மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்

 

பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத் திறக்க, அவளது கணவன் சந்தானம் அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்து கதவை அவசரமாகத் தாழிட்டான்.

“என்னங்க? எங்கே உங்களுடைய சூட்கேஸ்? எப்ப வந்தீங்க பம்பாயிலிருந்து?” என்று பதறிப் போனாள்.

“உஸ்” என்று எச்சரித்தான் சந்தானம். “இத பாரு மாலா, நான் சொல்றத இப்ப ரொம்ப கவனமா கேட்டு நீ நடந்தா, இன்னும் ஒரு மாசத்தில் நம் கைக்குக் குறைந்த பட்சம் சுளையா பத்து லட்ச ரூபாய் வரும். நான் பம்பாயிலிருந்து வந்து கொண்டிருந்த பிளேன் இப்பதான் ஏர்போர்ட் அருகில் தரையில் விழுந்து தீப்பிடித்துக் கொண்டது.”

“ஐயையோ”

“முழுக்கக் கேள். நானும் சில பயணிகளும் பின்புற எமர்ஜென்ஸி கதவு வழியாக, வெளியே குதித்துத் தப்பி விட்டோம்.”

“அப்புறம்?”

‘பலர் அடையாளம் தெரியாதவாறு தீக்கிரையாகியிருப்பார்கள். நான் உடனே ஆட்டோ பிடித்து, நம் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி இறங்கிக் கொண்டேன். யாருக்கும் தெரியாமல் பின் வழியாய் வந்தேன். நிறையப் பணம் பண்ணுவதற்கு நமக்கு இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை.”

மாலதியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. “என்ன நீங்க… என்னென்னவோ சொல்றீங்க?”

“புரியும்படி சொல்றேன் கேள். இன்னும் அரை மணி நேரத்தில் நான் கல்லிடைக்குறிச்சிக்குக் கிளம்பிப் போய் விடுகிறேன். அலுவலக விஷயமாக நான் பம்பாய் போய்விட்டு இன்று பெங்களூர் திரும்புவது என் ஆபிசில் எல்லாருக்கும் தெரியும். ஆனால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. நான் தீயில் கருகிவிட்டேன்னு நினைப்பாங்க. அவர்கள் இன்றக்கு நம் வீடு தேடி வருவார்கள். நான் இறந்து போய்விட்டதாக உன்னிடம் சொல்லுவார்கள். அதாவது என்னையும் உன்னையும் தவிர இந்த உலகத்தின் கண்களுக்கு நான் இறந்துவிட்டேன்” என்று சொன்னவன் அவசரமாகக் கிளம்ப ஆயத்தமானான்.

மாலதி மிகவும் கலங்கிப் போனாள். “என்னங்க, என்னவெல்லாமோ பேசறீங்க…எனக்கு பயம்மா இருக்குங்க. நமக்கு பணமே தேவையில்லைங்க. உயிரோட இருக்கற புருஷனை எப்படிங்க இறந்துவிட்டதாகச் சொல்லுவது? எப்படிங்க நான் நடிக்க முடியும்?”

“இத பாரு மாலதி உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க எனக்கு இப்ப நேரமில்லை. நெருப்புன்னு சொன்னா வாய் வெந்து விடுமா என்ன? கிடைக்கப்போற பணம் அஞ்சா பத்தா? ஏறக்குறைய பத்து லட்சம்… அத்தோட நாம என்ன கொள்ளையடிச்சமா? கொலை பண்றமா?

இரண்டு மாசம், அல்லது மிஞ்சிப் போனால் ஆறு மாசம் பிரிந்து இருக்கப் போகிறோம். அவ்வளவுதான். கவலைப்படாதே. நான் ரகசியமாய் உனக்கு போன் பண்ணுவேன். விமானக் கம்பெனி இன்ஷ¥ரன்ஸ், என் ஆபிஸ் நஷ்ட ஈடு எல்லாம் உனக்கு கிடைத்த பிறகு, நீ கிளம்பி வந்துவிடு. கண் கானாத ஊரில் ஒரு பெரிய வீடு கட்டிக்கொண்டு… மிச்சத்தை பாங்கில் போட்டுவிட்டு, நாம் அமைதியாக செட்டில் ஆகிவிடுவோம். எப்படி நம்ம ஐடியா?”

மாலதியின் பதிலுக்குக் காத்திராமல் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்குப் போய், கிளம்பிக் கொண்டிருந்த ஒரு பஸ்ஸில் ஏறி தஞ்சமடைந்தான்.

–0–

சேல்ஸ் மேனேஜர் சந்தானத்தை அழைத்துவர ஏர்போர்ட் சென்றிருந்த அலுவலகக் கார் டிரைவர் பதறியடித்துக்கொண்டு திரும்பி வந்தான். சேதியைச் சொன்னான்.

அலுவலகம் பரபரப்பானது.

காயமுற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட எந்தவொரு மருத்துவமனையிலும் சந்தானத்தின் பெயர் காணப்படவில்லை. கருகிப்போன எண்பதுக்கும் மேலான பிணங்கள் சிறிதும் அடையாளம் காண முடியாத நிலையில் குவியலாய்க் கிடந்தன. எவ்வளவு பேர் அப்படி இறந்தார்கள் என்று கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாலை ஐந்து மணிவாக்கில் மூன்று கார்கள் வரிசையாகச் சந்தானத்தின் வீட்டின் முன் நின்றது.

அலுவலக அதிகாரிகள் படைசூழ வந்திருந்த எம்.டி. வருத்தம் தோய்ந்த குரலில் விஷயத்தை மாலதியிடம் மெதுவாய்த் தெரிவிக்க… அந்தச் சூழ் நிலையில் மாலதிக்கு இயல்பாகவே அழுகை வந்தது. நன்றாகவே நடித்தாள். ஏர்போர்ட்டுக்குப் போய் பார்த்து, தேடித் தேடி அழுதாள்.

நஷ்ட ஈடு விஷயத்தில் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கியது.

அவ்வப்போது சந்தானம், கல்லிடைக்குறிச்சியிலிருந்து இரவு வேளையில் பெங்களூருக்கு மாலதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

எண்ணி ஐம்பது நாட்களில் ஏர்லைன்ஸ், இன்ஷூரன்ஸ் அலுவலகங்களிலிருந்து ஒரு பெரிய தொகை கிடைத்தது. எல்லாமாகச் சேர்ந்து பதினைந்து லட்சம் இப்போது மாலதியின் கையில்…

இந்த விவகாரங்களிலெல்லாம் மாலதிக்கு ரொம்ப உதவியாக இருந்தான் குமார். சந்தானத்தின் அலுவலக நண்பன் அவன். மாலதிக்கும் நன்கு தெரிந்தவன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் குமார் மாலதியைப் பார்க்க வந்தான். உண்மையான வருத்தத்துடன் சொன்னான்:

“முப்பது வயதிலேயே சந்தானம் நம்மைவிட்டுப் பிரிந்து விடுவான் என நாம் சற்றும் எதிர் பார்க்கவில்லை. இறப்பு என்பது நம்மை என்றாவது எதிரிகொள்ளும் நிஜம். என்றாலும், இப்படி நாம் அவனைத் தொட்டு அழக்கூட முடியாமல் உருத் தெரியாமல் போய், சரியானபடி ஈமக் கிரியைக் கூடப் பண்ண முடியாமல் போனது கொடுமையிலும் கொடுமை. நீங்கள் இனிமேல் நடந்ததை மறந்துவிட்டுத் ¨தா¢யமாக இருக்க வேண்டும்” என்றான்.

மாலதி தலை குனிந்தபடி அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

கிளம்புவதற்கு முன் கனமான கவர் ஒன்றை மாலதியிடம் கொடுத்தான். “உள்ளே இருக்கும் கடிதத்தைத் தயவுசெய்து அமைதியாகப் படித்துப் பாருங்கள், நிறைய யோசியுங்கள். அடுத்த ஞாயிற்றுக் கிழமை நான் மறுபடியும் உங்களைப் பார்க்க வருகிறேன்.” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மாலதி நிறையவே யோசித்தாள்.

அமைதியாக, ஆனால் உறுதியாகச் செயல் படத் தொடங்கினாள்.

குமார் வந்து சென்ற நான்காவது நாள், அவனுடன் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டாள். தன்னுடைய வீட்டுத் தொலைபேசித் தொடர்பை உடனடியாகத் துண்டிக்க ஏற்பாடு செய்யுமாறும், பிறகு ‘சரெண்டர்’ செய்துவிடும் படியும் கேட்டுக் கொண்டவள், “வரும் ஞாயிறு உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன்” என்றும் சொன்னாள்.

பதினைந்து நாட்கள் கழித்து சந்தானத்தின் கல்லிடைக்குறிச்சி முகவரிக்கு ஒரு நீண்ட கடிதம் பதிவுத் தபாலில் வந்தது.

சந்தானம் அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான்.

“வாழ்க்கையில் பணம் ஒன்றே பிரதானம் என அலையும் திரு.சந்தானம் அவர்களுக்கு,

நம்முடைய மூன்று வருடத்திய திருமண வாழ்க்கையை நான் அசைபோட்டபோது – அதில் நாகா£கமான சம்பவங்களையும் சந்தோஷங்களையும் விட, அசிங்கமான அபஸ்வரங்கள்தான் அதிகம் தெரிகின்றன. திருமணமான முதல் வருடத்தில், பேசியபடி வரதட்சணை தந்தும் திருப்தி கொள்ளாமல் அடிக்கடி என்னைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று என் தந்தையிடம் பிடுங்கிக் கொண்டீர்கள். தாய் இல்லாத நான் என் தந்தையையும் இழக்க நோ¢ட்டது. அப்புறமும் என்னை மனைவியாக நடத்தாமல், ஒரு வேலைக்காரியைவிடக் கேவலமான முறையில் நடத்தினீர்கள்.

இரண்டாவது வருடம் நான் உண்டாயிருந்தபோது என் தாய்மை ஏக்கங்களைத் தவிடு பொடியாக்கிவிட்டு அபார்ஷன் செய்யச் சொல்லி வற்புறுத்தி, அதில் வெற்றியும் பெற்றீர்கள்.

ஒரு பெரிய கம்பெனியில், நல்ல உத்தியோகத்தில் கை நிறையச் சம்பளம் வாங்கத் தெரிந்த உங்களுக்கு, வீட்டில் மனைவியிடம் நல்ல கணவனாக நடந்து கொள்ளத் தெரியவில்லை. பணம், காசு என்று ஆலாய்ப் பறந்த உங்களுக்கு மனைவியிடம் ஆவலாய் இருக்கத் தெரியவில்லை.

நான் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ‘காம்ப்ரமைஸ்’ செய்துகொண்டு, உணர்ச்சிகளை அடக்கி அடங்கிப்போய் ஒரு மரத்துப் போன வாழ்க்கையை தங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கையில்தான், உங்களது ‘பத்து லட்சம்’ திட்டத்தை அறிவித்துவிட்டு, நான் பதில் பேசக்கூட அவகாசம் தராமல் ஓடிவிட்டீர்கள். போனில் என்னோடு பேசும்போது கூட என்னைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் எந்தப் பணம் வந்தது, எது இன்னும் வரவில்லை, எப்போது வரும் என்று பணத்தைப் பற்றியேதான் பேசினீர்கள்.

தற்போது என்னிடம் பத்தல்ல, பதினைந்து லட்சம் இருக்கிறது. ஆனால் தங்களிடம் நான் திரும்பி வரப்போவதில்லை. அதே சமயம் பெண்களுக்குத் துணை அவசியம் என்பதையும் ஆணின் அருகாமைதான் அவளின் பலம் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆகவே தடம் புரண்டுபோன என் வாழ்க்கையை இனி நான் நன்றாகச் செப்பனிடப் போகிறேன்.

ஆம். தங்கள் நண்பர் குமாரை நான் மணம் செய்து கொள்ளப் போகிறேன். இது குறித்து அவர் எனக்கு எழுதியுள்ள பண்பான நாகரீகமான கடிதத்தின் பிரதியைத் தங்களின் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

என்னிடம் தற்போது இருக்கும் பதினைந்து லட்சத்திற்காக அவர் என்னை மணக்கிராறென்று நினைக்க வேண்டாம். ஏனெனில் அவரது யோசனைப் படியே அந்தப் பதினைந்து லட்சத்தையும் அனாதைக் குழந்தைகளின் விடுதிகளுக்கு அனுப்பிய பிறகுதான் எங்களது திருமணம் நடக்கும்.

உலகத்தின் கண்களுக்கு மட்டுமல்ல, இனி என்னைப் பொறுத்தவரையிலும் தாங்கள் இனி, என்றும் ‘இறந்தவர்தான்.’

- மாலதி (குமார்).

- குமுதம் 29-3-90 இதழில் பிரச்சினைக் கதையாக பிரசுரமானது. 

தொடர்புடைய சிறுகதைகள்
நம் எல்லோருக்குமே சில விஷயங்களில் நம்மையறியாமலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அதே ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் பைத்தியக்காரப் பசியாக மாறிவிடும். எந்தப் பசியும் தவறல்ல, அது அடுத்தவர்களைப் பாதிக்காத வரையில்... சிலருக்கு பக்திப் பசி; பலருக்கு பணப் பசி; பாலியல் பசி; குடிப் ...
மேலும் கதையை படிக்க...
மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி மாவட்ட கல்வியாளர்களால் போற்றப் பட்டவர். அவருக்கு வயது 47. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
பசுபதி. வயது முப்பது. ஊர் தேனி. இயற்கை வனப்புச் செறிந்த பிரதேசங்களுக்கு அடுத்ததாக பசுபதியின் உணர்வுகளை எளிமையாகக் கவர்ந்திருப்பவை அழகிய பழமையான கோயில்கள்தான். தென் தமிழ் நாட்டில் அவன் காணாத கோயில்களே இல்லை எனலாம். மதுரைக்கு அருகே உள்ள கள்ளழகர் கோயிலிலிருந்து, செங்கோட்டைக்குச் சற்றுத் தள்ளிய ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘அரட்டைக் கச்சேரி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). ஒருநாள் விடுமுறையின் காரணமாக சென்னையில் இருந்து திம்மராஜபுரத்தில் என் வீட்டிற்குப் போயிருந்தேன். என் வீட்டிற்கு அடுத்த வீடுதான் நாச்சியப்பன் வீடு. ஆனால் ஒரு சின்ன சந்து மாதிரி இடையே போய் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி பத்தரை. பெங்களூர் நகரம் உடம்பை வருடும் குளிரில் மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தது. தூக்கம் வராது கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான் திவாகர். வாசலில் எவரோ கார் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்தை தொடர்ந்து வீட்டின் அழைப்பு மணி சத்தம் கேட்டது. எழுந்து ...
மேலும் கதையை படிக்க...
வீட்டுப் பசி
ஆவிகள் உலகம்
கோயில்கள்
நாச்சியப்பனின் உரை
ஆலமரத்தின் அடியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)