இப்படிக்கு பூங்காற்று…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 13,975 
 

சரஸ்வதியின் முகத்தில் கலவரம் தூக்கலாக இருந்தது. காபி கொடுக்கும்போது, புன்னகைக்க முயற்சி செய்தாள். அது அவ்வளவு இயல்பாக இல்லை.

‘ஒரு வாரமாக ஒருவன் தினமும் நேரம் காலம் இல்லாமல் தொலைபேசுகிறான்; தொல்லையாகப் பேசுகிறான். கொஞ்சம் நேரில் வர முடியுமா?’ – இதுதான் அவள் போனில் சொன்னது. அவ்வப்போது துணைக்கு வந்து இருக்கும் அம்மாவும் அப்பாவும் காசி யாத்திரை போயிருப்பதாக இங்கு வந்தபோது சொன்னாள். 16 நாட்கள் டூர். இன்னும் இரண்டு நாட்களில் வந்துவிடுவார்கள். ஆனால், அதற்குள் போன்காரன் தொல்லை அதிகரித்துவிட்டது.

”எந்த நேரமும் போன் வரலாம் சார்…” என்றாள். என்னமோ… இப்போதெல்லாம் என்னை ‘உதயா’ என அழைப்பது இல்லை. என் கல்யாணத்துக்குப் பிறகு அவளாக இப்படி முடிவு எடுத்திருக்க வேண்டும். அந்தந்த நாட்களுக்காகக் காத்திருந்து தொலைபேசியில் கல்யாண, திருமண வாழ்த்து சொல்லிக்கொள்ளும் சடங்காக நட்பின் விஸ்தீரணம் சுருங்கிவிட்டதால், மரியாதை பெருகியிருக்கலாம்.

‘நக்கலாகச் சிரிக்கிறான்… கிண்டல் பாட்டு பாடுகிறான்’ – நட்பு நல விசாரிப்புக்கு இடையிடையே சொன்னாள்.

”ஆபாசமாகப் பேசுகிறானா?” என்று கேட்டபோது, ”இல்லை அதற்கான ஆரம்பம்போல இருக்கு” என்றாள் சுருக்கமாக.

”நீ தனியா இருப்பதைத் தெரிஞ்சவனாத்தான் இருக்கணும். அந்த நம்பரைக் குடு, நான் பேசிப்பாக்கிறேன்” என்றேன்.

இப்படிக்கு பூங்காற்று1அவளுடைய செல்போனில் அந்த நம்பரை ‘டேஞ்சர் மேன்’ எனப் பதிவு செய்திருந்தாள். அந்த எண்ணைப் பச்சை பட்டனால் அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். ‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி…’, ‘நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி…’ என ஏழெட்டு தடவை ஒலித்தது. ஆன் செய்துவிட்டு மௌனமாக இருந்தான். ”ஹலோ… யார்ரா நீ? போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளிருவேன். ஜாக்கிரதை” என்றேன். மிரட்டுவதற்கான குணம் ரத்தத்திலேயே இருக்க வேண்டும்போல. என் ரத்தத்தில் மைனஸ்.

மறுமுனை துண்டிக்கப்பட்டது.

”இனிமே தொல்லை பண்ணமாட்டான்” – நானே சொல்லிக்கொண்டேன்.

சரஸ்வதி சிரித்தாள். ”மிரட்டும்போது நீங்கதான் ரொம்பப் பயந்த மாதிரி தோணுச்சு.”

இருவரும் செல்போனையே பார்த்தபடி காத்திருந்தோம். அவளுக்கு சென்னையில் இருந்த சொந்தங்கள் அவ்வளவு நெருக்கம் இல்லை. மேலும் இதுபோன்ற விஷயங்கள் தெரிந்தால், வீணான கற்பனைக்கு வழிவகுத்துவிடும் என நினைத்தாள். அவளுக்கு அருகில் இருந்திருக்க வேண்டிய நெருங்கிய சொந்தம் வெகு தூரத்தில்… அபுதாபியில் இருந்தது. அவள் கணவருக்கு அங்குதான் வேலை.

கொஞ்ச நேரம் முன்பு வரை ஜன்னலுக்கு வெளியே தெரிந்த மரம், இப்போது இருட்டுடன் கலந்துவிட்டது.

”ஏழு மணிக்கே இருட்டிருச்சே!”

மழைக்காலத்தில் இருட்டிப்போவது ஆச்சர்யப்படும் விஷயம் அல்ல; இருந்தாலும் பட்டாள்.

”எத்தனை மணிக்கு போன் செய்றான்?” – இதுவும் ஏற்கெனவே என்னால் கேட்கப்பட்ட கேள்விதான்.

”நேரம் காலம் எல்லாம் இல்லை. ராத்திரி ஒரு மணிக்குக்கூடப் பண்றான்” என முதலில் சொன்னதையே மறுபடியும் சொன்னாள்.

”ஒரு நாளைக்கு ஆறேழு தரம் பண்றான்” என்றாள் கூடுதலாக.

மறுபடி டேஞ்சர் மேன்.

எடுத்து ஹலோ என்பதற்குள் அவன் ஹஹ்ஹா.. ஹா… ஹா எனச் சிரிப்பையே உச்சரித்தான்.

”இத பார் தம்பி… விளையாட்டு இல்ல…”

அவனும், ”இத பார் தம்பி விளையாட்டு இல்ல…”

கட்.

மறுபடி முயற்சித்தபோது, ஸ்விட்ச்-ஆஃப் செய்து வைத்திருப்பதாக ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி, சிறிது நேரம் கழித்து முயற்சிக்குமாறு அறிவுறுத்தியது குரல். செல்போனே அந்த முகம் தெரியாத விரோதியின் முகமாக இருந்தது.

இப்படிக்கு பூங்காற்று2சரஸ்வதி எதிரில் உள்ள நாற்காலியில் அமராமல், தரையில் அமர்ந்து கொண்டாள், ஒரு மாணவிபோல. 10-வது பரீட்சையின்போது, எந்தெந்த ‘சம்மரி’யை மனப்பாடம் செய்யலாம் என்பதில் இருந்து என் ஆலோசனைதான் அவளுக்கு முக்கியம்; வேதவாக்கு. நான் பேச ஆரம்பித்தால், புத்தரின் போதனை கேட்கத் தயாராவதுபோல தயாராவாள். நெற்றி வகிடின் தொடக்கத்திலும் நெற்றியிலும் குங்குமம்; காட்டன் புடவை; கொஞ்சம் மெலிந்திருந்தாள்; தீட்சண்யமான அதே பழைய கண்கள்.

கொசுக்கடி அதிகமாக இருந்தது. அடிக்கடி என்னை நானே அடித்துக்கொண்டிருந்தேன்.

”கதவைச் சாத்திரலாமா?” என்றாள்.

அவள் தனியாக இருப்பதை உத்தேசித்து, ”பரவாயில்லை.”

”பரவாயில்லைன்னா, கொசு கொஞ்ச நேரத்துல சாப்பிட்ரும்’.’

சிரித்தபடி எழுந்துபோய் கதவைச் சாத்தினேன். அழுத்திச் சாத்துவதில் தயக்கம் காரணமாக, பாதிக் கதவைத்தான் சாத்தினேன். கதவின் இடையில் மெல்லிய இடைவெளி இருந்தது.

”இந்த மாதிரி இடைவெளிதான் கொசுவுக்கு செம ஜாலியா இருக்கும். ஆவேசமா உள்ளே நுழையும்” என்றபடி கதவை அழுத்திச் சாத்திவிட்டு, ஜன்னல்களையும் சாத்தினாள். அறைக்குள் ஒரு ‘கும்’ குடியேறியது.

அவள் மனது தும்பைப் பூ வெள்ளை. அவளை யாரும் சந்தேகிக்கவே முடியாது. அவளும் சிலரைச் சந்தேகிக்கவே மாட்டாள். அதில் நான் ஒருவன்; முக்கியமான ஒருவன்; இளம் பருவத்துத் தோழன்; பள்ளித் தோழன்.

அரசுப் பள்ளி. ஆண்டு விழாவுக்கு நாடகம் போட்டோம். தமிழய்யா ராசகோபாலன் நாடகக் குழுவினரை அழைத்து மொத்த விழாவும் எப்படி இருக்க வேண்டும் என விவரித்தார். நாங்கள் மொத்தம் ஆறு பேர் அவர் முன்னால் அமர்ந்திருந்தோம்.

கடவுள் வாழ்த்து முடிந்ததும் வரவேற்புரை, சிறந்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு, தலைமை உரை… எனச் சொல்லிக்கொண்டே போனார். என்னுடன் வந்திருந்த அத்தனை பேரும் குறிப்பு எடுக்க நோட்டுப் புத்தகம் வைத்திருந்தார்கள். என்னிடம் இல்லை. ‘வரும்போதே ஒரு நோட்டு கொண்டாரணும்னு தெரிய வேணாமா?’ என ஆசிரியர் கண்டிப்பதற்கு அரை விநாடி அவகாசம்தான் இருந்தது. திட்டு வாங்குவதைத் தவிர்க்கவே முடியாது. சரஸ்வதி சட்டென அவளுடைய நோட்டில் இருந்து ஒரு பக்கத்தைக் கிழித்தாள். அப்பாடா அவளுக்குத்தான் என் மனசு படும் பதைபதைப்பு புரியும். பேப்பரை வாங்க கையை நீட்டினேன். பேப்பர் கனமாக இருந்தது. துணுக்குற்று திரும்பிப் பார்த்தேன். கிழித்த பேப்பரை அவளுக்கு வைத்துக்கொண்டு எனக்கு அவளுடைய நோட்டைக் கொடுத்துவிட்டாள். என் அருமை சரஸ்… எத்தனை நட்பு, எத்தனை அன்பு!

என் சக பையனிடம்கூட அப்படிப் பேசியது இல்லை. அவ்வளவு பேசினோம். இணைபிரியாத நட்புக்கு இடையே ஏதோ டி.என்.ஏ சிமிலாரிட்டி இருக்கும் என ஆராய்ச்சி சொல்கிறது; இருக்கலாம். பள்ளியில் எங்களை வைத்து எத்தனையோ கதைகள் கிளம்பின. அவற்றை நாங்கள் மட்டும் நம்பவே இல்லை.

பள்ளிப் படிப்புக்குப் பிறகு, நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்; அவள் உள்ளூரிலேயே டெய்லரிங் கிளாஸ். ஆனால், ஆச்சர்யமாக ஒரே நாளில் எங்கள் இருவருக்கும் வேறு வேறு இடங்களில் திருமணம் ஆனது. ஆறு வருடங்கள் கழித்து இன்றுதான் போன் செய்து… நேரில் சந்திக்கிறோம்.

”உன் நம்பர் அவனுக்கு எப்படித் தெரியும்?”

”எதேச்சையா என் நம்பருக்கு வந்தவன்தான். முதன்முதலாகப் பேசினப்ப, ‘டே அழகப்பா… கோயம்புத்தூருக்கு வந்திருக்கேன்டா. நீ எங்க இருக்கே?’னு கேட்டான். எனக்குச் சிரிப்பு வந்துருச்சு. ‘நான் அழகப்பன் இல்லை; ராங் நம்பர்’னு சொன்னேன்.”

”சிரித்ததுதான் தப்பாகிவிட்டது…” என்றேன். ஆனால், யாராக இருந்தாலும் சிரிப்புதான் வரும். பொம்பளைச் சிரிச்சதுதான் பிரச்னை.

”இப்படி உயிர் எடுப்பான்னு நினைக்கலை…”

”உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டியா?”

அவள் பதில் சொல்லவில்லை. தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தன் மெட்டியை விரல்களால் சுழற்றினாள். ‘சொல்லவில்லை’ என அவள் சொல்லவில்லை.

அபுதாபியில் இருக்கிறவருக்கு திகில் கொடுக்க வேண்டாம் என எண்ணியிருக்கலாம். அமைதியைப் போக்க ஜன்னலுக்கு வெளியே மழைச்சாரலின் முயற்சி. மழையின் சத்தம் ஒருவிதத்தில் பேரமைதி உருவாக்கியது. தண்ணீர் சுவரால் பாத்தி கட்டப்படும் அமைதி.

எதையாவது பேசியே ஆக வேண்டும்போல, ”கடைசியா என்ன பேசினான்?” என்றேன்.

”பேசலை… பாடினான். ‘மலரே ஒரு வார்த்தை பேசு… இப்படிக்கு பூங்காற்று’னு. நல்ல கட்டைக் குரல்ல…”

”திமிர் பிடிச்சவன்… பார்ப்போம். இல்லைனா, கமிஷனர் ஆபீஸ் சைபர் கிரைம்ல கம்ப்ளைன்ட் குடுத்துருவோம்.”

”அதனால வேற எதாவது பிரச்னை ஆகிடுமோனு பயமா இருக்கு.”

தனியாக இருக்கும் பெண்ணுக்கு தொல்லைதான். போன் நம்பரை மாற்றுவதிலும் சிக்கல். ‘எதற்கு?’ என எல்லோருக்கும் காரணம் சொல்லவேண்டி வரும். குறிப்பாக, கணவனுக்கு.

போன் வந்ததும் மிரட்டினால் போதும். ஒதுங்கிக்கொள்வான். தேவைப்பட்டால், சைபர் கிரைம்.

அவளுடைய கணவர் பற்றி இரண்டாவது முறை விசாரித்தபோது, ”வருஷத்துக்கு ஒரு தரம் வருவார்; ரெண்டு வாரம் இருப்பார்” – சொல்லிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தாள். கால் விரலில் இருந்த மெட்டியைக் கழற்றி கை விரலில் போட்டுப் பார்த்தாள். லூஸாக இருந்தது.

”ஓ…” அந்த எழுத்தைத் தொடர்ந்து என்ன பேசுவது?

”இங்கேயே வேறு வேலைக்கு மாறிக்கலாமே?”

”15 நாளே அதிகம்தான்.”

அவள் முகத்தைப் பார்த்தேன். அவளும் பார்த்தாள்.

”மகிழ்ச்சியா இருக்கணும்னு நான் ஆசைப்படுறதுகூட இல்லை. அது என் யோசனையிலயே இல்லை.”

”குழந்தை?”

”ப்ச்… பொறக்கலை”- உதடு பிரியாத சோகப் புன்னகையோடு, ”இன்னொரு தடவை போன் வந்தா, நான் எடுத்துப் பேசட்டுமா?” என்றாள்.

”வேணாம்… அவனை என்கரேஜ் பண்றது மாதிரி ஆகிடும்.”

”இரு, தோசை வார்க்கிறேன். ச்சும்மா ரெண்டு சாப்பிடு.”

இப்போதுதான் பழைய மாதிரி பேச ஆரம்பித்தாள்.

இப்படிக்கு பூங்காற்று3நான் மறுக்கலாம் என முடிவு எடுப்பதற்கு முன் சமையல்கட்டுக்குள் மறைந்தாள். டி.வி போடலாம் என ரிமோட்டைத் தேடினேன். டீபாய், அலமாரி, டி.வி ஸ்டாண்டு எல்லாவற்றிலும் பாண்டிச்சேரி அன்னை. டி.வி-யில் டிஃபால்ட்டாக சுப்ரபாதம் சேனல்.

ஆளுக்கு இரண்டு இரண்டு தோசைகள். புதினா சட்னி.

” ‘பாண்டியன்’ ஷூட்டிங் அப்ப நம்ம ஸ்கூல் பசங்க எல்லாரும் போய் ரஜினியைப் பார்த்தோமே… செம ஜாலில்ல? அவர் போட்டுத் தந்த ஆட்டோகிராப் பத்திரமா வெச்சுருக்கியா?”

”எனக்கு எங்க ஆட்டோகிராப் போட்டாரு? நாலஞ்சு பேருக்குத்தான் போட்டாரு. அதுல நீ ஒண்ணு… அதை எனக்குக் குடுத்திட்ட.”

”அவர் யாருக்குப் போட்டார்னு எனக்கும் உனக்கும்தான் தெரியும். அது உனக்குப் போட்டதாவே இருக்கட்டும். நீதான் ரொம்ப ஆசைப்பட்ட.”

இப்போது அந்த ஆசைக்கு அவளிடம் அர்த்தம் இல்லை.

”நாம ஒருமுறை ஸ்கூல் மாமரத்து வேரில் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப நம்ம பாட்டனி மிஸ் சொன்னது ஞாபகம் இருக்கா?” என்றாள்.

‘இருக்கு’ என்பதாகச் சிரித்தேன்.

”அவங்க நம்பர் இருந்தா இப்பவும் ஃப்ரெண்டாத்தான் இருக்கோம்னு சொல்லலாம்ல? ‘இந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் எதில் போய் முடியும்னு தெரியும்’னாங்களே… இரு பானுமதிகிட்ட அந்த அம்மா நம்பர் இருக்கானு கேட்டுப் பார்க்கிறேன்.”

”சே… வேணாம். விடு சரஸ்…”

அவள் பானுமதிக்கு போன் செய்ய போனை எடுக்க எத்தனித்த நேரம்… போன் அடித்தது. பிரைவேட் கால். ”அவன்தான்… அவன்தான்!” என்றாள் போனைத் தொடாமலேயே.

பட்டனை அழுத்தி, அழுத்தமாக, ”ஹலோ” சொன்னேன்.

மறுமுனையில் வழக்கம்போல மௌனம்.

சரஸ்வதி என்னையே பதற்றமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

”நீ யாரு மிஸ்டர்? எதுக்கு போன் பண்ற இப்ப? தொலைச்சுடுவேன்” – இந்த முறை கிட்டத்தட்ட போலீஸ் குரலில் சொல்லிவிட்டேன்.

மறுமுனை நிதானமாக, ”நீ யாருடா? இந்த நேரத்தில் என் வீட்ல நீ என்ன பண்றே? போனை அவகிட்ட குடு” என்றது குரல். சட்டென எனக்குப் புரிந்துவிட்டது. சரஸ்வதியின் புருஷன்.

சரஸிடம் கொடுத்தேன்.

”இல்லை என்னோட ஃப்ரெண்ட்…” என்று சொல்லிவிட்டு வெகுநேரம் போனை காதில் இருந்து எடுக்காமல், ‘ம்’ மட்டும் சொல்லிக்கொண்டிருந்தாள். நடுவே, ”ஒருத்தன் போன் பண்ணி டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருந்தான். அதுக்காகத்தான் ஹெல்ப் கேட்டேன்” என்றாள். நான்கைந்து நிமிடங்களில் அவ்வளவுதான் பேசினாள்.

சிவப்பு பட்டனை அழுத்திவிட்டு, ”அபுதாபி” என்றாள் தட்டையாக. ”ஸாரி… உன்னை எதுவும் சொல்லிட்டாரா உதயா?” என்றாள். அவளை எதுவும் சொல்லிவிட்டதை அவள் காட்டிக்கொள்ளவில்லை.

”நான்தான் அவசரப்பட்டுட்டேன். ஸாரி!” என்றேன். மழை விட்டிருந்தது.

”நீ கிளம்பு… ரொம்ப லேட் ஆகிடுச்சு.”

”போன் வந்தா?”

”வந்தா பாத்துக்கலாம்… இனிமே ரெண்டு பேரோட போன் டார்ச்சரை சமாளிக்கணும். அவர் பண்ணுவாரா, அவன் பண்ணுவானானு தெரியலையே!”

ஒரு பயம் இன்னொரு பயத்தைச் சாய்த்துவிட்டதுபோல இருந்தது. கதவைத் திறந்தபோது, மழைக்கால அடர் இருட்டு.

எதிர் ஃப்ளாட்டில் வேட்டியும் பனியனுமாக ஒருவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, டம் என கதவைச் சாத்திக்கொண்டார். அவர் என்ன கற்பனையில் இப்படி விரோத மாகக் கதவைச் சாத்தினாரோ!

புறப்படும்போது, வாசலில் செருப்பு ஸ்டாண்டில் ஒரு ஜோடி ஆண் செருப்பு புத்தம்புதிதாக இருந்தது.

”என்ன பாக்கிற? எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத்தான். வாசலில் லேடீஸ் செருப்பு மட்டும் இருக்கிறது ஒரு மாதிரியா இருக்கு.”

குனிந்து ஷூவைப் போட்டுக்கொண்டு இருந்தபோது, ”ரஜினி போட்ட ஆட்டோகிராப் வேணுமா உனக்கு?” என்றாள்.

”அது உன்கிட்டயே இருக்கட்டும்… வித் லவ்…”

”என்னது?”

”ரஜினி அப்பிடித்தானே எழுதியிருந்தார்?”

”ஓ!” சிரித்தாள்.

என்னுடைய செல்போன் ஒலித்தது. மனைவி. ”என்ன லேட்டு… எங்க இருக்கீங்க?” என்றாள்.

சரஸ்வதி, ‘வொய்ஃப்பா?’ என்றாள் ஓசையற்ற உச்சரிப்பில்.

‘ஆமாம்’ என்றேன் தலையசைத்து.

நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதைத் தவிப்போடு பார்த்தாள் சரஸ்வதி.

”இல்ல… ஆபீஸ் மீட்டிங்லாம் இல்ல. என்னோட ஃப்ரெண்டு… சரஸ்வதினு பேரு. அவங்க வீட்டுக்கு வந்தேன்..” என்றேன் நிறுத்தி நிதானமாக.

நான் சொன்ன இந்தச் சாதாரண உண்மைக்காக, அவள் ஏனோ கண்களில் நீர் மிதக்கப் பூரித்தபடி பார்த்தாள்.

அவளுடைய போன் ஒலித்தது. அவனா, அவளது கணவனா எனத் தெரியவில்லை. அவள் போனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ”அப்புறம்… எப்ப வர்றே?” என்றாள் கண்கள் மின்ன!

– நவம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *