Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மியாவ் மனுஷி

 

‘என் பலகீனங்களின் காட்டில்
சுள்ளி பொறுக்காதே!’

- கவிஞர் அறிவுமதி

பார்வதி ஒரு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்து இருந்தாள். கூடவே, நலம் அறியவும் நட்புகொள்ளவும் விருப்பம் என ஒரு குறுந் தகவல். அந்த வார்த்தைகளில் இருந்த அழகில் மயங்கி, பார்வதியின் 220-வது நண்பனாக என்னைப் பதிவுசெய்துகொண்டு, அவளது முக நூலைத் திறந்தபோது, சுவர் விளிம்பில் சாய்ந்தபடி சிரித்துக்கொண்டு இருந்தாள். அந்தச் சிரிப்பின் நுட்பத்தில் ஓர் அழகான தோழமை இருந்தது. பெண்கள் கத்தரிப் பூ வண்ண ஆடை அணிந்து சிரித்தால், பேரழகு என்பதை அவளது முக நூலின் முகப்புப் பக்கத்தைப் பார்த்தால், நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். அந்தச் சிரிப்பு… உதிர்ந்த ஒரு பறவையின் சிறகினைப்போல என்னைத் தொடர்ந்தது.

இந்த வலைவனத்துக்கு நான் முற்றிலும் புதியவன். இன்னும் சொல்வதானால், நான் கணினியை இயக்குவதற்கே சமீபத்தில்தான் கற்றிருந்தேன். என்னால் இதனுள் அதிக தூரம் பயணம் செய்ய இயலாது. அவள் தன் தகவலில் அவளைக் குறித்து எந்தக் குறிப்பும் எழுதி இருக்கவில்லை.

‘யார் நீங்கள்?’

எனது குறுஞ்செய்திக் கேள்வி, அவளை ஏதோ ஒரு வித சுவாரஸ்யத்துக்கு இட்டுச் சென்று இருக்க வேண்டும். தொடர்ந்த அவளது செய்திகள் ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு என்னைத் தயார்ப்படுத்தியது. ‘யாருன்னு கண்டுபிடிங்க, பார்க்கலாம்’ என்றாள். எங்கோ பார்த்ததுபோன்ற ஒரு முகம் அவளுக்கு. சில சமயம், அழகான பெண்கள் அப்படி ஒரு தோற்றத்தைக்கொண்டு இருக்கிறார்கள். அவளை அறிய எடுத்துக்கொண்ட, என் எல்லாவிதமான முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எங்களுக்குப் பொதுவில் 52 நண்பர்கள் இருந்தார்கள். யாரிடமாவது அவளைக் குறித்த தகவல் கேட்கலாமா என யோசித்து, வலைவனத்தில் அது ஒரு கிசுகிசுவாக வலம் வந்துவிடக் கூடாதே என்கிற பயத்தில், அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். சரி, என்னுடைய 740 வலைத் தோழமையில் இதுவும் ஒன்று என்கிற சமாதானத்தோடு… அன்றைய கணக்குகளை முடித்தேன். வலைக் கணக்குகள்தான் முடிந்தனவே தவிர, அவளைப் பற்றியதான மனக் கணக்குகள் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன.

‘யார் இவள்..?’

இந்தக் கேள்வியை நிராகரித்து, எந்த வேலையும் செய்ய இயலவில்லை. ஒரு பெண் குறித்து இத்தனை தீவிரமாக யோசிக்கும் அளவுக்கு எனக்கு இளம் வயது இல்லை. அது வேறு உறுத்திக்கொண்டு இருந்தது. சமீபத்தில் போன இடங்கள், சந்தித்த மனிதர்கள், அவர்களோடு உடன் இருந்தவர்கள் என மனம் ஒரு வட்டம் போட்டுத் திரும்பியது. எவரிலும் அவள் இல்லை. வீடு வந்து சேர்ந்தபோது, ”ஏன் ஒரு மாதிரி இருக்கறே?” என்றாள் மனைவி.

”ஒண்ணுமில்லை… கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டேன். கணினியைத் திறந்து முக நூலுக்குள் போனபோது, ‘பூம்ப்…’ என்கிற மெல்லிய சத்தத்துடன் உள் நுழைந்தது அவளது குறுஞ்செய்தி.

‘என்னை யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? Hahaha’

‘கண்டுபிடித்துவிட்டேன்.Hahaha!’

‘சொல்லுங்க… சொல்லுங்க!’

‘உங்க ஆல்பத்துல இருக்கற பூனைதான நீங்க?’

‘அய்… ஆமாங்!’

‘அப்ப, நீங்க ஒரு மியாவ் மனுஷி… சரியா?’

‘So cute… i like it. i wanna say miyav to u .’

எப்படி என்று தெரியவில்லை… எங்களுக்கு இடையே ஒரு பூனை வந்து அமர்ந்துகொண்டது.

சாட்டிங்கில் அவளது ஆங்கிலப் புலமை என்னை கொஞ்சம் அச்சுறுத்தினாலும், பேச்சின் சுவாரஸ்யத்தில் என்னைக் கட்டிவைத்திருந்தாள். அதன் பின், நான் வலைவனத்துக்குள் வரும் போது எல்லாம், அவளைத் தேடி னேன். பின், அவளைத் தேடுவதற் காகவே வலைக்குள் வந்தேன்.

‘பூம்ப்’ என்கிற மெல்லிய சத்தம் என் கணினியில் கேட்கும் தருணம் எல்லாம் பரவசமானது. ஒவ்வொரு முறையும் அந்தப் பூம்ப் இசை அவளது குறுஞ்செய்தியைத் தாங்கி வந்தது. அவளது ஒவ்வொரு வார்த்தையும் ஒரு மாய மயக்கத்தில் என்னை வீழ்த்தியது.

‘ஹலோ மியாவ் மனுஷா?’, ‘உன் பூனைக் குட்டி இங்கு நலம்…’, ‘உலகம் இருண்டு போகப்போகிறது. குட் நைட் மனுஷா… இந்தப் பூனை தூங்கப்போகுது.’

அவளது ‘மனுஷா’ என்கிற அழைப்பில் ஓர் அழகு இருந்தது. உன் பூனைக் குட்டி என்ற வார்த்தை ஒரு நெருக்கத்தைத் தந்தது- இப்படி அவளது வலைவனம் சொல்லும் வார்த்தைகள் எனக்குள் ஒரு தவிப்பை விதைத்துக்கொண்டே இருந்தன. தவிப்பு எனக்குள் வேர்விட்டபோது, நான் பேசத் துவங்கினேன்.

‘நாம் எங்கு இருக்கிறோம். நட்பின் எல்லையில் மஞ்சள் கோட்டு விளிம்பில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உன் புன்னகை விரல் பிடித்து எனை அழைத்துச் செல்லும் இடத்தில் நட்பு இல்லை’ நான் அனுப்பிய இந்தக் குறுஞ்செய்தி அவளை இரண்டு நாட்கள் மௌனம் காக்கவைத்தது.

என் பதிவுகளுக்கு ஒரு லைக்கை மட்டும் தானமாகத் தந்துவிட்டு அமைதியாக இருந்தாள். அவள் மௌனம் எனக்கு ஒரு மென்சோகத்தைத் தந்தது. ஒரு முறைகூட நேரில் சந்தித்தது இல்லை. ஒரு வார்த்தைகூட அவள் குரல் கேட்டது இல்லை. சலனமற்ற ஒரு புகைப்படம்தான் அவளுக்கான அடையாளம். ஆயினும் நெடுநாள் காதலில் ஏற்படும் வலி எனக்குள் ஏற்பட்டது ஆச்சர்யம்தான்.

வீடு திரும்பும்போது எல்லாம் நான் ஒரு பாவனை மனிதனாக இருந்தேன். மனைவியோடு இருந்த நெருக்கமான தருணங்களில் மனசுக்குள் ஒரு மியாவ்!

அன்று மாலை அவளிடம் இருந்து வலைப் பகிர்வில் ‘மியாவ்’ என்ற செய்தி வந்தது. அது என்னுள் என்ன பாவனையை ஏற்படுத்தியது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் எல்லோரும் ஒரு முறை என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவளிடம் சாட் பண்ணத் துவங்கினேன்.

‘என்ன மியாவ் ஆளையே காணோம்?’

‘உங்ககிட்ட chat பண்ண பயம்.’

‘ஏன்… நான் அவ்வளவு டெரராவா இருக்கேன். பயத்துக்கான காரணம் சொல்லுங்க?’

‘I m not in yellow line.’

‘so?’

‘i don’t wanna tak wth u.’

‘இது உண்மை இல்லை. உங்க மனசும் எல்லை தாண்டிருச்சு பார்வதி. ஸோ, ஒரு பாதுகாப்பு வேணும்னு நினைக்கிறீங்க. அதான் பேசப் பயப்படுறீங்க.’

’……………………………………………………’

வெறும் புள்ளிகளாக இருந்தது அடுத்த செய்தி. ஒரு வேளை பேச விரும்பவில்லை என்பது நிஜமோ என்கிற குழப்பம் என்னுள் எழுந்தது. இந்த உறவை இழந்துவிடக் கூடாது. எழுத்துக்களில் தூண்டில் கோத்து அடுத்த செய்தியை டைப் செய்தேன்.

‘இந்தப் புள்ளிகளின் ஊர்வலம் எதற்காக?’

‘ம்… அது புள்ளி இல்லை… பட்டாம்பூச்சி. மனசுக்குள் பறக்கற பட்டாம்பூச்சி.’

‘என்ன சொல்லுது உன் பட்டாம்பூச்சி?’

‘பொய் சொல்ல விரும்பலை… நிஜம் சொல்லப் பிடிக்கலை.’

‘சரி, இந்தப் பட்டாம்பூச்சிகளை என்ன செய்யலாம்? எனக்குள்ளும் பறந்து திரிகின்றன.’

‘தெரியலை.’

‘………………………………………….. இது புள்ளிகள் இல்லை. என்னிடம் நீ வந்து சேர்வதற்கான சாலை’ என டைப் செய்தபோது, மனதுக்குள் ஒரு மெல்லிய குற்ற உணர்வு எழுந்து அடங்கியது. ஆயினும், அவளை வீழ்த்திவிடுவதற்கான எல்லாப் பிரயத்தனங்களையும் செய்தேன்.

‘என் நேர்மையைப் பலி கேட்கிறது உன் வார்த்தைகள். நாம் பேசிப்பார்க்கலாமா?’

‘வேண்டாம். உங்க குரல் என்னைக் கொன்னுடும்.’

‘அப்ப என் குரலை நீ கேட்டிருக்க, என்னைத் தெரிஞ்சு வெச்சிக்கிட்டுத்தான் எனக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் குடுத்திருக்க.’

‘ஆமா! கொஞ்சம் மனசுவிட்டுப் பேசட்டுமா?’

‘பேசு பார்வதி…’

‘சாட்ல வேண்டாம்… போன்ல.’

‘ஓ.கே.’

மிக மகிழ்வாக எனது எண்ணை அவளுக்குத் தந்து விட்டு, அவளது அழைப்புக்காகக் காத்திருந்தேன். ஒவ்வோர் அழைப்பும் அவளது அழைப்பாகவே தோன்றியது. நான் நகர்த்துகிறேனா? இல்லை, அவள் நகர்ந்து வருகிறாளா? தெரியவில்லை. நுட்பமாக ஏதோ ஒன்று நிகழ்கிறது. எனக்கு ஓர் அழகான குடும்பம் இருக்கிறது. அவளுக்கும் இருக்கக்கூடும். குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்காவது தாயாகி இருப்பாள். பின் ஏன் இந்தப் பட்டாம்பூச்சி பறக்கிறது? ஒருவேளை பட்டாம்பூச்சியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறாளோ… என்னவோ? மாலை வரை அவளிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்!

அன்று இரவு…. கனவுகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இரவின் உறக்கம் கனவில் கரைந்தது. ஒரு நீண்ட மலர் வெளியில் அவளுடன் பயணப்பட்டேன். இடைவிடாத சாரல் மழைபோல அவள் என்னுடன் பேசியபடியே வந்தாள். மழையின் ஈரம் உடல் நனைக்க, விழித்துக்கொண்டேன். குழந்தை படுக்கையில் ஒன்றுக்குப் போயிருந்தது. எழுந்து உடை மாற்றினேன்.

நான் இத்தனை காலையில் கண் விழித்ததே இல்லை. தூக்கிச் சுமந்த துயரமாக அவள் நினைவுகள். ஒரு முறையேனும் அவளைப் பார்க்காமல் தீராது என்கிற முடிவுக்கு வந்தேன்!

காலையில் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக, நான் பேச விரும்புகிறேன் என ஒரு செய்தி அனுப்பினேன். அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்று நேரத்தில் எனது கைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. அவளாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு எடுத்து, ‘ஹல்லோ’ என்றேன். பதில் இல்லை. மீண்டும் ஹல்லோ… அழைப்பு துண்டிக்கப்படவும் இல்லை. பதிலும் இல்லை. எனக்கு அது அவள்தான் என்று புரிந்த கணம் பாவனைகளுக்குள் சிக்கிக்கொள்ளாத ஒரு புன்னகை என் கண்களில் ஒளிர்ந்தது.

அலுவலகத்தில் என்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு ‘மியாவ்’ என்றேன். எதிர் முனையில் அவள் பலமாக இடைவிடாமல் சிரித்தாள். அவள் அலுவலகத்தில் அவளை எவ்விதமாகப் பார்த்து இருப்பார்கள் என்று தெரியவில்லை. சிரித்தபடியே, ‘நான் என் ஃலைப் டைம்ல இவ்ளோ சிரிச்சது இல்லை’ என்றாள். அவள் வாழ்வின் ஏமாற்றங்களின் மீது நான் வலை விரிக்கிறேனா? அல்லது அவள் வாழ்வின் ஏமாற்றங்கள் எனக்கு வலை விரிக்கின்றனவா… தெரியவில்லை.

அந்தச் சிரிப்பு ஒரு நெடும் பயணத்துக்கான பாதையை அமைத்தது. கரை உடைத்துப் பெருகும் வெள்ளப் பெருக்காக எங்கள் பேச்சு இலக்கற்று ஓடியது. அவள் புள்ளிவைத்துக் கோலம் போட்டது முதல், தனக்கு புதினா சட்னி பிடிக்கும் என்பது வரை எல்லாத் தகவல் களையும் சுவாரஸ்யமாகச் சொன்னாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கணவனோடு ஒரு சின்ன மன முரண். அந்த மன முரணில் துவங்கியதுதான் பட்டாம்பூச்சிப் பறத்தல். அதன் பின், அவள் தனது பட்டாம்பூச்சிக் கனவுகளைச் சொல்வதும், தன் வலிகளைச் சொல்வதும் தினசரி நிகழ்வானது. தன் மேல் அன்பும் அக்கறையும் காட்ட ஒரு மனிதன் இருக்கிறான் என்கிற உணர்வு தன்னை வலிகளில் இருந்து மீட்பதாகச் சொன்னாள்.

”நீ எப்பவுமே என் கைக்குள்ளயே இருக்கறே ஜெம்” என்றாள். ஜேம்ஸ் என்கிற என் பெயரை அவள் ‘ஜெம்’ என சுருக்கிச் சொன்னது, கம்பீரமாக இருந்தது. எனக்கு அவள் சொன்னது புரியவில்லை. ”கைக்குள்ளன்னா?” எனக் கேட்டேன். ”மக்குப் பையா… என் மொபைல்ல… ஃபேஸ்புக் இருக்கு. ஃபேஸ்புக்ல உன் புரொஃபைல் போட்டோ இருக்கு. இப்ப புரியுதா?” அவள் இதைச் சொன்னதும் என்னுள் வெட்கம் வந்தது. என் வெட்கம் அழகானது என அன்று உணர்ந்தேன்.

ஒருநாள் ”நாப்பது வயசுல காதல் வந்தா, அது நல்லதா ஜெம்?’ என்றாள்.

”அதில் என்ன தப்பு?’

”சமூகம் இதை கள்ளக் காதல்னு சொல்லும். என் குழந்தைகளுக்கு நான் ரோல் மாடலா இருக்க விரும்பறேன். தாய்மைக்குள்ள காதல் அசிங்கம் ஜெம்.’

அவளது இந்த வார்த்தைக்கு என்னிடம் பதில் இல்லை. கைபேசியைக் காதில் வைத்தபடி நான் அமைதியாக இருந்தேன். என் அமைதிக்கு அனுமதி அளிப்பதுபோல அவளும் மௌனமாக இருந்தாள். அந்த மௌனத்தைக் கடப்பது பெரும் அவஸ்தையாக இருந்தது. ஒரு முற்றுப்புள்ளியை நோக்கிப் பயணப்படும் வாக்கியம்போல இருந்தது அவளது பேச்சு.

”இப்பெல்லாம் காதல் பாட்டு கேக்கும்போது உன் முகம் ஞாபகம் வருது.’

”நமக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆயிருக்குன்னு நெனைக்கறேன்’ – நான் சிரித்தபடியே இதைச் சொன்னதும், சட்டென அவளுக்குக் கோபம் வந்தது. ”நான்சென்ஸ்… உடம்பைத் தேடறியா?” என்றாள். ஆம் என்றது புத்தி. இல்லை என்றது வார்த்தை. நாற்பது கடந்து வரும் காதல், உடல் நோக்கிய பயணம் என்பது உண்மை. அதை வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. காலம் காலமாக சலனங்களுக்கும் சபலங்களுக்கும் இடையே சிக்கித் தவிக்கிறது காதல். இந்த உறவை அவள் போக்கில் விட்டுவிடுவது நல்லது எனத் தோன்றியது.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, ”ஸாரி, நான் தெளிவா இருக்கேன். அதே தெளிவு உனக்கும் இருக்கணும்னு விரும்பறேன். ஆனா, என் மனசு இதே உறுதியோடு இருக்குமான்னு என்னால சொல்ல முடியலை. உன்னைப் பாத்தா மனசு தடுமாறும்” – முழுமையற்ற அவளது வாக்கியம்… ஒரு கண்ணீர்த் துளியைப் போலப் பரவியது. தொடர்பை உடனே துண்டித்துவிட்டாள்!

‘அன்று உனக்காக அழுத கண்ணீரில் துளிர் விட்டது எனது காதல்’ என அவள் போட்ட ஸ்டேட்டஸ் மெசெஜுக்கு 68 கமென்ட்ஸ் வந்திருந்தது. இனி, நானாகத் தொடர்புகொள்ளும் வரை என்னிடம் பேச வேண்டாம் என ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தாள். அடுத்து வந்த சில நாட்கள், அவளது முக நூலின் முகப்புப் பக்கம் முழுவதும் காதல் கவிதையாலும், அதற்கு கமென்ட் என்கிற பெயரில் போடப்பட்ட ஆறுதல் மொழியாலும் உருகி வழிந்தது.

i’m always with u paaru’ என ஆறு கமென்ட் போட்டு இருந்தான், என்னிலும் வயது மூத்த ஒரு முகநூல் நண்பன். அந்தக் காதல் புலம்பலுக்குப் பிறகு, அவளது நண்பர்கள் எண்ணிக்கை 600-ஐத் தொட்டது. நான் அமைதியாக வேடிக்கை பார்த்த படி இருந்தேன். ஆறுதல் சொல்பவர்களில் எத்தனை பூனைகள் மியாவ் சொல்லக் காத்திருக் கிறதோ என்கிற எண்ணம் சிரிப்பை வரவழைத்தது. பார்வதியின் மீது முதல்முறையாக ஒரு கழிவிரக் கம் தோன்றியது. பார்வதி என்றில்லை… பார்வதி போன்ற உண்மையான அன்பைத் தேடும் எல்லா பெண்களின் மீதும்.

பலவீனங்களில் சுள்ளி பொறுக்கும் மனநிலை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நல்லவன் என்பதெல்லாம் வெறும் முக மூடிதான். பார்வதி சற்று யோசித்துப் பார்த்தாளானால், அவள் கணவனுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது புரிந்திருக்கும். அவள் என்னிடம் பேச மறுத்த இடைவெளியில் அவளைப் பற்றியதான ஒரு தெளிவான முடிவுக்கு வந்தேன்.

‘நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை’ என ஒரு வெள்ளிக் கிழமை அவள் போட்ட ஸ்டேட்டஸை எனக்கான சமாதானத் தூதாகக் கருதி, அவளுக்கு போன் செய்தேன்.

”ஜெம்… உன் நம்பரைப் பார்த்ததும், மனசு படபடன்னு ஆயிருச்சு. இந்தப் பூனை மனுஷி உயிரோடு இருக்காளா… செத்துப்போயிட்டாளான்னுகூட நீ கேக்கலை பாரு. அவ்ளோதான்… அவ்ளோதான் உன்னோட அன்பு. நீ எதிர்பார்த்தது கிடைக்கலன்னதும் விலகிப்போயிட்டே…’

”என்னைக் கொஞ்சம் பேசவிடறியா, நான் இப்ப எதுக்குக் கூப்பிட்டேன் தெரியுமா?”

”ம்… சொல்லு. நீ என்ன ஃபிலிம் ஓட்டினாலும் இங்க செல்லாது ஜெம். ஆண்கள் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்கறாங்க. வழியறதும் கிடைக்க லேன்னா விலகறதும்… கொயெட் நேச்சர்.’

”நான் உனக்கு அம்மாவா இருக்கலாம்னு நெனைக்கறேன். காதலோட தாய்மையில உன்னைக் குழந்தையா ஏத்துக்கலாம்னு பாக்கறேன். காமம் இல்லாத ஒரு காதல் ஓ.கே-வா?’

நான் இப்படிச் சொல்வேன் என அவள் எதிர்பார்த்து இருக்க மாட்டாள். அவள் மௌனத்தில் ஓர் அதிர்வு தெரிந்தது.

”எனக்கு அழணும்போல இருக்கு ஜெம்” என்றாள் அழுதபடியே. அந்தக் கண்ணீரில் கரைந்தது மனதின் சபலக் கறைகள். இப்போதும் பூம்ப் என்கிற இசையோடு வருகிறது அவளது குறுஞ்செய்தி. என் மனதுக்குள் மியாவ் மட்டும் மிஸ்ஸிங். ஆயினும் வலைவனங்கள் எங்கும் ஏதோ ஒரு பூனை மியாவ் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறது!

- பெப்ரவரி 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
குமார் தையலகம்
குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம் போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின் நண்பர்கள் கூட்டம். அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால், அதற்கான ரேஷன் கார்டை 50 பேர் வைத்திருப்பார்கள். குமாருக்கு ...
மேலும் கதையை படிக்க...
ப்போ… பொய் சொல்றே..!
''என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்'' என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது. ''ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ..? இருக்கிற கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை ...
மேலும் கதையை படிக்க...
'என் மரணம் இந்தச் சமூகத்துக்கான பேரிழப்பு. இந்தச் சமூகம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான். வேறு என்ன சொல்வது?' என்கிற வாசகத்தோடு தனது 26-வது தற்கொலைக் கடிதத்தை எழுதி முடித்தான் தட்சணாமூர்த்தி. இந்தச் சமூகத்தின் மீது கருணை காட்டி இத்தனை காலம் வாழ்ந்தது போதும் ...
மேலும் கதையை படிக்க...
காமுவின் பிறப்பில் இருந்துதான் இந்தக் கதையைத் துவங்க வேண்டும். 1980-ம் ஆண்டு நெல்லை பார்வதி திரையரங்கில், 'அன்புக்கு நான் அடிமை’ படம் வெளியான அன்றுதான் காமு பிறந்தான். அப்போது அவனுக்கு 15 வயது. ரஜினிகாந்த்தின் ரசிகனாக உருவான நாள்தான், காமுவின் பிறந்தநாள். மான் ...
மேலும் கதையை படிக்க...
மெளனமான நேரம்
'தம்... தம்... தம்... பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் எந்தன் சொந்தம் ஓலையில் வேறென்ன சேதி தேவனே நான் உந்தன் பாதி’ - சன்னமான குரலில் இந்தப் பாடலைப் பாடிவிட்டு, 'இப்ப இந்தப் பாட்டைக் கேக்கறப்ப, அவங்க மனநிலை எப்படி இருக்கும் சார்?' என கிருஷ்ணமூர்த்தி அண்ணாச்சி கேட்டபோது, ...
மேலும் கதையை படிக்க...
குமார் தையலகம்
ப்போ… பொய் சொல்றே..!
தட்சணின் 26-வது மரணம்!
ரஜினி ரசிகன்
மெளனமான நேரம்

மியாவ் மனுஷி மீது 3 கருத்துக்கள்

 1. கார்த்திக் புகழேந்தி says:

  இயல்பானதும், அர்த்தமில்லாததுமான ஒரு உரையாடலின் தன்மைக்குள் பூச்சூடிக்கொண்ட மென்மையான இந்த அன்பு இன்றைய விரிட்சுவல் உலகெங்கும் பரவிக்கிடக்கிறது.

  தனித்தனித் தீவுகளான மனுஷ, மனுஷிகள் அன்பினாலானதான உலகத்திற்குள்ளாக பிரவேசித்துக் கொண்டிருக்க விரும்புகிறார்கள் தீண்டல்கள் ஏதுமில்லாமல் என்பதை பிரதிபலிக்கும் கதை.

 2. vijaysivaramakrishna says:

  A perfect twist in the tale.
  ஆரம்பம் முதல் ஏதோ ஒரு தவறான பாதையில் நகர்கிறது கதை என்று தோன்றிய உறுத்தலை,கடைசி மூன்றே பத்தியில் மாற்றி விட்டீர்கள்

 3. அருமையான சிறுகதை. வலையுலகில் தூண்டிலுடன் வட்டமிடும் ‘நல்ல’மனிதர்களின் மனநிலையை அப்படியே கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள். ஆனால், முடிவு கதையை முடிப்பதற்காகச் சொருகப்பட்டது போன்ற ஒரு எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)