அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 11,441 
 

அப்புசாமி உறிஞ்சிப் பார்த்தார், அட்டைப் பெட்டிகளின் மணத்தை. தூக்கிப் பார்த்தார் கனத்தை. நொந்து கொண்டார் தலை எழுத்தை. வெறுத்தார் மனைவியின் அராஜகத்தை. விரும்பவில்லை அவளுடைய சிக்கனத்தை.

ஸ்வீட்டுகளின் நறுமணம் கமகமவென்று அவர் நாசியில் புகுந்து சரளி வாசித்தது. மெட்ரோ வாட்டர் டாங்க் கன்னாபின்னாவென்று கசிவது போல எச்சில் தளும்பி வழிந்தது.

பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பஞ்ச காலத்தில் கேட்டது போல அவர் யாசித்தது, நேசித்தது ஒரே ஒரு ஸ்வீட் பெட்டியை, ஈவிரக்கமில்லாமல் சீதாப்பாட்டி மறுத்து விட்டாள். “நத்திங் டூயிங்!”

பாட்டிகள் முன்னேற்றக் கழகத்தின் முந்நூறு உறுப்பினர்களுக்கு மட்டும்தானாம் அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன்கள்! ஒவ்வொரு பெட்டியிலும் பதினாறு வகை ஸ்வீட்டுகள்.

‘ஸிங்கிள் ஸ்வீட்டுக்கு அவனவன் ஸிங்கி அடிக்கிற போது கிழவிப் பட்டாளம், கிண்ணாரம் கொட்டுதே, இது பொறுப்பதில்லை கிழவீ, ஒரு ஸ்வீட்டினை எடுத்து விழுங்கிடுவேன்’ என்று உணர்ச்சிவசப்பட்டு அப்புசாமி ஒரு பெட்டியை வன்முறை காட்டித் திறக்க முயன்றார்.

அவளுடைய உயிரின் மேல் தோலைப் பிய்த்து விட்டது போலப் பாட்டி அலறியவாறு ஓடி வந்து, “டோன்ட் ஓபன் இட் ஐ ஸே!” என்று அவர் கையிலிருந்து அதை வெடுக்கெனப் பறித்து விட்டாள். “ஒரு பாக்கெட் ஸ்வீட் முந்நூறு ரூபாய். ப்யூர் பாதாம். ப்யூர் கீ. ப்யூர் ப்ரிபரேஷன். ப்யூர்லி ·பார் மெம்பர்ஸ். பாக்கெட் மேலே சுற்றியிருக்கிற கி·ப்ட் ராப்பர் அலோன் காஸ்ட்ஸ் ·பைவ் ருபீஸ்…” என்று அவரை ஸ்தலத்திலிருந்து உடனடியாக ஹஜ்ரத்பால் செய்ய முயன்றாள்.

‘பாக்கெட் கி அந்தர் க்யாஹை! என்று தெரிந்து கொள்ளத் துடித்தார் அப்புசாமி. வாழ்க்கையில்தான் எந்த அசல் ஸ்வீட் ஸிக்ஸ்டீனையும் ஸ்பரிசித்ததில்லை. ஸ்வீட் பாக்கெட்டைக் கூடத் திறந்து பார்க்கக் கூடாதா? தொடக் கூடாதாமே.

அப்புசாமி ஸ்வீட் பாக்கெட்டுகள் அடுக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே சப்பணங்கால் போட்டு உட்கார்ந்து கொண்டார். கீழ்க்கண்டவாறு உரக்க ஜெபிக்கத் தொடங்கினார்.

ஓம் க்ரீம் ஐஸ்!
கிழடே ஸ்வாஹா!
சிக்புக் ரயிலே ஸ்வாஹா!
கலக்குது பார் இவள் ஸ்டைலே ஸ்வாஹா!
வயிறே போஹா
ஊம். ஹாம்.
வலியே ஸ்வாஹா!
பாட்டிக்குப் புரியவில்லை. “என்ன உளர்றீங்க?” என்றாள்.

“இதுதாண்டி தீபா வலி மந்திரம்! இந்த ஸ்வீட்டுகளைச் சாப்பிடுகிற கிழவிகள் எல்லாரும் வயிற்று வலியால் துடிக்க வேண்டும் என்று ஸ்பெஷலாக நானே இயற்றியது. ஓம் வயிறே போஹா…வலியே ஸ்வாஹா…”

“உங்க பேத்தலை வீடு வீடாக விடியற் காலையில் போய்ச் சொன்னாலும் வேத மந்திரம்தான் சொல்ல வந்திருக்கிறார்களாக்கும் என்று யாராவது பிச்சை போடுவார்கள். கெட்லாஸ்ட்!” 
 
அப்புசாமி விருட்டென்று எழுந்து கொண்டார். “பிச்சைதானே! எடுக்கறேண்டி, எடுக்கிறேன். ‘பவதி பட்டாஸ் தேஹி! தாயே நாலு ஸ்வீட் போடுங்க’ன்னு பிச்சை எடுக்க இதோ புறப்படுகிறேன். அப்புறம் நீயே என் காலில் விழுந்து கையில் விழுந்து, இன்னும் பல இடங்களில் விழுந்து ‘நாதா! இந்தாங்க ஒரு பாக்கெட்டுக்கு ஒன்பது பாக்கெட்!’ என்று என்கிட்டே சரணாகதி அடையப் போகிறே.”

அப்புசாமி தெருவில் நின்று கொண்டு சிறிது மண்ணை எடுத்துத் தன் மந்திரத்தை எச்சரித்து, பாட்டி பக்கமாக ·ப்ளையிங் கிஸ் மாதிரி ஊதினார்.

வேறு வழியின்றி ஒரு தம்ளர் நீரைக் கணவனை நோக்கி வீணாக்கினாள் சீதாப்பாட்டி.

அப்புசாமியின் பல சவால்கள், சூரத் தனத்தோடு சீறி விட்டுச் சில நிமிடங்களில் கடலுக்குள் கர்ணம் போட்டு விழும் ஏவுகணை சமாசாரம்தான் என்பதை அவள் அறிவாள். பழுத்த சுமங்கலியான அவள், அப்புசாமியின் எத்தனையோ பிஞ்சு சவால்களைக் கண்டிருக்கிறாள், சமாளித்திருக்கிறாள்.

சீதாப்பாட்டி காரை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாள். கார் நிறையப் பின் ஸீட்டில் ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாக்கெட்டுகள்.

ரசகுண்டு ஓட்டமும் நடையுமாகப் புத்தம் புது வேட்டி சரசரக்க எதிரே விரைந்து வந்து கொண்டிருந்தான்.

“ஓ! தீபாவளி ஆசிர் வாதம் வாங்கிக் கொள்ள வருகிறானா?” 
 
ஆனால் ரசகுண்டு பாட்டியின் காலில் விழவில்லை. பதற்றத்துடன் நெருங்கி, “பாட்டி! பாட்டி! உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா?” என்றான்.

“வாட் இஸ் த பிக் நியூஸ்…” என்றாள் சீதாப்பாட்டி.

“எப்படிச் சொல்வதென்றே தெரியலே பாட்டி. நீங்க அவரைப் பிச்சை கிச்சை எடுக்கச் சொன்னீங்களா? பா.மு.க. மெம்பர்கள் வீடாகப் பார்த்து வாசல்லே நின்னு, ‘அம்மா தாயே! தீபாவளி ஸ்வீட் எதுனாத் தின்னு மிஞ்சியது, விருந்தாளித் தட்டுகளிலே ஓரம் கட்டின சொச்சம் ஏதாவது இருந்தால் போடுங்க தாயேன்னு குரல் கொடுக்கிறார். பட்டாஸ¤க்கு ஒரு ஜோல்னா, ஸ்வீட்டுகளுக்கு ஒரு ஜோல்னா, காரத்துக்கு ஜோல்னா என்று தோளில் மூன்று அழுக்குத் துணி மூட்டைகளுடன் வடக் கத்திப் பைராகி மாதிரி தெருத் தெருவாகப் போய்க் கொண்டிருக்கிறார். என் வீட்டுக்குக் கூட வந்து கேட்டார். ருக்குமணி காப்பி தந்தாள். அதைக் கூடக் குடிக்காமல், ‘காப்பியை இதுலே ஊற்று தாயே’ன்னு அதுக்குன்னு இடுப்பிலே கட்டிக் கொண்டிருக்கிற கண்ராவிப் பித்தளை கூஜாவில் ஊற்றச் சொல்லி வாங்கிக் கொண்டார்.

“உங்க எதிரி பொன்னம்மா டேவிட் இருக்கிறாளே, அவள் வீட்டுலே போய்க் கெஞ்சியிருக்கிறார். அந்தக் கிழவி உங்க மேலே இருக்கிற கோபத்தைத் தாத்தா மேலே காட்டி விட்டாள். நாயை அவிழ்த்து விட்டு, நாய் ஓடி வர, தாத்தா ‘யாமார்க்கும் குடியல்லோம், நாயை அஞ்சோம்’னு அங்கேயே நின்னிருக்கார். காலை நன்றாக வெடுக்கென்று நாய் பிடுங்கி, ரத்தமான ரத்தம். தற்செயலாக நானும் பீமாவும் அந்தப் பக்கம் போன போது பார்த்து, தாத்தாவுக்குக் காலைக் கட்டி, ஒரு இடத்திலே உட்கார வெச்சுட்டு வந்திருக்கேன். நீங்க ரூபாய் கொடுத்தால் தாத்தாவை ஒரு ஆட்டோ வெச்சி நானும் பீமாவும் ஜி. ஹெச்சுக்குக் கூட்டி போய் ஊசி போட்டுக் கொண்டு வந்து விடுகிறோம்.”

சீதாப்பாட்டி காரை ஸ்டார்ட் செய்தாள். “நான் பைசா தரப் போவதில்லை. அவருக்கு இது ஒரு லெஸன் ஆக இருக்கட்டும்.”

“பாட்டி, உங்களுக்கு இவ்வளவு கல் மனசு கூடாது பாட்டி.”

“போதும் உன் தூது” கார் சீறிக் கொண்டு கிளம்பி விட்டது.

சீதாப்பாட்டி முதல் ரவுண்ட் சுற்றி விட்டு மத்தியானம் வந்து சிறிது ஓய்வெடுத்த போது பிற்பகல் இரண்டு மணியிருக்கும்.

இன்னும் ஒரு முப்பது வி.ஐ.பி.க்களைப் பார்க்க வேண்டியிருந்தது. அதற்குள் ஒரு சின்னக் குட்டித் தூக்கம் போட்டால் தேவலை.

வாசலில் குரல் கேட்டது. “அம்மா தாயே! அன்னபூர்ணி! ஸ்வீட் பூர்ணி! எதுனாப் பட்டாசு, ஸ்வீட், காரம் இருந்தாப் போடு தாயே… ஸ்வீட் ஸிக்ஸ்டீன் கூடப் போடலாம் தாயே …

இன்னும் உங்க வயித்தை வலிக்கலையா தாயே… வயித்து வலியால்தான் படுத்திருக்கியாடி தாயே!

“ஓம் க்ரீம் ஐஸ்! கிழடே ஸ்வாஹா சிக்புக் ரயிலே ஸ்வாஹா! கலக்குது பாரு இவள் ஸ்டைலே ஸ்வாஹா! வயிறே போஹா! ஊம்… ஹ¥ம். வலியே ஸ்வாஹா”

சீதாப்பாட்டி கதவை லொடக்கென்று திறந்தாள்.

பாட்டியைப் பார்த்ததும் அப்புசாமி, “அம்மா தாயே! ரெண்டு கண்ணாலே இந்தக் கோரத்தைப் பாரு தாயே! இரண்டு நாயையும் கால் கடிச்சு… இல்லே, இல்லே… ரெண்டு காலையும் நாய் கடிச்சு… வழியெல்லாம் தொரதொரன்னு ரத்தம் ஊத்தி… இப்ப உடம்புலே எலும்பு மட்டும் லொட லொடன்னு ஆடுது தாயே…”
 

“மை காட்! என்னது இது கோரம்!” பதறினாள் சீதாப்பாட்டி.

“ரத்தம் பார்த்தியா ரத்தம்… யாருக்காவது தானம் கொடுத்தாலும் பைசா கிடைக்கும். நாய்கிட்டேயிருந்து காசு வசூல் பண்ண முடியுமா? அதுவும் பெரீய பெரீய பல்.”

முதலிலே டாக்டர்கிட்டே போய் ஊசி போட்டுக் கொண்டு வாருங்கள்.”

“சீதே! அதைத்தான் நான் ரசகுண்டுகிட்டே சொல்லி அனுப்பினேன்.”

“நான் கொஞ்சம் பிஸியாயிருந்துட்டேன.”

“சீதே! கட்டின கணவனை நாய் கடிச்சுட்டுதுன்னு தெரிந்ததும், பத்தினியாயிருக்கிறவள் ஓடி வர வேண்டாமா? மறுபடியும் சாயந்தரம் ராப்பிச்சைக்குக் கிளம்பப் போகிறேன். அதைச் சொல்லிப் போகறதுக்குத் தான் வந்தேன்.”
 

“ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள் சீதாப்பாட்டி. “என் தப்பை நான் உணர்ந்து விட்டேன். உங்களுக்காக மூணு ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாக்கெட் ரெடியாக எடுத்து வைத்திருக்கிறேன்.”

“சபாஷ்!” என்று குதூகலித்தார் அப்புசாமி. அவரை நாயும் கடிக்கவில்லை. பேயும் பிராண்டவில்லை. சிவப்பு மையை ஊற்றிப் போலியாக ஒரு செட்டப் செய்து கொண்டிருந்தார்.

“ப்ளீஸ்! குளித்து விட்டு வாங்க…” என்றாள் உள்ளிருந்து சீதாப்பாட்டி.

அப்புசாமி குளித்து முடித்துக் கபகபவென்ற பசியுடன் முன்னேறினார்.

“இப்பத்தான் என் .டி. ராமாராவ் மாதிரி சார்மிங்காக, ஆணழகனாக இருக்கிறீர்கள். எனக்குச் சரியான லெஸன் டீச் பண்ணிட்டீங்க. எங்கே அந்த தீபாவலி மந்திரத்தை இன்னொரு தரம் சொல்லுங்க…”

அப்புசாமி பூரிப்புடன் “ஓம் க்ரீம் ஐஸ்! கிழடே ஸ்வாஹா”என்று ஆரம்பித்து, ஓதி முடித்தார்.

சீதாப்பாட்டி கலகலவென்று சிரித்தாள். “உங்க மந்திரம் வெகு ·பன்னி…”

“நீ ஒரு பன்னி!” என்று சிரித்த அப்புசாமி, “இத்தனை நாடகம் ஆடலையென்றால் நீயாக மூன்று ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாக்கெட்டை இப்போ எனக்குத் தருவாயா?” என்றவர் ஆவலுடன் பாக்கெட்டைப் பிரிக்கத் தொடங்கினார்.
 

“நோ ப்ளீஸ்… உங்க ·பிரண்ட்ஸ் ரசகுண்டு, பீமா இவர்களோடு தீபாவளியைக் கொண்டாடுங்கள்.”

“அப்படின்றே? சரி. இப்போ என் வயிறு கத்துதே. பசின்னு துடிக்குதே…”

“பசிச்சாத்தான் நல்லது. ஸ்வீட்டுகளை ரசிச்சு ருசிச்சுச் சாப்பிடுவீங்க…”

“சீதே! நீ இவ்வளவு தாராளமாக இருப்பேன்னு நினைக்கவே இல்லை…!”

அப்புசாமி ஸ்வீட் ஸிக்ஸ்ட்டீன் பாக்கெட்டுகளைச் சுமந்து கொண்டு லொங்குலொங்கென்று ரசகுண்டுவின் வீட்டுக்குப் போனார். பீமாவும் அங்கே இருந்தான்.

“வெற்றி! வெற்றி! ஸ்வீட் ஸிக்ஸ்டீன்! ஸ்வீட் ஸிக்ஸ்டீன்! ஸ்வீட் ஸிக்ஸ்டீன்! ஆளுக்கொரு ஸ்வீட் ஸிக்ஸ்டீன் பாக்கெட்! முந்நூறு ரூபாய் ஸ்வீட்!”

“பேகனே பிரி தாத்தா!” பீமாராவ் அவசரப்படுத்தினான்.

“இருடா பாதுஷா வாயா” என்று கவுண்டமணி பாணியில் ரசகுண்டு அவன் ஆர்வத்துக்கு அணை போட்டான்.

அப்புசாமி முதல் பெட்டியைப் பிரித்தார். உள்ளே கருகருவென்று ஜல்லிக் கல்!

பரபரப்புடன் ரசகுண்டு இன்னொன்றைப் பிரித்தான். கருகருவென்று ஜல்லிக் கல்.

மூன்றாவவது பாக்கெட்டை பீமா பிரித்தான். கருகருவென்ற ஜல்லிக் கல்.

“தாத்தா!” என்றான் ஈனசுரத்தில் ரசகுண்டு. கருகருவென்ற ஜல்லிக் கல்.

“தாத்தா!” என்றான் ஈனசுரத்தில் ரசகுண்டு. “பாட்டி மனசு கல் மனசு தாத்தா! என்னவோ சீட்டு மாதிரி தெரிகிறது பாருங்கள்… ரூபா நோட்டு கீட்டாக இருக்கப் போகுது…!”

அப்புசாமி பல்லை நறநறத்தார்.

“நோட்டு வைக்கிறவளா அவள்! வேட்டு வைக்கிறவள்!” என்றவாறு காகிதத்தைப் படித்தார்.

டியர் சார், ஹாப்பி தீபாவளி!

ஸ்வீட் ஸிக்ஸ்டீனைக் கடிக்க முடிந்ததா?

மிஸஸ் பொன்னம்மா டேவிட், மகாராஷ்டிரா எர்த் க்வேக் ரிலீ·ப் வொர்க்குக்காக பா.மு. கழக சார்பாக அங்கேயே காம்ப் போட்டு உழைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் வீட்டுக்கு நீங்கள் போனதாகவும், நாய் கடித்தாகவும் சொன்னதுமே எல்லாம் உங்கள் ஸெட்டப் என்று தெரிந்து விட்டது.

நான் சீதே என்பதை புரூவ் செய்யச் சந்தர்ப்பம் கொடுத்ததற்கு நன்றி. உங்கள் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே ஸ்வீட் ஸிக்ஸ்டீனைச் சாப்பிடுங்கள், டாட்டா!

இப்படிக்கு உங்’கல்’

சீதே.

Print Friendly, PDF & Email

1 thought on “அப்புசாமியும் ஸ்வீட் ஸிக்ஸ்டீனும்!

  1. ஹாஹாஹாஹா அப்புசாமி தாத்தாவோட கதையை படிச்சிட்டு யாரவது சிரிக்காம இருக்க முடியுமா … ஹாஹாஹா அருமை வாழ்த்துக்கள் ஆசிரியர்களே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *