நான் TV நடிகனான கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 10,383 
 

நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின ‘சோகக் ‘ கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக எங்கிட யாழ்ப்பாணி யளுக்கு ஒரு நல்ல குணம் -ஆரையும் லேசில் நம்பாயினம். சந்தேகக் கண் ணோடதான் எல்லாரையும் பாம்பினம். எந்தப் புத்தில எந்தப் பாம்பிருக் குமோ ஆருக்குத் தெரியும்? அதால இலகுவா ஆரிட்டையும் பிடி குடுத்துப் பேசாயினம். கழுவிய மீனில நழுவிற மீனா ஓடித் தப்பி, வாழ்க்கைப் போராட்டத்தில வெற்றிக்கொடி நாட்டிற சூட்சுமம் தெரிஞ்சவை. இந்த நாச மறுப்புகள் ஒண்டும் தெரியாத ஒரு மொக்கு வாத்தி நான்.

இத்துப் போன பழைய ‘ஐஸீ ‘யைப் பக்குவமாப் பொக்கற்றுக்க பொதிஞ்சு கொண்டு, பத்திரமா இருக்குதோ எண்டு அடிக்கடி தடவிப் பாத்துத் திருப்திப் பட்டுக் கொண்டு, எந்தச் ‘செக்’ பொயின்ற்ரில எந்தப் படுபாவியிட்டயாவது மாட்டப்பட்டு விடுவமோ எண்டு முழிசிக் கொண்டு, கொழும்பு நகர வீதியளில வலு அவதானமாக வலம் வந்து, குடியிருக்கிற வாடகைப் பொந்தில பெரும் பாலான நேரமும் ஒளிஞ்சு கொண்டு, வாழ்க்கையை ஓட்டுற சாதாரண ‘ஜந்து’க்களில நானும் அடக்கம்.

அப்பப்ப வானொலிகளில போடுற சில நாடகங்களில நடிச்சுப் போட்டு வந்து, மனிசியின்ர ‘பேர்மிஷன்’னோட கொஞ்சம் தண்ணியடிச்சுப் போட்டு, பெரிய ‘சிவாசி’ கணேசன் ஆகீற்றதான நினைப்பில அலம்பிறதை விடப் பெரிய பிழை ஒண்டும் செய்யாத அப்பிராணியான ஆள் நான்.

அப்படியாக அலுப்புத் தீரக் கொஞ்சம் ‘அடிச்சுப்’ போட்டிருந்த ஒரு நல்ல[?] நாளில, எங்கிட TV யில வந்த ஒரு விளம்பரம் என்ர கண்ணில டபிளாப் [Double ] பட்டுத் துலைச்சுது!

பிரபலமான தமிழக நடிகர்களுடன் நடிக்க நமது நாட்டு நகைச்சுவை நடிகர் களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறதாக அது விளம்பிச்சுது. சிவாஜி கணேசனா என்னைப்பற்றி நினைச்சிருந்த நான் சந்திரபாபுவா மாத்திக் கொண்டிட்டன்.

”பென்சன்’ எடுத்தாப் பிறகு பேசாம ஈஸிசேரில [அப்பிடி ஒண்டு வீட்டில இல்லாட்டிலும்] சாஞ்சிருக்கிறத விட்டிட்டு வெளிக்கிட்டிட்டேர்’ – எண்ட மனிசி யின்ர நக்கலையும் புறந் தள்ளிப் போட்டு, வானொலி – மேடை நாடக அனுபவங்கள் எண்டு கொட்டப் பெட்டீக்க கொட்டிக் கிடந்த எல்லாத்தை யும் தூசு தட்டி, ‘ரச்சிங்’கா ஒரு சுயபுராணத்தை அவிட்டு விட்டு அனுப்பி வச்ச விண்ணப்பத்தை அறுவான்கள் ஏற்றுக்கொண்டு ‘நேர்முகத் தேர்வுக்கு வந்து துலை’ எண்டு அழைச்சது உலக மகா அதிசயம்தான்!

சொன்ன நாளில சொன்ன நேரத்துக்குக் கொஞ்சம் முன்னாலையே போய்ச் சேந்திட்டன். [வாத்தியா இருந்த அனுபவத்துல வெள்ளைக்காரன்ர அந்தப் Punctuality கொஞ்சம் படிஞ்சு போயிருந்துது.] பத்திருபது வரிசங்களுக்கு முன்னால தமிழ்த் திரையுலகில பிரபலமாயிருந்த, மூவேந்தரில ஒருவரின்ர பேரை வச்சிருந்த] ஒரு நகைச்சுவை நடிகர் தேர்வு செய்ய வந்திருந்தேர். அவரைக் ‘காபந்து’ பண்ணுவதாக ‘பாவ்லா’ பண்ணிற ‘எங்கிட ஊர்க்காரரின் ‘காக்கா’ பிடிப்புகள் ஒரு பக்கம். கொஞ்சக் காலமா’ அது’வின்ர வாலைப் பிடிச்சுத் தொங்கிக் கொண்டு திரிஞ்ச ஒருத்தர் மற்றப் பக்கம். [ துரை எப்பிடித் தப்பி இஞ்ச திரும்பவும் வந்து சேந்தேர் எண்டு ஆச்சரியப்பட்டன்.]

நகைச்சுவை நடிகர் தன்ர முழிக்கண்ணை மறைக்கவோ என்னவோ கூலிங் கிளாஸ்’ ஒண்டைப் போட்டுக் கொண்டு நேர்முகத்தேர்வை நடத்தினேர். கட்டபொம்மன் வசனத்தில அவிட்டு விடுறதோ, மனோகரனா மாறுறதோ அல்லது சொந்தக் சரக்கில தாளிச்சுக் கொட்டுறதோ எண்டு எனக்குள்ள ஒரு குழப்பம்.

போன கையோட நடிகர் என்ர வயசைக் கேட்டேர். நான் சொன்னன். ஆள் ஆடிப்போனேர். [உண்ணாணை நான் தலைக்கு ‘டை’ ஒண்டும் அடிக்கி றேல்லை!] என்ரை வயசோட ஒப்பிட்டால் ஆள் சின்னப் பெடியன். அதால என்னை நடியும் எண்டு சொல்லிப் பார்க்க அவருக்குக் கொஞ்சம் சங்கடமாய் போட்டுது.

நடிச்சுக் காட்டத் தேவையில்லை எண்டு அவர் சொல்லியும் நான் விட இல்லை.’பாரப்பா பழனியப்பா. என்ரை நடிப்பைப் பாரப்பா’ எண்டு அவரைப் பயப்பிடுத்தி, ‘போதும் போதும்’ எண்டு அவர் சொல்லுற அளவுக்கு ‘கலரை’க் காட்டிக் கலக்கீற்றன்.

என்ன சொல்லி என்ன [துர்] அதிர்ஷ்டவசமா அந்தத் தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்க என்னையும் ‘செலெக்ட்’ பண்ணிப் போட்டினம்.

புளுகமெண்டால் புளுகம். அப்பிடியொரு புளுகம் எனக்கு. பிறகென்ன நூற்றுக் கணக்கான நம் நாட்டுக் கலைஞர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கெண்டால் சும்மாவே! [நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி வந்தவை எண்ணி அம்பதுக்க எண்ட விசயத்த நான் சொல்லக் கூடாது. அது பரிசுகேடு.]

நாடக டிறெக்டரும் [நெறியாளர் எண்டு நல்ல தமிழிலை சொன்னால் அது கன பேருக்கு விளங்காது.] தமிழ் நாட்டில இருந்து வந்திருந்த நடிக நடிகை யரும் வெள்ளவத்தையில் ஒரு ஹோட்டல்ல தான் தங்கினவை. ‘ஷூட்டிங் ‘க்கு முதல் நாள் தன்னை வந்து சந்திக்கச் சொல்லி டிறெக்ட்டர் கோல் எடுத்துச் சொன்னேர். நானும் போனன்.

அவரைக் கண்டு கதைச்சுக் கொண்டிருக்கேக்கை தான் அவையள் எண்ணெ யில்லாமல் பணியாரம் சுட வெளிக்கிட்டிருக்கிற விஷயம் எனக்கு விளங் கிச்சுது. அதென்னெண்டால், மற்ற நாள் ஷூட்டிங்க்குத் தோதான வீடொண்டும் அவயளுக்கு இன்னும் அகப்படேல்லையாம். தேடிக் கொண்டிருக்கினமாம்.

ஏதோ தேடுகினம். தேடிக் கொள்ளட்டும் எண்டு என்ரை வாயை வச்சுக் கொண்டு நானும் சும்மா இருந்திருக்கலாம். கூடப் பிறந்த புளுகுக் குணம் இருக்க விட்டால் எல்லே.

”நான் வாடகைக்கு குடியிருக்கிற வீடு புதுசாக் கட்டினது. பெரிசெண்டு சொல்ல ஏலாது. எண்டாலும் சில நேரம் உங்களுக்குத் சரிப்பட்டாலும் சரிப் படலாம். எதுக்கும் வீட்டு ‘ஓனரை’க் கேட்டுச் சொல்லிறனே” எண்டு சொல்லித் துலைச்சுப் போட்டன்.

தேடிப்போன மூலிகை காலில பட்டால் விட்டிட்டு ஓட அவரொண்டும் மண்டையில மசாலா இல்லாத வானா மூனா இல்லையே.’கப்’ பெண்டு பிடிச்சுக் கொண்டிட்டேர். பிறகென்ன? வந்தார்; கண்டார்; வென்றார் எண்ட சீசரின்ர கதைதான். வீட்டுக்காரருக்கு தங்கிட வீடு டிவியில வரப்போகு தெண்டதில புளுகம்தான். தாங்கள் தலையைக் காட்டாட்டிக்கும் தங்கிட வீடாவது தலையை மாத்திரமில்லை முழு உடம்பையும் சுத்திச் சுத்திக் காட்டப் போகுதே எண்ட சந்தோசம் அவையளுக்கு.

சூட்டிங்குக்கு வீட்டை விட்டால் என்ன பாடுபட வேண்டி வரும் எண்ட அனுபவம் அவையளுக்கு அப்ப இருக்கேல்லை. ஏன் எனக்கும்தான்.

எங்கிட வீட்டிலையே சூட்டிங் எண்டவுடன மனிசி தங்கச்சி பிள்ளையளுக் கெல்லாம் நிலத்தில கால் படேல்லை. அறிஞ்சவை தெரிஞ்சதை எல்லாருக்கும் ‘கோல்’ எடுத்தே களைச்சுப் போச்சினம்.

அடுத்த நாள் சூட்டிங் துவங்கிச்சுது. விடிய விடிய லொறி ஒண்டிலை ‘ஜென றேற்றர்’ வந்திறங்கிச்சுது. ரோட்டில, அண்டை அயல்ல இருந்த சிங்களச் சனமெல்லாம் கூடீற்றுது. என்ன விஷயம் ஏது விஷயம் எண்டு விளங்காமல், இது ‘வேற ஏதோ விஷயம்’ ஆக்குமெண்டு ஊகிச்சு Police க்கு அறிவிக்க வேணும்’ எண்டு கசமுசப்படத் துவங்கீற்றுது. வேற ஒண்டுமில்லை. எங்கிட வீட்டுக்காரர் யாழ்ப்பாணத்து ஆள். கிட்டடீல தான் அந்த வீட்டை வாங்கியிருந்தவர்.

கொஞ்ச நேரத்தால [முருகனின்ர பேரைக் கொண்ட] பிரபல நகைச்சுவை நடிகரும் ஆச்சி நடிகையும் காரில வந்து இறங்கிச்சினம். அவையளைக் கண்டோடன தான் ‘சீனா’ப்புள்ளியளுக்கு விஷயம் வெளிச்சுது. நல்ல வேளையா டிவியில அதுகள் தமிழ்ப் படங்களையும் பாத்திருக்குதுகள். வாழ்க TV! இல்லையெண்டால் போலீஸ் வந்து எங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போனாலும் போயிருக்குமெல்லே?

அதுக்குப் பிறகு கொஞ்ச நாளைக்கு எங்கிட வீடு World Trade Centre மாதிரித் தான். அவ்வளவு ‘பேமஸ்’. ‘இந்தியாக்காரரை ஹோட்டல்ல கொண்டு போய் விட்டதோட எங்கிட வேலை சரி’, எண்டிருந்த ரீவீக்காரர் இருந்தாப் போல வந்திறங்கிச்சினம். வீட்டுப் பூசையறையில பூசையைத் துவக்கித் தங்கிட முகம் விழுமாப் போல TV கமெராவால படம் எல்லாம் எடுத்தாப் பிறகு ‘ரற்ரா ‘ காட்டீற்று ‘துரை’மார் கழண்டிட்டினம்.

போகப் போகத்தான் விளங்கிச்சுது – சூட்டிங்குக்கு வீட்டை விட்டால் என்ன ஆகுமெண்டு. காலுக்கையும் கையுக்கையும் பாம்புகள் போல வயர் ஓட. Focus Light றுகளை அங்கயும் இங்கயுமா தூக்கிக் கொண்டு நாலைஞ்சு பேர் அலைய, ஊசாடவழியில்லாமல் வீட்டுக்காரர் எல்லாரும் மூலைக்க பதுங்க வேண்டியதாப் போச்சுது.

சூட்டிங் தொடங்கினதும் வேற என்ன ஆச்சுதெண்டு தெரிய வேணுமெண் டால் வாருங்கோ. நீங்களும் ஆரும் விழுந்த கதையெண்டால் விடாமல் வாசிப்பியள். எங்கிட வீட்டில சூட்டிங் துவங்கினாய் பிறகுதான் தெரிஞ்சுது நாடகத்தில இங்கத்தே ஆக்கள் நாங்கள் நாலு பேர்தான் எண்டது. சிங்கள ரெலி டிராமாக்களில நடிச்ச முகவெட்டான தமிழ்ப் பிள்ளை ஒண்டு, கொஞ் சம் சத்துக் குறைஞ்ச திருகோணமலைப் பிள்ளை ஒண்டு, சண்டைப்பட அடியாள் தரவழிப் பெடியன் ஒண்டு, மற்றது நான்.என்ரை முகலட்சணத்தை நானே சொல்லி Gas எழுப்பக் கூடாதெண்டதால அதை விட்டிடுவம்.

நாடகக் கதைப்படி ஆச்சி யாழ்ப்பாணத்துப் பொம்பிளையாம். அவ நல்ல நடிகைதான். எத்தனையோ படங்களில திறமா நடிச்சு ‘பொம்பிளை சிவாஜி’ எண்டு சொல்லுற அளவுக்குப் பேரெடுத்தவதான்.

ஆனால் அவவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் வரமாட்டன் எண்டிட்டுது. யாழ்ப்பாணத்தவையளோட கதைச்சுப்புழங்கி ஊசாடித் திரிஞ்சவைக்குத் தான் அது வரும். எந்தப் பிரதேசத் தமிழும் அப்பிடித்தான். எடுத்த உடன வந்திடாது. பழக்கத்தில தான் வரவேணும்.

யாழ்ப்பாணத் தமிழை அவவுக்குச் சொல்லிக் குடுக்கச் சொல்லி டிறெக்டர் என்னிட்டத்தான் ஸ்கிரிப்ட்டைத் தந்தவர். வாத்தியாரா இருந்ததால என்னா லயும் அது ஏலுமெண்டு நினைச்சன். ஆனால் நான் நினைச்ச மாதிரி அது லேசான வேலையா இருக்கேல்ல. ராகம் போடுமாப்போல கொஞ்சம் இழுத் துக் கதைச்சால், அது யாழ்ப்பாணத் தமிழாகி விடும் எண்டு நினைச்சுக் கொண்டு, அந்த மாதிரியே கதைச்சு ஆச்சி யாழ்ப்பாணத் தமிழை ஒரு வழி பண்ணுறன் எண்டு நிண்டா. உது சரிப்படாதெண்டு நான் அந்த வேலையைக் கை விட்டிட்டன்.

திருகோணமலைப் பிள்ளைக்கு எப்பிடியாவது இதுக்குள்ள தலையை ஓட் டீட வேணுமெண்டொரு தலை புழுத்த தவனம். நான் கைவிட்ட பிரதியை அப்பி எடுத்துக் கொண்டு வாசிச்சுக் காட்டிற வேலைய தானாத் தன்ர தலையில போட்டுக் கொண்டிட்டுது. அதால ஒரு மாதிரி ‘உதவி டைரக்டர்’ எண்ட பேரையும் எடுத்திட்டுது. நல்ல வேளை நான் தப்பினன். ‘லைட்’வெக்கை யுக்க, Camera கோணத்துக்க விழாத மாதிரி எங்கயேனும் மூலையுக்க குந்தி இருந்து கொண்டு, தொண்டைத் தண்ணி வத்தக் கத்திறதெண்டால் முற்பிறப்பில தவக்கையாத்தான் பிறந்திருக்க வேணும்.

வீட்டுக்கையே தேவையான சாமான் சக்கட்டுகள் எல்லாம் இருந்ததால Production Manager க்கு வேலை மிச்சம். [அப்பிடி ஒராள் இருந்த மாதிரியும் தெரியேல்லை.] சீனுக்குத் தேவையான பால்,பழம், ரீ, பலகாரம் பட்சணங்கள் எண்டாலும் சரி, தங்கிட தாகத்துக்குத் தண்ணி வென்னி வேணுமெண்டாலும் சரி எல்லாத்தையும் வீட்டுக்காரரிட்டைத் தான் கேட்டபடி. வீட்டுக்கு வந்த விருந்தாளியளைக் கவனிக்குமாப் போல, வீட்டுக்காறரிட மகள் நிருவும் பாவம் ஓடியோடி அவையள் கேட்டதெல்லாம் குடுத்தபடி. இந்தக் கூத்துக் குள்ள வீட்டுக்காரர் தங்கிட சமையலையும் கவனிக்கிறதெண்டால் அது பெரும்பாடுதான்.

நீங்கள் ஒண்டும் சமைக்கத் தேவையில்லை உங்களுக்கும் சேர்த்து நாங்களே சாப்பாட்டை ‘ஓடர்’ பண்ணி எடுத்துத் தருவோம்” எண்டு டிரெக்டர் முதல் நாள் சொன்னேர். அந்தப் பெருந்தன்மையைக் கண்டு நானும் புல்லரிச்சுப் போனன்.

சொன்ன மாதிரி முதல் நாள் வீட்டுக்காரருக்கும் சேர்த்துக் கடைச் சாப்பாடு வந்ததுதான். ஆனால் அண்டைக்கு அது கனக்க மிஞ்சிப் போச்சுதாம் எண்டு சாட்டுச் சொல்லி அடுத்தடுத்த நாட்களில கணக்கைக் குறைச்சு மிச்சம் பிடிக்கத் துவங்கீற்றினம்.

அந்த மிச்சப் பிடிப்பு வீட்டுக்காரற்ற தலையில தான் விடிஞ்சுது. ‘யூனிற்’ காறர் உள்வீட்டுக்காறரா மாறி மீன்கறி, மரக்கறி எண்டு வீட்டுக்காரற்ற சமையலையும் உரிமையோட கேட்டு வாங்கிச் சாப்பிடத் துவங்கீற்றினம். எண்டாலும் வீட்டுக்காறர் அதைப்பற்றிப் ‘பறுவா’ பண்ணேல்லை. கடைசி நாள் எல்லாருக்கும் விருந்தும் வச்சு எங்கிட ஊர்க்காறரின்ர விருந்தோம்பல் பண்பையும் அவையள் காட்டாமல் விடேல்லை.

வீட்டுக்காறர் ஏதோ வீட்டுத் திருத்த வேலைக்காக எண்டு முத்தத்தில கொஞ்சம் சல்லி குவிச்சு வச்சிருந்தவர். வீட்டைப் பாக்க எண்டு முதல் நாள் வந்த டிரெக்டர் அதைக் கொஞ்சம் அப்புறப் படுத்தினால் நல்லதெண்டு சொல்லிப் போட்டேர். பின்ன வீட்டுக்காரரும் ராராவா ஆளைப் புடிச்சு அதுக்கெண்டு தன்ர கையால கொஞ்சம் சிலவழிச்சேர்.

வீட்டுக்காறர் தங்கிட வீட்டு Gate க்கு ஒரு பெரிய ஆமைப் பூட்டுப் போட்டிருந்தவர். ‘யூனிற்’காரற்ற வான் வரப் போக எண்டு அதை மூடாமல் திறந்தபடி விட்டு வைக்க, ஷூட்டிங் பாக்க எண்ட சாட்டிலை வந்து போன ‘குடுக்காரன்’ ஆரோ அதை ‘அடிச்சுக்க கொண்டு’ போட்டான். அதின்ர விலை ஒரு ஆயிரம் ரூபா மட்டில வரும் எண்டு நினைக்கிறன். அதை விட வேற என்னென்ன துலைஞ்சுதோ தெரியாது.

நடிக்கிறவையளின்ர பாத்திரம் என்ன மாதிரி இருந்தாலும் எல்லாரும் கசங் கல் பிசங்கல் இல்லாத புத்தம் புது உடுப்பாத்தான் போடுவினம். அவைய ளின்ர உடுப்புகளை அப்பப்ப Iron பண்ணிக் குடுக்கவெண்டு ஒரு பெட்டை. – அதுக்கு நாளுக்கு 500/- சம்பளமாம். அது பாவம் பெட்டை. சிக்குன்குனியாவோடவந்து நிக்குது – நாள் முழுக்க Iron பண்ணினபடி. அதுக்காகப் பரிதாபப்படுறதா? பயப்பிடுறதா? ஓடிற கரண்ட் மீற்றரப் பாத்துக் கதி கலங்கிறதா? ஒண்டுமா விளங்கேல்லை!

போட்டோ ஸ்டூடியோவில ஒரு லைற்ரப் போட்டாலே வேத்துக் கொட்டும். Indoor Shooting எண்டால் சொல்ல வேணுமே? அந்த லைற் வெக்கேக்க காத்தில்லாமல் இருக்கேலுமே? வீட்டு Fans மூண்டு நாலு ஓயாமல் சுழண்டபடி. அதுக்கான கரண்ட் காசு அது இதெண்டு பாத்தால் பில் எந்தளவு ஏறியிருக்கும் எண்டு விளங்கும்தானே?

ஒரு எபிசோட்டுக்கு 75000/-மட்டில செலவழிக்கிறதாப் புளுகினவை கடைசியில போகேக்க 3500 /- ரூபாக் காசை வீட்டுக்காறரின்ர கையில பக்குவமாக் குடுத் துத் தங்கிட தாராள மனப்பான்மையைக் காட்டிப் போட்டு மெதுவாக் கழண் டிட்டினம். பச்சைத் தண்ணீல பலகாரம் சுடுறது எப்பிடி எண்டு தெரியாதவை அவேட்டக் கேட்டுத் தெரிஞ்சு கொள்ளலாம்.

வீட்டுக்கார மனிசன் பாவம். town ஆக்களின்ர சுத்து மாத்துக்கள் தெரியாத ஒரு வெங்கிளாந்தி. வீட்டை நாள் வாடகைக்கு விடுறவையே ஐயாயிரம் பத்தா யிரம் எண்டு வாங்கேக்க அஞ்சு நாள் சூட்டிங்க்கு எவ்வளவு கறந்திருக்கலாம். மனிசன் இப்பிடியெல்லாம் கவலைப்பட்டதாத் தெரியேல்லை. நான் தான் மனம் பொறுக்காமல் ஆரிட்டை யெண்டாலும் சொல்லி அழ வேணுமெண்டிட்டு உங்களிட்டப் பொரிஞ்சு தள்ளிறன்.

எங்கயோ தொடக்கி வேற என்னமோ எல்லாம் ஆலாபரணம் பண்ணிக் கொண்டு எங்கயோ போய்ட்டன்.மனுசனுக்கு அறளை பேந்திட்டுதாக்குமெண்டு சொல்லிக் கோவியாதையுங்கோ.இந்தா வாறன் விட்ட இடத்துக்கு. நாடகத்தில எனக்கு நகைச்சுவை நடிகரின்ர யாழ்ப்பாணத்து நண்பராத்தான் வேஷம். பின்ன, கசங்கல் பிசங்கல் தெரியக் கூடாதெண்டு சேட்டு, வேட்டியெல்லாம் வடிவா ‘அயர்ன்’ பண்ணிப் போட்டுக் கொண்டு போய் நடிச்சன். ரெண்டு நாள்தான் எனக்கு சூட்டிங்! மற்றவையளுக்கும் – எங்கிட நாட்டு நடிகையர் திலகங்களுக்கும் அப்பிடித்தான். கனக்க இல்லை. எங்களுக்கெல்லாம் தலை தெரிஞ்சால் காணும் தானே? உந்தளவு கிடைச்சதே பெரிய விஷயம் எண்டுவியள் ஓமோம். ஆனால் கிடைக்காத சின்ன விஷயம் ஒண்டு. நான் நடிச்சுக் குடுத்ததுக்காக சன்மானமோ சம்பளமோ எண்டு ஒரு சதம் தன்னும் கண்ணில காட்டேல்லை. அதை நானும் கேக்கேல்லை; அவயளும் தரேல்லை.Tittle லில என்ர பேருக்கு முன்னால கௌரவ நடிகர் எண்டாவது போட்டிருக்கலாம். கவுரவமா இருந்திருக்கும். ஆனால் அப்பிடிப் போட்டதாயும் தெரியேல்லை.

இதில பெரிய சோகம் என்னவெண்டால் நான் பேசின வசனங்களை எல்லாம் வேற ஒரு தமிழ் நாட்டுக்காரரைக் கொண்டு ‘டப்பிங்’ பேச வச்சது தான். ‘அதில என்ன, பெரியபெரிய நடிகர்களுக்கே அங்க ‘டப்பிங்’ குரல் தானே?’ எண்டுறியளே. ஓம் பாருங்கோ. அதெண்டால் உண்மைதான். ஆனால் நான் பேசினது ‘எங்கிட’ யாழ்ப்பாணத் தமிழில!

நல்லவேளை நான் அதுகளைப் பாக்கக் குடுத்து வைக்கேல்லை. எங்க மேல போய் அங்கையிருந்து கதைக்கிறானோ எண்டு சமுசயப்படாதீங்கோ. ”நல்ல வேளை உன்ர தமிழை நீ ரீவீல கேட்டுத் துலைக்கேல்லை. கேட்டி ருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் மேல போயிருப் பாய்” எண்டு கூட் டாளி ஒருத்தன் பொழிப்பான விமரிசனம் சொன்னவன். நான் கொஞ்ச நாள் UK க்குக் கழண்டதால தப்பினன்.

இதைப்பற்றி வெளீல தெரியாத ரகசியம் ஒண்டை இப்ப நான் சொல்லப் போறன். நீங்களும் ஆருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ. மீடியாக்காரர் அறிஞ்சால் சவட்டினாலும் சவட்டிப் போடுவான்கள். இந்தியாவில இருந்து வாற இந்த மாதிரித் தொடர் நாடகங்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 90 ஆயிரம் மட்டில Tax கட்ட வேணுமாம் எண்டு கிட்டடீல ஒரு சட்டம் வந்திருக்காம். ஆனால் இஞ்ச எடுக்கிறதுகளுக்கு அப்பிடி இல்லையாம். அதால தான் உப்புக்குச் சப்பாணியா எங்களைப்போல ‘நம் நாட்டுக் கலைஞர்களை’யும் கலந்து போட்டு இருத்தி எழுப்பிறதாம்.

ஒரு கல்லில ரெண்டு மாங்காய் அடிக்கிறதெண்டது உதைத்தான். யாவாரத் துக்கு யாவாரம்; லாபத்துக்கு லாபம். பெருமைக்குப் பெருமை. எப்பிடி எங்கிட ஆக்களின்ர விளையாட்டு? சரியப்பா.பேய்க் காட்டிறவை எல்லாம் வடிவாப் பேய்க்காட்டட்டும். உருவேறினவை வடிவா நிண்டாடட்டும். ஆனால் எங்க ளையும் ஏன் இதுக்குள்ள இழுக்கினமாம்? நாங்கள் தானே அம்பிட்டம்? ஈழத்துக் கலைஞர்களுக்கு அரிய வாய்ப்பு! எவ்வளவு பிரகாசமான எதிர் காலம்! பாத்தியளே?

– ‘இருக்கிறம்’ இதழில் 01.03.2008 இல் பிரசுரமானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *