புதிய செவ்வாய்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 2,443 
 
 

கி.பி.2603-ம் ஆண்டு! விசுவின் கைகள், ராக்கெட்டை செவ்வாய்க் கிரகத்தில் இறக்குவதற்கான, முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது! அருகிலிருந்த லதா, “எனக்குத் திக்கென்று இருக்கிறது!” என்றாள், ஆக்ஸிஜன் பைப்பை உறிஞ்சிக் கொண்டே!

“விசு! கம்ப்பூட்டரைப் பார்! இங்கேயும் உயிரினங்கள் இருப்பது போல இருக்கிறது!” என்று கம்ப்யூட்டரில் தோன்றிய உருவங்களைக் காட்டினாள்!

ஏறக்குறைய… மனித உருவத்தில், தலையில் கொம்புகளோடு, ஆங்காங்கே நடமாட்டம் தெரிந்தது! விசு கம்ப்யூட் டரைப் பார்த்துக் கொண்டே பூமியோடு தொடர்பு கொண்டு, “செவ்வாய்க் கிரகத்தில் நம்மைப் போலவே மனிதர்கள் இருப்பது போலத் தோன்றுகிறது! அவர்களுடைய உருவங்கள், கொஞ்சம் பார்ப்பதற்கு விகாரமாகவும், கொம்புகளோடும் காணப்படுகிறது! நாங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இறங்கலாமா? வேண்டாமா? உடனடியாக ஆணையிடவும்!” என்று கேட்டான்!

“நீ செவ்வாய்க்கிரகத்தில் இறங்கி, அங்கு உள்ள நிலைமையைத் தெரிவிக்கவும்!”

பூமியிலிருந்து ஆணை வர, ராக்கெட்டை மெதுவாகக், கிரகத்தின் ஒரு பகுதியில் இறக்கினான் விசு!

கதவைத் திறந்து கொண்டே, விசுவும், லதாவும் வெளியே இறங்கி வர, ராக்கெட்டைச் சுற்றி, செவ்வாய்க் கிரகவாசிகள் கூட்டமாக வந்து நின்று, இவர்களை விநோதமாகவும், விரோதமாகவும், பார்க்க ஆரம்பித்தனர்! “என்ன செய்யலாம்? விசு, திரும்பிப் போய் விடலாமா?” என்றாள் லதா! அவளுடைய உடல் பயத்தால் நடுங்கியது!

“உன்னைப் போல, ஒரு தொடை நடுங்கியை என்னோடு அனுப்பிவைத்தார்களே! சும்மா இரு!” என்றவன், சமாதானத்தின் அறிகுறியாகப், பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து ஆட்டினான்!

செவ்வாய்க்கிரகவாசிகள் எல்லோரும், விசுவையும், லதாவையும் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, எந்த விதப் ப்ரதிப்பலிப்பையும் காட்டவில்லை! பயத்தை மறைத்துக் கொண்டு, “ஹாய்” என்று கையாட்டினாள் லதா!

கிரகவாசிகள் கையசைப்பார்கள் என எதிர்பார்த்த, லதாவும் விசுவும் ஏமாந்து, ஒருவரையெருவர் பார்த்துக் கொண்டு, ராக்கெட்டிலிருந்து இறங்கினார்கள்!

சமதளப் பரப்பில், இருவரும் குதித்ததும், கிரகவாசிகளின் தலைவன் போல இருந்த மீர், அருகில் வந்தான்! அவனைக் கண்டதும், லதா, விசுவின் பின்னால் ஒளிந்து கொள்ள, அவன் விசுவிடம் கையாட்டி, தன் கொம்புகளைத் தொட்டுக் காட்டி, ஏதோ புரியாத மொழியில் கேட்டான்!

விசு தனக்குத் தெரிந்த, ஏழு மொழிகளிலும் பேசினான்! மீருக்கு எந்த ஒரு மொழியும் புரியவில்லை என்பதை உணர்ந்த லதா, மெதுவாக அவன் அருகே வந்து, சைகைகளால், “நாங்கள் வேற்று கிரகக்காரர்கள்! உங்கள் செவ்வாக்கிரகத்திற்கு விஜயம் செய்திருக்கிறோம்!” என்று அபிநயம் செய்து காட்டினாள்! மீர் தனக்கு எதுவும் புரியவில்லை என்று அபிநயம் செய்தவன், தனது கூட்டத்தினரை அழைத்தான்! எல்லோரும் அருகில் வர, ஒரு சிலர் லதாவை விநோதப் பொருள் போல, தொட்டுப் பார்க்க ஆரம்பித்தனர்!

விக, அவளை ஏறக்குறைய பொத்திப் பாதுகாத்து நின்றவாறு, திரும்பவும், கை சைகைகளால், நாங்கள் பூமியிலிருந்து வந்திருப்பதையும், செவ்வாய்க் கிரகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டுத் திரும்பிப் போய் விடுவதாகவும் விவரித்தான்! கூட்டத்திலிருந்து ஒரு கிரகவாசி, விக சைகைகளால் சொன்னதைப் புரிந்து கொண்டு, மீரிடம் செவ்வாய்ச் கிரக மொழியில் விவரித்தான்! மீர் அவனைக் ‘காப்’ என்றழைத்ததைப் புரிந்து கொண்ட விசு, “மிஸ்டர் காப்” என்று அவனை அழைத்து, திரும்பவும் “நாங்ள் தங்குவதற்கு, இட வசதி செய்து கொடுக்கச் சொல்லுங்க. இந்த லதா என்னும் பெண்ணுக்குத் தனியாகத் தங்குவதற்கு வசதி செய்ய முடியுமா?” என்று கேட்டான் அபிநயத்தவாறு!

காப், தன் தலைவர் மீரிடம் விவரிக்க… மீர், “தாராளமாக, நமது விருதினர் மாளிகைக்கு அழைத்துச் செல்!” என்று அவர்கள் மொழியில் சொன்ன காப், விசுவிடம் விவரித்தான்!

கொஞ்ச நேரத்தில், கூட்டம் கலைந்து போக மீர் சொல்லிய ஒரு நிமிடத்தில், படகு சாயலில் ஒரு வாகனம் வந்து சேர, காப் விசுவிடம், “முதலில், எங்கள் செவ்வாய்க் கிரகத் தலைவரைச் பார்க்கப் போகிறோம்! மீர் உங்களை அழைத்துச் செல்வார்!” என்று விவரித்தான்.

“மீருக்கு நான் சொல்வது புரியவில்லை! நீங்கள் கூடவே வந்தால், விவரிப்பதற்கு உதவியாக இருக்கும்!” என்றான் விசு! விசு சொன்னைதைக் காப் மீரிடம் சொல்ல, நால்வரும் வாகனத்தில் ஏறிச், செவ்வாய்கிரகத் தலைவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்!

செவ்வாய்க் கிரகத் தலைவன் மிசா, தன்னுடைய சகாக்களுடன் வந்து, விசுவையும், லதாவையும் செவ்வாய்க் கிரக முறைப்படி அழைத்துக் கொண்டு சென்றான்! முதலில்… அருந்துவதற்கு மிருக ரத்தம் பரிமாறப்பட விசுவும், லதாவும் குடிக்க முடியாமல் திணறினர்! காப் விவரம் சொல்ல லதாவிற்கும், விசுவிற்கும் வேறுவிதப் பானம், பறிமாறப்பட்டது! அவர்களுக்கு முதலில் இன்னொரு கிரகம் இருப்பதும் அதில் மனிதர்கள் ஜீவிப்பதும், காப் மூலம் தெரியப்படுத்த, பல்லோரும் ஆச்சரியமாகப் பேசிக் கொண்டார்கள்!

எல்லாம் பேசி முடித்த பிறகு.. மீசா, “நீங்கள் செவ்வாய்க் கிரகத்திற்கு ஏன் வந்தீர்கள்?” என்று காப் மூலம், விசுவிடம் கேட்டான்!

“நாங்கள் ஏற்கனவே, நிலவில் குடியேறினோம்! அங்கேயும் போதுமான இடம் காணாததால், செவ்வாய்க்கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற முடியுமா என்ற முயற்சியில் தான், செவ்வாய்ச் கிரகத்திற்கு வந்தோம்!” என்றான் விசு! அவன் சொன்னதைக் காப் விவரிக்க அங்கிருந்த எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்! விசுவிற்கும், லதாவிற்கும் செவ்வாய்க்கிரகத் தலைவன் மீசாவும், அவனுடைய சகாக்களும், சிரித்ததன் காரணம், புரியாமல் தவித்துக் கொண்டிருக்க. சிரித்து முடித்து வீட்டு, “செவ்வாய் கிரகத்தில் இருக்கின்ற கிரகவாசிகளுக்கு இடம் போதாததால், நாங்கள் வீனஸ் கிரகத்தில் இறங்கி, எங்கள் கிரகவாசிகளைத் தங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.!” என்றான காப்.

லதாவிற்கும், விசுவிற்கும் ஆச்சரியம், ஏற்பட, விசு “அப்படியானால், நாங்கள் மனிதர்களை வீணஸ் கிரகத்தில் தங்க வைக்க முயற்சிக்கலாமா?” என்று கேட்டான்!

“வீணாகப் பிரச்சினைகளை வளர்க்க வேண்டாம்! வேறு கிரகம் தேடிப் பாருங்கள்!” என்று மீசா சொன்னதை, காப் விவரிக்க, விசுவும், லதாவும் திரும்பவும் தாங்கள் வந்த ராக்கெட்டின் அருகில் கொண்டு விடப்பட்டார்கள்!

காப், தன் தலைவன் மீருடன், இருவரையும் வழியனுப்ப, லதாவும், வீசுவும் ராக்கெட்டிற்குள் வந்து, பூமிக்குக் கிளம்பினார்கள்!

– தினபூமி ஞாயிறு மலர்.

Print Friendly, PDF & Email
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *