சவடால் சந்திரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 7,649 
 

“ஒங்கப்பா செய்துட்டுப் போயிருக்கிற காரியத்தைப் பாத்தியாடா?” தலைவிரிகோலமாகத் தரையில் அமர்ந்திருந்த சாரதா கதறினாள்.

அவர்கள் குடும்பத்தைச் சோகத்தில் ஆழ்த்துவதற்கென்றே அப்பா தான் ஓட்டிப்போன பைக்கை அந்த லாரிமேல் மோதியிருக்கமாட்டார்தான். ஆனால், அம்மாவிடம் அதை எப்படிச் சொல்வது! சாமந்திப்பூ மாலையும் கழுத்துமாகப் படுத்திருந்தவரைப் பார்த்து அவனுக்கும் கோபம் வந்தது.

`எனக்கு ஒரே ஆசைதான். நீ பட்டம் வாங்கி, பிள்ளைங்களுக்குப் படிச்சுக்குடுக்கறதை என் கண்ணால பாக்கணும் சந்திரா!’

எப்படிப்பா அதை மறந்தீர்கள்? ராத்திரி பகலாக ஏன் டாக்சி ஓட்டி, உடம்பை வருத்திக்கொண்டீர்கள்?

அவரது உடல் நிலையைப்பற்றி சாரதா கரிசனப்படும்போதெல்லாம், `காடி சொந்தக்காரனுக்கு ஒரு நாளைக்கு நாப்பது வெள்ளி குடுக்க வேண்டியிருக்கு, சாரதா. சில நாள் வருமானம் பத்தாம, என் கைக்காசைப் போட்டு சமாளிக்கிறேன். நான் இப்படி ஒழைச்சாத்தான் சந்திரனுக்குக் காசு அனுப்ப முடியும். வீட்டிலே இருக்கிறமாதிரி அவன் சாயம்போன, கிழிசல் சட்டையையா போட்டுக்க முடியும்? மத்த பசங்க என்ன நினைப்பாங்க?’ என்று அவள் வாயை அடைத்துவிடுவார்.

மேனகாவைப்பற்றி வாய்விட்டுச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தான். அது போன வாரம். இழவு வீட்டில் எப்படி கல்யாணப்பேச்சை எடுப்பது?

ஹாஸ்டலுக்கு மீண்டும் புறப்பட்ட மகனிடம், “அப்பா இல்லாம, வீடே சூனியமா இருக்குய்யா. நீயாவது அடிக்கடி வந்துட்டுப் போ!” கண்ணீருடன் விடை கொடுத்தாள் தாய்.

இன்னொரு பிரச்னையும் நினைவுக்கு வந்து இப்போது அவனை அலைக்கழைத்தது. இனியும் மேனகாவிடம் தன் குடும்பத்தின் உண்மை நிலையை மறைத்து, பெரியமனிதத் தோரணையில் நடக்க முடியாது.

“அம்மா! என்னால முந்திமாதிரி வாராவாரம் வரமுடியாது. பஸ்ஸுக்கு யாரு தண்டம் அழறது!” என்றான் முகத்தில் கடுமையை வரவழைத்துக்கொண்டு.

“சரிப்பா. நீ நல்லாப் படிச்சு, முன்னுக்கு வரணும். அதுக்காகத்தானே அப்பா அப்படி ராத்திரி பகலா ஒழைச்சு..!” மேலே பேசமுடியாமல், குரல் அடைத்துக்கொண்டது.

அம்மாவைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது சந்திரனுக்கு. படிப்பில்லாவிட்டால்தான் பெண்கள் எவ்வளவு பலகீனமாக ஆகிவிடுகிறார்கள்! எல்லாவற்றிற்கும் ஆண்களையே நம்பி வாழ்ந்து, அவர்கள் துணை இல்லாது போனதும், வேரற்ற மரம்போல!

“பாத்துக்குங்கம்மா,” என்று அர்த்தமில்லாமல் என்னமோ சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

“நீ வந்துட்டுப்போய் ரெண்டு மாசமாயிடுச்சேய்யா! அப்பா போனப்போ வந்ததுதான்!” வாயெல்லாம் பல்லாக — அதில் சில சொத்தை — சாரதா மகனை வரவேற்றாள். அவள் முகம் சற்றுத் தெளிந்திருந்ததாகத் தோன்றியது அவனுக்கு. சற்று தெம்பு எழுந்தது. போகிறவர்கள் போனால், இருக்கிறவர்கள் தங்கள் பாட்டைக் கவனிக்க வேண்டாமா!

இந்தத் தடவையாவது மேனகாவைப்பற்றிய பேச்சை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தான்.

வீடு முன்பைவிட சிறியதாகப் போய்விட்டது போலிருந்தது. மலேசிய நாட்டின் மையப்பகுதி என்று பெயர்தான்! நான்கடுக்கு மாடிக்கட்டடம்! அதில் ஒரே அறைகொண்ட பல வீடுகள், ஒவ்வொரு தளத்திலும்.

இதே கோலாலம்பூரில்தான் ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன வசதிகள் பொருத்தியிருந்த பங்களாக்களில், ஒரு குடும்பத்துக்கு மூன்று, நான்கு கார்களுடன் வாழ்கிறார்கள் பலர்! `நம்மிடையே இப்படியும் குடியிருப்புகள் இருக்கின்றன!’ என்று யாராவது சொன்னால்கூட நம்ப மாட்டார்கள் அவர்கள்! கழிவும், குப்பையுமாக, அவ்வளவு பின்தங்கிப்போயிருந்தது அவ்விடம். சந்திரன் மூக்கைச் சுளித்துக்கொண்டான்.

குறிப்பிடத்தக்க கல்வியறிவோ, திறனோ இன்றி, சொற்ப காசுக்கு வேலை செய்பவர்கள், வேலையே செய்யாது எந்நேரமும் குடித்தே தம் அவலத்தை மறக்க நினைப்பவர்கள், தக்க வழிகாட்டலின்றி தீய நடத்தைகளில் ஈடுபடும் இளைஞர்கள் — இவர்கள் மத்தியில் வாழ்ந்தும், தனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டியிருக்கிறார் அப்பா! அவரில்லாது வீடே வெறிச்சோடிப் போனதுபோலிருந்தது.

பன்னிரண்டு வயதானபோது, “ஒரு டி.வி. வாங்குங்கப்பா! என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, “நீ படிச்சு, என்ன வேணுமோ வாங்கிக்க!’ என்றார் எப்போதுமில்லாத கடுமையாக.

`பாவங்க! ஆசையாக் கேக்கறான்! மாசாமாசம், தவணை முறையிலே..,’ என்று சிறிது பயத்துடன் ஆரம்பித்த மனைவியையும் அடக்கினார்: `நீ சும்மா இரு! படிக்கிற வயசிலே படிக்கணும்!’

`அவர் சொன்னதற்கு மேலேயே சாதித்துக் காட்டுகிறேன்!’ என்று அந்த இளம் வயதில் கறுவிக்கொண்டான். உதடுகள் இறுகின.

காலங்கடந்து புரிந்தது அப்பாவின் வார்த்தைகளிலிருந்த உண்மை.

“என்னம்மா, வீட்டிலே இத்தனை ஜாமானுங்க அடைச்சு வெச்சிருக்கீங்க? ஒடைஞ்ச நாற்காலியும், மேசையும்!” என்று புகார் செய்த மகனிடம், “எல்லாம் நீ படிச்சு, பெரியாளா வரணும்னு அப்பா ஆசை ஆசையா வாங்கினதுடா!” என்றாள் சாரதா, கெஞ்சலாக. “நம்ப வீட்டுக்கு யாராவது வந்தா, எங்க ஒக்காருவாங்க?” என்று தன் செய்கைக்கு நியாயம் கற்பிக்கப் பார்த்தாள்.

“தரையில ஒக்காரட்டும். நாம்ப லட்சாதிபதி இல்லேன்னு அவங்களுக்குத் தெரியாதா?”

அம்மாவின் முகம் போன போக்கைப் பார்த்து, தான் ஏன் இப்படி ஆகிவிட்டோம் என்று அவனுக்கே வருத்தமாக இருந்தது. அப்பாவின் நிலைமையால் குடும்பம் சீர்கெட்டிருந்தது என்னவோ உண்மைதான். அதற்காக தன் இயலாமையை இந்த அப்பாவி அம்மாமேல் காட்டுவது என்ன புத்திசாலித்தனம்?

தன் வார்த்தைகளால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில், “என்னோட படிப்பு முடிஞ்சதும் பாருங்களேன்! வேற வீட்டுக்கு ஒங்களைக் கூட்டிட்டுபோய், ராணிமாதிரி வெச்சிருக்கப்போறேன். மொதல்லே வாடகை வீடுதான். ஆனா, இதைவிடப் பெரிசா, நல்லா இருக்கும்”.

அம்மாவின் முகத்தின் இறுக்கம் குறையவில்லை.

“அப்புறம்.., மஸ்ஜிட் இண்டியாக்குப் போய் — அங்கேதானே நிறைய நகைக்கடைங்க இருக்கு — அங்கே போய், `ஒங்களுக்குப் பிடிச்சதை எல்லாம் வாங்கிக்குங்கம்மா,’ அப்படின்னு..!” என்று தொடர்ந்தபோது, தான் சொல்வதுபோல் செய்ய முடியுமா என்றெல்லாம் அவன் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அந்தக் கனவுகளே அவனுக்கு நிறைவை அளித்தன.

அவனுடைய உற்சாகத்தில் பங்குகொள்ளாது, “எனக்கு இனிமே எதுக்குடா பவுன் நகைங்க?” என்று விரக்தியுடன் தன் விதவைக்கோலத்தை நினைவுபடுத்தினாள் சாரதா. “நாலுபேர் வாயில பூந்து வர்றதுக்கா?”

சந்திரனுக்குக் கோபம் வந்தது. “எனக்கு வசதி இருக்கு, நான் எங்கம்மாவுக்கு வாங்கித் தந்துட்டுப்போறேன்! மத்தவங்களுக்கு அதிலே என்ன பொறாமை?” என்று கத்தினான், என்னவோ அப்போதே பெரிய பணக்காரனாகி விட்டதுபோல.

“சாத்திரத்தை மதிக்க வேணாமா?”

“அதெல்லாம் சும்மா ஆம்பளைங்க போட்ட சட்டம்! அந்தக் காலத்திலே அவங்கதானே படிச்சவங்க! பொம்பளைங்களை அடிமையாவே வெச்சிருக்க, இப்படி ஆம்பளைங்களுக்குச் சாதகமாவே எல்லாம் சொல்லி வெச்சிருக்காங்க! ஒரு பொண்ணு பிறந்ததிலிருந்து அலங்காரம் பண்ணிக்கறா. நடுவிலே வந்த புருஷன் போயிட்டா, அவளும் சூன்யமா?” எப்போதோ கல்லூரி பேச்சுப்போட்டியில் தான் காரசாரமாக விவாதித்ததை உணர்ச்சியுடன் எடுத்துச்சொன்னான்.

சாரதாவின் கோடிட்ட முகத்தில் ஒரு புன்னகை.

“இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு?” முறைத்தான்.

“ஒன்னைக் கட்டிக்கப்போற பொண்ணு குடுத்துவெச்சவன்னு நெனப்பு ஓடிச்சா, அதான்!”

“அவ பேரு மேனகா!” சமயம் பார்த்துச் சொன்னான்.

“யாரு?”

“ஒன்னைக் கட்டிக்கப்போற பொண்ணுன்னு சொன்னீங்களே, அவதான்! நான் ஒரு பேச்சுப்போட்டியிலே இப்படிப் பேசினதைப் பாத்து அவளே மயங்கிட்டா!” அந்த நினைப்பில் சந்தோஷமாகச் சிரித்தான்.

“அவங்க குடும்பம் எப்படியாப்பட்டது, சந்திரா?”

“சொந்தமா காடி ஓட்டிட்டு காலேஜூக்கு வருவா! அப்போ பாத்துக்குங்களேன்!” அவளுடன் சேர்ந்து தானும் ஒரு லட்சாதிபதி ஆகிவிட்டதைப்போன்ற பெருமை அவன் குரலில்.

“நல்லா யோசிச்சுக்கப்பா. ரொம்ப பணக்காரிங்கறே! நம்ப குடும்பம் இப்போ இருக்கிற நிலைமைக்கு அந்தப் பொண்ணு ஒத்து வருமா? இப்போ போய் பொண்ணு கேட்டா, மதிப்பாங்களா!”

அவனையும் பயம் பிடித்துக்கொண்டது. எந்தக் காலத்தில் வேலைக்குப் போவது, பணக்காரனாவது! நூற்றில் ஒருவருக்குத்தான் ஆசிரியர் பயிற்சி கற்றுத் தேர்ந்தவர்களுக்கே உத்தியோகம் கிடைக்கிறதாம்!

தன் பயத்தை அப்பால் தள்ளிவிட்டு, “பெரிய படிப்பு படிச்சு, நல்ல வேலைக்குப் போனா, நானும் பணக்காரனா ஆயிட்டுப்போறேன்!” என்று தாயை சமாதானம் செய்தான்.

“மொதல்லே நல்லபடியா படிப்பை முடிக்கிற வழியைப் பாருய்யா! நான் சொல்ற பேச்சைக் கேளு. கல்யாண யோசனை எல்லாம் இப்போ வேணாம்!”

“நம்ப கல்யாணம் ஆனப்புறமும் இப்படித்தான் படிப்பு, படிப்புன்னு உசிரை விட்டுட்டு இருக்கப்போறியா, மகேஷ்?” செல்லமாகக் கோபித்தாள் காதலி.

“படிக்கிற காலதிலே காதல், கத்தரிக்காய்னு மனசை நழுவ விடக்கூடாதுன்னு எனக்கு ஞானோதயம் வந்திச்சா?” என்று வேடிக்கையாகப் பேசி நிலைமையின் இறுக்கத்தைத் தணிக்கப்பார்த்தான்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னிக்கே எங்கப்பாவைப் பாக்க வர்றே!”

சந்திரனுக்குச் சபலம் ஏற்பட்டது. ஒரு பெரிய மனிதரின் தயவு இருந்தால், சுலபமாக முன்னுக்கு வந்துவிட முடியாது?

அப்போது அவன் நினைத்திருக்கவில்லை, அவர்கள் குடும்ப நிலவரத்தைத் துருவித் துருவிக் கேட்டுவிட்டு, `என்ன தைரியத்திலே இந்த வீட்டுக்குள்ளே நுழைஞ்சே?’ என்று விரட்டியடிப்பார் அந்தப் `பெரிய’ மனிதர் என்று.

`மேனகாதான் சொன்னாள் என்றால், என் புத்தி எங்கே போயிற்று! அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும். இப்படி சிறுபிள்ளைத்தனமாய்..!’ உடனே அம்மாவைப் பார்த்து, அவள் மடியில் தலைவைத்து அழவேண்டும் போலிருந்தது.

அம்மாவை அழைத்தான். வீட்டின் கீழே இருந்த பலசரக்குக்கடை முதலாளி நல்லவர். கடை சிப்பந்தியை விட்டு அம்மாவை அழைத்துவரச் சொல்வார்.

“நீங்க சொன்னது சரியாப்போச்சும்மா,” என்று அடைத்த குரலில் ஆரம்பித்தவன், நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். அதிகம் பேசினால் அழுதுவிடுவோமோ என்ற பயம் எழ, உரையாடலைத் துண்டித்தான்.

மகனுடைய குரலில் அவ்வளவு சோகத்தை, விரக்தியை என்றுமே கேட்டதில்லையே! சாரதா அதிர்ந்துபோனாள். `டி.வி. கிடையாது!’ என்று அப்பா சொன்னதும், உதட்டை இறுக்கிக்கொண்டு போனமகன். ஏற்கெனவே பிடிவாதக்காரன்! இப்போது அசந்தர்ப்பமாக ஏதாவது செய்துகொண்டுவிட்டால்?

`நீயும் என்னை விட்டுட்டுப் போயிடப்போறியாடா?’ என்று அலறியழுதவள், அவனைக் காண விரைந்து வந்தாள்.

“கண்ணு! கண்ணு!” பலர் பார்க்க தாய் அவன் கன்னத்தைத் தடவியது சந்திரனுக்கு வெட்கத்தை உண்டுபண்ணியது. “என்னம்மா, நீங்க!” என்று சிணுங்கினான்.

“நீ அழறமாதிரி கேட்டுச்சா! பயந்துட்டேண்டா!” என்றாள், படபடப்பு குறையாமலேயே.

“நல்ல அம்மா!” சிரிப்பை வரவழைத்துக்கொண்டான் மகன். “நான் என்னம்மா, தமிழ்ப்பட ஹீரோவா, காதல்லே தோல்வி வந்தா, குடிச்சே என்னை அழிச்சுக்க, இல்லே, மூளைகெட்டதனமா தற்கொலை செஞ்சுக்க! எனக்கும் பொறுப்பு இருக்கும்மா. நான் யாரோட மகன்?” நெஞ்சை நிமிர்த்தினான். “படிப்பு முடியப்போகுது. வேலையில சேர்ந்து, முதல் மாசச் சம்பளத்திலே ஒங்களுக்கு நகை வாங்கிக் குடுக்கணும். பெரிய வீட்டிலே குடிவைக்கணும். இதெல்லாத்தையும் விட்டுட்டு, நான் ஏன் சாகப்போறேன்!” பழக்கமாகிப் போய்விட்ட சவடால்தனம் இப்போது அம்மாவைச் சமாதானப்படுத்த கைகொடுத்தது.

ஒரு மணி நேரத்துக்குமுன், ஒரு புட்டி நிறைய இருந்த தலைவலி மாத்திரைகளைத் தான் முழுங்க இருந்தபோது, `நீ என்னடா, தமிழ்ப்பட ஹீரோவா, காதல்லே தோல்வி வந்தா, குடிச்சே ஒன்னை அழிச்சுக்க, இல்லே, மூளைகெட்டதனமா தற்கொலை செஞ்சுக்க! ஒன்னையே நம்பிக்கிட்டு இருக்கிற ஒங்கம்மாவைக் கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? முட்டாள்!’ என்று ஏளனம் செய்தபடி கடிந்து, அதைப் பிடுங்கிய நண்பன் மனக்கண்முன் தோன்றிச் சிரித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *