காலமுரண்

 

Send to : liveinpeace.thatha.univ.venus
From : ravi.universe.earth.ind
தேதி : 18-5-2117(AD)

1943ல் இறந்துபோன கொள்ளுத்தாத்தாவிற்கு உங்கள் அன்பு பேரன் எழுதிய மடல்,

மனதளவில் நான் ரொம்பவும் நொந்து போயிருகிறேன் தாத்தா !!.

எனக்கு, இந்த முறையும் என் மனு நிராகரிக்கப்படுவதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, தாத்தா. என்ன செய்வது! காலம் எனக்கு இட்ட கோலத்தை நினைத்து யாரிடம் சொல்லி அழுவது. உலக ஒட்டப்பந்தயத்தில் எனக்கான இடம் எது என்று இன்னும் தெரியாமல் இருக்கிறேன் தாத்தா, உங்களைப் போலவா நாங்கள் இருக்கிறோம்.

சே..! என்ன இந்த வாழ்க்கைமுறை,

இது முன்பு இருந்த வாழ்க்கை முறையை விட கேவலம் இப்பொழுது.

ஆம் ! தாத்தா இப்பொழுது, எங்கள் இந்த குடும்பத்தில் தாய், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு பழுதடைந்துள்ளது. அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஆன உறவும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னளவில் இதற்கு காரணம் மனிதர்களிடம் மனிதத் தன்மையை இழக்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய முதல் வேட்கை கைநிறைய சம்பளம் தரும் வேலை, பிறகு தனி வீடு, கட்டற்ற சுதந்திரம், இப்படி என் தனிபட்ட தேவைகளை பெருக்கிக்கொண்டே போகவேண்டிய சூழ்நிலைக்கு என்னையும் அறியாமல் சந்தைப்பொருளாதாரத்தால் நான் உந்தப்பட்டுளேன். உங்கள் காலத்தில் இருந்த நமது பழைய கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து இப்பொழுது தனி குடுத்தனமாக காட்சியளிப்பதை நீங்கள் கண் கூடாக கேள்விபட்டிருப்பீர்கள்,பார்த்திருபீர்கள். ஆனால் நாங்கள் இப்பொழுது எங்கள் காலங்களில் தனி குடும்பங்களும் சிதைந்து எல்லோரும் தனி தனித் தீவுகளாக வாழத் தொடங்கியுள்ளோம். நாங்கள் எங்கள் சகிப்புத்தன்மையை முழுவதுமாக தொலைத்து ரொம்ப நாட்களாகிவிட்டது. இங்கே குடும்பம் லாட்ஜை போல வீடு இருக்கும். இப்பொழுது ஆண், பெண் உறவு என்பது கூட காமம் காமத்துக்காக கூடுவதற்க்கான ஒரு பொது இடம்.

முதலில் இயற்றிய சட்டம், எந்தப் பெண்ணிடம் தொடர்பு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டாயோ அந்தக் குழந்தையின் நலனுக்காக பத்துவருடம் உன் பாலினத்துடன் சேர்ந்து வாழவேண்டும், அது படிப் படியாக குறைந்து 1 வருடம் வரை வாழ்ந்தால் போதும் என்றாகிவிட்டது. என் பக்கத்து வீட்டு அந்த குழந்தைகள் அவனுடைய ஒரே தாத்தாவை பார்த்து கேட்கிறது “ எப்படி தாத்தா நீங்கள் ஒரே மனைவியோடு இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்திருகிறீர்கள்! ?, “”ஊஊப்ஸ், யு ஆர் ரீயலி கெரேட்!!””என்று சொல்கிறது

இப்பொழுது நான் குழந்தை பெற்றுக்கொள்ள புதிதாக ஒரு சட்டம் வந்துள்ளது‘ என்னவென்றால் நீ குழந்தை பெற்றுக்கொள்ள அரசாங்க அனுமதி தேவை என்ற சட்டம் 2055“.அப்பொழுது தான் எனக்கு அந்த செய்தி இடிதாக்கியது போல் தாக்கியது. என்னோடு பலரும் விண்ணப்பபடிவத்தை எடுத்துக்கொண்டு பொது சுகாதார நிலையத்திலும் கணிப்பொறியிலும் காத்திருந்தோம். இன்று காலை தான் இந்த கடிதம் எனக்கு கிடைத்தது.

அதில் என்னுடைய மனு நிராகரிக்கபடுவதை இன்ன பிற காரணங்களுக்காக நிராகரிக்கபட்டுள்ளது தாத்தா.
“நீங்கள் உங்கள் அரசு வைத்த அடையாள பெயரினையும் எண்ணையும் குறிப்பிடவில்லை;

“முன்பு உங்கள் சமுகத்தில் உங்கள் முன்னோர்களின் பெயர்களை நாமகரம் சூட்டுவார்கள்; அது சிறிது சிறிதாக மாறி பெற்றோர் அவர்களின் விருப்பபடி தன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்கள்; ஆனால் இப்பொழுது எங்கள் பெயரினை இந்த அரசாங்கம் இடுகிறது. அதாவது என் பெயர் கூட “டிட்டா.ஆண்140505இண்ந்” இந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை என்று அரசாங்கத்துக்கு மனு கொடுத்துள்ளேன்; அதுவும் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆம் தாத்தா, என்னைப் போல் பலரும் மனு கொடுத்துள்ளனர்; அதற்கு அவர்கள் கூறிய காரணம் உங்களுக்கு பிடித்த பெயர் வேண்டுமென்றால் உங்கள் பழைய பெயரோடு, புதிய பெயரினை இனைத்து(பின் குறிப்பு: பதினேழு எழுத்துக்கு மிகாமல் அதில் “பேன்சி” பெயர் என்று எழுதி அதற்கு ரூபாய் முப்பதாயிரம் செலுத்த வேண்டுமாம்”. அதில் உங்கள் அரசு இட்ட பெயர் ஏன் பிடிக்கவில்லை என்று தெளிவாக 50 வார்த்தைக்கு மிகாமல் எழுதவேண்டுமாம்.”. என்னைப்போல் காத்திருப்போர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தையும் தாண்டும்.
தாத்தா

“ முன்பு உங்கள் திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சியிக்கபட்டு பிறகு உற்ற உறவினர்களின் முழு ஆசிர்வாததோடு திருமணம் நடைபெற்றது. பிறகு காதல் திருமணம்; ஆனால் இப்போழுது எங்கள் எதிர் பாலினங்களை தேர்வு செய்ய எங்களுக்கு உரிமை கிடையாது. அரசு யாரைத் திருமணம் செய்யசொல்கிறதோ அவர்களுடன் தான் நாங்கள் குறைந்தபட்சம் 12 வருடங்கள் சேர்ந்து வாழவேண்டும். அரசு கொடுத்த எதிர் பாலினம் பிடிக்கவில்லை என்று சொன்னால் நான் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவேனோ என்ற பயம்! ,.

என்ன செய்வது தாத்தா?!?…வேறு வழியில்லை எற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.

என்ன தாத்தா, தலைசுத்துகிறதா, இனிமேல் தான் நீங்கள் கவனமா படிக்கனும் தாத்தா நேற்று இடி விழுந்த மாதிரி ஒரு செய்தி அரசிடம் இருந்து எனக்கு வந்துள்ளது. அதாவது என் மனுவை படித்துபார்த்த அந்த அரசு அதிகாரிகள்

ஆம்,

”நீங்கள் குழந்தைபெறுவதற்கான உங்கள் விண்ணப்பம் பரிசலிக்கபட்டு நிராகரிக்கபட்டுள்ளது, உங்கள் விண்ணப்பம் அரசாங்க ஆணை 18 உட்பிரிவு 132 (அ), மற்றும் 133 (ஏ) நிராகரிக்கபட்டுள்ளது. மேலும் கீழ் மற்றும் அரசாங்க ஆணை 32/16 டிவிசன் பெஞ்ச் 96ய் குழந்தை வளர்ப்பு மசோதா சரத் மட்டும் சட்டம் என்ன சொல்வதை சரியாக படிக்கவும், நீங்கள் எந்த பெண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை, மற்றும் அந்த பெண் எற்கணவே திருமணம் செய்துகொண்டவரா, விவாகரத்து ஆனவரா குழந்தை பெற்று வளர்த்த அனுபவம் இருக்கிறதா என்பதை தெளிவாகக் குறிப்பிடவும், விவகாரத்து கூட அரசாங்க அல்லது நீதிமன்ற அனுமதி பெற்ற பின் விவகாரத்து ஆனவரா, ஆம், எனில் எத்தனை வருடம் கழித்து, எத்தனை தடவை ஆகியுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடவும், அவர்கள் விவகாரத்து செயத ஒப்புதல் வாக்குமூலம் நகல் ஒன்றை அவர்களுடைய கையொப்பத்துடன் இணைக்கவும்.மற்றும் உங்கள் பொருளாதார வசதி மற்றும் இதர சொத்துகள் யாவையும் குறிப்பிடவில்லை. குறிப்பாக உங்கள் அடையாள அட்டை எண்ணை நீங்கள் குறிப்பிடவும். இதே மாதிரி நீங்கள் திருமணம் செய்துகொண்டவரா, விவகாரத்து ஆனவரா குழந்தை பெற்று வளர்த்த அனுபவம் இருக்கிறதா என்பதை தெளிவாக குறிப்பிடவும், விவாகரத்து கூட அரசாங்க அனுமதி பெற்ற பின் விவாகரத்து ஆனவரா, ஆம், எனில் எத்தனை வருடம் கழித்து,எத்தனை தடவை ஆகியுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிடவும், நீங்கள் விவகாரத்து செயத ஒப்புதல் வாக்குமூலம் நகல் ஒன்றை உங்களுடைய கையொப்பத்துடன் இணைக்கவும்.

19 (இ) குடியுரிமை இருப்பு வசதி சட்டம் படி 60/32 உட்பிரிவுகளின் படி நீங்கள் வசிக்கும் வீட்டில் தனி கழிப்பறை கூடிய படுக்கை அறை உள்ளதா என்பதை நீங்கள் குறிப்பிட தவறிவிட்டீர்கள்.

19(உ) குடியுரிமை இருப்பு வசதி சட்டம் படி 60/32 உட்பிரிவுகளின் படி நீங்கள் வசிக்கும் வீட்டில் தனி கழிப்பறையுடன் மேற்கத்திய கழிப்பிடம் வசதி இருப்பதா என்பதற்கான வரைபடம் மற்றும் புகைப்படம் இணைக்க வில்லை.

19(ஊ) குடியுரிமை இருப்பு வசதி சட்டம் படி 60/32 உட்பிரிவுகளின் படி நீங்கள் வசிக்கும் வீட்டில் உங்கள் படுக்கையறை மற்றும் ( BED SIZE) யாவற்றையும் குறிப்பிடவும்.

19(இ) குடியுரிமை இருப்பு வசதி சட்டம் படி 60/32 உட்பிரிவுகளின் படி நீங்கள் வசிக்கும் வீட்டில் உங்கள் நீங்கள் பெற்று வளர்க்க போகும் குழந்தையின் படுக்கையறை,கழிவறை மற்றும் ( BED SIZE) யாவற்றையும் குறிப்பிடவும்.

விவாகரத்திலிருந்து அரசாங்க அனுமதிப்பெற்ற மேலும் விசாரணைக்கு அரசு சரத் 19 ய் நன்றாக படிக்கவும், பின் தான் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக்கொள்ளமுடியும்.

அரசாங்க அனுமதி படிவம் www.childprotect.org.in என்ற முகவரியில் இலவசமாக பதிவுஇறக்கம் செய்துக்கொள்ளலாம்,ரூபாய் 11,500/- பதிவுக்கட்டணமாக கட்டி பதிவுகட்டணம் (காசோலை,டிடி, மற்றும் தபால் மனி ஆர்டர்) இதில் எதாவது ஒன்றை இணைத்து நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்புதல் வாக்குமூலம், (ஆம் நான் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்) என்பதை எழுதி உங்கள் பாஸ்போர்ட் புகைப்படம் அதில் ஒட்டி, அதற்கு கீழ் உங்கள் கையெழுத்து,உங்கள் நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனம்/கம்பெனியில் மேல் அதிகாரி கையோப்பம் (ம்.. முக்கியாமாக அவருடைய கம்பெனி சீல்) மற்றும் வங்கியில் உங்கள் கணக்கு மற்றும் அதில் நீங்கள் ஏற்கனவே அந்த வங்கியில் கடன் வாங்கியுளீர்களா ?, இல்லையேனில் கடன் வாங்கவில்லை என்று அவர்களுடைய தனிபட்ட கடிதத்தில் வங்கி மேளாளரிடம் சீல் மற்றும் கையொப்பம் வாங்கவும்.

கடன் வாங்கியிருந்தால் உங்கள் விண்ணப்பம் பரிசலிக்கப்படும்.

படிவம் 670/44 இணைக்கவில்லை

உலக சுகாதார மற்றும் குழந்தை வளர்ப்பு சட்டம் 670/44 செக்சன் 67 ஆம் பிரிவு படி

நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள அரசு மருத்துவமணையில் ‘வில்லிங்கனஸ் நற்சான்றிதழ் வாங்கவேண்டும்’

அதற்கு பதிவுக்கட்டணமாக ரூபாய் 7,500/- ( டிடி ஆம் நான் குழந்தைபெற்றுக்கொள்ள விரும்புகிறேன்) என்று எடுக்கவும்.

அதில் உங்கள் அக மற்றும் புற உருப்பு செயல்பாடுகள் குறித்த அனைத்து தகவல்களை தெளிவாக கவணமாக பதிவு செய்யவும்

உதாரணதிற்க்கு
1.உங்கள் பெயர் :
1.(அ)முகவரி :
1.(ஆ)ஊர் :
2.நீங்கள் வசிக்கும் இடம் :
3.பிளாக் :
4.குடிநீர் இணைப்பு எண்:
5(அ)ஏற்கனவே குழந்தைபெற்றுக்கொண்டவரா:
5(ஆ)ஆம் எனில் : எத்தனை /அக்குழந்தையில் பெயர்/ஊர்/உடல் நலம்/ அக்குழந்தை தற்பொழுது யாருடன் வசிக்கிறது/அந்த குழந்தையின் அரசாங்க பதிவு எண்/ தாங்கள் அக்குழந்தையை தற்காலிகமாக பிரிந்து இருப்பீர்களா/அல்லது நிரந்தரமாக
6(அ) நான் ஏன் குழந்தைபெற்றுக்கொள்ள விரும்புகிறேன் ? என்ற வாசகத்தில் தனி தாளில் 1500 வார்த்தைக்கு மிகாமல் எழுதி உங்கள் புகைப்படம் எடுத்து ஒட்டவும்.
6(ஆ) முன்பு பூர்த்தி செய்த விண்ணப்பம் 5 (ஆ) வில் உங்களுக்கு எற்கனவே பிறந்த குழந்தையின் ஒப்புதல் வாக்குமுலம் “ஆம் இவர் குழந்தை பெற்றுக்கொள்ள தகுதியானவர் தான்? என்று எழுதி அந்த குழந்தையின் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதில் அந்த குழந்தை வசித்து வரும் காப்பாளர் மற்றும் விவாகரத்து ஆன மனைவியின் கையோப்பம் மட்டும் புகைப்படம் ஒட்டி அதில் குழந்தை குடியுரிமை வட்டாட்சியாளர் கையோப்பம் இடவேண்டும்.

இது ஒரு மாதிரி படிவம் Form (QMUTAI(Question of Medical Universal Treaty Acceptance Issued Act 2055) தமிழில் கூமுட்டை படிவம் அரசு ஆனை 2055
1 (ஆ)அரசு வைத்தியர் தன் கைப்பட எழுதி பூர்த்தி செய்ய வேண்டிய படிவம்
1. அரசு வைத்தியர் பெயர் :
2. அரசு வைத்தியர் முகவரி:
3. அரசு வைத்தியர் எண் :
4. விண்ணப்பதாரரின் பரிசோதனை தொகுப்பு:
விணணப்பதாரர் பெயர்:
விண்ணப்பதாரர் முகவரி:
விண்ணப்பதாரர் ஏற்கனவே திருமனமானவரா/அல்லது விவாகரத்து ஆனவரா
விண்ணப்பதாரர் வேறு எதாவது நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா:
விண்ணப்பதாரர் குடிப்பழக்கம்/மற்றும் இதர பழக்கம் :
விண்ணப்பதாரர் விந்து உற்பத்தி/ நாத உற்பத்தி தன்மை
பெண் என்றால் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா:
விண்ணப்பதாரர் கலவியின் போது அவரின் வீரிய தன்மை தொகுப்பு:
விண்ணப்பதாரர் எத்தனை முறை கலவியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடைய கை/கால்/உடல் ஜனன உறுப்பு சரியாக உள்ளனவா பற்றிய தகவல்.
இதற்கு முன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அது அந்தரங்கமாக இருந்தாலும் சரி
அரசு வைத்தியர் கையொப்பம்/மற்றும் சீல்:
தேதி:
இடம்:
2(ஆ)விண்ணப்பதாரரின் பதிவு படிவம்
நான் மருத்துவர் கூமுட்டை(QMUTAI (1அ) படி அவர் கேட்கும் கேள்விகளுக்கு இவ்விடம் நல்ல முறையில் பதில் சொன்னேன் என்பதை இவ்விடம் இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு
விண்ணப்பதாரரின் கையொப்பம்
மருத்துவர் கையொப்பம் மற்றும் சீல்

என்ன தலை சுத்துகிறதா! தாத்தா !குழந்தைகளைக் கையிலும் தோளிலுமாகப் பிடித்துக்கொண்டு ஒரு தந்தையாகப் பெருமிதமாக நடக்கவேண்டிய வயதில் நாங்கள் இந்த விண்ணப்பபடிவத்தையும் கையில் விரித்துக்கொண்டு, கணிபொறி முன் உட்கார்ந்து வெட்கமும் கூச்சமுமாக படிவத்தை பூர்த்திசெய்து காத்திருக்கிறோம் தாத்தா!

தாத்தா ஒரு காலத்தில், நீங்கள் மற்றும் உங்கள் முன்னோர்கள் குடும்பத்துக்கும் சமுகத்துக்கும் கட்டுப்பட்டிருந்தீர்கள். இப்பொழுது ஆம்! நாங்கள் அதிலிருந்து விடுவித்துக்கொண்டு அரசாங்கத்துக்கு கட்டுப்படும் மனிதனாக மாறியுள்ளோம் .எங்களுக்கு நாங்களே நவின வாழ்விற்குள் எவ்வளவு ‘சிக்க’ வைக்க முடியுமோ, சிக்கிக்கொண்டு திண்டாடி தவிக்கிறோம் தாத்தா.
இதற்கு காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் தாத்தா ?,

எல்லாம் ‘சந்தைப்பொருளாதாரத்தால் வந்த ‘தனிமனித சுதந்திரம்’ என் புலம்பலை கேட்க கூட இங்கு யாரும் இல்லை… ! தாத்தா.

இப்படிக்கு
உங்கள் அன்பு பேரன்
டிட்டா.ஆண்140505இண்ந் இல்லை இல்லை (ரவி)

பதில் தாத்தா
from : liveinpeace.thatha.univ.venus
send to : ravi.universe.earth.ind

அன்பு பேராண்டி,
நீ எழுதிய கடிதம் கிடைத்தது, வாசித்தேன்,நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை,விண்ணப்பபடிவத்தை கவனமாக பூர்த்தி செய், சீக்கிரம்போய் ஒரு நல்ல ப்ரோக்கரை பாருடா. ‘தனிமனித சுதந்திரம்’ உங்களுக்கு ரொம்ப முக்கியம்..டாகண்ணா……
இப்படிக்கு
உன் அன்பு தாத்தா.,
XXXXX

- ஆங்கிலத்தில் (Time Dilation) என்று சொல்லுவார்கள், அதாவது எதிர்காலம அல்லது(நிகழ் காலம்) த்திலிருந்து கடந்த காலத்தை நோக்கி சிறிது நேர பயணம். தமிழில் ‘காலவிரிவாக்க சிறுகதை’(time dilation short stories)என்றும் இந்த சிறுகதையை வைத்துக்கொள்ளலாம்

- கணையாழி (பெப்ரவரி 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்புள்ள வாசகர்களுக்கு, என் பெயர் இளங்கோ முத்துசாமி; என்னை சுருக்கமாக இளங்கோ என்று தான் எல்லோரும் கூப்பிடுவார்கள். எனக்கு உங்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன; நான் இந்த விஷயங்களை எழுதி கிழித்துப்போடவேண்டும் என்று தான் முதலில் எண்ணியிருந்தேன், ஆனால், உண்மையில் எழுதக்கூடாத ...
மேலும் கதையை படிக்க...
1948 ஜனவரி 30, மாலை சரியாக 5:17 மணியளவிலிருந்து 5:42 இடைபட்ட நிமிடங்களுக்குள் நடந்த அந்த சம்பவம்…. , …ஆம் ஒரு தேசமே என் காலடியில் விழுந்து கிடந்தது; ஒரே மரண ஓலம்; அழுகைக்கு தான் எத்தனை ஆயிரம் முகங்கள் இங்கே; வரலாறு ...
மேலும் கதையை படிக்க...
ஓரு கணிப்பொறியாளனின் நினைவுப் பாதை
காந்திவதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)