கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 2,675 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

யாவதையும் உற்பவிப்பவனும், எல்லாவற்றையும் ஆள்பவனும் இயற்கையை அதன் அநந்த கோடி சாயைகளுடன் தன் இடது சுண்டுவிரலில் சுற்றியவனும், எல்லாவற்றிலும் எல்லாமாயும், எல்லாவற்றிலிருந்து ஒதுங்கியவனும், க்ருபா சமுத்ரமாயும், சம்ஹார மூர்த்தியாயும், நிற்குணனாயும், இல்லாமலே இருப்பவனாயும், சகல ஜீவா தாரனும், சர்வலீலாகாரனுமாய ஆண்டவன், ஓய்வு ஒழிவற்றவன். பிரபஞ்ச ஆராய்ச்சி கதியில் அழகானதோர் இதயத்தை சிருஷ்டித்தான். லக்ஷிய குணங்களை அதன் உள்ளும் மேலும் சாறு பிழிந்தான்.

ஆண்டவன் அவ்விதய உருண்டையை ஏந்தி அதைத் திருப்பித் திருப்பி அதன் வேலைப்பாடுகளை வியக்கையில் அது கை போலும் ஒளி மருட்சி காட்டிற்று.

ஆனால் ஒன்றையே எத்தனை நேரம் அழகு பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அவனுக்கு க்ஷணப் போது ஓய்வு ஏது? பொடி நேரத்தின் தடுபடலுள் எத்தனை ஜீவன்கள் பிறக்கவும், சாகவும், உய்யவும் விசுவகர்ப்பத்தில் யுகவேத னையைப் பட்டுத் துடித்துக்கொண்டிருக்கின்றன! அந்த நினைவு தானோ, அகஸ்மாத்தோ அவ்விதயம் அவன் விரல் களிலிருந்து நழுவியது. அண்ட கோசங்களின் அகண்ட வேகக் கடையலில் அகப்பட்டு, சுழன்று கொண்டே அது ககன வழி இறங்குகையில் அதை எட்டிப் பிடிக்கவும் அவனுக்கு நேரமில்லை . க்ஷணத்திடையில் யுகப் பிரளயமாய வீங்கிப்போன தன் கர்மாவைப் பின்தொடர்ந்து பிடித்துக் கணக்குத் தீர்ப்பதில் கவனந் திருப்பிக்கொண்டான். அவன் பெருமூச்சின் பெரும் புயலில் அது அடித்துக் கொண்டு போயிற்று.

லக்ஷிய லக்ஷணங்களாலாகியும் நிர்க்கதியாய்ப் போன அவ்விதயம் தன்னுருவைத் தானே தேடிக்கொள்ளும் நிலைமை அடைந்து அண்ட கோசங்களின் அகண்ட வேக மான கடையலில் முடங்கி அழுந்தி ஜனனப் பிரவாகத்தில் தானும் ஒரு முளையாய் முளைக்கத் துடிக்கும் வித்தாகி, விசும்பின் வழி திகிறி, பூமியில், ஆங்கு ஓர் அடவியில், ஓர் அருவியருகில், மர நிழலில், புற்றறையில், நாலு காலையும் நீட்டிப் படுத்து, புதுப் பிறப்பில் தவித்துக் கொண்டிருந்த தோர் காராம்பசுவின் கருவை அடைந்தது.

தன் கருவில் திடீரென நேர்ந்த புரட்சியை அத்தாய் உணர்ந்தது. புரியாத புது கனம் வயிற்றை அழுத்தியது. பசு வீறிட்டது. அந்நாபீ வீறல் காற்றில் மோதியது. ஆகாய வெளியில் கற்பகற்பங்களாய் மௌனாகாரத்தில் மிதந்து கொண்டிருக்கும் நாத பிந்துக்கள் உடைந்து எதிர் அலறின. மரங்களில் இலைகள் அசைவு தடுமாறி அடையாக நின்றன. பூமியும் அசை நின்று துவங்கியது. ஓரிரு மலைகள் எங்கோ நிலைகுலைந்து தலை கவிழ்ந்தன. பூகம்பம் உண்டாகியது.

இத்தனை கோலாகலத்துடன் அவ்வித்து உருவாகி, உயிராகி வெளிப்பட்டு, தாயை உதறிக்கொண்டு பூமியில் தானும் ஒரு தனியாகி விழுந்ததும், விழுந்த கன்றை, நக்கிக் கொடுக்கத் தாய்க்குச் சக்தியில்லை. ஆனால் ஈச்வரனுக்கு ப்ரீதியான அதன் பால், தாய்மையின் மஹிமையில், ஈச்வரனுக்கும் கிட்டாத இனிப்பைப் பெற்று மடிபுரண்டு , அருள் பெருகிப் புற்றறைமேல் பாய்ந்து, பச்சைப் புல் நுனிகளில் பால் துளிகள் முத்து மகுடங்கள் கட்டின. அருவிப் பாலாய் ஓடிற்று.

கன்று மண்டியிட்டே நகர்ந்து நகர்ந்து கிட்டிக் கிட்டி மடியில் வாய் முட்டி முட்டி, காம்புகளைப் பற்றியதும் இன்பத் தவிப்பில் தாய் மூர்ச்சை போயிற்று.

கன்று போட்டு நெடுநாள் தாய்க்கு உயிரோடிருக்க முடியவில்லை. அது ஈன்ற வித்து அதன் கருப்பையினும் மிக மிகப் பெரிதான காரணம், தாயின் வயிறு உள்ளே நார் நாராய்க் கிழிந்திருந்தது. கன்று தானே ஒரு புல்லைத் தன் வாயில் அதக்கிக் கடிக்க அதற்குச் சக்தி வரும்வரை, பசு தன் உயிரைத் தன்னோடு கெட்டியாய் இருத்திக் கொண்டிருந்தது.

பிறகு ஒரு நாள். உயர்ந்த கரைகளின் நடுவே புரண்ட கானாறில், தாய்ப்பசு மெதுவாய் இறங்கித் தண்ணீர் குடிக்க விளிம்பு மேல் தலை குனிகையில் குளம்பு வழுக்கிவிட்டது.

“அ-ம் – மா…..”

கரைமேல் மேய்ந்திருந்த கன்று, காற்றின் அலைகள் தாங்கி வரும் அவ்வபயக் குரலைக் கனவில் கேட்டது போல் கேட்டுத் தலைநிமிர்ந்ததும் நினைவு மறக்கடிக்க வேடிக்கைக் காட்டி மரங்கள் மெதுவாய் ‘ஆனை ஆனை’ சாய்ந்தாடின. திரை ஆடினாற்போல் காற்று படபடத்து மிதந்தது. கண்விழித்து அழிந்த கனவுபோன்று தாயின் நினைவு மறந்தது.

கன்று குனிந்து மறுபடியும் சாவதானமாய் மேய ஆரம்பித்தது.

அதன் எந்த அங்க அசைவிலும் அதனால் அழகாயும் கம்பீரமாயும் இல்லாமல் இருக்க இயலவில்லை.

குனிகையில், நிமிர்கையில், தலையை ஆட்டுகையில் கழுத்தைத் திருப்பி, நீண்ட சுருள் நாக்கால் தன்னுடலை நக்கிக் கொள்கையில் தன்னைச் சூழ்ந்த காட்சியைச் சிந்தித்து அசைவற்று வெறுமென நிற்கையில்…

சீக்கிரமே அது தன் முழு வளர்ச்சியை அடைந்தது. அவ் விடத்தின் செழுமையோ. அதன் தாய்ப்பாலின் மகத்து வமோ அதன் சொந்த மகிமைதானோ. அதனின்று வெளிப்பட்டு அதனைச் சூழ்ந்த காம்பீர்யத்தின் நடுநாயகமாய் அது திகழ்ந்தது. அதன் தோற்றம் கம்பீரம் என்று மாத்திரம் முடிப்பதில் முழுமையில்லை . அதனை ஒரு தனி சமூகம், பிரசன்னம், விலாசம் விசாலித்தது. வெள்ளமோ தீயோ பரவி வருகையில் இடத்தை வெறுமென அழித்துக் கொண்டு மாத்திரம் வருவதில்லை. தமதாகவே ஆக்கிக்கொண்டு விடுகின்றன. அவ்விதம் தான் புழங்கிய இடத்தை, தான் என்ற – தனி நினைவற்ற தன் ஒருமையின் தனிமையில் அத்துடன் இழைந்து தனதாக்கிக்கொண்டு விட்டது.

வயிறு புடைக்க மேய்ந்து விட்டு, அந்தி வேளையில் செஞ் ஜோதியில், தானே வேள்விக் குண்டத்திலிருந்து சரிந்த பெரியதோர் கொள்ளி போல் ஒளிமயமாகித் தொலைவில் மலைக் குன்றிற்கப்பால் அடிவானத்தைப் பொக்கை வாயில் மென்று குதப்பிக்கொண்டே மெதுவாய்ப் புதையும் சூரியனை, வியப்புடன் நிமிர்ந்து நோக்கியபடி – அத்தனை தாவரங்களின் நடுவே தான் மாத்திரம் தனி நடை உயிராய் லயித்து நிற்கையில் . அடவியின் மரங்களும் குன்றும் எல்லாமே அதற்கெனவே அது காணும் முறையில் அதன் ஆட்சியுள் அடங்கின.

அங்கு எப்பவுமே சூழ்ந்த மோனாகாரம் ஓரோரு சமயம், தாய் விலங்கு தன் குட்டியைக் கவ்வுவதுபோல், அதன் அகண்டவாயில் அதைக் கவ்வுகையில், காளையின் இதயத்தில் புரியாத சாயா ரூபங்கள் தோன்றின. தலையை உதறிக்கொண்டு, உடலை நெறித்து, ஒன்றும் புரியாத களிவெறியில் வெகுவேகமாய் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகையில் அதன் குளம்புகள் தவறற்ற தாளத்தில் பூமியில் பட்டுப் பட்டெழுகையில், யௌவ்வனத்தின் ஜய பேரிகை முழங்கிற்று. நிமிர்ந்து வளைந்து நிமிர்ந்த வால் நுனியில் குஞ்சம் கொடி பறந்தது. அந்த உன்மத்தத்தோடேயே ஓடி வந்தது. ஒரு மரத்தை முட்டிற்று. கிழமரம் உடல் முழுவதும் புல்லரித்துக் கிளைகள் குலுங்கின. ஆனந்த பாஷ்யத்தில் புஷ்பங்களும் இலைகளும் உதிர்ந்தன.

அவ்வெறியிலேயே காளை அப்படியே திரும்பி, திடுதிடு வென பூமியதிரச் சறுக்கிக்கொண்டே வெகு வேகமாய்க் கானாறில் இறங்கிற்று. நுரை கக்கி சுழித்தோடும் ஜலத்தைக் கிழித்துக் கொண்டு, எதிர் நீச்சலில் வெள்ளத்தில் நுழைந்து ஜலத்தைக் கலக்கி நன்கு துளைந்த பின், தலை உதறி உடம்பைச் சிலிர்த்தவண்ணம், எதிர்க்கரைக்கு ஏறுகையில் இரு பக்கங்களிலும் ஜல ஸ்படிகங்கள் விசிறி உடைந்து பூமி யில் சிதறின. மேனி மின்னிற்று. கல்லுருண்டை போன்ற திமில்மேல், அழகுகள் புடைத்து வழிந்து விளையாடின. சிந்தாத தன் ஆண்மையின் தூய்மையில் அது ரிஷிகுமாரன் போல் ஜ்வலித்தது. நீண்ட கொம்புகள், அஞ்சலியில் எழுந்த கைகள் போலும் ஒன்றையொன்று நோக்கி வளைந்தன.

கரைமேல் ஓங்கிய அரசின் கீழ் அது படுத்துத் தன் அசையை மெல்லத் துவங்கிற்று. எதிர் விரிந்த புல்வெளி களின் மேல் படர்ந்து சாயும் இரவில் இருளில் திமில் ஓங்கித் திமிர்த்து நின்றது. அதன் உச்சியில் நட்சத்திரங்கள் தங்கி இளைப்பாறின. காளை கண்ணயர்ந்தது.

அடிவானம் செவ்வானமாகி வரும் பின்னணியில் ரிஷபம் தன் கண் திறப்பின் முதல் விழிப்பாய் அக்குன்றை விடிவில் கண்டதும் அதன் விழி புது விழிப்புக் கண்டது. புரியாத ஆவல் உந்த, காளை எழுந்து குன்று நோக்கி நடந்தது. புல் வெளிகளைக் கடந்து நெருங்க, நெருங்க, மலைக் குன்றை அவைகளின் முழுமையில் காண்கையில் அண்டப்பட்சிகள் குதறியெறிந்த பிரும்மாண்டமான பழம் போல் சிறு குன்றுகள் சிதறிக் கிடந்தன. அவை மேல் செடிகளும் சில மரங்களும் தலைகளை ஆட்டி ஆட்டி விருந்தாளியை வரவேற்றன. அந்தப் பிரும்மாண்டமான பழத்தின் கொட்டையின் முகடு போல், அவை நடுவே மலை நின்றது. அதன் அடிவாரத்திலும் உடலிலும் பாறைகள் முண்டு முடிச்சு மாய், அசிங்கமாய், ஆத்திரத்துடன் எழுந்தன. ஆனால், மலை உயர உயர, அது இட்டுக்கொண்ட சிகரம், கீழ்கிடப் பனவற்றின் பௌருஷத்தைத் தூண்டிப் பழித்தது. அந்த இடத்தில் மாத்திரம் வானம் பொத்துக்கொண்டு மலையுச்சி யில் நீலம் பெய்தது.

காளை முகந்தூக்கி மலைமேல் நீலத்தைத் தரிசித்ததும், அதன் கழுத்து மடிகளுக்கிடையில் நெஞ்சு நெகிழ்ந்து தவித்தது. மலையை வணங்குவதுபோல் தலை குனிந்து மூச்சுப் பிடித்து, காளை மலைமேல் ஏற ஆரம்பித்தது. தன் பலத் திற்கு ஈடான சோதனையில் அது ஒரு தனிப் பரவசத்தில் ஆழ்ந்தது. இதுவரை பழக்கமிலாத இடங்களையும் உயிர்களையும் சப்தங்களையும் காண்கையில், கேட்கையில் அதன் வியப்பு எடுத்து வைத்த அடிக்கு அடி மிகையாயிற்று.

ஒரு இடத்தில் ஒரு பாறையின் சந்தில் ஒரு கொடி சுருண்டு கிடந்தது. அதைக் கடிக்கக் காளை கழுத்தை நீட்டி யதும், அக்கொடி திடீரென சுருள் சுழன்று சரசரவென வளைந்து வளைந்து ஓடிப் பாறையின் மறுபுறத்தில் ஒளிந்து கொண்டது. அந்தண்டையிலிருந்து “புஸ்புஸ்” என சீறல். காளை திகைத்தது. அது தலை நிமிர்ந்து குன்றிடுக்கில் முளைத்திருந்த ஒரு இலைக் கொத்தை வாயில் பற்றி இழுத்தது. அந்தச் செய்கையில் அதன் கண்களுக்கே மலை யின் மறுபக்கத்துப் பிரதேசம் திடீரெனக் குதித்தெழுந்தது. காளை, பறித்த இலையைக் கடிக்க மறந்தது. ஒன்றும் பாதியுமாய் இலைக் கொத்து அதன் வாயிலிருந்து தொங்கிற்று.

மலைச் சிகரத்துக்கும் அதற்கும் இன்னும் கொஞ்ச உயரமே தான் பாக்கி. படிபோல் உயர்ந்து இடங் கொடுத்த ஒரு கல் முடிச்சின் மேல் காளை காலை வைத்தபடி, ஒரு குறுகிய பாறை மீது பின்னங்கால்களை ஊன்றிக்கொண்டு நடுமுதுகு சற்று உள் நெளிந்து இன்னமும் மலையேற நிற்கையில் அப்புது உலகம் அதன் மேலுறை கழன்று விழுந்தாற் போல் எதிர் தோன்றிற்று. அந்த ப்ரமிப்பில் அப்படி நின்ற நிலையிலேயே காளை கல்லோடு கல்லாய்ச் சமைந்தது. வானத்தின் பசுமையே கீழிறங்கி கொழித்தது. கண்ணுக்கு ஏதோ பார்க்கையிலேயே காளைக்கு நாக்கு சுவைத்தது. திடுதிடுவென பூமியதிர எதிரே இரு குன்றுகளிடையே ஒரு ஆறு சரிந்தது. மார் உயரம் புற்களிடையே புரியாத நிழல் கள் ஒளிந்து விளையாடின. மண்ணே கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கும் பச்சை, பச்சை, பச்சை.

காளைக்குத் திடீரென பிடரி குறுகுறுத்தது. அதன் உணர்வுகள் உஷாராயின. எதுவோ தன்னை ஊர்ந்து நோக்கும் ஈர்ப்புக்கு அச்சமடைந்து சட்டென காளை தலை மட்டும் திரும்பிற்று. அது போன்றே ஒரு பிராணி. மலைச் சரிவில் தன்னிலும் சற்று தாழ்வில் நின்று அதைக் கவனித்துக் கொண்டிருந்தது. நீராடுகையிலும் தாகம் தணிகையிலும் காளைத் தன் நிழலைக் கண்டிருக்கிறது. ஆயினும் இவ்வளவு தெளிவாய்த் தன் உரு , தனித்து ஜலம்தாண்டி பிதுங்கிக் கண்டதில்லை, தன் போலே தான், தானேதான், ஆனால் தான் இல்லை. இதற்குக் கொம்புகள் சிறுத்து நுனி மிகக் கூரிட்டிருந்தன. தொடையில் பெரும் கருந்திட்டு, கால்கள் அவ்வளவு நீளமில்லையோ? கட்டையாய்த் திடமாய்க் குளம்புகள் பாறை மீது ஊன்றிப் பிடிப்பாய் நின்றன. வால் சுழன்று ஆடிற்று.

புது மாடு மெதுவாய் ஒரு அடி முன்னெடுத்து வைத்தது. காளை அசைந்து கூடக் கொடுக்கவில்லை. கல்லாலடித்தாற் போல் நின்றது. கண்கள் மாத்திரம் பளபள வென்றன. கொஞ்சங் கொஞ்சமாய் ஊறும் நம்பிக்கையுடன் மாடு அடி மேல் அடி வைத்து கிட்டக்கிட்டக் கிட்டவே- காளை முகம் முகர்ந்தது. சத்துருவில்லை என்று அறிந்ததும் பெருமூச் செறிந்து, தன் கழுத்தைக் காளையின் கழுததோடு உராய்ந் ததும் ஈருடலின் ஒரோயிரின் ஊடுருவில் அவையவைகளில் ஜன்மேதி ஜன்மமாய்த் துடிக்கும் மூல நாடி புடைத்தெழுந்த அதிர்ச்சி, தாங்கத்தக்கதாயில்லை. இப்படி இரண்டும் முகத்தோடு முகம் வைத்து கழுத்தோடு கழுத்து உராய்ந்து கொள்ளும் இந்தச் சைகையே ஒரு முத்திரையாய்த் தான் அமைந்தது. ஒன்றையொன்று அறியாமலே பிறந்து, வளர்ந்து இத்தனை நாட்களுக்குப் பின். ஒன்றுக்கொன்று தெரியாமலே ஒன்றையொன்று தேடி வந்து, இப்போது ஒன்றையொன்று சந்தித்துக் கொண்ட இயற்கையின் சத்திய ஏற்பாடின் முத்திரை. அந்த ஆதார சத்தியத்தின் உக்கிரம் காளையின் நாபியில் உறங்கிக் கிடந்தது, சுருள் கழன்று விழித்தெழுந்ததும், அதன் விழித்திறப்பில், அதன் நெற்றி நடுவில் மின்னல் கொடிகள் பின்னிப் பளிச்சிட்டன. ஒரு கணத்தின் யுகநேரம் மலையும் பாறைகளும் காற்றில் காற்றாடி மிதந்தன. காளை அதிர்ச்சியில் கண் கூசி கண் மூடிக் கொண்டது.

கண் திறந்ததும் காளை தான் அதைக் கண்டது. அது இன்னும் காளையைக் காணவில்லை. மலையடிவாரத்தில் ஒரு பாறையின் பின்னிலிருந்து அது வெளிப்பட்டது. அதைக் கண்டதும் காளைக்குத் திமில் சிலிர்த்தது.

விளம்பலற்ற ஒரே கோடில் எழும்பி வளைந்து முடிந்து, உயிராகி ஒரே லகுவிலும் லயத்திலுமே இழைத்த உடலில் கட்டுக் கட்டாய் வரிவரிக்கோடுகள் ஓடின. ஆறாத பசியில் நீண்டு குறுகிய வயிறு. தீராத கோபம் கொதித்துக் கொதித்து நீறு பூத்த தணல் விழிகள், எப்பவும் எதையோ தேடி அலைந்தன. அந்த ஓயாத தேடலில் அதன் மீசையும் வாலும் அசைந்தாடியபடியேயிருந்தன. இந்தப் புது தரிசனம் தன்னிலும் உரம் மிகுந்தது. அதன் வழியில் தன்னிலும் உயர்ந்தது என்று காளை தெளிவாய் அறியா விடினும் திடமாய் உணர்ந்தது. அவ்வுருவம். எந்தப் பாறையின் மறைவிலிருந்து வெளிப்பட்டதோ. அந்தப் பாறையை ஒரு முறை தேடலில் சுற்றி வந்தது. அந்த நடையின் லகுவும் பிகுவும் விறுவிறுப்பும் உள்ளம் கொள்ளை கொண்டது.

காளையின் கவனம் மாறியது புரியாது காளை நோக்கின் வழி, பசுவும் நோக்கிற்று. அப்போது தான் அதுவும் அதைக் கண்டது. கண்டதும் கதிகலங்கி மிரண்டது. அதன் அங்கங்களை ஆயிரம் பேய்கள் திடீரெனக் கல்வின மலையின் மறு சரிவில் கடக்க முயன்றது ஆனால் குறுக்கே காளை கல்லாலடித்தாற் போல் நின்றது. பசுவின் கண்ணோ ரங்களில் சிவப்பு சீறி எழுந்தது. தலைகுனிந்து வாங்கி, பசு தன் முழுகனத்தின் முழு வேகத்துடன் காளையின் வயிற்றில் முட்டிற்று. எதிர்பாராது அப்படி தாக்கியதும், காளைக்குக் கால்கள் சறுகி நிலை பிசகின, சமாளிக்க இட வசதியில்லை. சந்தர்ப்பமுமில்லை. அதற்குள் இன்னொரு முட்டு. கொம்பு தன் சப்பையைக் கிழித்துக் கொண்டு உள்ளிறங்குவதை காளையுணர்ந்தது. உணர்ந்து கொண்டிருக்கையிலேயே அது மலைச் சரிவில் அப்படியே அடியோடு உருண்டது. பசுவின் முழு கனத்தின் உந்தலோடு அது கீழ்நோக்கி விழும் தன் கனத்தின் வேகமும் சேரவே, பற்கள் போல் ஆங்காங்கே. நீட்டிக் கொண்டு நிற்கும் கற்கூர்களில் ஒன்று – இரண்டு மூன்று முறைத்தெறித்து எகிறித் தெறித்து எகிறித் தடா லென மலைச்சரிவிலேயே இருபாறைகளுக்கு நடுவில் விழுந்து ஆப்பு அறைந்தாற் போல் மாட்டிக் கொண்டது.

ஆனால் அதற்கு அப்போது நினைவில்லை.

பசு எங்கோ விழுந்தடித்து ஓடிவிட்டது.

உச்சி வேளைக்குப் பாறைகளில் ஏறிய வெய்யிலின் கொதிப்புத்தான் அதை ஸ்மரணைக்கு மீட்டது. வெப்பம் கண்களைத் துருவிற்று. காளை பிரள முயன்றது. ஆனால் உடல் இம்மிகூடக் கிணுங்கவில்லை. இசைகேடாய்ச் சிக்கிக் கொண்டிருந்தது. அந்த முயற்சியில் தொடைத் துவாரத்தி லிருந்து இரத்தம் குபுகுபுத்தது. அந்த வலியின் நினைவு திரும்பிய பயங்கரத்தில் காளை வாய்விட்டு அலறிற்று.

ஆனால் அது அதன் குரலாகவேயில்லை. பூமியையே மட்டை – உரித்தாற் போன்ற ஒரு கோர சப்தம். மலைச்சரிவிலிருந்து பாறைக் கற்கள் ஒன்றிரண்டு எதிரொலியில் உதிர்ந்தன.

காளையின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. செழித்து ஓங்கிய பேய்ப் புற்களின் ஊடே, காற்றின் சீறல் செவியில் மோதிற்று, காளையின் வயிறு முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

திடுதிடும் திடுதிடும் திடுதிடும்.

பூமியின் தாகத்தையே தணிக்க விரைவது போலும் மலையிலிருந்து அருவி இறங்கும் சப்தம். காளைக்கு நாக்கு வீங்கித் தடித்து, பாம்பு போல் சுருண்டு தொண்டையை அடைத்துக் கொண்டது.

இந்தப் பரிகாசம் காளைக்குப் புரியவில்லை. வெகுண்டு மற்றுமொரு முறை தன்னை விடுவித்துக் கொள்ளத் தன் முழு வன்மையோடு தவித்தது. அதன் ரத்தத்தில் மறைந்து பாயும் கோடி கோடி காளை ஜன்ம வித்துக்களும் அப்பவே அத்தனையும் முளைக்கத் துடிப்பது போலும் குதித்துக் கொதித்து எழுந்தன. ஆனால், பாறைகளின் எமப்பிடி தளரவில்லை. அதை அழுத்திப் பிடித்துக் கொண்டு, அதன் வேளைக்கு அவை அசைவற்று காத்துக் கொண்டிருக்கும் தன்மையிலேயே ஒரு விரக்தியான சிரத்தையும் இரக்க மின்மையும் தெளிவாயிற்று. இப்படித்தான் பூமியில் பொருள் எனத் தோன்றியவை எல்லாம் – அசைவனவோ அசையாவனவோ. தாம் உணர்ந்தோ உணராமலோ, இஷ்டப்பட்டோ படாமலோ – தம்தம் பொருட்டை நிறைவேற்றி வரும் நியதி காளைக்கு உரைக்கையில் அதன் கண் களுக்கெதிரே பட்டப் பகலில் இருள் தூலங்கள் மாறி மாறிப் படர்ந்து அதன் மேல் இடிந்து விழ்ந்தன. மறுபடியும் காளைக்கு நினைவு தப்பிப் போயிற்று.

மறுபடியும் கண் திறந்தபோது இரவு இடத்தைப் போர்த்திவிட்டது. பூமியில் பூக்கள் சிதறிக் கிடப்பதை எத்தனையோ முறை அது கண்டிருக்கிறது. தின்றுமிருக்கிறது. அதே மாதிரி வானில் இப்பொழுது பூக்கள் வாரி இறைந்திருந்தன. ஒன்றன் ஒன்று ஒரே அளவில் இரு பறவைகள், கண்ணெதிர் உயரத்தில் பறந்து கொண்டு தம் கூட்டிற்கு விரைந்து கொண்டிருந்தன.

நேரம் ஏற ஏற பகலின் சப்தங்கள் ஒவ்வொன்றாய் அடங்கிப் போயின. உட்புலனுக்கு மாத்திரம் புலனாகும் அர்த்தக் கருக்களுடன், இரவின் நாதவடிகள் ஒவ்வொன்றாய் முளைக்க ஆரம்பித்தன. புதர்களில் ஒரு சலசலப்பு. இலைகளின் பெருமூச்சு , திடீரென்று இரவையே இரண்டு துண்டங்களாய் வெட்டி, இரவே கூக்குரலிட்டாற்போல் ஓர் அலறல், “கெக் கெக் கேக் கேகே” -“கக்கட கக்கட கட கடகட-” மரங்களிலிருந்து ஒரு பறவையின் சமயமற்ற சிரிப்பு. திடுதிடும் திடுதிடும் திடுதிடும் – நீர் வீழ்ச்சியின் ஓங்காரம். பகலில் உள்ளுக்கு வாங்கிக்கொண்ட கொதிப் பைப் பாறைகள் வெளியே கக்க ஆரம்பித்தன. தன்மேல் முலுமுலுமுலுமுலுமுலு என்று ஏதோ ஊர்வது காளைக்கு உணர்ந்தது. அரிப்புத்தாங்க முடியவில்லை. ஊரல் கழுத்தில் ஏறி சாரை சாரையாய் வயிறு வழியிறங்கி, தொடைப் புண்ணுள் நுழைந்து வெடுக்கென பிடுங்கிக் குடைந்தது. அந்த வலியால் துடிக்கக்கூட அதற்கு உரிமையில்லை! பாறைகள் தம் இடுக்கில் இடுக்கி பிடித்துக் கொண்டிருந்தன. காளை ஒருமுறை தன் விழியை உருட்டிப் பார்த்தது. அதன் விழியளவு பெரிய உயிர்கள் ஒழுங்கான அணியில் தன்மேல் மொய்ப்பது வானொளியில் தெரிந்தது.

‘ரண ஜன்னியில் உயிர் ஊசலாடுகையில் – பசி, தாகம், வலி முதலிய உணர்ச்சிகள் கூட மரத்தன. அதற்கே, தன் கால்கள் கீழே பாவாது விடுபட்டு, லேசாய், உயர உயரக் காற்றில் மிதந்து செல்வது போல் தோன்றிற்று. தன் மல ஜலத்தில் ஊறியபடி மலையிடுக்கில். பல விதங்களிலும் துன்புற்று இன்னும் உயிரோடு தவிக்கும் தன்னுடலையே அதனின்று ஒதுங்கிதான் பார்ப்பது போலும் தோன்றிற்று.

இதுவரை தெரியாத, தோன்றாத, புரிந்தும் புரியாத அதற்குச் சம்பந்தங்கூட இல்லாத பாஷையில் விஷயமும் கேள்வியுமாய்த்தானே அமைவது போலும் அதற்குத் தோன்றிற்று.

“நான்.”

“நான் யாராயிருப்பினும் சரி, நான் என்னுருவில் நல்லுருவாய்த்தான் நானானேன். ஜன்மத் தொடர்பின் அழுக்கில் புழுத்து நான் எழவில்லை. என் பிறவி என்னா லல்ல. நேரே உன் கைகளிலிருந்தே உன் ஆசையில் சமைந் தேன். உண்மைக்கும் உள்ளுண்மையில், என் பிறவியும் நானும் உன்னாலேயே உன்னுடையதே. உன் லக்ஷியங்களின் லக்ஷணங்களோடு நான் உருவான தால், உன் விதிப்படியே நான் எடுத்த பிறவிக்கு அழகு செய்ய வேண்டியவனே. ஆனால் ஏன் என்னை இப்படி, என் முதல் பிறவியிலேயே, என் பிறவியின் அவமானச் சின்னமாய் ஆக்கினாய்?”

வானத்தின் நட்சத்திரங்கள் வெட்கிக் குனிந்து ஒன்றன் பின் ஒன்றாய் அவிந்தன. மேகப்படலங்கள் சூழ்ந்தன.

“நான் பிறவியை மறுக்கவில்லை. இறப்பையும் மறுக்க வில்லை. எனக்கு இயக்கம் தந்து என்னை ஒரு தனிக்கூடாய் ஆக்கியபின், நான் வாழ்வை மறுக்கவில்லை. மறுக்க முடியாது. ஆனால் என்னை வாழ விடாது என் வாழ்க் கையை வியர்த்தமாக்கியது ஏன்? மெய்யெனவே என் வித் தைப் பாறைமேல் சிதற விட்டாய். நீ என்னைப் பிறப்பித் தாய். நான் உன் குழந்தை. ஆனால் நீ என் தாய் அல்ல. நீ உன் குழந்தையைக் கைவிட்டு ஓடிவிட்டாய். என்னைப் பெற்றவள். என் பிறப்பில் தன் உயிரைக் கொடுத்து வெள்ளத்தில் மறைந்து போனாள். அவள் செத்தாள், நான் இருக்கிறேன். நான் இப்பொழுது செத்துப் போய்க் கொண்டிருக்கிறேன். நீ ஓடிப் போய்விட்டாய். நீ ஓடிப் போனதால், சத்தியத்தின் நித்தியத்தையே பொய்யாக்கின உனக்கு விமோசனமே கிடையாது. எனக்கு உண்டு. எனக்கு ஜன்மத்தைக் கொடுத்து, அதை வீணாயும் அடித்து, அதுவே காரணமாய் அதற்கு ஒரு தொடர்பை நீ ஏற்படுத்தி விட்டாலும், அந்த ஜன்ம ரீதியிலேயே நான் வளர்ந்து வளர்ந்து ஒரு சமயத்தில் உன் தேவையே இலாது உன்னி லும் பெரிதாகிவிடுவேன். ஆனால் நீயோ, நீ பிடித்துப் பிடித்துப் போட்ட மண்ணை அழித்து அழித்துப் பிசைந்து அதையே தின்று கொண்டிருப்பாய். இது விந்து விருக்ஷத் திற்கு இடும் சாபம். வீண்போகாது வீண்போகாது -”

இடி குமுரி உடைந்தது. எங்கோ மரத்தில் ஒருகிளை மொளமொளவென முறிந்தது.

“நான்.”

“நான் யாரை இப்படி எதற்காகத் தூற்றுகிறேன்?”

வானம் வெட்கத்தில் உகுத்த கண்ணீர்போல், மழைத் துளிகள் காளை முகத்தில் ஒன்றும் இரண்டுமாய் உதிர்ந்தன. காளைக்கு நெஞ்சு இறைத்தது. கண்கள் நிலைக்குத்தி விட்டன. ஆனால் அது உருவான இதய பலத்தில் குற்றுயிரும் நினைவும் இன்னும் விடாது உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தன.

பொலபொலவென பொழுது புலரும் வேளையில் காளையின் கண்ணெதிர் உயரத்தில் திறந்தவாய் போன்ற இருபாறைகளின் இடை வளைவில், வானத்தின் செந்திட் டின் பின்னணியிலிருந்து சூரியனுக்கு முன்னால் அவ்வுருவம் உதயமாயிற்று. தன் திமிலின் சிலிர்ப்பிலேயே காளை அதை அடையாளம் கண்டு கொண்டது. அப்போதே அதுவும் அதைக் கண்டது. அதன் மீசை துடித்தது. அதன் உடல் ஒருகணம் பதுங்கலில் ஒடுங்கிக் குறுகிற்று. அவ்வளவுதான்.

காளையின் இதயம் நெஞ்சுவரை எழுந்தது.

மலையை உதைத்துக் கொண்டு எழும்பிய பாய்ச்சலில் வேகத்தில் திகிரிபோல் அந்தரத்தில் நீந்திக் கொண்டே அவ்வுருவம் நேரே மாட்டின் மேல் இறங்கிற்று. ஆனால் அதன் உடல் படுமுன் ரிஷபத்திற்கு இதயம் வெடித்துவிட்டது.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *