சந்தோஷ முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2023
பார்வையிட்டோர்: 2,083 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வருசத்துக்கு ஒரு நாள் தீவாளி வரது..” என்று ஆரம்பித்தாள் தங்கம்.

“ஆமாம், அதுக்கென்ன ? நீ தினந் தினம் தீவாளி வரணும்னு சொல்றியா?” என்று எரிந்து விழுந்தான் தம்பு.

“அதுக்கில்லை, நான் சொல்றது! நல்ல நாளும் அதுவுமா நம்ம கையிலே நாலு காசு இல்லே. குழந்தையானா இப்ப இருந்தே, ‘அப்பா எனக்குத் தீவர்ளிக்கு ரொம்ப ரொம்பப் பட்டாசுக் கட்டு வாங்கிக் கொடுப்பாரு இல்லே!’ன்னு சொல்லிச் சொல்லிக் குதிக்குது!” என்றாள் தங்கம்.

குழந்தை என்றதும் தம்புவின் கோபமெல்லாம் பறந்துவிட்டது. “இந்த வருசம்தான் மானம் சதி பண்ணிடுச்சே, என்னா பண்றது? நல்ல நாளும் அதுவுமா எங்கே போய் நாலு காசு கடன் கேட்கிறது? கூலி வேலையும் கிடைக்கலே. நாலு கலம் விதை நெல்லு இருக்குது பாரு, அதை வித்துத்தான் இந்த வருசம் தீவாளி கும்பிடணும். வண்டி மாட்டை வித்துடலாம்னு பார்த்தாலும் நாளைக்குத் திடீர்னு மழை பேஞ்சா உழவுக்கு என்ன பண்றதுன்னு கவலையாயிருக்குது !” என்று சொல்லி ஏங்கினான் தம்பு.

“வேறே என்ன பண்றது? பகவான் தான் நம்ம பங்கிலே இருக்கணும்!” என்று சொல்லிவிட்டு, உள்ளே போவதற்காக நடையை விட்டு எழுந்தாள் தங்கம்.தம்புவும் அதுவரை தாடையில் அடக்கிவைத்திருந்த புகையிலைத் திப்பியைத் துப்புவதற்காக வாசற் பக்கம் வந்தான்.

அந்தச் சமயத்தில் தபாற்காரன் ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து தம்புசாமியின் கையில் கொடுத்துவிட்டுப் போனான்.

சென்னை,5-11-’42.

தேவரீர் அண்ணா அவர்களுக்கு, வணக்கம்.

இந்த வருஷம் இவர் தீபாவளிக்கு அங்கே வரவேண்டு மென்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘கல்யாணமாகி நாலு வருஷமாகிறது. இன்னுமா நமக்கு அங்கே தீபாவளி?’ என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்; கேட்கவில்லை. உன்னுடைய கஷ்டம் எனக்குத் தெரியும்; அவருக்கு என்ன தெரியும்? ‘நல்ல நாளும் அதுவுமா நம்ம குழந்தையைக் கூட்டிக்கொண்டு ஒருத்தர் வீட்டுக்குப் போகக்கூடாது’ என்றுகூட நல்லவிதமாகச் சொல்லிப் பார்த்தேன். ‘எனக்கு உடம்பு சரியாயில்லை; எங்காவது நாட்டுப்புறத்துக்குப் போய் நாலு நாளாவது தங்க வேண்டும்போலிருக்கிறது’ என்று சொல்லுகிறார். என்னால் அதைத் தட்டிப் பேச முடியவில்லை. அப்படித் தட்டிப் பேசினாலும், ‘உன் அம்மா வீட்டு லட்சணம் அவ்வளவுதான்!’ என்று ஏசிக் காட்ட ஆரம்பித்துவிடுவார். நான் என்ன செய்வது, அண்ணா! நாங்கள் வந்தால் புடவை, வேட்டி, பாவாடை என்றெல்லாம் வாங்கிக் கொடுத்தாகவேண்டும். அவர் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கிற பணத்தில் மிச்சம் பிடித்து நான் பதினைந்து ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். வரும்போது அதைக் கொண்டு வந்து அவருக்குத் தெரியாமல் உன்னிடம் கொடுக்கிறேன். அதைக் கொண்டு உன் சக்திக்கு ஏற்றபடி ஏதாவது மரியாதை செய்து எங்களை அனுப்பி வைத்துவிடு. என்னால் முடிந்தது அவ்வளவுதான். வேறு நான் என்ன செய்ய முடியும்? தீபாவளிக்கு முதல் நாள் நாங்கள் வருகிறோம். நீ திண்டிவனம் ஸ்டேஷனுக்கு வரவேண்டாம்; முறுக்கேரிக்கு வண்டியைக் கட்டிக்கொண்டு வந்து பஸ் நிற்குமிடத்தில் காத்திருந்தால் போதும்.

அன்புள்ள தங்கை, தனகோட்டி.

இந்தக் கடிதத்தைத் தம்பு படிக்கக் கேட்ட தங்கம், இதுவும் நமக்குச் சோதனை தான்! என்ன பண்றது? அவங்க பதினைந்து ரூபா கொண்டுவந்து கொடுத்துட்டா, அதிலே எல்லாம் ஆயிடுமா? அந்த நெல்லையும் வித்துத் தான் அவங்களைச் சரிப்படுத்தி அனுப்பணும். நம்ம அருமைக் குழந்தைக்குக்கூட ஒரு கந்தை எடுத்துக் கொடுக்க முடியாதுபோலிருக்குது!” என்று சொல்லி வருத்தப்பட்டாள்.

தம்புசாமியும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுத் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டான்.

***

தம்புவின் வீட்டில் அவன் மனைவியையும் குழந்தையையும் தவிர வேறு ஒருவரும் கிடையாது. சிறுவாடி கிராமத்திலேயே அவனைப்போன்ற ஏழை விவசாயி ஒருவனும் இல்லை. நல்ல உழைப்பாளிதான்; இருந்தாலும் என்ன? வறுமை நீங்கிவிடுமா? வான மழை பொழிந்தால்தான் அவனுடைய வாடிய வயிறு நிறையும். அவனுக்கு இருந்த சொற்ப நிலத்துக்கும் ஏரிப் பாய்ச்சலோ, ஆற்றுப் பாய்ச்சலோ ஒன்றும் கிடையாது. தம்புவின் ஒரே தங்கை தனகோட்டி. பட்டணத்தில் கொடுத்தால் பச்சைப் பசேரென்று வாழ்வாள் என்று எண்ணி, மில் தொழிலாளியான தங்கவேலனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்திருந்தான். பிற்காலத்தில் அவர்கள் நமக்கு ஏதாவது உதவி செய்வார்கள் என்று எண்ணித்தான் தம்பு அவளை அப்படிக் கட்டிக் கொடுத்தது. ஆனால் உலகத்தில் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் நடக்கிறதா? அவர்கள் இவனுக்கு உதவி செய்யாததோடு நின்றிருந்தா லாவது எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அது தான் இல்லை; அவர்கள் இவனிடம் அடிக்கடி உதவி கோரினார்கள். உபத்திரவம் தாங்க முடியாமல் தம்பு தவித்துக் கொண்டிருந்தான். ஆனால், தன் மனைவி அவர்கள் மீது குற்றம் குறை சொல்வதற்கு மட்டும் அவன் எப்பொழுதும் இடம் கொடுப்பதில்லை.

***

தீபாவளிக்கு முதல் நாள். தம்பு அன்று காலையில் எழுந்ததும் கட்டை வண்டியைக் கட்டிக்கொண்டு முறுக்கேரிக்குச் சென்று அவர்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களும் வந்தார்கள். வண்டியில் ஏறிக் கொண்டார்கள். தம்பு வேகமாக வண்டியைச் செலுத்தினான். வழியில் அவன் தன் உண்மை மனோ நிலையை ஒளித்து, அவர்களுடன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தான்.

முதல் நாள் இரவு நல்ல மழை பெய்திருந்தது. எனவே, வழியில் சேற்றில் சிக்கிக் கொண்டது வண்டி. தம்பு தன்னால் ஆனமட்டும் வண்டி கிளம்புவதற்காக மாட்டை அடித்து விரட்டிப் பார்த்தான். மாடுகளும் ஆனமட்டும் இழுத்துப் பார்த்தன ; வண்டி அசையவில்லை. அப்பொழுது தனகோட்டி, “மாட்டைப் போட்டுச் சும்மா அடிக்காதே, அண்ணா!” என்று சொல்லிவிட்டுத் தன் கணவனை நோக்கி, “அங்கே ‘பஸ் ‘ஸைத் தள்ளினாயோ, இல்லையோ? இங்கே இறங்கி, இந்தக் கட்டை வண்டியைக் கொஞ்சம் தள்ளேன்!” என்று லாகவமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

விஷயம் என்னவென்றால், அவர்கள் வரும்போது வழியில் ‘பஸ்’ நின்றுவிட்டது. கண்டக்டர் பிரயாணிகளை யெல்லாம் இறக்கிவிட்டு ‘பஸ்’ஸைக் கொஞ்சம் தள்ளி விடச் சொன்னான். அப்படித் தள்ளிவிட்டவர்களில் தங்கவேலனும் ஒருவன். ஆனால், அவனுக்குப் ‘பஸ்’ ஸைத் தள்ளிவிடும்போது அவமானமாயில்லை; கட்டை வண்டியைத் தள்ளச் சொன்னபோது தான் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வண்டியிலிருந்து கீழே இறங்கிச் சும்மா நின்றான்.

அவனுடைய முகபாவத்திலிருந்து விஷயத்தைத் தெரிந்துகொண்ட தம்பு, தானே இறங்கி வண்டியைத் தள்ளினான். வண்டியும் நகர்ந்தது. எல்லோரும் வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்ததும், விதை நெல்லை விற்றுத் தன் மனைவியிடம் கொடுத்து வைத்திருந்த பத்து ரூபாயைப் பெற்றுக்கொண்டான் தம்பு. அவன் தங்கை தன் கணவனுக்குத் தெரியாமல் கொடுத்த பதினைந்து ரூபாயையும் வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். தீபாவளிக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வருவதற்காகத் திண்டிவனத்துக்குக் கிளம்பினான்.

“அண்ணா! சேலையில் ரெண்டு இழை பட்டு நூலாவது இருக்கட்டும்!” என்று எச்சரித்தாள் தன்கோட்டி.

“மாமா! எனக்குக் கொட்டடி போட்ட பாவாடை!” என்றது அவள் குழந்தை.

“அப்பா! எனக்கு மத்தாப்பு!” என்றது தங்கத்தின் குழந்தை.

“அப்போ உனக்குப் பாவாடை வேணாமே?” என்று கேட்டான் தம்பு.

“அதுவுந்தான் வேணும்!” என்றது அந்தச் சமர்த்துக் குழந்தை.

“இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்கே போகிறது?” என்று எண்ணிக்கொண்டே திண்டிவனத்தை நோக்கி நடந்தான் தம்பு.

***

அன்று மாலை ஜவுளி தினுசுகளுடனும், பட்டாசுக் கட்டுகளுடனும் தம்பு வீடு வந்து சேர்ந்தான். அவற்றைப் பார்த்த தங்கம், தனக்கும் தன் குழந்தைக்கும் ஒரு ஜவுளியும் இல்லாமலிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தாள். இது முதலிலேயே அவளுக்குத் தெரிந்ததுதான் என்றாலும் அவளுக்கு இப்பொழுது என்னமோ கொஞ்சம் எரிச்சலாய்த்தான் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். தனகோட்டியையும், அவள் கணவனையும் காணவில்லை. எனவே தம்புவைப் பார்த்து, “ஆமாம், இப்படி வாங்கிக்கிட்டு வந்துட்டியே, நாளைக்கு அவங்க புதுத் துணியை உடுத்திக்கிட்டா, நாம் என்னத்தைக் கட்டிக் கிட்டு அவங்களுக்கு எதிரே நிற்பது?” என்று கேட்டாள்.

“நான் என்ன பண்ணட்டும், தங்கம்! துணிமணிகளின் விலை சொல்ல முடியாத கிராக்கி, இப்போ!” என்றான் தம்பு.

“நமக்குத்தான் இல்லாமற் போகட்டும்; நல்ல நாளும் அதுவுமா, குழந்தை ஒரு பாவாடைக்குக்கூடவா வழியில்லாம லிருப்பது?” என்று கேட்டாள் தங்கம்.

தம்பு தலையைச் சொறிந்துகொண்டே, “அது தான் பட்டாசுக் கட்டு நிறைய வாங்கிக்கிட்டு வந்திருக்கேனே!” என்றான் ஒன்றும் தோன்றாமல்.

“அதை உன் தலையில் போட்டுக் கொளுத்திக் கொள்ளு !” என்று தங்கம் எரிந்து விழுந்தாள்.

இந்தச் சமயத்தில் தன்கோட்டி வாடிய முகத்துடன் அங்கு வந்து சேர்ந்தாள். அவளைப் பார்த்ததும், “ஏன், அம்மா! என்ன நடந்தது?” என்று கேட்டான் தம்பு.

“அவர் போயிட்டாரு!” என்றாள் தனகோட்டி.

“எவரு…?”

“அவர்தான்!”

“என்னாத்துக்கு?”

“நான் வழியில் கட்டை வண்டியைக் கொஞ்சம் தள்ளிவிடச் சொன்னேனோ இல்லையோ, அதுக்காக ‘அடுத்தடுத்து உங்க வீட்டுக்கு வந்தா, கட்டை வண்டியையும் தள்ளச் சொல்லுவே; கட்டை வெட்டிப் போடவும் சொல்லுவே!’ன்னு அவர் கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போறேன்னு போயிட்டாரு. அவர் போன அப்புறம் நான் மட்டும் இந்தக் குழந்தையை வச்சிக்கிட்டு இங்கே எப்படி அண்ணா, இருப்பேன்?’ என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டாள் தனகோட்டி.

“எப்போ போனாரு?” என்று சோகமே உருவாய்க் கேட்டான் தம்பு.

“இப்பத்தான், அண்ணா!” என்றாள் தனகோட்டி.

“அட தெய்வமே! எல்லாம் எனக்கு இப்படித்தானா வந்து சேரணும்? – அழாதே அம்மா, அழாதே! இந்நேரம் அவன் திண்டிவனம்கூடப் போயிருக்க மாட்டான். நான் ஒரே ஓட்டமாய் ஓடி, அவனை எப்படியாச்சும் சமாதானம் பண்ணி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு, உடனே எடுத்தான் ஓட்டம் தம்பு.

நல்லவேளையாகக் கொஞ்ச தூரத்திலேயே அவன் தங்கவேலனைக் கண்டு பிடித்து விட்டான். காரணம், உண்மையாகவே கோபித்துக்கொண்டு ஊருக்குப் போய் விட வேண்டுமென்றால் தங்கவேலள் அதற்குள் போயிருக்கலாம். ஆனால், அவன் கோபித்துக் கொண்டது வெறும் ஜம்பத்துக்காக. எப்படியும் தம்பு தன்னைத் தேடி வந்து சமாதானம் செய்வான் என்று அவனுக்குத் தெரியும். அதற்காகவே அவன் மெல்ல வழி நடந்து கொண்டிருந்தான்.

அவனை நெருங்கி, “நல்ல நாளும் அதுவுமா இப்படிக் கூடச் செய்யலாமா?” என்று சாவதானமாகக் கேட்டான் தம்பு.

“என்னத்தைச் செய்துட்டாங்க?” என்று விறைப்புடன் கேட்டுக்கொண்டே, இன்னும் கொஞ்சம் விரைவாகக் காலை இழுத்து வைத்தான் தங்கவேலன்.

“என்ன செய்துட்டேன்னு நான் சொல்றேன்? அங்கே அந்தப் பொண்ணு அழுவுது; குழந்தை வேறே கத்துது. என்னமோ அறியாதது, ஏதோ விளையாட்டுக்குச் சொல்லிப்பூடிச்சி. அதுக்குப் புத்தி அவ்வளவு தான். தெரிஞ்சாச் சொல்லியிருக்குமா? நீ வா, வீட்டுக்கு! நான் அதைத் திட்டம் பண்ணி வைக்கிறேன்!” என்று சொல்லி, அவன் கையைப் பிடித்து இழுத்தான் தம்பு.

தங்கவேலன் இரண்டு மூன்று முறை அவன் பிடியிலிருந்து விலகிக்கொண்டான். தன்னால் முடிந்தமட்டும் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டான். தோளின் மேலிருந்த துண்டை எடுத்து இரண்டு மூன்று முறை உதறிப் போட்டுக்கொண்டான்.

“அந்தப் பெண்ணின் சகவாசமே எனக்கு இனிமே வேண்டாம்!” என்று மனமறிந்து ஒரு பொய்யையும் சொன்னான். கடைசியில், “இப்போ உன் மூஞ்சியைப் பார்த்துத்தான் வறேன்!’ என்று சொல்லிக்கொண்டே தம்புவின் பின்னால் நடந்தான்!

அந்த வெட்கங் கெட்டவனுக்கு, “ஆண் ஜன்மம் என்றால் அவ்வளவு உயர்ந்தது!” என்று எண்ணம்!

***

மறுநாள் தீபாவளி; எல்லோரும் எண்ணெய் ஸ்நானம் செய்தார்கள். புது ஜவுளிகளை எடுத்து விருந்தாளிகளுக்குக் கொடுத்தான் தம்பு. தன் குழந்தைக்குப் பட்டாசுக் கட்டுகளைக் கொடுத்துக் குஷிப்படுத்தினான். அந்தக் குஷியில் குழந்தை புதுப் பாவாடையை மறந்து விடுமென்பது அவன் எண்ணம். அந்தப் பொல்லாத குழந்தையா மறந்துவிடும்? “அப்பா! எனக்குப் பாவாடை?” என்று எல்லோருக்கும் எதிரிலேயே அது கேட்டு வைத்தது!

“இப்பவே போட்டுக்கிட்டா நீ பாவாடையை அழுக்காக்கி விடுவேம்மா! அதுன்னா பட்டணத்துக் குழந்தை; நாசூக்கா வச்சுக்கும். நீ சாயங்காலம் கட்டிக்கோயேன்!” என்று சமாளித்துப் பார்த்தான் தம்பு.

“ஊஹும்” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்து விட்டது அது.

“குழந்தையை ஏன் அழ விடறே? இப்பொழுதே தான் கட்டிவிடேன்!” என்றான் திண்ணையில் உட்கார்ந்திருந்த தங்கவேலன்.

தம்புவுக்குத் தன் மானமே கப்பலேறுவது போல் இருந்தது. என்றாலும் அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “அதுக்கென்ன தெரியும்? இப்போ ஒண்ணும் வேண்டாம்!” என்று சொல்லிவிட்டு, “அம்மா பணியாரம் எல்லாம் பண்ணி வைக்கட்டும். நாம் தென்னந் தோப்புக்குப் போய் இளநீர் குடிச்சுட்டு வரலாம், வா!” என்று சொல்லிக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

தங்கம் புதுப் புடவை உடுத்திக் கொள்ளாம லிருப்பதைக் கவனித்த தனகோட்டி, “ஏன் அண்ணி! நீ புதுப் புடவை கட்டிக்கலையா?” என்று கேட்டாள்.

தன்னால் முடிந்த மட்டும் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு, “எனக்கென்ன, இப்போ அவசரம்? மத்தியானம் கட்டிக்கிட்டாப் போவுது!’ என்று சொல்லிவிட்டு, அடுப்பங்கரைக்குச் சென்று விட்டாள் தங்கம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தம்பு வீடு திரும்பினான். முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டு அங்குமிங்குமாக நடமாடிக் கொண்டிருக்கும் தங்கத்தைப் பார்த்தபோது, அவனுடைய கவலை பன்மடங்கு அதிகரித்தது. அத்துடன் அவனுடைய குழந்தை மீண்டும் புதுப் பாவாடை வேண்டுமென்று அவனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டது. அவ்வளவுதான், தம்பு பைத்தியக்காரனானான்! ஒன்றும் புரியாமல் அவன் தனக்கு எதிரே மாட்டியிருந்த கண்ணபிரான் படத்தைப் பார்த்தான். அந்தப் படத்திலிருந்த கண்ணன் திருவுருவம் அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலிருந்தது.

“கண்ணா! இப்படியும் என்னைச் சோதிக்கலாமா?” என்று முணுமுணுத்தான் தம்பு.

***

இந்தச் சமயத்தில்தான் ‘கதைகள் சுபமாக முடிய வேண்டும்’ என்ற கட்சிக்காரர்கள் சந்தோஷப்படக்கூடிய ஓர் அதிசயச் சம்பவம் நிகழ்ந்தது.

தம்புவுக்கு எதிரே கிருஷ்ண பரமாத்மா பிரசன்னமானார். “பக்தா! கவலை வேண்டாம். இதோ, உனக்குப் புது வேஷ்டி!” என்று இரண்டு பட்டுப் பீதாம்பரங்களை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.

தம்பு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக் கண்களில் ஒத்திக்கொண்டான்.

“தங்கம்! இதோ, உனக்குப் பட்டுப் புடவை!” என்று ஒரு பட்டுப் புடவையை வரவழைத்து அவளிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா.

அவளும் அளவில்லாத ஆச்சரியத்துடன் அதைப் பெற்றுக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

“குழந்தாய்! இதோ, உனக்கும் கொட்டடி போட்ட பாவாடை” என்று ஒரு பாவாடையை வரவழைத்துக் குழந்தையிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா

குழந்தையும் குஷியுடன் அதைப் பெற்றுக்கொண்டு கும்மாளம் கொட்டிற்று!

இவற்றையெல்லாம் பார்த்த தம்புவுக்கு, “தீபாவளிக் காக விற்றுவிட்ட அந்த நாலு கலம் விதை நெல்லையும் கிருஷ்ண பரமாத்மாவிடமிருந்தே வாங்கிக் கொள்வோமே!” என்று தோன்றிற்று. உடனே அவன் பகவானை நெருங்கினான். அவனுடைய துரதிர்ஷ்டம் அதற்குள் அவர் மாயமாய் மறைந்துவிட்டார்!

அடுத்த கணம் வீட்டுக் கூரையைப் பொத் துக்கொண்டு பட்டாசுக் கட்டுகள் படபட வென்று விழுந்தன.

குழந்தைகள் இரண்டும் ஒன்றை யொன்று தள்ளிய வண்ணம் விழுந்தடித்துக்கொண்டு சென்று அந்தப் பட்டாசுக்கட்டுகளை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டன !

***

“இதென்ன, கடைசியில் கதை ஒரே பிதற்றலா யிருக்கிறதே!” என்கிறீர்களா? சரியாய்ப் போச்சு! தீபாவளியும் அதுவுமாய்க் கதையைச் சந்தோஷமாய் முடிப்பதற்கு இந்தத் தரித்திரம் பிடித்த நாட்டில் வேறு என்னதான் செய்து தொலைப்பது?

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *