ரத்தம் ஒரே நிறம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 8,501 
 

(இதற்கு முந்தைய ‘மதம் பிடித்தவர்கள்’ கதையைப் படித்துவிட்டு இதைப் படித்தால் புரிதல் எளிது)

“அனன்யா நீ ஒரு ஹிந்து. நம்மோட அருமை பெருமைகளைப் பற்றி உனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது…”

“எனக்கு மனிதர்களை அன்புடன் புரிந்து, தெரிந்து கொண்டால் போதும்பா… மதங்களைப்பற்றி எதுவும் தெரிய வேண்டாம்.”

“ஹிந்து மதத்தின் வீச்சைப் புரிந்து கொள்ள, அதன் தத்துவங்களையும், அதனை ஏற்ற சிந்தனையாளர்களின் சாதனைகளையும் நாம் ஓரளவாவது சிந்திக்க வேண்டும்…

நான்கு வேதங்கள்; ஓர் அற்புத தத்துவ விசாரணையை நடத்திய உபநிஷதங்கள்; வேதங்களுடன் தொக்கி நிற்கிற ஆறு வேத அங்கங்கள்; வேதங்களை விளக்குகிற மீமாம்ஸை என்கிற நூல்கள்; தர்க்க சாஸ்திரமாக விளங்குகிற ‘நியாயம்’; மன்னர் வரிசை, பக்தர்கள் வரலாறு, சிருஷ்டியின் விவரம், பூகோளம் என்று பல விஷயங்களை உள்ளடக்கிய புராணங்கள்; இது இவ்வாறு நடந்தது என்கிற பொருள் கொண்டு, தர்மத்தின் சூட்சுமத்தையும் விளக்கி நடைமுறை வாழ்க்கைக்குரிய தர்மங்களையும் விவரித்துச் சொல்கிற இதிஹாஸங்கள்; இது யுத்த சாஸ்திரம்; இது யோக நூல்; இது ஸந்யாஸ தர்மம் என்றெல்லாம் அவரவர் பார்வைக்கேற்ப காட்சி தருகிற பகவத் கீதை; அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணர்; உத்தவருக்கு அருளிய ஞான உரையாகிய உத்தவ கீதை; அதை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த புராணமாகிய ஸ்ரீமத் பாகவதம்; அடிப்படைக் கேள்விகளை ஆராய்கிற வியாசரின் பிரம்ம சூத்திரங்கள்; ராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசத்தைக் கூறுகிற யோகவாஸிஷ்டம்….

அனன்யாவின் அம்மா அங்கு வந்து, “சரி, போதும் நிறுத்துங்க, அவ ஒரு குழந்தை…” என்றாள்.

“அவளாடி குழந்தை, போயும் போயும் ஒரு முஸ்லீமை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு வந்து நிக்கறா… அவளுக்கு நம்ம ஹிந்து மதத்தைப் பத்தி என்ன தெரியும்?”

“…………………….”

“இன்று உலகம் முழுதும் அறியத் துடிக்கிற யோக வழிமுறைகளை அறிமுகம் செய்து, அதன் ஆழத்தை விளக்குகிற பதஞ்சலியின் யோக சூத்திரங்கள்; தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சஸர்கள் என்ற பிரிவுகளின் விளக்கங்கள்; பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள மனு ஸ்ம்ருதியும், மற்ற பல ஸ்ம்ருதிகளும் வகுத்துள்ள வழிமுறைகள்; ஸ்வர்க்கம், நரகம், மோட்ஷம் என்பன பற்றிய விரிவுரைகள்; ப்ரம்மச்சர்யம், இல்லறம், வனவாஸம், சன்யாஸம் என்கிற நான்கு நிலைகள்; நான்கு வர்ணங்கள் தோன்றி, பின்னர் வந்த ஜாதி பிரிவுகள்; சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோர் கண்ட மூன்று வேதாந்த வழிமுறைகள்; பல தெய்வங்கள், உருவ வழிபாடு ஆகியவற்றின் உள்ளர்த்தம்; யாகங்கள், பூஜைகள், பண்டிகைகள், உற்சவங்கள்; தாந்த்ரிகமும், விபரீதமான வழிமுறைகளைக் கூறுகிற வாமாசாரம் என்கிற சாத்திரமும்; நாயன்மார்கள், ஆழ்வார்கள், கபீர்தாஸர், துளசிதாஸர் போன்ற பக்தர்கள் காட்டிய உண்மைகள்…

நாலாயிர திவ்ய ப்ரபந்தமும், சைவ சிந்தாந்தமும் வகுத்துக் கொடுக்கிற பாதைகள்; ராஜ நீதிகளையும், மனித தர்மத்தையும் உணர்த்துகிற விதுர நீதி; தாட்சண்யமற்ற அரசு முறையைக் கூறுகிற கணிக நீதி; ஆட்சியை நடத்திச் செல்ல தேவையான அமைப்புகளையும் விவரித்து, சட்டத்தையும் கூறுகிற அர்த்த சாஸ்திரம்; மன்னர் பர்த்ருஹரியின் நீதி மற்றும் வைராக்கிய நூல்கள்; பஞ்ச தந்திர கதைகள்; சட்டம் இயற்றிய நூல்கள்; ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து தோன்றிய புத்த, ஜைன, சீக்கிய மதங்கள் போதிக்கும் தத்துவங்கள்… என்று ஹிந்து மத நூல்களிலிருந்தும், அதைச் சார்ந்தவர்களின் சிந்தனைகளிலிருந்தும் ஆன்மிகம் முதல் அரசியல் வரை பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றுடன் விஞ்ஞானத்திலும், கணிதத்திலும், மருத்துவத்திலும் கூட இவர்களுடைய பெரும் பணி பற்றிய விளக்கங்களும் இருக்கின்றன.

இவற்றில் எதைச் சொல்வது? எதை விடுவது? எதை மேலெழுந்தவாரியாகப் பார்ப்பது? எதைச் சற்று விவரமாகவே பார்ப்பது? ஹிந்து மதம் எத்தகையது? சொல்ல முடியாது. இயற்கைக்கு உவமையை யார் சொல்வது? அது போலத்தான் இதுவும். அத்தனை வடிவங்கள்; அத்தனை புதுமைகள்; அத்தனை வனப்புகள்; அத்தனை பசுமைகள்; அத்தனை வண்ணத்துக் கலவைகள்; அத்தனை சுடரொளி வீசும் சிகரங்கள்; அத்தனை ஒளித் திரள்கள்!

அதனால்தான் மகாகவி பாரதி வான் சுடர் பற்றி, ‘கணம் தோறும் ஒரு புதிய வண்ணம் காட்டி, காளி பராசக்தி, அவள் களிக்கும் கோலம்’ என்று வர்ணித்தார். நம் ஹிந்து மதம் ஒரு மஹா சமுத்திரம் அனன்யா…

தணிகாசலம் தன் மகள் மனம் மாறுவாள் என்கிற நம்பிக்கையில் அவளை அன்புடன் உற்றுப் பார்த்தார்.

“எல்லா மதங்களுமே மனிதகுல மேம்பாட்டிற்குத்தான் பாடுபடுகின்றன அப்பா. அவற்றில் இந்த மதம் உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதெல்லாம் கிடையாது. அப்துல் மஜீத்தை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில் எந்த மாற்றமும் இல்லை.”

விருட்டென்று எழுந்து சென்று விட்டாள்.

அடுத்த இரண்டு மாதத்தில் மகள் அனன்யாவிற்கு அப்துல் மஜீத்துடன் ‘நிக்காஹ்’ முடிந்து விட்டது என்று கேள்விப்பட்டார். மகளுடன் பேசுவதை உடனே நிறுத்தி விட்டார். மன வேதனையுடன் காலத்தை ஓட்டினார். ஊர்க்காரர்கள் அவரை ஏளனத்துடன் பார்ப்பது போலிருந்தது…

ஒருநாள் காலைப் பொழுதில் தணிகாசலம் பாளையங்கோட்டை மரியா கேன்டீன் எதிரே நடைப் பயிற்சியில் ஈடு பட்டிருந்தபோது, திடீரென ஐந்து பேர்கள் வீச்சரிவாளுடன் எதிர்கொண்டு அவரை வெட்டிச் சாய்த்தனர்.

ரத்த வெள்ளத்தில் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு உயிருக்குப் போராடினார் தணிகாசலம். நினைவு தப்பி கோமா நிலையிலேயே இரண்டு மாதங்கள் படுக்கையில் கிடந்தார்.

தமிழகத்தின் பல ஜாதித் தலைவர்கள் அவரை வந்து பார்த்துச் சென்றனர். நல்லவேளையாக அவருக்காக போடப்பட்ட ‘ஸ்கெட்ச்’சில் இருந்து எப்படியோ தப்பிவிட்டார் என்று பேசிக்கொண்டனர்.

மூன்றாவது மாதம் சற்று உடம்பு தேறி, வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

மகள் அனன்யா ஒரு டாக்டராக அவர் அருகில் இருந்து நன்கு கவனித்துக் கொண்டாள்.

உடம்பில் சற்று தெம்பு வந்தவுடன், வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்வது போல, தணிகாசலத்திற்கு பழைய மதத் திமிர் மறுபடியும் உடம்பில் ஏறிக்கொண்டது.

அன்று அனன்யாவிடம் கோபமாக, “ஒரு முஸ்லீமை திருமணம் செய்துகொண்ட துளுக்கச்சி என்னை கவனித்துக்கொள்ள வேண்டாம்… இந்த வீட்டை விட்டு அவள் வெளியேற வேண்டும்” என்று கத்தினார்.

“சரிப்பா, உங்க இஷ்டம் இனிமேல் நான் இங்கு வரவில்லை. என்னை வெளியேற்றி விட்டீர்கள், சரி. ஆனால் நீங்கள் வெட்டுப் பட்டு உயிருக்கு போராடியபோது பதட்டத்துடன் ஓடி வந்து, உங்களுக்காக ஆறு பாட்டில்கள் பி பாஸிடிவ் ரத்தம் கொடுத்தாரே ஒரு முஸ்லீம், அதான் உங்க மருமகன் அப்துல் மஜீத், அவருடைய ரத்தம் உங்க உடம்பு முழுக்க இப்ப வியாபிச்சு இருக்கேப்பா, அதை எப்படி வெளியேற்றுவீங்க?” என்று சொல்லி புன்னகைத்தாள்.

தணிகாசலம் ஒரு கணம் ஆடிப்போனார்.

“அப்படியா!” என்றார்.

அவருடைய மனைவி அவசரமாக, “ஆமாங்க இன்னிக்கி நீங்க உயிரோட இருக்கீங்கன்னா அவரு, அதான் அந்த அப்துல் மஜீத்தான் ஒரே காரணம். என்னுடைய தாலியை மீட்டுக் கொடுத்த அவருக்கு நான் என் வாழ்நாளெல்லாம் அவருடைய செருப்பாக இருந்து அவர் காலடியில் கிடக்கத் தயார்…” என்று பெரிதாக ஓலமிட்டு அழுதாள்.

தணிகாசலம் கலங்கிப்போய் மனைவியையும், மகளையும் பார்த்தார்.

சற்று நேரம் அமைதியாக யோசித்தார்.

பிறகு நிதானமாக, “மதங்களை விட மனிதம்தான் பெரிசு… மதங்களால் பிரிந்து கிடக்கும் மனிதர்களுக்கு ரத்தம் ஒரே நிறம்தான்.. நான் உடனே என் மாப்பிள்ளை அப்துல் மஜீத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்… ப்ளீஸ்..” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *