பிஞ்சு உள்ளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 9,577 
 

வணக்கம் சார்! வாங்க டீ சாப்பிடலாம்! என்ற குரலைக் கேட்டு, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த நான், திரும்பிப் பார்த்தேன். குரல்வந்த திசையைப் பார்த்ததும், மிதி-வண்டியிலிருந்து இறங்கினேன். நான் ஆசிரியராகப் பணிசெய்யும் உயர்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் தேநீர்க் கடைப்பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் எழுந்து வந்தார்.

சிகரெட் கையோடு இருந்த அவர், எனக்கு ஒருகையால் வணக்கம் செய்தார்.

நல்லா இருக்கீங்களா? என்று நலம் விசாரித்துவிட்டு, சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்து அணைத்தார்.

unmai - Mar 16-31 - 2010நல்லா இருக்கேன், இப்பதான் வீட்டுல சாப்பிட்டு வந்தேன்! என்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன்.

எனது மிதிவண்டியை இரண்டுமூன்று மாணவர்கள் ஓடி வந்து ஒருவரையொருவர் முண்டியடித்து வாங்கிக் கொண்டனர். பள்ளியை நோக்கிப் போனார்கள். ஆசிரியருக்கு மாணவர்தரும் குருபக்தி போலும்!

முன்னாள் இராணுவ வீரரான சுப்பிர-மணியனுக்கு சுமார் அய்ம்பது வயதிருக்கும். கறுப்பு நிறம். தலையைச் சீராக வாரி, பவுடர் போட்ட முகத்துடன் ஆள் நன்றாக இருப்-பார். எனக்கு எப்போதுமே மரியாதை தருபவர். வெள்ளை முழுக்கையை அரைக்கைச் சட்டை-யாக மடித்துவிட்டு, கணநேரமும் சிகரெட்டும் கையுமாகத்தான் இருப்பார். அந்த ஊரில் ஒருபெரிய மனிதருங்கூட. இவரை எந்நேரத்திலும் அவ்விடமுள்ள தேநீர்க் கடையில் பார்க்கலாம்.

பள்ளி மணி அடித்தது. அவரின் நினைவு-களோடு அன்றைய பணிகளைக் கவனிக்கச் சென்றேன்.

மற்றொருநாள் ஆறாவது வகுப்பில் அறிவியல் பாடம் எடுக்கச் சென்றேன். அன்றைய பாடத்தை நடத்த முனைந்தேன். சிறிதுநேரம் நடத்தியதும் மாணவர்கள் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர். அவர்களை உற்சாகப்-படுத்த எண்ணினேன். ஒரு வித்தியாசமான தேர்வு வைக்க முடிவு-செய்தேன்.

ஆசிரியர்களைப்பற்றி…. என்னைப்பற்றி, பாடம் நடத்தும் விதம்பற்றி….ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க அச்சமாக உள்ளதா? எந்த ஆசிரியர் உங்களுக்குப் பிடித்தமானவர்? உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அவைபற்றி ஒரு தாளில் எழுதுங்கள்! என்று மாணவர்களை எழுதச் சொன்னேன்.

எல்லா மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி-யுடன் எழுதலானார்கள். சிறிது நேரம் கடந்ததும் மாணவர் யாவரும் தாங்கள் எழுதிய தாளை என்னிடம் கொடுத்தனர். எல்லாவற்றையும் படித்துக் கொண்டேவந்த நான், ஒரு மாணவன் எழுதிய தாளைப் படித்ததும்…. என்னால் நம்ப முடியவில்லை. என் நெஞ்சை உலுக்குவது போல் இருந்தது. பின்வருமாறு எழுதியிருந்தான்….

ஆசிரியர் அய்யா, அவர்களுக்கு வணக்கம்! உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க பாடம் நடத்துவதும் எனக்குப் பிடிக்கும். எம்-மனசுக்குப் பட்டதை எழுதியுள்ளேன். தவறு இருந்தா மன்னிக்கவும். பள்ளிக்கூடம் தொறந்து ஒன்றரை மாசம் ஆகியும் இன்னும் நான் நோட்டுக்குறிப்பேடுகள் வாங்கல. அதுக்காக வகுப்பு ஆசிரியர் என்னைத் திட்டுகிறார். கணக்கு ஆசிரியர் என்னை முட்டி போடச் சொல்கிறார். மாணவர்கள் முன்பு நான் மட்டும் முட்டி போடுவது எனக்கு அவமானமாக இருக்கு.

ஆனா, என்னால நோட்டுக் குறிப்பேடுகள் வாங்க முடியல. முடியாது. ஏன்னா எங்கப்பா எனக்கு வாங்கித் தரமாட்டேங்கிறாரு. தெனைக்கும் குடிச்சிட்டுவந்து அம்மாவை அடிக்கிறாரு. அம்மாவால எனக்கும், எந்தம்பிக்கும் சோறுகூட சமைக்கமுடியாம துன்பப்படறாங்க. ரெண்டு மூனுநாளாச்சு நான் சாப்புட்டு. இப்பவும் பசியோடதா இதை எழுதிக்கிட்டு இருக்கேன். புளியங்காயும், பச்சத் தண்ணியுந்தான் எனக்குச் சாப்பாடு. இந்த நெலைமையில எனக்குப் படிப்பு ஒரு கேடான்னு இருக்கு! அப்பா, திருந்துவார்னு தெரியல. நா படிச்சு பெரிய ஆளா வரணுமுன்னு நெறைய ஆசைஇருக்கு. வீட்டுக்குப் போனா… அப்பா தொல்லை குடுக்குறாரு. பள்ளிக்கூடம் வந்தா, நோட்டுக் குறிப்பேடுகள் வாங்கிட்டுவான்னு ஆசிரியருங்க தொல்லை. இதை யாரிடம் போய்ச் சொல்ல? எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல. பேசாம பள்ளிக்கூடத்தையும் _ வீட்டயும்விட்டு எங்காவது ஓடிப் போலாமுன்னு தோணுது. இவ்வளவுதானுங்க அய்யா, என் மனசில உள்ளது.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள மாணவன்,

சு. திலகன், ஆறாம் வகுப்பு

திலகன் எழுதியிருந்ததைப் படித்ததும் என் கண்களில் நீர் முட்டியது. அவனை ஏறிட்டுப் பார்த்த போது, நெற்றியில் கைவைத்து அமர்ந்திருந்தான்.

திலகனை, ஆசிரியர் ஓய்வறைக்கு அழைத்து-வந்து எனது டிபன்கேரியரைத் திறந்து சாப்பிடச் சொன்னேன்.

அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்தப் பிஞ்சு வயதில் ஆசிரியர்-களிடமும், பெற்றோர்களிடமும் மன உளைச்சலுக்கு ஆளாகிப் போனது _ எல்லா வசதிகளிருந்தும் _ சிறிய வயதுக் குழந்தைகள் மன அழுத்தம் காரணமாக… தீயவழிகளில் ஈடுபட வாய்ப்பா அமையறதுக்கு, யாரு-காரணமாக. இருக்கிறது? அவன் தகப்பன்-தானே? அந்த நபர் யார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது! என் மேல் மரியாதை வைத்திருக்கும் அவர் திருந்துவார் என்ற நம்பிக்கை எனக்குத் துளிர்விட்டது.

ஏன் இப்படிச் செய்தால் என்ன? ம்ம்…. அதுதான் சரி! என் பகுத்தறிவு வேலை செய்தது!

அடுத்த நாள் காலை பள்ளி தொடங்கு-வதற்கு முன்பே…. சுமார் எட்டுமணிக்கெல்லாம் பள்ளிக்கு எதிரில் உள்ள தேநீர்க் கடைக்கு வந்துவிட்டேன்.

வழக்கமாக கையில் சிகரெட்டுடன் கூடிய சுப்பிரமணியன் என் கண்ணில் பட்டார். என்னைக் கண்டதும் புன்னகையுடன் வாங்க சார், டீ சாப்பிடலாம்! இன்னிக்கு நீங்க என் கையால டீ சாப்பிட்டுத்தான் போவணும்!

கடைக்காரரைப் பார்த்து, தம்பி….! சாருக்கு நல்லா ஸ்ட்ராங்கா டீ போடப்பா! என்றார்.

வாஞ்சையுடன் அந்தத் தேநீர்க் கடையின் பெஞ்சில் அமரும்படி என்னை அழைத்தார். அவரும் அமர்ந்து, தனது சட்டையில் இருந்த சிகரெட் பெட்டியில் லாவகமாக ஒன்றை எடுத்துப் பற்றவைத்தார்.

அன்றைய தினசரித் தாளைப் பிரித்து வாய்விட்டுப் படித்தார் கல்வித் துறைக்கு மய்யஅரசு நான்கு சதவிகிதமே நிதி ஒதுக்கீடு செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு! படித்துவிட்டு என்னைப் பார்த்துக் கேட்டார்.

என்னசார்…! எல்லாத் துறைகளுக்கும் நெறைய நிதியை ஒதுக்கறாங்க. கல்விக்கு மட்டும் சொற்பமே கொடுக்கறாங்க! என்ன அரசாங்கமோ… போங்க! என்று அங்கலாய்த்து-விட்டு, கையில் வைத்திருந்த சிகரெட்டைக் கடைசி இழுப்பு இழுத்துவிட்டு… என்னைப் பார்த்தார். தேநீர்க் குவளையை வைத்துவிட்டு அவரிடம், அதெல்லாம் இருக்கட்டுங்க! நேத்து பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்-களுக்கு சின்னதா, ஒரு வித்தியாச-மான தேர்வு வச்சேன்!

அப்படியா, என்ன தேர்வு? சிரித்தார், சுப்பிரமணியன்.

ஒன்னுமில்லேங்க, பள்ளியைப்பத்தி, ஆசிரியருங்களப்பத்தி… ஏன் என்னைப் பத்தி_ உங்களுக்கு என்ன மனசுல தோணுதோ அதை எழுதிக் குடுங்கன்னு கேட்டேன். மாணவர்கள் எல்லோரும் எழுதினாங்க. ஒரு மாணவன் எழுதினது எம்மனசைத் தொட்டது. ம்ம்.. நீங்களும் அதைப் படிச்சுப் பார்க்கறீங்களா?

திலகன் எழுதிய அந்தத் தாளை அவரிடம் கொடுத்தேன். சுப்பிரமணியன் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார். நான் தந்த அந்தத் தாளை வாங்கிப் படித்தார். படித்ததும் திடுக்கிட்டார்

மீண்டும் படித்தார். சிகரெட்டைப் பாதியிலேயே காலில் போட்டுமிதித்தார். அவர் கண்களில் ஈரம் கசிந்ததைப் பார்க்க முடிந்தது. நான் அவரைப் பார்க்காதது போல் வேறுபுறம் திரும்பிக்கொண்டேன். அவரிடம் அந்தத் தவிப்பை நான் எதிர்பார்த்தேன்.

ஏனென்றால், அதை எழுதியதே அவர் மகன் திலகன்தானே! சட்டென்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

சார்! இதை யார்கிட்டயும் படிக்கக் குடுப்பீங்களா? குடுக்க மாட்டீங்களே…! தவித்தார், சுப்பிரமணியன்.

இல்லைங்க யார்கிட்டயும் குடுக்க-மாட்டேன்! படிச்சீங்களே நீங்க என்ன நெனைக்கிறீங்க? என்றேன்.

மேலும், குத்தீட்டியாக இந்த வார்த்தை அவர்நெஞ்சில் இறங்கியது போலிருந்தது.

சார், என் நெஞ்சில் ஈட்டி இந்தப் பக்கம் குத்தி, அந்தப் பக்கம் இறங்கியது போலிருந்தது சார்!….. சார்! என்னை மன்னிக்கணும்! இந்தச் சின்ன வயசில, எம்புள்ளைக்கு எவ்வளவு வேதனையக் குடுத்திட்டேனுங்க! அவன் மனசு எப்படிப் பாதிச்சிருக்குன்னு எனக்குத் தெரியாமப் போச்சுசார்! படிச்சிருந்தும் நான் முட்டாளாயிட்டேன். என் கண்ணத் தொறந்திட்டீங்க! இனி இந்த நிலை வராமப் பார்த்துக்கிறேன் சார்… என்றார், திருந்தி நெகிழ்ச்சியுடன் சுப்பிரமணியன்.

அந்தத் தாளை நாலாக மடித்து, அவர் முன்னால் சுக்குநூறாகக் கிழித்தெறிந்தேன். சுப்பிரமணியனின் அகந்தையும், தவறான போக்கினால் அவர் குடும்பம்பட்ட வேதனை _ மகன்பட்ட மன உளைச்சலையும் அப்புறப்-படுத்தினேன் என்று சொல்ல வேண்டும்!

என் உளவியல் ரீதியான அணுகுமுறை _ பகுத்தறிவுடன் கூடிய சிந்தனையோட்டம் அந்தப் பிஞ்சு உள்ளத்தின் மன அழுத்தத்தை முற்றிலும் போக்கவும், சுப்பிரமணியன் போன்றவர்களின் தீய நடவடிக்கைகளைக் களையவும் உதவி செய்ததை எண்ணி, எனக்கு நானே கை குலுக்கிக் கொண்டேன். அன்று இரவு எனக்குத் தூக்கம் நன்றாக வந்தது!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *