கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2024
பார்வையிட்டோர்: 3,640 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 17-20 | அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-27

அத்தியாயம்-21

மாலதி விடை பெற்றுக் கொண்ட பின், அமிர்தா நீண்ட நேரம் தூணிலே சாய்ந்தவளாய் உட்கார்ந்திருந்தாள். கோபியைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்கு மனம் குழம்பியது. தலை சுற்றியது. மாலதி சொல்லுவதைப் பார்த்தால் அமிர்தா நினைத்துக் கொண்டிருப்பதே தவறு. அவள் தன்னையே ஏமாற்றிக் கொண்டு விட்டாளா. 

திடீரென்று மாலதியைப் பற்றியும் ஒரு சந்தேகம் எழுந்தது. மாலதி ஒரு பெரிய பணக்கார வீட்டில் பிறந்து இன்னொரு பெரிய பணக்கார வீட்டுக்குள் புகுந்தவள். அவளுக்கு ஓரகத்தியாக வரக்கூடிய அமிர்தா ஒரு அட்ரெஸ் இல்லாத வீட்டிலிருந்து வருவதால் அப்பணக்கார வீடே களை இழக்க நேரிடும். 

மாலதியும் மற்றவர்களும் அவளுடைய வருகையையே தடுத்து நிறுத்த ஆயத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களா? 

இந்த சந்தேகம் ஒரு கணம் தான் உயிரோடு இருந்தது. கோபி கிருஷ்ணன் ஒரு பெண்ணைக் காதலித்தால் அவர்களால் என்ன செய்ய முடியும்? அவன் அப்பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவதை யாரால் எப்படி நிறுத்த முடியும்? மாலதியோ இல்லை மற்றவர்களோ செய்ய முடியாத காரியத்தில் கண்டிப்பாக இறங்க மாட்டார்கள். 

அப்படி என்றால் என்ன அர்த்தம்? எதற்காக மாலதி இவ்வளவு சிரமப்பட்டு அமிர்தாவைப் பார்க்க ஓடோடி வரவேண்டும்? கோபி கிருஷ்ணனைப் பற்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏன் குறை சொல்ல வேண்டும். அமெரிக்காவுக்கு அவன் போவதே ஒரு தீராத பிரச்சினைக்கு முடிவு காணத்தான் என்று ஏன் எச்சரிக்கை செய்யவேண்டும்? 

அமிர்தா மெல்ல எழுத்தாள். மணியைப் பார்த்தாள். இரண்டு. வெயிலின் சூடு கடற்காற்றிலே மெல்ல மெல்லத் தணிந்து கொண்டிருந்தது. புடவையைச் சரி செய்து கொண்டு, கண்ணாடியைப் பார்க்காமலேயே முன் உச்சி மயிரை ஒரு தடவை சீவிவிட்டு வீட்டுக்கு அடுத்தாற் போலுள்ள கடையை நோக்கி விரைந்தாள்.

டெலிபோனில் ‘டயல்’ செய்யும் போது அவளையும் மீறி விரல் நடுங்கியது. 

“கோபிகிருஷ்ணன் ஹியர்.”

“அமிர்தா பேசறேன்”.

“ஹலோ டியர்..” 

“உங்களை நான் உடனேயே பார்த்தாக வேண்டும்.”

“ஸாரி டியர்… நாம் தான் சாயங்காலம் சினிமாவுக்குப் போக இருக்கிறோமே!”

“இது அவசரம்.”

“நானும் ரொம்ப அவசரமா அமெரிக்கன் கான்சலேட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்… என்னுடைய பாஸ்போர்ட்டில் ஒரு எண்டார்ஸ்மெண்ட் வாங்கணும்…” 

“இது அதைவிட அவசரம்… இப்போ நீங்க என் வீட்டுக்கு உடனே புறப்பட்டு வர்றீங்க…” 

“கலியாணத்துக்கு முன்னாலேயே விரட்டறியே அமிர்த்!” 

“நான் உங்களைக் கலியாணம் பண்ணிக் கொள்ளப் -போறதா வாக்கு கொடுக்கலை, மிஸ்டர் கோபி!”

“அப்போ அன்னிக்கு ஆபீஸ்லே நீ… நீ…”

“ப்ளீஸ்…”

“இன்னிக்கு சினிமா ஓட்டல் சாப்பாடு எல்லாம்… என்னைக் கலியாணம் பண்ணிக்கப் போறதா முடிவு எடுக்கலன்னா அன்னிக்கு உன் கன்னத்தை நான் தொட்டு, உன் உடம்பை நான்…”

“ஷட்அப்… அண்ட் கம் ஓவர் ஹியர்”

உடலெல்லாம் வியர்வையில் குளிக்க அமிர்தா வீடு திரும்பினாள். கோபி பேசிய பேச்சு அவளுக்கு நாராசமாக ஒலித்தது. ஒரு பண்பும் நாகரிகமும் இல்லாதவன் பேசுவதாகப் பட்டது. இப்படிப் பட்டவனையா அவளுடைய யாரையுமே நினைத்துப் பார்க்காத… மனம் விரும்புகிறது? 

வீட்டை அடைந்த பிறரும் அவளுக்கு கோபி வருவானா மாட்டானா என்ற நிச்சயம் ஏற்படவில்லை. அவன் வரா விட்டால் கண்டிப்பா சாயங்காலம் அவனை அவள் சந்திக்க மாட்டாள். வந்து விட்டால் அவனிடம் என்னென்ன கேட்க வேண்டும்? எப்படி எப்படிக் கேட்க வேண்டும் என்று அவள் நினைத்துப் பார்த்தாள். மாலதி வந்து போனதைச் சொல்லலாமா, கூடாதா? மாலதி தூபம் போட்டதால்தான் அவள் பேசுகிறாள் என்று கோபி நினைத்து விட்டால், அவளுடைய பேச்சே பலமில்லாத பேச்சாகப் போய்விடும். மாலதியைப் பற்றி அவள் மூச்சே விடக்கூடாது. 

என்ன பேசுவது? 

எப்படிப் பேசுவது? 

என்னென்ன கேள்விகளை எந்த வரிசையில் கேட்பது?

சரியாக இரண்டே முக்கால் மணிக்கு கோபி வந்தாள். 

வருகிறவன் முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பொறுமையற்றவனாக வருவான் என்றுதான் அமிர்தா எதிர்பார்த்தாள். ஆனால் உதடுகளில் புன்னகை அரும்ப. “ஹலோ அமிர்த்” என்று கொஞ்சியபடி உள்ளே வந்தான்.

“ப்ளீஸ் கம் இன் அண்ட் பீ ஸீட்டெட்”

“ரொம்ப கோபமாக இருக்கே, அமிர்த்”

“இல்லை… குழப்பமா இருக்கேன்”

“ஏன், என்… என்ன நடந்துவிட்டது?” 

“ஒண்ணும் நடக்கவில்லை. நடக்காம இருக்கணும்னு தான் தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன்”. 

“உன்னால இன்னிக்கு அமெரிக்கன் காள்சலேட்டுக்குப் போக முடியாமப் போயிடுத்து.” 

“நீங்க அமெரிக்காவுக்கு எதுக்காகப் போறீங்க?”

“ஆபீஸ் விஷயமா”

“அப்படீன்னா?” 

“புதுசா ஒரு காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கு. முதல் முதலா அமெரிக்காவிலே நம்ம கம்பெனி தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது”

அமிர்தா குழம்பினாள். இது வரையில் அமெரிக்காவுக்கும் சும்பெனிக்கும் தொடர்பே இல்லை என்று தான் மாலதி சொன்னாள். கோபி முதல் தொடர்பு என்கிறார். நம்பக் கூடியதாக இருக்கிறது. ஆனால் நம்பலாமா? 

“அதுக்கு நீங்கதான் போகணுமா?”

“இது என்ன கேள்வி அமிர்தா?”

“கேள்விதான்… உங்க அண்ணா மிஸ்டர் ரமேஷ்தானே மானேஜிங் டைரக்டர்?” 

“ஆமாம்… அவர்தான் சாதாரணமா வெளிநாட்டு விஷயங்களைக் கவனிக்கிறவர்…. ஆனா இதை முழுக்கு முழுக்க எங்கிட்ட ஒப்படைச்சிருக்காங்க…” 

“காண்ட்ராக்ட்லே கையெழுத்துப்போடற அதிகாரம் உட்படத்தானே?”

“ஆமாம்!” என்ற கோபி, “சரி, நீ என் இதை எல்லாம் எங்கிட்டே இப்போ துருவித்துருவிக் கேட்கறே?” என்றான்.
“ஏதோ கேட்டேன்.”

“இல்லை அமிர்தா… யூ ஆர் நாட் ஸ்ட்ரெய்ட் எதையோ மறைக்கிறாய்!”

“நான் எதையும் மறைக்கவில்லை.”

“நான் சொல்றேன் கேளு. எங்க வீட்டிலே இருக்கிறவங்களைத் தவிர வேறு யாருக்கும் நான் எதுக்காக அமெரிக்கா போகிறேன்னு தெரியாது. என் அப்பா, அண்ணா, அம்மா, அண்ணி இவங்களுக்கு மட்டும் தான் தெரியும்… கம்பெனியைப் பொறுத்தவரையில் நான் எதற்காகவோ அமெரிக்காவுக்குப் போகிறேன் என்று தான் தெரியும்”

“அப்படியா?”

“இனிமேல் நீ கேள்வி கேட்க வேண்டாம். நீ கேட்காத கேள்விகளுக்கு நான் பதில் சொல்லுகிறேன்… உன் மனசிலே யாரோ ஏதோ ஒரு விதையை ஊன்றிவிட்டுப் போயிருக்கிறார்கள்…. அது நன்றாக முளைகட்டி வளர்ந்து உன் நெஞ்செல்லாம் சந்தேக மரமாகப் போயிருக்கிறது. 

“நோ…” 

“இரு… உன்னைக் கலியாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று என் அம்மாவுக்கும், அண்ணிக்கும் மட்டும் தான் தெரியும் என் அம்மா சந்தோஷப்பட்டாள். நீ ஒரு ஏழைப் பெண் என்று தெரிந்தும் கூட. ஆனால் அண்ணி மாலதி, வெளியே சிரிப்பைக் கொட்டினாளே தவிர உள்ளுர நான் சொன்னதை ரசிக்கவில்லை”. 

“உங்க அண்ணி பெயர் மாலதியா?” 

“அமிர்தா. உன் நாடகத்தை என்கிட்டே ஆடிக் காட்டாதே.. என் அம்மா இங்கே வர நியாயம் இல்லை… அப்படி வந்திருந்தாலும் மாலதியுடன் தான் வந்திருப்பாள்… ஆனால் மாலதி என் அம்மாவுக்குத் தெரியாமலேயே, உன்னைப்பற்றி அறிய வேண்டும்… இப்போது என்னிடம் உண்மையைச் சொல்… மாலதி இங்கே வந்திருந்தாளா?” 

அமிர்தா இந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியவில்லை.

”அவள் வராமலிருந்தால் நீ எனக்கு போன் பண்ணியிருக்கவே மாட்டாய்”. 

அமிர்தா மீண்டும் மௌனம் சாதித்தாள். கோபி அவளை நார் நாராகக் கிழிப்பதாகப்பட்டது. அந்த வலியிலே அவள் குன்றிப்போனாள். 

கோபி தொடர்ந்தான். 

“எங்க வீட்டிலே மாலதிதான் எனக்கு எதிரி. தன் கணவனுக்குத் தலையணை மந்திரம் உபதேசித்து உபதேசித்து அவனுடைய மனத்தையே அவள் விஷமாக்கியிருக்கிறாள். முடிவு? என் அப்பாவிடம் அபவாதத்தைக் கிளப்பி, என்னை ஒரு மாதச் சம்பளக்காரனாக்கி இருக்கிறார்கள்… நான் உன்னைக் கலியாணம் செய்து கொள்வதை என் அண்ணி விரும்பவில்லை”

“ஏன், துவேஷமா?”

“இல்லை.. துவேஷமில்லை. கலியாணமாகி விட்டால் நான் சொத்தைப் பிரித்துக்கொண்டு போய் விடுவேனோ என்கிற பயம்”

“ஏன் அதை இப்பவேகூடச் செய்யலாமே?”

“செய்யலாம். ஆனால் ஒண்டிக்கட்டையா செய்ய மாட்டேன் என்கிற தைரியம். வீட்டின் நாட்டாண்மை இப்போ அவள் கையில் இருக்கிறது… அதனால்… அதனால்…” 

“மிஸ்டர் கோபி!” 

“என்ன அமிர்தா?…”

“என்னை மன்னியுங்கள். உங்க அண்ணி மாலதி வந்திருந்தாள்…”

“தெரியும்”. 

“நான் இப்போ உங்களை ஒன்றே ஒன்று கேட்கப் போகிறேன்”. 

“கேள்”

“நானும் உங்க கூட அமெரிக்காவுக்கு வருகிறேன்.”

“கல்யாணம் ஆனப்புறம் நானே அழைத்துக் கொண்டு போகத் தான் போகிறேன்.”

“நோ… இப்போ நீங்க போகும் போதே..”.

“ஓகே…”


அவன் இவ்வளவு எளிதாக சரி என்று சொல்லுவான் என அமிர்தா எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு உடனேயே மாலதிக்குப் போன் செய்ய வேண்டும் என்று தோன்றியது. 

போனில் மாலதி கூறிய வார்த்தைகளால் அவள் மீண்டும் குழம்பிப் போனாள். 

“எங்க கோபி நடிப்பில் கை தேர்ந்தவன், அமிர்தா. அவன் நடிப்பு அமெரிக்காவிலேயே பிரசித்தம். என்னிடம் ருசு இருக்கிறது!! 

அத்தியாயம்-22 

வெளியே எத்தனைக்கு எத்தனை சிரித்துச் சிரித்துத் தேனொழுகப் பேசினாளோ அத்தனைக்கு அத்தனை மாலதியின் மனத்தினுள் கபட விஷம் கக்கிக் கொண்டிருந்தது. அவன் அமிர்தாவுடன் நீண்ட நேரம் பேசிய பிறகு, அவ்ளுடைய ஏற்பாட்டின்படி அமிர்தா கோபியுடன் பேசியிருக்கிறாள். அமிர்தா போனில் அவளை அணுகி தன்னுடைய குழம்பும் மனத்தைக் காட்டியபோது. ஒரே நொடியில் மாலதி தன் சாதுரியத்தைக் கையாண்டு, “கோபிக்கு நடிப்பு நன்றாக வரும்” என்று சொல்லி அமிர்தாவின் மனத்தை மேலும் குழப்பி இருக்கிறாள். 

மாலதி போனை வைத்துவிட்டு ஹாலுக்குத் திரும்பவும், மாமியார் சுலோ அங்கே வரவும் சரியாக இருந்தது. 

“மாலு” என்று சுசீலா ஆரம்பித்தாள். அவள் குரலில் திடீரென ஒரு குழைவு ஒலித்தது. 

“என்னம்மா?” 

“நீ இன்னும் அவளைப் பத்திப் பேசவேயில்லை!”

“அவள்னா யாரு… ஓ… அந்தப் பொண்ணு அமிர்தாவா?” 

“ஆமாம். எப்படி இருக்கிறாள்?”

“அவள் ஒரு கந்தர்வப்பெண் அம்மா… கோபியின் செலக்ஷன் டாப் கிளாஸ்…” 

“அப்படியா?” 

“கொஞ்சம் இருங்கள். அழகை நினைச்சு அசந்து போய் விட்டா எப்படி?” 

“நீ என்ன சொல்றே, மாலு?” 

“அம்மா நல்ல பாம்பைப் பார்த்திருக்கிறீர்களா?”

“சொல்லு!”

“அது படமெடுத்து ஆடுகிறபோது எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது? அதுவும் மஞ்சள் வெயில் அதன் பொன்மேனியில் படும்போது எப்படி டால் அடிக்கிறது. ஆனா அந்த அழகான பாம்பை நாம் நம் வீட்டுக் கொலுப் படியில் வைப்போமா?” 

“கோபிக்குப் பிடிச்சிருக்கே, மாலு” 

“பரீட்சித்து மகாராஜாவுக்கு எலுமிச்சம்பழம் சமூத்திரத்திலே மிதந்து வந்த போது ரொம்ப அழகாப்பட்டது. ஆனா அது அவனைக் கொல்ல வந்த விதின்னு தெரியல… அதை எடுத்தான். நல்ல பாம்பு சீறி அவனைக் கொத்தியது… நம்ம கோபிக்கும் பரீட்சித்துக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. அம்மா!” 

“என்ன சொல்றேன்னே எனக்குப் புரியலை”. 

“அம்மா, அமிர்தா ஒரு நல்ல பாம்பு. இப்போ நான் மகுடி ஊதின போது ரொம்ப அழகாகத்தான் படமெடுத்து ஆடினா, நான் அதைத் தடவிக்கொடுத்தபோது அது என் கை காலை முத்தமிட்டது. ஆனா அது ஒரு விஷ முத்தம், ஸாரி, ஒருவிஷ முத்து…” 

“இங்கே வந்தால், எல்லாம் சரியாகி விடும்.”

“நாயைக் குளிப்பாட்டி நடுக்கூடத்திலே வைச்சாலும்…”

சுசிலா இடைமறித்தாள். 

“என்னாலே நம்பமுடியலை, மாலு”. 

“நானும் உங்களை மாதிரி மொதல்லே அசந்துதான் போனேன்… ஆனா அமிர்தா மனசுக்குள்ளே என்னென்ன திட்டமெல்லாம் தீட்டியிருக்காள்னு எனக்குக் கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுது”. 

“என்ன திட்டம்?”

“முதல் திட்டம், கோபியைத் தன் கைக்குள்ளே போட்டுண்டு இங்கே குடியேறி வர்றது… அப்புறம் அவனுடைய மோகத்தைத் தன் காரியத்துக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்றது… அவ என்ன கேட்டா தெரியுமா அம்மா?”

“நம்ம குடும்பச் சொத்து என்ன மதிப்புப் பெறும்னு கேட்டா. ஏதோ அறிய ஆசைப் படுகிறாள்னு நெனைச்சிருப்பேள்… சொத்திலே எத்தனை லட்சம் கோபிக்குக் கிடைக்கும்னு கேட்டா”.

“அப்படியா கேட்டா?”

“கோபின்னு பெயரைச் சொல்லலே, ‘அவருக்குன்னா’. இப்பவே அவர் இவர்ன்னு தான் கோபியைக் குறிப்பிடறா…”

“அடிப்பாவி!”

“இன்னும் கேளுங்கம்மா. இந்த பங்களாவைத் தவிர வேறு பங்களா இருக்கான்னு கேட்டா… இல்லேன்னு சொன்னேன். அப்போ புதுசா ஒண்ணு கட்ட வேண்டியிருக்கும். இல்லாமப் போனா வாங்க வேண்டியிருக்கும்னு சொன்னா. இதிலேர்ந்து உங்களுக்கு என்ன புரிகிறது?”

“எனக்கு ஒண்ணுமே புரியலை.”

“கைக்குள்ளே போட்டுண்ட புருஷனைத் தனியே அழைச்சுண்டு போய், சொத்தையும் பிரிக்கணும்னு அமிர்தா நினைக்கிறாள்னு உங்களுக்குப் புரியலையா, அம்மா?”

“ஊஹும்”. 

“நீங்க வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறேன். கள்ளமும் கபடமும் கல்மிஷமும் இல்லாத உங்க மனகக்கு பாவம் இதெல்லாம் எப்படிப் புரியப் போறது.” 

“என் புள்ளை கோபி ஆசைப்படறாளே…” 

“சின்னக் குழந்தைக்குப் பாலைத் தானே ஆற்றிக் குடிக்கணும்னு ஆசை இருந்தா நாம் டம்ளரைக் கொடுத்து விடுவோமா? அது எங்கே கையைச் சுட்டுக் கொள்ளுமோன்னு பயப்படமாட்டோமா?”

“உனக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் இல்லேன்னு இப்போ எனக்குப் புரிஞ்சுபோச்சு!”

“அதுக்காக நீங்களோ, உங்க பிள்ளை கோபியோ மனசை மாத்திக்க வேண்டாம்.” 

“நான் அதுக்கு சொல்லலை, மாலு”. 

“அம்மா, உங்க பிள்ளை மேலே உங்களுக்கு இருக்கிற வாஞ்சை எனக்கு நன்னாப் புரிகிறது. பொன் ஊசின்னு புரியறது. பொன் ஊசின்னு கண்லே குத்திண்டா ரத்தம் வராம இருக்குமா? இல்லே, அதுவும் தங்கமா மாறிடுமோ? இந்த வீட்டு ரெண்டாவது மருமகள் என்னைவிட ஒசத்தியா இருக்கணும்னுதான் நீங்க ஆசைப்படனும்” 

“உனக்கு என்னடி குறைச்சல்…” 

“அப்ப எனக்குச் சமமாகவாவது ஒருத்தி வரவேண்டாமா?”

“இது பற்றி நான் எப்படி கோபிகிட்டே பேசறது…” 

“நான் உங்க மூத்தபிள்ளைகிட்டே பேசிக்கிறேன்… ஒரு சாக்கடையிலே இருக்கிற காசை எடுத்து அலம்பி அலமாரியிலே வைச்சா அலமாரியே நாறிப்போயிடும்னு நான் சொல்லி வைக்கிறேன்”. 

“அவள் ஏழைப்பொண்ணுன்னு நாம உதாசீனப்படுத்தக் கூடாது. மாலு” 

“அம்மா, என் அப்பா ஹைகோர்ட் ஜட்ஜ், ஆனா அவருடைய அப்பா என்னவா இருந்தார்? கவியாண வீடுகள்லே சமையல் வேலை செய்திட்டிருந்தார்… ஏழை பணக்காரன்ங்கிற வித்தியாசமே எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனா அமிர்தாவுக்கு ரகு தன் சொத்தை யெல்லாம் எழுதி வைச்சுட்டுப் போயிருக்கான்”. 

“கேள்விப்பட்டேன்.”

“என்னுடைய மனசை இந்த ரகுவும் அவன் சொத்தும் வேறே உலுக்கி எடுக்கிறது”. 

“ஏன்?”

“ரகு ரொம்ப வருஷமா அமிர்தாவையே சுத்திச்சுத்தி வந்திருக்கிறான்… அவன் கண்ணை மூடலேன்னா, யார் கண்டா அமிர்தா அவனைக் கலியாணம் பண்ணிக்கொண்டிருப்பா… அவளுடைய அதிர்ஷ்டம் அவன் செத்துப் போனான்”. 

“ஏன் அதிர்ஷ்டம்னு சொல்றே?” 

“கல்யாணம் பண்ணிண்டிருந்தா, அவன் மாசா மாசம் தருவதைத்தான் அமிர்தா அனுபவிப்பா… ஆனா இப்போ ஒண்ணரை லட்சம் ரூபாய் வந்திருக்கு. கோபியும் கிடைச்சிகுக்கான். அவனுடைய சொத்தும் அவளுக்குத் தானே! இது அதிர்ஷ்டம் இல்லியா?” 

“ரகு நல்ல பிள்ளைன்னு ரமேஷ் சொன்னான்.” 

“யார் இல்லேன்னு சொன்னா அவன் கூடப் பழகின அமிர்தா இப்போ,ரகு செத்த எட்டு நாளுக்குள்ளே கோபியோடு பழகினா ஊர்க்காரா என்னென்ன பேசுவா?”

“எனக்கு மனசு ரொம்பக் குழம்பிக் கிடக்கிறது. மாலு. ஃபிரிட்ஜிலிருந்து ஒரு டொமோடோ ஜூஸ் கொண்டா…”

“இதோ ” என்று உள்ளே போனாள் மாலதி 

அவள் திரும்பி வந்த போது கணவன் ரமேஷ் காரிலிருந்து இறங்கிப் படியேறி வருவதைக்கண்டாள். மீண்டும் திரும்பி இன்னொரு டம்ளர் ஜூஸை எடுக்கப்போனாள். 

மாலதி இரண்டு தம்ளர்களுடன் வருவதைக் கண்டதும். ரமேஷ், “மாலு, இன்னும் நீ ரெடியாகவில்லையா?” என்று கேட்டான். 

“இந்தாங்க அம்மா, ஜூஸ்… இதோ இதை, நீங்களும் குடியுங்கள்”. 

“என்னம்மா முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு.”

“ஒண்ணுமில்லேடா, ரமேஷ்”. 

“என்ன மாலு?” 

“அப்புறம் சொல்றேன்.” 

“சரி, இப்போ கிளம்பு. நான் ஆறரை மணிக்கு வருவேன். ரெடியா இருக்கணும்னு சொன்னேனே.”

“நான் உங்களோடே வரலை.”

“இன்னிக்கு ரெண்டு பேரும் டின்னருக்கு வந்திடறோம்னு நான் சீதாபதிகிட்டே சொல்லியாச்சே. அவனும். அவன் மனைவியும் நமக்காகக் காத்திருப்பார்கள்.” 

“இங்கே நான் அம்மாவுக்கு ஆறுதலா இருக்கப் போறேன்.”

“அம்மாவுக்கு ஆறுதலாவா? என்ன உளர்றே. அம்மாவுக்கு என்ன வந்துட்டது இப்போ?”

“எல்லாம் உங்க அருமைத் தம்பி கோபியாலே…”. 

”ஏம்மா, என்னாச்சு… யாராவது கடன்காரன் வந்து வாசல்லே நின்னு பயமுறுத்திட்டுப் போனானா?” 

“இல்லை” என்றாள் மாலதி, 

“அப்போ குடிச்சுட்டு வந்து கும்மி அடிச்சானா?”

“இல்லே” 

“அப்போ வேறு என்ன?“ என்று கேட்டான் ரமேஷ். 

“உங்க கம்பெனியிலே அமிர்தான்னு ஒரு பெண் இருக்கா….” என்று மாலதி ஆரம்பித்தாள். 

“ஆமாம்… ரெண்டு நாளா லீவ்… அவளுக்கு என்ன?”

“அவளுக்குத்தானே செத்துப்போன ரகு தன் சொத்தை யெல்லாம் எழுதி வைச்சிருக்கான்…”

“அதுக்கும் கோபிக்கும் என்ன சம்பந்தம்…”

“அந்தப் பெண் அமிர்தாவைச் சுத்தி உங்க கோபி அலையறான்” 

“நான்சென்ஸ்!” என்றான் ரமேஷ் 


மாலதியும் ரமேஷும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில், கோபி அமிர்தாவுடன் அவளுடைய வீட்டில் அவளிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான். “எனக்கு எல்லா விஷயங்களும் தெரியணும்… நீங்க உங்க அமெரிக்கா லைஃப் பூராவும் சொல்லணும். ஒண்ணையும் மறைக்கக் கூடாது!” என்றாள் அமிர்தா. 

அத்தியாயம்-23

கோபி அமிர்தாவைப் பார்வையால் விழுங்கினாள். அவளால் அவனுடைய பார்வையிலிருந்து நழுவிக் கொள்ள: முடியவில்லை. ஒரு சில கணங்கள் அவன் அவளை அப்படியே வாரி அணைத்துக் கொள்ளமாட்டானா என்ற தாபம் கூட ஏற்பட்டது. ஆனால் இன்னும் சில கணங்களிலேயே அமிர்தா சுயநினைவுக்கு வந்தாள். 

கோபி ஒரு சோபாவில் உட்கார, அமிர்தா எதிரே உட்கார்ந்தாள். 

“என் பக்கத்திலே உட்காரக்கூடாதா அமிர்தா? உன் மூச்சுக் காற்றே எனக்குத் தென்றலாக இருக்கும்”. 

“சமயம் வரும்போது நான் உங்க மடியிலேயே உட்கார்றேன், கோபி. இப்ப நீங்க வந்த காரியம். ” 

“அமெரிக்கா வாழ்க்கை பற்றி…” 

“ஆமாம், அது முதல்லே எனக்குத் தெரியணும். நீங்க பொய் பேசமாட்டீங்கங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு”.

“ரொம்ப சுருக்கமாய்ச் சொல்லிடறேன். அமிர்தா…” என்று ஆரம்பித்த கோபி தொடர்ந்தான். 

“நான் அஞ்சு வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றிலும் ஒரு பிரமிப்பு. இவ்வளவு அழகா நம்ப ஒரு நாடு இருக்குமாங்கற வியப்பு. முதல் வருஷமே ஸ்டெல்லா தாமஸ் எனக்கு சிநேகிதியாள். அழகை விட அவளிடம் கவர்ச்சி அதிகம். சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள். தொட்டுத் தொட்டுப் பேசுவாள். ஆரம்பத்தில் எனக்குக் கூச்சமாயிருக்கும். மாலை வேளைகளில் மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டே நடப்போம். ஒரு நாள் திடீரென்று மழை. ஒதுங்க இடம் தேடி ஓடினோம். காலியான பட்டறை ஒன்று கண்ணில் பட்டது. அதனுள் புகுந்து கொண்டோம். மழை நிற்கவில்லை, உட்கார நாற்காலி கூட இல்லை. நின்றோம். அவள் முதலில் என் தோளைப் பற்றினாள். அதன் பிறகு என்னை நானே இழப்பதை உணர்ந்தேன்”

கோபி நிறுத்தினான். 

“மேலே என்ன நடந்ததுன்னு புரிந்துவிட்டது கோபி.”

“நான் எதையும் நியாயப் படுத்திப் பேச வரலே. நான் செய்தது தவறுதான். சத்தியமா எனக்கு அவள் மீது காதல் இல்லை. இரண்டு உடல்கள் சேர்ந்தன. பருவம், சூழ்நிலை, மிருக உணர்ச்சி இதற்கெல்லாம் நான் பலியானேன். ஆனால் கதை இதோடு நிற்க வில்லை. ருசி கண்ட பூனையாகி விட்ட நான் ஸ்டெல்லாவுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள லானேன், இரண்டு வகுடங்கள் இப்படி ஒடின. மூன்றாம் வருடம் அவள் கலியாணம் பற்றிப் பேச்செடுத்தாள். நான் மறுத்தேன். தன் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றிப் பேசியதும் பயந்து நடுங்கினேன். அவளுடைய உறவுக்காரர்கள் பயமுறுத்தினார்கள். வேறு வழி தெரியவில்லை. ரிஜிஸ்டர் கலியாணம் நடந்தது. அதன் பிறகு நான் தாம்பத்தியத்தில் இறங்கினேன். நான் இந்தியாவில் ஒரு பெரும்பணக்காரன் என்கிற எண்ணத்தில் அவள் பணம் கறப்பதிலேயே குறியாக இருக்க ஆரம்பித்தாள். அவளுடைய எதிர்பார்ப்புகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. அவளை விட்டு ஓடினேன். ஆனால் எத்தனை நாள் ஒளிந்து வாழ முடியும்? எப்படி ஸ்டெல்லாவிடமிருந்து விடுதலை பெறுவது? இந்த நிலையில்தான் கல்லூரியில் எனக்கு லூஸி என்கிற மாணவி பரிச்சயமானாள். இருவரும் ஒருநாள் மனம் விட்டுப் பேசினோம். விவாகரத்து மிகவும் எளிது என்ற அவள் ஒரு யுக்தி செய்தாள். 

“அவளும் நானும் ஒரே கட்டிலில் அந்தரங்கமாக இருப்பது போன்ற காட்சி. இது படமாக்கப்பட்டது. ஸ்டெல்லாவுக்குப் படம் போயிற்று. கோபத்தில் அவள் என்னைத் துப்பாக்கியால் சுடவே வந்தாள். ஆனால் லூஸி உதவிக்கு வந்தாள். இருவரும் விவாகரத்துக்கு கேஸ் போட்டோம். மாதா மாதம் இருநூறு டாலர் குழந்தைக்கு பத்து ஆண்டுகள் நான் அனுப்பவேண்டும் என்று கோர்ட் முடிவு செய்தது. இதுதான் என் கதை!” என்றான் கோபி. 

“லூஸி என்னாளாள்?”

“அது ஒரு தனிக்கதை அமிர்தா, அவள் ஏற்கனவே கலியாணமானவள். கணவன் ரெண்டாயிரம் மைல் தள்ளி ஒரு பாக்டரியில் வேலையாக இருந்தான். இவள் சம்பாதித்துக் கொண்டே என்னுடன் படித்து வந்தாள். அடிக்கடி விருந்துக்கு அழைத்தாள். அவளுக்கும் ஒரு நாள் பசி எடுத்தது. நான் சிறையானேன். மீண்டும் பழைய கதை, நல்ல வேளையாக விபரீதம் ஏதும் நடக்கவில்லை. அவளுக்கு ஹரே ராமா. ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபாடு உண்டு. அடிக்கடி அதில் கலந்து கொள்ளுவாள். ஒரு நாள் திடீரென்று யாரோ ஒருவனுடைய தூண்டுதலின் பேரில் படிப்பை நிறுத்திவிட்டு, இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். அதன்பிறகு நாங்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. ஒரு தடவை நான் ஹைதராபாத்துக்குப் போனபோது அவளைப் பார்த்தேன். ஓட்டல் அறைக்கு அழைத்தேன். தப்புதான். அன்று என் பசியை அடக்க மறுத்து வெளியேறி விட்டாள். இதுதான் ரெண்டாவது கதை!”

“தாங்க்ஸ்!” என்றாள் அமிர்தா. 

“உடற்கொழுப்பாலே முதல் தப்பைச் செய்தேன். ஒருத்தியிடமிருந்து தப்பிக்க வேண்டும்ங்கிற வேகத்தில் ரெண்டாவது தப்பைச் செய்தேன் அமிர்தா… இந்த ரெண்டையும் உன்னால் மன்னிக்க முடியுமானால் என்னை விட அதிர்ஷ்டக்காரன் யாருமே இல்லைன்னு நான் கர்வப்படுவேன். ஏன்னா, என் மனதை மட்டுமே தொட்ட பெண் நீ ஒருத்திநான். உன் உடல் என்னைக் கவரவில்லை. இவ்வளவுக்கும் நீ ஒரு போழகி, சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடு, அமிர்தா.” 

“சரி” என்றாள் அமிர்தா. 

“பாபம் செய்தவன் அதை ஒத்துக் கொண்டு பாவ மன்னிப்புக் கேட்கிறபோது அவனை மன்னிப்பதுதான் நியாயம், அமிர்தா. களங்கமற்ற நீ களங்கம்.நிறைந்த என்னை ஒத்துக் கொள்ளுவதும், கொள்ளாததும் உன் மனநிலையைப் பொறுத்தது.”

“சரியாகப் பேசறீங்க, கோபி” என்ற அமிர்தா, “என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டாள். 

“நீ இப்ப ஸ்ட்ராங்கா, சூடா விஷம் கொடுத்தால் கூட நான் ரசிச்சுச்சாப்பிடுவேன்.” 

“இப்ப விஷம் கைவசம் இல்லை. தயார் பண்ணவும் தெரியாது!” 

கோபி சிரித்தான். 

அவன் சிரிப்பில் உண்மை இருந்தது. 

அமிர்தாவும் சிரித்தாள். அதில் பொய்ம்மை மறைந்து கிடந்தது. 

அத்தியாயம்-24

அமிர்தா உள்ளூரக் கசிந்து கொண்டிருந்தாள். என்ன தான் வெளியே கோபியிடம் மல்லுக்கு நிற்பது போலப் பேசினாலும் அவள் மனம் வேதனையில் தவித்தது. இது வரையில் அவளுடைய வாழ்க்கையில் எந்த மனிதன் மீதும் அவளுடைய மனம் நிலைத்து நின்றதில்லை. கோபி ஒருவன் தான் அவளை ஈர்த்திருக்கிறான். அவனுடன் தன்னுடைய வாழ்வு இணையப்போகிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் பிணைப்பு ஒரு தாம்பத்தியமாக மலரப் போகிறது என்றெல்லாம் அவள் தன்னுள் ஒருசில தினங்களாகக் கனவு கண்டு பெருமைப் பட்டாள். இது வரையில் கனவே காணாத அவளை, முதல் கனவே ஒரு பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அவன் ஒரு அமெரிக்கப் பெண்ணை மணந்ததோ, ஒரு குழந்தைக்குத் தகப்பன் என்ற உறவை ஏற்படுத்திக் கொண்டதோ, அவளுடைய கனவைக் கலைக்கவில்லை. ஆனால் அவனுடைய சுயநலத்துக்கு இன்னொரு பெண்ணைப் பலியாக்கி இருக்கிறானே? அவனுடைய பழக்கவழக்கங்கள்- குடியும் கேளிக்கை ஆட்டங்களும் அவள் சம்பாதித்துக் கொண்டவை – மனம் முதிர்ச்சி அடையாத வயதில் ஏற்பட்டுள்ள பலவீனங்கள். இந்த பலவீனங்களை அவனிடமிருந்து களைத்து எறிய அவளால் முடியும். ஆனால் அவனுடைய பிறவிக் குணமாகிய சுயநலத்தை அவள் எப்படி களைத்து எறிவாள்? கோபியின் காதல்? ஒரு மனைவியை உதறி எறிந்த பிறகும் கூட தெய்வீகக் காதலாகவே இருந்தாலும், அவனை எப்படி அவளால் ஏற்றுக் கொள்ள முடியும்? 

நாளடைவில் இந்தக் காதல் கல்யாண வாழ்க்கை என்ற பாறாங்கல்லில் அடிபட்டு அடிபட்டு மெள்ள மெள்ளத் தேய்ந்து போகப் போகிறது. தினசரி வாழ்க்கையின் அடிச் சுவடுகளில் அது மறைந்தும் போகலாம். அப்போது கோபி அவளைத் தன்னுடைய சுயநலத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளமாட்டான் என்று என்ன நிச்சயம்? அவளுடைய அக்கா கௌரி காதலித்துக் கலியாணம் செய்து கொள்ள வில்லை. கலியாணமான பிறகுதான் அவளுடைய மனத்திலே ஒரு பெண்ணின் உணர்ச்சிகளே பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. கணவனுடன் அவள் நடத்தும் சல்லாப வாழ்க்கையும், வெளிப் போராட்டங்களும் அன்பின் அடிப்படையில் தோன்றியவை. கேவலம் ஒரு அலமாரிக்காகவும் மரக்கட்டிலுக்காகவும் அவள் பேசுவதெல்லாம் மனத்தின் ஏமாற்றக் குரல்களல்ல. லௌகிக வாழ்க்கையில் தோன்றும். தோன்றக்கூடிய அனல் கட்டிகள்தான். இன்று வெளியே குமுறும் கௌரி உண்மையில் தன்னுள்ளே தாம்பத்தியம் என்ற ஒரு அழகிய அற்புத நீரோட்டத்தைத்தான் அடக்கிக் கொண்டிருக்கிறாள். 

ஆனால் கோபி ஒரு நிதர்சன சுயநலவாதி. இத்தனை. நாள் அவளும் கோபியும் ஒரே காரியாலயத்தில் பணி புரிந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறார்கள். அவனுடைய ஆண் அழகின் அதிசயங்களில் அவள் சில கணங்கள் தன்னை மறந்து லயித்திருக்கிறாள். ஆனால் அவன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவளை அவன் வீடேறி வந்து சந்தித்ததெல்லாம் ரகு இறந்து போன பிறகு தான், அவனுடைய சொத்துக்களெல்லாம் அவள் பெயருக்கு எழுதப்பட்டு விட்டது என்று சொல்ல வந்தபோதுதான்.

அவர்களுடைய காதல், ஒரு விஷ ஜுரம் போல் திடீரென்று பிறந்து மின்கதியில் வளர்ந்து விட்ட காதல். முதலில் கண்மூடித்தனமாகத்தான் அமிர்தாவும் தன்னுடைய முதல் காதலில் மூழ்கிப் போனாள். ஆனால் அவளுடைய இயல்பில் அவள் யோசிக்கத் தொடங்கிய போது அவளுடைய இயற்கையான யதார்த்த குணம் மேலோங்கி நின்றது. சின்னஞ்சிறு வயதிலிருந்து ஒரு நல்ல துணிக்கு ஏங்கின. அவளுக்கு எதிர்காலம் பட்டாடையாகப் பிரகாசிக்க வேண்டும் என்று தோன்றியது. கோபி அந்தப் பட்டாடையை அவளுடைய வாழ்க்கை எனும் விக்கிரகத்தின் மீது போர்த்துவான் என்று அவளுடைய மனம் தப்புக்கணக்குப் போட்டது. அவள் அவனுக்குப்பலி ஆவதற்கு முன்பே அவள் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுவிட்டாள். 

இப்போதும் கோபியின் மீது அவளுக்கு வெறுப்பு பிறக்க வில்லை. அவனுடைய நிலையில் ஒரு மனிதன் என்னென்ன செய்ய முயல்வானோ அல்லது துடிப்பானோ அதைத்தான் அவன் செய்கிறான். ஆனால் அவை அவளைப் பாதிக்கின்றன. இதற்கு இடம் கொடுத்தவள் அவள்தான். முதல் சந்திப்பிலேயே கோபியை அவள் ஒரு சாதாரண மனிதனாக பாவித்து மதித்து வெளியேற்றியிருக்க வேண்டும். 

மாறாக அவனை அவள் தன் மனத்தினுள் ஏற்றி வைத்துக் கொண்டாள். இப்போது ஏற்றி வைத்துக் கொண்டவனை வெளியேற்ற முற்படுகையில் மனம் கசிகிறது. நல்ல பொருளே வேண்டாத பொருளாகி விடுகிற போது அதன் பிரிவை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? 

ஆனால் அமிர்தா ஏமாந்து துயர் அடைய எதிலும் நம்பிக்கை வைக்காதவள். அவள் கோபியை மனமார் வரித்தாலும் காதலித்தாலும் ஒரு பெரும் ஆசையையோ அல்லது நம்பிக்கையையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இப்போது அவனை உதறித்தள்ளப் போகிறோம் என்று அவளாகவே செய்த முடிவு அவளுக்கே வேதனையை அளித்தாலும் இந்த நெஞ்சுக்கசிவு வாழ்க்கையின் கரைகளை உடைக்கும் வெள்ளமாய்ப் போகாது. அவளுடைய துயரமெல்லாம் எளிதில் மறையக்கூடியது. மறக்கக் கூடியது. ஆனால் அவளுடைய முதற் காதலின் ஏமாற்ற வடுக்கள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் முத்திரைகளாகப் பதியத்தான் போகின்றன. 

அமிர்தா அன்று முழுவதும் எதிலும் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. காலையில் போன தகப்பனார் மத்தியானம் சாப்பாட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார். அவருக்குச் சாப்பாடு தயார் செய்யவும் அவள் முனைய வில்லை. காலையில் அவருடன் ஒரு வெறும் காபியைக் குடித்த அவளுக்குப் பசி இருந்த போதிலும், அதை அவள் உணரவில்லை. 

சுமார் பதினொரு மணிக்கு கம்பெனியிலிருந்து ஒரு உதவி மானேஜர், ஒரு வக்கீல் பின் தொடர வந்தார். ரகுவின் சேமிப்புப் பணமும், அவன் கம்பெனியில் தேக்கி வைத்திருந்த பணமும் அவளுடைய கணக்குக்கு மாற்றப்பட இருக்கிறது என்றும், அவளுடைய கையெழுத்துக்கள் தேவை என்றும் சொல்லி வாங்கிக் கொண்டு போனார். லட்சத்துக்கும் மேற்பட்ட பணம் அவளுக்கு ஒரு ஐசுவரியமாக வந்திருக்கிறது. ஆனால் அவள் மனம் அதில் ஒட்டவில்லை. 

வீட்டினுள்ளேயே நடந்து நடந்து அவளுக்கே அலுத்துப் போயிற்று. கோபியை மறக்க அவள் எதை எதையெல்லாமோ நினைத்துப் பார்த்தாள். திடீரென்று ரகு கண் முன் தோன்றினான். 

அவன் ஏன் தன் சொத்தையெல்லாம் அவள் பெயருக்கு எழுதி வைத்துவிட்டுப் போனான்? கல்கத்தாவில் இருக்கும் அண்ணன் ஏற்கனவே ஒரு பணக்காரன் என்ற காரணத்தால் அவனுக்குள் கொடுக்காமலிருக்கலாம். ஆனால் அமிர்தாவுக்கு வெறும் ஒரு காதலையும், மோகத்தையும் முன்னிட்டு எழுதி வைப்பானேன்? எத்தனையோ நூற்றுக்கணக்கான நண்பர்கள். உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உதறி எறிந்து விட்டு அமிர்தாவுக்குக் கொடுக்கிறான் என்றால் ஏன்? 

அடிப்படைக் காரணம் காதல்தான். ரகுவின் காதல் எவ்வளவு கடுமையாக இருந்தால் அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய முடியும்? அவள் தன்னைக் காதலிக்க வில்லை. ஒரு வெறும் நண்பனாகத்தான் மதிக்கிறாள் என்று தெரிந்தும் அவன் தன் காதலை நிறுத்தவில்லை. ஒரு நாள் இல்லாவிட்டால், ஒரு நாள் அமிர்தாவும் மனம் இரங்கி மாறுவாள் என்று தான் அவன் நினைத்தான். அவனுடைய இந்த நினைவு என்றுமே அற்றுப் போகாத தொடர் சங்கிலியாக வளர்ந்தது. ஆனால் அவனுடைய முடிவே சங்கிலியை அறுத்தது. இருந்தும் அவனுடைய நினைவு அவளுடைய மனத்தில் என்றென்றும் இருக்க அவன் அவளைத் தன் உயிலிலேயே வடித்துவிட்டான். ஒரு பெண்ணுக்குத்தான் தீவிரக்காதல் இருக்க முடியும். ஒரு ஆணால் காதலை ஆன்மீகமாகக் கருத முடியாது என்று பலர் வாதாடுகிறார்களே அது எவ்வளவு தப்பு என்று ரகு நிரூபித்து விட்டான். திடீரென்று ஆஸ்பத்திரியில் ரகு இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக அவள் மனத்தில் ஏற்பட்டகசிவு அமிர்தாவின் நினைவுக்கு வந்தது. 

ஒரு கணம்-ஒரே கணம்- அவளுடைய மனம் ரகுவை நாடியது. அந்தக் கணமே இன்னும் வளர்ந்திருந்தால் ரகுவும் இறக்காமலிருந்தால் கண்டிப்பாக இன்று அவள் அவனுடைய மனைவியாகி இருப்பாள். 

இந்த எண்ணம் தோன்றிய போதுதான் இன்னொரு எண்ணம் அவளையும் அறியாமல் எங்கிருந்தோ எழுந்து அவளைத் தாக்கியது. 

ரகு ஏற்கனவே தன்னைத் தானே அவளுடைய கணவனாக்கிக் கொண்டு அவளை மானசீக மனைவியாக ஏற்றிருக்கிறான். அவனுடைய மானசீக மனைவி மானசீக விதவையாகப் போனால் என்ன செய்வது என்று தான் தன் சொத்தையெல்லாம் எழுதி வைத்துவிட்டாள்! 

இந்த எண்ணம் ‘பளார்’என்று அவள் மனத்தை அடித்த போது அவளுக்கே ஒரு சந்தேகம் பிறந்தது. ஏற்கனவே அவள் ஒரு விதவையா? 

திடீரென்று வந்த கோபியின் குரலில் அவள் திடுக்கிட்டு விழித்தாள். 

புள்முறுவல் பூத்த அவன், “என்ன அமிர்த், தூங்கிக் கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். 

அவனுக்குப் பதில் அளிக்க அவளுக்குத் தெம்பு இல்லை. ஏறிட்டுப் பார்த்தாள். 

வாசற்படியில் அப்பா பசுபதி நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். 

– தொடரும்…

– கோபுர தீபம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1999, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *