அப்புசாமியின் பொன்னாடை

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 28, 2012
பார்வையிட்டோர்: 20,859 
 

அப்புசாமி வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு கபகப உணர்வு கொஞ்ச நாளாக இருந்து வந்தது.

டிசம்பர் ஸீஸனில் அவர் விட்ட பெருமூச்சைக் கொண்டு எட்டு கிராமங்களுக்குக் காற்றாடி ஆலைகள்
நிறுவியிருக்கலாம். எண்ணூர் அனல் மின்சார நிலையத்துக்குக் கணிசமான அனல் உதவியிருக்கலாம்.

விழாக்களில் பொன்னாடைகள் பலருக்கும் போர்த்தப்பட்ட வாறிருந்ததை அவர் சகித்துக் கொண்டார்.

ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக, அவரது மனைவி சீதாப் பாட்டிக்கும் நாலைந்து பொன்னாடை கிடைத்ததைத்தான் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கட்டபொம்மன் கேட்ட மாதிரி சீதாப்பாட்டியை அவர் கேட்க ஆசைப்பட்டார். ‘நீ என்ன பாட்டுப்
பாடினாயா? மிருதங்கம் வாசித்தாயா? வயலின் இழுத்தாயா? கடம் அடித்தாயா? கஞ்சிரா தட்டினாயா? தம்புரா மீட்டினாயா? அல்லது பாட்டுப் பாடிய பச்சைக் கிளிகளை மெச்சி உன் கிழட்டுக் கைகளைத்தான் தட்டினாயா? நீ ஒரு பன்னாடை, உனக்கேன் பொன்னாடை?’

சபாக் காரியதரிசிகளை சீதாக்கிழவி எப்படியோ காக்கா பிடித்துத் தனக்கும் நாலு பொன்னாடைகளைச் சம்பாதித்துக் கொண்டு விட்டாள் என்பது அவரது கணிப்பு. ‘ராகாஸ் அ·ப் வேதிக் ஏஜ்’ என்று ஒரு சபாவில், யாரும் கூடாத ஒரு மத்தியான்னப் பொழுதில் யாருக்கும் புரியாத ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பாட்டி படித்தாள். அதற்கொரு பொன்னாடையா!

ஒரு சபாவின் விழாவுக்குத் தலைமை வகித்தாள். அதற்கொரு பொன்னாடை. ஒரு புதிய சங்கத்தைத் துவக்கி வைக்கக் குத்து விளக்கின் ஐந்து திரிகளில் ஒன்றைத் தான் ஏற்றினாள். அதற்கொரு பொன்னாடை.

அப்புசாமி பொருமினா¡ர்:

‘அடியே கிழவி! சும்மா ஒரு ஒளஒளாக் கட்டைக்காவது மேடையில் ‘என் வெற்றிக்குக் காரணம் என் புருஷன்தான்’ என்று சொன்னாயா?

வீட்டுக்கு வந்த பிறகாவது. ‘பார்த்தீர்களா என் பொன்னாடையை’ என்று என்னிடம் காட்டினாயா?

என்னவோ பரம ரகசியமாக மடித்துப் பீரோவில் வைத்துப் பூட்டிக் கொண்டு விட்டாய்.

புருஷன்னா உனக்குக் கிள்ளுக் கீரை? கீரைகூட ஒரு கட்டு அஞ்சு ரூபாய். அதிலும் பல இடைச் செருகல்கள்! எல்லாத்துக்கும் மதிப்பு ஏறிவிட்டது. ஆனால் எனக்குத்தான் எனக்குத்தான்..?’ புழுங்கினார்.

துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை நாலா திசையிலும் ஏவினார். முக்கியமாக

சீதாப்பாட்டியின் வெல்வெட் தலையணைக்குக் கீழே.

அவரது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. பீரோ சாவி அங்கேதான் இருந்தது.

பாட்டி பாத்ரூமில் இருந்தாள். வெள்ளிக்கிழமையாதலால் எண்ணெய் ஸ்நானமோ, ஷாம்பூ ஸ்நானமோ செய்வாள். கூந்தல் சுண்டைக்காய் முடிச்சாக இருந்தாலும் குளிக்க முக்கால் மணி நேரமாவது ஆகும்.

எடுத்தார் சாவியை. திறந்தார் பீரோவை. அள்ளினார் பொன்னாடைகளை. அணிந்து கொண்டார். ஆண்டாள் மாதிரி நிலைக் கண்ணாடி முன் நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டார்.

பொன்னாடை தனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.

லொடக்!

பாத்ரூமிலிருந்து பாட்டி! தூணிலிருந்து நரசிம்மி!

அப்புசாமியின் பொன்னாடை, நொடியில் பறிக்கப்பட்டு தனி நபர் விசாரணைக் கமிஷன் அரை வினாடியில் அமைத்து மறு நொடியில் கண்டு பிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது நொடியில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது

”யூ வில் நாட் கெட் ஸிங்கிள் பைசா ஹியர் ஆ·ப்டர். ஆல் யுவர் அலவன்ஸஸ் ஆர் கட்! கட்! கட்! உமக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த சகல மானியங்களும் நிறுத் தப்படுகின்றன!”

சீதாப்பாட்டியின் ‘பிடி சாபம்’ அப்புசாமிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவள் மேலும் கூறிய சில

வார்த்தைகள் அப்புசாமியை ஆழமாகப் புண்படுத்திவிட்டன.

”யோக்கியதை இல்லாததற்கு ஆசைப்படக் கூடாது. அன்டர் ஸ்டாண்ட்?”

அடிபட்ட புலியானார் அப்புசாமி: ”அடியே! நினைத்ததை முடிப்பவன்… நான், நான்,

நான்!” என்று உணர்ச்சி வசப்பட்டு ஒரு மங்கப்பா சபதம் போட்டார்.

”இன்னாமே சொல்றே? யோக்கியதை எனக்கில்லையா? இந்த மாசம் முடியறதுக்குள்ளே எனக்குப் பொன்னாடை போர்த்தறாங்கடி போர்த்தறாங்க. அப்படிப் போத்தினா அதே மேடையிலே நீ என் காலிலே விழுந்து கும்பிடறயாடி பன்னாடை! இன்னாத்துக்கு இந்த பிஸ்தா பொன்னாடை பீஸெல்லாம்னு நான் கம்னு கெடந்தா, என்னைச் சீண்டறியா சீண்டு! மாசக் கடோசிக்குள்ளே மேடை மேலே எனக்குப்

பொன்னாடை போத்தறாங்க. நான் கிங்குடி!”

பிள்ளையார்பட்டி விநாயகர் படம் அச்சிடப்பட்ட நாள்காட்டியின் மெல்லிய இதழ்கள் தினத்துக்கு ஒன்றாக உதிர்ந்து கொண்ருந்தன.

பொன்னாடை (அ) எங்கே கிடைக்கும் என்பதையும், (ஆ) எவ்வளவுக்குக் கிடைக்கும் என்பதையும் அப்புசாமி கண்டு பிடித்து விட்டார். விடை: (அ) நல்லி குப்புசாமி செட்டியார் கடை (ஆ) நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய்.

ஹ¤ம்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் மழை வருமா?

பொன்னாடையை யார் வாங்கி எந்த மேடையில் வைத்து எப்போது அவருக்குப் போர்த்தப்

போகிறார்கள்? காப்பிப் பொடிக்காரரா? வெட்கிரைண்டர் விற்பவரா? படத் தயாரிப்பாளர், திடீர் சிங்கப்பூர் தொழிலதிபர்? யார்? யார்? யார்?

பிள்ளையார்பட்டி விநாயகர் மேலும் சில தாள்களை நழுவ விட்டார்.

அப்புசாமி அவசரமாகத் தனது இளம் நண்பன் ரசகுண்டுவைக் கலந்தாலோசிக்க விரைந்தார்.

‘இசை அருவி சபா’ என்ற புதிய சங்கீத சபாவில் காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருந்தான் ரசகுண்டு. தொழிலில் அவ்வளவு பிரகாசமில்லை. வோல்டேஜ் டிராப் ஆன பல்ப் போல டல்லடித்தது

வியாபாரம். தம்பியாயிருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சித்தப்பாவாக இருந்தாலும், ‘வாங்க அண்ணா, வாங்க’ என்று வாய் குளிரக் கூப்பிடுவான். அண்ணா நாமத்தால் பிழைத்துக் கொண்டிருந்தான்.

அப்புசாமி தண்ணீர் அதிகமாகி விட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே, அவனுக்குத் திக்கென்றது. ‘என்ன உதவி கேட்க வருகிறாரோ?’ என்று பயத்துடன் நெளிந்து குழைந்து,

‘வாங்கோ அண்ணா, வாங்கோ வாங்கோ’ என்று வரவேற்றான்.

”டேய்! நான் தாத்தாடா? அண்ணா பண்ணிட்டியே” என்றவர், ”நீ காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்ததையே சொல்லலையே” என்றார்.

”இப்பத்தான் தாத்தா ஆரம்பிச்சிருக்கேன் சபாக்காரார்களோட நெளிவு சுளிவு தெரியலே. நமக்கு ஏதாவது ஒரு பட்டம் கிட்டம் இருந்தால் தேவலை, ‘எழில் சுவை ஏந்தல்’ அப்படி இப்படின்னு. பாருங்க

வியாபாரம் டல் அடிக்குது. காரியதரிசிகளும் காமா சோமான்னு கச்சேரி ஏற்பாடு செய்யறாங்க.”

அப்புசாமிக்கு பக்கென்றது.

சீலை இல்லேன்னு சித்தாத்தாள் வீட்டுக்குப் போனாளாம். அவள் ஈச்சம் பாயைக் கட்டிகிட்டு

எதிரே வந்தாளாம், கதையாயிருக்குதே என்று எண்ணிக் கொண்டார்.

தான் வந்த விஷயத்தை உடனே கூறாமல், ”அடே ரசம்! உனக்கு ஒரு தொழில் ரகசியம்

சொல்றேன். காண்ட்டீன்களிலே பலகாரத்தை விட, போர்டுலே பலகாரப் பெயர்களை எழுதி வைக்கிறது

ரொம்ப முக்கியம்டா.. என்னவோ ரயில்வே ஸ்டேஷன்லே ரயில் புறப்படுகிற நேரம் மாதிரி இப்படி டல்லா எழுதி வெச்சிருக்கியே… எவண்டா இதைப் படிப்பான். மொதல்லே கலர் கலரா சாக்பீஸ் வேணும்.. நான் எழுதறேன் பார்…” என்று அவன் பிஸினஸில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்- இரண்டொரு மக்பூல் பூரிகளை அநாயாசமாக உள்ளே தள்ளிக் கொண்டு.

”இன்னிக்கு என்னடா, தயிர் காரா பூந்தியா? கொடு சாக்பீஸை.”என்று சாக்கட்டியை வாங்கி போர்டில் எழுதினார்.

‘தயிர் காரா பூந்தியா? அது என் உயிர் காராபூந்தி’ என்கிறார் ரஜினி. நீங்களும் சாப்பிட்டுப் பார்க்கலாமே’ என்று வண்ண வண்ண எழுத்துக்களில் எழுதி வைத்தார்.

”தாத்தோவ்!” என்றான் ரச குண்டு ”ரஜினி அப்படிச் சொல்லலையே. வம்பு வரப் போறது தாத்தா மறுப்பு, கிறுப்பு விடப் போகிறார்.”

”போடா பைத்தியக்காரா” என்று சிரித்தார் அப்புசாமி. ”ரஜினி ரொம்ப பிஸி. உன் காரா பூந்தி

விஷயத்தையெல்லாம் மறுக்க அவருக்கு டைம் கிடையாது.. புரியுதா?”

”எப்படித் தாத்தா இவ்வளவு புத்திசாலியானீங்க..?” தாத்தாவைப் பழைய வாஞ்சையோடு கட்டி அணைத்துக் கொண்டான் ரசம்.

அன்றைய தினம் காண்ட்டீனில் தயிர் காரா பூந்தி பிய்த்துக் கொண்டு போயிற்று. கச்சேரி செய்ய வந்த திருவெம்பூர் பஞ்சாபகேச பாகவதர் கூட முழு நேரமும் காண்ட்டீனி லேயே தங்கிவிட்டரே.

தவிர கச்சேரி மேடைக்கே போகவில்லை. இதை அறிந்து பெரும்பாலோர் சந்தோஷப் பட்டார்கள்!

அப்புசாமி பலகையில் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளினார்.

கவர்ச்சிப் புயல் நமீதா

செய்த குலோப் ஜாமூன்!

கிளுகிளு ரவா தோசை!

என்ன கிளு கிளு?

ஆறாம் நம்பர்

மேஜையில் காண்க!

பிரபல இசை விமரிசகர் ஒருத்தர். ஒரு மாலை ஏட்டில், சபா நிகழ்ச்சிகள் பற்றி இவ்வாறு குறித்திருந்தார் கச்சேரியினும் இனிது காண்ட்டீன். அதனினும் இனிது அறிவிப்புப் பலகை. அந்தக் கை எழுதியதைப் படித்தால் எல்லாருக்கும் வந்துவிடும் மசக் கை!’

எதிர்பார்த்ததைவிட பலகார அறிவிப்புகள் பரபரப்பு ஏற்படுத்தியதன் காரணமாக ரசகுண்டுவின் இசை அருவி காண்ட்டீன் நன்றாக சூடு பிடித்துக் கொண்டு விட்டது.

”தாத்தாவ், உங்க பத்து விரலுக்கும் மோதிரம்தான் செய்து போடணும், உங்களாலே சபாவுக்கு நல்ல பேரு!” என்றான் ரசகுண்டு.

”டேய் ரசம்! என் விரலுக்கு மோதிரம் வேண்டாண்டா.. எனக் கொரு பொன்னாடை –

கொஞ்சம் ஹை கிளாசா பார்த்து வாங்கி போர்த்திட்டீங்கன்னாப் போதும். மேடை ரொம்ப முக்கியம். அதை விட முக்கியம், எங்க வீட்டுக் கியவியை அந்த விழாவுக்குக் கூப்பிடணும்.”

சீதாப்பாட்டிக்கு ராத்திரித் தூக்கம் போச்சு.

அரசியல் பிரமுகர் சுப்ரமணிய சாமியின் தலைமையில் அப்புசாமிக்கு ‘இசை அருவி’ சபாவில் இன்னும் இரு தினங்களில் பொன்னாடை போர்த்தப்பட்டு விருது வழங்கப் படும் என்று அழைப்பிதழ் அறிவித்தது.

விருது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வடமொழிச் சொற்களில் விருது இருந்தால்தான் விசேஷம் என்று எண்ணி ரசகுண்டு தன் வீட்டருகே இருந்த ஒரு புரோகி தரிடம் கலந்தாலோசித்து

‘நாஷ்டா ஆலோசக நவமணி’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தான்

”ஹெல் வித் யூ” என்று சீதாப் பாட்டி தலையில் அடித்துக் கொண்டாள். ”நாஷ்டா, கீஷ்டான்னெல்லாம் உங்களுக்குப் பட்டம் தேவை தானா? கேவலமாத் தெரியலை? நீங்கள் பொன்னாடையே

போர்த்துக்க வேணாம். ஐ ஷல் டூ ஹண்ட்ரட் நமஸ்கார்ஸ் டு யூ.. யு ஹாவ் வன் என்று ஒப்புக் கொள்கிறேன்” என்றாள்.

ஆனால் அப்புசாமி சம்மதிக்கவில்லை. ”சபதம்னா சபதம்தாண்டி! மேடையிலே நான் பொன்னாடை போர்த்துண்டு ஜிலுஜிலுன்னு மின்னப் போறேன். நீ என் காலிலே விழுந்து எல்லார் எதிரிலும் நமஸ்காரம் பண்றே!”

பஸ்ஸர் கிரீச்சிட்டது. சீதாப்பாட்டி எரிச்சலுடன் எழுந்து கதவைத் திறந்தாள் பகல் தூக்கத்தைப்

பாழடிக்க வந்த பாதகன் யார்?யாரோ ஒரு ஸேல்ஸ் வாலிபன் கழுத்திலே டை. முகத்திலே செயற்கையான ஆர்வம்.

”ஸாரி மேடம்! ஐந்தே வினாடிகளிலே எந்த ஹெளஸ்ஹோல்ட் பொருள்களையும் ஒட்டிவிடும். அப்புறம் பிய்த்தெடுக்கவே முடியாது ‘இன்ஸ்டன்ட் ·பிக்ஸ்’ ஒரு டியூப் பன்னிரண்டே ரூபாய். கூட ஒரு ஸ்பூன் தர்றோம்.”

”கெட் லாஸ்ட்! என்று சீதாப்பாட்டி கதவை அடித்து சாத்தி விட்டு படுக்கைகுத் திரும்பினாள்.

அப்புசாமியை ரசகுண்டு வெள்ளை வெளேர் ஜிப்பாவும் வேட்டியுமாக அலங்கரித்தான்.

”தாத்தாவ், சுப்ரமணியசாமிக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. சமயத்துலே மரியாதை குறைஞ்சு ‘அவன் இவன்’ என்று கூடப் பேசுவார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்க இப்போதைக்கு இவர்தான் நம்ம விழாவுக்குக் கிடைச்சார்.. சமாளிப்போம்,” என்றான்.

”சீதேக் கிழவியையும் முன் வரிசையிலேயே உட்கார்த்தி வை…தலைவர் சாமி எனக்குப் பொன்னாடை போர்த்தறதை அவள் வயிறு எரிய எரியக் கண் எரிய எரியப் பார்க்கணும்..” என்றார்.

இசை அருவி சபா அரங்கம் சிறியதாக இருந்ததால் அலங்காரம் செய்ய சதியாயிருந்தது.

அப்புசாமி ஹாலுக்கு கம்பீரமாக வந்தார். சீதாப்பாட்டி மிக மரியாதையுடனும் வணக்கத்துடனும் எழுந்து நாற்காலி ஒன்றை அவருக்கு நகர்த்திப் போட்டாள்.

‘கெயவிக்குப் பயம் புடிச்சிகிட்டுது.. எப்படி கும்பிடு போடறாள். எவ்வளவு மரியாதை.’

முன் வரிசையில் அப்புசாமியும், அவரருகே சீதாப்பாட்டியும் அமர்ந்திருந்தனர்.

அப்புசாமி பெரிய மாநாட்டுத் தலைவர் மாதிரி சீதாப் பாட்டியின் தலைக்கு அருகே தன் தலையைச்

சாய்த்து அவள் காதருகே பேசினார்.

”இன்னாடி கெய்வி! இன்னாவோ வாடை வரலை? உன் குடல் வெந்து கும்பி கருகுதோ?”

சீதாப்பாட்டி மெலிதாகச் சிரித்தாள்

”அப்ஸல்யூட்லி ஐ ஹாவ் நோ இல் ·பீலிங்ஸ் டுவார்ட்ஸ் யூ.. உங்கள் வெற்றி. என் வெற்றி நீங்க மேடை ஏறப் போகிற நிகழ்ச்சியைப் பார்க்க நான் ஈகர்லி அவெய்ட்டிங்..”

மைக்கில் சபாக் காரியதரிசி அப்புசாமியை அழைத்தார். ”மதிப்புக்குரிய விழா நாயகர் ஸ்ரீ அப்புசாமி அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.”

பலத்த கரவொலி.

சீதாப்பாட்டியைப் புழுப் போல அப்புசாமி பார்த்தவாறு நாற்காலியிலிருந்து எழுந்தார். எழுந்தார் என்று சொல்ல முடியாது. எழுந்திருக்க முயன்றார் என்பதே சரி. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை.

”அட இஸ்கி, இன்னடா சேர் இது!” என்று முணுமுணுத்தவாறு சற்றுக் கூடுதலான பலத்தைப் பிரயோகித்து எழப் பார்த்தார்.

ஊஹ¤ம். ஒரு கால் அங்குலம் கூட எழ முடியவில்லை.

தம் கட்டி எழப் பார்த்தார் பிரயோசனமில்லை.

மேடையிலிருந்து காரியதரிசி மூன்றாம் முறையாக அழைத்தார் ”அப்புசாமி அவர்கள் உடனே மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

”பெரியவருக்கு சிரமம் வேண்டாம். அவன்கிட்டே நானே போறேன்” என்று தலைவர் சாமி பொன்னாடையுடன் கீழே இறங்கி அப்புசாமியிடம் வந்தார்.

அப்புசாமியால் அப்போதும் எழ முடியவில்லை. அவரது நாற்காலியில் சீதாப்பாட்டி சாமர்த்தியமாகத் தடவி வைத்திருந்த இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் அப்புசாமியை எழுந்திருக்க அனுமதிக்கவே இல்லை.

ரசகுண்டு பல்லைக் கடித்தான். ”எந்திருச்சி நில்லுங்க தாத்தா..” அப்புசாமியால்

முடியவில்லை.

தலைவர் சாமி அப்புசாமி மீது பொன்னாடையைப் போர்த்துவிட்டு விமானத்தைப் பிடிக்க விரைந்தார்.

நாற்காலியை அறுத்து எடுத்தும் வெகு நாட்கள்வரை அப்புசாமியின் பின்புறத்தில் நாற்காலியின் அடிப் பகுதி ஒட்டிக் கொண்டேயிருந்தது. இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் பயங்கரப் பசைதான் போலிருக்கிறது.

பாட்டி மேற்படி கம்பெனிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினாள்.

”அடியே கிழவி! என் காலில் நீ விழுந்துதாண்டி ஆகணும். நான் பொன்னாடை போர்த்துக் கொண்டேனா இல்லையா? வாக்கு மாறாதேடி. அப்புறம் அடுத்த ஜென்மத்துலே ஏதாவது அரசியல் கட்சிக்குத் தலைவியாப் பொறப்பே!” என்று கூவினார் அப்புசாமி.

”மை டியர் சார். ஐ ஷல் எவர்கீப் அப் மை வோர்ட்ஸ். நீங்க மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்துக் கொள்ளவில்லையே. கீழேதானே போர்த்துக்கிட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.”

அப்புசாமிக்குக் கபகபவென்று எரிந்தது-வயிறும் வயிறு சார்ந்த பின் பகுதியும்!

Print Friendly, PDF & Email

1 thought on “அப்புசாமியின் பொன்னாடை

  1. ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ சரியான கதை சூப்பர் … வாழ்த்துக்கள் ஐயா ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *