப்பாற்றி வருகிறாய் சந்தோஷம்… ரிக் வேதத்தையும் காப்பாற்றுவதாகச் சொன்னாயாமே!”.
“ஆமாம்… அவருக்கு மருந்தில் ஓர் அக்கறை வரவேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னேன்…”
பெரியவா ஒரு புன்னகையுடன், “இவ்வளவு அக்கறையாக உன்னைப்போல் சொல்லக் கூடியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்” என்று டாக்டரைப் பாராட்டினார்.
கூட்டமில்லாத ஒரு நாளில், பெரியவாளுடன் பேசுகிற வாய்ப்பு டாக்டருக்கு கிடைத்தது. பல தோல் நோய்களைப் பற்றி பெரியவா துருவித்துருவி விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். பிறகு அவருக்கே உரித்தான முறையில், சில ஆன்மீக விளக்கங்களும், பழங்கால தமிழ் வைத்திய நிவாரணங்களையும் விவரித்தார்.
மேலும் சித்த மருத்துவ முறை பற்றிப் பெரியவா கூறிய நுட்பமான செய்திகள் டாக்டரைப் பிரமிக்க வைத்தன.
ஹோட்டல்களில் மாவாட்டுவதுதான் அந்த மயிலாப்பூர் பாட்டிக்கு வாழ்வு. பாட்டிக்கு வெண்குஷ்டம் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவிவிட்டது. “பார்க்கவே நன்னாயில்லே, வேலைக்கு வரவேண்டாம்…” என்று பலர் சொல்லிவிட்டார்கள்.
வேலை போயிற்று. ஆனால் வேளை தவறாமல் பசிக்கிறதே! வாழ்வாதாரத்தை தொலைத்த பாட்டி, சதாராவில் முகாம் இட்டிருந்த பெரியவாளைப் போய்ப் பார்த்துக் கதறினார்.
“இவ்வளவு தூரம் ஏன் வந்தே? சென்னை கீழ்ப்பாக்கம் லாண்டன்ஸ் சாலையில், நடராஜன் என்று ஒரு தோல் டாக்டர் இருக்கார்… அவரிடம் போய்க் காண்பி. அவரே மருந்து கொடுத்து குணப் படுத்துவார்…”
பாட்டி டாக்டரைச் சந்தித்து விபரம் சொன்னார்.
டாக்டர் நெகிழ்ந்தே போனார். உலகம் போற்றும் மஹா பெரியவா, ஒரு சாதாரணான என்னையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாரே!!! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேனோ? என்று உருகினார்.
அந்தப் பாட்டிக்கு பிரத்யேக கவனத்துடன் சிகிச்சை அளிக்கப்பட, என்ன ஆச்சரியம், வெண்குஷ்டம் மறைந்து பாட்டி மீண்டும் வேலைக்குச் செல்லலானாள்…
டாக்டர் நடராஜன் வெளிநாட்டில் படித்திருந்தாலும் கூடியவரை நமது பூஜை புனஸ்காரங்கள்; ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வந்தார். பாட்டியை குணப்படுத்தியதை பெரியவா அறிந்து கொண்டார்.
பெரியவா தரிசனத்திற்கு எப்போது டாக்டர் போனாலும், அவரது சொந்த வாழ்க்கை பற்றியும் விசாரிப்பார்கள்… “நீ ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பாயா?”
“சில சமயங்களில் என் மனசு எப்படிச் சொல்கிறதோ அதன்படி நடப்பேன்…”
“நீ மேல் நாட்டில் படித்தவன்… அதெப்படி நம்முடைய வைதீக அனுஷ்டானங்களில் ஈடுபடுகிறாய்?”
“அங்குள்ள மக்களின் வாழ்க்கை இயந்திர ஓட்டம்தான்; வெறும் பணம், உடலின்பம், வசதிகள் மட்டும்தான்… ஆனால் நமது வாழ்க்கை முறையில் அமைதி இருக்கிறது; ஆன்மீகத் தேடல் இருக்கிறது; மனிதப் பண்பாடு இருக்கிறது; இன்னும் பசுமையாக இருக்கும் கலாச்சாரம் இருக்கிறது. நான் இங்கேயே இருந்திருந்தால் கூட, ஆன்மீகத்தில் எனக்கு இவ்வளவு ஈடுபாடு வந்திருக்காது. வெளிநாட்டு வாசம், எனக்கு ஒரு வரப்பிரசாதம்!!”
பெரியவாளுக்கு டாக்டருடைய பதில் ரொம்பத் திருப்தி அளித்திருக்க வேண்டும். ஒரு ஆப்பிளை எடுத்துப் பந்தாடி டாக்டரிடம் எறிந்தார். டாக்டர் அதை சந்தோஷத்துடன் கேட்ச் பிடித்தார்.
டாக்டர் பெரியவா திருவடிகளைக் கேட்ச் பிடித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் வெறும் Skin specialist; பெரியவா Kin specialist அதாவது உறவு முறைகளை நன்கு பிணைத்து வைப்பவர். தோல் டாக்டர் என்பதால், தோல் நோய்களை மட்டும் நீக்குபவர்; பெரியவா Soul doctor ஆத்மாவைப் பீடிக்கும் பிணியை அறவே நீக்குபவர்…