ஒவ்வொரு நொடியிலும்…

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 17,556 
 

“எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’

கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக் கோட்டிங் கொடுத்த மாதிரி நிறம்! காதோரமாய் சுருண்டு வளைந்த கேசங்கள், காற்றில் அலைந்து, பளபளத்த கன்னங்களை பயமில்லாமல் தொட்டு விளையாடின. அலையலையாய் நெளிந்த கூந்தலில் மல்லிகைச் சரம் வேறு.
எப்போதும் சுரிதாரில் வருபவள், நான் கேட்டதற்காகப் புடவை கட்டியிருந்தாள். சாதாரண ஷிஃபான் சாரிதான். அப்படியே உடம்போடு ஒட்டிக் கொண்ட மாதிரி இருந்தது. சற்றே அடர் நீலத்தில் வெள்ளை நிறப் பூக்கள் அதில் சிரித்தன.

முன்நெற்றியில் திலகம். அதற்குக் கீழ் குங்குமம். பறக்கும் முன் உச்சி கேசங்களை அவ்வப்போது கோதினாள்.

காதுகளில் வெள்ளைக் கல் ஸ்டட். அதில் சின்ன தொங்கல் வேறு…

“ம்ஹூம்’ என்று பெருமூச்சு விட்டேன். “எதுக்காக இப்பப் பெருமூச்சு?’ மீண்டும் கேட்டாள். ஒரு வினாடி மௌனத்துக்குப் பிறகு சொன்னேன்.

“சொல்லி என்ன ஆகப் போகுது? சொன்ன உடனே சரின்னுடுவியா?’

சலிப்பாக இருப்பது போலக் கேட்டேன். என்னை ஊடுருவுவது போலப் பார்த்தாள். மனமும், அறிவும் தங்கள் செயலை மறந்து எங்கோ பறக்க ஆரம்பித்தன.

இது அவள் வழக்கம்! ஏதாவது சலிப்போ, கோபமோ எனக்குள் எழுந்தால் போதும்… இப்படியொரு பார்வை! கோபமோ, சிரிப்போ இல்லாத ஊடுருவும் பார்வை. உள்ளுக்குள் ரத்த ஓட்டம் ஸ்தம்பித்து, சுற்றுப்புறங்களை மறந்துவிடச் செய்யும் பார்வை. இப்போது அப்படித்தான் பார்த்தாள்.

“ஏய்… எனக்குத் தெரியும். ச்சே! காத்து வந்து எங்கெங்கயோ தொடுது; காதோரமுடி வந்து கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கடுப்பேத்துது, போதாக்குறைக்குத் தொங்கட்டான் ஆடி ஆடி “இப்ப என்ன பண்ணுவே, இப்ப என்ன பண்ணுவே’னு என்னைக் கிண்டலடிக்குது. என்னால எதுவும் செய்ய முடியலே. இதானே சொல்ல வந்தே?’

பேசியது கண்களா, இதழ்களா…? சே! என்ன இது குழப்பம். ஒருகணம் தலையை ஆட்டிக் கொண்டேன்.

“பேசினது கண்ணா, வாயான்னு சந்தேகமா? வந்திருக்குமே… அதுலயும், கவிதை எழுத ஆரம்பிச்சவுடனேயே வந்திருக்கும்னு தெரியும்’

அவள்தான் வாய் திறந்து பேசியிருக்கிறாள். முட்டாள்! நான்தான் வழக்கம் போல் குழம்பியிருக்கிறேன். அசட்டுச் சிரிப்புடன் பார்த்தேன்.

“அதெப்படிப்பா… கேக்கணும்னு நினைச்சேன். வாத்தியத்தை எல்லாம் என்னோட கம்பேர் பண்ணி எழுதினே? மௌத் ஆர்கன் புரிஞ்சுது; சங்கு புரிஞ்சுது; வீணை புரிஞ்சுது; வயலின் எதுக்கு? அதான் புரியலை!’

புன்னகைத்தபடி, பளீரென்று தென்பட்ட இடையைப் பார்த்தேன்.

“ஏய், கடைசில என்னை வெறும் ஜடமா நினைச்சுட்டே இல்லே.’

“ஏன்?’

“பின்னே! இன்ஸ்ட்ருமெண்டுக்கு ஏது ஜீவன்?’

“அதான் இல்லை.’

“எப்படி?’

“அந்த இன்ஸ்ட்ருமெண்ட்தான் என்னை வாசிக்குது. அதனாலதான், அடிக்கடி என பேச்சு தடுமாறுது.’

“யப்பா, என்னெல்லாம் தோணுது உனக்கு?’

ஹாண்ட் பேக்கால் வலிக்காமல் அடித்தாள். வலிக்காமலே “ஆ’வென்று கத்தினேன்.

“ஏய்… நிஜமா சொல்றேன். நீ சொல்ற இந்தப் பொய்கூட ரொம்பப் பிடிச்சுருக்குப்பா.’

“எனக்கும்கூடத்தான்!’

“என்ன? நான் சொல்றதை நீயும் சரின்னு சொன்னா, அதுல ஏதோ வில்லங்கம் இருக்குமே!’

“சேச்சே… அப்படில்லாம் இல்லே…’

“நிஜம்மா… அப்படின்னா என்னன்னு சொல்லு?’

“எந்த இன்ஸ்ட்ரூடெண்டாவது வாசிக்க வந்தா “என்னைத் தொடாதே’ன்னு சொல்லுமா…?’

“நினைச்சேன்… இப்படி ஏதோ ஒரு பதில் வரப்போகுதுன்னு எதிர்பார்த்தேன்.’

“ம்ஹூம்… எதிர்பார்த்து என்ன பிரயோஜனம்?’

என் குரலில் மீண்டும் வெளிப்பட்ட சலிப்பைப் பார்த்தவுடன், கோபமாய்ப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு இன்னிக்கு? இவ்வளவு பெரிய வீட்டுல நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம். எந்த தைரியத்துல வந்தேன் தெரியுமா?’

“எந்த தைரியம்; யாரை நம்பி?’

“என் கண்ணனை நம்பி… நானே தப்பு பண்ண நினைச்சலும் அவன் விட மாட்டான். அவன் ஜெம்! உன்னை மாதிரி அவசரக் குடுக்கை இல்லே…’

சொன்னபடியே குறும்பாகச் சிரித்தாள்.

புருவங்கள் மேலும் கீழுமாக ஏறி இறங்கி, “என்ன, எப்படி’ என்று விசாரித்தன. கண்களிலும், கன்ன மேடுகளிலும் புன்னகையும் குறும்பும் தெறித்தன.

சுபாவமாகவே படிந்திருந்த அவளின் அழகு, குறும்புச் சிரிப்பில், புருவச் சுருக்கலில், கண்களில் சிமிட்டலில் ஆயிரம் மடங்கு அதிகப் பட்டது. சரேலென்று இழுத்து, நெஞ்சோடு இருக்கினேன்.
இதென்ன நம்பிக்கை? காதல் என்பது பருவத்தின் தகிப்பு என்றால், இது வெறும் உடலின் தவிப்பு மட்டும்தானா? உள்ளுக்குள் ஓடித் தளும்பும் உணர்ச்சிகள் ஏனிப்படி ஒடுங்குகின்றன? என்ன ஆயிற்று எனக்கு?

உடலெங்கும் பரவசம்; மனம் பூரித்துக் கிளர்கிறது; புத்தியில் யோசனை!

அவள் என் அணைப்புக்குள்தான் – கைக்குள்தான் – இருக்கிறாள். தலையில் சூடிய மல்லிகைச்சரம் வாசனையைத் தூதனுப்புகிறது. புலன்களை விசாரிக்கிறது. ரத்த அணுக்கள் தாறுமாறான வேகத்தில் ஓடுகின்றன. ஆனால், கைகள் அசையவேயில்லை.

எவ்வளவு நேரம் போனது? தெரியவில்லை. என் கழுத்தில் புதைத்திருந்த தலையை மெல்ல உயர்த்தினாள், என முகத்தை ஊன்றிப் பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்தாள். “ஏய்… எனக்கு உன்னைத் தெரியும்பா. உன்னால பொய் சொல்ல முடியாது. தப்பு பண்ண முடியாது. எதையும் ரசனையோட அணுகறது உன் சுபாவம்! மனசு சேர்ந்தாத்தான் உன் உடம்பு இயங்கும். தப்புன்னா உம் மனசு ஏத்துக்காது. உரிமையா, முறையா இருந்தா மட்டும்தான் இயங்கும். அதுதான் உன் சுபாவம்! எனக்கு ரொம்பப் பிடிச்சதும் அந்த சுபாவம்தான்!’

அதற்கு மேல் அவளால் பேச முடியவல்லை; பேச விடவில்லை. மூடிய இதழ்களும் விழிகளுமாக நேரம் உருண்டது.

“ஏய் போக்கிரி, சீக்கிரம் உன்கூட என்னைக் கூட்டிட்டுப் போயிடு. இவ்வளவு பிரியத்தை என்னால தாங்க முடியலை’

என் கைகளுக்குள் முகத்தை வைத்து நிமிர்ந்து பார்த்தாள். ஸ்டில் அவுட்-ல் எடுத்த புகைப்படம் மாதிரி, க்ளோஸ் அப்பில் வரைந்த ஓவியம் மாதிரி… பார்க்கப் பார்க்க பரவசம் மிகுந்தது.

எல்லாக் காதலனும் இப்படித்தான் இரந்திருப்பானோ? இருக்கலாம். இப்படி ஓர் அழகின் முன், ஆண் தன் சுயத்தை இழப்பதில் ஆச்சர்யமில்லைதான். ஆனால், அவள் இப்படி இருப்பதுதான் ஆச்சர்யம்! அதைப் பற்றிய பெருமிதம் துளியேதும் இல்லை அவளிடம்!

வாய்விட்டுச் சொன்னேன்…

“போப்பா.. யாராவது என்னைத் திரும்பிப் பார்த்தால்கூட ஆத்திரமா வருது. “போடா ராஸ்கல். என் கண்ணா மட்டும் தான் என்னை அப்படி பார்க்கலாம்’னு கத்தலாம்போல இருக்கு. வேற யாராவது உன்கிட்டே பேசிட்டிருந்தாகூட கோபம் கோபமா வருது தெரியுமா’

சிணுங்கலாய்ப் பேசினாள். காதுகளின் தொங்கல்கூட, அந்தச் சிணுங்கலுக்கு அபிநயம் பிடிப்பதுபோல ஆடியது. மெலிதாய் சிரித்தேன்.

“எதுக்கு இந்தச் சிரிப்பு? காதுல ஜிமிக்கி ஆடித்தா?’ பளிச்சென்று கேட்டாள்.

என் புன்னகை மேலும் விரிந்தது.

“அது எப்படிப்பா! ஆரவாரம் இல்லாம வர ஆத்து ஜலம் உடம்பையும் மனத்தையும் குளிரவைக்கிற மாதிரி, உன் ரசனையாலயே என்னைக் கிறங்கடிக்கிறே. இந்த ரசனை, இந்தக் குறும்பு, அதோட சேட்டை பண்ற இந்தக் கண்… எல்லாமா சேர்ந்து என்னை…’

பேசிக் கொண்டிருக்கும்போதே, பளபளவென்று ஜொலித்த இடையே நோக்கி விரலை நீட்டினேன்.

மறுகணம் சட்டென்று விலகிக் கீரிச்சிட்டாள்.

“ஹேய்…’

அந்த வார்த்தையைச் சொல்வதற்குள் கன்னத்திலும், முகத்திலும் பரவி கொந்தளித்தது. வெட்கத்தின் சிவப்பு! மூக்கு நுனி கூட தனியாகத் துடித்தது. காது மடல்களும் சிவந்திருப்பதாகத் தோன்றியது.

பொய்க் கோபத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“இதைப் பார்க்கத்தான் அப்படிச் செய்தேன்.’

சொல்லிவிட்டு, வாய்விட்டுச் சிரித்தேன்.

“சிரிக்காதீங்க… நான் கோபமா இருக்கேன்.’

வார்த்தையில்தான் கோபம் இருந்தது. உடலெங்கும் உற்சாகப் புல்லரிப்பு ததும்பியதை உணர முடிந்தது.

சிறிய மௌனத்தை அடுத்து கேட்டாள்.

“ஏம்பா, “லவ்வர்ஸ்’னா உனக்கு யார் ஞாபகம் வரும்?’

“ம்… ராமன்-சீதா.’

“சே… சீதையைத் தீக்குளிக்க வைச்சவன் ராமன். அவனை எப்படி லவ்வர்ல சேர்த்தே?’

“நெருப்புல இறங்கினது சீதை மட்டுமல்ல; ராமனோட மனசும்தான். ஏன்னா, அவ இருந்ததே ராமனோட மனசுலதான்!’

“எப்படி? உன் மனசுல நான் இருக்கிற மாதிரியா?’

சொன்னபடியே கைகளைப் பற்றி அழுத்தினாள். அவள் முகத்தில் புஷ்பக்கூட்டம் வியாபித்தது.

எழுதிக் கொண்டிருக்கும்போதே, எஸ்.எம்.எஸ். என்று அழைத்தது செல்ஃபோன். எடுத்துப் பார்த்தேன். அபிதான் அனுப்பியிருந்தாள்.

“நாளைக்கு “லவ்வர்ஸ் டே’பா. பத்து வருஷமாச்சு நம்ம பாதை மாறி. ஆனா, முன்னைவிட, இப்போ அதிகமா உன்னை லவ் பண்றேன். என் தெரியுமா? “நெருப்புல இறங்கினது சீதையோட உடம்பு மட்டுமில்ல; ராமனோட மனசும்’னு சொன்னது…நம்ம வாழ்க்கைலயே நிஜமாயிடுத்துல்ல, ஸாரிப்பா… வெரி ஸாரி!’

படிக்கும்போதே, “அடிப்பாவி… உன்னைப் பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது எப்படித் தெரிந்தது உனக்கு?’ என்ற எண்ணம் மேலிட்டது. மறுகணம், கண்ணோரமாய் ஈரம் கசிய ஆரம்பித்தது.

– ஸ்ரீநிவாச ராகவன் (பிப்ரவரி 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *