மேன்மக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 5,239 
 

அந்த கிணத்து மேட்டுகிட்ட களை எடுத்தாச்சா? கேட்ட ஆத்தாவுக்கும்..என்று தலையாட்டிய சாமியப்பண்ணனை கூர்மையாக பார்த்தார் ஆத்தா என்று அழைக்கப்படும் திரிவேதியம்மாள்.

அந்த கூர்மையான பார்வைக்கு பதில் தர முடியாமல் நெளிந்தார் சாமியப்பண்ணன். அதற்கு அர்த்தம் தான் சொன்னது பொய் என்று ஆத்தாவுக்கு தொ¢ந்து விட்டது என்பதுதான். நாளைக்கு எடுத்துட சொல்றேன் மென்று முழுங்கினார். சரி என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார் ஆத்தா.

சுமார் ஆறடி இருப்பார் ஆத்தா, அந்த உயரமும், மாநிறமும் அதற்கேற்ற பருமனும், அவருக்கு எழுபது வயது ஆகிறது என்பதை நம்ப முடியாது.அந்த காலத்தில் பதினேழில் திருமணமாகி வந்தவர். இருபத்தி இரண்டே வயதான கணவருக்கு இருந்த நிலபுலனகளை கண்வரோடு சேர்ந்து நிர்வகித்து கணவர் இறந்து இந்த பத்து வருடங்களாக தனியாக நிர்வகித்து வருகிறார்.

எந்த இடத்தில் என்ன விளையும், எந்த பருவத்தில் எதை போட்டால் விளைச்சல் கிடைக்கும் என்பது ஆத்தாளின் மூளையில் பதிந்து விட்ட செயல்கள். அவர்களின் கண் அசைவில் அத்தனை நில புலங்களையும் கவனித்து வந்து கொண்டிருக்கிறார்.

சாமியப்பண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தார், திரிவேதியம்மாள்., தெக்கால இருக்கற ஓண்ணரை ஏக்கரா தோட்டத்தை நம்ம பண்ணையில வேலை செய்யற ஆளுங்களுக்கு ஆளுக்கு இரண்டரை செண்டா பிரிச்சுக்கொடுத்துடுங்க.

சாமியப்பண்ணன் தலையை சொறிந்து அம்மா நம்ம பாலுசாமி அதை கொடுக்க வேணாம்னு தடுக்காறாரு.

அவன் எதுக்கு தடுக்கணும்? சொந்த பையனா இருந்தாலும் எல்லாமே நானும் எங்க வீட்டுக்காரரும் சம்பாரிச்ச சொத்து தானே அது.

சொன்னா கேக்க மாட்டேங்கறாரு. அதுல ஏதோ ஒரு கம்பெனி கட்டணுமாம், அதனால வேற இடத்தை வேணா பிரிச்சு கொடுக்க சொல்றாரு.

அவங்கப்பா காலத்துலயே அதை பிரிச்சு கொடுக்கறேன்னு வாக்கு கொடுத்துருக்காரு. இப்ப போயி அதை மாத்துனா தேவையில்லாத பிரச்சினை எல்லாம் வரும்.பரம்பரை சொத்தா பல ஏக்கரா கிழ்க்கால கிடக்குல்ல, அதிலயிருந்து எடுத்துக்க சொல்லுங்க.

நான் சொலறனுங்க, ஆனா அதை அவர் கேட்டா பரவாயில்லையே ! அலுத்துக்கொண்டே நகர்ந்தார் சாமியப்பண்ணன்.

பெருமூச்சுடன் வெளியே வந்து நின்ற திரிவேதியம்மாள் எதிரில் அமாவாசை வந்து நின்றவுடன் முகத்தை சுளித்தார்.

வணக்கங்க! கூழைக்கும்பிடு போட்டு நின்றான் அமாவாசை, எமகாதகன் என்று ஊர் மக்களால் அழைக்கப்படுபவன், எதோ ஒரு கட்சியில் ஒரு சிறிய பதவியை வாங்கிக் கொண்டு அவ்வப்பொழுது அங்குள்ளோரை கிளப்பி விட்டுக்கொண்டு கட்சியில் கொஞ்சம் செல்வாக்கை வள்ர்த்துக்கொண்டிருப்பவன்.

திரிவேதியம்மாள் அந்த நிலத்தை மிக விரைவாக பிரித்து அவர்கள் பண்ணையில் உள்ளவர்களுக்கோ கொடுக்க நினைப்பதற்கே காரணம் இவன் தான். இவனுடைய எண்ணமெல்லாம் அந்த இடத்தை பிரிக்கும்போது இவர்கள் கட்சி சார்பாக கொடுக்கவேண்டும் என்று வலை விரித்துக்கொண்டுள்ளான்.

திரிவேதியம்மாளுக்கு இது தொ¢யாமலில்லை, அவர்கள் கணவன் விருப்பப்படியே அந்த நிலத்தை விரைவில பங்கு போட்டு கொடுக்க விரும்புகிறார்கள். அமாவாசை கைக்காசு செலவில்லாமல் கட்சி விளம்பரம் செய்து அந்த நிலத்தை இவனின் கட்சி தலைவர் பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்கள் எல்லோருக்கும் பட்டா போட்டு கொடுத்தால், அந்த ஊரில் அடுத்து வரும் தேர்தலுக்கு நிற்க வழி கிடைக்கும் என அலைந்து கொண்டிருக்கிறான்.

திரிவேதியம்மாளோ, அந்த நிலத்தை கொடுப்பதற்கு வீண் விளம்பரங்கள் தேவை இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்.

அமாவாசை நான் கொடுக்கற போது சொல்றேன் அப்ப நீ என்ன பண்ணனுமோ அதை செஞ்சுக்கோ என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு அவன் முகத்தை பார்க்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

சரிங்க ஒரு மாதிரி சிரித்து விட்டு கிளம்பினான். அவன் அப்பாவும் இந்த பண்ணையில் வேலை செய்தவர்தான். இப்பொழுது இவன் மனைவி கூட இந்த பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கிறாள். அமாவாசை கொஞ்ச நாள் இங்கு வேலை செய்து கொண்டிருந்தவனை அரசியல் ஆசை காட்டி இழுத்துக்கொண்டது.

பண்ணை ஆட்களை ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் இந்த பண்னையில் இத்தனை வருடம் பணி புரிந்ததற்கு நன்றி கூறி திரிவேணி அம்மாள் தன் கையாலே நிலத்து பத்திரத்தை வழங்கினார். அருகில அவர்கள் குடும்ப வக்கீலும் இருந்தார்.

அமாவாசை செய்தி கேள்விப்பட்டு வருவதற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து சற்று கண்ணயரலாம் என்று கண்ணை மூடிய போது எதிரில் வந்து நின்றான் அமாவாசை.

இப்படி பண்ணிட்டீங்களே? என்று கேட்டவனுக்கு திரிவேணி அம்மாள் இங்க பாரு அமாவாசை இது என் வீட்டுக்காரரு காலத்துல நாங்க முடிவு செஞ்சது. திடீருன்னு உங்க அரசியல் தலைவரு வந்து கொடுக்கறதுக்கு இது கட்சி சொத்து இல்லை. இப்ப எங்களுக்கும் அந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.நீ அந்த இடத்துல இருக்கறவங்களை எல்லாம் வச்சு உங்க கட்சி சார்பா ஏதாவது பண்ணிக்கோ.

பாலு அம்மாவிடம் பேசாமல் இருந்தான். அவன் வீட்டில் மனைவியும் குழந்தைகளும் திரிவேணி அம்மாளிடம் பேசினாலும் பாலு மட்டும் அந்த நிலம் சம்பந்தமாக கோபத்தில் இருந்தான். சாமியப்பண்ணன் வந்து திரிவேணி அம்மாள் கூப்பிடுவதாக சொன்னதும் போக வேண்டாம் என்று நினைத்தவன், பின் மனதை மாற்றிக்கொண்டு அம்மாவை வந்து பார்த்தான்

பாலு அம்மாவிடம் பேசாமல் உம்..மென்றிருந்தான். திரிவேணி அம்மாள் ஒரு பெருமூச்சுடன் பாலு, உனக்கு என் மேல கோபம் இருக்கும், அது சரிதான். ஆனா நான் ஏன் அந்த நிலத்தை உனக்கு கொடுக்கலை தெரியுமா? அது உண்மையிலேயே நம்மோட நிலமே இல்லை. நமக்கு நிறைய சொத்துக்கள் இருக்கு. ஆனா இந்த நிலத்துக்கு உரிமையானவன் நம்ம பண்ணையிலதான் வேலை செஞ்சுட்டு இருந்த வேலா அப்படீங்கறவனுது. அவனுடைய சொந்தக்காரங்க அவங்கிட்ட இருந்து இந்த இடத்தை புடுங்கறதுக்கு அவனை கொலை செய்யற அளவுக்கு போயிட்டாங்க, அதனால அவன் பயந்து உங்கப்பா கிட்ட வந்து ஐயா அந்த இடத்தை உங்க பேருக்கு எழுதிடுங்க, அப்படீண்ணான்.

உங்கப்பா, வேணாம் வேலா! உனக்கு இருக்கற்தோ இந்த நிலம் மட்டும்தான்.அதையும் வித்துடாத, அப்படீன்னு சொன்னதுக்கு இல்லைங்கய்யா, இதுக்கு நீங்க எந்த விலையும் கொடுக்கவேண்டாம், நான் இப்ப இந்த நிலத்தை உங்களுக்கு இலவசமாத்தான் கிரயம் பண்ணித்தரேன், நான் இந்த நிலத்தை எங்கூட இருக்கறவங்களுக்கு பிரிச்சு கொடுத்துடுவனோன்னுதான் என்னை கொல்லறதுக்கு சொந்தக்காரங்க முயற்சி பண்றாங்க. இப்ப இந்த நிலம் உங்க பேருக்கு மாறிடுச்சுன்னா அவங்க ஒண்ணும் பண்ன முடியாது. எனக்கு பின்னால சந்ததிகள் இல்லாததால இதை உங்க காலத்துலயே எங்க ஆளுங்களுக்கு வீடு கட்டறதுக்கு பிரிச்சு கொடுத்துடுங்க, தயவு செய்து இதைய நாந்தான் செஞ்சேன்னு யாருக்கும் சொல்லாதீங்க, அப்படீன்னு கேட்டுகிட்டான்.நான் இடத்தை கூட ஏன் விளம்பரப்படுத்தாம கொடுத்தேண்ணா அதுதான் காரணம்.இப்ப சொல்லு இன்னொருத்தரோட நிலம் நமக்கெதுக்கு?.

பாலு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *