யாருக்கு மாப்பிள்ளை யாரோ?

 

மௌனமான துக்கத்தில் ஆழ்ந்துபோய், சாத்திய அறைக்குள்ளேயே படுத்திருந்தான் கார்த்திக்.

காற்றினில் இழைந்து வந்த நாதஸ்வர ஓசை அவன் காதுக்கு நாராசமாகக் கேட்டது. வீட்டில் அத்தை பெண் பிருந்தாவைத் தவிர மற்ற எல்லோரும் கல்யாண வீட்டிற்குப் போய்விட்டார்கள்.
அவனையும் மஞ்சுவோட அப்பா வற்புறுத்தித்தான் கூப்பிட்டார். அவனுக்குப் போகப் பிடிக்கவில்லை, போகவில்லை.

தன்னுடைய காதலி மஞ்சுவோட பக்கத்திலே இன்னொருவன் உட்கார்ந்திருக்கிற காட்சியை அவனால் சகித்துக்கொள்ள முடியுமா?
இந்நேரம் மஞ்சுவின் கழுத்திலே மங்கலநாண் ஏறியிருக்கும். நினைக்கும்போதே அவனுக்கு நெஞ்செல்லாம் எரிந்தது. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போகப்போகிறானே! தன்னடைய கையாலாகாத் தனத்தை எண்ணி ஆத்திரம் வந்தது. கூடவே அழுகையும் வந்தது கார்த்திக்கிற்கு.
நேரங் காலம் தெரியாமல் அவனது அத்தை பெண் பிருந்தா “அத்தான்! காலையிலேயிருந்து சாப்பிடாம உட்கார்ந்திருக்கீங்களே, வாங்க அத்தான்” என்றாள்.

“மூதேவி, உன் வேலையைப் பார்த்துக்கொண்டு உள்ளே போ” என்று காட்டுக் கத்தலாய்க் கத்தினான்.

அவள் அவன் கோபத்தை அலட்சியப்படுத்திவிட்டு மறுபடி பேச வாயெடுக்க-

“உள்ளே போகப்போகிறாயா இல்லையா? ஏதாவது தொணதொணத்துக்கொண்டிருந்தே ஒரே அறை, பல்லெல்லாம் கொட்டிடும்” கர்ஜித்தான்.

பிருந்தா வருத்தத்துடன் உள்ளே முடங்கிக்கொண்டாள்.

எல்லாம் பிருந்தாவால்தான் வந்தது. இவளை என் தலையில் கட்டுவதற்காகத்தானே அம்மாவும், அப்பாவும் ஸ்டெப் எடுக்காமலே சதி செய்துட்டாங்க. மஞ்சுவோட பெற்றோர்களும் அவள் மனதைப் புரிந்துகொள்ளாமலேயே இப்படிச் செய்துவிட்டார்களே! நான் எந்த விதத்தில் மஞ்சுவுக்குக் குறைந்தவன்?

கடந்த ஒரு வருடமாக மஞ்சுவும் அவனும் சுற்றாத இடமில்லை, பேசாத பேச்சு இல்லை, இந்த மஞ்சு தான் ஆகட்டும் எப்படி மறந்தாள்? அவளைச் சொல்லிக் குற்றமில்லை. பெண் அழலாம், முரண்டு பிடிக்கலாம். பெற்றோர்களின் முரட்டுத்தனத்துக்கும், பிடிவாதத்துக்கும் முன்பு பாவம்! அவளால் என்னதான் செய்யமுடியும்? ஆணான என்னாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லையே! நினைத்து, நினைத்து ஆத்திரம் வந்தது அவனுக்கு!
ஊண், உறக்கம் இல்லாமல் இரண்டு நாள் எப்படிக் கடந்தது என்ற நினைவுகூட இல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்தான். இவனுடைய சோகத்துக்காக எந்த இயக்கமும் நிற்கவில்i.

அடுத்த நாள்-
மஞ்சு, ஊருக்குப் போகப் போவதாக அம்மாவும், அப்பாவும் பேசிக்கொண்டார்கள். சாத்தியிருந்த ஜன்னல் கதவைத் திறந்து வைத்துக் கொண்டான் கார்த்திக். படுக்கையில் அமர்ந்தபடியே எதிர் வீட்டில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான் இமைக்காமல்.
எதிர் வீட்டில் ஆட்கள் அங்குமிங்கும் நடந்தார்கள். ஒரே சள சளவென்ற பேச்சு சப்தம் வேறு.

சிறிது நேரத்தில் வண்டி வந்து வாசலில் நின்றது. சாமான்கள் ஏற்ற்ப்பட்டன. மஞ்சு, எல்லோரையும் வணங்கி விடை பெற்றுக்கொள்வது தெரிந்தது.

வண்டியில் ஏறி அமருவதற்கு முன், தன் ஈரமான கண்களைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொள்வது தெரிந்ததும் கார்த்திக் இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டது.

தன்னைப் பிரிவதால் தான் அவளுக்குத் துக்கம் தாங்கவில்லை என்பது அவனுக்கும், அவளுக்கும் மட்டுமே புரிந்த உண்மை, என்ன தான் அடக்கினாலும் அவன் கண்கள் அவளை விட்டு நகரவே மறுத்தன.
வண்டி அவன் வீட்டைக் கடக்க முற்படுகையில் பின்னால் அமர்ந்திருந்த மஞ்சு, அவனுடைய பெற்றோர்களிடமும் தலையசைப்பால் விடை பெற்றவள், ஜன்னலில் தெரிந்த கார்த்திக்கைப் பார்த்ததும் அவளது கன்னங்களிலும், காதுகளிலும் சூடேறியதை உணர்ந்தாள். நெஞ்சு ஊமைக்காயத்துடன் விம்மியது தெரிந்தது. மஞ்சு சட்டென்று துக்கத்தை மறைக்க முகத்தைத் திருப்பிக்கொண்டாள். வண்டி புழுதியைக் கிளப்பி விட்டு வேகமாக ஓடி மறைந்தது.

கார்த்திக்கின் தலையில் இப்பொழுது கொதிப்பேறியது. ஊரைத் திரும்பிப் பார்த்தான். சப்பி எறிந்த மாங்கொட்டையைப் போல் சோபையின்றி அவனுக்குக் காட்சியளித்தது.

சே! நான் ஒரு முட்டாள். கொஞ்சங்கூட எனக்குத் துணிவில்லை. எனக்காக உயிரைக் கூடக் கொடுக்கத் தயாராயிருந்தாள் மஞ்சு. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட என்னுடன் வரத்தயாராக இருந்தாள். நான் தான் அது தவறு என்று சொல்லி என் கையாலாகாத்தனத்துக்கு யோக்கியப் பட்டம் கட்டிக்கிட்டேன். முடிஞ்சிட்டுது! இப்ப எல்லாமே முடிஞ்சிட்டுது! என் இதயம் அதோ போய் விட்டது. போகும் பொழுது மஞ்சு பார்த்தாளே ஒரு பார்வை அதிலே தெரியுதே அவள் மனமும், வேதனையும்!

மஞ்சுவைப் பொறுத்தவரையில் இப்பொழுது நான் கூப்பிட்டாலும் என் பின்னால் வரத்தயாராய் இருப்பாள். பேசாமல் அதைச் செய்தால் என்ன!
ஒரு வாரமாகச் சிந்தித்து, சிந்தித்து நினைத்ததை செயல்படுத்த உற்சாகத்தோடு கிளம்பினான்.

“கார்த்திக், உனக்கொரு கல்யாணத்தைப் பண்ணிட்டா எனக்கும் நிம்மதி கிடைக்கும்” என்று அம்மா சொல்ல-

“கல்யாணம்தானே, பண்ணிடுவோம்” என்று இருபொருள்பட மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டு மஞ்சுவின் ஊருக்குப் புறப்பட்டான் கார்த்திக்.

பாவம் அம்மா! ரோஜாப்பூ இருக்க வேண்டிய இடத்தில் எருக்கம் பூவை வைக்க நினைக்கிறாள், என்ன பேதமை!

எப்படியோ தேடியலைந்து மஞ்சுவின் வீட்டை மிகச் சிரமத்துடன் கண்டு கொண்டான் கார்த்திக்.

வீடா அது! அரண்மனை போலல்லவா இருக்கிறது! அழகாக வெட்டிவிடப்பட்ட குரோட்டன்ஸ், போர்ட்டிகோவில் நிற்கும் பிரிமியர் பத்மினி, ரத்தினக் கம்பளம் விரிக்கப் பட்ட படிகள், அலங்கார விளக்குகள், சினிமாவில் வருகிற வீடு மாதிரி எத்தனை அழகு எத்தனை நேர்த்தி!

ஒரு நிமிடம் அவனுடைய அந்தக் குடிசை வீடு நினைவில் வந்து போனது. மறுநிமிடமே இத்தனை அழகிருந்தா போதுமா? வசதி இருந்தா போதுமா? மனசு நிறைஞ்சுடுமா? மனசுக்குப் பிடித்த கணவன் இல்லாமல் இதெல்லாம் சுகம் தருமா மஞ்சுவுக்கு? தங்கக் கூண்டிலே அடைபட்ட கிளிக்குச் சமம்தானே! சிந்தனை வயப்பட்டு நிற்கையிலே-

“யாரது? உங்களுக்கு என்ன வேணும்?” என்ற கம்பீரமான குரல் வந்த திகைப் பார்த்து இமைக்கவும் மறந்து நின்றான் கார்த்திக்.
ஆறடி உயரத்திற்கு, வெள்ளை வெளேர் என்று கம்பீரமாய், அழகாய் சினிமாக் கதாநாயகன் போல் நின்றான் மஞ்சுவின் கணவன் ராம்பிரசாத்.

இதுதான் மஞ்சுவின் கணவனோ? இருக்கும். அம்மா அன்றே சொன்னாளே, மஞ்சுவிக்குப் பொருத்தமான கணவன் என்று, புரிகிறது இப்பொழுது புரிகிறது.

கார்த்திக்கின் மன ஓட்டத்தை அறியாத பிரசாத் “வாங்க சார், உட்காருங்க, உங்களுக்கு யார் வேணும்?” என்றான்.

சுயநினைவுக்கு வந்த கார்த்திக் “மஞ்சுவோட….” என்று இழுத்தான்.

“ஆமா, இது மஞ்சுவோட வீடுதான். நான் மஞ்சுவோட கணவன் தான், உட்காருங்க மஞ்சுவைக் கூப்பிடறேன்” என்று கூறி மஞ்சுவை அழைத்தான்.

மகிழ்ச்சியோடு உள்ளேயிருந்து வந்த மஞ்சுவை மிக ஆவலோடு பார்த்தான் கார்த்திக். “அடடே. நீங்களா. வாங்க. என்ன சாப்பிடறீங்க?” என்று மஞ்சு கேட்டதும்

“நோ தாங்க்ஸ், மஞ்சு எப்படி இருக்கே?” கார்த்திக் கேட்டான் அர்த்தபுஷ்டியோடு.

“எனக்கென்ன கவலை கார்த்திக்? அன்பான கணவன். ஆடம்பரமான வாழ்க்கை, என்ன குறை?”

“உண்மையிலேயே நீ மகிழ்ச்சியோடுதான் இருக்கிறாயா?” சந்தேகப்பட்டான் கார்த்திக்.

“நான் மிக, மிக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன், என் கணவரைப் போல ஒரு பண்பான, அன்பான மனிதரைப் பார்க்கவே முடியாது, உங்களைப் பற்றி என் கணவரிடம் நான் சொல்லியும் அவர் உங்களை அன்புடன் உபசரித்ததுடன் இதோ, நம்மைப் பேசவிட்டுட்டு அவர் நகர்ந்து கொண்டு விட்டார் பாருங்கள். அந்தப் பண்பு எல்லோருக்கும் வருமா? நான் செய்த பூஜா பலன்தான் எனக்கு இப்படிப்பட்ட ஒரு கணவர் கிடைத்திருக்கிறார், வேறுயாரையாவது நான் திருமணம் செய்திருந்தால் கூட இத்தனை மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழ்ந்திருப்பேனா என்பது சந்தேகமே! சரி கார்த்திக் நான் பேசிக்கொண்டேயிருக்கிறேனே காப்பி கொண்டு வருகிறேள் சற்று இருங்கள்” என்று எழப்போனவளைத் தடுத்த கார்த்திக்-

“உன் கணவரைக் கூப்பிடு மஞ்சு. நான் வருகிறேன்” சட்டென்று எழுந்தான்.

வேகமாக வந்த ராம்பிரசாத் “என்ன அதுக்குள்ளே எழுந்துட்டீங்க, காப்பி கொண்டு வா மஞ்சு” என்று உத்தரவிட்டான்.

“வேண்டாம் சார், ரொம்ப நன்றி, நான் தேடிவந்த மஞ்சு இவங்களல்ல, வருகிறேன்” விடுவிடென்று வெளி நடந்தான்.

தன்னைத்தானே நொந்து கொண்டும், வருத்தப்பட்டுக் கொண்டும் வீட்டிற்குள் நுழைந்தவனை, எதிர் கொண்டாள் பிருந்தா.

“ரொம்ப களைச்சுப் போய் வர்றீங்களே அத்தான், மோர் கொண்டு வரவா?”

இத்தனை வெறுத்தும், அலட்சியப்படுத்தியும் அதே புன்முகத்தோடு, அதே அன்போடு வரவேற்க இவளால் எப்படி முடிகிறது? பிருந்தாவிற்குத்தான் என்னிடம் எத்தனை அன்பு? இவளையா எருக்கம்பூ எனத்தவிர்த்தேன். ஏன் ரோஜாவை மட்டுமா பூஜைக்குப் பயன் படுத்துகிறார்கள், எருக்கம்பூவை கூடத்தான் பூஜைக்குப் பயன் படுத்துகிறார்கள். அந்த ரோஜாவுக்கு ஏற்ற தோட்டம் தான் ராம்பிரசாத். இதோ என் மனத்தோட்டத்திற்கு ஏற்றவள் இந்த எருக்கம்பூ பிருந்தாதான். யார் யாருக்கு எதெது கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். அதைவிட்டுவிட்டு வானத்திலே தேடுவதில் என்ன லாபம்?

சிந்தித்துத் தெளிந்த கார்த்திக், பிருந்தா கொடுத்த மோரை வாங்கும் சாக்கில் அவள் கரங்களை அன்புடன் ஆதரவுடன் சேர்த்துப் பிடித்தான்.

-ஜெமினி சினிமா 

தொடர்புடைய சிறுகதைகள்
காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்க ---ஜன்னல் வழியே நோக்கினாள் தாமினி... கேட்டுக்கு வெளியே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நான்கு ...
மேலும் கதையை படிக்க...
மீனாம்பாளிடமிருந்து பெற்றவளும், உறவினரில் விதவையான வேறு சிலரும் கூடி அழுது, கதறித்தாலி வாங்கப்பட்டது. கனகலிங்கம் இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள் காற்றாகப் பறந்துவிட்டன. அடுத்து என்ன? மீனாம்பாள் அந்த வீட்டிலேயே மாமியாருடன் இருப்பதா, அல்லது தனி வீட்டில் இருப்பதா? என்ற பிரச்னை. அதற்குக் காரணம் அவளுக்கென்று ...
மேலும் கதையை படிக்க...
சாப்பாடு ஆனதும் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “இந்தாப் பாரு சுந்தரம் நான் சொல்றேன்னு வருத்தப்படாதே.  இந்த உலகத்திலே பணம் தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம் தான்.  பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்டு நாம் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.  அது அது வாழ்க்கையை அது ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப என்ன ஆச்சு? அத்தனையும் போச்சு” – அப்பா. “பணம், பணமுன்னு பறந்தியே, இருக்கிற வேலை போதாதா? ஏன் அகலக்கால் வைக்கணும்” – ...
மேலும் கதையை படிக்க...
பருவதத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி தன வயிற்றில் பிறந்த இரண்டும் ரத்தினங்கள் என்று .தாயின் மீது எல்லையற்ற பாசம் வைத்துள்ள பிள்ளைகள் ஒவ்வொரு வீட்டில் உள்ளதுபோல் பிள்ளைகள் திருமணம் ஆனதும் மனைவி முந்தானையை பிடித்துக்கொண்டு போய்விடுவதுபோல் இல்லாமல் திருமணம் ஆகியும் பருவதத்தின் மீது ...
மேலும் கதையை படிக்க...
நாணயம்
யார் பைத்தியம்?
வியாபாரம்னா வியாபாரம்
உன் பங்கு…என் பங்கு…
பாசவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)