ஓர் தமிழ்க் காதல் கதை!

19
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 77,200 
 

இது ஒரு தனித்துவம் வாய்ந்த தமிழ் காதல் கதை. அது என்ன, “தனித்துவம்’ என்பதை, கடைசியில் சொல்கிறேன்.

என் நண்பன் வேலாயுதனின் மகள், செல்வியின் திருமணத்திற்குச் சென்ற போது, அங்கு எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. வேலாயுதனும், அவன் மனைவி மாதவியும், என்னை மிக அன்போடு வரவேற்று, காலைச் சிற்றுண்டி சாப்பிட, சாப்பாடு கூடத்திற்கு அழைத்துச் சென்று, வரிசையில் காலியாக இருந்த ஓரிடத்தில் அமரச் செய்து, உணவு உபசரிப்பவரைக் கூப்பிட்டு, “பிரத்யேகமாக’ கவனிக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றனர்.

ஓர் தமிழ்க் காதல் கதை!இட்லி, சர்க்கரைப் பொங்கல், வடை என, வகை வகையான உணவு வகைகளைச் சுவைத்தபடி, எதிர்வரிசையைக் கவனித்த எனக்கு, சற்றுத் தொலைவில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அழகான பெண்மணியைப் பார்த்ததும், இதயம் ஒரு வினாடி நின்று, பின் துடிக்க ஆரம்பித்தது.

“அவள் என் காதலி…’ என்று சொல்லப் போகிறேன், என்றுதானே நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும்; அதுதான் இல்லை. அவள், என் கல்லூரி நண்பன் தமிழரசுவின் காதலி கண்மணி.

அவளை அங்கு பார்த்ததற்கு, நான் ஏன் திடுக்கிட வேண்டும் என, உங்களுக்குத் தோன்றுமே?

அதுதான் இந்தக் கதை!

நான் கல்லூரியில் படித்த நாட்களில், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் தமிழரசு. பெயருக்கு ஏற்றாற்போல், தமிழரசுக்கு, தமிழ் மேல் அலாதியான பற்று. கவிதைகள், கதைகள், கட்டுரைகள், பட்டிமன்றம் என்று, இன்னும் பிற ஏராளமான போட்டிகளில், துடிப்புடன் கலந்து கொண்டு, பரிசு பெற்று வருவான்.

தஞ்சையில் இருந்த எங்கள் கல்லூரியிலும், சுற்று வட்டாரத்தில் இருந்த எல்லாக் கல்லூரிகளிலும், தமிழரசுவைப் போட்டியில் சந்திக்கப் பலர் இருந்த போதிலும், வெற்றிக்கனி பறிப்பது, தமிழரசாகத்தான் இருப்பான்.

ஆனால், அவன் இளநிலை இறுதியாண்டு படிக்கையில், ஒரு சரியான போட்டி வந்து சேர்ந்தது; அவள்தான் கண்மணி. அவள், முதலாண்டு தமிழ் இலக்கிய மாணவியாக இருந்த போதிலும், பேச்சுத் திறமை, குரல் வளம், தோற்றம் எல்லாமே மிகவும் நேர்த்தியாக இருந்தது.

எங்கள் கல்லூரியிலேயே நடந்த ஒரு பேச்சுப் போட்டியில், “வாழ்க்கையில் அவசியம் காதலா, காசா?’ என்பதை ஒட்டியும், வெட்டியும் பேச வேண்டிய தலைப்பில், தமிழரசு – கண்மணி இருவரும் எதிர், எதிராக மோதினர். “காதல்தான்’ என்ற சார்பில் பேசிய கண்மணி, “காசு தான்’ என்று பேசிய தமிழரசுவைத் தோற்கடித்து, முதல் பரிசையும், ஏராளமான கைத் தட்டல் களையும் அள்ளிச் சென்றாள்.

பிறகு என்ன என்கிறீர்களா…

இது கூடவா தெரியாது? மோதலில் ஆரம்பித்து, காதலில் முடிந்தது.

கல்லூரியில், கண்மணியைக் காதலிக்க பலர் காத்திருந்த போதும், அவள் கடைக்கண் பார்வை, தமிழரசுவின் மேல்தான் விழுந்தது; அவனும் காதலில் வீழ்ந்தான்; கவிதைகளாக எழுதிக் குவித்தான்.

படிப்பு முடிந்த பின் தான் கல்யாணம் என்று கண்டிப்பாகக் கூறிய கண்மணி, தமிழரசுவை ஒரு நிரந்தர வேலையிலும் பார்க்க ஆசைப்பட்டாள். சற்று கனவுலகிலேயே அலைந்து, திரிந்து கொண்டிருந்த தமிழரசுவின் இலக்கு, திரைப்பட உலகமாக அமைந்திருந்தது. அவன் ஒரு திரைப்படக் கவிஞனாகவோ, கதாசிரியனாகவோ அல்லது இயக்கு னராகவோ உருவாக வேண்டுமென்றே முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அரசு உத்தியோகத்தில், அழுத்தமாக அமர்ந்திருந்த கண்மணியின் பெற்றோருக்கு, தமிழரசுவின் கனவுகள் ரசிக்கும்படியில்லை.

தமிழரசுவின் வீட்டிலும், நிரந்தரமாக சம்பாதிக்கும் திறனற்ற பிள்ளைக்கு, ஒரு வீட்டில் சென்று, பெண் கேட்கும் அளவுக்கு தைரியமில்லை.

பிறகென்ன… கண்மணி – தமிழரசுவின் காதல் சிதைந்தது.

கண்மணியின் அப்பா, ஓராண்டுக்குள் வடக்கே ஓர் இடத்திற்கு மாற்றல் பெற்று, குடும்பத்துடன் மறைந்து போனார். தமிழரசு மட்டும், கண்மணியை மறக்க முடியாமல், “நிழலைத் துரத்தினவன்… கண்ணுக்கெட்டாத விண்மீன்… பெண் என்றோர் மண்…’ என, பிதற்றலாக கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தான்.

“என்னங்க… என்னை நினைவிருக்கிறதா?” என்றபடி, என் எதிரே வந்து நின்றாள் கண்மணி.

தமிழரசுவைப் பற்றிய பழைய நினைவில் மூழ்கியிருந்த நான், கண்மணி சாப்பிட்டு எழுந்து, கை கழுவி என் முன்னால் வந்து புன்னகையுடன் கேள்வி கேட்டதை அப்போதுதான் உணர்ந்தேன்.
“ஏன் தெரியாமல்… கண்மணிதானே… உங்களை எப்படிங்க மறக்க முடியும்… நல்லா இருக்கீங்களா?” என்றேன்.

“நல்…லா இருக்கேன்… என்ன,”ங்க’ மரியாதையெல்லாம் பலமா இருக்கு… பத்து வருஷத்தில நான் அவ்வளவு பெரிய பொம்பளை யாகவா மாறிட்டேன்?” என்றாள், கண்மணி சிரித்தபடி.
மாறித்தான் இருந்தாள். சற்று பூசினாற் போல்… கல்யாணமாகி குழந்தை பெற்றவளுக்கு உள்ள பளபளப்பு… பகட்டான பட்டுச் சேலை, நகைகள், வகிட்டில் குங்குமம்…

“இதோ, கை கழுவிட்டு வர்றேன்…” என்றபடி எழுந்தேன்.

“சரி… வாங்கண்ணா… அதோ அங்க என் கணவர் உட்கார்ந்திருக்கார்; அறிமுகம் செய்றேன்,” என்றபடி சென்றாள்.

நான் கையைத் துடைத்தபடி சென்ற போது, மிக நாகரிகமாக உடையணிந்து, ஏழு வயதுப் பெண் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவரை, எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள் கண்மணி.

“வாங்கண்ணா… இவர்தான் என் கணவர் அழகேசன். வேலூரில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இவள், என் மகள் பொன்மணி; மூன்றாவது படிக்கிறாள். என்னங்க… இவர், என்னோடு தஞ்சை கல்லூரியில் படித்தவர்; பெயர் முத்தரசன்… நான் கூட சொல்லியிருக்கேனே… எனக்குக் கல்லூரியில் படிக்கும் போது, தமிழரசு என்று ஒருவர், என்னோடு கவிதை, பேச்சு போட்டியில் எல்லாம் போட்டி போடுவாருன்னு… அவருடைய மிக நெருங்கிய நண்பர்,” என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

எனக்கு, தமிழரசுவின் பெயரை அவ்வளவு இயல்பாகக் கூறி, தன் கணவருக்கு கண்மணி அறிமுகம் செய்து வைத்தது வியப்பாக இருந்தது.

“வணக்கம்,” என்று கை குவித்தேன்; அவரும் கை குவித்தார்.

“உட்காருங்க,” என்று, தன் அருகில் ஓர் இருக்கையைக் காட்டிய கண்மணி, “சொல்லுங்க… எப்படி இருக்கீங்க… எங்க வேலை பார்க்கறீங்க… உங்க நண்பர் எப்படி இருக்கிறார்… இந்தக் கல்யாணத்தில் நீங்கள் யார் பக்கம்?” என்று, சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

“இரு… இரு… ஒவ்வொரு கேள்வியாகப் பதில் சொல்கிறேன்…” என்று, ஆரம்பித்தேன்.

நான் எங்கு வேலை செய்கிறேன்… எனக்கும், இந்தக் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம் போன்றவைகளுக்கெல்லாம் பதில் சொன்ன நான், வேண்டுமென்றே தமிழரசுவைப் பற்றிய கேள்விக்கான பதிலைத் தவிர்த்தேன்.

தோல்வியில் முடிந்த அந்தக் காதல், அவளை எந்த அளவு பாதித்திருந்தது என்பதை அறிய வேண்டுமென்ற ஆசைதான்… தவிர, அவ்வளவு தைரியமாகத் தன் கணவனிடம் தமிழரசுவைப் பற்றி வேறு சொல்லி இருக்கிறாளே என்ற வியப்பு!

மீண்டும் கண்மணியே கேட்டாள்…

“என்ன அண்ணா… தமிழரசு எப்படி இருக்காங்க?” என்றாள். தொடர்ந்து, “கல்யாணமாயிடுச்சா… தஞ்சைலதான் இருக்காங்களா?” எனக் கேட்டாள்.

நான் கண்மணியை உற்றுப் பார்த்தேன். நல்ல வேளையாக அந்த சமயத்தில் கண்மணியின் கணவர், அவருடைய மொபைல் போனில் ஏதோ அழைப்பு வந்ததால், அதை எடுத்து, சத்தமில்லாத ஏதோ ஒரு மூலைக்குச் சென்றிருந்தார்.

“ஏன் கண்மணி… உங்கள் காதல் தோல்வி, உங்களை பாதிக்கவே இல்லையா?” என்றேன்.

என்னைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தாள் கண்மணி…

“பாதிச்சது தான்… ஆனால் கொஞ்ச நாட்கள்தான்.”

“ம்…”

“ஆமாண்ணா… கல்லூரி நாட்களிலே நம் உடலில் ஓடுவது இள ரத்தம்… ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள், கனவுகள் எல்லாம்… ஆனால், அவை எல்லாமே நிறைவேறும்ன்னு நிச்சயமா சொல்ல முடியுமா? காதல் என்பது என்ன என்று ரொம்ப யோசிச்சேன்… காதல்ங்கறது எனக்கு ஓர் ஆழமான நட்பு என்றுதான் தோணிச்சு…

“அந்த ஆழமான நட்பு, ஒரு திருமண பந்ததத்தில் முடிந்தால் மகிழ்ச்சிதான்; ஆனால், அது முடியவில்லை என்பதற்க்காக, நாம் ஆயுசு முழுக்க அழுது கொண்டே இருப்பது, நாம், நமக்கே செய்து கொள்ளும் துரோகமில்லையா?

“தமிழரசு மேல எனக்கு பிரியம் இருந்தது. அதே சமயம், அதற்காக பெற்று, வளர்த்தவங்களை தூக்கி எறிந்து விட்டு அவருதான் முக்கியம்ன்னு வர எனக்குத் தோணலை. அதோட, அப்ப தமிழரசு வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் தெளிவா இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார். அவரைக் கல்யாணம் செய்து, நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்க முடியுமா… சொல்லுங்கள்?”

“இருந்தாலும்…”

“இருங்க… நான் காதலுக்கு மரியாதை செய்யாமல், துரோகம் செய்து விட்டேன்னு நினைக்கலாம்… இந்த நாளைய வாழ்க்கையில் சில வார்த்தைகள், வாதங்கள் இவையெல்லாம் பேசவும், கேட்கவும், ரசிக்கவும் நன்றாக இருக்குமே தவிர, நிஜ வாழ்க்கைக்கு உதவாது. அதை நிர்ணயிப்பது பல்வேறு சமாச்சாரங்கள்… “என்னடா… காதல் தான் வாழ்க்கைக்குத் தேவைன்னு பேசி, பரிசு வாங்கினவளா இப்படிப் பேசுறாளேன்’ன்னு நினைக்கிறீர்களா…

“அது, வாதத்திற்குத்தான்; வாழ்க்கைக்கு அல்ல… அதோட, நாம் ஒவ்வொருவரையும், வாழ்க்கையின் ஒவ்வோர் வினாடியையும் காதலிக்கிறோம் இல்லீங்களா… அப்பத்தானே வாழ்க்கை ரசிக்கும்… கைக்குக் கிடைக்காததையும், போன காலங்களையும் நினைச்சு, நினைச்சு அழறதால, ஏதேனும் பயனுண்டா… சொல்லுங்க?” என்றாள் கண்மணி.

அவளுடைய பேச்சுத்திறன் என்னை வியக்க வைத்தது.

இவள் அளவு வாழ்க்கையை யதார்த்தமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம், தமிழரசுவுக்கு இல்லாமல் இருந்தது தான் சோகம்.

“சொல்லுங்க… தமிழ் என்ன பண்றாரு… கல்யாணம் ஆகியிருக்கணுமே?” என்றாள் கண்மணி சிரித்தபடி.

ஒரு வினாடி யோசித்தவன், “ம்… ஆயிடுச்சு…” என்றேன்.

“அதானே… அவருக்கும் புரிஞ்சிருக்கும்… காதல் எல்லாம் கவிதைக்கும், கதைக்கும், திரைப்படத்துக்கும், பட்டிமன்றத்துக்கும்ன்னு,” என்றாள் சிரித்தபடி.

“எங்க வேலை பார்க்கிறார் அண்ணா? அவருக்குத் திரைப்பட உலகத்துக்குள்ள நுழையணும்ன்னு ரொம்ப ஆசையில்ல…”

“ம்… ஆமாம்… அதிலதான் இருக்காரு…”

“அப்படியா… என்னவா… பாட்டெல்லாம் எழுதறாரா… நான் படம் பார்க்கறதை விட்டு ரொம்ப நாளாச்சு.”

“ம்… ஆமாம்… பாட்டு எழுதறாரு.”

“நல்லா எழுதுவாரு அப்பவே… பார்த்தா விசாரிச்சேன்னு சொல்லுங்க…” என்றபடி எழுந்த கண்மணி, “நேரமாச்சு… கிளம்பணும்… உங்களை பார்த்ததுல மகிழ்ச்சி.. வேலூர் பக்கம் வந்தீங்கன்னா, இவரு பேரை சொல்லிக் கேளுங்க… எல்லாருக்கும் இவரைத் தெரியும்… வீட்டுக்கு வாங்க…” என்று, புன்னகையுடன் புறப்பட்டாள்.

நான் விடை கொடுத்து அனுப்பினேன். ஆனால், உண்மையைச் சொல்லி, கண்மணியின் வாழ்க்கையை நரகமாக்க நான் விரும்பவில்லை.

காதல் தோல்வியில் கவிதைகள் எழுதிக் குவித்து, வந்த வேலைகளை உதறி, மண வாழ்க்கை தேடாமல், இன்று மனநல மருத்துவமனையில் இருக்கும் தமிழரசுவைப் பற்றிச் சொல்லி, கண்மணியின் வாழ்க்கையைப் பாழாக்க என் மனசு இடம் தரவில்லை.

கண்மணி உலகம் புரிந்து கொண்டவள்; வாழ்க்கையில் வெற்றி பெற அதுதான் மிக முக்கியம்.

இந்தத் தமிழ்க் காதல் கதையின் தனித்துவம் என்ன என்று கேட்பீர்களே?

ஒரு ஆங்கில வார்த்தையோ, வடமொழிச் சொல்லோ இல்லாமல், முழுக்க, முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட காதல் கதை இது. சந்தேகமாக இருந்தால், மீண்டும் ஒரு முறை, முதலிலிருந்து படித்துப் பாருங்கள்!

– அக்டோபர் 2011

Print Friendly, PDF & Email

19 thoughts on “ஓர் தமிழ்க் காதல் கதை!

  1. அருமையான கருத்தான கதை. ஆனால் ஒன்று கூட வடமொழிச் சொற்கள் பயன்படுத்தவில்லை என்ற தனித்துவம் உள்ளதா என்பதை கீழே அறியவும் :

    சமஸ்கிருத சொற்கள் :

    கதை : கதா कथा
    தனித்துவம் : துவம் என்பது சமஸ்கிருத இலக்கண முறையையும் சாறும்.
    பிரத்யேகமாக ःःःःःःःःःःःःःःःःःःःःःःप्रत्येकम्
    கவிதைகள் : कविता ःः
    இலக்கிய लक्ष ः
    அவசியம் अवश्यः
    கல்யாணம் कल्याण:
    நிரந்தர निरंतर ःः
    உலகமாக लोकः
    கவிஞனாக कविज्ञ:
    உத்தியோகத்தில் उद्योगः
    சம்பாதிக்கும் संपाद्यते
    குடும்பத்துடன் कुटुम्बकम्
    மரியாதை मर्यादः
    பலமாக बलेन
    வருஷத்தில் वर्षः
    குங்குமம் कुंकुम
    நாகரிகமாக नागरिक ः
    வயது वयः
    சம்பந்தம் सम्पंदः
    தைரியமாக धैर्येण
    சமயத்தில் समये
    ரத்தம் रक्तः
    நிச்சயமாக निश्चयेन
    ஆயுசு आयुः
    துரோகம் द्रोहः
    பிரியம் प्रियः
    முக்கியம் मुख्यः
    நிம்மதி निम्मतिः
    வார்த்தைகள் वार्ताः
    வாதங்கள் वादाः
    நிர்ணயிப்பது निर्णयः
    சமாச்சாரங்கள் समाच्चाराः
    காலங்களை कालानाम्
    யதார்த்தமாக यथार्थः
    பக்குவம் पक्वः
    சோகம் शोकः
    விசாரிச்சேன்னு विचारः
    நரகம் नरकः
    மனநல मनः (மன)

    அப்பப்பா எத்தனை எத்தனை சமஸ்கிருத சொற்கள்!!!!

    தங்களது பெயரும் அழகான சமஸ்கிருத பெயர் देहभृतः

    நன்றி.

    இரா. இராதாகிருஷ்ணன்.

  2. பெரும்பாலும் ஆண்கள் இப்படி எதார்த்தத்தில் இருப்பதில்லையோ…..பாவம்.

  3. இன்னைக்கு லைப் ல இந்த எதார்த்தத்த புரிஞ்சிக்காம தான் பல பேர் லைஃபை வீணாகிடுறாங்க . எனிவே , நல்ல மெசேஜ் ,பட் உங்க கதையை இன்னொரு முறை படிக்க சொல்றதுலாம் அதிகம்,

  4. அருமை ,அவள் கல்லூரியில் பேசிய தலைப்பை நீங்கள் அவள் பேசும் போது கொண்டு வந்து கோர்த்தது அழகாக தெரிந்தது

  5. மொபைல் போன் தமிழ் இல்லை தானே!!சிறு தவறு என்றாலும் உலகம் ஏற்று கொள்ளாது சகோ!!

  6. AVARAVAR VALKKAI AVARAVAR VITHIYE ITHIL YATHARTHAM YENBHATHAI BHATHARTHAMAI KURINAALUM ATHAI VIRUMBHATHAVARKKU ATHAN PALAN ILLAI

  7. கதை வசனம் நன்றாக உள்ளது…யதார்த்தமான கதை

  8. வருஷம் என்பதில் வடமொழி எழுத்து இல்லையா நண்பரே

  9. பிரத்யேகமாக என்பது சமஸ்க்ருத வார்த்தை நண்பா.

  10. மொபைல் என்பது உங்கள் ஊரில் தமிழ் வார்த்தைய

  11. தனித்துவம் தனித்துவம்னு நீங்களேதாங்க சொல்லிட்டுருக்கீங்க!முழுக்க தமிழ்லயே எழுதுனாதான் தமிழ்க் கதையா? திரும்ப வேற படிக்கச் சொல்றீங்க! மொபைல்ன்ற வார்த்தையை மாற்றாமலேயே தைரியமா சொன்னீங்க பாத்தீங்களா? அதப் பாராட்டுறேன். தொய்வான கதைதான்.

  12. வணக்கம்

    ஒரு ஆங்கில வார்த்தையோ, வடமொழிச் சொல்லோ இல்லாமல், முழுக்க, முழுக்க தமிழிலேயே எழுதப்பட்ட காதல் கதை இது. என்று சொல்லிவிட்டு

    நீங்கள் மொபைல் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *