கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 21,716 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-5 | அத்தியாயம் 6-10

அத்தியாயம்-1

நள்ளிரவு, நடுநடுவே வானத்தில் பளீர் பளீர் என்ற மின்னல். ‘வானம் ஒரு தந்தை பூமி ஒரு தாய் தாய்க்கும் தந்தைக்கும் இடையே உள்ள அன்புப் பிணைப்பு நான்’ என்று அறிவுறுத்தியபாடி, மின்னல் மின்னிக் கொண்டிருந்தது.

ஒரு பரந்தவெளி. அதன் நடுவே ஒரு வீடு. தனிமையிலே தவமிருக்கும் வீடு. தவமிருக்கும் முனிவர் மனத்திலே அமைதி யிருக்கும். ஆனந்தமிருக்கும். ஆனால் இந்த வீட்டிலே அமைதி இல்லை; ஆனந்தம் என்ற உணர்ச்சி விடுமுறை எடுத்துச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன.

அன்றிரவு இன்னதென்று கூற முடியாத துக்கம்-ஓர் ஏக்கம்-அந்த வீட்டிலே நிலவியது. மழைக்கும் மின்னலுக்கும் துணையாக வீசுகிற புயல் காற்று அந்த வீட்டைச் சுற்றி ஊளையிட்டபடி இருந்தது.

அந்த வீட்டு மாடி அறையில் உலாத்தியபடி இருந்த ராமநாதன் மனத்திலே வீசிய புயலின் வேகத்துக்கு இயற்கைத் தேவியின் ஓர் அங்கமான புயலின் வேகம் ஒரு பொருட்டாகத் தென்படவில்லை. யாரோ ஒரு பிரெஞ்சு ஞானி கூறினார் ‘ஒரு மனிதன் வாழ்க்கையில் ஒரு முறையாவது தற்கொலை செய்து கொள்ள நினைக்காவிட்டால் அவன் ஒரு மனிதனே அல்ல’ என்று. ‘இருப்பதா, இறப்பதா?’ என்று ஹாம்லெட் மனத்தில் எழுந்த பிரச்னை அன்று ராமநாதன் மனத்தில் பலமாக எழுந்தது.

கூண்டில் அடைபட்ட புலிபோல் ராமநாதன் அந்த அறையில் அங்குமிங்குமாக உலாவினான். ஆனால் அவன் உள்ளத்தில் குமுறும் பிரசனைக்கு அவனால், முடிவு காண முடியவில்லை. இறுதியில், தன்னுடைய மனத்தைத திடப் படுத்திக் கொண்டான்.

எதிரே உள்ள பீரோவைத் திறந்தான். அந்தப் பீரோவின் மேல் அறையில் துவண்டு படுத்துக் கொண்டிருக்கும் கைத் துப்பாக்கியைப் பார்த்தான். அதன் பக்கத்தின் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கடிதத்தை எடுத்தான். அதைப் படிக்க ஆரம்பித்தான்.

அந்தக் கடிதத்தை அவன் இதுவரை பல முறைகள் படித்திருப்பான். இருந்தாலும் இப்பொதுதான் முதல் முறையாகப் படிப்பவன் போல் படித்தான். அதைப் படிக்கும்போது அவன் முகம் பீதி, வருத்தம், கலக்கம் முதலிய உணர்ச்சிகளைப் பிரதிபலித்தது.

‘பல நன்மைகளுக்காக, பலர் நலனுக்காக ஒரு தவறைச் செய்வது மேல்!’ என்ற வாக்கியத்தைக் கடிதத்தில் பலமுறை படித்தான், கடிதத்தை மறுபடியும் பீரோவில் வைத்தான்.

பிரோவை மூடிவிட்டான்.

பளீரென்று ஒரு பயங்கர மின்னல் வீசிற்று. அதைத் தொடர்ந்து சில வினாடிகளில் பயங்கரமான இடித் சத்தம் கேட்டது. அந்து அறையில் திறந்து விடப்பட்டிருக்கும் ஒரு கண்ணாடி ஜன்னல் ‘படக் படக்’ என்று அடித்துக் கொண்டது.

ராமநாதன் அந்தக் கண்ணாடி ஜன்னலை ஓடிப்போய் மூடினான். அதை மூடுவதற்குள், திறந்த வெளியின் காற்றின் ஓலத்திலே ஒரு சிரிப்புச் சத்தம் – அவனுக்குத் தெரிந்த குரலின் ஒலி, திலீபன் குரல் ஒலிபோல் தோன்றியது.

ராமநாதன் திகைத்து நின்றான். அங்குள்ள சோபாவில் போய்ச் சாய்ந்தான், ஒரு குழந்தை அழுவது போல் அழுதான். அதே சமயத்தில் காற்றின் வேகத்தில் பக்கத்து அறையின் கதவு திறந்தது. ராமநாதன் எழுந்து பக்கத்து அறைப் பக்கம் சென்றான்.

அங்கு படுக்கையில் படுத்தபடி சீதா அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.

சீதா, ராமநாதனின் மாமன் மகள். அவள் சிறு வயது முதலிருந்தே ராமநாதனோடு சேர்ந்து வளர்ந்தவள். ராமநாதன் ஆதரவற்று இருந்த நாள் முதல் அவனை வளர்த்துப் படிக்க வைத்தவர் ராமலிங்கம் – சீதாவின் தந்தை. ராமநாதனின் தந்தை அவனிடம் காட்டாத அன்பை மாமா ராமலிங்கம் காட்டினார். சீதாவின் வாழ்க்கை பயனற்றதாக, சுவையற்றதாகப் போனதற்குக் காரணமே திலீபன் என்று நினைக்க நினைக்க ராமநாதனுக்குத் திலீபன் மீது கோபம் வந்தது. ஆத்திரம் எழுந்தது.

அழுதுகொண்டிருந்த சீதா நிமிர்ந்து ஒரு வினாடி நோக்கிவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்.

ராமநாதன் சீதாவின் அறையிலிருந்து தன்னுடைய அறைக்குத் திரும்பினான். மறுபடியும் பீரோவிடம் சென்று பீரோவைத் திறந்தான். புதிய உணர்ச்சியோடு, புதிய தீர்மானத்தோடு அந்தப் பீரோவிலிருந்து கடிதத்தைப் பையில் போட்டுக் கொண்டான். அதன் அருகிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்தான். அதை ஒரு முறை பார்த்தான்.

அவன் உதடுகள் வேதனையோடு, “திலீபன் இறந்து தான் ஆக வேண்டும். இறந்து தான் ஆக வேண்டும்” என்று முணுமுணுத்தன.

துப்பாக்கியைப் பையிலே போட்டுக்கொண்டு அறைக்கு வெளியில் வந்தான். படிக்கட்டுகளில் சத்தம் செய்யாமல் மெள்ள அடியெடுத்து வைத்தான்.

படிக்கட்டை அடுத்த அறையில் திலீபனின் தாய் மீனாட்சி அம்மாள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

அவளுடைய மகனைக் கொல்லப் போகிறோமே என்று ராமநாதன் மனம் ஒரு கணம் நினைத்தது. தீர்மானம் தளர ஆரம்பித்தது. படிக்கட்டில் அப்படியே நின்றான்.

படிக்கட்டை அடுத்த அறையில் மீனாட்சி அம்பாள் விசித்து அழுது கொண்டிருப்பது மீண்டும் காதில் விழுந்தது.

‘இந்த உத்தமிக்கு நான் புத்திர சோகத்தை உண்டு பண்ண மாட்டேன்’ என்று கூறிக்கொண்டு மறுபடியும் மாடி நோக்கி ஏற அடியெடுத்து வைத்தான்.

ஆனால் படிகளில் ஏறும்போது படிக்கட்டு சத்தம் செய்தது. அந்தச் சத்தம் கேட்டு மீனாட்சி அம்மாள் திரும்பிப் பார்த்தாள், ராமநாதன் படிகட்டுகளில் நின்று கொண்டிருப்பதைக் கவனித்தாள். மீனாட்சி அம்மாள் மட்டும் திரும்பிப் பார்த்திராவிட்டால் ராமநாதன் மாடியில் தன் அறைக்குப் போயிருப்பான், அன்று நிகழ இருந்த விபரீதங்கள நிகழ்ந்திராது.

மீனாட்சி அம்மாள் எழுந்து ராமநாதனை நோக்கி நடந்து வந்து, “என்ன ராமநாதா, வெளியிலே இடியும், மின்னலுமாயிருக்கே? இந்தப் புயலில் எங்கேயப்பா புறப்பட்டாய்?” என்றாள்.

ராமநாதன் தரையைப் பார்த்தபடியே, “வெளியே வீசும் புயலைவிடப் பயங்கரமான புயல் ஒன்று என் மனத்தில் வீசுகிறது” என்று சொன்னான். “தூக்கம் பிடிக்கவில்லை… வெளியே போகலாமென்று நினைத்தேன்”.

மீனாட்சி அம்மாள் இரக்கத்தோடு ஒரு முறை பார்த்தாள், “ராமராதா, நானும் திலீபனும் உன் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் உன் வாழ்வு எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும்! சீதா எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருப்பாள்? திலீபன் பிறக்காமலே இருந்திருந்தால், இல்லை. அவன் செத்துத் தொலைந்திருந்தால்…”

ராமநாதன் ஆச்சரியமடைந்தான், தன் மனத்திலிருக்கும் அசுரத் திட்டத்தைத் தெரிந்து சொல்வது போல் மீனாட்சி அம்மாளின் பேச்சு அமைந்தது. ராமநாதனுக்கும் கலக்கத்தை கொடுத்தது. அதிகம் பேச்சுக் கொடுக்க இஷ்டமில்லாமல் ராமநாதன் வாயில்புறக் கதவை நோக்கிப் புறப்பட்டான்.

மீனாட்சி அம்மாள், “ராமநாதா, மழையில் குடையில்லாமல் போகிறாயே? குடையை எடுத்திட்டுப் போப்பா”, என்று குடையை எடுத்துத் தந்தாள்.

ராமநாதன் பரிவோடு அந்த அம்மாள் கொடுத்த குடையை வாங்கிக் கொண்டான். மீனாட்சி அம்மாள் முகத்தைப் பார்த்தான். ‘அம்மா உங்கள் ஒரே மகனைக் கொல்லப் போகிறேன். அந்தக கொடும் பணிக்குச் செல்லும் போது நான் நனைந்து செல்லக் கூடாது என்று குடை கொடுத்து அனுப்புகிறீர்களா?’ என்று சொல்ல அவன் உதடுகள் துடித்தன. ஆனால் அவன் வாய் திறக்கவில்லை. அவன் கைகள் குடையை வாங்கிக் கொண்டன். உடனே விழுந்து அவன் மீனாட்சி அம்மாளின் பாதங்களைத் தொட்டு வணங்கினான், “அம்மா! என்னை மன்னித்து விடுங்கள்” என்றான்.

“உன்னையா? மன்னிப்பதா? பொறுமையின் உருவமாயிற்றே நீ. நீ என்னப்பா சொல்றே? எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்றாள் மீனாட்சி அம்மாள்.

“நான் சொல்வதின் அர்த்தம் நாளைக்குத் தெரியும் தாயே” என்று சொல்லிவிட்டு வெளியேறினான் ராமநாதன்.


ராமநாதன் கூறிய வார்த்தைகளின் உண்மைப் பொருள் விளங்காமல் மீனாட்சி அம்மாள் சிந்தித்தபடி நின்றாள்.

கதவு திறந்ததால் வீசிய காற்று சுவரில் மாட்டியிருந்த திலீபன் படத்தின் மீது வீசி அதைக் கீழே தள்ளியது. படம் விழுந்து உடைந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டாள் திலீபனின் தாய்.


அதே சமயம் ‘சுந்தரம் மனோ மருத்துவமனை’யில் மாடிப்படிகள் முடியும் இடத்தில் உள்ள ஓர் அறையில் திலீபன் உட்கார்ந்திருந்தான்.

அந்த அறை ஒரு நல்ல பாதுகாப்பான அறை, இரும்புக் கதவுகள், இரும்புக் கம்பி ஜன்னல்கள் கொண்ட அறை. அதனுள் இருப்பவர்கள் பயங்கரமான பைத்தியங்களாயினும், சீக்கிரத்தில் அந்த அறையிலிருந்து தப்ப முடியாதபடி அது அமைத்திருந்தது. மூளைக் கோளாறு உள்ளவர்கள் மட்டுமே அங்கு வைக்கப்பட்டிருந்ததால், நேர்மையும் ஒழுக்கமும் உள்ள, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஊழியர்களையே டாக்டர் சண்முகசுந்தரம் தன்னுடைய ஆஸ்பத்திரியின் சிப்பந்திகளாக நியமித்திருந்தார்.

பழுத்த அனுபவத்துடன் சீலமான வாழ்க்கை நடத்தும் டாக்டர் சண்முகசுந்தரத்தின் வாழ்க்கையிலேயே, திலீபன் ஒரு புதுவிதமான ‘பேஷண்ட்’. திலீபன் விஷயமாக அவர் மனம் சில நாட்களாக இன்னது என்று சொல்ல முடியாத வேதனையை அடைந்தபடி இருந்தது. அவனை மூளைச் கோளாறு உள்ளவன் என்று எந்த விதப் பரிசோதனை சொல்ல முடியவில்லை. மேலும் திலீபன் அவரிடம், “என்னைத் தக்க காரணமில்லாமல், ராமநாதனின் தூண்டுதல் பேரில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்ததற்காக மானநஷ்ட வழக்கு தொடருவேன்” என்று கூறியது அவர் மனத்தைக் கலங்க வைத்திருந்தது.

ஆனால் ராமதாதனோ, எப்படியானது திலீபனைப் பாதுகாப்பான பூட்டிய அறையில் வைத்திருக்குமாறு அழாத குறையாக வேண்டினான். இம்மாதிரியான சிக்கலான சூழ்நிலைவில்தான் இப்போது டாக்டர் சண்முகசுந்தரம் திலீபனின் முன்பு நின்றுகொண்டிருந்தார். திலீபன் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

திலீபன், “எப்போது என்னை வெளியே விடப் போகிறீர்கள்?” என்று டாக்டரைக் கேட்டான்.

டாக்டர், திலீபனுடைய கறுத்த கண்களையும் அதற்கு நேர்மாறாக அவனுடைய வெளுத்த கன்னங்களையும், பார்த்தபடி பேசாமல் இருந்தார். திலீபன் முகத்திலிருந்து புறப்பட்ட ஒளி மனிதப் பண்புள்ளதாகத் தெரியவில்லை. அவன் சிரிக்கும்போது அவன் உதடுகள் விரியும் விதம், அவன் கண்கள் சிமிட்டும் வகை, பார்ப்பவர் மனத்திலே அச்சத்தை ஏற்படுத்துவனமாக இருந்தன.

பேசாமல் இருக்கும் டாக்டரைப் பார்த்துத் திலீபன் ஆத்திரமடைந்தான், பற்களை நறநறவென்று கடித்தான். “என்ன டாக்டர் ஸார், நான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் ஏதும் பேசாமல் இருக்கிறீர்கள்? நல்ல அறிவுள்ள மனிதனைப் பைத்தியம் என்று அடைத்துச் சிறைக்குள் வைத்திருக்கிறீர்களே, அது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? என்னை உடனே வெளியே அனுப்புங்கள்!” என்றான்.

“முடியாது. சோதனைப்படி நீங்கள் ஒரு பைத்தியமில்லை. ஆனால்…” என்று தயங்கினார் டாக்டர்.

“ஆனால் என்னய்யா?”

“ராமநாதன் பயப்படுவதுபோவ் நீங்கள் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டிய நபர்தான். உங்கள் தேகத்திலோ மனத்திலோ வியாதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வியாதியை விடப் பயங்கரமான வேறு ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது”.

இந்த வார்த்தைகளைக் கேட்ட திலிபனின் முகத்தின் திடீரென்று ஒரு பயமும் திகிலும் பரவத் தொடங்கின. தன்னுடைய உணர்ச்சிகளைச் சட்டென்று சமாளித்துக் கொண்டான்.

திடீரெனத் தன்னுடைய குரலில் அன்பை வரவழைத்துக் கொண்டு, “டாக்டர் சார். உங்கள் முடிவு தான் என்ன…” என்று கேட்டான்.

டாக்டர் சண்முகசுந்தரம் தரையைப் பார்த்தபடி, “திலீபன்! பைத்தியம் என்று இங்கு அழைத்துவரப்படுபவர்களை நான் பரிசோதனைக்காக ஒரு வாரம் வைத்திருக்கலாம். சட்டப்படி எனக்கு அந்த உரிமை உண்டு. நீங்கள் வந்து மூன்று நாட்கள்தான் ஆகின்றன. நான்கு நாள் போன பின் உங்களை விடுதலை செய்து விடுவேன்” என்றார்.

திலீபன் ஆத்திரமான குரவில், “இன்னும் நாலு நாட்களா இந்த நரகத்தில்! நீங்கள் டாக்டரல்ல. ராமனாதனின் கையாள்!” என்று கூவினான்.

டாக்டர் பதில் ஏதும் சொல்வாமல், அறையைவிட்டு வெளியேற நினைத்து அடியெடுத்து வைத்தார்.

திலீபன் மனத்தில் திடீரென்று யோசனை தோன்றியது போலும். விஷமப் புன்னகையோடு, “டாக்டர் ஸார், ஒரே ஒரு வேண்டுகோள். சற்று இப்படி வருகிறீர்களா?” என்றான்.

டாக்டர், திலீபனை நெருங்கினார். அவர் நெருங்கி வந்ததும் திலீபனின் கை டாக்டரின் தோளின் மேல் பட்டது.

திலீபனின் ஸ்பரிசம் பட்டதும் டாக்டரின் உடலில் ஒருவித இன்ப உணச்சி எழுந்தது. பருவக்காளை ஒருவன் அன்போடு ஒரு யுவதியால் முதல் இரவு தொடப்படும்போது ஏற்படும் உணர்வு போல் இருந்தது அது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டு, முதுமை அடைந்திருந்த டாக்டர் சண்முகசுந்தரத்துக்கு வாலிபம் திரும்பிவிட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. ஓர் இளைஞனைப் போல் மெய்சிலிர்த்தார்.

திலீபன் ஒரு பெண்ணின் சாகசத்தோடு, “டாக்டர் சார், டாக்டர் சார்! தயவு செய்து என் முகத்தைப் பாருங்கள், டாக்டர் சார்” என்று கெஞ்சினான்.

டாக்டர் சண்முகசுந்தரம் நிமிர்ந்து திலீபனின் முகத்தையே உற்றுப் பார்த்தார்.

திலீபன் தொடர்ந்து கனிவான குரலில் “என் கண்களை கொஞ்சம் பாருங்களேன் சார்” என்றான்.

டாக்டர் சண்முகசுந்தரமும் தன்னுணர்வற்ற யந்திரத்தால் இயங்கும் ஒரு பொம்மை போல் திலீபனின் கண்களைப் பார்த்தார். அப்படிப் பார்த்ததும் அவருக்குத் தன் உடலைப் பற்றிய உணர்வு, தன் சூழ்நிலை, தன் எண்ணங்கள் எல்லாம் மெல்லத் தன்னை விட்டு நழுவுவது போன்ற உணர்ச்சி எற்பட்டது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே திலீபனின் கண்கள் சிறிது சிறிதாகப் பெரிதாகிக் கொண்டு வருவது போல் தோன்றியது. அந்த அறை பூராவுமே திலீபனின் கண்களால் நிறைவது போன்ற பிரமை உண்டாகியது. அதே சமயத்தில் டாக்டர் சண்முகசுந்தரத்தின் மனத்தில் இன்னது என்று விவரிக்க முடியாத ஓர் அச்சம் தோன்றியது. விஞ்ஞானத்துக்குப் புறம்பான, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய உலகில் தாம் நுழைவது போல் தோன்றியது. டாக்டருக்கு தம்முடைய மனம் என்ற கதவுக்கப்பால் அவர் சென்று கொண்டிருந்தார்.

சிதறி மறைந்து கொண்டிருக்கும் தன்னுடைய மனோபலத்தையும் தன் அறிவையும் ஒருங்கே சேர்த்து ஒரு முயற்சி செய்து தன் உணர்வுக்கு வந்தார் டாக்டர்.

திலிபனைப் பாராமலே அந்த அறைக்கு வெளிப்புறம் ஓடினார். அறையின் இரும்புக் கம்பிக் கதவைப் பூட்டினார்.

திலிபன், “டாக்டர் சார்! டாக்டர் சார்!” என்று கூப்பிட்டபடி ஓடி வந்ததை அவர் கவனிக்கவில்லை.

கதவின் ஓரத்தில் நின்றபடி திலீபன், “என்னை சற்றுப் பாருங்கள் டாக்டர் சார்” என்று கெஞ்சியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவன் முகத்தைச் சற்றும் பாராமல் படிக்கட்டு வழியே கீழே இறங்கிப் போனார்.

அறைக்குள் இருந்த திலீபன் ஏமாற்றத்தால் அவமானம் அடைந்தான். அவமானத்தைத் தொடர்ந்து அதிக ஆத்திரம் அடைந்தான்.

அதே சமயத்தில் எதிர்ப்புற ஜன்னல் வழியே ஒரு கறுப்புப் பூனை அறையில் குதித்தது. திலீபன் தன் பார்வைவைப் பூனையின் மீது செலுத்தினான். பூனையும், ‘மியாவ்’ என்று குரல் கொடுத்தபடி திலீபனைப் பார்த்தது. அடுத்து வினாடி பூனையின் உடல் சிலிர்த்தது. பழுக்கக் காய்ச்சிய ஓரு இரும்புக் கம்பியால் சூடுபட்டதுபோல் அந்தப் பூனை வீரிட்டலறியபடி ஜன்னல் வழியே பாய்ந்து ஓடியது.

திலீபன் விழுந்து விழுந்து சிரித்தான். அவனது சிரிப்பொலி கேட்கவே பயங்கரமாக இருந்தது. அந்தச் சிரிப்பொலியில் ஆண் குரலும், பெண் குரலும் இழைந்து ஒலித்து, மனித தன்மையில்லாத ஒரு பேரொலியாகக் கேட்டது.

அந்தச் சிரிப்பொலி ஆஸ்பத்திரியின் அடித்தளத்தில் உள்ள அறையில் ஒரு சோபாவில் சாய்ந்திருந்த டாக்டர் சண்முகசுந்தரத்தின் காதுகளில் விழுந்தது. அவர் உடல் நடுங்கியது. அப்போதுதான் டாக்டர் தன்னுடைய உடல் வியர்வைக் குளமாகித் தன்னுடைய சட்டையை நனைந்திருப்பதை உணர்ந்தார். அவர் வாய், “முருகா!” என்று ஒரு முறை முனுமுணுத்தது.

திலீபனின் பயங்கரச் சிரிப்பொலி டாக்டர் சண்முகசுந்தரத்தின் காதில் மட்டுமா விழுந்தது.

ஆஸ்பத்திரியை நெருங்கிக்கொண்டிருந்த ராமநாதனின் காதிலும் விழுந்தது.

ராமநாதன் திடுக்கிட்டு நின்றான். தன்னுடைய பையிலிருக்கும் துப்பாக்கியை எடுத்துப் பார்த்து, தன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். வானத்தில் பயங்கரமாக இடி இடித்தது – ராமநாதன் செய்யப் போகும் கொலையை இந்த விண்ணும் மண்ணும் ஒன்று சேர்ந்து வரவேற்பது போல்.

அத்தியாயம்-2

‘டாக்டர் சண்முகசுந்தரம் மருத்துவமனை’யில், விளக்கை அணைத்துவிட்டுத் தன்னுடைய அறையிலுள்ள படுக்கையில் படுத்துக் கொண்டார் டாக்டர்.

அவர் மனத்தில் திலீபன் தன்னைத் தொட்டதும், தன் உடலில் மின்சாரம்போல் ஓர் உணர்ச்சி பரவியதும் நினைவுக்கு வந்தது. திலீபனின் பார்வை, அவருடைய இதயத்தின் அடித்தளம் வரையில் பாய்ந்து, விவரிக்க முடியாத ஒரு தளர்ச்சியை ஏற்படுத்தியதும் அவர் நினைவுக்கு வந்தது. மறுநாள் காலையிலேயே அவனை ஆஸ்பத்திரியை விட்டு அப்புறப்படுத்துவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தவராய், உடனே கண்களை மூடி, அமைதியாகத் தூங்க ஆரம்பித்தார்.

ராமநாதன் ஆஸ்பத்திரிக்குள் சப்தமில்லாமல் நுழைந்தான். நடுஹாலை நோக்கி நடந்தான். மாடிப்படிக்கட்டு வழியாக நர்ஸ் காந்தா கீழே இறங்கி வருவது தெரிந்தது. உடனே பக்கத்து அறையில் மறைந்து கொண்டான். அந்த நர்ஸ் எப்போது ஹாலை விட்டு நகருவாள், நாம் மாடிக்குப் போவோம் என்று ஆவலோடு அவன் அந்த ஹாலுக்குப் பக்கத்து அறையில் காத்திருந்தான். ஆனால் நர்ஸ் காந்தா, தான் மறைந்திருக்கும் அதே அறையில் நுழைவாள் என்று ராமநாதன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஓடிப்போய் சுவருக்கும் பீரோவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் மறைந்து கொண்டான். அந்த அறையில் அவன் பதுங்கியிருப்பதைப் பார்த்து விட்டால் அவளுக்கு என்ன விளக்கம் சொல்வது?. அப்படியே மூச்சை அடக்கிக்கொண்டு நின்றான்.

அறை உள்ளே நுழைந்த நர்ஸ், ஒரு வினாடிதான் நின்றாள். பிறகு அங்கு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து பாட்டில்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள். பீரோவின் மறைவிலிருந்தபடியே ராமநாதன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால் அடுத்த வினாடியே நிம்மதி குலைந்தது.

மருந்து பாட்டிலை எடுத்துச் செல்லும் நர்ஸ், யதேச்சையாக வெளிப்புறம் கதவைத் தாளிட்டுவிட்டுச் செல்லும் சப்தம், அவன் காதுகளுக்குத் தெளிவாகக் கேட்டது. திடுக்கிட்டவனாய் கதவை நோக்கி ஓடிவந்து, இழுத்துப் பார்த்தான். நன்றாகத் தாளிடப்பட்டிருப்பது தெரிந்தது. இரவு முழுக்க ஆஸ்பத்திரி அறையிலேயே விடியும் வரையில் பூட்டியபடி இருக்க வேண்டியதுதானா? ராமநாதன் மனம் அயர்ந்து, அப்படியே அங்குள்ள நாற்காலியில் உட்கார்ந்தான்.

திலீபனைச் சுட்டுக் கொல்வது ஒருவேளை ஆண்டவனுக்கே பொறுக்கவில்லை போலும்! அதனால்தான் ஆஸ்பத்திரிக்குள் நாம் நுழைந்தும் கூட, நம்மால் திலீபன் இருக்கும் மாடி அறைக்குச் செல்லமுடியாதபடி தடை ஏற்பட்டுவிட்டது!

குரல் கொடுத்து, ஆஸ்பத்திரி ஆட்கள் யாரையாவது அழைத்து, கதவைத் திறக்கச் சொல்லி வீடு திரும்புவோமா என்று கூட நினைத்தான். ஆனால், ‘நீங்கள் இந்த அறைக்குள் இந்த இரவு வேளையில் எப்படி வந்தீர்கள்?’ என்று கேள்வி கேட்கப்பட்டால் என்ன பதில் சொல்வது?. ராமநாதன் தத்தளித்தான். தன் கையிலிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தான். “நியாயம், நீதி, ரத்தபாசம் என்றெல்லாம் தயங்காதே! உடனே சென்று, ஆஸ்பத்திரியிலுள்ள அந்த மனித எல்லைக்கு அப்பாற்பட்ட நாச சக்தியைக் கொன்றுவிடு! அந்தக் கொலையே உன்னுடைய முதல் கடமை! அந்தக் கடமையைச் செய்ய ஒரு நிமிடம் தயங்கினாலும் ஆபத்து. உன் குடும்பமும் சீதாவின் வாழ்வும் அழிந்து போகும்!”

ராமநாதன் திரும்பத் திரும்ப இந்த வாக்கியங்களைப் படித்தான். தாளிடப்பட்ட கதவை நோக்கினான். எப்படி வெளியேறி திலீபனைக் கொல்லுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நிமிடம் வீண் போவதும் அவனுக்கு ஒரு பெரிய ஆபத்து தன்னை நெருங்கி வருவதுபோலத் தோன்றியது. ஆனால் அது என்னவிதமான ஆபத்து என்றுதான் புரியவில்லை.


திலீபன் மாடி அறையில் தன்னுடைய படுக்கையில் படுத்தபடி, விரல்களால் நிம்மதியாகச் சுவரிலே படம் வரைந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பயங்கரமான இடி இடித்துக் கட்டடத்தையே நடுங்கச் செய்தது. திலீபன் எழுந்தான்.

மின்னும் வானத்தை ஒரு முறை பார்த்தான். இடி, மின்னல், பயங்கரமான பேய்மழை! திலீபனது பயங்கரத் திட்டத்துக்குப் பொருத்தமான இரவு. இன்று மட்டும் அவன் அந்த அறையை விட்டு வெளியேறி விட்டால், அந்த ராமநாதனையும், அந்தச் சீதாவையும் என்ன பாடுபடுத்தலாம்!

நர்ஸ் காந்தா மருந்து பாட்டிலை எடுத்துக் கொண்டு படிக்கட்டு வழியாக மெள்ளக் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். சிறைப்பட்டிருக்கும் தன் அறையின் கம்பிகள் வழியாக திலீபன் அவளைப் பார்த்தான்.

“நர்ஸ்! நர்ஸ்!”

படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்த காந்தா திரும்பிப் பார்த்தாள்.

திலீபன் கெஞ்சும் குரலில், “நர்ஸ்! இப்படி வாருங்கள், உங்களிடம் ஒரு முக்கியமான ஒரு விஷயம் பேசவேண்டும்” என்று அழைத்தான்.

நர்ஸ் ஒரு வினாடி தயங்கினாள். திலீபனின் வேண்டுகோளுக்குக் காது கொடுக்காமலே கீழே சென்றுவிடலாம் என்று நினைத்து, கீழ்ப்படிக்கட்டில் காலை வைத்தாள். அவள் மட்டும் நினைத்தபடியே கீழே இறங்கிச் சென்றிருந்தால்?

ஆனால் அடுத்த வினாடியே வேறு யோசனையோடு மறுபடியும் படிக்கட்டுகளில் ஏறி, திலீபன் நின்று கொண்டிருந்த கம்பி ஜன்னலை நோக்கி வந்தாள். “என்ன மிஸ்டர் திலீபன்! உங்களுக்கு என்ன வேண்டும்? தண்ணீர் வேண்டுமா? இல்லை, தூக்க மருந்து வேண்டுமா? நீங்கள்தான் மற்ற பேஷண்டுகளைப் போல் மருந்து சாப்பிடுவதில்லையே!”

திலீபன் குழந்தைபோல் கனிவான குரலில், “காந்தா! நான் பேஷண்டாக இருந்தால்தானே மருந்து சாப்பிடலாம்? நான்தான் காரணமில்லாம சிறை வைக்கப்பட்டிருக்கிறேனே! நான் ஒரு பைத்தியமா? நீங்களே சொல்லுங்கள்..” என்றான்.

“நீங்கள் பைத்தியமா இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டியது டாக்டரின் பொறுப்பு. நான் ஒரு சாதாரண நர்ஸ். நர்ஸ் என்ற முறையில் உங்களுக்கு ஏதாவது உதவி தேவையானால் சொல்லுங்கள், செய்கிறேன்.”

“நர்ஸ்! பெண் உள்ளமே கருணை உள்ளம் என்பார்கள். தயவு செய்து என்னை விடுதலை செய்யுங்கள்.”

“மிஸ்டர் திலீபன், இந்த இடி மழையில், நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள்? பொறுங்கள்… விடிந்த பின், விடுதலையைப் பற்றி டாக்டரிடம் பேசலாம்.”

திலீபன் அவள் பேச்சை ஏற்றுக் கொள்ளவில்லை. “இடி! மழை! இரவு! இது மூன்றுமே எனக்கு வலிமை தரும் சூழ்நிலை! இந்தப் பயங்கரமான இரவே, நான் முடிக்க இருக்கும் திட்டத்துக்குப் பொருத்தமானது! இந்த இரவு நான் எப்படியாவது வெளியேற வேண்டும் நர்ஸ்” என்று படபடப்புடன் கெஞ்சினான்.

நர்ஸ் தயங்கினாள். “உங்கள் விருப்பப்படியே நான் உங்களை வெளியே அனுப்ப விரும்பினாலும், அது நடக்கக்கூடிய காரியமில்லை. உங்கள் அறை பூட்டப்பட்டிருக்கிறது. சாவிக்கொத்து டாக்டரிடம் இருக்கிறது. டாக்டர் இப்போது படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்.”

திலீபன் முகம் ஏமாற்றத்தால் ஒரு வினாடி களை இழந்தது. பிறகு அவள் முகத்தில் ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் படர்ந்தன. கம்பிகள் வழியே பாய்ந்து நர்ஸின் கரங்களைப் பற்றினான்.

நர்ஸ் தேளால் தீண்டப்பட்டவள் போல் நடுநடுங்கினாள். தன்னை விடுவித்துக்கொள்ளத் திமிறினாள். ஆனால், திலீபன் அவள் கைகளை விடாமல் பிடித்தபடி, “நர்ஸ்.. என்னைப் பார்! என் கண்களைப் பார்!” என்று ரகசியமான குரலில், பாம்பு சீறுவதுபோல் வார்த்தைகளை உச்சரித்தான்.

திமிறித் தத்தளித்தபடி இருந்த நர்ஸ் காந்தாவின் உடல் விறைத்து நின்றது. அவள் கண்கள் திலீபனின் கண்களைச் சந்தித்தன. திலீபன் அவளைப் பார்த்தபடி கட்டளையிடும் குரலில், “நர்ஸ்! நான் சொல்லுகிறபடி செய்ய வேண்டும்” என்றான்.

அவள் அவனைப் பார்த்தபடியே ஒரு பொம்மைபோல் நின்றாள். அவளது சுய உணர்வு அவளை விட்டு நழுவிக் கீழே விழுவது போல் தோன்றியது.

திலீபன் வெற்றிப் புன்னகை புரிந்தபடி, “காந்தா, டாக்டர் படுத்திருக்கும் அறைக்குப் போய் அவருக்குத் தெரியாமல் சாவிக் கொத்தை எடுத்து வந்து, இந்தக் கதவைத் திறந்து விடு” என்று உத்தரவிட்டான். காந்தா ஒரு யந்திரம்போல் படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தாள். அவள் பார்வை நிலைகுத்தி நின்றது. படிக்கட்டுகளைக் கடந்து ஹாலுக்கு வந்தாள்.

ஹாலை அடுத்த அறையில் சிறைப்பட்டிருந்த ராமநாதன், ஜன்னல் வழியாகக் காந்தாவைப் பார்த்தான். அவளது பார்வையின் பாதையில் ராமநாதன் எட்டிப் பார்த்த ஜன்னல் இருந்தபோதிலும் காந்தாவின் கண்கள் ராமநாதனைக் கவனிக்கவில்லை. அவள் விழிகள் நேரே டாக்டர் சண்முகசுந்தரத்தின் அறையை நோக்கிச் சென்றன. அந்த அறையை நோக்கித் தலையை அசைக்காது விறைத்துப் பார்த்தபடி தூக்கத்தில் நடப்பவள் போல காந்தா நடக்கலானாள்.

ராமநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த வினாடியே ஆச்சரியம் மறைந்து ஒருவித பயம் தலையெடுத்தது. ஒருவேளை காந்தாவின் நிலைக்குக் காரணம் திலீபனாக இருக்குமோ? ராமநாதன், நர்ஸ் சென்ற திசையை நோக்கியபடி நடுங்கினான். நர்ஸ் காந்தா, சண்முகசுந்தரம் படுத்திருந்த அறையினுள் நுழைந்தாள்.

‘திக் திக்’ என்று அடித்துக் கொள்ளும் மனத்தோடு ராமநாதன் டாக்டர் அறையை நோக்கியபடியே இருந்தான். டாக்டர் அறையிலிருந்து நர்ஸ் வெளியே வந்தாள். எப்பக்கமும் திரும்பிப் பாராமல் நேராக நடந்தாள். அவள் கையில் சாவிக்கொத்து மின்னுவதை ராமநாதன் பார்த்தான். அவன் உடல் வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இன்னும் சில வினாடியில் திலீபன் சிறையைவிட்டு வெளியேறி விடுவான். உடனே வீட்டுக்குச் செல்வான். அங்கு சீதாவுக்கு என்ன ஆபத்து நேருமோ? அதைத் தடுக்க முடியாமல் இந்த அறையில் மாட்டிக்கொண்டு விட்டோமே?

ஹால் பக்கமுள்ள ஜன்னலிடம் ஓடினான். இடிகளுக்கு இடையே மழை ‘சோ’வென்று கொட்டும் சப்தத்தைத் தவிர, வேறு எந்தவிதமான ஓசையும் கேட்கவில்லை. திடீரென்று இரும்புக் கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. அதைத் தொடர்ந்து படிக்கட்டுகளில் ஆள் நடந்து வரும் சப்தம். ராமநாதன் திகைப்போடு ஹாலைப் பார்த்தபடியே நின்றான். படிக்கட்டு வழியே நர்ஸ் இறங்கி வந்தாள். பின்னாலேயே திலீபன். இருவரும் ஹாலை அடைந்ததும் நர்ஸ் காந்தா, திலீபனைப் பார்த்தபடி நின்றாள். திலீபன் ஹாலைச் சுற்றி ஒருமுறை பார்த்தான். அவன் பார்வை, டாக்டர் சண்முகசுந்தரம் படுத்திருந்த அறைமீது விழுந்ததும் ஒரு கேலிப் புன்னகை செய்தான். நர்ஸ் காந்தாவின் முகத்தைத் தடவினான். கேலியாக அவளைப் பார்த்துக்கொண்டே, “நர்ஸ் காந்தா! நீ ஒரு நல்ல நர்ஸ். சொன்னபடி செய்து விட்டாய். உன் வேலை முடிந்தது. நீ இனிமேல் உன் அறைக்குச் சென்று நிம்மதியாகப் படுத்துத் தூங்கம்மா” என்றான்.

காந்தா பதுமை போல், திலீபன் கட்டளையிட்டபடியே தன் அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள். திலீபன் திருப்தியோடு ஹாலைவிட்டு வெளிப்புறம் செல்ல அடியெடுத்து வைத்தான். கட்டுண்ட நாகம் போல் திகைத்துக் கொண்டிருந்த ராமநாதனுக்கு அப்போதுதான் சுய உணர்வு வந்தது.

எப்படியாவது திலீபனை வீட்டுக்குச் செல்லாதபடி தடுக்க வேண்டுமென்ற ஒரு நோக்கத்தில் ஜன்னல் கம்பிகள் இடையே துப்பாக்கியை வைத்துக்
குறிபார்த்தான். அதற்குள் அவன் பார்வையிலிருந்து திலீபன் மறைந்துவிடவே, ராமநாதன் கதவை தடதடவென்று தட்டினான். தான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேர் எதிரே இருந்த கதவை திடீரென யாரோ இடிப்பதைக் கவனித்த திலீபன், கதவைத் திறந்து விட்டான். ராமநாதன் நிற்பதைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “ராமநாதா, நீயல்லவா என்னை இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சிறை வைத்திருந்தாய்! நீயும் இங்கே என்னைப் போன்று ஒரு கைதிதானா?” என்று சொல்லி அவன் சிரித்த சிரிப்பு நீடிக்கவில்லை. திடீரென நின்றது.

ராமநாதனின் கையில் துப்பாக்கி! திலீபனின் முகத்தில் பயத்தின் நிழல் படர்ந்தது. கெட்டவர்கள் பீதியடையும்போது அவர்கள் முகம் அலங்கோலமாக மாறுவதுபோல், திலீபனின் முகம் மாறியது. அவன் உதடுகள் விரிந்து ஒரு பக்கமாக ஒதுங்கி, ஓநாய்ப் பல் போன்ற அவன் கடைவாய்ப் பல்லை வெளிப்படுத்தியது.

அந்த நிலையில் திலீபனின் முகம் மனிதத் தன்மையை இழந்து பயங்கரமாகக் காணப்பட்டது. ராமநாதனின் கையிலிருந்த துப்பாக்கியையும், ராமநாதன் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தான் திலீபன். பின் ஒரு நரியின் தந்திரத்தோடு, மிகவும் அன்போடு, “ராமநாதா! நீ உயிருக்கும் மேலாக நேசிக்கும் உன்னுடைய திலீபனையா கொல்லப் போகிறாய்?” என்று கேட்டான்.

“நான் என் உயிருக்கும் மேலாக நேசிக்கும் திலீபன் நீயல்ல!”

“உனக்கு உண்மை தெரிந்துவிட்டதா? நான் யார் என்று தெரிந்துவிட்டதா?” அவன் வீரிட்டலறிய குரல் விபரீதமாக ஒலித்தது.

அதே நிமிடம் ராமநாதனின் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் தொடர்ந்து வெளிப்பட்டன. திலீபன் அப்படியே சுருண்டு விழுந்தான். குண்டு சப்தம் கேட்டு ஆஸ்பத்திரிச் சிப்பந்திகளும், டாக்டர் சண்முகசுந்தரமும் வெளியே ஓடி வந்தனர். மாடி அறையில் இருக்க வேண்டிய திலீபன் தரையில் குற்றுயிராக முனகியபடி கிடப்பதையும், அவன் அருகில் ராமநாதன் புகையும் துப்பாக்கியோடு நிற்பதையும் பார்த்து டாக்டர் சண்முகசுந்தரம் கல்லாய்ச் சமைந்து நின்றார்.

“டாக்டர்! என் கடமை முடிந்துவிட்டது. திலீபனைச் சுட்டது நான்தான்! உடனே போலீஸைக் கூப்பிட்டு ரிப்போர்ட் செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

ஆனால் பாவம், திலீபன் இன்னும் சாகவில்லை. குற்றுயிராகத்தான் தரையில் கிடக்கிறான் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

அத்தியாயம்-3

சுடப்பட்டுக் கீழே கிடக்கும் திலீபனைப் பார்த்தபடி டாக்டர் சண்முக்சுந்தரம் திகைத்துப் போய்ச் சில விநாடிகள் நின்றார். குழப்பமும், கலக்கமும் அவரை ஓர் உணர்வற்ற பொம்மையாக்கின.

ராமநாதன் பெரிய மனிதன். செல்வந்தன். நல்ல நண்பன். கண்ணியம் நிறைந்த ஒரு சீலமான மனிதன் என்ற நம்பிக்கையால்தான் டாக்டர் சண்முகசுந்தரம், அவன் பேச்சைக் கேட்டு திலீபனை ஒரு பைத்தியம்போல் சிறை வைத்திருந்தார். அது எவ்வளவு பெரிய தவறு! மருத்துவமனை ஒரு கொலை நடந்த இடம் என்ற கெட்ட பெயருக்கு இலக்காகி விட்டது. இனி போலீசாரின் நடவடிக்கைகளுக்குக் கேந்திரமாகி விடும். நினைக்க நினைக்க வருத்தம் மேலிட்டது டாக்டருக்கு. வாழ்நாள் பூராவும் உழைத்து உருவாக்கிய ஒரு ஸ்தாபனத்தின் நல்ல பெயர் ஒரு நாள் செய்த தவறின் காரணமாகக் களங்கப்பட்டு விட்டதே. ராமநாதன் சுட்டுவிட்டு வெளியே சென்றது அவர் கவனத்துக்குச் சில விநாடிகள் வரை வரவில்லை.

திகைப்புற்று நிற்பதில் எந்தவிதப் பயனுமில்லை என்ற உணர்வு வந்ததும் டாக்டர் சண்முகசுந்தரம் உடனே ஆஸ்பத்திரிச் சிப்பந்திகளுக்குக் கட்டளை பிறப்பித்தார்.

“திலீபனை உடனே எடுத்துச் சென்று பத்திரமான அறையில் படுக்க வையுங்கள். அவனுக்கு வேண்டிய சிகிச்சை உடனடியாகச் செய்ய வேண்டும். மேலும் அவன் தக்க காவலில் இருக்கவேண்டும். அவனுக்கு இனிமேல் எந்தவிதமான ஆபத்தும் நேரக்கூடாது” என்று சொல்லிவிட்டு டெலிபோனை எடுத்துப் போலீசாருக்குத் தகவல் கொடுக்க ஆரம்பித்தார்.


ஆஸ்பத்திரியிலிருந்து புறப்பட்ட ராமாதலுக்கு எங்கு செல்வது, என்ன செய்வது என்று புரியவில்லை.

திலீபனைக் சுடும் வரையில் அவனுக்கு ஒரு நோக்கம், குறிக்கோள் இருந்தது. குழம்பிய மனத்தினனாய் இருந்தாலும், அவனுக்கு அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாக இருந்தது. ஆனால் திலீபனைச் சுட்டபின் –

திசையறியாமல் நடுக்கடலில் சூறாவளியின் நடுவே நிற்கும் கப்பல்போல், கொட்டும் மழையில் நின்றான். இனி வீடு செல்வதா? வீடு சென்றால் திலீபனின் தாய் மீனாட்சி அம்மாள் முகத்தில் எப்படி விழிப்பது? அந்த உத்தமியிடம், ‘உங்கள் மகனைச் சுட்டுத் தள்ளி விட்டேன்’ என்று எப்படிச் சொல்லது? ராமநாதன் கலங்கினான். மீனாட்சி அம்மாள் விஷயம் இருக்கட்டும். சீதாவுக்கு என்ன சமாதானம் சொல்வது? ‘உன் உயிருக்கும், ஏன் ஆன்மாவுக்கும் மேலாக, யாரிடம் அன்பு செலுத்தி வந்தாயோ, அந்தத் திலீபனை நான் கொன்று விட்டேன்!’ என்று எப்படி அவளிடம் சொல்வது?

திலீபனைப் பற்றிப் பயங்கர உண்மைகளைச் சொன்னாலும் சீதா அதை நம்புவாளா? சீதா மட்டுமென்ன? இருபதாம் நூற்றாண்டில் பகுத்தறிவுள்ள எந்த மனிதன்தான் நம்புவான்? பொறாமையால், சீதாவை அடைய முடியவில்லையே என்ற தோல்வியின் விளைவாக ஏற்பட்ட ஆத்திரத்தில், திலீபனை ராமநாதன் சுட்டுவிட்டான் என்று தான் உலகம் சொல்லும். சீதாவும் அதைத்தான் நம்புவாள்! திலீபனைப் பற்றிய உண்மைகளை ராமநாதனின் அறிவே நம்ப மறுக்கிறதே. உலகம் எப்படி நம்பும்! ராமநாதன் விதியை நொந்து கொண்டான். ஏன் அவனுக்கு மட்டுமே இம்மாதிரியான சோதனைகளை ஆண்டவன் ஏற்படுத்த வேண்டும்? நல்லதையே செய்து வருபவனுக்கு மட்டும் ஏன் கஷ்டங்கள் மேலும் வந்து சேர வேண்டும்? பொறுப்பை உணர்ந்தவன் தலையிலே மட்டும் ஏன் கனமான பொறுப்புகள் சுமத்தப்பட வேண்டும்? காய்ந்த மரத்துக்குத்தானே எப்போதும் கல்லடி விழுகிறது. ஐயோ! மனச்சாட்சி என்பதை ஏன் அவனுக்கு ஆண்டவன் கொடுத்தான்?

மழையில் நின்றபடி பொருமியவனுக்கு யாரையும் பார்க்காமல், எதையும் நினைக்காமல் எங்காவது ஓடி விட்டால் என்ன என்ற சபலம் எழுந்தது. அடுத்த வினாடியே அவன் அந்த யோசனையை நிராகரித்தான். கடமை வழியிலே பழக்கப்பட்ட, பண்புப் பாதையிலே இதுநாள் வரை நடந்து வந்த அவனுக்கு, பிரச்சினை சிக்கலாகும் போது கோழை போல் ஓடுவது சரியென்று தோன்றவில்லை. பிரச்சினையை எதிர்த்து நின்று சமாளிப்பதே சரியென்று தோன்றியது. ‘வருவது வரட்டும். உச்சிமீது வானிடிந்து விழுந்தாலும் சரி, நான் பயப்படப் போவதில்லை.’

திட சங்கல்பத்தைச் செய்து கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

வீட்டுக் கதவு திறந்தபடி கிடந்தது. வீட்டின் கீழ் அறையில் அழுத களைப்பில் அயர்ந்து நித்திரை செய்தபடி கிடந்தாள் மீனாட்சி அம்மாள். ராமநாதன் மீனாட்சி அம்மாளை ஒரு முறை பார்த்தான், நல்ல வேளை, அந்த அம்மாள் விழித்திருக்கவில்லை. மாடிப்படிகளில் ஏறி, தன்னுடைய அறைக்குச் சென்றான். அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். அப்படியே அவன் பொத்தென்று சோபாவில் விழவும் பக்கத்து அறைக் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

சீதா!

ராமநாதன் தலைதூக்கிப் பார்த்தான். பிறகு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

நனைந்த ஆடைகளைக் கூடக் களையாமல் உட்கார்ந்திருக்கும் ராமநாதனை ஆச்சரியத்துடன் பார்த்ததாள் சீதா. “நீங்கள் வெளியே போய்விட்டு வந்தீர்களா?”

அவன் பேசவில்லை.

அவள் மெல்ல நடந்துவந்து, எதிர்ப்புறமுள்ள சோபாவில் அமர்ந்தாள். தயக்கத்துடன், “இந்த இரவில் மழையில் எங்கே போனீர்கள்? ஆஸ்பத்திரிக்குத்தானே?. அவரைப் பார்க்கத்தானே?” என்றாள்.

அவள் முகத்தை அவன் ஒரு முறை ஏறிட்டு நோக்கினான். அவளுடைய கேள்விக்கு அவன் உதடுகள் பதில் சொல்ல வில்லை. விழிகள் பதில் சொல்லின.

கண்ணீர்!

அவள் கலவரம் அடைந்தாள். “என்ன நடந்தது அத்தான்? ஆஸ்பத்தியில் என்ன நடந்தது?”

முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, “என்னை ஒன்றும் கேட்காதே சீதா! தயவுசெய்து ஒன்றும் கேட்காதே!” என்று புலம்பினான் அவன்.

“அவர் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி விட்டாரா! அவருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே!” உணர்ச்சி பொங்கக் கேட்டாள் அவள்.

அவன் பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி இருந்தான்.

“அத்தான் என்ன நடந்தது, சொல்லுங்கள்! எவ்வளவோ துன்பங்களைத் தாங்கிப் பழகிவிட்ட எனக்கு, நீங்கள் கூறப்போவது ஒரு வேதனையாகவே இருக்காது! நீங்கள் உண்மையை மறைப்பதால்தான் நான் ஏதேதோ நினைக்க வேண்டியிருக்கிறது. அவர் ஆஸ்பத்திரியில்தானே இருக்கிறார்?”

“ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான்.”

“பின் ஏன் அத்தான் இப்படி உங்கள் முகம் களையிழந்து இருக்கிறது? ஏன் அழுகிறீர்கள்? அவர் உங்களை ஏதாவது கடிந்து சொன்னாரா? இதற்கு முன் அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் துன்பத்தைவிடப் பெரிய துன்பம் என்ன கொடுத்திருக்க முடியும்?”

ராமநாதன் எழுந்து நின்றான்.

“சீதா! தயவு செய்து என்னை இப்போது ஒன்றும் கேட்காதே. நான் எந்தவிதமான பதிலும் உனக்குச் சொல்ல முடியாது”.

அவள் விடுவதாயில்லை.

“அத்தான்! எனக்கு ஒரே திகிலாக இருக்கிறது. ஏதோ பயங்கரமான ஒன்று நிகழ்ந்துவிட்டது என்று தோன்றுகிறது. அழுதபடியே தூங்கிப்போனவள், கெட்ட கனவு கண்டு எழுந்துவிட்டேன் அத்தான்! அதை நினைக்கவே எனக்குப் பயமாயிருக்கிறது.”

“என்ன கனவு?”

சீதா பெருமூச்சு விட்டவளாய்த் தொடர்ந்தாள்: “அத்தான், நீங்களும் நானும் அவரும் நள்ளிரவில் ஓர் ஆற்றங்கரையில் நிற்கிறோம். மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. அவர்…அவர், ஆற்றைக் கடப்போம் என்று சொல்கிறார். நான் பயப்படுகிறேன். அவர் அதைப் பார்த்துச் சிரிக்கிறார். அவர் சிரிப்பொலி இடியாக மாறுகிறது. அவர் வாயில் ரத்தம் கசிகிறது. நான் நடுங்குகிறேன். அவர் என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஆற்றில் இறங்கப் போகிறார். நீங்கள் தடுக்கிறீர்கள். அவர் உங்களைக் கீழே தள்ளிவிட்டு என்னை இழுத்துக்கொண்டு ஆற்றில் இறங்குகிறார். ஆனால் ஆச்சரியம், அத்தான்! ஆற்றில் அவரும் நானும் நீர்மேல் நடந்து செல்கிறோம்…!”

ராமநாதன் தரையைப் பார்த்தபடி நின்றான்.

அவள் தொடர்ந்தாள்: “பாதி நதி தாண்டியிருக்க மாட்டோம். அவர் திடீரென்று என்னிடம் திரும்பி என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். அவர் சிரிக்கச் சிரிக்க எனக்கு ஒரே பயமாக இருக்கிறது. நான் திரும்ப கரைக்கு ஓட நினைக்கிறேன். அவர் என் கையைப் பிடித்து நிறுத்தி, ‘நதியிலே இறங்கி விட்டோம். நீ இனி தப்ப முடியாது’ என்று சொல்லி என்னைத் தண்ணீரில் அழுத்தப் போகிறார். அப்போது ஒரு முதலை எங்களை நோக்கி நீந்தி வருகிறது. நாங்கள் இருவரும் பயந்து கரை நோக்கி ஓடுகிறோம். நான் கரையில் அடி வைக்கும்போது ஓர் அலறல் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். அவரை அந்த முதலை விழுங்கியபடி இருக்கிறது! எல்லாவற்றிலும் பெரிய ஆச்சரியம். அந்த முதலையின் முகம் உங்கள் முகம்போல் தெரிந்தது அத்தான்!”

“விசித்திரமான கனவு! விசித்திரமான கனவு!” என்று முணுமுணுத்தான் அவன்.

“இந்தக் கனவு கண்டதிலிருந்து எனக்கு அவரைப் பற்றி ஒரே கவலையாக இருக்கிறது. அவருக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே அத்தான்?”

ராமநாதன், “சீதா! நீ போய்ப் படுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டு, வெளியே போக அறைக் கதவை நோக்கி அடி எடுத்து வைத்தான். அறைக் கதவு மெள்ள உட்புறமாகத் தானே திறந்தது. ராமநாதன் திறந்த கதவைப் பார்த்தபடியே அப்படியே ஸ்தம்பித்து நின்றான். ராமநாதனை விட கதவுக்கப்பால் நின்ற உருவத்தைப் பார்த்து அதிக ஆச்சரியம் அடைந்தவள் சீதாதான்.

அத்தியாயம்4

சீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்தப் பின் இரவு வேளையிலே அந்த வீட்டு மாடி அறையிலே அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு காட்சி அவளை எதிர்நோக்கி நின்றது. அறைக் கதவுக்குப் பக்கத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரும் இரண்டு கான்ஸ்டேபிள்களும் நின்றபடி இருந்தனர். ராமநாதன் சீதாவையும் இன்ஸ்பெக்டரையும் பார்த்தபடி நின்றான். இன்ஸ்பெக்டரின் வருகையை ராமநாதன் எதிர்பாராமல் இல்லை. ஆனால் போலீசார் வரும்போது சீதா அங்கு விழித்துக் கொண்டிருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்திருந்தால் அவன் சண்முகசுந்தரம் மருந்துவமனையிலிருந்து நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று சரணடைந்திருப்பான். இந்தச் சங்கடமான விளக்கங்களுக்கு இடம் வைத்திருக்க மாட்டான்.

சீதா குழப்பத்துடன் ராமநாதனிடம் திரும்பி, “என்ன அத்தான், போலீசார் வந்திருக்கிறார்களே!” என்று கேட்டாள். ராமநாதன் ஒரு பெருமூச்சு விட்டு, “ஆம்! வந்திருக்கிறார்கள்” என்று சொல்லி மழுப்பினான்.

சீதாவின் மனத்தில் சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை திலீபன் ஆஸ்பத்திரியில் அடைபட்டுக் கிடப்பதை விரும்பாமல் தப்ப முயன்றிருப்பானோ? தப்ப முயலும்போது யாராவது தடுத்திருப்பார்களோ? அப்போது ஆத்திர மிகுதியால் அவர்களுக்குத் தீங்கு விளைவித்திருப்பானோ? இல்லை கொலையே செய்திருப்பானோ என்றெல்லாம் நினைத்தாள்.

அந்த அறையில் ஒரு விசித்திரமான நிசப்தம் நிலவியது. ராமதாதனால் ஒன்றும் பேச முடியவில்லை. இன்ஸ்பெக்டரும் ஒன்றும் பேசவில்லை. சீதாவோ பேசவே பயந்து நின்றாள். ஏதாவது பேசினால் உண்மை வெளிவரும். அந்த உண்மை பயங்கரமானதாகத்தான் இருக்கும். தனக்கு வேதனை தரும் உண்மையாகத்தான் இருக்கும். அதை வீணாகத் தெரிந்து கொள்வானேன் என்று நினைத்தாள் சீதா.

பயங்கரமான மௌனத்தைக் கலைத்தவர் இன்ஸ்பெக்டர்தான். அவர் ராமநாதனைப் பார்த்து, “நீங்கள்தானே ராமநாதன்?” என்ற கேள்வியைக் கேட்டார். ராமநாதன் ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு, இன்ஸ்பெக்டரை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

அதற்குள் சீதா, “இன்ஸ்பெக்டர் சார்! திலீபன் ஆஸ்பத்திரியில் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே? அவன் யாரையும் கொன்றுவிடவில்லையே?” என்று கேட்டாள்.

இன்ஸ்பெக்டர் ஏளனப் புன்னகை செய்தபடி, “திலீபன் யாரையும் கொல்லவில்லை. திலீபன்தான் சுடப்பட்டான்!” என்று கூறினார்.

‘திலீபன் சுடப்பட்டான்!’ என்று கேள்விப்பட்டதும் சீதாவுக்கு நிலை கொள்ளைவில்லை. கால்கள் நழுவுவது போலவும், தான் ஓர் இருண்ட கிணற்றில் தொடர்ந்து விழுந்து கொண்டே இருப்பதுபோலம் தோன்றியது. கண்ணீரோடும், கவலையோடும் இடை இடையே ஊசலாடும் நம்பிக்கையோடும் இதுநாள்வரை வாழ்ந்து வந்தாள். ‘திலீபன் மாறுவான்; அவன் மாறி, ஒரு நாள் வீடு திரும்புவான்; அப்போது அவனை அடைந்து வாழ்வோம்’ என்று நம்பி இருந்தாள். அந்த நம்பிக்கை மண்ணாகி விட்டது என்ற நினைப்பு எழவும், உணர்வற்றுத் தரையில் சாயப்போனாள்.

அவளை அப்படியே தாங்கிப் பிடித்தான் ராமநாதன். ‘அத்தான்’, ‘அத்தான்’ என்று அவன் தோளில் சாய்ந்து அழுதாள் சீதா.

இன்ஸ்பெக்டர் இனியும் தாமதம் செய்வது நன்மைக்குப் பொருந்தாது என்ற உணர்வோடு ராமநாதனை நெருங்கினார். “மிஸ்டர் ராமநாதன்! டாக்டா சண்முகசுந்தரம் ஸ்டேஷனுக்கு போன் செய்திருந்தார். திலீபனைச் சுட்ட குற்றத்துக்காக உங்களைக் கைது செய்கிறேன்” என்ற வார்த்தைகளைக் கூறினார்.

சீதாவுக்கு இன்ஸ்பெக்டரின் அந்த வார்த்தைகள் பெரிய அதிர்ச்சியைத் தந்தன. சிறு குழந்தை முதல் ராமநாதனை அறிந்தவள் சீதா. சிறு புழுவைக்கூட நசுக்கத் தயங்குபவன் ராமநாதன். அவன் இயற்கையே தவறுகளுக்கும், குற்றங்களுக்கும் அப்பாற்பட்டது. பொறுமையின் வடிவமான ராமநாதனா கொலைக்குத் துணிவான்? திலீபன் ராமநாதனைச் சுட்டான் என்றால் அவளால் நம்ப முடியும். ஆனால், இது நம்ப முடியாததாக இருக்கிறதே என்று நினைத்தாள்.

“இது உண்மையா?” என்ற கேள்விக் குறியோடு ராமநாதனை நோக்கினாள்.

ராமநாதன் வாய் திறந்து ‘ஆம்’ என்று பதில் கூறவில்லை, ஆனால் இன்ஸ்பெக்டர் சொல்லது உண்மை என்ற அர்த்தால் விளங்கும் படித் தலையை அசைத்தான்.

சீதாவின் பலவீன….மறைந்தது. அவள் உள்ளத்தில் வெறுப்பும், ஆத்திரமும் பொங்கி எழுந்து அவளுக்கு வலிமையைக் கொடுத்தன. “அத்தான்! நீங்கள் ஒரு வேஷக்காரர்! பொறாமைக்காரர். பசுத்தோல் போர்த்திய புலி!” என்று வசைமொழிகள் அடுக்கிக் கொண்டே போனாள். வசை வார்த்தைகளால் மட்டும் அவள் சினம் அடங்குவதாக இல்லை. ராமநாதன் மீது பாய்ந்து அவன் முகத்தைப் பிராண்டினாள். பிறகு தரையில் விழுந்து விக்கி விக்கி அழுதாள். போலீஸ் இன்ஸ்பெக்டர், ராமநாதனை வெளியே இழுத்துச் சென்றார்.

சீதா தன்னுடைய ஆத்திரத்திலும் மனக்குழப்பத்திலும் இன்ஸ்பெக்டரிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்து போனாள். சுடப்பட்ட திலீபன் இறந்து விட்டானா, இன்னும் உயிரோடு ஊசலாடிக் கொண்டிருக்கிறானா, அவன் இப்போது எங்கிருக்கிறான் என்ற கேள்விகளையெல்லாம் கேட்கவே மறந்துபோய் விட்டாள்.


டாக்டர் சண்முகசுந்தரத்தின் மருத்துவமனையில் –

டாக்டரின் மனம் பெரிய குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. திலீபனின் அருகில் அவர் உட்கார்த்திருந்தார். திலீபனின் உடலிலிருந்து சேதமாகியிருக்கும் இரத்தத்தின் அளவைப் பார்க்கும்போது திலீபனின் உயிர் உடனே போயிருக்க வேண்டும்.ஆனால் அவன் இன்னமும் சாகவில்லை. அவனுக்கு ஞாபகமும் திரும்பவில்லை. உயிர் போகாமலும், உயிர் பிழைக்காமலும் ஓர் இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தான் திலீபன். டாக்டர் சண்முகசுந்தரம் ரத்தம் செலுத்தி அவனைப் பிழைக்க வைக்க முயன்றார். ஆனால் திலீபன் உடல் அவர் செலுத்திய ரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இது டாக்டர் சண்முகசுந்தரத்துக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. திலீபனின் உடலுக்கே சுய சித்தம் இருந்து அது மாற்று ரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுபோல் தோன்றிற்று. அவர் படித்திருந்த உடற்கூறு சாத்திரத்தின் சட்ட திட்டங்களின்படி, இது நம்ப முடியாத விஷயமாய் இருந்தது.

இரண்டு மூன்று முறை ரத்தம் செலுத்திப் பார்த்தனர். ரத்தம் உள்ளே செல்லவில்லை. வெளியே தள்ளப்பட்டுக் கசிந்து வந்தது. ஆனால் திலீபன் உடல் ரத்தம் சேதமானதற்கு அறிகுறியான எந்தவித அடையாளங்களையும் காட்டவில்லை. திலீபன் ஒரு தூங்கும் மனிதன் போல் நிம்மதியாகக் கிடந்தான். இது வைத்திய சாஸ்திரத்துக்கே ஒரு புதுமையாக இருந்தது. ஆனால் திலீபன் பற்றிய விஷயம் எதுதான் ஆச்சரியமாக இல்லை!

டாக்டர் சண்முகசுந்தரம், அந்த அறைக்குச் சரியான பாதுகாவல் அமைத்துவிட்டு வெளியேறினார்

‘இது விஷயமாக மற்ற டாக்டர்களோடு கலந்து பேசலாமா?’ என்று நினைத்தார். ஆனால் அவர்கள் ‘உமக்கு வயதாகி விட்டது. மூளை பழுதாகி விட்டது’ என்று கேலி செய்தால் என்ன செய்வது என்ற பயமும் உடனடியாக மனத்தில் எழுந்தது. சிக்கலான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு, அவற்றை மறப்பதே வழி என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்.


பொழுது விடிந்தது. தினசரிகள் திலீபன் சுடப்பட்ட விஷயத்தையும், அதற்குக் காரணம் காதல் போராட்டம்தான் என்பதையும் சுவையாகப் பல பத்திகள் வரைந்திருந்தன. ராமநாதன் வீட்டில் பத்திரிகை நிருபர்கள், போலீசார் நடமாட்டமும் அதிகரித்தது.

சீதாவுக்கும், மீனாட்சி அம்மாளுக்கும் இது எல்லையில்லா வேதனையைக் கொடுத்தது. வாழ்வில் ஆரம்பம் முதல் கஷ்டங்களையே அனுபவித்துப் பழகிய மீனாட்சி அம்மாளுக்கு, தன் மகன் சுடப்பட்ட செய்தி, அதுவும் ராமநாதன் அதைச் செய்தான் என்ற உண்மை, மிகவும் கலக்கத்தைக் கொடுத்தது. மீனாட்சி அம்மாளும், சீதாவும் ஆஸ்பத்திரிக்குச் சென்றனர் திலீபனைப் பார்க்க. திலீபன் எந்த உணர்வுமில்லாமல் படுத்திருந்தான். அவனுக்கு ரப்பர்குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டு வந்தது. அவர்களா அவனோடு பேசவோ உரையாடவோ முடியவில்லை. தன்னுடைய மகனின் விசித்திரமான நிலையைப் பார்த்துக் கண் கலங்கி நின்றாள் மீனாட்சி அம்மாள்.


விசாரணைத் தினத்தன்று கோர்ட்டில் பெருங் கூட்டம் சேர்ந்திருந்தது. ராமநாதன் குற்றவாளிக் கூண்டுக்கு அழைத்து வரப்பட்டான். ஒரு நடைப் பிணம்போல் அழைத்து வரப்பட்ட ராமநாதன் தன் பார்வையை, கோர்ட்டில் அமர்ந்திருக்கும் திலீபனின் தாய் மீதும், சீதாவின் மீதும் செலுத்தினான்.

மனம் துணுக்குற்றது. பயிற்சியாலும், பண்பாலும் இந்தக் குற்றவாளிக் கூண்டிலே நிற்கும் நிலையை அவன் அடைய வேண்டியவனல்ல; தடுக்க முடியாத சக்திகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி விட்டன என்பதை எண்ணும் போது தான் அவனுக்கு, மனிதன் கண்ணற்ற, கருணையற்ற விதி என்ற மாபெரும் சக்தியின் கைப் பொம்மை என்ற உண்மை தெரிந்தது. நீதிமன்றத்திலே வக்கிலாகப் பணியாற்றப் படித்தவன் இன்று அதே நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்க வேண்டிய நிலையை அடைந்து விட்டான்.

இவ்வாறு அவன் சிந்தளையில் ஈடுபட்டிருக்கும்போது நீதிபதி தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தார்.

நீதிபதியாக வந்து அமர்ந்த மணிவாசகம் அவனுடைய மாமா ராமலிங்கத்தின் நெருங்கிய நண்பர். ராமநாதனிடம் மிகவும் அன்பு செலுத்தியவர். ராமநாதன் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர். அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் ராமநாதனுக்கு வெட்கமாக இருந்தது.

நீதிபதி மணிவாசகம் கம்பீரமாகக் கோர்ட்டை ஒரு முறை பார்த்தார். மகள் சீதாவோடு, சோகமே உருவாக உட்கார்ந்திருக்கும் தன் நண்பர் ராமலிங்கத்தைப் பார்த்தார். ராமலிங்கம் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். ‘எப்படி வாழ்ந்த குடும்பம், எப்படியாகி விட்டது’ என்ற நினைப்பு நீதிபதியின் மனத்தில் எழுந்தது. ஆனால் அடுத்த வினாடியே ‘நான் இந்த வழக்கை விசாரிக்கப் போகும் நீதிபதி’ என்ற எண்ணம் எழுந்தது. உடனே தன் உணர்ச்சிகளையும், பாசத்தையும் கழற்றி வைத்துவிட்டு நீதியின் யந்திரமாக மாறினார் மணிவாசகம்.

விசாரணை தொடங்கி, வழக்கப்படி நடக்க வேண்டிய சட்டச் சடங்குகள் நிறைவேறின. ராமநாதன் சார்பில் ஒரு பிரபல, திறமைசாலியான வக்கீல் அமர்த்தப்பட்டிருந்தார்.

அவர் பேச எழும்போது ராமநாதன் குறுக்கிட்டான், “நீதிபதியவர்களே! எனக்கு வக்கீல் தேவையில்லை” என்றான். இது ராமநாதனின் மாமா ராமலிங்கத்துக்கும், பேச எழுந்த வக்கீலுக்கும் திகைப்பை உண்டு பண்ணிற்று. எப்படியாவது ராமநாதனை விடுதலை செய்ய வேண்டுமென்று, அதிகப் பணம் கொடுத்து ராமலிங்கம் அந்த வக்கீலை நியமித்திருந்தார்.

ஆகையால், ராமநாதன் சார்பில் எழுந்த வக்கில், “நீதிபதியவர்களே! குற்றவாளியின் முளை சரியான நிலையில் இல்லை என்பதே என் வாதம். ஆகையால் அவர் விருப்பத்தைக் கேட்டோ, அல்லது அவர் வாக்குமூலத்தைக் கொண்டோ எந்த விதமான முடிவுக்கும் வர முடியாது” என்று ஆட்சேபித்தார்.

இந்த வாதத்தைக் கேட்ட ராமநாதன் ஒரு சோகப் புன்னகை புரிந்தான். கண்ணியமான குரலில், அமைதியாக நீதிபதியை நோக்கி அவன், “நீதிபதியவர்களே! எனக்கு எந்த விதமான மூளைக் கோளாறும் இல்லை. நானும் வக்கீலுக்குப் படித்தவன்தான். என் கட்சியை நானே வாதாட முடியும். அதற்குள்ள திறமையும் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் விரும்புவது விடுதலையல்ல, தண்டனைதான். திலீபனைச் சுட்டது நான்தான் என்று நானே ஒப்புக் கொள்ளும்போது, நான் சுட்டதைக் கண்ணால் பார்த்த டாக்டர் சண்முகசுந்தரமும், அவர் சிப்பந்திகளும் இருக்கும்போது நீதிமன்றத்தின் வேலை எளிதில் முடிய வேண்டியதுதானே?” என்றான்.

நீதிபதி, “ராமநாதன்! சட்டப்படி விசாரணை நடத்தி முடிவுக்கு வருவதுதான் ‘ரூல் ஆய்ப் லா’. ஆகையால் விசாரணை நடந்துதான் தீர வேண்டும். ஏன் நீங்கள் திலீபனைச் சுட்டீர்கள் என்று சொல்ல முடியுமா? நீங்கள் போலீசார் முன்னிலையிலும் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் எந்தவித வாக்குமூலமும் கொடுக்க மறுத்துவிட்டீர்கள் என்று தெரிய வருகிறது. நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளச் சற்றும் விரும்பாதது ஆச்சரியமாயிருக்கிறது. நீங்கள் சுய அறிவுடன் பேசுகிறீர்களா அல்லது உங்கள் வக்கீல் சொல்வதுபோல் உங்களுக்கு மூளை சரியில்லையா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது” என்று கூறினார்.

ராமநாதன், கோர்ட்டில் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய மாமா, சீதா, திலீபனின் தாயான மீனாட்சி அம்மாள் முதலியவர்களை ஒரு முறை பார்த்தான். அங்கு ராமநாதன் தரவிருக்கும் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக் காத்திருக்கும் பக்திரிகை நிருபர்களைப் பார்த்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தான்.

நீதிபதியை நோக்கி, “நீதிபதியவர்களே! எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அக்கறையில்லை. இப்போதே எனக்கு மூளை சரியில்லை என்ற பிரச்சினை எழுந்திருக்கிறது; இன்னும் திலீபனை நான் ஏன் சுட்டேன் என்பதற்கு, நான் காரணங்கள் கொடுக்கத் தொடங்கினால், என்னைப் பைத்தியமென்றே கூறிவிடும் உலகம். நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். அதை யாரும் நம்பவும் முடியாது. ஏன், நானே நம்ப முடியாமல் தவிக்கிறேன். நான் தரக்கூடிய காரணங்கள் பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்துக்குப் பொருத்தமானவை அல்ல. இருபதாம் நூற்றாண்டு மக்கள் கண்ணால் காண்பது உண்மை, காதால் கேட்டு அல்லது ஸ்பரிசித்து உணர்வது தான் உண்மை என்று நம்பி வாழும்போது நான் கூறப் போகும் எதையும் நம்ப மாட்டார்கள். ‘விண்ணுக்கும், மண்ணுக்குமிடையே எவ்வளவோ இருக்கின்றன’ என்ற ஷேக்ஸ்பியர் வாக்கியத்தின் உண்மையை உணர்ந்தவர்கள் ஒரு வேளை என்னை நம்பலாம். இந்த ரகசியம் என்னோடு மடிவதே மேல். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள்! திலீபன் உயிர் பெற்று வாழ்ந்தால், அவனைச் சிறையில் வைத்திருக்க வேண்டும். அவனை யாரும் நெருங்கக் கூடாது. அப்படி அவன் இறந்துவிட்டால் அவனைத் தயவு செய்து புதைக்கச் கூடாது. அவனை எரித்துவிட வேண்டும்” என்று கூறி முடிந்தான்.

இந்த வாக்குமூலத்தைக் கேட்டவுடன் கோர்ட்டில் எல்லோரும் ராமநாதன் ஒருவிதமான பைத்தியமோ என்று தான் எண்ணினார்கள்.

ஆனால் நீதிபதி மணிவாசகம் மட்டும் ஒரு வினாடி சிந்தித்தபடி இருத்தார். பிறகு ராமநாதனை நோக்கி, “உங்கள் விளக்கம் நம்ப முடியாதபடியே இருக்கட்டும் பரவாயில்லை. நான் உங்களைப் பைத்தியம் என்று நினைக்கவில்லை. நீங்கள் இந்தக் குற்றத்தைச் செய்ய ஒரு காரணம் இருக்க வேண்டும். அது சட்டப்படி ஒப்பு கொள்ள முடியாத காரணமாகவும் இருக்கலாம். இருந்தாலும் அதைக் கூற வேண்டியது உங்கள் கடமை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

ராமநாதன் உடனே நீதிபதியைப் பார்த்து, “நீதிபதியவர்களே! உங்கள் அன்புக்கு நன்றி. நான் காரணம் கூறத் தொடங்கினால், அது ஒரு பெருங் தையாக நீளும். அது மட்டுமல்ல; அது எங்கள் குடும்பத்தைப் பற்றிய விஷயம். கடந்த ஏழு வருஷ காலமாக எங்கள் குடும்பத்தை ஒரு பயங்கர சூறாவளியைப் பற்றி மக்கள் சூழ்ந்திருக்கும் இந்தப் பொது மன்றத்தில் நான் கூற விரும்பவில்லை. என்னைப் பொறுத்த விஷயம் மட்டுமல்லை, என் குடும்பத்தைச் சேர்ந்த திலீபனைப் பொறுத்த விஷயம். அவனை விரும்பி மணக்க இதுநாள் வரை காத்திருந்து, ஏமாந்திருக்கும் என் மாமன் மகள் சீதாவைச் சம்பந்தப்படுத்திய விஷயம். என் குடும்ப கௌரவத்தைத் திறந்த நீதிமன்றத்தில் கூறி, அதை ஒவ்வொரு பத்திரிகையும் மேலும் விஷயமாக்க நான் விரும்பவில்லை. எங்கள் வீட்டு கந்தல் துணியை ஊரார் முன்னிலையில் நான் கழுவத் தயாராயில்லை. ஒரு வேளை உண்மை கூறுவதனால் எனக்குக் குறைவான தண்டனை கிடைக்கலாம். அல்லது தண்டிக்கப்படாமல் விடப்படலாம். அதைப்பற்றி அக்கறையில்லை” என்றான். இவ்வாறு ராமநாதன் கூறியதைக் கேட்டதும் நீதிமன்றத்தில் மௌனம் நிலவியது. ப்ராசிக்யூட்டரும், ராமநாதன் சார்பில் நியமிக்கப் பட்டிருந்த வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வழக்கு சிக்கலான கட்டத்தை அடைந்து விட்டது என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

இந்த வழக்கைப்பற்றி இதுவரை பலவிதமான விளக்கங்களும், ஹேஷ்யங்களும் கொடுத்துப் பத்திரிகை பத்திகளை நிரப்பி வந்த நிருபர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ‘நாம் நினைத்ததற்கு மாறான அடிப்படை ஒன்று வழக்கிற்கு இருக்கிறது. அது நமக்குத் தெரியாமலேயே போய் விடுமோ?’ என்று குழம்பியபடி உட்கார்ந்திருந்தனர்.

‘ராமநாதன் வாக்குமூலத்தில் ஏதோ ஓர் உண்மை இருக்க வேண்டும். அந்த உண்மையை அவர் பொதுவில் சொல்ல மறுக்கிறார். அதைக் கேளாமலே சந்தர்ப்ப சாட்சியத்தைக் கொண்டு மட்டும் தீர்ப்பு வழங்குவதா?’ என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார் நீதிபதி மணிவாசகம்.

இந்த நிலையில் சர்க்கார் வக்கீல் எழுந்திருந்து ஒரு யோசனை கூறினார். மற்ற சாட்சிகளைப் பொது நீதிமன்றத்தில் விசாரிப்பது என்றும், ராமநாதன் வாக்குமூலத்தை மட்டும் தனிமையிலே ‘சேம்பரில்’ நீதிபதி, இருதரப்பு வக்கீல்கள் முன்பு ரகசியமாக விசாரிப்பது என்றும் ஆலோசனை கூறினார்.

நீதிபதி மணிவாசகம் சிறிது யோசித்துவிட்டு ரகசிய வீசாரணைக்கு ஒப்புக் கொண்டார். ராமநாதனும் ரகசிய விசாரணைக்கு ஒப்புக்கொண்டான்.

முதலில் இன்ஸ்பெக்டர் விசாரிக்கப்பட்டார். பிறகு முக்கிய சாட்சியான டாக்டர் சண்முக சுந்தரம் விசாரிக்கப் பட்டார். பல நாட்களுக்கு முன்பு ஓர் இரவு ராமநாதனிடம் இருந்து போன் வந்தது என்றும், அதன்படி அவர் சிப்பந்தி ராமநாதன் வீட்டுக்குச் சென்று திலீபனைப் பலாத்காரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து பாதுகாப்பில் வைத்திருந்ததாகவும் கூறினார்.

நீதிபதி, “திலீபன் பாதுகாப்பில் வைக்கப்பட வேண்டிய ஒரு பைத்தியமா?” என்று கேட்டார்.

சண்முகசுந்தரம் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். “திலீபனை ஒரு பைத்தியமென்றும் சொல்ல முடியவில்லை. அவனைச் சாதாரண மனிதன் என்றும் சொல்ல முடியவில்லை” என்றார்.

நீதிபதி உடனே, “ஒரு நபர் சாதாரண மனிதர் அல்ல வென்றால் அவரை உடனே பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்பது தான் உமது முடிவா? உமது நோக்கப்படி பார்த்தால் நாகரிகம் வளர்த்த பல நல்லவர்கள், பல மேதைகள் அசாதாரணமான மனிதர்கள்தான். அவர்களையெல்லாம் பாதுகாப்பில் பூட்டி வைக்க வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

டாக்டர், “அப்படியல்ல கோர்ட்டார் அவர்களே, ராமநாதன், திலீபனின் மூளை சரியில்லை என்று சொன்னார். ராமநாதன் கண்ணியமானவர். அவர் கூறுவதை நம்பத்தானே வேண்டும்?” என்றார்.

நீதிபதி குறுக்கிட்டு, “ஆனால் உங்கள் அபிப்பிராயப்படி திலீபன் ஒரு பைத்தியமல்ல, அப்படித்தானே?” என்று கேட் டார், சண்முகசுந்தரம் ஒப்புக்கொண்டார். பிறகு சர்க்கார் தரப்பு வக்கீல், டாக்டரிடம் பல கேள்விகள் கேட்டார்.

அவர் கொடுத்த பதில்கள் எல்லாமே ராமநாதன் திட்டமிட்டுத் திலீபனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்து, பிறகு அங்குபோய் அவனைக் கொல்லவே முடிவு செய்தான் என்ற அபிப்பிராயம் ஏற்படும்படி அமைந்தன. கோர்ட்டில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ராமநாதன் மீது வெறுப்பு அடையும்படி இருந்தது டாக்டர் சண்முகசுந்தரத்தின் சாட்சியம். ஆனால் அவர் என்னவோ தனக்குத் தெரிந்த உண்மைகளைத்தான் கூறினார். ராமநாதன் தண்டிக்கப் பட வேண்டுமென்ற எண்ணத்தோடு எதையும் கூட்டவோ குறைக்கவோ இல்லை.


டாக்டர் சண்முகசுந்தரம் கோர்ட்டில் சாட்சியம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவரது ஆஸ்பத்திரியில் அழகான பெண் ஒருத்தி நுழைந்தாள். அவள் முகமும் கண்களும் ஒருவித கலவரத்தோடு காணப்பட்டன. அவள் ஏதோ முக்கியமான நோக்கத்தோடு வந்தவள் போல் காணப்பட்டாள். ஆஸ்பத்திரியில் நுழைந்ததும் அவள், “திலீபன் கிடத்தப்பட்டிருக்கும் அறை எங்கே இருக்கிறது?” என்று விசாரித்தாள் நர்ஸ் காந்தாவிடம்.

நர்ஸ் காந்தா, வந்திருக்கும் பெண்மணியைச் சந்தேகத்தோடு நோக்கினாள். “நீங்கள் யார்?”

“நான் திலீபனுக்கு மிகவும் வேண்டியவள். நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்று சொன்னாள் வந்தவள்.

நர்ஸ் காந்தா தயக்கத்தோடு அவளைத் திலீபன் படுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள். அந்தப் பெண்மணி ஜன்னல் வழியாக உள்ளே ஆவலோடு நோக்கினாள். திலீபன் பிரக்ஞையற்றுக் கிடப்பது தெரிந்தது.

காந்தா, வந்தவள் திலீபனுக்கு வேண்டியவள் என்ற சொன்ன காரணத்தால் அவளிடம் பரிவுடன்,”ஐயோ பாவம். திலீபன் சில நாட்களாகக் கண்களைத் திறக்கவே இல்லை அப்படியே படுத்துக் கிடக்கிறார். மெள்ள மூச்சு வந்தபடி இருக்கிறதே அல்லாமல் அவர் ஒரு சவம் போல்தான் கிடக்கிறார்” என்று சொன்னாள்.

சவம்போல் கிடக்கிறார் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், வந்த பெண்மணியின் முகத்தில் சுவலை ஏற்படவில்லை. வருத்தம் ஏற்படவில்லை. எல்லையில்லா சந்தோஷம் ஏற்பட்டது. சிறுகுழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மையோ இனிய தின்பண்டமோ கொடுத்தால் அந்த குழந்தை சந்தோஷப்படுவதுபோல் சந்தோஷப்பட்டாள் வந்தவள். “அப்படியா? சவம் போலவா கிடக்கிறார்? பேசவே இல்லையா?” என்றாள்.

திலீபனுக்கு வேண்டியவள் என்று ஆஸ்பத்திரியில் கூறிக்கொண்டு நுழைத்தவள், திலீபன் நிலை குறித்துக் கவலைப்படுவதற்குப் பதில் சந்தோஷமடைவது காந்தாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியத்தைக் கொடுத்தது வந்த பெண்மணியின் குரல். அவள் தன்னையும் மறந்து பேசும்போது அவள் குரல் ஒரு கனத்த ஆண் குரலாக இருந்தது.

காந்தா உடனே “என்னமோ இரட்டைக் குரலில் பேசுகிறீர்களே?” என்றாள்.

வந்தவள் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். “ஆமாம். அது என் பிறவிக் கோளாறு. சரி, சரி. நான் உள்ளே செல்ல லேண்டும். தயவு செய்து கதவைத் திறந்து விடுங்கள்” என்று பூட்டிய கதவைக் காட்டி வேண்டினாள்.

டாக்டர் பூட்டி விட்டுப்போன கதவைத் திறப்பதா என்று கேள்வி காந்தாவின் மனத்தில் எழுந்தது.

முன்பு ஒரு நாள் பூட்டிய கதவைத் தன் உணர்வு இல்லா திறந்துவிட்டதன் விளைவுதான் திலீபன் இந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்துப் பார்த்தாள் காந்தா. தயங்கினாள். “டாக்டர் உத்தரவு இல்லாமல் நான் இந்தக் கதவைத் திறக்க முடியாது” என்று கண்டிப்பாகப் பதில் அளித்தாள்.

இதைக் கேட்டவுடன் வந்தவளின் முகம் களையிழந்தது. பெரிய சந்தர்ப்பத்தை நழுவவிட்டவள் போல் சொத்தை இழந்தவள் போலானாள். அந்தப் பெண், விடாமல் நர்ஸ் காந்தாவிடம் மன்றாடினாள். “நர்ஸம்மா! நான் அவருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். நான் அவருடைய மனைவி, தயவுசெய்து என்னை உள்ளே அனுமதியுங்கள். சில நிமிஷம் நான் அவரோடு தனியே இருந்தால் போதும். எல்லாச் சிக்கல்களும் சரியாகிவிடும். உலகத்துக்கே ஒரு பெரிய நன்மை ஏற்படும்” என்று துடியாகத் துடித்துக் கெஞ்சினாள்.

“டாக்டர் கோர்ட்டுக்கும் போயிருக்கிறார். அவர் வந்தவுடன் அவர் அனுமதியின் பேரில் நீங்கள் உள்ளே போகலாம்” என்றாள் காந்தா.

“அதுவரை நான் பொறுக்க முடியாது நர்ஸ்! நல்ல சந்தர்ப்பம் நழுவிவிடும் போலிருக்கிறதே” என்று சொல்லியபடி திலீபன் படுத்திருக்கும் அறையை நோக்கி ஒரு முறை பார்த்தாள்.

அந்தப் பெண்ணின் முகத்திலிருந்த கலவரத்தைக் கண்ட நர்ஸுக்கு, ஒரு கொலைகூடச் செய்யத் துணிவாள் என்று தோன்றியது. தன் இடுப்பில் சொருகியிருந்த சாவிக் கொத்தை நர்ஸ் காந்தா கையில் இறுகப் பிடித்துக் கொண்டாள். திலீபனின் மனைவி என்று கூறிக்கொண்டவள் வெறித்த பார்வையோடு அந்தச் சாவிக் கொத்தைப் பார்த்தபடி, “அந்தச் சாவிக் கொத்தை இப்படிக் கொடு” இன்று அதட்டலுடன் ஆண் குரலில் கேட்டாள்.

பயந்துபோய் நர்ஸ் பின்னடைந்தாள்.

அவளிடமிருந்த சாவிக் கொத்தைப் பிடுங்கும் நோக்கத்தோடு, வந்தவள் நர்ஸை நோக்கி முன்னேறினாள்.

திடீரென்று –

திலீபனின் பூட்டப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஒரு சப்தம் எழுந்தது. அந்தச் சப்தம் பெரும் கூச்சலுமல்ல. வெறும் நாலு எழுத்து வார்த்தைதான் அந்தச் சப்தம் ‘ஆனந்தி’ ‘ஆனந்தி’ என்று திலீபன் குரல் அழைப்பது கேட்டது.

திலீபனின் மனைவி என்று கூறி வந்த பெண்மணி உடனே வீர்ரென்று ஆத்திரத்தோடு அறைப்பக்கம் திரும்பினாள். “நான் ஆனந்தியல்ல, நான் ஆனந்தியல்ல” என்ற அறையில் படுத்திருக்கும் திலீபனை நோக்கிக் கதறினாள்.

அறையினுள் கட்டிலில் படுத்திருந்த திலீபன் அசையவில்லை அவன் கண்கள் மூடியபடிதான் இருந்தன. அவன் சவம் போலத்தான் கிடந்தான். ஆனால் கண்கள் மூடிய அசைவற்ற நிலையில் அவன் முகத்தில் ஒரு குரூரமான புன்னகை படர்ந்தது. அவன் உதடுகள் பின்வரும் வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்தன, பெண் குரலில்.

“என் உடல் பொருள் எல்லாம் நீதான் ஆனந்தி, என் உடல் பொருள் ஆனந்தி, நீயல்லவா?”

– இதை வெளியிலிருந்து கேட்ட பெண், “உடல் பொருள் ஆனந்தி” என்று ஒரு முறை திருப்பிச் சொல்லிவிட்டு, அழுதபடி ஆஸ்பத்திரியை விட்டு ஓடினாள்.

நர்ஸ் காந்தா ஒன்றுமே புரியாமல் இந்த நாடகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றாள்.

அத்தியாயம்5

டாக்டர் சண்முகசுந்தரத்தின் விசாரணை முடிந்ததும் கோர்ட் கலைந்தது. மறு நாள் காலை ராமநாதனைத் தமது பிரத்தியோக அறையில் வக்கீல்கள் முன் ‘சேம்பர் விசாரணை’ நடத்துவது என்று முடிவு செய்தார் நீதிபதி.

போலீசார் ராமநாதனை அழைத்துக் கொண்டு வெளியேறத் தொடங்கினார்கள். தலை குனிந்தபடி செல்லும் ராமநாதனைப் பார்த்த சீதாவின் தந்தை ராமலிங்கத்தின் மனம், சொல்ல முடியாத வேதனையை அடைந்தது.

அன்போடு வளர்த்த தன் சகோதரி மகன், தனக்கு மாப்பிள்ளையாக வந்து சிறப்பாக இருக்க வேண்டியவன், இன்று ஒரு கொலைகாரனாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதியாகச் செல்கிறானே! பார்க்கப் பார்க்க, அவருக்குத் தன் மகள் சீதாவின் மீது கோபமாக வந்தது.

பள்ளமில்லாத நேர்ப்பாதையாக அமைத்திருந்த அவர் குடும்ப வாழ்க்கையில் திலீபன் வந்ததிலிருந்து குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்பட ஆரம்பித்தன. அலங்காரமாக வாழ்ந்த அவர் குடும்பத்துக்கு அவமானம் ஏற்பட்டதற்கு அவர் மகள் சீதாவின் பிடிவாதம்தான் காரணம் என்று நினைக்கவும், அவருக்குச் சீதாவின் மீது கோபம் இன்னும் அதிகமாயிற்று. தந்தையின் சினம் காணக் காண சீதாவுக்கும் வேதனை அதிகரித்தது. மாறுபட்ட உணர்ச்சிகளோடு ராமலிங்கம், சீதா, மீனாட்சி அம்மாள் மூவரும் கோர்ட்டை விட்டுக் கூட்டத்தோடு கூட்டமாக வெளியே வந்தனர்.

வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் ராமநாதனுடைய வாக்குமூலத்தினால் ஆத்திரம் அடைந்து, அவனைக் கண்டனம் செய்தபடி கலைந்தது. “கொலையைச் செய்யத் துணிந்தவன், தன் வாக்குமூலத்தைப் பகிரங்கமாக நீதிமன்றத்தில் சொல்லமாட்டானாம்; பெரிய குடும்ப விஷயமாம். அதைப் பப்ளிக்கில் சொல்ல முடியாதாம். இவ்வளவு தன்மான உணர்ச்சி உள்ளவன் ஏன் ஆஸ்பத்திரிக்குப் போய் ஒருத்தனைச் சுட வேண்டும்?” என்று மனம் போன போக்கில் ராமநாதனைக் கண்டித்தபடி சென்றனர். ராமநாதனுடைய குடும்பத்தினருக்கே அவன் திலீபனைச் சுட்ட காரணம் புரியவில்லை என்ற விஷயம் பொது மக்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

கோர்ட்டுக்கு வெளியே போலீஸ் லாரி காத்திருந்தது. அதில் ஏறுமுன், தரையைப் பார்த்தபடி இருந்த ராமநாதன் தலையைத் தூக்கிக் கூட்டத்தைக் கவனித்தபோது, வெகு தூரத்திலிருந்து ஒரு பெண் அவனை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. அவன் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த கான்ஸ்டபிள், “வண்டியிலே ஏறுய்யா!” என்று தன்னைப் போலீஸ் லாரியை நோக்கித் தள்ளுவதையும் மறந்தான்.

அவன் பார்வை பூராவும் தன்னை நோக்கி ஓடிவரும் அந்தப் பெண் மீதே லயித்திருந்தது. அந்தப் பெண் வேறு யாருமல்ல. ஆஸ்பத்திரியில், திலீபனின் மனைவி என்று கூறிக் கொண்டவள்தான். மயங்கிப் படுத்திருந்த திலீபனின் உதடுகள் ‘ஆனந்தி’என்று அழைத்தது அவளைத்தான். ‘நான் ஆனந்தி அல்ல’ என்று உணர்ச்சித் துடிப்பொடு மறுத்தவளும் அவளே. அந்தப் பெண் ஏதோ ஒரு சங்கற்பத்தோடு ராமநாதனை நோக்கி விரைந்து வந்தாள்.

ஆனால் ஜனக்கூட்டம் போலிஸ் லாரியைக் குழ்ந்து கொண்டு வழி மறித்தது. நேற்றுவரை செல்வந்தனாகவும், பண்புள்ளவனாகவும், படித்தவனாகவும் கருதப்பட்ட இதே ராமநாதனை மக்கள் கூட்டம் குழ்ந்து கொள்ளவில்லை. ஆனால் இன்று? அவன் ஒரு ‘செய்தி’யாகி விட்டான். அவன் புகழ் திடீரென்று விரிந்து மக்களுக்கு முன் அவனை ஒரு காட்சிப் பொருளாக்கி விட்டது. அவன் சாதித்ததுதான் என்ன? துப்பாக்கியால் திலீபனைச் சுட்டுவிட்டான். அவன் குற்றவாளியாகிவிட்டான். அவ்வளவுதான்! குற்றவாளி, ஒரு சினிமா நட்சத்திரம், நாட்டுத் தலைவன் இம் மூவருக்கும் மக்களிடையே கவர்ச்சி இருக்கிறது. மக்கள் கவனத்தை வெவ்வேறு காரணத்துக்காகக் கவருகின்றது.

ஆனந்தி என்று அழைக்கப்பட்டவள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு ராமநாதனை நெருங்க அரும்பாடு பட்டாள். ராமநாதனோ அவளை நோக்கியபடி தன்னையும் மறந்து நின்றான். கூட்டம் திரள்வதைக் கண்ட போலீசார் அவனைப் போலீஸ் வண்டிக்குள் ஏறும்படி கட்டாயம் செய்தனர். வேறு வழியின்றி அவன் போலீஸ் லாரிக்குள் ஏறி உட்கார்ந்தான். ஆனால் அந்தப் பெண் விடாமுயற்சியோடு நெட்டித் தள்ளிக் கொண்டு லாரியை அடைந்து விட்டாள்.

ராமநாதனும் ஆவலோடு அவள் பக்கம் திரும்பினான.

அவள், “என் வேண்டுதல் பேரில் எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ள நேர்ந்தது! என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள்.

“இதில் மன்னிப்பதற் கொன்றுமில்லை. நான் என் கடமையைத்தானே செய்தேன்?” என்றான் அவன்.

இதற்குள் போலீஸ் லாரி புறப்பட ஆரம்பித்தது.

அவள் , வண்டியோடு நகர்ந்தபடியே, “ஊரார் நம்பினால் நம்பட்டும், நம்பாவிட்டால் போகட்டும். நீதிபதியிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிடுங்கள், தயவுசெய்து எல்லா உண்மைகளையும் கூறிவிடுங்கள்” என்று கூச்சலிட்டாள்.

ராமநாதன், நகரும் வண்டியிலிருந்து, “நீ தலைமறைவாக இரு. ஆபத்தில் மாட்டிக் கொள்ளாதே!” என்று அண்ணன் தங்கைக்குப் புத்தி சொல்வதுபோல் கூறினான்.

வண்டி நகர்ந்தது.

அதிலிருந்தபடியே ராமநாதன் கூட்டத்தை நோக்கினான்.

கூட்டத்தில் ஒருவன் – 56-வயதுக்கு, முகத்திலே சிறு மீசையோடு வாயிலே புகையிலைப் பைப்புடன் கறுப்புக் கண்ணாடியணிந்து நின்றவன் – நகரும் போலீஸ் லாரியில் உள்ள ராமநாதனைப் பார்த்தபடியே இருந்தான்.

ராமநாதனுக்கு மனத்தில் பகீர் என்றது. உதடுகள் பீதியோடு, “ரிடையர்ட் மேஜர் மாயநாதன்!” என்று முணுமுணுத்தான்.

மேஜர் புன்னகை புரிந்தபடி, கூட்டத்தில் ஆனந்தி இருக்கும் இடத்தை நோக்கினார். ஆனந்தியைக் கண்டவுடன் அவர் முகத்தில் புள்னகை மறைந்தது. அதற்குப் பதிலாக ஆத்திரமும் குரோதமும் பிறந்தன. தற்செயலாக ஆனந்தியும் மேஜரைப் பார்த்தாள். பிறகு ஒரே ஓட்டமாகக் கோர்ட்டை விட்டு வெளியேறினாள். மேஜர் மாயநாதனும் வேகமாக அவளைப் பின் தொடர்ந்தார். ஆனந்தி என்று கூறப்பட்ட பெண், அதிவேகமாக ஓடியபடியே பின்னால் திரும்பிப் பார்த்தாள். மேஜர் தன்னைத் தொடருவதை உணர்ந்து திகைப்போடு எப்பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து ஒரு வினாடி நின்றாள். எதிரே எதிரே ஒரு பஸ் வந்ததோ இல்லையோ, ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். மேஜர் வேகமாக பஸ்ஸை நோக்கி விரைந்து வந்தார். அதற்குள் அந்தப் பஸ் நகர்ந்துவிட்டது.

பஸ்ஸிலிருந்த ஆனந்தி அமைதியோடு பெருமூச்சு விட்டாள்.

மேஜர் கூவினார். “டாக்ஸி… டாக்ஸி!”

சாலையில் வந்த டாக்ஸிக்காரனுடைய காதுகளில் அவர் அழைப்பு விழவில்லை. அவன் ஏதோ சிந்தனையில் இருந்தபடி சென்று கொண்டிருந்தான். மேஜர், தன்னுடைய ஆத்திரத்தைத் தன் பைப்பைக் கடித்துத் தீர்த்துக் கொண்டார்.


போலீசாரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த ராமநாதனுக்கு, மனத்திலிருந்து ஒரு சுமை இறங்கினாற் போலிருந்தது.

கடந்த சில மாதங்களாகவே ஒன்றன்பின் ஒன்றாக அவனுக்குத் திலீபன் விஷயமாகப் புதுப் புதுச் சிக்கல்கள், வேதனைகள் தோன்றி வந்தன. அவற்றைச் சமாளிக்கும் பொறுப்பு அவன் மீது சுமத்தப்பட்டது. அவன் கனவிலும் நினைக்காத கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேர்ந்துவிட்டது. எதற்கெல்லாம் பயந்தானோ அவையெல்லாம் நடந்து விட்டன. இனி அவனுக்குப் புதிதாக ஏற்படக்கூடிய அவமானமோ தீங்கோ ஏதுமில்லை. பொதுவாக மனிதன் பயப்படும் விஷயங்கள் நிகழ்ச்சிகள் எல்லாமே, நடவாத வரையில்தான் பயத்தைக் கொடுக்கின்றன. நிகழ்ந்து விட்டால் பயம் மறைந்து விடுகிறது. துணிவும் நிம்மதியும் தான் மிஞ்சுகின்றன. பணக்காரனுக்கு, நாம் ஏழையாகி விடுவோமோ என்று எண்ண எண்ணத்தான் வேதனை. பணத்தை இழந்துவிட்டபின் அவன் மனம் பணமின்மையும் ஏழ்மையையும் ஏற்றுக்கொள்கிறது. சாவைப் பற்றிய பயமும் அவ்வாரே. சாவு வந்தபின் எந்த வேதனையும் இருக்கப்போவதில்லை. இந்த உண்மையைத்தான் இரண்டாயிரத்து ஐநூறு வருஷம்களுக்கு முன் வாழ்ந்த சாக்ரடீஸ் மிக அழகான முறையில் சொன்னார், “சாவைக் கண்டு பயப்படுவதில் அர்த்தமே இல்லை. ஏனென்றால் நாமிருக்கும்போது மரணம் இருப்பதில்லை. மரணம் சம்பவித்தபின் நாம் இருப்பதில்லை. எதற்காக ஒருவன் பயப்பட வேண்டும்?” என்றார்.

ராமநாதன் நிலையும் அதே தான்.

அவன் பயந்தவையெல்லாம் நிகழ்ந்து விட்டன. எல்லாம் துறந்தவனின் ஒரு நிம்மதி அவனை இப்போது வந்தடைந்தது. ஓலமிடும் எண்ணங்கள் ஒடுங்கி, ஆசைகளின் சாம்பலின்மீது ராமநாதன் உள்ளம் மெத்தென்று படுத்தது. கோர்ட்டுக்கு வெளியே அவன் சந்தித்த பெண்ணிடமிருந்து, திலீபனைப் பற்றிய உண்மையைச் சொல்ல அனுமதி கிடைத்துவிட்டது. அந்த ஆனந்தி, மேஜர் மாயநாதனிடமிருந்து எப்படித் தப்பித் தனியே கோர்ட்டு வரை வந்தாள் என்பதை நினைக்க நினைக்க ராமநாதனுடைய ஆச்சரியம் அதிகமாயிற்று. எத்தனை நாள்தான் மாயநாதனிடமிருந்து தப்ப முடியும் என்று யோசித்தான். அப்படியே சிந்தித்தபடியே உள்ளமும் உடலும் ஒருங்கே அயர்ந்து போய்த் தூக்கத்தில் ஆழ்ந்தான். கடந்த பல மாதங்களில் அவன் நிம்மதியாகத் தூங்கியது இன்றுதான்.

மறுநாள் பொழுது விடிந்ததும், புது மனிதனாக எழுந்தான். அவனுக்கு இப்போது கலக்கமில்லை. குழப்பமில்லை. பயம் இல்லை. தெய்வம் விட்ட வழி என்று முடிவுக்கு வந்துவிட்டான். ‘நான் ஒன்றுமே செய்வதில்லை. எனையாளும் ஈசன் செயல் என்று வாழ்பவர்கள் எல்லையில்லா ஆனந்தத்தை அடைவார்கள்’ என்ற பழைய ஊறிப்போன கருத்தின் உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்தான் ராமநாதன்.

அன்று அவன் நிறைவேற்ற வேண்டியது சிறு கடமை தான். அதாவது, அவன் வாழ்வில் நிகழ்ந்தது, அவனுக்குத் தெரிந்தவை, புரிந்தவை இவைகளைக் கூட்டாமல் குறைக்காமல் உள்ளது உள்ளபடி நீதிபதியிடம் கூறிவிடுவது என்று நினைத்தான். இனிமேல் நடப்பது நடக்கட்டும் என்ற துணிவோடு கோர்ட்டுக்குப் போகத் தயாரானான். அப்போது, அவனுக்கு அவன் இதுவரை மறந்துபோன ஒன்று ஞாபகத்துக்கு வந்தது; திலீபன் எழுதி வைத்திருந்த தினக் குறிப்புப் புத்தகம்! அவன் நீதிபதியிடம் கூறப்போகும் அதிசயக் கதைக்கு அந்த டயரியும், அவனிடமிருந்த கடிதமும் தான் அத்தாட்சி. அவை பலமான சாட்சியமாக இல்லா விட்டாலும், ஏதோ ஒருவிதமான பக்கபலமாகவாவது இருக்குமென்று நினைத்தாள். தன்னுடைய அறையின் பீரோவில் பூட்டி வைத்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அந்த டயரியை உடனே நீதிபதிக்கு அனுப்பு வேண்டுமென்று நினைத்தான். சிறைக் காவலாளியை அழைத்து, இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டான். காவலாளி உடனே போலீஸ் இன்ஸ்பெக்டருக்குத் தகவல் கொடுத்து அழைத்து வருவதாகச் சொல்லிப் போனான்.


இந்த நிலையில், ராமநாதன் வீட்டிலோ, அன்று நடக்கப் போகும் விசாரணையைப் பற்றிச் சிந்தித்தபடி ராமலிங்கமும் சீதாவும் உட்கார்ந்திருந்தனர்.

வாசல் கதவு மணி கண்… கண்… வென்று ஒலித்தது. சீதா திறந்தாள்.

வாசலில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நின்றுகொண்டிருந்தார். சில தினங்களாகப் போலீஸ் வருவதும் போவதுமாக இருப்பது அந்த வீட்டில் சகஜமாகிவிட்டது. ராமநாதனின் அறையைப் பார்வையிட வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் நேராக மாடி அறையை நோக்கிச் சென்றார்.

கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் சொந்த வீட்டில் நுழைவது போல் அவர் நுழைந்து, தன்னிடம்.ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மாடிக்குச் செல்வதைப் பார்த்து ராமலிங்கம் மனம் புழுங்கினார். இன்ஸ்பெக்டர் மாடி அறையில் நுழைந்ததும் படுக்கை, கட்டில்கள் எல்லாவற்றையும் சோதனை செய்து பார்த்தார். அவர் எடுத்துப்போக வந்த பொருள் கிடைக்கவில்லை. புத்தக பீரோவில் தேடினார். அங்கும் கிடைக்கவில்லை. மனத்திருப்தி ஏற்படாமல் ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அவர் தேடி வந்தது அகப்படவே இல்லை.

பிறகு அந்த அறையில் இருந்த பூட்டிய பிரோவைப் பார்த்தார். இந்தப் பிரோவில்தான் அது இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார். அவருடன் எடுத்து வந்திருந்த சாவிக் கொத்திலிருந்து ஒவ்வொரு சாவியாக எடுத்துப் போட்டு அந்தப் பீரோவைத் திறக்க முயன்றார். சாவிகள் சேரவில்லை.

மாடி அறையில் இன்ஸ்பெக்டர் தேடிக் கொண்டிருந்த போதே கீழ் ஹாலில் கதவு மணி தொடர்ந்து கண் கண் வென்று மறுபடியும் ஒலித்தது. விருப்பமில்லாமல் வெறுப்போடு சீதா எழுந்துபோய்க் கதவைத் திறந்தாள்.

கதவுக்கப்பால் அவள் பார்த்த காட்சி அவளுக்கு ஓரளவு கோபத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. அங்கு இன்னொரு இன்ஸ்பெக்டரும், மூன்று கான்ஸ்டபிள்களும் நின்று கொண்டிருந்தனர்!

இன்ஸ்பெக்டர் மரியாதையோடு, “அம்மா, தொந்தரவுக்கு மன்னிக்கவும். ராமநாதனின் அறையிலிருந்து ஒரு முக்கியமான பொருளை எடுத்துப் போக வந்திருக்கிறோம்” என்றார்.

சீதா மனம் கசந்தபடி, “சற்று முன்தான் இன்னொரு இன்ஸ்பெக்டர் அந்த அறையைப் பார்வையிட வேண்டு மென்று போனார், நீங்களும் போய் அவருக்கு உதவி செய்யுங்கள்” என்று குத்தலாகக் கூறினாள்.

இன்ஸ்பெக்டர் திகைப்படைந்தார். “இன்னொரு இன்ஸ்பெக்டரா? இருக்க முடியாதே! சில வினாடிகளுக்கு முன்தானே ராமநாதன் என்னிடம் அவர் பிரோவிலுள்ள ஒரு டயரியைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். இந்த ஆள் போலியாக இருக்கும்” என்றார்.

கீழே ஹாலில் நடக்கும் சம்பாஷணையைச் கவனித்தபடி மேல் படியில் நின்று கொண்டிருந்த போலி இன்ஸ்பெக்டரின் முகம் கலவரமடைந்தது.

ரிடயர்ட் மேஜர் மாயநாதன், அவரும் திலீபனின் டயரியைத்தான் தேடி வத்திருந்தார். அந்த டயரியில் தன்னைப் பற்றி என்ன திடுக்கிடும்படியான தகவல்கள் இருக்குமோ என்று பயந்துபோய் இருந்தார். அந்த டயரி கிடைக்காத நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டரே அந்த டயரியைத் தேடி வரும்போது தாம் மாடி அறையில் போலீஸ் உடையில் இருப்பது பெரிய ஆபத்தாக முடியும் என்று நினைத்தவுடன், அவருக்கு எப்படியாவது அந்த அறையை வீட்டுத் தப்பிப் போக வேண்டுமென்ற எண்ணமே எழுந்தது.

மாயநாதன் அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டார். குளியல் அறைக்கு ஓடினார்.

இதற்குள் உண்மைப் போலீஸ் அதிகாரி மாடி ஏறிவந்து, வெளிப்புறமிருந்து கதவைத் தட்டியபடி இருந்தார். உட்புறம் தாளிடப்பட்டிருக்கும் கதவை எட்டி உதைத்துத் திறந்து அறைக்குள் நுழைந்தார்.

கான்ஸ்டபிள்கள் மாடி அறைகள் எல்லாம சென்று தேடினார்கள். மாடியில் எங்கும் யாரும் மறைந்திருக்க வில்லை. குளியல் அறைக்கதவு விரியத் திறந்து கிடந்தது. அதன் வழியே வேறு ஒரு படிக்கட்டு தெருவை நோக்கி இறங்கியது. அந்த வழியேதான் வேஷதாரி சென்றிருக்க வேண்டுமென்று நிர்ணயித்தார் அசல் இன்ஸ்பெக்டர். தன்னுடன் வந்த ஒரு கான்ஸ்டபிளை மட்டும் போலி இன்ஸ்பெக்டரைத் தேடிப் போக அனுப்பிவிட்டு, மறுபடியும் பீரோ இருக்கும் அறைக்கு வந்தார்.


நீதிபதி, அவருடைய பெஞ்ச் கிளார்க், இருதரப்பு வக்கீல்கள், நீதிபதி மணிவாசகம் பிள்ளையின் சேம்பரில் கூடி இருந்தார்கள். ராமநாதன் போலீசாரால் அழைத்து வரப்பட்டான். திலீபனுடைய டயரியை நிதிபதியின் முன் பதிவு செய்தார்கள். இன்ஸ்பெக்டர் ராமநாதனிடமிருந்த கடிதத்தையும் பதிவு செய்தனர். இருதரப்பு வக்கீல்களும் அந்த டயரி, கடிதம் இரண்டையும் சாட்சியமாக எடுத்துக் கொள்ள மறுப்புத் தெரிவிக்கவில்லை. சில வினாடிகளுக்கு அந்தச் சேம்பரில் அமைதி நிலவியது. பிறகு நிதிபதி அவர்கள், “மிஸ்டர் ராமநாதன்! நீங்கள் கூறவேண்டியதைச் சொல்லலாம்” என்றார்.

ராமநாதன் லேசாகச் சிரித்தபடி ஆரம்பித்தான்:

“நான் கூறப்போவது ஒரு பெரிய கதை. அதில் அடங்கிய சில விஷயங்கள் நான் நேரில் பாராதவை. திலீபன் டயரியிலிருந்து மட்டும் தெரிந்து கொண்டவை. சில நிகழ்ச்சிகள் நானே நேரில் பங்கெடுத்துக் கொண்டவை. நான் கூறப் போவது எல்லாமே கேஸுக்குப் பொருந்தும் என்று சொல்ல முடியாது. கொங்கண நாயனார் அருளிச் செய்த மாலைக் கும்மியின் வரிகளைப் போல், ‘உற்றது சொன்னால் அற்றது பொருந்தும். அற்றது பொருந்தும் மற்றது சொன்னால்’ என்ற நிலையில் இருக்கிறது என் விஷயம். ஆகையால் நான் எல்லாவற்றையும் கூறப் போகிறேன். உங்களைப் போல் நானும் பகுத்தறிவுள்ளவன்தான். விஞ்ஞான அடிப்படையில் படித்து வளர்ந்தவன்தான். சரியாக நிரூபிக்கப்படாத தத்துவங்களை, கருத்துக்களை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறவன் தான். மாயம், மந்திரம், தந்திரம் இவற்றை அறிவிலிகள், அயோக்கியர்களின் பிழைக்கும் வழி என்று நினைத்து வந்தவன்தான். அமெரிக்க, ஐரோப்பிய நாகரிகத்தின் போஷணையில் வந்த கருத்துக்களை நம்பி வந்தவன். ஆனால் என் வாழ்வில் நடந்த அதிசயங்களை, திலீபனுக்கு நேர்ந்த அனுபவங்களை நினைக்கும் போது விஞ்ஞானம் கற்றது கைம்மண்ணளவுதான் என்று தோன்றுகிறது. நாம் மூட நம்பிக்கை, பாட்டி கதை என்றெல்லாம் ஒதுக்கித் தள்ளும்படியான விஷயங்களில், அடங்கியிருக்கும் உண்மை கடலளவு தெளிவாகிறது. கதை கூறுவது நானாக இருந்தாலும், கூறப் போவது என்னவோ, என்னுடைய சரித்திரமல்ல. அது திலீபனுடைய சரித்திரமே. திலீபனைச் சுற்றி நிகழ்ந்த நாடகத்தில் நான் ஓர் உப பாத்திரம்தான். நான் கூறுவதெல்லாம் பிதற்றல் அல்ல. சித்த சுவாதீனம் இல்லாதவன் மனத்தில் எழுந்த வெறும் கனவுகள் அல்ல. எல்லாம். உண்மை. அதை டயரியும் இந்தக் கடிதமும் நிரூபிக்கும்” என்று கூறிவிட்டு நின்றான்.

நீதிபதி. “எதுவாயிருந்தாலும் சரி! எவ்வளவு நேரமானாலும் சரி! உள்ளதை உள்ளபடிச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லுவதில் எதை ஏற்றுக் கொள்வது, எதை நிராகரிப்பது என்பது எங்கள் பொறுப்பு” என்றார்.

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *