காற்றுள்ள பந்து

 

இந்தப் பள்ளியில் சேர்ந்து இரண்டு நாள்கள்தான் ஆகியிருந்தது. இதற்கு முன்பு வேலை செய்த பள்ளியின் உயர்ந்த, நீண்ட கட்டிடங்களும், அகன்று, விரிந்து, பரந்த மைதானமும், தழைத்து வளர்ந்த மரங்களும் நினைவிலாடிற்று.

முழுவதும் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாதலால் சூழ்நிலை எனக்கு வித்தியாச-மாய் இருந்தது. விளையாட்டுப் பிரிவு வேளையில் கூட விளையாடாது, மரத்தடியில் பாடம் படிப்பதும் அல்லது ஓரமாய் ஒதுங்கி கிசுகிசுப்பாய்ப் பேசிக் கொள்வதுமாய் இருந்தனர் பிள்ளைகள்.

இன்னும் பள்ளியின் விதிமுறைகள் ஏதும் முழுதாய் எனக்குப் பிடிபடவில்லை. நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன். பிள்ளைகள் அமைதியாக தேர்ந்தெடுக்காத பாதையைக் குறிக்கும் ஆங்கிலக் கவிதை ஒன்றை மனப்பாடம் செய்து எழுதிக் கொண்டிருந்தனர். மேற்கு நோக்கிய கட்டிடமாதலால் மாலை நேர வெயில் வகுப்புக்குள் பரவியிருந்தது.

சார்…. சித்திரைச் செல்வியோட மாமா வந்திருக்காரு… யாரோ ஒரு ஆள், வகுப்பறை வாசலில் நிற்பது தெரிந்தது. யார் சித்திரைச் செல்வி என்பது எனக்குத் தெரியவில்லை.

யாரும்மா… என்றேன். வெள்ளையாய் ஒல்லியாய் இருந்த அந்தப் பெண் எழுந்து நின்றாள். வந்தவர், இந்தப் பெண்ணக் கூட்டிக்கிட்டுப் போகணும்…அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்ல…

அவர் கேட்டவிதம் எனக்கு எரிச்சலாய் வந்தது.
ஆமா…. நீங்க யாரு…

நான் இவளுக்கு மாமா பையன்…
இன்னும் ஒரு மணி நேரத்தில பள்ளி முடியப்போகுது…. அப்புறமா கூட்டிக்கிட்டுப் போங்களேன்…

இல்ல…. சார்…இப்பவே கூட்டிக்கிட்டுப் போயாகணும்… எனக்கு சந்தேகம் கூடிற்று. தகராறு செய்வதற்கென்றே இவன் வந்திருக்-கிறானோ!

இல்லப்பா…நாங்க பள்ளி நேரத்துல யாரையும் வெளிய அனுப்பறது இல்ல… அப்படியே அனுப்பறதா இருந்தாலும் பெத்தவங்க வந்து எழுதிக் கொடுத்தாத்தான் அனுப்புவோம்… சித்திரைச் செல்வி பையை மாட்டிக் கொண்டு தயாராய் நின்று கொண்டிருந்தது எனக்கு மேலும் எரிச்சலையும் சந்தேகத்தையும் கிளப்பிற்று.

உக்காரும்மா… என்றேன் கோபத்துடன். இன்னொரு பெண்ணை அழைத்து,
இவரக் கூட்டிக்கிட்டுப் போய் தலைமை ஆசிரியர் அறை எதுன்னு காட்டும்மா… என்று அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் அந்தப் பெண் திரும்பி வந்தாள்.

சித்திரைச் செல்விய அனுப்பச் சொன்னாங்க… சார்… சித்திரைச் செல்வி பையை மாட்டிக் கொண்டு வேகமாகச் சென்று மறைந்தாள்.

புதிய ஆசிரியராதலால் எந்தவிதமான அய்யமும் கேட்காது, குறும்பும் செய்யாது அமைதியாய் இருந்தனர் பிள்ளைகள். பள்ளி முடியும் வேளையில் சித்திரைச் செல்வியின் நினைவு வந்தது. அவள் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டேன்.
என்னம்மா… ஏதாவது பிரச்சினையா?

அவங்க அம்மாவுக்கு ரொம்பவும் முடியாம இருந்தது சார்… இன்னிக்குள்ள முடிஞ்சுரும்னு டாக்டர் சொல்லிட்டாராம்…
என்ன உடம்புக்கு…?

கர்ப்பப்பைல…புற்றுநோயாம்…சார்… தெளிவாய்ச் சொல்லிற்று அந்தப் பிள்ளை. எனக்குள் சங்கடம் பரவிற்று. அடுத்தநாள் காலை வகுப்பில் நுழைந்ததும் முதல் வேலையாய்க் கேட்டேன்.
சித்திரைச் செல்வி வரலயா…?

அவங்க அம்மா…இறந்துட்டாங்க சார்… நேற்று சாயங்காலம்…செல்வி போனதும் கொஞ்ச நேரத்துலயே உயிர் போயிடுச்சாம்…

மனதை என்னவோ செய்தது. ஒடிசலான, வெள்ளையான சித்திரைச் செல்வியின் முகம் மனதுக்குள் ஓடிற்று.

அடுத்த நாள் பள்ளியில் நுழைந்ததில் இருந்தே மனம் சித்திரைச் செல்வியைச் சுற்றி வட்டமிட்டபடி இருந்தது. எப்படியும் இன்னும் பதினைந்து நாள் அந்தப் பெண் பள்ளிக்கு வரப்போவது இல்லை. சொல்லமுடியாது. ஒருவேளை வராமலேயே போய்விடலாம். அந்த பத்தாம் வகுப்புக்கு நான் மாலையில்தான் செல்ல நேர்ந்தது. சித்திரைச் செல்வி வழக்கமான இடத்தில் வழக்கமான உடையில் உட்கார்ந்-திருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அந்தப் பிரிவு வேளை, ஆங்கிலப் பாடம் முடிந்தபிறகு அடுத்த வேளை நூலகப் படிப்புக்-கானது. எல்லோரும் நூலகப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்க… சித்திரைச் செல்வி மட்டும் ஏதும் படிக்காது அமர்ந்திருந்தாள்.

அழைத்து விசாரிக்கலாமா? மனதுக்குள் சங்கடம் பரவிற்று. அழவைத்து….மீண்டும் ரணம் கிளற வைப்பது தேவையா? இருந்தும்…
இங்க வாம்மா….

நேத்து நீ போனபிறகுதாம்மா சொன்-னாங்க… உங்க அம்மா சீரியஸா இருக்கறத…உங்க மாமா பையன் அதச் சொல்லிக் கூப்பிட்டிருக்கலாமே…

மெதுவாகத் தொடங்கினேன். நேரடியாக இறப்பு குறித்து இந்தச் சின்னப் பெண்ணிடம் எப்படி விசாரிப்பது என்று தயங்கியபடி.

அவங்களுக்கு அவ்வளவா நாகரிகம் பத்தாது சார்…கான்க்ரீட் கலக்கற வேலைக்குப் போறவங்க… எங்க அம்மா செத்துப் போச்சு சார்…தெரியுமா…?

நான் தலையைக் குனிந்து கொண்டேன். சின்னப் பெண் அழுவதை என்னால் பார்க்க முடியாதது போல உணர்ந்தேன். சிறிது நேர மௌனம். தலை நிமிர…

மூக்கைத் தேய்த்துக் கொண்டு கண்ணீரிண்றி சித்திரைச் செல்வி அமைதியாக இருந்தாள்.

என்ன உடம்புக்கு…? தெரிந்திருந்தாலும் மீண்டும் கேட்டேன். புற்று நோய்…சார்… இதுக்கெல்லாம் மருந்தே கிடையாதா…சார்…எங்கம்மா பாவம்.. அது நல்லா இருந்து நான் பார்த்ததே இல்ல… சார்… வயிறெல்லாம் வீங்கிப் போய்… நடக்க முடியாம… சாப்பிட முடியாம… பேச முடியாம….

அப்பா…என்ன செய்யறாரு…
கட்டிட வேலைதான் சார்… எனக்கு அண்ணன், தம்பி யாருமே இல்ல… நான் ஒரே பொண்ணு மட்டும்தான்…

சார்…அவங்க பட்ட கஷ்டத்துக்கு…. செத்துப் போனதே நல்லது…
நான் அவளுக்கு ஆறுதல் சொல்லத் தயங்க, அவள் எனக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது.
சரி… இன்னிக்கு மூணாவது நாள்தானே… அதுக்குள்ள பள்ளிக்கு வந்திட்டயே… காரியமெல்லாம் முடிஞ்சுதா…?

இன்னிக்குத்தான் சார்… ஆனா… நான் என்ன செய்யப்போறேன்…. நான் படிக்கணும்… ஏன் சார்… காரியம் செய்யாம பள்ளிக்கு வரக்கூடாதா? எனக்கு சுருக் கென்றது.

எங்க அம்மா இறந்து போன சான்றிதழ் வெச்சி அரசாங்கத்துக்கு விண்ணப்பிச்சா எனக்கு கல்லூரிவரைக்கும் இலவசப் படிப்பு கிடைக்குமாமே… நான் படிக்கணும் சார்… தயவு செய்து இதப் பத்திக் கொஞ்சம் விசாரிச்சுச் சொல்லுங்க சார்… நான் பள்ளிக்கு விடுமுறையே போட மாட்டேன்… தினமும் வருவேன்…

தூரத்தில் ஏற்காடு மலைக்குள் மெல்ல விழுந்து கொண்டிருந்தது சூரியன்.
சார்…. கவலைப்படாதீங்க…கண்டிப்பா காலை சூரியன் வரும்… சித்திரைச் செல்வியின் குரல் என் காதுகளில் ஒலித்தது போல் இருந்தது. அவள் அமைதியாக அவளுடைய வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தாள்.

- நவம்பர் 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
நண்பன்
கண்ணாடித் தடுப்பு வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே தெரியாதவாறும் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பது அனைத்தும் தெரிவதாயும் அமைக்கப்பட்டிருந்தது. மணி மூன்றைத் தாண்டி நாற்பது நிமிடங்கள் ஓடியிருந்தது. இன்னும் இருபது பேருக்கு மேல் காத்துக் கொண்டிருந்தார்கள். இன்று வெள்ளிக்கிழமையாதலால் இன்னும் வருவார்கள். நான் தரும் ...
மேலும் கதையை படிக்க...
மழை மேகம்
ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ""நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக'' ""சரிம்மா... என்னதான் பிரச்னை?'' என்றேன். ""வருமானத்துக்கு ஒண்ணும் குறையில்லண்ணே... ஆனா முழுசும் குடும்பத்துக்கு வராம....'' அதிர்ந்து போனேன். ""என்னம்மா சொல்ற நீ?'' ஜேஜி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் ஜே.கோவிந்தன் முகம் மனதுக்குள் ...
மேலும் கதையை படிக்க...
பயணம்
மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய் இருந்தது. மேல் அலமாரியில் வைத்திருந்த சிறிய வண்ணத் தொலைக்காட்சியைப் பார்ப்பது சலிப்பைத் தர எழுந்து வெளியே வந்து அமர்ந்தேன். பக்கத்து வீட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
வண்ணமும் எண்ணமும்
மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. காயிலிருந்து கறி வரை கிடைக்கும் என்பதால் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிராமத்துச் சந்தை மாதிரி இல்லை. கார் நிறுத்துவதற்கும் இரண்டு சக்கர வண்டி நிறுத்துவதற்கும் ...
மேலும் கதையை படிக்க...
மடிச்சுமை
""ம்ம்ம்மா....'' என்று அலறிற்று. அழுகையும் அலறலுமான அதன் குரல் எனக்குள் என்னவோ செய்ய... தொடர்ந்த சில நிமிடங்கள் நகராது தத்தளித்தன. ""என்ன பெரியக்கா... இப்படி கலங்குற... ஒன்னும் நடக்காது...'' கலக்கமாகத்தான் இருந்தது. பசுமாடு வேறாகவும் கன்று வேறாகவும் போவதற்குள் அது படும் வேதனை. கொஞ்ச ...
மேலும் கதையை படிக்க...
நண்பன்
மழை மேகம்
பயணம்
வண்ணமும் எண்ணமும்
மடிச்சுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)