ஸுப்பையர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 7,133 
 

I

கிழக்கில் பெத்துநாய்க்கன் பேட்டைக்கும், மேற்கில் வேப்பேரிக்கும், வடக்கில் உப்பளத்துக்கும், தெற்கில் பூந்தமல்லி சாலைக்கும் இடையில், சென்னைக்கு நடுநாயகமாய் ஒரு பூங்காவனம் உண்டு. ஸாதாரண ஜனங்கள் அதை ராணி தோட்டம் விக்டோரியா தோட்டம் சிங்காரத் தோட்டம் என்றும், இங்க்லிஷ் படித்தவர்கள் பீபில்ஸ் பார்க் என்றும் வழங்குவர். சில இடங்களில செய்குன்றுகளும் சில இடங்களில் தாமரைத் தடாகங்களும் சில இடங்களில் தீவுகளும் சில இடங்களில் பர்யாயத்தீவுகளும் அமைத்து, இடைவெளிகளில் பலதேசத்திலிருந்து கொண்டுவந்த பலவித மரங்களை வளர்த்து, நகரபரிபாலன ஸபையார் இந்தத்தோட்டத்தை மிகவும் ரமணீயமாக வைத்திருக்கின்றனர்.

தோட்டம் ஸுமார் ஒரு மைல் நீளமும் கால்மைல் அகலமும் உள்ளதாயினும், உள்ளே குறுக்கு நெடுக்காய் வளைய வளையப் போட்டிருக்கிற பாதைகள் நாலைந்து மைல் நீளம் இருக்கும். பாதைகள் நீங்கலான இடம், எங்கே பார்த்தாலும், அறுகம்புல் பச்சென்ற படர்ந்திருக்கும். பாதைகளின் இரு பக்கங்களிலும் கமுகமரங்களும் காட்டுவாழை மரங்களும் புன்கமரங்களும் பூவரசமரங்களும் வெய்யிலின் வெப்பம் தெரியாதபடி நிழல்கொடுத்து நிற்கும். புல்வெளிகளின் இடையிலே வட்டமாகவும் முக்கோணமாகவும் நாற்கோணமாகவும் பலகோணமாகவும் பாத்திகள் அமைத்து, பலவர்ணமான புஷ்பங்களைப் புஷ்பிக்கும் பலவித செடிகள் வைத்திருக்கும். சில இடங்களில் சிறிய மேடைகள் அமைத்து, அவைகளின் மீது சிறியனவும் பெரியனவுமான பல புஷ்பத் தொட்டிகள் அடுக்கடுக்காகவும் வரிசை வரிசையாகவும் வைத்திருக்கும். இந்தப் புஷ்பப் பாத்திகளுக்கும், மேடைகளுக்கும்,பாதைகளிலிருந்து இரண்டு முழம் மூன்று முழம் அகலமுள்ள கிளைவழிகள் அமைத்திருக்கும். அவைகளின் ஓரங்களில் சீமைக் கரிசிலாங்கண்ணி கருநொச்சி முதலானவைகள் அடர்த்தியாக வைத்துத் திட்டமாகக் கத்தரித்திருக்கும். சில இடங்களில் க்ரோட்டன் கொறுக்கச்சி மூங்கில் முதலியன புதர்போல் வளர்ந்திருக்கும். காலை மாலைகளில் வருவார் போவார் உட்கார்ந்து காற்றுவாங்கவும், காட்சிகளைக் கண்டு களிக்கவும், அங்கங்கே மரநிழலில் இருப்புப் பீடங்களும் விசிப்பலகைகளும் இட்டிருக்கும்.

இரண்டு மூன்றிடங்களில் பெரிய பெரிய கூண்டுகள் கட்டி, அவைகளில் புறாக்களும் கிளிகளும் மயில்லளும் சிறிதும் பெரிதுமான பலவித பக்ஷிகளும் விட்டிருக்கும். ஓரிடத்தில் சுற்றிலும் இரும்புக்கம்பிகளால் வேலியிட்டு உள்ளே மான் கூட்டங்கள் விட்டிருக்கம். ஒரிடத்தில் ஒரு நீர் நிலையில் மதலை விட்டிருக்கும். ஓரிடத்தில் யானை கட்டியிருக்கும்.

இந்தத் தோட்டத்தின் வடபாதியின் மத்தியில், நான்கு பர்லாங்க் சுற்றளவுள்ள இடம், சுற்றிலும் துத்தநாகத் தகடுகளால் ஓராள் எட்டிப்பார்க்க முடியாத உயரமுள்ள அடைப்பு அடைத்திருக்கிறது. அதினுள்ளே மூன்று பக்கம் ஸுமார் இருபதடி அகலமுள்ள நீர்க்கால் ஒன்று உண்டு. அந்த நீர்க்காலில் சில பால்யர்கள் சிறு படகுகளில் ஏறித் தாங்களே துடுப்புப் பிடித்துப் படகைத் தள்ளிக்கொண்டுபோவர். இந்த அடைப்பிடத்தின் உள்ளே போவோர் வாயிலில் உள்ள ஆளிடம் ஓரணா கொடுத்துப் போகவேண்டும். மேல்பாதியில் அங்கங்கே பெரிய பெரிய இரும்பு போன்கள் அமைத்திருக்கின்றன. ஒன்றில் சிங்கம் இருக்கும்:

ஒன்றில் புலிகள் இருக்கும்: ஒன்றில் சிவிங்கி இருக்கும். நீர்க்காலின் அப்பால் ஒரு மேடையில் பலஜாதிக் குரங்குகள் கடிடியிருக்கும். வேடிக்கை பார்க்க வருவர் அவைகளுக்க வேர்க்கடலை பட்டாணி வாழைப்பழம் முதலானவைகளை வாங்கிவந்து கொடுப்பார்கள்.

தோட்டத்தின் தென்பாதியில் ஓரிடத்தில், ஒருகாணி விஸ்தாரமுள்ள இடத்தில், தேக்குவரிச்சல்களாலும் சட்டங்களாலும் பந்தலிட்டு, உள்ளே பெரிய தொட்டிகளில் மடல் மட லான இலைகளுள்ள சில மலைப்பூடுகளைத் தினம் இருமுறை மும்முறை ஜலம் விட்டு வளர்த்து, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். பெர்னெரியென்னும் இவ்விடத்தில் வெய்யிற்காலத்தில் மாலைவேளையில் பீடங்களில் உட்கார்ந்து சிலர் ஜதை ஜதையாய்ப் பேசியிருப்பார்கள். சிலர் வர்த்தமானபத்ரிகை கதைப்புத்தகம் முதலியவைகளைப்படித்திருப்பார்கள். உள்ளே போனால் பொழுதுபோகிற வரையில் அதைவிட்டு வெளியில் வருவதற்கு மனம் ஒப்பாது. அங்கே இருக்கிற வரையில் பெங்களூரில் இருப்பதுபோலவும் வெலிங்க்ட்டனில் இருப்பதுபோலவும் வெய்யிலின் வெப்பம் தெரியாமலிருக்கும்.

அவ்விடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பான்ட் ஸ்ட்டான்ட் என்கிற வாத்தமேடை விமானம்போல் கட்டியிருக்கிறது. மேடையைச் சுற்றிச் சிலகஜ தூரம் வெளியிடம் விட்டுச் சுற்றிலும் பாதை அமைத்திருக்கிறது. பாதை ஓரடி உயரமாய் ஸமமாக இருக்கிறத. பாதையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலியிட்டிருக்கிறது. உள்ளே போவதற்கு நான்கிடங்களில் ஆறடி அகலமுள்ள வழிகள் விட்டிருக்கின்றன. அந்த வழிகளின் மீது வளைவாகக் கம்பிகள் பின்னியிருக்கும். அவைகளின்மேல் ரங்கூன்மல்லி ஸம்பங்கி காக்கணம் முதலிய கொடிகள் பந்தலிட்டதுபோல் படர்ந்திருக்கம். வேலியைச் சுற்றிலும் பெரிய பாதை உண்டு.

வாரத்தில் ஒரு நாள் இந்த வாத்யமேடையில் ராணுவ வீரர்கள் பான்ட் வாசிப்பார்கள். அந்தக் கீதவாத்யத்தைக் கேட்டு மகிழும்படி, இங்க்லிஷ்காரரும் சுதேசிகளும் வந்து கூடியிருப்பார்கள். இங்க்லிஷ் சிறுவர்கள் அந்த வாத்யத்துக் கேற்றவாறு கூத்தாடி ஸந்தோஷிப்பார்கள். அங்கே எரிகிற விளக்குகளின் ஜோதியாலும், ஜனங்களின் உடை விசேடங்களாலும் குளிர்ச்சியாக வீசும் காற்றினாலும், அந்த ஸமயத்தில் அவ்விடம் அதிரம்யமாக இருக்கும்.

தோட்டத்தின் தென்பாதியில் ஓரிடத்தில், ஒருகாணி விஸ்தாரமுள்ள இடத்தில், தேக்குவரிச்சல்களாலும் சட்டங்களாலும் பந்தலிட்டு, உள்ளே பெரிய தொட்டிகளில் மடல் மடலான இலைகளுள்ள சில மலைப்பூடுகளைத் தினம் இருமுறை மும்முறை ஜலம் விட்டு வளர்த்து, எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள். பெர்னெரியென்னும் இவ்விடத்தில் வெய்யிற்காலத்தில் மாலைவேளையில் பீடங்களில் உட்கார்ந்து சிலர் ஜதை ஜதையாய்ப் பேசியிருப்பார்கள். சிலர் வர்த்தமானபத்ரிகை, கதைப்புத்தகம் முதலியவைகளைப் படித்திருப்பார்கள். உள்ளே போனால் பொழுதுபோகிற வரையில் அதைவிட்டு வெளியில் வருவதற்கு மனம் ஒப்பாது. அங்கே இருக்கிற வரையில் பெங்களூரில் இருப்பதுபோலவும் வெலிங்க்டனில் இருப்பதுபோலவும் வெய்யிலின் வெப்பம் தெரியாமலிருக்கும்.அவ்விடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பான்ட் ஸ்டாண்ட் என்கிற வாத்யமேடை விமானம்போல் கட்டியிருக்கிறது.

மேடையைச் சுற்றிச் சிலகஜ தூரம் வெளியிடம் விட்டுச் சுற்றிலும் பாதை அமைத்திருக்கிறது. பாதை ஓரடி உயரமாய் ஸமமாக இருக்கிறது. பாதையைச் சுற்றி இரும்புக் கம்பிகளால் வேலியிட்டிருக்கிறது. உள்ளே போவதற்கு நான்கிடங்களில் ஆறடி அகலமுள்ள வழிகள் விட்டிருக்கின்றன. அந்த வழிகளின் மீது வளைவாகக் கம்பிகள் பின்னியிருக்கும். அவைகளின்மேல் ரங்கூன்மல்லி, ஸம்பங்கி, காக்கணம் முதலிய செடிகள் பந்தலிட்டதுபோல் படர்ந்திருக்கும். வேலியைச் சுற்றிலும் பெரிய பாதை உண்டு.

வாரத்தில் ஒரு நாள் இந்த வாத்யமேடையில் ராணுவ வீரர்கள் பான்ட்* வாசிப்பார்கள். அந்தக் கீதவாத்யத்தைக் கேட்டு மகிழும்படி இங்க்லிஷ்காரரும் சுதேசிகளும் வந்து கூடியிருப்பார்கள். இங்க்லிஷ் சிறுவர்கள் அந்த வாத்யத்துக்கேற்றவாறு கூத்தாடி ஸந்தோஷிப்பார்கள். அங்கே எரிகிற விளக்குகளின் ஜோதியாலும், ஜனங்களின் உடை விசேடங்களாலும், குளிர்ச்சியாக வீசும் காற்றினாலும், அந்த ஸமயத்தில் அவ்விடம் அதிரம்யமாக இருக்கும்.முப்பததைந்து வருஷங்களுக்கு முன்னே இந்தத் தோட்டம் இப்பொழுதிருப்பதைவிட மிகவும் இனிமையாக இருந்தது.

அப்போது நகரசபா மண்டபம் அங்கே இல்லை. மூர் மார்க்கெட் அதற்கப்பால் ஏற்பட்டது. முனிஸிபல் ஆபீஸ் இப்போது ஏற்பட்டிருக்கிறது. தோட்டத்தை மேல்பார்வை செய்கிற உத்யோகஸ்தனுக்காக கட்டியிருக்கிற சிறிய மாளிகை தவிர வேறே ஒரு கட்டடமும் இல்லை. எவ்விடமும் பாயில்லாமலே இருக்கவும் படுக்கவும் ஏற்றபடி இந்தத்தோட்டம் சுத்தமாக இருந்தது.

எவ்விதமான துக்கமுள்ளவர்களுக்கும் இந்தத் தோட்டம் துக்கத்தை நீக்கி ஸந்தோஷத்தைக் கொடுக்கும் அமிர்த ஸ்ஞ்சீவிபோல் இருந்தது. தனிகரான மணவாளரும் மணவாட்டிகளும் தீவுகளில் தனியிடங்களில் கூச்சமில்லாமல் உல்லாஸமாய்ப் பேசியிருப்பார். கிழம் பழங்கள் விசிப்பலகைகளில் உட்கார்ந்த்து தங்கள் பூர்வோத்தங்களைச் சொல்லி ஸ்ந்தோஷிப்பார்கள். இங்கிலிஷ் படிக்கும் பாலர்கள் பல வாதங்கள் செய்து உலாவித்திரிவர். நாட்டுப்புறங்களிலிருந்து வருகின்றவர்கள் காட்டு மிருகங்களைப் பார்த்து அதிசயிப்பர். மிட்டாய் தினுஸுகளை வாங்கிவந்து இந்தத்தோட்டத்தில் தடாகக்கரையில் இருந்து உண்டு இன்பமடைவர். ஞாயிற்றுக் கிழமை முதலிய ஒழிவு நாள்களில் உபாத்யாயர்களும் உத்யோகஸ்தர்களும் வந்து அங்கங்கே உட்கார்ந்தும் உலாவியும் வேடிக்கை பார்த்தும் ஸந்தோஷமடைந்து திரும்புவர்.

————–

II

தாது வருஷத்திலும் அதற்கு முன்னும் சென்னை ராஜ்யத்தில் மழையில்லாமல் ஜனங்கள் பட்டபாடு இப்படிப்பட்டதென்று இப்போது அனேகர் அறியார். அந்த க்ஷாமத்தின் கொடுமை அடங்கினபிறகு, சென்னையில் உள்ள சில இங்க்லிஷ் கனவான்களும் சில சுதேசனவான்களும் சில பெரிய உத்யோகஸ்தர்களும் கூடி ஆலோசித்து, டிஸெம்பர்மாத முடிவில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறந்த பெரு நாளைக் கொண்டாடுகிற காலத்தில், துரைத்தன உத்யோகசாலைகளிலும் பெரிய வர்த்தகசாலைகளிலும் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் விடுமுறை காலமாகையால், அப்போது ஜனங்களின் விநோதத்தின் பொருட்டாக ராணிதோட்டத்தில் ஒர சந்தை கூட்டுவ தென்று ஏற்பாடு செய்தார்கள். உரிய ஏற்பாடுகளெல்லாம் அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு கம்மிட்டியால் நடைபெற்று வந்தன.

வெளியூர்களிலிருந்து வருகிற உத்யோகஸ்தர்கள் தங்கள் மனைவிமக்களுடனே காட்டுமிருகங்களைப் பகலில் போய்ப் பார்ப்பது தவிர, தோட்டத்தின் வடபாதியில் விசேஷமான வேடிக்கை ஒன்றும் இராது. பல ஜனங்கள் வருவதும் போவதுமாயிருப்பார்கள். தென்பாதிதான் சந்தைகூடுகிற இடம். வாத்ய மேடையாகிய பான்ட ஸ்ட்டான்டைடச் சூழ்ந்துள்ள பாதையைச் சுற்றிலும் வட்டமாகப் பந்தலிட்டு மூங்கில்களாலும் ஓலைகளாலும் அடைப்படைத்திருக்கும். அங்கே சந்தைக்கடை வைப்பவர்களுடைய வேண்டுகோளுக் கேற்றபடி பந்தல் தனித்தனி விடுதிகளாகப் பிரித்திருக்கும். சிலர் மிட்டாய் விற்பார்கள்.

சிலர் ரொட்டி பிஸ்கட் பன் கேக்ஸோடா லெமொனேட் வெற்றிலைப்பாக்கு முதலியவைகளை விற்பார்கள். சிலர் அருமையான சீமை ஸாமான்களையும் நாட்டு ஸாமான்களையும் விற்பார்கள். சிலர் ஸாமான்களுக்கு எண்கள் இட்டு, அவைகளுக்கேற்ற டிக்கெட்டுகள் போட்டு, டிக்கெட்டுகளை ஒரு பெட்டியிலிட்டு “உங்கள் அதிஷ்டத்தைப் பாருங்கள்” “உங்கள் அதிஷ்டத்தைப் பாருங்கள்” என்று கூவியிருப்பார்கள். விருப்பமுள்ளவர் பணங்கொடுத்து அந்தப் பெட்டியில் கையைவிட்டு ஒரு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தால், கடைக்காரர் அந்த டிக்கெட்டில் கண்டிருக்கிற எண்ணுக்குரிய ஸாமானை எடுத்துக்கொடுப்பர்.

இப்படிப்பட்ட லாட்டெரி கடைகள் அநேகம் இருக்கும். அக்கடைகளில் டிக்கெட் பெட்டியிடம் நிற்பவர்களும் ஸாமான்களை எடுத்துக் கொடுப்பவர்களும் அழகிய இங்க்லீஷ் ஸ்த்ரீகள். ஒரு விடுதி கமிட்டியார் கூடுகிற இடம். பொழுதுபோனதும் வாத்ய மேடையைச் சுற்றி ஏற்றியிருக்கிற மின்சார விளக்குகள் பலசந்திரர்கள் ஏககாலத்தில் ஸமீபத்திலிருந்து ப்ரகாசிப்பது போல் அதிக ஆநந்தத்தைக் கொடுக்கும். அப்போது இடையிடையில் வாத்யகோஷம் உண்டாகும். உள்ளே ப்ரவேசிப்பதற்கு நாலு பக்கத்திலும் வழி விட்டிருக்கும். உள்ளே போவோர் ஒவ்வொருவரும் நாலணா கொடுக்கவேண்டும். ஜனங்கள் அதிக்கிரமித்து நடவாதபடி, அங்கே போலீஸ் ஜவான்கள் சிலர் நின்றிருப்பர்.வளைவான இந்த அடைப்பிடத்தில் சந்தைக்கடைகளில் ஸாமான்கள் வாங்க வருவோர் மிகச் சிலரே. பல ஜாதி ஆண்களும் பெண்களும் கூடுகிற இடமென்று தெரிந்திருப்பதால், ஆடையாபரணங்களால் உண்டாகும் ஒப்பனையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர். மனித ஸ்ருஷ்டியில் அரிய ஆடையாபரணங்கள் இன்றியே ஸ்வயம்ப்ரகாசமாக விளங்கும் இயற்கையழகைக் கண்டு மகிழும்படி வருகின்றவர்கள் பலர். உடைகளின் பாங்கையும் அவைகளைத் தரிக்கும் பாங்கையும் கண்டறிய வருகின்ற பாலர் சிலர். ஆபரணங்களின் விதங்களைக் கண்டறிந்து அவைகளில் விசேஷமான விதமாய் ஆபரணம் செய்தணிய விரும்பிவருகின்ற ஸ்த்ரீகள் அநேகர். நெடுநாளாய்க் காணப்பெறாதவர்களைக் கண்டு ஸலாம்போடும்படி வருவார் சிலர். ஒரு நோக்கமும் இன்றி உல்லாஸமாய் உலாவும்படி வருவார் பலர். வயிறு பசித்தாலும் பொருட்டு செய்யாமல், சற்றுநேரம் கழித்துப் போகலாமென்றே ஆலச்யம் பண்ணிக்கொண்டு அவ்விடத்தில் சுற்றி வருவார் தொகை மணிக்குமணி அதிகரித்திருக்கும். காஷாயம் தரித்தவர்களும் சீக்கிரம் அவ்விடத்தை விட்ட நீங்கார்கள்.

இங்ஙனம் சந்தை கூடுகின்ற காலத்தில், ஸமீபத்தில் வெளியிடங்களில் கூத்துக்கொட்டாய்களும், நாடகசாலைகளும், மல்லர் தங்கள் திறத்தைக் காட்டுமிடங்களும், அங்கங்கே வகுத்திருக்கும். அப்ராக்ருதமான ஸ்ருஷ்டி விசேஷங்களில் சிலவற்றைச் சேகரித்துக் காட்டுகிற பந்தல்களும் சில வகுத்திருக்கும்.

கீழ்ப்பாதியில் சிலம்பம் பயின்றவர்களுக்குப் பரிசளிக்கும்படி இப்போது கட்டியிருக்கும் ஆத்லெடிக் அஸோஸியேஷன் என்கிற மண்டபமும் அடைப்பும் அப்போதில்லை. அங்கே சுற்றிலும் கால்கள் நாட்டி வடங்கள் கட்டியிருக்கும். உள்ளே குதிரைப் பந்தயம், ரேக்லா பந்தயம், ஓட்டப் பந்தயம் முதலானவை நடக்கும். கையில் தண்ணீர்க்குடங்களை வைத்துக்கொண்டு ஓடுகின்றவர்களில் விழுவாரைக் கண்டும், கழுத்துவரையில் கோணிப்பைகளைக் கட்டிக்கொண்டு தத்தித் தொத்திக் குதித்தோடுகின்றவர்களில் தப்பி விழுவாரைக் கண்டும் ஜனங்கள் கொல்லென்று சிரிப்பார்கள். அவ்விடத்தில் உள்ளூற ஜனங்கள் நெருங்காதபடி ஸார்ஜெண்டுகள் குதிரைகளை வளையவளையவிட்டு ஜனங்களை வெருட்டியிருப்பார்கள். ஜனங்களைச் சில இடங்களில் போலீஸ் ஜவான்கள் அதட்டியிருப்பார்கள். சில இடங்களில், அந்த ஜவான்களை ஸமயம்பார்த்து ஜனங்கள் நெருக்கித் தள்ளிவிடுவார்கள். உயரமில்லாதவர்களில் சிலர் வண்டிகளின்மேலிருந்து வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் மரக்கிளைகளில் வாலில்லாத வாநரம்போல் தொத்தியிருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.

குஜிலியில் அந்த ஸமயம் வேலையில்லாமல், இந்த ஜனத்திரளில் தங்கள் வேலையின் திறத்தைக் காட்டும் பெரிய மனிதர்கள் சிலருக்கு அந்தக் காலம் நல்ல கந்தாயம். ஜேபியிலுள்ள நோட்டுகளும் மடியிலுள்ள காசுகளும் மேலேயுள்ள அங்கவஸ்திரங்களும் ஸ்திரீகளின் கண்டமாலைகளும் இவர்களைக் கண்டால் மாயமாய்ப் போய்விடும்.. கோழி திருடிக் கூடவிருந்து குலாவுவதுபோல், இவர்கள் மிகவும் பரிதபித்து, “படவாவைப் பிடி பிடி” “அதோ ஓடுகிறான் கழுதை அடி அடி” என்று கூவிப் போக்குக் காட்டுவார்கள்.

நாலைந்து நாள்கள் வரையில் இந்தப்ரகாரம் சிங்காரத் தோட்டம் திமில குமிலமாக இருக்கும். கடைசி நாள் இரவில் பத்துமணிக்குமேல் பாணவேடிக்கை நடத்துவார்கள். அதில் அபூர்வமான சில அதிசயங்களைக் கண்டு ஜனங்கள் ஆனந்தமடைவார்கள். அதனோடு சந்தை முடிவுபெறும்.

III

1886 – ம் வருஷத்து டிஸெம்பர் மாதத்துக்கு ஸரியான பார்த்திப வருஷத்து மார்கழிமாஸத்தில் இவ்விதம் சந்தை கூடி இரண்டு மூன்று நாள்கள் வரையில் எல்லா வேடிக்கைகளும் வழக்கம்போல் ஒழுங்காக நடந்துவந்தன. நாலாநாள் மாலை ஏழுமணிக்கு, சந்தைக் கடைகளின் அடைப்பிலிருந்து ஓவென்ற அழுகுரல் புறப்பட்டது. சுற்றடைப்பில் ஐந்தாறிடங்களில் ஏககாலத்தில் நெருப்புப்பற்றி எரிதலாயிற்று. நிமிஷநேரத்தில் மேலுங்கீழும் இடமும் வலமுமாக நெருப்புப் பலபக்கங்களிலும் பரவத் தொடங்கியது.

வாயில்களின் ஸமீபத்தில் இருந்தவர்களில் எச்சரிக்கையாக ஓடிப்போனவர்கள் பிழைத்தார்கள். தீப்பற்றிவராத இடங்களில் மூங்கில்களை உடைத்தும் ஓலைகளைப் பிய்த்தும் அடைப்புகளில் வழிசெய்துகொண்டு ஓடின பாலர்களும் பலசாலிகளும் சிலர் பிழைத்தார்கள். நிமிஷநேரத்தில் வாயில்களினிடத்தில் ஜனங்கள் முன்பின்பாராமல் நெருங்கியதால், நசுங்குண்டிறந்தவர் சிலர், மிதியுண்டிறந்தவர் சிலர். அடைப்புத் தட்டிகளை உடைத்துக்கொண்டு போனவர்களில் ஓலைகளாலும் மூங்கில்களாலும் கீறுண்டு இரத்தம் வடிந்துகொண்டு போயினர் சிலர். ஜனநெருக்கத்தால் கையொடிந்தும் காலொடிந்தும் “அப்பாடா” “அம்மாடி” என்று ஓலமிட்டும் நொண்டியும் போயினர் சிலர். சில நேரத்தில் அங்கும் தீ நெருங்கி விட்டது: வாயில்களிடத்தும் தீ நெருங்கிவிட்டது. “ஐயோ, குழந்தை எங்கே” என்பாரும், “அப்பா எங்கே” என்பாரும், “அம்மா எங்கே” என்பாரும், “அத்தான் எங்கே” என்பாரும், “ஐயோ தீ நெருங்கிவிட்டதே. என்ன செய்யலாம்” என்பாரும், “ஐயோ வெப்பம் பொறுக்கமுடியவில்லையே” என்பாருமாய் உள்ளே அகப்பட்டவர்கள் தத்தளித்திருந்தார்கள். பத்துநிமிஷநேரத்தில் பந்தல்களெல்லாம் தரையோடு தரையாய்விட்டன. தலைமயிரும் மீசையும் தாடியும் பற்றி யெரிந்து முகங்கரிந்தோடினார் சிலர். உடைகளையெல்லாம் கழற்றியெறிந்து நிர்வாணமாய் ஓடித் தப்பினார் சிலர். மற்றவர்களில் ஸ்மரணையில்லாமல் குற்றுயிராய்க் கிடைத்தவர் சிலரே. மாண்டவர்கள் பலநூறு என்று கணக்கு ஏற்பட்டது.

சென்னை, எந்தத் தெருவிலே பார்த்தாலும், அரைமணி நேரத்தில் அல்லோலகல்லோலமா யிருந்தது. “ஐயோ என் மகனைக் கண்டீரா” என்றழுதனர் தாய்மார்கள். “ஐயோ, எங்கள் வீட்டுக்காரர் எங்கே” என்றழுதனர் பெண்டிர்கள். “தம்பியைத் தேடிப்பார்” என்று அண்ணன்மார்களை அனுப்புவர் சிலர். “மருமகன் இன்னும் வரவில்லையே” என்று தெருத் தெருவாய் அலைந்தனர் சிலர். “ஐயோ, சொன்ன பேச்சைக் கேளாமல் போனானே. என்னவானானோ” என்று அலைந்தார் பலர்.
“அண்டைவீட்டுக்காரப் பாவி பலாத்காரமாக இழுத்துக்கொண்டு போனான். அவனையும் காணோம் இவனையும் காணோம்” என்று புலம்பினார் பலர். “எவனோ சிநேகிதன் வெள்ளையுஞ் சள்ளையுமாக வந்து வலித்துக்கொண்டபோனானே. என் மகன் கொச்சை. செத்தானோ பிழைத்தானோ” என்று அலறினார் பலர்.

பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களும், அண்ணனைப் பறிகொடுத்தவர்களும், தம்பியைப் பறிகொடுத்தவர்களும், பெண்களைப் பறிகொடுத்தவர்களும், பெண்டிரைப் பறிகொடுத்தவர்களும், வாயிலடித்துக்கொண்டும், மார்பிலடித்துக்கொண்டும், கையைப் பிசைந்துகொண்டும், வயிற்றைப் பிசைந்து கொண்டும், ‘ஐயோ’ என்றும் ‘அப்பா’ என்றும் ‘அம்மா’ என்றும் ‘கண்ணே’ என்றும் புலம்பிக்கொண்டும், சிங்காரத் தோட்டத்துக்குப் போனார்கள்.

இதற்குள் போலீஸார் தீயை அவித்து, பிணங்களை வேறிடத்தில் வரிசையாக வளர்த்தி, குற்றுயிரோடிருந்தவர்களை ஜெனரல் ஆஸ்பத்ரிக்குக் கொண்டுபோயினர். சிற்சில அடையாளக் குறிப்புகளால் என் பிள்ளை என் தம்பி என் மாமன் என் மைத்துனர் என்று சில பிணங்களைச் சிலர் வண்டிகளில் கொண்டுபோயினர். அடையாளப் பிசகால் மாறின பிணங்கள் பல. பரிஷ்காரமாய் இன்னாரின்னாரென்று தெரியாத பிணங்களைப் போலீஸார் கொண்டுபோய்ப் புதைத்து விட்டார்கள்.

பிணங்களைக் கொண்டுபோக வந்தவர்களுள் முத்யாலு பேட்டையிலிருந்து வந்தவர்களில் வயோதிகரான வைதிக ப்ராமணர் இருவர்,- அப்பாசாஸ்த்திரி, கோபாலையர் என்பவர்கள். அப்பாசாஸ்த்ரி ராமசாமிவீதியில் இருப்பவர். கோபாலையர் பவழக்காரத் தெருவில் இருப்பவர். இவர்களுடைய குமாரர்கள் இருவரும் பால்யஸ்நேஹிதர்கள். ஒழிந்த வேளைகளில் அவர்கள் இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் போய் அவரவர் கேட்ட வர்த்தமானங்களைப் பேசியிருப்பர். எந்த உத்ஸவத்துக்கும் எந்த வேடிக்கைக்கும் அவர்கள் ஜதையாகவே போவார்கள். கோபாலையருடைய குமாரன் பெயர் நாகஸ்வாமியையர். அப்பாசாஸ்த்ரி குமாரன் பெயர் ஸுப்பையர். பிணங்களின் இடையில் தேடிப் பார்க்கையில் கோபாலையருடைய குமாரன் கிடைத்தான். கோபாலையர் அவனை ஒர வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டுபோய் தஹன ஸம்ஸ்காரங்களைச் செய்து முடித்தார்.

அப்பாசாஸ்த்ரி பாவம் “ப்ரேதந்தானும் கிடைக்க வில்லையே! ஐயோ, என் குமாரனுக்கு இப்படிப்பட்ட துர்மரணம் நேரிட்டதே.

நான் மஹா ொபி. எனக்கு அவன் பிதுர்க் கர்மம் செய்வதுபோய், அவனக்குரிய கர்மங்களை நானே செய்யும்படி நெரிட்டதே. என்ன செய்வேன்” என்று துக்கித்து, தஹன ஸம்ஸ்காரம் சஞ்சயனம் நீங்கலாக மற்றச் சடங்குகளையெல்லாம் நடத்தி, “பகவத் ஸங்கல்பம் இப்படியானால் நம்மால் ஆவது என்ன? அவன் கொடுத்த பிள்ளையை அவன் கொண்டுபோய்விட்டால் அதற்குத் துக்கப்பட்டு ஆவது என்ன? ” என்று மனதை திடப்படுத்திக்கொண்டு, ஆத்மார்த்தமான கார்யங்களைச் செய்து காலங்கழிப்பதென்று தீர்மானம் பண்ணிக்கொண்டார்.

அவருடைய மருகி, காமாக்ஷியம்மாள், இருபது பிராயமுள்ளவள், மாங்கல்யத்தையும் பூஷணங்களையும் களைந்து, சிரமுண்டிதம் பண்ணி, தாம்பூல முதலானவைகளைத் தள்ளிவிட்டு, விதவை வேஷங்கொண்டு, புருஷனை நினைத்து நினைத்து அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய தாய் “ஐயோ, ஸ்தல யாத்திரை செய்தும், உபவாசமிருந்தும், ப்ரார்த்தனை பண்ணியும் பலகாலம் புத்ரபாக்கிய மில்லாமல் கடைசியில் பகவத் ப்ரஸாதமாகப் பெற்ற என் அருமை மகள் இந்தக்கோலம் ஆயினாளே. நான் பூர்வத்தில் என்ன பாபம் செய்தேனோ. இவள் இறந்துபோனாலும் பெரிதல்லவே. இவளை அமங்கலியாக வைத்து எவ்விதம் பார்த்துக்கொண்டிருப்பேன். பகவானே” என்று துக்கித்தாள்.

காமாக்ஷியம்மாள் இரவில் நித்ரை பிடியாமல் துக்கித் திருப்பாள். இடையிடையில் சற்றயர்ந்து தூங்கும்போது புருஷனோடு குலாவியிருப்பதாகப் கனவுகண்டு விழித்து, அவனை நினைத்து நினைத்து அழுதகண்ணும் சிந்தியமூக்குமாக இருப்பாள். அவளுடைய தாயும் அதைக் கண்டு தானும் அழுவாள்: சில ஸமயங்களில் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லித் தேற்றிக்கொண்டிருப்பாள். இந்தப்ரகாரம் இருபது நாள்கள் கழிந்தன. சங்க்ராந்தியும் வந்து போய்விட்டது.

IV

இருபத்தோராநாள் இரவில் பதினொன்றரை மணிக்குத் தெருக்கதவு தட்டுகிற சப்தம் கேட்டது. அப்பாசாஸ்திரி க்ருஷ்ணஸ்வாமி கோவிலில் கீதாகாலக்ஷேபம் கேட்கப் போயிருந்தார். அவருடைய பத்தினி சமையலறையில் படுத்து மகனை நினைத்துத் துக்கித்திருந்து தூங்கிவிட்டாள். சம்பந்தியம்மாளும் அவளுடைய பெண்ணும் அப்போதுதான் கண்ணுறக்கங் கொண்டனர். அவர்கள் கூடத்து வீட்டில் கதவடைத்துப் படுத்திருந்தனர். கதவு தட்டிய சப்தத்தைக் கேட்டுக் காமாக்ஷியம்மாள் திடுக்கிட்டு விழித்தாள். காலக்ஷேபத்துக்குப் போயிருந்த மாமனார் திரும்பிவந்து விட்டாரோ என்று நினைத்து எழுவதற்குள், மறுபடியும் கதவை உரமாகத் தட்டுகிற சப்தம் கேட்டது. மாமனார் அவ்வளவு கெட்டியாகக் கதவைத் தட்டுகிற வழக்கம் இல்லையே என்று நிதானிப்பதற்குள், “அடி காமு, கதவைத் திறவடி” என்று தன் புருஷன் குரலாகக் கேட்டது. இதற்குள் அவளுடைய தாயும் விழித்துக்கொண்டு, “யாரது?” என்று கூப்பிட்டாள். மாமியார் குரலாக இருக்கவே, “நான்தான் ஸுப்பு: கதவைத் திறக்கச் சொல்லுமே” என்கிற வார்த்தைகள் கேட்டன.

இதைக் கேட்ட காமாக்ஷியம்மாளும் அவள் தாயும், இடி விழுந்ததுபோல் நடுங்கி, ஒருவரை யொருவர் கட்டிக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தனர். மறுபடியும் “அம்மா கதவைத் திறவடி” “அப்பா கதவைத்திறவுமே” என்கிற சப்தம் கேட்டது.
மாமியார் கொஞ்சம் மனதைத் திடப்படத்திக் கொண்டு, “அப்பா, எங்கள் வாழ்வு போய் இருபதுநாள் ஆய் விட்டது. எங்களைவிட்டுப் போக எப்படி மனந்துணிந்தாயோ? எந்த லோகத்துக்குப் போனாயோ என்று ஏங்கி துக்கப் பட்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில் தானா வந்து எங்களைப் பரிசோதிக்கிறது?” என்று அழுதாள். “இதென்ன வேடிக்கை! உமக்குப் பைத்யம் பிடித்திருக்கிறதா? அப்பா எங்கே? அம்மா எங்க? காமு எங்கே?” என்று கூவுகிற சப்தம் கேட்டது. யாரும் வாய் திறக்கவில்லை.

ஒரு நிமிஷநேரத்தில் அண்டை வீடுகளிலும் எதிர்வீட்டிலும் கதவு தட்டுகிற சப்தம் கேட்டத. அவ்வவ்வீட்டுக்காரர்கள் “யாரது?” என்று கேட்பதற்கு, வெளியிலிருந்து “நான் தான் ஸுப்பன்” என்று ஸுப்பையர் குரலாகக் கேட்கவே, அவரவர்கள் “ஐயோ, துர்மரணமாகச் செத்ததனால் அவனுடைய ஆவேசம் வீடு தெரியாமல் வந்து அலைகிறது” என்று பயந்தார்கள். எவரும் கதவைத் திறக்கவில்லை.

அந்த ஸமயத்தில் ஒரு புரோகிதர் தம்புசெட்டி வீதியில் பார்த்தசாரதி செட்டியாருடைய குமாரனுக்கு நிஷேத முஹூர்த்தம் நடத்திவைத்துப் புதுவேஷ்டியும் தக்ஷிணையுமாக வந்துகொண்டிருந்தார். தூரத்தில் எதிரில் யாரோ வருகிறார் என்று கண்டு, புரோகிதர் தக்ஷிணை இடுப்பில் ஸரியாக வைத்துச் செருகியிருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டார். தாம்பூலம், பழம், தேங்காய் முதலியவைகளை வைத்துக் கட்டியிருந்தமூட்டையை அக்குளில் கெட்டியாக இடுக்கிக் கொண்டார். அவசரப்படாமல் அடியடியாய் மெதுவாய்ப் போகையில், இரண்டு மூன்று வீட்டுக்கப்பால் எதிரில் வருகிறவர் ஸுப்பையர் ஜாடையாக இருக்கவே, புரோஹிதர் பயந்து நடுங்கி நிர்ஜீவனானார். ஸமீபித்து எதிரில் வந்த கொண்டிருந்தவர், “ஓய் குப்பாசாஸ்த்ரி! மூட்டை பலமாயிருக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்?” என்றதைக் கேட்டு, புரோஹிதர் மூர்ச்சையாய்க் குப்புறவிழுந்தார்.

ஒரு நிமிஷத்தில் தெருக்கோடியிலிருந்து வடக்குநோக்கி இருவர் வந்தகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நாராயணசாமி ஐயர் என்பவர். சென்னைக் கிறிஸ்தவ கலாசாலையில் ஹைஸ்கூலில் இங்க்லிஷ் ஆசிரியர்: பி.ஏ. பட்டம் பெற்றவர். மற்றவர் க்ருஷ்ணையர் என்பவர்: பழைய யூ-ஸி-எஸ். பரீக்ஷையில் தேறி அக்கௌன்டன்ட் ஜெனரல் ஆபிஸில் ஐம்பது ரூபா சம்பளமுள்ள ஒரு லேககர். இவர்கள் ஒரு ஸ்நேஹிதர் பிள்ளையின் கல்யாண ஸம்பந்தமான பாட்டுக் கச்சேரிக்குப் போயிருந்து திரும்பிவந்தனர். அவர்களில் நாராயணஸ்வாமி ஐயர், யமனை எதிரில் கண்டாலும் “நீ புதிய யமனா, பழைய யமனா?” என்று கேட்கத்தகுந்த வன்னெஞ்சு படைத்தவர். க்ருஷ்ணையரோ, ஆர்க்காட்டில் சண்டை என்றால் அடுப்பங்கரையில் பதுங்குகின்றவர். இவர்கள் இருவரும் எதிரில் வருகிறவரைக் கண்டார்கள். வருகிறவர் ஸுப்பையர் ஜாடையாக இருக்கவே, க்ருஷ்ணையர் நாராயணஸ்வாமி ஐயரைச் சேர்த்துக் கட்டிக்கொண்டார். அதனால் நாராயணர் சீக்கிரம் நடக்க முடியாமல் எதிரில் வருகிறவரை நின்று உற்றுப்பார்த்தார். எதிரில் வந்தவரும் உற்றுப் பார்த்து, “ஸார், எங்கே போய் வருகிறீர்கள்? கூடே வருகிறவர் க்ருஷ்ணையர் அல்லவா?”

அவ்வளவிலே க்ருஷ்ணையர் கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டார். நாராயணர் எதிரில் நின்றவரைத் தோளின்மீது கையால் தட்டிப்பார்த்தார்: சதையும் சரீரமுமாய் நெற்றியில் சந்தனப்பொட்டும் மேலே சரிகை வேஷ்டியும் கீழே கம்பிவேஷ்டியும் காதில் முத்துக் கடுக்கனுமாய் இருட்டில் கருமை தெரியாமல் பல்லை வெளுக்கக் காட்டி நின்றதைக் கண்டார்.
ஒரு விநாடி நேரம் யோசனைபண்ணி, சமாளித்துக்கொண்டு, “நாங்கள் ஒரு பாட்டுக்கச்சேரிக்குப் போய் வருகிறோம். சில நாளாக நீர் இல்லையே; எங்கே போயிருந்தீர்? எப்பொழுது வந்தீர்” என்று கேட்டார்.

ஸுப்பையர் “இப்போதுதான் வந்தேன். நான்வெளியில் போய் இருபது நாள் ஆகிறது. வர்த்தக கார்யமாய்ப் போயிருந்தேன்” என்றார்.

நாராயணஸ்வாமி ஐயர் “இப்போதுதான் வந்தேன் என்கிறீர். வீட்டைக் கடந்து வந்துவிட்டீரே. இந்த நேரத்தில் எங்கே போகிறீர்?” என்று கேட்டார்.

இவர்கள் பேசியிருந்தது க்ருஷ்ணையருக்கு ஒன்றும் தெரியாது. அவர் பிரமைபிடித்து நாராயணரோடு ஒரே சரீரமாய் ஒட்டியிருந்தார்.

ஸுப்பையர் — “நானும் நாகஸ்வாமியும் பார்க்கில் வேடிக்கை பார்க்க புறப்பட்டுப் போனோம். வழியில் ராமசாமி செட்டி என்கிற வர்த்தகனைக் கண்டேன். அவன் சேலத்துக்குப் போய் இருநூறு டின் நெய் வாங்கிவரும்படி அவஸரமாகப் பணங்கொடுத்தான். ஆத்தில் சங்கதி தெரிவிக்கும்படி நாகஸ்வாமியிடம் சொல்லிவிட்டு, உடனே ரெயிலேறிப் போய்விட்டேன். எங்கள் ஆத்திலும் அண்டையயலிலும் என்ன அஸந்தர்ப்பமோ தெரியவில்லை. ஆத்தில் மாமி மாத்ரம் குரல் கொடுத்தாள்; கதவைத் திறக்கவில்லை. அண்டையசலில் எந்த ஆத்திலே கதவைத் தட்டினாலும் எவரும் கதவைத் திறக்கவில்லை. நாகஸ்வாமியைத் தேடிக்கொண்டு போகிறேன்” என்றார்.

இதையெல்லாம் நிதானமாகக் கேட்ட நாராயணஸ்வாமி ஐயர், தம்முடைய ஆலோசனையில் பட்டது ஸரியென்று ஸந்தோஷங்கொண்டு, “நாகஸ்வாமி வீட்டுக்குக் காலையில் போகலாம். வாரும்” என்று நகர்ந்தார். க்ருஷ்ணையரைத் தட்டிக் கொடுத்தும் அவர் கொஞ்சம் தெளிவடைந்தாரேயன்றி, அடியோடு அவருடைய பயம் இன்னும் ஒழியவில்லை.

வழியில் அப்போதுதான் புரோஹிதர் மூர்ச்சை தெளிந்து எழுந்தார். மூவர் வருகிறதைக் கண்டு அவருக்குக் கொஞ்சம் தைர்யம் வந்தது. ஸுப்பையரும் கூடவருகிற ஜாடை யைக் கண்டு எழுந்திருக்கமாட்டாமல் சும்மா இருந்தார். ஸுப்பையருக்கக் கொஞ்சம் இங்கிலிஷ் தெரியுமாகையால், அவர் இங்க்லிஷில் நாராயணஸ்வாமி ஐயரிடம் புரோஹிதர் தன்னைக்கண்டு பயந்திருப்பதைத் தெரிவித்தார்.

நாராயணஸ்வாமி ஐயர் அந்த மர்மத்தைத் தெரிந்து கொண்டு,ஸுப்பையரைப் பின்னால் நிறுத்தி, “என் ஸ்வாமி, அல்பஸங்கைக்குப் போயிருக்கிறீரோ? அடுத்த ஆத்தில் வாசலில் உள்ள குழாயில் ஜலஸ்பர்சம் பண்ணிக்கொண்டு வாருமே. எல்லாரும் ஒன்றாய்ப் போகலாம்” என்றார்.

புரோஹிதர் “நாராயணஸ்வாமி ஐயரா? இரும், இதோ வருகிறேன் ” என்ற குழாயிடம் போய்க் கைகால் அலம்பிக் கொண்டு, கொஞ்சம் பயந்தெளிந்து, எப்படியாவது நாராயண ஸ்வாமி ஐயருடைய துணையால் வீடுபோய்ச் சேரலாமென்று ஓரடி முன்னாகவே போனார்.

எல்லாரையும் நான்காவது வீட்டுத் திண்ணையிலே உட்காரவைத்து, “சற்றிரும் நானும் அல்பஸங்கைக்குப் போக வேண்டும்” என்று சொல்லி நாராயணர் அப்பாசாஸ்த்ரி வீட்டுக்குப் போனார். அந்தக் குறிப்பை ஸுப்பையர் தெரிந்து கொண்டார்.

புரோஹிதரும் க்ருஷ்ணையரும் கண்ணை மூடிக்கொண்டு திண்ணையில் சாய்ந்தார்கள். அப்பாசாஸ்த்ரி ஐந்து நிமிஷத்துக்கு முன்னே வந்து கதவை அதிக ப்ரயாசத்தோடு திறக்கும்படி செய்து, நடந்த ஸங்கதியைக் கேட்டு துக்கமடைந்து திண்ணையில் உட்கார்ந்தார். அவர் மனைவியும் சம்பந்தியும் அவரை உள்ளே வந்துவிடும்படி உள்ளிருந்தபடியேநிர்ப்பந்தம் பண்ணியிருந்தார்கள்.

நாராயணஸ்வாமி ஐயர் குறட்டின்மேல் ஏறுவதைக்கண்டு, இன்னாரென்ற கேட்டறிந்து, “நீர் இந்த நேரம் இங்கே வந்த அவஸரம் என்ன?” என்று கேட்டார்.

நாராயணர் “சாஸ்த்ரிகளே! ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் குமாரன் வெளியூருக்குப் போயிருந்தார். நாகஸ்வாமியிடத்தில் சொல்லியனுப்பிய செய்தி நமக்குத் தெரியாமல் போய்விட்டது. பயப்படாமல் இரும். இதோ அவரை அழைத்துவரகிறேன்” என்றெழுந்து போனார். அதைக் கேட்டிருந்த ஸ்த்ரீகள் அதிசயமாக எட்டிப் பார்த்திருந்தார்கள்.

அப்பாசாஸ்த்ரி நாராயணஸ்வாமி ஐயரைப் பின்தொடர்ந்துபோனார். இவர்களைக் கண்டு ஸுப்பையர் “அப்பா, எங்கே போயிருந்தீர்? கதவைத் தட்டினேன், தட்டினேன். எவரும் கதவைத் திறக்கவில்லை. அம்மா எங்கே? காமு எங்கெ? மாமி ஒரு குரல் கொடுத்து அப்புறம் பேசாமல் கதவு திறவாமல் இருந்துவிட்டார்கள்” என்றார்.

அப்பா சாஸ்த்ரி, “ஸுப்பு” என்று தழுவிக்கொண்டு, “என்ன கார்யம் செய்தாய்? போனவன் ஒரு ஸ்ரீமுகம் எழுதக் கூடாதா?

காமுவைப் பார்த்து எப்படி ஸஹிப்பாய்?” என்று வீட்டுக்காகத் திரும்பினார். குப்பா சாஸ்த்ரியும் க்ருஷ்ணையரும் பயங்கரமான கனவுகண்டு விழித்தவர்கள்போல் ஒரு பக்கமுமாக ஓடிவந்து, ஸுப்பையரைத் தழுவிக்கொண்டு முகமெல்லாம் முத்தங்கொடுத்தார்கள். மாமியார் மனமடங்காத மகிழ்ச்சி அடைந்தாள். அதுவரையில் காய்ச்சல் கண்டவர் போல் ஓய்ந்திருந்த க்ருஷ்ணையர், காமாக்ஷி மொட்டந்தலையோடு புருஷனைத் தழுவி முத்தமிடுவதைக் கண்டு உள்ளுக்குள்ளே நகைத்துக்கொண்டார். குப்பாசாஸ்த்ரி இடுப்பிலிருந்த தக்ஷிணை ரூபா இருக்கிறதா என்று தடவிப்பார்த்து, பொடிடப்பியை எடுத்து ஒரு சிட்டிகைப் பொடியைப் போட்டுக்கொண்டு, “அம்மா காமு, நீ தீர்க்க ஸுமங்கலியாய் இருக்க வேண்டும்” என்று ஆசீர்வதித்தார்.

கொஞ்சநேரத்தில் இந்த ஸங்கதி தெரிந்து தெருவிலுள்ளவர்களெல்லாம் திரள் திரளாக வந்து ஸுப்பையரைக் கண்டு ஸந்தோஷப்பட்டார்கள். இதற்குள் ஸுப்பையருடைய மாமியார், காமாக்ஷியம்மாளுக்க எல்லா பூஷணங்களையம் அணிந்து நெற்றியில் குங்குமம் இட்டாள்.

மறுநாள் காலையில் அப்பாசாஸ்த்ரி பந்துஜனங்களையும் இஷ்டமித்ரர்களையும் அழைத்துவந்த விருந்திட்டார். சிறு பிள்ளைகளெல்லாம் காமாக்ஷியம்மாளைப்பார்த்த, “திருப்பதிக்குப் போய் முடிகொடுத்த வந்தாயா” என்று பரிஹாஸம் செய்தனர். ஸுப்பையர் அடிக்கடி கோபாலையரிடம் போய் ஆறுதல் சொல்லித் தேற்றி வருவார்.

– அபிநவ கதைகள் (1921)

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *