வேலுவின் வேள்வி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 6,337 
 

“கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய் இல்லை” தாய் மரகதம் சற்று கோபத்தோடு மகள் மனோகரியை கூப்பிட்டாள்.

மனோகரியின் செல்லப் பெயர் “கிளி”. அப்படித்தான் அவளை வீட்டில் கூப்பிடுவார்கள். யாழ்ப்பாணத்தில் குஞ்சு, இராசாத்தி, பேபி, பபா. மணி என்ற செல்லப் பெயர் சொல்லி அழைப்பது பேச்சு வழக்கில் உள்ளது. அூணாயிருந்தால் ராசன், தம்பி, குஞ்சன், என்ற பெயர் சொல்லி அழைப்பார்கள். மனோகரிக்கு அந்தப செல்லப் பெயர் வரக் காரணமுண்டு. சிறுவயதில் கீச்சிட்டக் குரலில் கத்திப் பேசுவாள். அதனாலை மாமன் அவளை கிளி எனறு செல்லமாகக் கூப்பிடத் தொடங்கினார். அந்தப் பெயர் காலப்போக்கில் நிலைத்துவிட்டது. சிறு வயதில் மனோகரி சரியான பிடிவாதக்காரி. தனக்கு விளையாடப் பொம்மை தரச்சொல்லி கீச்சிட்ட குரலில் கத்தி அடம்பிடித்து அழுவாள். தாயின் அழைப்புகள் அவளின் பொறுமையைச் சோதித்தது.

“ அம்மா இப்ப என்ன வேண்டு;ம் உனக்கு?. ஏன் உயிர் போகிற மாதிரி கத்திறாய்”? மனோகரி அலுப்போடு தாயைக் கேட்டாள்.

“மருந்தை விழுங்க தண்ணி கொஞ்சம் தாவன். மருந்து எடுக்கிற நேரமாச்சு”தாய் மரகதம் தான் அழைத்ததன் காரணத்தைச் சொன்னாள்.

“கொஞ்சம் பொறு அம்மா. அடுப்பிலை கத்தரிக்காய் கறி வைத்திருக்கிறன். இறக்கிப் போட்டு வாறன்.” பதிலுக்கு உரத்த குரலில் மனோகரி பதில் அளித்தாள். அவளுக்கு தாய் திரும்பத் திரும்ப அழைத்தது எரிச்சலைக் கொடுத்தது. தனக்கு இருக்கிற வேலைகளை சுட்டிக்காட்டி முணுமுணுக்க தொடங்கினாள். அவளின் முணுமுணுப்பு மரகதத்துக்கேட்டது.

“ஓம். என் தேகம் இடம் கொடுத்தபோது உங்களுக்கு மாடாய் உழைத்து சமைத்துப்போட்டேன். வீட்டு வேலை முழுவதும் செய்தேன். இப்ப நான் உனக்கு தொந்தரவு குடுக்கிறன் என்கிறாய். வேறை என்ன சொல்லுவாய்” மரகதம், மனோகரியின் முணுமுணுப்பு கேட்டு பதில் அளித்தாள்.

“அம்மா நான் இப்ப தண்ணி கொண்டுவரமாட்டன் என்று சொன்னனானே?. கொஞ்சம் பொறு கறியை இறக்கி வைத்துப் போட்டு தண்ணி கொண்டு வாறன். டொக்டர் உனக்கு சொல்லியிருக்கிறார் கோபப் படக் கூடாதென்று. பிளட் பிரசர் கூடுமாம். அது உண்டை இருதயத்துக்கு நல்லதல்ல”, சமாதானத் தோறனையில் பதில் அளித்தாள் மனோகரி.

****

இயற்கையான அழகும், யாழ்ப்பாண குடா நாட்டின் ஒரே ஒரு பருவ கால ஆறான வழுக்கை ஆறும், பச்சை பசேல் என்ற வயல்வெளிகளும் உள்ள ஊர் அளவெட்டி. பிரசித்தமான நாதசுவர மற்றும் தவில் கலைஞர்கள் வாழ்ந்த ஊரான அளவெட்டியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை – மரகதம் தம்பதிகளின் இரு பிள்ளைகள், மனேகரியும், செல்வகுமாரும்;. மனோகரிக்கு இருபது வயதிருக்கும். குமார் இளையவன். வயது பதினெட்டு. வேலு எட்டு ஏக்கர் நிலத்தில் புகையிலை, வெங்காயம், மரக்கரி விவசாயம்செய்து குடும்பத்தைக் கவனித்துக கொண்டான். சொந்தத்தில் கிணறு இருந்தது. மகன் குமாரால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை தகப்பனுக்கு தோட்டத்துக்கு உதவியாக இருந்தான். தங்கை மனோகரி, இருதடவை ஏ லெவல் பரீட்சை பெயில். ஆனால் தையல் வேலை செய்வதிலும், பின்னுவதிலும்; கெட்டிக்காரி.

“நீ படித்தபோதும் தையல் வேலை செய்து வருங்காலத்தில் பிழைப்பைத் தேடிக்கொள்” என்று மகளை மேலே படிக்க விடாமல் வேலு நிறுத்திவிட்டான்;. தாய் மரகதம் நோய்வாய் பட்டு இருந்தது மனோகரி படிப்பை நிறுத்தியதற்கு மற்ற ஒரு காரணம். பெண்களுக்கு ஏன் மேல் படிப்பு என்ற நோக்கம் உள்ளவன் பழமைவாதி வேலு என்ற வேலுப்பிளளை. ஊரில் உள்ள கோவிலில் கொடியேறி தேர் தீர்த்தம் முடியுமட்டும் மாமிசம் வீட்டில் சமைக்க விடமாட்டான். அவன் பிடிக்காத விரதங்கள் இல்லை. எப்போதும் திருநீறும் நெற்றியுமாகவே காட்சியளிப்பான். இந்து மதச் சடங்குகளில் முழு நம்பிக்கை உள்ளவன். அவனுக்குப் வைரவர் கோவில் பூசாரி வாக்கே வேதவாக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலுக்கு தவறாது போய் வருவான். ஊரில் உள்ள பிள்ளையார் கோவில் தேருக்கும் தீர்த்தத்துக்கும் காவடி எடுக்க தவறமாட்டான்.

கிராமத்து வைரவர் ஆலயம்;, ஊர் மக்களின் மதிப்பை பெற்றிருந்தது. வருடா வருடம் வைரவருக்குப் பொங்கி, ஆட்டுக் கிடாய், சேவல் பலிகொடுப்பது ஊர்வழக்கம். வைரவரை அமைதிபடுத்த இந்தச் சடங்கு செய்வது அவசியம் அல்லாவிடில ஊரில் பொக்களிப்பான, பெரியம்மை, சின்னம்மை, கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற தொற்று நோய்கள் தோன்றாமல் இருக்க வைரவரின பாதுகாப்பு கருதி ஊர்மக்கள் வருடா வருடம் ,பொங்கி வேள்வி நடத்துவார்கள்.

****

“மணி பதினொன்றாகி விட்டது. மீன்காரி தேவி வருகிற நேரமாச்சு. எங்கை அவள் குரல் இன்னும் கேட்கவில்லை” என்று மரகதம் சொல்லி வாய் மூடுவதுக்குள், “மீனோய் மீன். நல்ல துடிக்கத் துடிக்க திரளி, விளைமீன், கிளக்கன், ஓரா, கும்பளா இருக்குது. கொஞ்சம் நண்டு;ம் இராலும் கொண்டு வந்திருக்கறின்” என்று தேவி சுருக்கமாக தான் கொண்டு வந்திருந்த மீன் வகைகளை வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் கூவி அழைத்தாள். மீன்காரி தேவியின் நடையில் சினிமாக்காரிகள் நடப்பது போல் ஒரு நளினம் இருந்தது. மீன் நிறைந்த பாரமான கூடைச் சுமையோடு எப்படி நடந்து வியாபாரம் செய்கிறாளோ தெரியாது. அவளது பல வருட வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள் சுன்னாகச் சந்தைக்குப் போய் மீன் வாங்குவதில்லை. காரணம் சில சமயங்களில் பழைய மீனை கடையில் விற்பனை செய்துவிடுவார்கள். தேவி அப்படியில்லை. தேவியைக் கண்டால் அவளை வரவேற்க, வேலியல் இருக்கும் பூவரசமரத்தில் இலைகள் நாலைந்தை ஆய்ந்து, மீன், இரால் வாங்கும் பாத்திரமாக மரகதம் கொண்டு செல்வது வழக்கம்;. தாயைப் பார்த்து மகள் மனோகரியும் அப்பழக்கத்தைக் கற்றுகொண்டாள்.

“கிளி இண்டைக்கு எனக்குப் பத்தியத்துக்கு கிழக்கன் அல்லது திரளி மீன வாங்கி வா. காசு அலுமாரி லாச்சிக்குள்ளை இருக்குது” என்று மகளுக்கு கட்டளையிட்டாள் மரகதம்.

வளவுக்குள் கட்டியிருந்த கொழுத்த, கறுப்புநிற ஆட்டுக்கிடாய் மரகதத்தின் கட்டளையை ஆமோதிப்பது போல் தன் குரலை ம்மா.. என்று வெளிப்படுத்தியது. அக்குரல் “ கிளி எனக்கும் பசிக்கிறது. என்னையும் கவனித்துக் கொள்” என்பது போல இருந்தது. மரகதம் கிடாயின் சத்தம் கேட்டு “கிளி மீன் வாங்கிப்போட்டு போய் வீரனுக்கு இலை, புல் வை. அவன் பசியிலை கத்துறான்” என்றாள் மரகதம். “ வீரன்” என்பது வேள்விக்காக வேலு வாங்கிய கறுப்பு நிற ஆட்டுக் கிடாயுக்கு மரகதம் சூட்டிய பெயர். சில மாதங்களுக்கு முன்பு வேலு சுன்னாகச் சந்தையில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்த அந்த வாயில்லா ஜீவனான முரட்டுக் கிடாய், தோற்றத்தில் ஒரு வீரனைப் போலவே இருந்தது . இரண்டு கூரிய வலைந்த கொம்புகள். கொழுத்த கறுத்த உடம்பு. திமிரான பார்வை. நேரத்துக்கு உணவு வீரனுக்கு கிடைத்தது. குமாருக்கு வீரன்மேல தனி பிடிப்பு. வீரனை வேலு குடும்பமே கவனம் எடுத்து கவனித்தது. வேலு வீரனுக்கு அவ்வளவு பணம் கொடுத்து வாங்கியதற்கு காரணம் இருந்தது. மரகதத்துக்கு இருதய நோய் வந்து பல மாதங்களாகியும் முன்னேற்றமில்லை. அவளின் சாதகத்தை கொண்டு போய் ஊர் சாத்திரியாரிடம் காட்டிய போது “ பயப்படாதே வேலு. உங்கள் குடும்பத்துக்கு யார் கண்பட்டதோ தெரியாது. பக்கத்து காணிகாரனோடு காணி ஆக்கிரமிப்பு கேசையும் வென்றிட்டாய். நீ செலவு செய்த இருபதாயிரம் காசும் கிடைத்துவிட்டது. ஆனால் உண்டை மனைவி மரகதத்துக்கு வந்த நோய் தான் போகுதில்லை. இவ்வளவு நாளும் மரகதத்துக்கு வியாழன் எட்டிலை. இன்னும் ஒரு கிழமையில், வியாழன் மாற்றத்தோடு மரகதத்துக்கு ஒன்பதுக்கு போகப் போறான்.” தேக நலம் சீரடையும் என்று உறுதி செய்தார் ஊர் சாத்திரியார். வைரவர் கோயில் பூசாரி கூட அதையே உருவந்து சொன்னது வேலுவின் ஞாபகத்துக்கு வந்தது. அவர் சில மாதங்களுக்கு முன் அவர் சொன்ன வாக்கின்படியே வேலு பக்கத்து காணிக்காரன் மாணிக்கத்தோடு தொடர்ந்த எல்லை ஆக்கிரமிப்பு வழக்கு பல காலம் இழுபட்டு ஒரு படியாக வேலுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டு வழக்கு செலவு இருபதாயிரமும் எதிரியிடம் இருந்து கிடைத்தது. அந்த கிடைத்த பணத்திலை தான் ஐயாயிரம்; கொடுத்து வீரனை வேலு சுன்னாகச் சந்தையில் வாங்கினான். ஐவரவர் கோயில் பூசாரி வாக்கின் மேல் வேலுவுக்கு அவ்வளவு நம்பிக்கை. “மரகதத்தின உடல் குணமடைய வேண்டு மென்றால் ஒரு கழிப்பு செய்தாக வேண்டும். வெகு விரைவில்; வைரவர் கோயில் பொங்கலும்,; வேள்வியும் நடக்க இருக்கிறது. நீ ஒரு கிடாயை வாங்கி வைரவருக்கு மரகதத்தின் பெயரில் பலி கொடு. வைரவரை சமாதனப்படுத்தினால் உன் குடும்பத்துககே நல்லது. மரகதத்தின் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இது வைரவர் எனக்குச் சொன்னதை தான உனக்குச் சொல்லுகிறன்” என்றார் உருவந்த பூசாரி.

இது பூசாரி வாக்கல்ல, தெய்வத்தின வாக்கென தீர்மானித்தான் வேலு. முடிவு, வைரவர் கோயில் வேள்விக்குப் பலி கொடுக்க அவ்வளவு பணம் கொடுத்து கறுப்பு நிறக் கிடாய் ஒன்றை வாங்கி, வீரன் என்ற பெயர் வைத்து வளர்த்தான். வேள்விக்கு; முன், தேவையான உணவு கொடுத்து; கிடாயைக் கொழுக்க வைத்தான். வேள்விக்கு வரும் கிடாய்களை விட, வந்தாவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு தன் கிடாய் இருக்க வேண்டும் என்பது வேலுவின் எண்ணம். பாவம் தனக்கு மரணதண்டனை நடக்கப்போகுதே என்று தெரியாது வளர்ந்தான் வீரன். வைரவர் கோவிலில் வருடா வருடம் வேள்வி நடப்பதுண்டு. வேள்வியை நிறுத்தும்படி முற்போக்குவாதிகளான சில இளைஞாகள் புரட்சி செய்தும் பயனில்லை. போன வருடம் 400 கிடாய்கள் வைரவருக்கு பலி கொடுக்கப்பட்டது. பலி கொடுக்கப்பட்ட ஒரு கிடாய் ஐம்பதாயிரத்துக்கு விலை போனது.

பல வேள்விகளுக்கு முன்பு ஒரு அதிசயம் அக்கோயிலில நடந்தது. இது ஊரில் சனம் பேசிக் கொண்ட கதை. ஒரு வேள்வியில் முதல் வெட்டிய ஆட்டுக்கிடாயின் இரத்தத்தை பொங்கலோடு சேர்த்து மேலே எறிந்த போது சோற்றின் ஒரு பருக்கையாவது கீழே விழவில்லை. வைரவர், கொடுத்த உணவை ஏற்றுக்கொண்டதே அதன் அர்த்தம் என்று ஊர் சனம் விளக்கம் கொடுத்தார்கள். அந்தக் கதை உண்மையோ பொய்யோ என்பது பலருக்குத் தெரியாது. ஆனால் வேலு குடும்பம் மட்டும் வைரவர் மேல் முழுநம்பிக்கை வைத்திருந்தது.

******

அன்று வைரவருக்கு பொங்கல். அதைத் தெடர்ந்து வேள்வி. நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய்களும், சேவல்களும் மரணதண்டனையை எதிர்பார்த்து காத்திருந்தன. பலியிடப்படும் ஆடு, கோழி முதலியனவை ஆண் பால் இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். கோழியாகயிருந்தால் சேவலாகவும், ஆடாக இருந்தால் கிடாயாகவும் இருக்கும். பலியிடும் கிடாயும், சேவலும் வெள்ளை நிறமாக இருந்தால் அவை நிராகரிக்கப்படுகி;ன்றன. பலி கொடுக்க முன்னர் பலியிடத் தயாராக உள்ள கிடாய் அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்பட்டு, அவை கழுத்தில் சிறு மலர் மாலை அணிவிக்கப்படுகிறது. கிடாய் மூன்று தடவை தலையைக் குலுக்கினால் வைரவருக்கு பலியிடச் சம்மதம் தெரிவித்தாக கருதி பலியிடுகிறார்கள்.

பலி கொடுக்க வந்திருந்த சில ஆட்டுக்கிடாய்களின் கழுத்துக்களை பூமாலை அலங்கரித்தது. நெற்றியில் குங்குமம் வேறு. அவைற்றின் உரிமையாளர்கள் தங்களது ஆட்டுக்கிடாய்களின் மதிப்பை பற்றி புகழந்து பேசிக் கொண்டார்கள். வந்திருந்தது கிடாய்களில் வேலு பலியிடக் கொண்டு வந்த வீரனின் வளர்ச்சியும் தோற்றமும் பலரை கவர்ந்தது. சுமாh நூறு கிலோவுக்கு மேலே நிறை இருக்கும் என்று அதன் ஏடையைக் கணித்தனர்.

ஆடுகள் போடும் அவலக் குரல் சனத்திரலின் சத்தத்தோடு கலந்து மறைந்தது. பூசாரி வந்து, எல்லா பலி கொடுக்கவிருக்கும் ஆடுகளுக்கும், சேவல்களுக்கும் மந்திரம் சொல்லி தீப ஆராதனை செய்தார்;. ஒரு வெள்ளை நிறக்கிடாயாவது பலி கொடுக்க இருக்கவில்லை. ஒரு மிருக வைத்தியர் வந்து கிடாய்களை பரிசோதித்து சாவதற்கு அவைகள் ரெடி என்று சர்டிபிக்கட் கொடுத்தார். காரணம் வேள்விக்கு பின்னர் நோயுள்ள கிடாயின் இறச்சியை சாப்பிட்டு சனங்களுக்கு வருத்தம் ஏதும் வரக்கூடாதல்லவா.

திடகாத்திரமான இருவர்கள் கூரிய கத்திகளோடு, தங்கள் நெற்றியில் குங்குமப் பொட்டும் திருநீற்றோடுடனும் தம் சாதனையை சனத்துக்கு எடுத்துக்காட்ட தயாராக நின்றனர். ஒரே வெட்டில் தலை வேறு உடல்வேறாக வேண்டும். வேள்விகளில அவாகள் கூலிக்கு வேலை செய்தார்கள். ஒரு கிடாயைவெட்ட இவ்வளவு கூலி என்பது பேச்சு.

சௌதி அரேபியாவில் மரணதண்டனை பெற்ற குற்றவாளிகளின் தலையை வெட்டுவது போல வேள்வி இருந்தது. அது சௌதி அரேபியாவில் நடப்பது வெள்ளிக்கிழமை பிராத்தனைக்குப் பின். அதை இரசித்து பார்க்க சனத்திரள் வேறு. அதே போன்று கிடாய்களை வெட்டப்படுவதை பாhக்க ஒரே இடிபட்டு சனம் கூடிநின்றது. கிடாய்களின உரிமையாளாகளுக்கு முன்னிடம் கொடுக்கப்பட்டது.

பலிகொடுக்கப்படும் முதற் ஆட்டுக் கிடாயாக வீரனைப் பூசாரி தெரிந்தெடுத்தார். வேலுவும் மகன் செலவகுமாரும் வீரனை பலி மேடைக்கு அழைத்துச்சென்றனர். குமாருக்கு வீரனை பலிகொடுப்பதில் விருப்பமில்லை. தன் சொல்லை அப்பா கேட்டகப்போவதில்லை என்று அவுனுக்கு தெரியும். வீரனை அவன் அன்போடு வளர்த்தவன். இலை தழைகள் வெட்டிப் போட்டவன். வீரன் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகிவிட்டான்.

தலை வெட்டுபவர்களில் மீசை வத்த ஒருவன், வீரனை வேலுவிடம் இருந்து வாங்கி பலியிட அழைத்துச் சென்றான். வீரன் பலியடப்போவதற்கு முன் தனது குரலை உயர்த்தி கத்தி எதிர்ப்பு தெரிவித்தது. தலை வெட்டும் மற்றவன் கத்தியோடு தயாராக நின்றான். கண் சிமிட்டும் நேரத்துக்குள் வீரனின் தலையும் உடலும் ஒரே வெட்டில் வேறாக்கப்பட்டது. வீரனின் உடலில் இருந்து இரத்தம் பீறிட்டுச் சீறியடித்தது. இரத்தம் நிலத்தில் போய் வீணாகமல் இருக்க, வேலுவின நண்பன் சிவராசா ஒருபாத்திரத்தில விரனின் குருதியை ஏந்தினான். குமார் அதைச் செய்ய மறுத்துவிட்டான். அந்த குருதியில் கறி செய்து மரகதத்துக்கு கொடுத்தால் நோய் சீக்கிரம் குணமாகும் என்று யாரோ வேலுவுக்கு சொன்னார்கள். அதற்காக வீரனின் இரத்தம் கீழே சிந்தாமல் பாத்திரமொன்றில் சிவராசாவால் ஏந்தப்பட்டது. இதை மற்றைய கிடாய் உரிமையாளர்கள் தங்கள் கிடாய்கள வெட்டும் போது செய்ததை அவதானிக்க முடிந்;தது. வீரiனின் தலையையும் உடலையும் மற்றைய பிலியிடப்பட்ட கிடாய்களோடு வரிசையில் கிடத்தப்பட்டது.

பலியடப்பட்ட வீரனின் இறைச்சிக்கு அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிடப்பட்டது. வேலு வீரனை வாங்கிய விலையை விட பல மடங்கு இறந்தபின் அதற்கு மதிப்பிடப்பட்டது. வேலு வீரனின் உடலை விலைக்கு கேட்டவர்களுக்;கு கொடுக்க மறுத்துவிட்;டான். வேள்வி முடிந்ததும,; வீரனின் தலையையும் உடலையும் ஒரு தள்ளு வண்டியில் சிவராசா உதவியோடு ஏற்றினான் வேலு. மனைவி மரகதமும் மகள் மனோகரியும்; வீரனின் உடலை பார்க்க வேண்டுமல்லவா. அதன பிறகு தன் குடும்பத்துக்கும், சிவராசா குடும்பத்துக்கும், கிட்டத்து உறவினர்களுக்கும் வீரனின் இறச்சியை கூறுபோட்டு கொடுப்பது என்பது வேலுவின் திட்டம். வீரனின் உடலை சுமந்து கொண்டு தள்ளுவண்டி வேலுவின விட்டை நோக்கி நகர்ந்தது.

*******

வேலு, வீரனின் உடலோடு வீட்டுக்கு அருகே வந்தபோது ஒப்பாரி சத்தம் கேட்டது. வீரனுக்காக தன் குடும்பம் ஒப்பாரி வைக்கிறது என வேலு நினைத்தான். அச்சமயம் வேலுவின் இரு மைத்துனர்களும் இனத்தவர்களோடு அழுது கொண்டு தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான்.

“ ஐயோ மச்சான் மரகதம் அக்கா எங்களை விட்டிட்டு வீரனோடு போயிட்டா. வைத்தியரும் கையை விரித்திட்டார். கெதியிலை வீட்டுக்கு வாங்கோ” என்று கதறி அழுதபடி ஓடி வந்தார்கள். வீட்டைச் சுற்றி அழுகையோடு ஒரே சனம். கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் ஓப்பாரிக் குரலோடு மகள் மனோகரியின் அழுகையும் கேட்டது. வேலுவும், குமாரும் திகைத்துப்போய் வாயடைத்து நின்றார்கள். வைரவர் மரகதத்தையும் பலி வாங்கிவிட்டாரா. வைரவர் கோயில் பூசாரியும், சாத்திரியாரும் சொன்னது பிழைத்து விட்டதா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *