யாரென்று மட்டும் சொல்லாதே…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 15,069 
 
 

(2009ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-22

‘இது, ஐம்பது கோடி ரூபாயை உங்க அம்மாகிட்ட இருந்து பறிக்கிறதுக்காக நரிக்குடி ஜமீன்தார் போட்ட திட்டம். சாரி… சாரி… அவர் பேரனை உனக்கு கட்டி வைக்க திட்டம். அப்படி மட்டும் நடந்திருந்தா ஐம்பது கோடி என்ன… உங்க அம்மாகிட்ட இருக்கிற அவ்வளவு சொத்துமே அவங்களுக்குத்தானே?’

ஐம்பது கோடி ரூபாய் போனாலும் பரவாயில்லை. தானே நாகமாணிக்கத்தை வாங்கிவிட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்ட லட்சுமியின் முடிவு அர்ஜுனை பெரிய அளவில் யோசிக்கச் செய்ய – சாமியார் சற்று சுருதி குறைந்தவராக லட்சுமியைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

“என்ன சாமி..என்னோட முடிவு உங்களுக்கு ஆச்சரியத்தைத் தருதா?”

“…”

“உங்களால பதில் சொல்ல முடியலை இல்ல…?”

“…”

“நான் யாரையும் ஏமாற்ற நினைக்கிறவ இல்லை, சாமி. நாமகிரியம்மாவும் ஐம்பது கோடின்னு ஒரு விலை வெச்சிட்டாங்க. அவங்களே ஒரு பத்து கோடியை ராஜதுரைக்கு கொடுத்து, அவன் வாயை அடைக்க முடிவு செய்துட்டாங்க. 

ராஜதுரையும் அரசியல்ல இருந்தவன். எது எதுக்கு என்ன விலைன்னு அவனுக்கு தெரியும். பணத்தைக் கொடுத்து, நாமகிரி சமாதானத்துக்கு வரும்போது ‘அதெல்லாம் முடியாது, நான் பழிக்குப் பழி வாங்கியே தீருவேன்’னு சொல்ல நரிக்குடி ஜமீன்லேயும் இப்ப யாருமில்லை…”

“…”

”என்ன சாமி… வாயே திறக்க முடியலையா? கொஞ்சம் முந்திதான் எங்க இரண்டு பேர் சந்தோஷமும், துக்கமும் உங்க கையிலங்கிற மாதிரி பேசினீங்க. நான் விலைக்கு வாங்குகிற முடிவுக்கு வந்த உடனேயே ‘கப்சிப்’னு ஆயிட்டீங்களே…?”

“உண்மைதான் லட்சுமி… உங்களோட இந்த முடிவை நான் எதிர்பார்க்கலை…”

”எப்பவும், யாரும் எதிர்பார்க்காததைச் செய்யறது தான் இந்த ‘லயன்’ லட்சுமி.”

“பாராட்டுறேன், லட்சுமி. நாகமாணிக்கம் உங்க அவ்வளவு பேரையும் எப்பவும் சரியான பாதையிலேயே செலுத்தறதுதான், இதுக்கெல்லாம் காரணம். அது உங்ககிட்ட இருக்கிறவரை யாரும், எதுவும் செய்துக்க முடியாது. 

நான் இப்ப போறேன்! கொஞ்ச நாள் கழிச்சு வருவேன். அப்ப நான் செய்ய நினைச்ச நாக பந்தன பூஜைக்கு அந்தக் கல்லை கொடுத்து உதவி செய்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். இப்ப நான் மனசு வருத்தப்படும்படி ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிடுங்க…”

சாமியார் சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து எகிறின வேகத்தில் அடங்கியவராக, திரும்பியும் போகத் தொடங்கி விட்டார். லட்சுமி அதைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், அர்ஜுன் அவர் போவதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். லட்சுமிக்கு, தான் அப்போதே ஒட்டுமொத்தமாக எல்லா விஷயங்களிலும் வென்றுவிட்ட மாதிரி ஓர் உணர்ச்சி, 

எங்கோ ஒரு பெரிய தவறு மிக அழகாக திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது போல் ஓர் உள்ளுணர்வு, அர்ஜுனுக்கு. 

தீவிரமாக அவன் யோசித்துக்கொண்டிருக்க – மல்லிகை நறுமணம் கிறங்கடிக்க – தலைக்குக் குளித்த நிலையில் கூந்தலை கோதிக்கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தாள், பிரியா. 

பேச்சையும் தொடங்கினாள். 

“என்ன அர்ஜுன்… என்ன தீவிரமான சிந்தனை?”

“எல்லாம் உங்க அம்மா எடுத்திருக்கிற ஒரு முடிவைப் பத்திதான்.”

“அம்மா அப்படி என்ன முடிவு எடுத்திருக்காங்க?”

“அந்த நாகமாணிக்கத்துக்கு ஐம்பது கோடி ரூபாய் கொடுக்கப் போறாங்க…” 

“நிஜமாவா… அம்மாவா சொன்னாங்க?”

“என்ன கேள்வி இது, பிரியா. என் காதுல விழுந்ததைத்தான் நான் சொல்றேன்.”

“சரி… அதனால என்ன அர்ஜுன்?”

“ஒரு புளியங்கொட்டை அளவுள்ள கல்லுக்கு ஐம்பது கோடிங்கிறது என்னை என்னவோ பண்ணுது?”

“அளவு சின்னதுதான்… மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிதுங்கிற மாதிரி அது வந்ததாலதானே நமக்கும் கல்யாணமாச்சு?”

‘கல்யாணமானவரை சரி… ஆனா, எங்க அப்பா- அம்மா இதுவரை நம்மை வந்து பார்க்கலை. நானா போன் பண்ணினாகூட எடுக்கமாட்டேங்கிறாங்களே…”

“நீ என்ன சொல்ல வர்றே அர்ஜுன்?”

“அந்தக் கல்லுக்கு சக்தி இருக்கிறது உண்மைன்னா என் அப்பா அம்மா வந்து நம்மை வாழ்த்தி இருக்கணும்ல?”

“ஓ… நீ அப்படி ஒரு கோணத்துல வர்றியா?”

“அப்படி ஒரு கோணத்துல நான் வரலை… அந்த கோணம்தான் என்னைக் கேள்வி கேட்கவே வைக்குது…”

“கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷயம்தான்…”

“கொஞ்சம் இல்லை… நிறையவே!” 

“அப்ப என் அம்மாகிட்ட போய் அவசரப்பட வேண்டாம்னு சொல்லுவோமா?”

“இப்ப இருக்கிற நிலையில நாம சொல்றதை எல்லாம் உன் அம்மா கேட்க மாட்டாங்க”. 

“அப்ப என்ன பண்ணலாங்கறே…?”

“முதல்ல அது எந்த மாதிரி கல்லுங்கறதை நாம தெரிஞ்சுக்கணும். கோயம்புத்தூர்ல ஒரு நவரத்தின நிபுணர் இருக்கார். அவர்கிட்ட அந்த நாகமாணிக்கத்தைக் காட்டி, அவரோட விஞ்ஞானபூர்வமான பதில் என்னங்கறதை முதல்ல தெரிஞ்சிப்போம், பிரியா…”

“நாம இப்ப கல்லை கேட்டா அம்மா தருவாங்களா அர்ஜுன்?”

“கேக்காதே… எடுத்துக்கிட்டு உடனே கிளம்பு. கோயம்புத்தூர் போறதா சொல்லிட்டே புறப்படுவோம். 

கார்ல மதுரையில இருந்து நாலு மணி நேரப் பயணம். அங்க அந்த நிபுணர்கிட்ட ஒரு இரண்டு மணி நேரம் திரும்ப ஒரு நாலு மணி நேரம் – மொத்தம் பத்து மணி நேரம்.”

“அர்ஜுன்… ஒரு தடவை நான் அதை எடுத்துகிட்டு போயிட்டதால இந்தத் தடவை எடுக்கற மாதிரியே அம்மா வைக்க விரும்பலை. உண்மையைச் சொல்லப்போனா அது எப்பவும் ஒரு சிறு பர்சில்தான் இருக்கும். அதுவும் அம்மாவோட ‘ஜாக்கெட்’டுக்குள் இருக்கு…” 

“கடவுளே!” – அர்ஜுன் சற்று அவதியோடு தன் கையை குத்திக்கொண்டான். பலவித எண்ணங்களோடு எழுந்து நடந்தான். 

“அர்ஜுன்… ஒருவேளை உன் அப்பா – அம்மா இனிமே மனசு மாறி வரலாம்தானே?”

“அப்பாவும்,அம்மாவும் ஒரு நாள் மனசு மாறத்தான் போறாங்க. மாறித்தான் தீரணும். நான் அவங்களுக்கு ஒரே பையன். இப்ப அவங்களுக்கு என்மேல இருக்கிறது கோபம். வெறுப்பு இல்ல. ஆனா, நடக்க முடியாத பல விஷயங்களை நடத்தி வெச்சதா சொல்லப்படுற இந்த கல்லால என் அப்பா – அம்மாவோட கோபத்தை இப்ப மாத்த முடியாதா?”

“நீ கேக்கறதும் சரிதான்… அதே நேரம், வரிசையா நடந்த நல்ல விஷயங்களை எல்லாம் எந்தக் கணக்குல சேர்க்கிறது?”

“அதுல முக்காலே மூணு வீசம் ரொம்பவே தற்செயலா நடந்தவைதான்… மிச்சமுள்ள சில விஷயங்கள்தான் அமானுஷ்யமானவை…”

“சிலவோ… பலவோ… அமானுஷ்யம்னாலே அங்க ‘மிஸ்ட்ரி’ வந்துடுதே…”

“நீ அவசரப்படுறே பிரியா… சுருக்கமா சொல்றேன்… நாகமாணிக்கம்கறது உண்மையா இருந்து, அதுக்கு சக்தி இருக்கிறது நிஜமா இருந்து, அதனாலதான் நம்ம கல்யாணம் வரை எல்லாம் நடந்ததுன்னா அதுக்கு 50 கோடி ரூபாய்ங்கறது ரொம்ப அற்ப தொகை… அதேவேளை, அது வெறும் கண்ணாடி உருண்டைன்னா ஐம்பது கோடி ரூபாய்ங்கறது ரொம்பவே அநியாயமான தொகை…”

“நானும் அதை ஒத்துக்கிறேன்… நமக்குள்ள எதுக்கு அநாவசிய தர்க்கம். நீ சொன்ன மாதிரியே கல்லை பரிசோதனை பண்ணிப் பார்த்துடுவோம்…”

“கட்டாயமா பண்ணித்தான் தீரணும். இன்னொரு முக்கியமான தகவலை நான் உனக்கு இப்ப சொல்றேன். வந்துட்டு போன சாமியார், போலீஸ் நிலையத்துக்குள் நுழைஞ்சு ஒரு லாரி டிரைவர் மனசையே தன் வசிய சக்தியால கட்டிப் போட்டதா சொன்னார்…”

“அதனால?” 

“பொறுமையா கேளு… அப்படிப்பட்டவருக்கு உங்க அம்மாவோட ரவிக்கைக்குள் அந்த கல் இருக்கிறதைத் தெரிஞ்சிக்கிறதா கஷ்டம்?”

“நிச்சயமா இல்லதான்…” 

“அங்கதான் எனக்கும் சந்தேகம் வருது, பிரியா… அந்த சாமியாருக்கு மட்டும் உண்மையா அந்த கல் தேவைப்பட்டு இருந்தா – உங்க அம்மாவையும் வசியப்படுத்தி தன் பின்னாலேயே கூட்டிகிட்டுப் போய் – உங்கம்மா கையால அந்த மாணிக்கக் கல்லை எடுத்துக் கொடுக்க வெச்சிருக்கலாம்தானே?”

”நிச்சயமா.” 

“ஆனா, அப்படி செய்யாம உங்கம்மா, ‘ஐம்பது கோடி ரூபா கொடுத்து நான் வாங்கதயார் ஆயிட்டேன்’னு சொன்ன நொடியே – வாயடைச்சுப் போய் நின்னார், அவர். திரும்பிப் போகும்போதுகூட, ‘கொடுத்து உதவ முடிஞ்சா உதவுங்க’ங்கிற மாதிரி குரல்ல ஒரு கெஞ்சல்…”

“போதும் அர்ஜூன். எனக்கு இப்ப எல்லாம் புரிஞ்சுபோச்சு. அம்மா இப்படி ஒரு முடிவுக்கு வரணும்னே நிறைய விஷயங்கள் நடந்திருக்குன்னு நீ சொல்ல வர்றே… அப்படித்தானே?”

“சரியா சொன்னே… இது, ஐம்பது கோடி ரூபாயை உங்க அம்மாகிட்ட இருந்து சாமர்த்தியமா பறிக்கிறதுக்காக நரிக்குடி ஜமீன்தார் போட்ட திட்டம். சாரி… சாரி… அவர் பேரனை உனக்கு கட்டி வைக்க திட்டம். அப்படி மட்டும் நடந்திருந்தா ஐம்பது கோடி என்ன… உங்க அம்மாகிட்ட இருக்கிற அவ்வளவு சொத்துமே அவங்களுக்குத்தானே?”

“அர்ஜுன்…!”

“இப்பவே வாயைப் பிளந்தா எப்படி பிரியா… ? ஏதோ ஒருவகையில் அப்படி நடக்காம போனதால்தான் அம்பது கோடி ரூபாயா அது மாறி இருக்குன்னு நான் நினைக்கிறேன்.”

“வாவ்…அர்ஜுன், உன் யூகம் ரொம்பவே சரியா இருக்கும்…நீ சொல்றதைப் பார்த்தா இந்த சாமியாருக்கும், அந்த நரிக்குடி ஜமீனுக்கும்கூட ஏதோ சம்பந்தம் இருக்கணும்னு தோணுதுல்ல…?”

“எதுக்கு சந்தேகம்? அதைத் தீர்த்துக்க ஒரு வழி இருக்கு…”

“எப்படி அர்ஜுன்…?”

“நரிக்குடி ஜமீனோட போன் நம்பர் உன்கிட்ட இருக்கா?”

“அது என்ன பெரிய விஷயம்? சிட்டிபாபுகிட்ட கேட்டா கொடுத்துட்டுப் போறான்…”

“அவன் இப்ப எங்கே?” -அர்ஜுன் தேடலோடு நிமிர, எதிரில் சிட்டிபாபு வந்துகொண்டிருந்தான். 

“சிட்டி…”

”என்ன சார்?” – சிட்டிபாபு ஓடிவந்தான். 

“உங்ககிட்ட நரிக்குடி ஜமீன் நம்பர் இருக்கா?”

“டெலிபோன் நம்பரா?”

“ஆமா…” 

“இருக்கு சார்… ஆமாம், உங்களுக்கு எதுக்கு சார்?”

“துக்கம் விசாரிக்கத்தான்…”

“நீங்களா?” 

“அத்தைதான் விசாரிக்க சொன்னாங்க…”

“அப்ப சரி… இந்தாங்க நம்பர்?”

தன் செல்போனுக்குள் அடங்கி இருந்த நம்பரை ஒரு தேடலுக்குப்பின் கண்டுபிடித்து கொடுத்தான், சிட்டிபாபு. 

பின்னர் அவன் நகரவும், அர்ஜுனும் அந்த எண்ணைத் தட்டிவிட்டு – செல்போனை காதில் வைத்தான். 

பிரியா படபடப்போடு பார்த்துக்கொண்டே இருந்தாள். மறுமுனையில் யாரோ ஒருவர் எடுத்து, “யார்?” என்று கேட்டார். 

“நான் சங்கரானந்த சாமி பேசுறேன்… அங்கே பெரியவங்க யாரும் இல்லையா?”

“ஓ… சாமியா… இருங்க. அம்மாவை வரச் சொல்றேன்” – அந்த பதில் அர்ஜுனை துள்ளிக் குதிக்க வைத்தது. சில நொடிகளில் மறுமுனையில் நாமகிரி குரல் கேட்டது. 

“சொல்லுங்க சாமி… எங்கே இருந்து பேசுறீங்க?”

“வெளியே இருந்துதான் தாயி… லட்சுமி ஐம்பது கோடிக்கு கல்லை வாங்க ஒத்துகிட்டா போல தெரியுதே?”

“ஆமா… ஏன் உங்கக் குரல் ஒரு மாதிரி கேக்குது?”

“அதை ஏன் கேக்கிறே… தெரியாம புது இடத்து தண்ணியைக் குடிச்சுட்டேன்.”

“சரிங்க சாமி, எதுவா இருந்தாலும் நேரில் வாங்க பேசலாம். போன்ல எல்லாம் பேசவேண்டாம்னு உங்களுக்கு நான் பலமுறை சொல்லி இருக்கேன்ல…?”

“அதுவும் சரிதான்… நான் நேர்வர்றேன்…”

அர்ஜுன் செல்போனை அணைத்துவிட்டு, திரும்பினான். பிரியா அவனது புத்திசாலித்தனத்தைப் பார்த்து பிரமிப்பில் இருந்தாள். 

“பிரியா… உங்க அம்மா ஏமாறாம காப்பாத்தியே தீரணும்…” என்றான், அவனும் உறுதியான குரலில்… 

அத்தியாயம்-23 

‘லட்சுமி பணம் கொண்டுவந்து கொடுத்தா வாங்காதீங்க… கல்லை திருப்பிக் கேளுங்கன்னு சொல்றேன். அவ கொடுத்துட்டா நீ உடனே அம்பத்தொரு கோடியோடு வந்து அவளைப் பார்த்து, வியாபாரத்தை முடிச்சுக்கோ, அப்புறமா என்னையும் கவனிச்சுக்கோ.’

ஒரு பெரிய மோசடியை சாதுரியமாக கண்டறிந்து விட்ட அர்ஜுனை பிரியா எப்போதும் இல்லாத பரவசத்தோடு பார்த்தாள். அர்ஜுனுக்கோ அதை எப்படிச் சொல்லி, லட்சுமியைத் தடுத்து நிறுத்துவது என்கிற கவலை. பிரியாவுக்கும் அது புரிந்தது. 

“அர்ஜூன்… இப்ப அம்மாவை எப்படி தடுத்து நிறுத்தறதுங்கிறதுதானே உங்க கவலை?”

“ஆமாம்… நான் போன்ல பேசினதையும், பதிலுக்கு அந்த நாமகிரியம்மா பேசினதையும் உங்க அம்மா நம்பலைன்னா என்ன பண்ணுறதுன்னுதான் யோசிக்கிறேன்.”

“அப்படியில்ல அர்ஜுன். அம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை. அவங்ககிட்ட நாம எல்லாத்தையும் சொல்லுவோம். நிச்சயம் யோசனை பண்ணுவாங்க.”

“ஆமா… இப்ப உங்கம்மா எங்கே?”

அவன் கேட்க – அவள் தேடத் தொடங்கினாள். லட்சுமியோ அம்பாரி மாளிகை முகப்பில் உள்ள அவளது கணவரின் சமாதியில் இருந்தாள். 

நாகமாணிக்கக்கல்லை தான் வாங்கிவிட்டதாகவே அவள் மனசுக்குள்ளே ஓர் எண்ணம். 

“நீங்க க உயிரோடு இருக்கும்போதே இந்த மாணிக்கக்கல் கிடைச்சிருந்தா உங்களுக்கும் விமான விபத்து ஏற்பட்டிருக்காது. இருந்தாலும், இப்ப கிடைச்சதனால ஒண்ணும் குறைஞ்சுப்போயிடலைங்க… நம்ம மகளுக்கு, அவளுக்கு ரொம்பப் பிடிச்சவனே கணவனா வாய்ச்சுட்டான். நானும் ‘பத்மஸ்ரீ’ விருது வாங்கப் போறேன். மலை போல வந்த பல சிக்கல்கள் பனி போல விலகிடிச்சு. இதுவரை நடந்த நல்லவற்றைவிட, இனிதான் நிறையவே நல்லது நடக்கப் போகுது. இதுக்கெல்லாம் உங்க ஆசீர்வாதம் வேணும்”. 

கணவன் சமாதி முன் ஒரு நீண்ட பிரார்த்தனையை முடித்துவிட்டு லட்சுமி வெளியே வந்தாள். எதிரிலேயே பிரியா! 

“அம்மா… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்.”

“என்னம்மா?”

“உள்ளே வா…உன்கூட நான் பேசணும்” பிரியா கைகளைப் பிடித்துக்கொண்டு, லட்சுமியை உள்ளே அழைத்துச் சென்றாள். 

லட்சுமியின் தனியறைக்குள் நுழைந்து கதவையும் தாழிட்டவள், உள்ளே காத்திருக்கும் அர்ஜுனைப் பார்த்தாள். 

அவன் சொல்லத் தொடங்கினான். 


ஆஸ்பத்திரி. 

ராஜதுரை எதிரில் சாமியார் தாடியைத் தடவியபடி புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். 

“நான் சொல்றதைக் கேளு ராஜதுரை. பழி உணர்ச்சியை மூட்டைகட்டு. உனக்கு பத்து கோடி ரூபா நஷ்டஈடு தர, நரிக்குடி ஜமீனை இப்போ நிர்வாகம் பண்ணுற நாமகிரி முடிவு செய்திருக்காங்க. உனக்கும் எனக்கும் இருக்கிற சினேகத்தைத் தெரிஞ்சிகிட்டு அவங்க ஆள் ஒருத்தன் வந்து என்னைப் பார்த்தான். அவன்தான் நாமகிரி அம்மாகிட்ட என்னைக் கூட்டிட்டுப் போனான். அப்ப அந்தம்மா சொன்னதைத்தான் நான் சொல்றேன். 

“சாமி… பத்து கோடியெல்லாம் எனக்கு பெரிய தொகை இல்லை. அடுத்து நான் எம்.எல்.ஏ.வாக வந்தா இந்தப் பணத்தை ஒரு இரண்டு, மூணு காண்டிராக்ட்லையே எடுத்துடுவேன். இது உங்களுக்கு தெரியாதா?”

“சரி… நீ முடிவா என்ன சொல்றே?” 

“எனக்கு அந்த நாகமாணிக்கக்கல்லு வேணும் சாமி.”

“இப்ப அதோட விலை ஐம்பது கோடி ரூபா… அதை உன்னாலே தரமுடியுமா?”

“ஓ… லட்சுமி இப்ப அந்த அளவுக்கு அதுக்கு விலை வைச்சுட்டாளா?”

“பைத்தியக்காரா… அவ வைக்கல. வைச்சது, நாமகிரி. அவ வாங்கப்போறா, அந்தத் தொகைக்கு.”

“ஓ… சொத்தே போனாலும் கல்லு போயிடக் கூடாதுன்னு லட்சுமி நினைக்கிறா போல இருக்கு.”

“ஆமாம்ப்பா… அது அவகிட்டையே இருந்தா, அவ ஒருநாள் முதலமைச்சர் ஆனா நான் ஆச்சரியப்பட மாட்டேன்.”

“ஏன் சாமி… நான் அரசியல்லையே இருக்கிறவன். நான் ஆகமாட்டேனா?”

“மாணிக்கக்கல் உன்கிட்ட வந்து சேர்ந்தாதானே?”

“நீங்க எதுக்கு இருக்கீங்க? என்னை விடுங்க. உங்களுக்கு வேண்டாமா, அது?” 

“நான் கேட்டா லட்சுமி தருவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதை வைச்சு நான் ஒரு பூசை பண்ணினா போதும். அதுவும் ஒரு மண்டல காலம். அவ்வளவுதான்”. 

“சாமி…நானும் பணம் தர்றேன் சாமி. நீங்க அது எனக்குக் கிடைக்க வழி பண்ணுங்க.”

“நீ ஐம்பத்தொருகோடி கொடுக்கிறேன்னு சொல். நாமகிரி அதை உனக்கு தரும்படி நான் பண்ணுறேன்.” 

“லட்சுமியே அதே தொகையைக் கொடுக்க மாட்டாளா என்ன?”

“நிச்சயமா… அதை வாங்கிறதுல உங்க இரண்டு வேருக்கும் நடுவுல போட்டி ஏற்பட்டா அது இன்னும் அதிக விலைகூட போகலாம்.” 

“சாமீஈஈஈ!” 

“ஏன் பதறுறே? நான் உள்ளதைச் சொன்னேன். லட்சுமிக்கிட்ட ஐநூறு கோடிக்கு மேல சொத்து இருக்கு. உன்கிட்ட அவ்வளவு இருக்கா என்ன?”

“நிச்சயமா என்கிட்ட அவ்வளவு இல்லை. ஆனா, நான் அந்த நாமகிரி கேட்ட தொகையைத் தரத் தயாரா இருக்கேன். தப்பு தப்பு… அந்த அளவுக்குத்தான் லட்சுமி தயாரா இருக்காளே! நான் ஐம்பத்தொரு கோடியே தர்றேன். நீங்க எப்படியாவது எனக்கு அது கிடைக்கும்படி பண்ணுங்க.”

”சரிப்பா… நான் முயற்சி செய்யுறேன். ஆமாம், உன்கிட்ட இருக்கிற பணம் அவ்வளவும் கறுப்புதானே?”

“வெள்ளையா இவ்வளவு பெரிய தொகையை எப்படி சாமி வைச்சக்க முடியும்?”

சாமியார் அதற்கு பதிலாக ஒரு சிரிப்பு சிரித்தார். 

“என்ன சாமி… அடிக்கடி இப்படி சிரிச்சு என்னை பயமுறுத்துறீங்களே?”

“இல்ல… மக்கள் பணம் எப்படியெல்லாம் போகுதுன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்துடுச்சி.”

“வேணாம் சாமி… மக்களைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க. உங்களுக்கு மக்களைப் பத்தி எதுவும் தெரியாது. நம்ம ஜனங்க நல்லவங்களுக்கு தொடர்ந்து ஓட்டுப் போட்டதே கிடையாது. அவ்வளவு ஏன்… பாதி பேர் ஓட்டே போடுறதில்லையே?” 

“நீயா இதுக்காக வருத்தப்படுறே?”

“விடுங்க சாமி… ஜனங்களைப் பத்தி இப்ப எதுக்கு பேசிகிட்டு. இவங்களை என்னை மாதிரி ஆட்களால்தான் மேய்க்க முடியும். நீங்க மட்டும் நாகமாணிக்கக்கல்லை எனக்கு கிடைக்கிற மாதிரி பண்ணுங்க. நான் முதலமைச்சராவே வந்து காட்டுறேன் பாருங்க.” 

“சரிப்பா… உன் ஜாதகத்துல அப்படியொரு யோகம் இருந்தா அதை யாரால மாத்த முடியும்? நான் நாமகிரிகிட்ட பேசுறேன். ‘லட்சுமி பணம் கொண்டுவந்து கொடுத்தா வாங்காதீங்க. கல்லை திருப்பிக் கேளுங்க’ன்னு சொல்றேன். அவ கொடுத்துட்டா நீ உடனே அம்பத்தொரு கோடியோடு வந்து அவளைப் பார்த்து, வியாபாரத்தை முடிச்சுக்கோ. அப்புறமா என்னையும் கவனிச்சுக்கோ.”

“நிச்சயமா… முதல்ல கிளம்புங்க.”

“நீ எதுக்கும் பணத்தைப் பெட்டியில தயாரா எடுத்து வைச்சுக்கோ.”

“அது ஒரு ரகசிய இடத்துல இப்பவே தயாராதான் இருக்கு. நான் போய் எடுத்துக்கிட்டு கிளம்பினா போதும்.”

ராஜதுரை துள்ளிக் குதிக்காத குறை! 

“சரி… நீ ‘டிஸ்சார்ஜ்’ ஆயிடு. அடுத்து நான் உன்னை வீட்டுல பார்க்கிறேன்” என்றபடியே ஒரு மர்மச்சிரிப்போடு சாமியார் புறப்பட்டுப் போனார். 


அர்ஜுன் எல்லாவற்றையும் சொல்லி முடித்திருந்தான். லட்சுமி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டாள். 

“என்ன அத்தையம்மா… ரொம்ப அதிர்ச்சியா இருக்குல்ல?”

“ஆமாம் மாப்பிள்ளை… ஆனா, நான் தொடக்கத்துல அதைப் பால்ல போட்டு சோதனை செய்து பார்த்துட்டு தானே உள்ளே வைச்சேன். அப்ப அந்த சோதனையில் பாலே நீல நிறமா மாறிடுச்சே?” 

“அது கல்லுல பூசிய நீல நிற ரசாயனத்தாலகூட இருக்கலாம்.”

“கடவுளே… ரசாயனமா?”

“ஆமாம்… இப்ப அதை எடுங்க. உங்க எதிரிலேயே சோதிச்சு பார்த்துடுவோமே?”

லட்சுமி சற்று திரும்பிக் கொண்டு ரவிக்கைக்குள் கைவிட்டு, மார்போடு மார்பாக அடக்கி வைத்திருந்த அந்த மாணிக்கக்கல் கொண்ட பர்சை வெளியே எடுத்தாள். 

உள்ளே ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் அது சுருட்டப்பட்டு கிடந்தது. 

முன்பெல்லாம் அதை பார்க்கும்போதே ஒரு பயபக்தியுள்ள பார்வை இருக்கும். இப்போது அது ஒரு கோலிகுண்டாக அவள் கண்களுக்குத் தெரிந்தது. அர்ஜுனும் அதை வாங்கி ஒரு கண்ணாடி தம்ளரில் உள்ள தண்ணீருக்குள் போட்டான். அந்தத் தண்ணீரும் இரண்டு நிமிடத்தில் நீலமாக மாறிவிட்டது. 

“மாப்பிள்ளை… இதைப் பால்ல போட்டுத்தான் சோதிக்கணும்”. 

“தண்ணியிலேயே பல்லைக் காட்டிடுச்சி. பால்ல வேற பார்க்கணுமா?”

“அப்ப இது சந்தேகமில்லாம போலி கல்தானா?”

“இன்னமுமா உங்களுக்கு இது மேல நம்பிக்கை? வேணும்னா இதைப் பரிசோதிக்க கோயம்புத்தூருக்கு என்கூட வர்றீங்களா?”

“அப்ப நம்ம வீட்டுக்குள்ள பாம்புங்க வந்ததெல்லாம் எப்படி?”

“காட்ல இருந்து பிடிச்சுகிட்டு வந்து, வீட்டைச் சுத்திவிட்டா அது உள்ளே வரத்தானே செய்யும்?”

“பத்மஸ்ரீ விருது கிடைச்சதே?”

“இந்தக் கல்லை நீங்க வாங்கலேன்னாலும் அது கிடைச்சிருக்கும்.”

“அமெரிக்காவுல உள்ள என் இடத்துல பெட்ரோல் கிணறு இருக்கிறது தெரியவந்ததே… அது?”

“அது உங்க இடம். பெட்ரோல் கிணறெல்லாம் காலகாலமா இருந்தாதான் அது தெரியவரும். அந்த இடத்தை நீங்க எப்ப வாங்கினீங்களோ அப்பவும் அது இருந்திருக்கு. இப்ப தெரிய வந்திருக்கு.”

“அட ஆமாம்… அப்ப எல்லாமே திட்டமிட்ட சதியா?”

“சதிங்கிற வார்த்தை ரொம்ப சாதாரணம், அத்தை. இது அதிபயங்கர வேலை… ஐம்பது கோடின்னு ஒரு கோலிகுண்டை விக்கமுடியும்னா இது சாதாரணமா என்ன?”

“கடவுளே… நான் மோசம் போயிட்டேனே…”

“என்ன சொல்றீங்க அத்தை… அதான் நாம் முழிச்சிக்கிட்டோமே… ‘அம்மா தாயே இந்தா உன் நாகமாணிக்கக்கல். நல்ல நேரத்துல இதை வாங்கி வைச்சுகிட்டு, ஆளை விடு’ன்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்போம்.”

“முடியாதே மாப்பிள்ளை.”

“ஏன் அத்தை?”

“நான் இப்பதான் சிட்டிபாபுகிட்ட கோடி கோடியா ரொக்கமா கொடுத்துவிட்டேன்.”

“அட, என்ன அத்தை நீங்க… இப்ப அவனுக்கு போன் பண்ணி திரும்பி வரச் சொல்லுங்க.”

லட்சுமி அடுத்த நொடியே தன் செல்போனில் அவனைப் பிடிக்க முயற்சி செய்தாள். ஆனால், அவன் செல்போனை ‘ஆப்’ செய்து வைத்திருந்தான். 

“என்ன அத்தை?”

“முட்டாள்! அவன் செல்போனை ‘ஆப்’ பண்ணி வைச்சிருக்கான்.”

“அடக் கொடுமையே!”

“விடுங்க… நான நேரில் போறேன். எங்கே அந்த கோலிகுண்டு? இதைக் கொடுங்க முதல்ல… ஒருவேளை சிட்டிபாபு அந்த நாமகிரி அம்மாகிட்ட பணத்தைக் கொடுத்திருந்தாலும் பாதகமில்லை. கல்லை கொடுத்துட்டு, பணத்தைத் திருப்பி வாங்கிட்டு வந்துடுறேன்.”

“நல்லாருக்கு… பணம் அவங்க கைக்கு போயிட்டா அது யானை வாயில் போன கரும்புதான். அதுலேயும் நாம் முழிச்சிகிட்டோம்னு தெரிஞ்சா, கதையை அவங்க அப்படியே திருப்பி போட்ருவாங்க. நாமதான் ‘ஓரிஜினல் நாகமாணிக்கத்தை எடுத்துகிட்டு போலியை அவங்களுக்கு தந்து, ஏமாத்த முயற்சி செய்யறதா சொல்வாங்க.'” 

“ஓ… இதுல சிக்கல் இருக்கா?”

“ஆமாம்… இதைத் தந்திரமாதான் சமாளிக்கணும்.”

“தந்திரம்ன்னா?”

“நாம முழிச்சிக்கிட்டதை கொஞ்சமும் காட்டிக்கக் கூடாது. அடுத்து, சிட்டிபாபுகிட்ட இருக்கிற பணம் எல்லாம் கள்ளநோட்டு… நாம கொடுத்த நல்ல நோட்டை அவன் நடுவழில மாத்திட்டான்னு சொல்லி, அதைத் திருப்பி கேக்கணும். அந்த அம்மாவை நம்ம வீட்டுக்கே வந்து நல்ல நோட்டை வாங்கிக்க சொல்லணும்” 

அர்ஜுன் அசுர வேகத்தில் கணக்கு போட்டான். போட்ட வேகத்தோடு புயல் போல கிளம்பிவிட்டான். காரைக் கிளப்பிக்கொண்டு சாலைக்கு வந்தபோது, எதிரில் சாமியார். அதுவும் நடுச்சாலையில்! 

அவரைப் பார்க்கவும் அவனுக்கு உச்சி வெடித்து விடுவது போல கோபம் பீறிட்டது. இருந்தும் அடக்கிக் கொண்டு காரை நிறுத்தினான். 

அவரும் காரில் ஏறிக்கொண்டார். 

”என்ன சாமி.. என்கூட எதாவது பேசணுமா?” கோபத்தை அடக்கியபடியே கேட்டான். 

“ஆமாம்ப்பா.”

“நான் இப்ப ஒரு அவசர வேலையா நரிக்குடி ஜமீன் வீட்டுக்கு போய்கிட்டிருக்கேன்.”

“ஏம்ப்பா… லட்சுமி வரலையா?”

“இதை எதுக்கு கேக்கிறீங்க?”

“சரி! நீ நரிக்குடி ஜமீனுக்கே போ. நானும் அங்கேதான் போகணும்”

சாமியாரின் பதில் அர்ஜுனுக்கு சற்று நெருடியது. 

“ஆமா… உங்களுக்கு அங்கே என்ன சாமி வேலை?” அர்ஜுன் எதுவும் தெரியாதவன் போல கேட்டான். 

“அங்கே போன உடனேயே உனக்கு அது தெரிஞ்சிடும் தம்பி” என்ற சாமியார், உடனே ராஜதுரைக்கு ஒரு போன் போட்டார். 

“அப்பா ராஜதுரை… நீ பணத்தோடு நரிக்குடி ஜமீனுக்கு உடனே கிளம்பி வா. லட்சுமி அந்தக் கல்லை திருப்பிக் கொடுத்துட்டா. எல்லாம் என் மனோவசியம்தான்னு வைச்சுக்கோயேன்”. 

பேசிவிட்டு போனை முடக்கியவரை அர்ஜுன் அதிர்வோடு பார்த்தான். 

அத்தியாயம்-24 

‘சாரி அர்ஜுன்… என்னைவிட போலீஸ் துறையும், அதோட ரகசியமும் ரொம்ப முக்கியம். நான் சாமியார் வேடம் போட்டது பத்திரிகையில் வெளியானா, பணக்காரங்க சுதாரிச்சிப்பாங்க. அப்புறம், நல்ல சாமியாரைக்கூட எச்ரிக்கையோடு தான் பார்ப்பாங்க.’

காரை சாலை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினான், அர்ஜுன். அதிர்வுக்கு நடுவில் பிரண்டு கொண்டிருந்த கோபத்துடன் சாமியாரை ஊடுருவினான். 

“என்னப்பா அப்படி பார்க்கிறே?” – என்றார், அவர். 

“பார்க்காம… ஆமா, என் அத்தை அந்தக் கல்லை திருப்பிக் கொடுத்துட்டதா இப்ப எதை வைச்சு சொன்னீங்க?”

“இப்ப நீ அதுக்காகத்தானே போறே?”

“நான்… நான்… அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“நான் சித்தன்ப்பா. பார்த்த மாத்திரத்துல எல்லாத்தையும் சொல்லிடுவேன். ” 

“சித்தனா… நீயா?”

அர்ஜுனிடம் முதல்தடவையாக வார்த்தைகளில் தணல். 

”ஏம்ப்பா… என்னை சித்தனா ஏத்துக்க முடியலையா?”

“சித்தன் இல்லை நீங்க… சரியான எத்தன்!”

“போகட்டும்.. ஒரு கோலிகுண்டுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்க முடிஞ்ச உங்க அத்தை மட்டும் யாராம்?”

“அத்தை நம்பிக்கையால் மோசம் போனவங்க. ஆனா, நான் அதை விடமாட்டேன் சாமி…” 

“அட போப்பா… உப்பை யார் தின்னாலும் தண்ணி குடிச்சுதான் தீரணும்.”

“அதை நீ சொல்றியா? நீயும் அந்த நரிக்குடிக்காரி நாமகிரியும் போட்ட நாடகம் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?” 

“அடேயப்பா… நீ பெரிய புத்திசாலிதான். அப்ப நான் ஒரு போலிச்சாமின்னு கண்டு பிடிச்சிட்டேன்னு சொல்லு.” 

“இதை நான் நடுரோட்ல நின்னுகூட சொல்வேன்.”

“ஆமாமா… பாதிப்பும், ஏமாற்றமும் வரும்போது சொல்லித்தானே ஆகணும். கூடவே, உன் அத்தை கொடுத்த பணம் எப்படி வந்தது? அது கறுப்பா? வெள்ளையா?ன்னு கேள்வி வரும். அதுக்கும் பதில் சொல்லுவியா?”

சாமியார் கேட்ட பதில் கேள்வி அர்ஜுனை கொஞ்சம் கலக்கியது. முதல் தடவையாக அவனுக்குள் பலவித சிவப்பு விளக்குகள் மாறி மாறி எரிய ஆரம்பித்தன. 

“என்ன தம்பி… என்ன அப்படி ஸ்தம்பிச்சுட்டே? உங்க அத்தைகிட்ட மட்டுமில்ல… அந்த மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரையும் இந்தக் கண்ணாடி கோலிகுண்டுக்காக ஐம்பத்தொரு கோடி ரூபாயை எடுத்துகிட்டு இந்த நொடி புறப்பட்டிருப்பான்.”

எந்த பதற்றமும் இல்லாமல் சிரித்தபடியே சொன்ன சாமியார், மெல்ல தன் தாடியைப் பிய்த்தார். அது அவர் கையோடு வந்தது. தலை ‘டோப்பா’வையும் கலைத்தார். அர்ஜுனுக்கு திக்கென்றது. 

இப்போது அவன் எதிரில் மத்திய சிறப்பு புலனாய்வுப் சிவகார்த்திகேயன் உயர் அதிகாரியான பிரிவின் காட்சியளித்தார். 

“சார்… நீங்களா?”

“நானேதான். மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரை மேல லாரி ஏறின மறு நாளே போலீஸ் துறையின் பார்வை அவர் மீதும், நரிக்குடி ஜமீன்தார் மீதும் விழுந்தாச்சு. 

ஏற்கெனவே ராஜதுரை மேல பலவிதமான புகார்கள். விபத்து நடந்ததும் அந்த ஆளை கூர்ந்து கவனிக்க காரணமாச்சு. விபத்துக்கு பின்னால் ஜமீன்தாரும், உங்க அத்தையும் இருக்கிறதும் தெரியவந்தது. 

பாவம் ராஜதுரை… அவனுக்கு தெரியாது அவன் ‘அட்மிட்’ ஆகி இருக்கிற ஆஸ்பத்திரியில அவனை ஒரு ‘கேமரா’ கவனிச்சிகிட்டே இருக்குங்கிறது! 

அதுதான் அவன் பேசப் பேச ஜமீன்தார் பக்கமும், உங்க அத்தை பக்கமும் நாங்க திரும்ப காரணமாச்சு.நானும், சங்கரானந்த சாமியா மாறினேன். அதுக்காக கோம்பை மலைக்குப் போய் அசல் சித்த சந்நியாசிகள் கூட பழகினேன். அவங்க தந்த மருந்தால ராஜதுரையையும் குணப்படுத்தினேன். எனக்கு கொஞ்சம் சித்து வேலைகள் தெரியும். இதெல்லாம் அப்பப் பயன்பட்டது” சிவகார்த்திகேயனின் விளக்கம், அர்ஜுனை நிமிர்த்தி உட்கார வைத்தது. 

“நரிக்குடி ஜமீன்தாருக்கு ஏற்கெனவே மரண பயம் கூடவே, ஜமீன் கடன்ல மூழ்கப்போற கொடுமை வேற. அப்பதான் அவர் நாகமாணிக்கம்கிற பேர்ல மோசடி செய்ய முடிவு செய்தார். கல்லை வித்து அவர் பணம் சம்பாதிக்க ஆசைப்படலை. அதை வைச்சு தன் பேரனை லட்சுமியோட மகளுக்கு கட்டிவைக்கத்தான் ஆசைப்பட்டார். அப்படி செய்தாலே தன் ஜமீனும், மற்ற விஷயங்களும் தப்பிச்சிடும்னு நம்பினார். 

அதனால்தான் நாகமாணிக்கக்கல்லுன்னு ஒண்ணை அவர் மாஜி எம்.எல்.ஏ. ராஜதுரைகிட்ட கொடுத்துவிட்டார். கல்லை வாங்கிக்கிட்டு லட்சுமி சம்மதம் சொல்றாளா? இல்லை தனக்கு இதுல நம்பிக்கை இல்லேன்னு சொல்லிடுறாளா? பார்க்கலாம்கிறதுதான் ஜமீன்தார் நல்லமணியோட திட்டம். 

லட்சுமி வாங்கிக்கிட்டா ரொம்ப சந்தோஷம், அப்படி இல்லேன்னா ராஜதுரை அந்தக் கல்லை கேட்பான்கிறது அவர் எண்ணம். அவன்கிட்ட கோடி கோடியா கறுப்புப்பணம் இருக்கிறதும் நல்லமணிக்கு தெரியும்?” 

சாமியார் உருவத்தில் இருந்த சிவகார்த்திகேயனின் பேச்சில், அர்ஜுன் நினைத்துக்கூட பார்த்திராத பலவிதமான மர்மங்கள். 

அவன் கேள்வி கேட்க இடமே இல்லாதபடி அனைத்தையும் கூறி முடித்துவிடுவது என்பது போல சிவகார்த்திகேயனும் தொடர்ந்தார். 

“இந்த விஷயத்துல நல்லமணி எதிர்பார்த்த மாதிரியே லட்சுமி அவரின் வலையில் விழுந்தா. பெண்ணையும் கொடுக்க முன்வந்தா. நாகமாணிக்கம் மேல நம்பிக்கை ஏற்பட அவர் பாம்புகளை அவ வீட்டுக்குள்ள விட்டார். ‘பத்மஸ்ரீ’ விருது விஷயமாவும் கலெக்டர், மந்திரிசபைன்னு அவர்தான் தூண்டிவிட்டார். அப்படியே ராஜதுரையைப் போட்டுத்தள்ள நினைச்சதுலதான் அவர் கணக்கு தப்பாபோச்சு. 

இருந்தும் தன் காரியங்களை கனகச்சிதமா சாதிச்சுக்க, லட்சுமியம்மாவின் பி.ஏ. சிட்டிபாபுவையும் அவர் பத்து லட்சு ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிட்டார்”.

போலீஸ் அதிகாரி இப்படி சொன்னதும் அர்ஜுனுக்கு ‘திம்’மென்று மார்பு மேல் ஒரு குத்து விழுந்தது போல இருந்தது. 

“சிட்டிபாபுதான் பாம்புகளை உள்ளே விட்டது. அதுல ஒரு பாம்புக்குக்கூட பல் கிடையாது. இப்படியொரு நிலையிலதான் ராஜதுரை தன் ஆட்களை கொண்டு, நல்லமணி பேரனை கொலை செய்தான். நான் ராஜதுரை கூட இருந்துகிட்டே இதை எல்லாம் தடுக்க முயற்சி செய்தேன். ஆனா, என்னைவிட பழி உணர்ச்சிக்கு பலம் அதிகமாயிடுச்சு. 

ரமேஷ் சாவுக்கு பிறகு விஷயம் அப்படியே திசைதிரும்பிச்சு. நீங்களும் ஒருபக்கம் அந்த கல்லோடு ஓடிப்போய் பரிசோதனை எல்லாம் செய்தீங்க. உங்ககிட்ட கல் இருக்கிறது தெரிஞ்சு, நீங்களும் அதை நம்பணும்கிறதுக்காக சிட்டிபாபு ரொம்பவே கஷ்டப்பட்டான். 

அவன்தான் உங்க ‘புராஜெக்ட்’ அங்கீகாரம் பெற காரணம். அவன் இல்லேன்னாலும் அது ‘அப்ரூவ்’ ஆகிற மாதிரிதான் இருந்தது. அவன் அதை கொஞ்சம் தூண்டி விட்டான். அதுக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நட்சத்திர ஓட்டல்ல விருந்து கொடுத்து நிறைய அழகான பெண்களையும் ‘சப்ளை’ செஞ்சான். 

ஒரு சாமியாரா நான் எதுவுமே தெரியாதபடி இரண்டு பக்கமும் நடந்துகிட்டு இருந்ததையெல்லாம் கவனிச்சிக் கிட்டே இருந்தேன். 

நரிக்குடி ஜமீனோட ஏமாற்று வேலையில ஓர் மாற்றம். நல்லமணி சாவுக்கு பிறகு அவங்க சகோதரி குழப்பத்துல இருந்தப்போ நான் அங்கேயும் போய் கல்லுக்கு 50 கோடின்னு விலை வைக்க சொன்னேன். ஒரு இலங்கை வியாபாரி கல்லை கேட்கிறதாவும் சொல்ல சொன்னேன். அந்த ஜமீன்ல ஒட்டிகிட்டு இருந்த அவங்களுக்கு 50 கோடி கிடைக்கப் போகுதுன்ன உடனே ஒரே சந்தோஷம். என் பேச்சை கேட்டாங்க. கேட்டுகிட்டும் இருக்காங்க. 

ஐம்பது கோடின்னு விலை வைக்கக் காரணம் உங்க அத்தை, அந்த ராஜதுரைன்னு ரெண்டு பேர்கிட்ட உள்ள கறுப்புப் பணத்தையும் வெளியே கொண்டுவரத்தான். அதுல உங்க அத்தைப் பணம் சிட்டிபாபு வழியே வெளியே வரவும், அவனை அப்படியே அமுக்கிட்டோம். ராஜதுரையும் இந்த நிமிடம் பணத்தோடு நரிக்குடி ஜமீனை நெருங்கி இருப்பான். அங்கே ஏற்கெனவே அதிகாரிகள் காத்துகிட்டு இருக்காங்க. மிச்சத்தை அவங்க பார்த்துக்குவாங்க”. 

சிவகார்த்திகேயன்தான் பேசி முடித்துவிட்டதற்கு அடையாளமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டு அர்ஜுனைப் பார்த்தார். 

அர்ஜுனிடம் பிரமிப்பு – ஸ்தம்பிப்பு! 

“ஆங்… சொல்ல மறந்துட்டேனே… ராஜதுரையும் உங்க அத்தையும் சமுதாயத்திலே பெரிய திமிங்கலங்க நடந்த அவ்வளவு விஷயத்தையும் அப்படியே தலைகீழா மாத்திப்போட்டு தப்பிக்க பார்ப்பாங்க. ஆனா, அது நடக்காது. ஏன்னா… சிட்டிபாபு அரசு சாட்சியா மாறிட்டான். அதேபோல ராஜதுரை பேச்சைக் கேட்டு லாரியை ரமேஷ் மேல ஏத்திக் கொலை செய்த லாரி டிரைவரும் ‘அப்ரூவர்’ ஆயிட்டான். ஆகையால் உங்க அத்தையும் சரி, அந்த மாஜி எம்.எல்.ஏ.வும் சரி… தப்பிக்கவே முடியாது. 

இதுல உங்க அத்தைக்கு இழப்பு ஐம்பது கோடி ரூபாய் மட்டும்தான். அதுக்குக்கூட ஏதாவது கணக்கு காட்டினா அபராதத் தொகை போக அதுல தொண்ணூறு சதம் திரும்ப கிடைச்சிடும். 

ஆனா, பாவம் ராஜதுரை! அவன் வரையில் பணமும் போச்சு… அரசியல் வாழ்க்கையும் போச்சு. ஜெயிலில் அவனுக்கு இனி காலத்துக்கும் களி உருண்டைதான். அதெல்லாம் பேராசைக்கும், பழி உணர்ச்சிக்கும், மக்களை ஏமாத்தி சொத்து சேர்த்ததுக்குமான ஒட்டுமொத்த தண்டனை!” 

சிவகார்த்திகேயன் கிண்டலாக கூறி முடிக்க செல்போனில் அழைப்பொலி. 

”சார்… ராஜதுரை பணத்தோடு வந்தாரு. பெட்டியோடு அவரை பிடிச்சிட்டோம்!” 

“நல்லது… அந்த சாமியார் விஷயத்தை அப்படியே விட்டுருங்க. நாமகிரிக்கும், ராஜதுரைக்கும் கூட நான்தான் சாமியாரா நடிச்சேன்கிறது தெரிய வேண்டாம். அவங்க கேட்டா, ‘சாமியார் தலைமறைவாயிட்டாரு’ன்னு மட்டும் சொல்லிடுங்க. சாமியாரால்தான் நாங்க கெட்டோம்னு அவங்க சொல்றதுக்கும் இடம் கிடையாது. 

ஏன்னா, நான் அவங்களுக்கு நல்லதுதான் செய்திருக்கேன். ஆகையால் அவங்களும் என்னைப் பத்தி பெருசா எதுவும் பேசவோ, வருத்தப்படவோ மாட்டாங்க. நாமகிரி மட்டும் நான் ஆசைக்காட்டினதா சொல்லுவா. சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். ஆசைதான் காட்டினேன். பணத்தை ஒண்ணும் கையாடல் பண்ணிட்டு ஓடிடலையே?”

செல்போனில் தன்னோடு பேசிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு பதிலளித்துவிட்டு திரும்பியவரை துளியும் பிரமிப்பு குறையாமல் பார்த்துக்கொண்டே இருந்தான், அர்ஜுன். 

“என்ன அர்ஜுன்… போட்ட வேடத்தைச் சொல்லி – பத்திரிகை, டி.வி.களை திரும்பிப் பார்க்க வைக்காம அப்படியே அதை மூடிமறைக்கச் சொல்றேன்னு பார்க்கிறீங்களா?” 

“ஆமாம் சார்… உங்களுக்குதானே அதனால பெருமை?”

“சாரி அர்ஜுன்… என்னைவிட போலீஸ் துறையும், அதோட ரகசியமும் ரொம்ப முக்கியம். நான் சாமியார் வேடம் போட்டது பத்திரிகையில வெளியானா, பணக்காரங்க சுதாரிச்சிப்பாங்க. அப்புறம், நல்ல சாமியாரைக்கூட எச்சரிக்கையோடுதான் பார்ப்பாங்க. அடுத்து இன்னொரு தடவை நானே அந்த வேடத்தை போடமுடியாதபடியும் ஆயிடும். 

அதனால், அந்த வேடம் போட்ட நான் கோம்பைமலை சாமியார்களோடு பழகி, உண்மையாகவே அவங்களைப் போல மாறினா என்னன்னுகூட யோசிக்கிறேன். ஏன்னா, அவங்களெல்லாம் அவ்வளவு நல்லவங்க. நிஜமாலுமே பந்தபாசங்களை ஜெயிச்சவங்க. சுருக்கமா சொல்லப்போனா அவங்க எல்லாம் இந்த மண்ணோட அற்புதங்கள்!” – நெகிழ்ந்துபோய் பேசினார். சிவகார்த்திகேயன். 

“எல்லாம் சரி சார்… இந்த ரகசியங்களை என்கிட்ட மட்டும் ஏன் சார் சொன்னீங்க?”

அர்ஜுன் கேட்கவேண்டிய கேள்வியைத்தான் கேட்டான். அவரும் சிரித்தபடியே அவனை ஊடுருவினார். 

“மிஸ்டர் அர்ஜுன்! இந்த நாகமாணிக்கம் ஒரு போலின்னு கண்டுபிடிச்சது நீங்கதான். அதுமட்டுமில்ல… ‘லயன்’ லட்சுமிங்கிற உங்க மாமியார் பத்தின பயமே உங்ககிட்ட இல்லை. 

எல்லாத்துக்கும் மேலா ஐம்பது கோடி ரூபாயை இழந்துட்டு உக்காந்துகிட்டு இருக்கிற உங்க அத்தைக்கும் – தன் பேரோடு ஒட்டிகிட்டு இருக்கிற ‘லயன்’ என்கிற வார்த்தைக்கும் சம்மந்தம் இல்லைங்கிறது இப்ப தெரிஞ்சிருக்கும். 

உண்மையான ‘லயன்’ அதவாது சிங்கம் நீங்கதான். அதான் உங்ககிட்ட எல்லாவிஷயங்களையும் சொன்னேன்”. 

“ஓ… ரொம்ப நன்றி சார்…”

“மிஸ்டர் ‘லயன்’ அர்ஜுன்… தயவு செய்து நான் யாரிடமும் ‘யாரென்று மட்டும் சொல்லாதே!’ எப்போதும்!”

“நிச்சயமா சொல்ல மாட்டேன் சார்… நீங்க என்னை நம்பி பல ரகசியங்களைச் சொன்னதுக்காக நான் இதைக்கூட செய்யலேன்னா எப்படி சார்?” 

“ரொம்ப நன்றி… எப்பவாவது உங்களை மறந்து உங்க ஆசை மனைவிகிட்ட கூட சொல்லிடாதீங்க. ஏன்னா… நான் ஒரு புனிதமான வேடத்தைப் போட்டு சாதிச்சிருக்கேன். அந்த வேடம் வெளியே தெரிஞ்சா விமர்சனத்துக்கு உரியதாயிடும். 

அதனால், திரும்பவும் அந்த வேடத்தைப் போட்டுகிட்டு நான் இப்ப நேரா கோம்பை மலைக்குதான் போகப்போறேன். பல பயிற்சிகள் பாதியில நிக்குது. அவற்றை நான் முழுசா முடிக்கணும்” என்று பேசிக் கொண்டே திரும்ப – அந்த தாடி, மீசையை எல்லாம் எடுத்து ஒட்டிக்கொள்ளத் தொடங்கினார். 

சில நிமிடத்தில் அவர் பழைய சங்கரானந்த சாமியாராகவே மாறிவிட்டார். சிரித்துக்கொண்டே “மிஸ்டர் லயன் அர்ஜுன்… உங்க அத்தையை நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க. உங்களுக்கு என் ஆசீர்வாதங்கள்” என்று அசல் சாமியார் போலவே பேசிவிட்டு, நடையைக் கட்டத் தொடங்கினார். 

எல்லோரும் இதற்குமுன் பிரமித்த அதே நடை! 

அர்ஜுன் அவர் மறையும்வரை விழி மூடாமல் வியப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் நிச்சயமா அவரைப் பற்றி யாரிடமும் மூச்சுகூட விடமாட்டான்! 

ஆனால், நீங்கள்?

(முடிந்தது)

– யாரென்று மட்டும் சொல்லாதே…  (நாவல்), முதற் பதிப்பு: 2009, திருமகள் நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *