வானவில் நட்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 2,453 
 

பலரிடம் பேசவே பிடிக்காமல் இரண்டொரு வார்த்தைகளைப்பேசி விட்டு நகர்ந்து விடுவோம். ஒரு சிலரிடம் மட்டும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே இருப்போம். அவ்வாறு நான் பேசுவது கவியிடம் மட்டும் தான். 

“டேய் சிபி எங்கடா போயிட்டே….? உன்னைக்காணாம உசுருரையே தொலைச்ச மாதர மண்டபம் பூரா தேடிகிட்டிருக்கா கவி” கவியின் அம்மா சுந்தரி என்னைத்தேடி வந்து சொன்ன போது ஆடிப்போய் விட்டேன்.

கவியின் மாமா பெண்ணின் திருமணம். எனக்கும் அழைப்பு வந்ததால் வந்திருந்தேன். சிறுவயதில் ஊரில் நடந்த ஒரு விழாவில் பாதையில் இருந்த சகதியைப்பார்க்காமல் தோழிகளுடன் கண்ணைக்கட்டி கண்ணாமூச்சி விளையாடிய போது வழுக்கி விழுந்து கால் சுளுக்கி நடக்க முடியாமல் அழுதவளை யோசிக்காமல் தூக்கி தோளில் போட்டு வீட்டில் விட்ட போது ஏற்பட்ட நட்பு இன்று வரை தொடர்கிறது. தினமும் ஒரு வேளை சாப்பாடு அவள் வீட்டில் தான். அவளும் என் வீட்டிற்கு வந்து அம்மா வேலைக்கு போய்விட்டால் சமைத்து எனக்கு கொடுத்து விட்டு அவளும் சாப்பிடுவாள்.

மிரட்சியாக, உதடெல்லாம் காய்ந்து வறட்சியாக, ஏக்கத்துடன் என்னைத்தாக்குபவளைப்போல் பாய்ந்து வந்தவள் என் கன்னத்தில் செல்லமாக ஓர் அறை விட்டுவிட்டு அருகில் இருந்த சேரில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.

“ஏண்டா, என்னை தேடி வந்து பார்க்கோணும்னு தோணலையா? வேற எவளையாச்சும் சைட் அடிச்சிட்டு என்னை மறந்திட்டியா? அப்படிப்படிப்பட்ட உலக அழகிய நானும் பார்க்கலாமா?” என மனதில் தோன்றியதையெல்லாம் பட, படவென பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென என் மனம் விரும்புமே தவிர அவளது பேச்சில் உள்ள விசயங்களைப்பற்றி ஆராய்வதில்லை. தவறான வார்த்தைகளை சுட்டிக்காட்டுவதுமில்லை. நல்ல வார்த்தைகளை புகழ்வதுமில்லை. அதனால் அவள் எதைப்பற்றி பேசினாலும், கோபமாகப்பேசினாலும், வேகமாகப்பேசினாலும்  பேசி விட்டு அமைதியாகி விடுவாள்.

“உனக்கொரு விசயம் தெரியுமா? பொண்ணுப்புள்ளைக்கு ரிசப்ஷன்ல அவளோட பாய் பிரண்ட்ஸ் கை கொடுத்துக்கே மாப்பிள்ளைப்பையன் தப்புன்னு சொன்னதால பொண்ணு கண்ணீர் வடிக்கிறா? இவன் நூறு வருசத்துக்கு முன்னால இருக்கறான். எனக்கே கல்யாணம் நடக்குதுன்னு வெச்சுக்கோ. நீ வந்தா என்னோட கை தானா உன்னோட கையைப்பிடிக்கும். அதப்பார்த்து என்னை கட்டிக்கப்போறவன் வேண்டான்னா அந்தக்கல்யாணமே எனக்கு வேண்டாம்னு தான் தோணும். நாஞ்சொல்லறது கரெக்ட் தானே…?” என கவி என்னைக்கேட்ட போது ‘சரி’ என்பதாகத்தலையை ஆட்டினேன். அதோடு என் மீது அவள் வைத்துள்ள நட்பின் ஆழத்தையும் தெரிந்து கொண்டேன். கள்ளம் கபடமில்லாத அவளது நட்புக்கு களங்கம் வந்து விடக்கூடாது, அது காதலாக உருவெடுத்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன்.

பலகாரங்கள் இல்லாத பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இனிப்பு சாப்பிடாமல் இருப்பது வேறு. பலகாரத்துக்கு முன் அமர்ந்து சாப்பிடாமல் இருப்பதற்கு மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி பக்குவப்பட்டவனாக, நான் இருப்பதை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. ஒரு பெண் தோழியிடம் பகிறும் விசயங்களை என்னிடம் பகிர்வாள். காதல் முதல் காமம் வரை பேசுவாள். மனம் தன்னை படாத பாடு படுத்துவதாகவும், எல்லை மீறச்சொல்வதாகவும் அறிவால் மனதை கட்டி வைத்திருப்பதாகவும் கூறும்போது அவளை ஞானியாகப்பார்ப்பேன். இருபது வயதில் இத்தனை பெரிய சிந்தனை தொன்னூறு சதவீதம் பேருக்கு இருப்பதில்லை. மனம் போகிற போக்கில் போகின்றனர். தெரிந்தே தவறுகளை செய்கின்றனர்.

“என்ன பெருசா யோசிக்கிறே…? என்னப்பத்தி தானே.‌.? ஒன்னும் நினைக்காதே. பரவாயில்லைன்னு‌ நினைக்காதே. மோசமா நினைக்காதே. பாசமா நினைக்காதே. வேசம்னும் நினைக்காதே. சும்மா விட்டிடு. அப்பதான் ஜாலியா வாழ்க்கை போகும். இப்ப பயங்கரமா பசிக்குது. சாப்பிட வா போகலாம்” என அழைத்த போது நான் தயங்கியது அவளுக்கு புதிதாகத்தெரிந்தது. 

“எனக்கு பசிக்கலை” என்றேன்.

“என்னடா புதுசா பேசறே…? உனக்கு பசிக்கலைன்னா. எனக்கு பசிக்குது. என்கூட வரமாட்டியா….?”

“அதுக்கில்ல. அது….வந்து….”

“எது வந்து…? நீ மாறீட்டே… உன்ன புடிக்கலேன்னு இப்ப மட்டும் என்னோட மனசு சொல்லுது….”

“கவீ…… புரிஞ்சுக்கோ. இது உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணம். இங்க உன்னக்கல்யாணம் பண்ணிக்கப்போறவங்க வந்திருப்பாங்க. நீ என்னோட சுத்திகிட்டிருக்கிறதப்பார்த்து உன்னைப்பொண்ணு கேட்க வர மாட்டாங்க. அதனால….”

“நான் வந்த உடனே சொன்னனில்ல. உன்னோட பிரண்ட்ஸ் சிப் வேணான்னு சொல்லறவங்களையோ, சந்தேகமா நினைக்கறவங்களையோ நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை. ஓ… முதலா என்னை வேற ஜாதியா பார்க்கறியா…? புரியுது. இப்ப நல்லாப்புரியுது. சரி என்னைப்பார்க்க வராம பத்து நாள் உன்னால இருக்க முடியுமா?” அவள் இப்படியொரு கேள்வியைக்கேட்பாள் என நான் நினைத்துப்பார்க்கவில்லை. 

நான் நினைத்தது தவறோ…? என யோசித்தேன். அவளுடைய பெற்றோருக்கு அவளைப்பற்றிய கனவு இருக்கும். சின்ன வயது என்பதால் கவிக்கு எதுவும் புரியாத வயசு. எனக்கு அவளை விட ஐந்து வயது அதிகம் என்பதால் யோசிக்க வைக்கிறதோ, என்னவோ. சில பேர் சிறு வயதில் தான் எடுத்த முடிவு தவறு எனக்கூறுவதைக்கேட்டுள்ளேன். அவளோ புடித்தது மேல் புடிவாதம் காட்டுகிறாள். என்னை பெயர் சொல்லியோ, அண்ணா என்றோ அழைக்காமல் டா போட்டே பேசுவது எனக்கும் பிடித்திருந்தது. இருப்பினும் நாளை ஒருவன் மனதுக்கு பிடித்த வகையில் கணவனாக அமைந்து விட்டால் அவனது அன்பு, அரவணைப்பு அவளை கண்டிப்பாக மாற்றும்போது எனது நட்பை மறக்க வாய்ப்புகள் அதிகம்.

‘உறவுகளுக்கும், பெற்றோருக்கும் பிடிக்காமல் அவர்களது சம்மதமும், ஆசீர்வாதமுமின்றி திருமணம் கூடாது’ என நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மனம் அறிவுறுத்தியதை என்னால் மறுக்க முடியாத மன நிலையில் இருந்ததாலோ என்னவோ கவியை காதலியாக, மனைவியாக இது வரை கற்பனை செய்து கூடப்பார்த்ததில்லை. நல்ல நட்பின் உருவமாகவே என்னால் நினைக்க முடிகிறது. அந்த விசயத்தில் கவியும் எல்லை மீறாத பத்தரை மாற்றுத்தங்கம் தான். 

அவளது விருப்பத்துக்கு நானும் விருந்து நடை பெறும் பகுதிக்குச்சென்றேன். கவி உட்கார்ந்தவுடன் அவளருகே ஓடிவந்து அவளது தோழி ஒருத்தி அமர, எனக்கு சற்று நிம்மதியானாலும் என்னை முதலாக கவி முறைத்துப்பார்த்தாள். நானும் தலை குனிந்தவாறு எதிரே இருந்த பகுதியில் சாப்பிட அமர்ந்தேன். அதைக்கண்டு வாடிய அவளது முகம் மலர்ந்தது. உண்மையில் பசி எனக்கு வயிற்றைக்கிள்ளியது. பறிமாறப்பட்ட அனைத்து வகை உணவுகளையும் விடாமல் ஒரு பிடி பிடித்தேன்.

ஐஸ்கிரீம் சாப்பிடும் இடத்தில் எனதருகில் வந்து கவி நின்றதால் அங்கே நின்று கொண்டிருந்த அவளது உறவுக்காரர் ரகு என்னை முறைத்துப்பார்த்தார். வம்பு எதற்கு என நானும் திரும்பி நிற்க, திரும்பி நிற்ற பக்கம் வந்து முறைத்து கோபக்கனலைக்கக்கினார்.

“எவனெவனோ, ஆராரோ கூட சம்மந்தமே இல்லாம, தகுதியே இல்லாம சுத்தரானுக. நம்ம சொந்தக்காரங்க ஊட்டு கல்யாணத்துல நாம ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது போலிருக்கு” என இரட்டையர்த்தத்தில் பேசியது கவியுடன் நான் பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அங்கே போவோர், வருவோரையெல்லாம் அழைத்து பக்கத்தில் நிறுத்திக்கொண்டு என்னையும், கவியையும் கைகாட்டியே பேசியதால் உடனே வெளியேற வேண்டுமென தோன்றியது. கவி இதையெல்லாம் புரிந்து கொள்ளாத வெகுளியாக சிரித்து, சிரித்து என்னுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.

அன்று இரவு பத்து பேருடைய அலைபேசியிலிருந்து ‘கவியோடு பழகுவதை இன்றோடு நிறுத்திடு’ என மெஸேஜ் வந்தன. அவர்களுக்கு பதில் எதுவும் அனுப்பாமல், கவியிடமும் சொல்லாமல் விட்டு விட்டேன். நடு இரவில் அலைபேசியில் பேசியவர்கள் சொல்ல முடியாத வார்த்தைகளில் திட்டினர். அப்போது கவியும் அலைபேசியில் என்னை அழைத்து அழத்தொடங்கினாள். இது வரை அவளது கண்களில் கண்ணீர் வந்து நான் பார்த்ததில்லை. அவளது கண்ணீருக்கு வேறு காரணம் இருந்தது.

“அப்பாவுக்கு கோயம்புத்தூர்ல இருந்த வேலைய இப்ப சென்னைக்கு மாத்திட்டாங்க. நாங்க நாளைக்கே கிளம்பனம். உன்ன விட்டிட்டு எப்படிடா….?” அழுதாள். காலையில் பேசிக்கொள்ளலாம் என ஆறுதல் கூறினேன்.

எனக்கு உள்ளூரிலேயே ஆசிரியர் வேலை. பெற்றோர் தவிர தங்கச்சி படிப்பு முடித்துள்ளதால் அவளது திருமண வேலையைப்பார்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஊரை விட்டு நானும் சென்னைக்கு போக முடியாத நிலை. கவியை பிரிய எனக்கு மனமில்லை. கவி பேசிக்கொண்டிருக்கும் போது ‘இன்னேரத்துக்கு எதுக்கு போன்ல பேச்சு. முதல்ல இவளுக்கொரு மாப்பிள்ளைய பாருங்க. அப்பத்தான் திருந்துவா…’ என அவளது தாய் பேசியதிலிருந்து கவி என்னுடன் பழகுவது பெற்றோருக்கு பிடிக்காததாலும், திருமண மண்டபத்தில் இருந்த சொந்தங்கள் ஏதோ சொல்லியதாலும் அவர்கள் வெளியூர் வேலை மாற்றம் செய்ய முடிவு எடுத்திருக்க வேண்டும். எங்கள் நட்பை பிரிக்க வெளியூருக்கு வேலை மாற்றம் என்பதை நன்கு யோசித்து புரிந்து கொண்டு காலையில் மனதைக்கல்லாக்கியபடி எனது அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு விட்டேன்.

அன்று காலை ஐம்பது முறை அலைபேசியில் கவி‌ அழைத்தும் நான் பேசாததால் ஐந்து வருடமாக, வைராக்யமாக அவளிடமிருந்து அழைப்பு வரவே இல்லை. ஐந்து வருடத்தில் அவளுக்கு திருமணம் நடந்து, இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வாழ்வதை அவளது சொந்தங்கள் மூலம் அறிந்து கொண்டு ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என மானசீகமாக வாழ்த்தினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *