அரசுப் பள்ளியில் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 21,526 
 

“ரொம்பக் கத்தாத..!” – ஷாலினி சொன்னதை, வள்ளி காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வகுப்பறைக்குள் நுழைந்தாள். ஷாலினி தயக்கத்துடன் வாசலிலேயே நின்றுவிட்டாள்.

‘இந்தியக் குடிமகனின் கடமைகளும் உரிமைகளும்’ என்று கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்த பொன்னம்பலத்திடம், ”எங்க பொண்ண ரெண்டு நாளா எதுக்கு வெளிய போனு துரத்திவுடுறீங்க?’ – வள்ளி கேட்டாள்.

”நீங்க யாரு.. வகுப்பு நடக்கும்போது திடுதிப்புனு உள்ள வரலாமா? ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்தா என்னா?” என பொன்னம்பலம் கேட்டதைக் காதில் வாங்காத வள்ளி, ”எதுக்காக எம் பொண்ண உள்ளார வுடாம ரெண்டு நாளாத் துரத்தியடிக்கிறீங்க?” மீண்டும் கேட்டாள். வாசலில் நின்றுகொண்டிருந்த ஷாலினியைப் பார்த்த பிறகுதான் விஷயம் என்னவென்று அவருக்குப் புரிந்தது.

”அந்தப் பொண்ணோட அம்மாவா நீங்க?”

”ஆமாம். விசியத்த சொல்லுங்க. நான் போவணும்!”

”ஒங்க பொண்ணு என்னா செஞ்சிருக்கு தெரியுமா?”

”கொலையா பண்ணிப்புட்டா?” – வள்ளியின் குரல் உயர்ந்து ஒலித்தது.

அரசுப் பள்ளியில் ஒரு நாள்

அவள் நிற்கிற தோரணையும் பேச்சும் எரிச்சலை ஏற்படுத்தியது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ”நான் என்ன சொன்னேனு தெரியுமா?”- பொன்னம்பலம் நிதானமாகக் கேட்டார்.

”வெளிய போனு நீங்கதான துரத்தியடிச்சீங்க?”

”துரத்தியும் அடிக்கலை… ஒண்ணும் அடிக்கல. ஹெட்மாஸ்டரைப் பார்த்துட்டு வானு சொன்னன். அவ்வளவுதான்!”

”இம்மாம் புள்ளங்க இருக்கும்போது அவ மட்டும் எதுக்குப்போயி ஹெட்மாஸ்ட்டரப் பாக்கணும்?” – வள்ளி உரத்தக் குரலில் வெடுக்கென்று கேட்டாள்.

”எதுக்கும்மா கத்திக் கத்திப் பேசுற? இது க்ளாஸ் ரூமா… காய்கறிக் கடையா?” – பொன்னம்பலம் சத்தமாகக் கேட்டார்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு தினுசாகச் சொன்னாள் வள்ளி. ”இது பள்ளிக்கூடம்னு எங்களுக்கும் தெரியும்? உங்க தோதுக்கு ‘வெளியே போ, ஹெட்மாஸ்ட்டரப் பாரு, அப்பா அம்மாவ அழைச்சிட்டு வா’னு சொன்னா, நெனச்ச நேரத்துக்கு எங்களால வர முடியுமா? ஓடியாடிப் பொழப்பப் பாக்க வேணாமா? ஒங்களை மாதிரி குந்திக்கிட்டா சம்பளம் வாங்குறோம்?”

பொன்னம்பலத்துக்கு, கோபம் தலைக்கு ஏறிற்று. ஆத்திரத்தில் படபடத்தார். ”யாரும்மா குந்திக்கிட்டு சம்பளம் வாங்குறா?”

”சனி, ஞாயிறு, காலாண்டு லீவு, அரையாண்டு லீவு, முழு ஆண்டு லீவுனு குந்திக்கிட்டு நாங்களா சம்பளம் வாங்குறோம்? சித்தாளு வேலைக்கிப் போனாத்தான கூலி குடுக்கிறான். போவாம இருந்தா கொடுப்பானா?” – முகத்தில் அறைவது மாதிரி கேட்டாள்.

வார்த்தை வராமல் பொன்னம்பலம் கோபத்தோடு வள்ளியைப் பார்த்தார். வாசலில் நின்றிருந்த ஷாலினியைப் பார்த்தார். பிறகு, வகுப்பில் இருந்த பிள்ளை களிடம் திரும்பி, ”பேசிக்கிட்டு இருக்கும்போதுதான் சத்தம் போடுவீங்களா? இப்ப நடத்தின பாடத்தைப் படிச்சிட்டுருங்க. கேள்வி கேக்கப்போறேன்…” – சத்தமாகச் சொன்னார்.

சில நொடிகள்தான் வகுப்பறை அமைதியாக இருந்தது. பிறகு, மீண்டும் சலசலக்கத் தொடங்கியது.

”நான் வேலைக்கிப் போவணும் சார். நீங்க சொல்லி முடிங்க” – வள்ளி கசப்போடு சொன்னாள்.

”நான் சொல்றதப் புரிஞ்சிக்கங்க. நான் உங்க மகளை ‘வெளிய போ’னு சொல்லல. வேணுமின்னா ஒங்க பொண்ணயே கேட்டுக்குங்க. ‘ஹெட்மாஸ்ட்டரப் பார்த்துட்டு வா’னுதான் சொன்னேன். ஹெட்மாஸ்டரைப் பார்க்கிறதுல தப்பு ஒண்ணும் இல்லை. நெனச்சதுக்கெல்லாம் டி.சி. கொடுக்க மாட்டாங்க!” – பொன்னம்பலம் தன்மையான குரலில் சொன்னார்.

”அம்மாம் பெரிய தப்பா பண்ணிப்புட்டா எம் மவ?” என்று கிண்ட லான குரலில் கேட் டாள் வள்ளி. உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த எரிச்சலை வெளிக் காட்டாமல், ”ஒரு சினிமா நடிகரோட பொறந்த நாளுக்கு க்ளாஸ் பூரா எல்லாப் பசங்களுக்கும் சாக்லெட் குடுத்திருக்கு. படிக்கிற புள்ள இந்த மாதிரி செஞ்சது தப்புனு சொல்லக் கூடாதா? நல்லதுக்குத்தான சொல்றம்?”

”நீ ஒண்ணும் எம் பொண்ணுக்கு நல்லது பண்ண வாணாம்? வாங்குற சம்பளத்துக்கு வேல பாத்தாலே பெருசு. இன்னிக்கி எம் பொழப்புப் போச்சி” என்று சொன்னாள் வள்ளி.

நறுக் சுருக்கென்று அவள் பேசுவதற்கு பொன்னம்பலத்தால் பதில் சொல்லவே முடியவில்லை. சட்டென்று தன் மேலேயே அவருக்குக் கோபம் வந்தது. யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று விடாதது தன் தவறுதான் என்று நினைத்தார். அதே நேரத்தில் அரசாங்க வேலைக்கு ஏன் வந்தோம் என்ற கழிவிரக்கமும் உண்டானது.

அவர் படிக்கிற காலத்தில், கிராமத்திலிருந்து வருகிற மாணவர்கள் பெரும்பாலும் வரலாறு பாடம்தான் எடுப்பார்கள். அதனால் அவரும் வரலாறு பாடம்தான் படித்தார். வரலாறு பாடம் படித்தால் வேலை கிடைக்காது என்று அப்போது தெரியவில்லை. 52-வது வயதில் பதிவுமூப்பு அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த வேலை கிடைத்தது. அரசாங்க வேலை; அதுவும் ஆசிரியர் வேலை. ஜாலியாக இருக்கும் என்றுதான் நினைத்தார். ஆனால், அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்; எப்போதும் மிரட்டலாம். அதுவும் மாணவிகளின் அம்மாக்கள் வந்து தாறுமாறாகப் பேசுவார்கள் என்று அவர் கற்பனையில்கூட நினைத்துப் பார்த்தது இல்லை.

‘பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடக்கும்போது வந்து, எந்தத் தயக்கமும் கூச்சமும் இல்லாமல், ‘கணீர் கணீர்’ என்று எந்தத் தைரியத்தில் பேசுகிறாள் இவள்?’ என்ற நினைப்புடன் வள்ளியை ஓரக்கண்ணால் பார்த்தார். சண்டைக்கோழி மாதிரி நின்றிருந்தாள் வள்ளி. ”நல்ல ஆளுதான்” என்று முணுமுணுத்தார்.

அப்போது ஒரு பிள்ளை எழுந்து வந்து, ”சார்… கமலா என் நோட்ட எடுத்துக்கிட்டுத் தர மாட்டங்கிறா சார்” என்று புகார் வாசித்தாள்.

”போ எட்ட. அறியாப் புள்ளங்க மாரி அடிச்சிட்டா, கிள்ளிட்டானு வந்து சொல்லிக்கிட்டு. வளர்ந்த பசங்க மாதிரியா நடந்துக்குறீங்க?” என்று பொன்னம்பலம் சத்தம் போட்டுக் கத்தியதும், அந்தப் பிள்ளை அழுதுகொண்டே தன்னுடைய இடத்துக்குப் போனாள்.

பிள்ளையிடம் கத்திய அதே வேகத்திலேயே, ”ஒங்க பொண்ணு கெட்டுப்போறதுக்கா சொன்னேன் ‘ஹெட்மாஸ்ட்டரப் பாத்திட்டு வா’னு. சொன்னதுக்கு சண்டைக்கி வர்றீங்களே. இப்பிடியிருந்தா, நாங்க பிள்ளைங்களை எப்படிக் கண்டிக்கிறது? பிள்ளைங்க எப்பிடி எங்க பேச்சைக் கேக்கும்? பிள்ளைங்க எப்பிடி வாத்தியாருக்குப் பயப்படும்? ஒங்க பொண்ணு ஒண்ணும் சின்னப்புள்ள இல்ல. ப்ளஸ் டூ படிக்குது. பிள்ளைங்க மேல அக்கறை இல்லாமயாக் கண்டிப்பாங்க?”

”ஒங்க அக்கறையெல்லாம் எங்க இருக்குனு எங்களுக்குத் தெரியாதா? ஒங்க புள்ளிவுளுக்குச் சொல்லித்தர்ற மாரியா இந்தப் புள்ளிவுளுக்குச் சொல்லித்தர்றீங்க? பிராக்டிக்கல் மார்க் போட, தலைக்கி அம்பது ரூவா வாங்குறீங்களா இல்லியா? டியூசனுக்கு வராத புள்ளிங்கக்கிட்ட பிராக்டிக்கல் மார்க் போட மாட்டேனு சொல்லி மிரட்டுறீங்களா இல்லியா?”

”நான் சயின்ஸ் வாத்தியார் கெடயாது. எதையும் தெரிஞ்சுக்கிட்டுப் பேசணும். புரியுதா?” – பொன்னம்பலம் கத்தியேவிட்டார்.

பதிலுக்கு வள்ளியும் கத்தினாள். ”எம்மாம் நாளக்கி அவள வெளிய போவச் சொல்லுவ?”

”க்ளாஸ் நடந்துட்டு இருக்கு. என்னா ஏதுன்னு கேக்காம நீ பாட்டுக்கும் உள்ள வந்ததே தப்பு. அதில்லாம ஒன் இஷ்டத்துக்குக் கண்டபடி பேசுற? இதே மாதிரி

நீ போயி தனியார் பள்ளிக்கூடத்துல நுழைய முடியுமா? வாய்க்கு வந்தபடி பேசத்தான் முடியுமா? மறுவார்த்தை பேசாம டி.சி-யைக் கைல கொடுத்துத் துரத்திப்புடுவான் தெரியுமா?” – பொன்னம்பலம் சொன்னதும், அவரைவிட வேகமாகவும் குரலை உயர்த்தி, ”தனியார் பள்ளிக்கூடத்துக்குப் போவத் தெரியாமயா இங்க வந்தோம்? பெரிய இது மாதிரிப் பேசுற…” என்று வள்ளி கத்தினாள். இருவரும் மாறிமாறிக் கத்திக்கொண்டார்கள்.

கடைசியில் பொன்னம்பலத்தின் குரல்தான் அடிபட்டுப் போயிற்று. நொந்துபோய் வாசலில் நின்றிருந்த ஷாலினியைப் பார்த்தார்.

”இம்மாம் பேசுறியே… ஒங்க பொண்ண ஒரு வார்த்தை கேக்க மாட்டியா? சாக்லெட் மட்டுமா குடுத்துச்சி? ஒங்க பொண்ணோட ஒவ்வொரு நோட்டையும் வாங்கிப் பாரு. அந்த சினிமா நடிகரோட படத்தை ஒட்டிவெச்சிருக்கிறதை… புக்குல ஒவ்வொரு பக்கத்துலயும் அந்த நடிகரோட பேரத்தான் எழுதி வெச்சிருக்கு. அத என்னன்னு கேக்க மாட்டியா?” – ஆதாரத்துடன் வள்ளியை வீழ்த்திவிட்டோம் என்ற எண்ணத்தில் லேசாக சிரித்தார்.

அரசுப் பள்ளியில் ஒரு நாள்2

அதற்கு அசட்டையாக, ”கேக்காமியா வருவன்? ஊட்டுல பொணமாப் பொரட்டி எடுத்திட்டுத்தான் வாரன். நோட்டுபுக்குலதான் ஒட்டிவெச்சிருக்கா? நெஞ்சுலயா பச்ச குத்தியிருக்கா? ஊருல நாட்டுல இருக்கிற புள்ளங்க எல்லாம் அப்பிடித்தான் செய்யுதுவோ தெரியுமா? சின்னப்புள்ள செஞ்சதுக்கே இப்பிடிக் குதிக்கிறியே!”

பொன்னம்பலத்தின் முகம் தொங்கிப்போயிற்று. எதைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும் ஒரே வார்த்தையில் அடித்து நொறுக்கிவிடுகிறாள். ஆத்திரமாக இருந்தது. அவளுடைய வாயை எளிதில் அடைக்க முடியாது என்று நினைத்து முடிவாகச் சொன்னார்… ”அம்மா இது க்ளாஸ் ரூம். ஒரு க்ளாஸ் வீணாப்போச்சி. நீங்க போயி ஹெட்மாஸ்டரைப் பாருங்க!”

”ஒனக்குத்தான் நேரம் போச்சா? எனக்குப் போவலியா? ஹெட்மாஸ்ட்டருன்னா சிங்கம், புலி, கரடியா? கடிச்சித் தின்னுடுவாரா?” என்று சொன்ன வள்ளி, ”இன்னிப் பொழப்புப் போயிடும்போல இருக்கே. இம்மாம் புள்ளிவோ இருக்கயில, ஒனக்கு மட்டும் என்னடி சனியன்! என்னை வம்புல கொண்டாந்துவுட்டுட்டியே” – முனகிக்கொண்டே வெளியே போனாள். அவளோடு சேர்ந்து ஷாலினியும் சென்றாள்.

‘காலையிலேயே பெரிய ரோதனையாப்போச்சி!’ என்று தனக்குள் பேசிக்கொண்ட பொன்னம்பலம், ”என்ன படிச்சிட்டீங்களா? கேள்வி கேக்கலாமா?” என்று பிள்ளைகளிடம் கேட்டார். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. ”புஸ்தகத்த எடுங்க” என்று சொன்னவருக்கு, ‘ஷாலினியும் அவளுடைய அம்மாவும் ஹெட்மாஸ்டரிடம் இல்லாததையும் பொல்லாததையும் அள்ளிப் போட்டுவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலை வந்ததும், ”சத்தம் போடாமப் படிச்சிட்டுருங்க” என்று சொல்லிவிட்டு, வேகமாக தலைமை ஆசிரியரின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

ஷாலினியும் அவளுடைய அம்மாவும் தலைமை ஆசிரியரின் அறைக்கு வெளியே நின்றிருப்பதைப் பார்த்ததும்தான் அவருக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. ‘ஹெட்மாஸ்டர் ஒரு லூஸுவாயன். ஆள் இருந்தா, ஒண்ணு பேசுவான்; ஆள் இல்லைன்னா, ஒண்ணு பேசுவான். பொம்பளை டீச்சர்கிட்ட ஒரு விதமாவும், ஆம்பள வாத்தியார்கிட்ட ஒரு விதமாவும் பேசுவான். காலையிலேயே அவங்கிட்ட போறதா இருக்கு!’ என்று அலுத்துக்கொண்டே தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்தார்.

”வாங்க சார். உட்காருங்க” என்று பொன்னம்பலத்திடம் சொல்லிவிட்டு, எதிரில் நின்றிருந்த 10-ம் வகுப்பு மாணவியிடம், ”ஒரு வாரமா பள்ளிக்கூடம் வராம என்ன செஞ்ச? தெனம் வர மாட்டீங்க. எப்ப முடியுமோ… அப்ப வருவீங்க. ரிசல்ட்டு வல்லனு அதிகாரி என்னப் போட்டுக் கொடாயுறாங்க. பேசாம எதுக்கு நிக்குற? பதில் சொல்லு” என்று கேட்டார். திரும்பத் திரும்பக் கேட்டார். அப்போதும் அந்தப் பிள்ளை வாயைத் திறக்காததால், ”நீ வாயத் தொறக்க மாட்ட. ஆனா, வீட்டுல போயி, ‘அந்த வாத்திப் பய அதச் சொன்னான்… இதச் சொன்னான்’னு சொல்லி, வாத்தியாரை மிரட்டுறதுக்கு ஒரு படையத் திரட்டிட்டு வருவ… இல்லியா?” என்று கேட்டார். அதற்கும் அந்தப் பிள்ளை வாயைத் திறக்கவில்லை.

”வாயைத் திறக்காம எரும மாதிரி நிக்குறியே? ஒருவேளை டி.சி. குடுத்தா வாயத் தொறப்பியோ?” என்று கத்தினார். ‘டி.சி. கொடுத்துவிடுவேன்’ என்று மிரட்டிய பிறகும் அந்தப் பிள்ளையின் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

இந்தப் பிள்ளையிடம்தான் என்றில்லை; எல்லாப் பிள்ளைகளையுமே அவர் அப்படித்தான் மிரட்டுவார். அதனால் அவருக்கு ‘டி.சி. ராமலிங்கம்’ என்று பட்டப்பெயரே வைத்திருக்கிறார்கள். பிள்ளைகள் மத்தியில், ஆசிரியர்கள் மத்தியில்தான் என்றில்லை, டி.இ.ஓ., சி.இ.ஓ., அலுவலகம் வரையிலும் அவருக்குப் பெயர் ‘டி.சி. ராமலிங்கம்’தான். அவர் தலைமை ஆசிரியராகி பத்து வருடங்கள் இருக்கும். இதுவரையில் அவர் கோபத்தில் ஒரு பிள்ளைக்குக்கூட டி.சி. கொடுத்ததே இல்லை.

”இப்பிடி பேசாம நின்னுட்டே மயக்கம் போட்டு விழுந்திடாத. அப்பறம் என் தாலி அந்துடும். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு ஏன் வரலை? சட்டுனு சொல்லு, இல்லைன்னா போயி ஒங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வா” மீண்டும் தலைமை ஆசிரியர் கத்தியதும்தான் அந்தப் பிள்ளை வாயைத் திறந்தது.

”வயித்து வலி சார்!”

”என்னாது?”

”வயித்து வலி.”

தலைமை ஆசிரியருக்கு என்ன தோன்றியதோ, ”ஒங்க அப்பா அம்மாவுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

”தெரியும்!”

”இப்ப வயித்த வலிக்குதா?”

”சரியாயிடிச்சி!”

”சரி… க்ளாஸுக்குப் போ. இனிமே இந்த மாதிரி செஞ்சா, ஒங்கப்பா அம்மாவோடதான் வரணும். இல்லைன்னா, டி.சி-யைக் குடுத்திடுவன். புரியுதா?” – அதிகாரமாகக் கேட்டார். புரிகிறது என்பது மாதிரி அந்தப் பிள்ளை தலையை மட்டும் ஆட்டினாள்.

‘போ’ என்று தலைமை ஆசிரியர் சொன்னதும், அந்தப் பிள்ளை வணக்கம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

”இந்தப் பிள்ளைக்கு நெசமா வயித்து வலின்னா நெனக்கீறீங்க? நடிக்குது. எதச் சொன்னா இந்த ராமலிங்கத்த ஏமாத்தலாமின்னு, பிள்ளைங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. பொம்பளைப்புள்ளகிட்ட போயி, ‘என்னா வயித்து வலி’னு கேக்க முடியுமா? தப்பாயிடும்ல. இந்தப் பொம்பள டீச்சர்களுக்கு இதே வேலையாப்போச்சி. நெனச்சதுக்கெல்லாம் ‘ஹெச்.எம்- கிட்ட போ… ஹெச்.எம்-கிட்ட போ’னு எல்லாத்தயும் எங்கிட்டத் தள்ளிவுடுறாங்க. ‘ச்சீ கழுத… இனிமே இப்பிடிச் செய்யாதனு சொல்லிட்டு, வகுப்புள்ளார சேத்துக்கிட்டுப் போவ வேண்டியதுதான?’ என்று பேசியபடி தலைமை ஆசிரியர் தண்ணீர் குடித்தார். பிறகு, நீங்க வந்த விஷயத்தக் கேக்க மறந்திட்டன் பாருங்க. என்னா விஷயம் சார்?” – பொன்னம்பலத்திடம் கேட்டார்.

”வாசல்ல நிக்குதில்ல சார் ஒரு பொண்ணு. அது மூணு நாளக்கி முன்னாடி ஒரு நடிகரோட பொறந்த நாளுனு வகுப்பு பூராவும் சாக்லெட் குடுத்திருக்கு. அதோட நோட்டுபுக்குல எல்லாம் ‘தமிழ்ச் சிங்கம்’ங்கிற நடிகரோட பேர, ஒவ்வொரு பக்கத்துலயும் எழுதிவெச்சிருக்கு. படத்தையும் ஒட்டிவெச்சிருக்கு. அதுக்காக, ‘நீ ஹெச்.எம்-மைப் பார்த்துட்டு வா’னு சொன்னேன். ஒங்களப் பார்க்காம அந்தப் பிள்ளை அம்மாவை அழைச்சிக்கிட்டு வந்திருக்கு. அந்தம்மா வந்து காச்மூச்னு க்ளாஸ்ரூம்லயே கத்துது சார்!”

”யாரோ எப்பிடியோ போறாங்கனு விடாம, எதுக்கு சார் அதைப் போயி கேட்டீங்க?” என்று தலைமை ஆசிரியர் கேட்டதும் பொன்னம்பலத்தின் முகம் சுருங்கிப்போயிற்று. அதைப் பொருட்படுத்தாமல் வாசலில் நின்றிருந்த ஷாலினியையும் அவளுடைய அம்மாவையும், ”இங்க வாங்கம்மா” என்று தலைமை ஆசிரியர் அழைத்தார்.

”என்னம்மா விஷயம்?”

”எம் புள்ளக்கி ஒண்ணுமே தெரியாது சார். புள்ளங்களத் தூண்டிவுட்டு க்ளாஸ்ல சாக்லெட் குடுத்தாளாம். அதுக்காக ரெண்டு நாளா க்ளாஸுல ஒக்காரவுடாமத் துரத்தியடிச்சியிருக்காரு இந்த சாரு” என்று வள்ளி சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு, ”வெளில துரத்தலை சார்… ‘ஹெச்.எம்-மைப் பார்த்திட்டு வா’னுதான் சார் சொன்னேன்” என்று பொன்னம்பலம் சொன்னார்.

‘சாக்லெட் குடுத்தியா?’ – தலைமை ஆசிரியர் கேட்டதற்கும் ஷாலினி வாயைத் திறக்கவில்லை. வள்ளிதான், ”புள்ளிவோ பேச்சைக் கேட்டு ஆடுது. அப்பறம் மாட்டிக்கிட்டு நிக்குது” என்றாள்.

”சினிமா நடிகரோட பேரை புக்குல ஒவ்வொரு பக்கத்துலயும் எழுதிவெச்சியா? அவர் படத்தை நோட்டுல ஒட்டிவெச்சியா?” என்ற தலைமை ஆசிரியரின் எந்தக் கேள்விக்கும் ஷாலினி வாயைத் திறக்கவே இல்லை. திரும்பத் திரும்பக் கேட்டார். அப்போதும் வாயைத் திறக்கவில்லை. பள்ளிக்கூடத்திலேயே அவளை மாதிரி நல்ல பிள்ளை இல்லை என்பதுபோல் நின்றிருந்தாள்.

”ஒம் பொறந்த நாளுக்குக் குடுத்திருந்தா பரவாயில்ல. ஒங்கப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி பொறந்த நாளுக்குக் குடுத்திருந்தாலும் பரவாயில்ல. சினிமா நடிகர் பொறந்த நாளுக்குக் குடுத்திருக்கியே… அது நல்லதா?”

”இதைத்தான் சார் நானும் கேட்டன்!” – பொன்னம்பலம் சொன்னார்.

”சாக்லெட் குடுத்தது ஒரு தப்பா? அவ காசுலதான வாங்கிக் குடுத்திருக்கா? திருடிக் குடுக்கலல்ல. அதுவும் கூடப் படிக்கிற புள்ளிவுளுக்குத்தான் குடுத்திருக்கா. இதக் குத்தமா எடுத்துக்கிட்டு ரெண்டு நாளாப் பேசுறீங்களே. ‘ச்சீ போ நாயே’னு வுட்டுட்டுப் போவீங்களா?” என்று வள்ளி சொன்னதும், தலைமை ஆசிரியருக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ஆனால், கோபத்தை வெளியே காட்டாமல் சிரித்தார். அதே நேரத்தில் கடுமையான குரலில் சொன்னார்… ”ஒங்க பொண்ணு தன் காசப் போட்டுத்தான் வாங்கிக் குடுத்திருக்கு. அத இல்லேங்கல. யாரோட பொறந்த நாளுக்குனாலும் வாங்கிக் குடுங்க. நாங்க ஏன் தடுக்கப்போறோம்? குடுக்கிறதத் தெருவுல குடுங்க. ஊருல குடுங்க. எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து குடுக்குறீங்க? அத நாங்க கேட்டுத்தான ஆவணும். அதுக்குத்தான அரசாங்கம் சம்பளம் தருது? ‘ஹெச்.எம்-மைப் பார்த்துட்டு வா’னு சொன்னது குத்தமா? ஹெச்.எம்-ங்கிறவன் என்ன போலீஸா… பயப்படுறதுக்கு?”

”அதுக்குனு வயசுக்கு வந்த புள்ளய ‘வெளிய போ, வெளிய போ’னு சொல்றது நல்லதா?”

”ஒனக்கு எத்தன தடவை சொல்றது… ‘வெளிய போ’னு சொல்லலைனு. ‘ஹெச்.எம்-மைப் பார்த்திட்டு வா’னுதான் சொன்னேன்!” என்று பொன்னம்பலம் சொன்னார்.

அவர் சொன்னதை காதில் வாங்காத மாதிரி நின்றிருந்தாள் வள்ளி. அவள் நிற்கும் விதமும் பேசும் தோரணையும் தலைமை ஆசிரியரை ஏற-இறங்கப் பார்க்கவைத்தது. லேசாக உதட்டைப் பிதுக்கினார். அலுத்துப்போய், ”சினிமா நடிகரோட பொறந்த நாளைக்கி ஏன் சாக்லெட் கொடுத்தேனு கேக்கலை. அப்பிடிக் கேட்டது தப்பும்மா. இனிமே ஒங்க பொண்ணை, ‘என்ன, ஏது’னு கேக்கலை…. போதுமா?’ என்று சொன்ன தலைமை ஆசிரியர், பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்தார்.

வள்ளி வெறுப்பும் கசப்புமாகச் சொன்னாள், ” ‘வெளியே போ… வெளிய போ’னு சொன்னதாலதான் ரெண்டு நாளா அவ பள்ளிக்கூடத்துக்கு வந்திட்டு வந்திட்டு ஊட்டுக்குத் திரும்பி வர்றா? அதனாலதான் நான் இன்னைக்கி வந்தன், வேலைக்குப் போறத வுட்டுட்டு!”

”பள்ளிக்கூடத்துக்கு வர்றதுல என்னம்மா தப்பு இருக்கு?”

”இப்பயே அரை நாளு ஓடிப்போச்சி. இனிமே வேலைக்கிப் போவ முடியுமா?

ஒம்போது மணிக்குப் போனாலே, அந்த மேஸ்திரிப் பய கடாமுடாம்பான்” என்றாள் வள்ளி.

”என்ன ஊரும்மா?”

”கழுதூரு. காலைல ஏழு மணிக்கு பஸ் ஏறுனாத்தான் விருத்தாசலத்துக்கு எட்டு மணிக்கு வர முடியும். பாலக்கரயில இருந்து எந்த எடத்துல வேலையோ… அங்க நடந்து போறதுக்குள்ளாற, ஒம்போது மணிக்கு மேலாயிடும். அதுக்கே லேட்டும்பானுவ. இன்னைக்கு இனிமே நான் வேலைக்கிப் போவ முடியுமா? வேலைக்கிப் போயிட்டு ராத்திரி ஊட்டுக்குப் போவ எட்டு ஒம்போதாகிரும். அதுக்குப் பின்னாடிதான் சோறு ஆக்கித் தின்னுட்டுப் படுக்கணும். கோழி கூப்புட எழுந்தாத்தான், காலையில விருத்தாசலம் பாலக்கரக்கி எட்டு மணிக்கு வர முடியும்? இதுல நீங்க பாட்டுக்கு, ‘அப்பாவ அழைச்சிட்டு வா… அம்மாவ அழைச்சிட்டு வா’னு சொன்னா, எப்பிடி வர முடியும்? இன்னைக்கு யாரு சார் கூலி குடுப்பாங்க?” என்று சொல்லும்போதே வள்ளியின் கண்களில் நீர் திரண்டு நின்றது.

அவள் அழுததைப் பார்த்ததும் தலைமை ஆசிரியரின் முகமும் குரலும் மாறிவிட்டன. வள்ளியின் கையில் இருந்த வொயர் கூடையையும், அதிலிருந்த சோற்று டப்பாவையும் பார்த்தார். பார்ப்பதற்குச் சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது அந்தக் கூடை.

”நீ சொல்றது சரிதாம்மா. பிள்ளைங்களைக் கேக்கவும் கூடாது; அடிக்கவும் கூடாது; அப்பா அம்மாவையும் கூப்பிடவும் கூடாதுங்கிற. அப்ப நாங்க என்னதான் செய்றது? நீ சொல்றதைப் போயி டி.இ.ஓ., சி.இ.ஓ-கிட்டலாம் சொல்ல முடியுமா? தனியார் பள்ளிக்கூடத்துல லட்ச லட்சமாக் குடுத்துப்புட்டு கையக் கட்டிக்கிட்டு பெத்தவங்க வரிசைல நிக்கிறாங்க. அரசாங்கப் பள்ளிக்கூடத்துலதான் புள்ளைங்ககிட்டயும் பேச முடியலை; பெத்தவங்ககிட்டயும் பேச முடியலை. மீறிக் கேட்டா, பெட்டிஷன் போட்ருவேன்னு மிரட்டுறாங்க” என்று சொல்லும்போது ஒரு டீச்சர் ஒரு பிள்ளையை அழைத்துக்கொண்டு தலைமை ஆசிரியரின் அறைக்குள் வந்தார்.

அந்தப் பிள்ளை அழுதுகொண்டு நின்றது. பதறிப்போய், ”என்ன டீச்சர்?” என்று கேட்டார்.

”இந்தப் பொண்ணு ஏஜ் அட்டன் பண்ணிருக்கு சார். வீட்டுக்கு அனுப்பிரலாமா?”

”இதுக்கெல்லாமா எங்கிட்ட வரணும்? போங்க. போயி பிள்ளைய மொதல்ல வீட்டுக்கு அனுப்புங்க” என்று கத்தினார். மறுநொடியே என்ன தோன்றியதோ, ”அவுங்க அப்பா அம்மாவை வரச்சொல்லி அனுப்புங்க. எதாச்சும் பிரச்னை வந்துடப்போவுது. இந்த நிலைமையில தனியா அனுப்ப வேண்டாம்!”

”அதுவரைக்கும் எங்க சார் உட்காரவெக்கிறது?”

”என் தலையிலதான்” என்று சொல்லிக் கத்தினார். ஒன்றும் சொல்லாமல் நின்ற டீச்சரிடம், ”போங்க… போயி ஸ்டாஃப் ரூம்ல உட்காரவைங்க!”

டீச்சர் பிள்ளையை அழைத்துக்கொண்டு ஸ்டாஃப் ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தார். டீச்சர் மீது ஏற்பட்ட கோபத்தை ஷாலினியின் அம்மாவிடம் காட்டினார் தலைமை ஆசிரியர்.

”பார்த்தீங்கள்ல… பிரச்னை எப்பிடிலாம் வருதுனு? உங்களுக்கு உங்க பிரச்னை. எங்களுக்கு எங்க பிரச்னை. பிரச்னைய எல்லாரும் மத்தவங்க தலையில கட்டத்தான் பாக்குறாங்க” என்று சொல்லிவிட்டு டீச்சர்களையும் ஆசிரியர்களையும் திட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் களைப்படைந்து, பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார்.

”சார்…” என்று வள்ளி சொன்னாள்.

” ‘ஹெச்.எம்-மைப் பாரு’னு சொன்னதுக்கே, நீ சண்டைக்கி வந்துட்ட. இருக்கிறதுலயே அந்த வாத்தியார்தான் ஒழுங்காப் பாடம் நடத்துற ஆளு. இந்த மாதிரி நாலு பேரு வந்து மிரட்டுனா, அவர் எப்பிடிப் பாடம் நடத்துவார்?”

”சண்டைக்கு வர்ல சார். ‘வெளிய போ, வெளிய போ’னு சொன்னதால அவ ஏதாச்சும் பண்ணிக்கிட்டா, நான் என்னா சார் செய்வன்?” – அவளுடைய கண்களிலிருந்து நீர் இறங்கிற்று. ”அன்னன்னிக்கு ஓடுனாதான் சோறு!”

”அப்பிடியிருக்கும்போது இதுக்கெல்லாம் காசு எங்கிருந்து வருது?”

”இப்போலாம் எல்லாப் புள்ளிவளும் அப்பிடித்தான் சார் இருக்குதுவோ. அதுங்ககிட்ட அதிகமாப் பேசவே பயமா இருக்கு!”

”பெத்தவங்களுக்கே இப்பிடியிருந்தா, எங்களுக்கு எப்பிடி இருக்கும்? அதனாலதான் எல்லா டீச்சரும், எல்லா வாத்தியாரும் ‘ஹெச்.எம்-மைப் பாரு’னு சொல்லிடுறாங்க… புரியுதா?”

வள்ளி, வாயைத் திறக்கவில்லை. ஷாலினியை அருகில் கூப்பிட்டு, ”நீஇன்னும் நாலைஞ்சி மாசம்தான் இந்தப் பள்ளிக்கூடத்தில இருக்கப்போற! அப்பறம் எதுக்கு இந்த வாத்தியாரு மூஞ்சியில முழிக்கப்போற? இருக்கிறவரைக்கும் சொல்றதக் கேட்டுட்டுப் போயன். என்னா கெட்டுடப்போவுது? நான் பெத்தது ஒழுங்கா இருந்தா, எதுக்கு வந்து இங்க நிக்குறன்? நான் என்னைக்கிப் பொறந்தன்னு எனக்கும் தெரியாது. என்னைப் பெத்தவங்களுக்கும் தெரியாது. இம்மாம் புள்ளங்க இருக்கும்போது இவ எதுக்கு முட்டாய் கொடுக்குறா?” என்று சொல்லி, வள்ளி அழுதாள்.

அவள் அழுவதைப் பொருட்படுத்தாத தலைமை ஆசிரியர், ”சரிம்மா… நீ வீட்டுக்குப் போ. பாப்பா நீ க்ளாஸுக்குப் போ” என்று சொன்னார்.

எழுந்து நின்று கண்களை அழுந்தத் துடைத்துக்கொண்ட வள்ளி, ‘வாத்திப் பசங்களுக்கு ஆளு கெடச்சாப் போதும். பேசியே பொழுதைப் போக்கிடுவாங்க. இன்னைக்கு பொழைப்பு போச்சே’ என்று வாய்க்குள்ளாகவே முனகிக்கொண்டபடியே வெளியே போனாள்.

நின்றிருந்த பொன்னம்பலத்தை உட்காரச் சொன்ன தலைமை ஆசிரியர், சிறுபிள்ளைக்கு சொல்வது மாதிரி சொன்னார்… ”அரசாங்கப் பள்ளிக்கூடத்துக்கு வர்றதெல்லாம் படிக்க வர்றதில்ல. பொழுதுபோக்கத்தான் வருதுவோ. எல்லாத்தையும் இலவசமாக் குடுத்தா, எந்தப் பிள்ளை படிக்கும்? பொறந்த நாளு கொண்டாடுறது, கல்யாண நாளு கொண்டாடுறது எல்லாம் வெள்ளக்காரன் நம்ப நாட்ட வுட்டு இன்னும் போவலங்கிறதுக்கு அடையாளம். எந்தக் கழுத எக்கேடு கெட்டா நமக்கென்ன? வந்தமா, பாடத்த நடத்துனோமானு இருங்க. பாடத்தை நடத்தாட்டியும் போவுது. எனக்கு வம்பக் கொண்டாந்துவுடாதீங்க. கொம்பு இருக்கிற மாடுதான் முட்டும்னு இல்லை. கொம்பு இல்லாத மாடும் முட்டும் சார்” என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார்.

”க்ளாஸ் இருக்கு… வரேன் சார்” என்று சொல்லிவிட்டு எழுந்தார் பொன்னம்பலம்.

”சரி” என்று சொன்ன தலைமை ஆசிரியர், ப்யூனை அழைத்து, ”இன்டர்வல் பெல் அடிச்சாச்சா?” என்று கேட்டார். அப்போது ஒரு பிள்ளை உள்ளே வந்தது.

”என்னா?” என்று தலைமை ஆசிரியர் கேட்டார்.

”டீச்சர் ஒங்களப் பாத்திட்டு வரச் சொன்னாங்க சார்” என்று சொன்னது.

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *