வித்தியாவின் குழந்தை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 8,776 
 

‘வயிற்று வலியென்று இரண்டு மூன்று நாளாக வித்தியா அவதிப் படுகிறாள்’. அந்தத்தாய், வயிற்று வலியால்அவதிப்படும் தன் மகளின் வயிற்றைத் தடவியபடி டாக்டருக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவசரசிகிச்சைப் பகுதி பல ரகப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.லண்டனிலுள்ள பல கசுவல்ட்டி டிப்பார்ட்மென்டுகள்,இரவு ஏழுமணிக்குப் பின் இப்படித்தான் அல்லோலகல்லோலமாகவிருக்கும். ஆம்புலன்சிலிருந்து இறக்கப்பட்ட,இரத்தம் கசியும், மூச்செடுக்கக்; கஷ்டப்படும் நோயாளிகளைக் கவனிக்க தாதிமார்களும்; டாக்டர்களும் அவசரப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த டிப்பார்ட்மென்டில் போட்டிருந்த பல பெஞ்சுகளில் எத்தனையோபேர் பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். ஓருசிலரின் முனகல்கள்,வலி தாங்காத அழுகைகள்,குடிவெறியில் தள்ளாடிக்கொண்டு உளறிக்கொட்டும் ஓலங்கள் என்பன அந்த இடத்தை நிரப்பின.

வயிற்று வலியுள்ள மகளுடன் வந்த இந்தியத்தாய்,புரட்டாதி மாத வெயிலின் புழுக்கம் இன்னமும் அடங்காததால் உண்டான வியர்வையைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். அவளின் மகளைப் பார்க்க வந்த டாக்டர், அவளைச்சுற்றிக்கிடந்த ஸ்கிரினை இழுத்து மூடினார்.

‘உனது மகளின் வயிற்றைப் பரிசோதிக்கவேண்டும்’

டாக்டர் ஆசிய நாட்டைச் சேர்ந்த அந்த (இந்திய?) தாயைப் பார்த்துச் சொன்னார். வலியால் அவதிப்படும் இளம் பெண்ணுக்குப் பதினைந்து அல்லது பதினாறுவயதிருக்கலாம்.

பாடசாலைக்குப்போகும் வயதில், அந்த இளம் பெண்ணுக்கு,வயிற்று வலியால் கன்னங்கள் சிவந்து,முகம் வீங்கி கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

‘உனது மகள் இரண்டு மூன்று நாளாக வயிற்று வலியால் அவதிப்படுகிறாள் என்றால் ஏன் டொக்டரிடம் காட்டவில்லை?’

டொக்டரில் குரலிற் சாடையான கோபம்.

‘அவள் டாக்டரிடம் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள்’

தாய் பெருமூச்சுடன் சொல்கிறாள்..

டாக்டர், இந்த இளம் பெண்ணின் பாவாடையைச் சற்றுக் கீழே தளர்த்திவிட்டு அவள் வயிற்றைச் சாடையாக அழுத்திப் பரிசோதித்தார்.

உடனே அந்த இளம் பெண்ணை ஊடுருவிப் பார்த்தார்.

அந்த டாக்டர் ஒரு ஆங்கிலேயன் முப்பது வயதிருக்கலாம்.

‘உனது வயிற்று நோ….’ டாக்டர் தான் வந்தததைச் சொல்லாமல் தாயையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார்.

‘தாயே…’ டாக்டர் அமைதியான குரலில் தாயை விழித்துப் பார்த்தார்.அந்தத் தாய், டாக்டர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தில் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

அந்தத்தாய்க்கு நாற்பது வயதிருக்கலாம்.தாய்மையின் கனிவு முகத்தில் பிரதி பலிக்கிறது.மகளின் தலையைத் தடவுவதிலிருந்து அவள் பாசம் வெளிப்படையாகத் தெரிகிறது.

டாக்டர் தயக்கத்துடன் தனக்கு முன்னிருக்கும் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

‘அம்மா உனது மகள் தாயாகப் போகிறாள்,அவளின் வலி பிரசவ வலி.முதற்பிள்ளை என்று நினைக்கிறேன். பிரசவ வேதனை இரண்டு மூன்று நாட்களுக்குத்; தொடர்வது சாதாரணம்’

‘டாக்டர் என்ன சொல்கிறீர்;கள்?’ அந்தத்தாய் அலறினாள். மகளைத் தடவிக் கொண்டிருந்த கைகளை அகற்றி விட்டுத் தன் மகளை ஒரு பேயைப் பார்ப்பதுபோற பார்த்தாள்.தாயின்; கண்கள் அகல விரிந்து, கன்னங்கள் வெளுத்து விட்டது.

‘என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?’ தாயின் குரல் நடுங்கித் தடுமாறியது.

‘அம்மா.உனது மகள் கர்ப்பமாகவிருக்கிறாள்’

‘டாக்டர் அவளுக்கு இப்போதுதான் பதினைந்து வயது ஆகியிருக்கிறது’

அந்தத் தாயின் முகம் சட்டென்று வெளுத்தது.மூச்சு வாங்கியது. அவளுக்கு இருதயம் படபடவென அடிக்கும் என அந்த டாக்டர் புரிந்து கொண்டார்.

‘பருவமடைந்த பெண்கள் பன்னிரண்டு வயதிலும் தாயாகலாம்’டாக்டர் முணுமுணுத்தார்.

பிரசவ வேதனையில் மகள் துடிக்க,அவளின் தாய் சட்டென்று சந்தித்த அதிர்ச்சியான அவமானத்தால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கியழுது கொண்டிருந்தாள்.

மகளின் பிரசவவேதனையின் தவிப்பு உயர்ந்த குரலில் வெடித்துச் சிதறியது. அவளைப் உடனியாகப் பிரசவ வார்ட்டுக்கு அனுமதிக்க ஆயத்தம் செய்தார் டாக்டர்.

என்ன செய்வது என்று தெரியாத தவிப்பு அந்தத் தாயின் முகத்திற் பரவிக் கிடந்தது.

வானத்திலிருந்து எதிர்பாராத இடிவிழந்த அதிர்ச்சி அந்தத்தாயின் முகத்தில் பரவிக்கிடந்தது.சாதாரண வயிற்று வலி என்று அழுத மகளை வைத்தியசாலைக்குக்கொண்டுவந்த பதினைந்து வயது, மகள் தனக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுத் தரப்போவதைக் கேட்ட அதிர்ச்சி அந்தத் தாயைத் திக்கு முக்காடப் பண்ணியிருந்தது.

‘அம்மா,உங்களின் மகளின் நிலை சரியில்லை. பன்னீர்க்குடம் உடைந்து,நீர் வெளியேறி அவளின் பிரசவ வாயில் உலர்ந்து கொண்டிருக்கிறது.அவளுடைய நோவும் பிள்ளையை வெளியே கொண்டுவருமளவுக்கு பெரிய வலிமையாயில்லை. அவளின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் நாடித்துடிப்பும் சரியாகவில்லை.பிரசவத்தைத் துரிதப்படுத்த ஊசி போடப்போகிறேன்.அந்த முடிவுக்கு, நீங்கள் சம்மதம் என்று கையெழுத்துப் போடவேண்டும்’.டாக்டர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அந்தத் தாய் அழுதுகொண்டேயிருந்தாள்.

‘டாக்டர்,எனது கணவருக்கு இது தெரிந்தால் என்னைக் கொலை செய்துவிடுவார்’அந்தத்தாய் மனம் வெடித்தழுதாள்.

‘அம்மா. காலம் கடத்தினால் உங்கள் மகளின் நிலை மிகக் கஷ்டமாகிவிடும்,எப்போதிருந்து இரத்தம் போகத் தொடங்கியதோ தெரியாது,அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறினால் அவளுக்கு இரத்தம் கொடுக்க வேண்டி வரும்’ அவரின் குரலில் அவசரம்;.

‘அவளைச் சாகவிடுங்கள் டாக்டர்’ தாயின் குரல் நடுங்கியது.ஒரு கொஞ்ச நேரத்துக்கு முன் பாசத்துடனும் பரிதாபத்துடனமு; தன் மகளின் தலையைத் தடவிக் கொண்டிருந்த அந்தத்தாய் ஆத்திரம் வெடிக்கச் சொன்னாள்.

மகளிருந்த பக்கத்தையே பார்க்காமல் அந்தத்தாய் வெடித்துக்கொண்டிருந்தாள்.

அவள் முகத்தில் அவமானம் பரவிக் கிடந்தது.

‘உங்கள் மகள் பதினைந்து வயதுப் பெண் அவளின் உயிரைக்காப்பாற்ற நாங்கள் கொடுக்கவிருக்கும் சிகிச்சைக்குக் கையெழுத்து கொடுப்பது சட்டப்படி அது உங்களின்கடமை’. டாக்டர் கடுமையாகச் சொன்னார்.

மகளின் வேதனைக் குரல் அந்த அறையை நிரப்பியது.இரண்டு தாதிகள் வேதனையாற் துடிக்கும் அந்தப் பெண்ணுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்தத்தாய் மகளின் நிலைபற்றி விரிவாக ஏதும் விரிவாகச் சொல்லாவிட்டாலும்,மகளின் கர்ப்பம் பற்றி அவளுக்கு இந்த வினாடிவரை தெரியாததும், தெரிந்துகொண்டபின் வந்த ஆத்திரத்தின்,அவமானத்தின் தொனியும் அவள் நடவடிக்கையில் தெளிவானது.

‘அம்மா, இந்த நேரம் கோபம் காட்டிக்கொண்டிருக்கும் நேரமல்ல.இரு உயிர்கள் பிழைக்க உதவி செய்யும் நேரமிது’ ஒரு நேர்ஸ் அந்தத்தாயின் அருகில் வந்து அன்பாகச் சொன்னாள்.

‘இரண்டு சனியனும் இறந்து தொலையட்டும்’ அந்தத்தாய் கத்தினாள்;.

‘உங்களுக்குத் தெரியும்,பிரசவ வேதனை பெண்களாற் தாங்க முடியாத வேதனை என்று.’ பக்கத்திலிருந்த மற்ற நேர்ஸ் சொன்னாள்.

‘நாங்கள் கவுரமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள்….இவள்…இந்தக் கேடுகெட்டவள் எனது வயிற்றிற் பிறந்ததற்காக வேதனைப் படுகிறேன்’ அந்தத் தாய் அழுது கொண்டு டாக்டர் காட்டிய பத்திரத்தில் கையெழுத்து வைத்தாள்.

மூன்று நாட்களாகி விட்டன.

பதினைந்து வயதுப் பெண்ணுக்கு மூக்கும் முழியுமான ஒரு அழகிய ஆண் குழந்தை. அவள் தனது முலையைச் சூப்பித் தன் பசியாறும் குழந்தையை வைத்த கண் வாங்காமல் ஏக்கத்துடன் பார்த்தாள்.

எல்லாம் கனவில் நடப்பதுபோல் நடக்கின்றன.

வாயாற் பால்வழிய அந்தப் பிஞ்சு அவள் முலையை உறிஞ்சி உறிஞ்சி எடுக்கிறது.

அவளுக்கு மாhர்பகங்கள் வலிக்கின்றன.முலையை எப்படி அந்தப் பிஞசுக் குழந்தையின் வாயில் வைக்கவேண்டும் என்று கூட அவளுக்குத் தெரியாமல் முலைக்காம்பின் நுனியை மட்டும்; குழந்தையின் வாய்க்குள் திணித்ததால் முலைக்காம்பு புண்ணாகி இரத்தம் வருகிறது.அந்த வலி தாங்கமுடியாததாகவிருக்கிறது.

கால்களை மடக்கவோ முடக்கவோ முயன்றபோது,குழந்தை வர வழிவிட வெட்டிய பெண்ணுறுப்பில் போட்டதையல்கள் பிரிந்து வெடிப்பதுபோல் வலி தந்தது.

அவள் கண்களில் நீர் வழிந்தது.

ஆங்கில நாட்டிற் பிறந்த இந்தியப் பெண் அவள்.தாய் தகப்பனால் அன்பாகவும் அடக்கமாகவும் வளர்க்கப் பட்ட அருமை மகள்.

இன்று?

அந்த இளம் தாய் தனது மூன்று நாள்வயதுக் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டபோது, அவள் விரும்பாத பல விடயங்கள் அவள் மூளைக்குள் முட்களாய்க் குத்தின.

அம்மாவின் தமக்கையின் மகன் ஸ்கொட்லாந்திலிருந்து லண்டனுக்கு விடுதலைக்கு வந்திருந்தபோது ‘களங்கம்’ தெரியாமற் பழகியதன் விளைவா இது?

ஓருகோடை விடுமுறைக்கு,அவன் ஒன்றரை மாத விடுமுறையில் சின்னம்மா வீட்டுக்கு வந்து நின்றிருந்தான்.

அவளுக்குப் பதின்நான்கு வயது. அவனுக்குப் பதினெட்டு வயது. வித்தியா வயதுக்கு வந்து ஒன்றிரண்டு மாதங்களேயாகியிருந்தன. அவளுக்கு இதுவரை தெரியாத என்னவெல்லாமோ ‘புதிய விளையாட்டெல்லாம்’ அவளுக்கு அவன் காட்டினான்.

விடுமுறை முடிய அவன் தனது ஸகொட்லாந்து வீடுதிரும்பியபோது,அவன் ‘காட்டிய புதிய விளையாட்டுகள்’; பற்றி அவள் புரிந்து கொள்ளத் தெரியவில்லை. ‘ஆண்களின் விளையாட்டுக்கள்’ இப்படிப் பலவிதம் என்று அவளுக்குத் தெரியாது.தாய் தகப்பன் அவளை உலகம் தெரியாமல் வளர்த்திருந்தார்கள்.

குழந்தை தூங்கி விட்டது.

அவள் பெற்ற பிறவியை உற்றுப் பார்த்தாள்.’அவனின்’ மூக்கும் வாயும் அந்தக் குழந்தைக்கு ‘அவனின்’ முத்திரைகளாய்ப் பதிந்து கிடந்தன.அவளின் இதழ்கள் முல்லைமலர்போர் அழகானவை, என்று ‘அவன்’ அவளிடம் விளையாடும்போது கிசுகிசித்திருக்கிறான்.குழந்தை தனது நித்திரையில் தனது வாயைச் சப்பிக்கொண்டபோது, அவளுக்கு அவனின் வார்த்தைகள் ஞாபகம்; வருகின்றன.

கடந்த மூன்று நாட்களாகத் தாய் தகப்பன் யாரும் அவளை வந்து ஹொஸ்பிட்டலில் பார்க்காமல் அவள் தனிமையில் வாடுகிறாள். குழந்தை பிறந்தபோது அவள் தாய் தனது வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுது, மகளைத் திட்டித் தீர்த்தாள்.

‘எந்த கேடுகெட்ட நாயிடம் உனது பெண்மையைப் பறிகொடுத்துவிட்டு இப்படி மானம் கெட்டுப்போனாய்?’

என்று திட்டித் திட்டிப் பிரசவவேதனையுடன் துடித்த மகள் வித்தியாவைக் கண்டபாட்டுக்கு அடித்தாள்.அதைக் கண்ட நேர்ஸ் வந்து தடுத்திருக்காவிட்டால் அங்கு ஒரு கொலையே நடந்திருக்கும்.

பதின்மூன்று வயதுக் கடைசியில் பருவமெய்தியவள். புதின்நான்கு வயதில், வீட்டுக்கு விருந்தாளியாக வந்த, ஒன்றை விட்ட தமயனுடன் ஓடிப் பிடித்து ஒளித்து விளையாடியபின் தனது உடம்பில் நடந்த மாற்றங்களைப் புரியக்கூடத்தெரியாத அப்பாவி அவள்.

பருவமடைந்தபோது வந்த இரத்தம் அதைத் தொடர்ந்த சிலமாதங்களில் கொஞ்சம் கொஞ்சமென்றாலும் வந்ததும் ஒன்றை விட்ட தமயனின் ‘விளையாட்டுக்குப் பின் ஒரேயடியாக நின்றதும் அசாதாரணமான விடயம் அல்ல என்ற அறிவுகூட வராதவள் அவள். அதைப்பற்றிக் கவலையே படவில்லை.சிலமாங்கள் தீட்டு வராததால் அவள் பயப்பட்டாள்.

யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. தாயிடம் சொல்லத் தைரியமில்லை. தகப்பனுக்குத் தெரிந்தால் கொலை விழும் என்று புரியத் தொடங்கியதும் அவள் நடுங்கியாள்.

இன்று?

அவளைப் பார்க்க,உற்றார் உறவினர் யாரும் வராததால்,அந்த ஹொஸ்பிட்டல் நிர்வாகம் சோசியல் சேர்விசுக்கு இவள் நிலை பற்றி அறிவித்தது. அதைத் தொடர்ந்து வித்தியாவைப் பார்க்க ஒரு சோசியல் சேர்விஸ் பெண்மணி வந்தாள்.அவள் ஆசிய இனத்தைச் சோர்ந்தவள்.

முன்னெற்றியை ஒட்டித் தெரியும் நரைமயிரும், மூக்குக் கண்ணாடியுடனும் வித்தியாவைப் பார்க்க (விசாரிக்க) வந்த அந்த உத்தியோகத்தர்,’ ஏன் உன்னைப் பார்க்க யாரும் வரவில்லை?’

என்று விசாரித்தாள்.

வித்தியாவுக்கு மறுமொழி தெரியவில்லை. தேம்பி அழத் தொடங்கி விட்டாள். மூன்று நாட்களுக்கு முன் பிறந்த தனது பிஞ்சுக் குழந்தையை அணைத்துக்கொண்டழும் அந்த இளம்பெண்ணை அன்புடன் பார்த்தாள் அந்த சோசியல் வேர்க்கர்.

‘வித்தியா, உனது குடும்பத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா?’

அந்த மாது அன்புடன் கேட்டாலும், அந்தக் குரலிற் தொனித்த உத்தியோக தோரணை அவளைப் பயப் படுத்தியது.

‘எனது பெயர் வித்தியா. எனது வயது பதினைந்து.எனக்கு இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள்.நான் பாடசாலைக்குப் போவதைத் தவிர வெளியிடங்களுக்கு ஒருநாளும் போனது கிடையாது,அதற்கு அனுமதியும் கிடையாது’ வித்தியா ஏதோவெல்லாமோ சொல்லிக்கொண்டு போனாள்.

அவள் குரல் நடுங்கத் தொடங்கி விட்டது.

‘ உனது காதலனின்…உனது நண்பனின்…அதாவது உனது குழந்தையின் தகப்பனின் பெயர் என்ன?’அந்த உத்தியோகத்தர் இப்படிக் கேட்டதும் வித்தியா வாய்விட்டழத் தொடங்கி விட்டாள்.

‘நான் அவனது பெயரைச் சொன்னால் அவன் இறந்துவிடுவான் என்று எனக்குச் சொன்னான் அவன் செத்தால் அவனின் தாயும் செத்துப்போவாளாம் என்று சொன்னான்’ அழுதபடி மறுமொழி சொன்னாள் வித்தியா.

வித்தியா, கட்டுப்பாடாக வளர்க்கப் பட்டு யாரோ ஒருத்தனால் ஏமாற்றப்பட்ட அப்பாவிப் பெண் என்பதை அந்த உத்தியோகத்தர் புரிந்து கொண்டாள். பரிதாபத்துடன் அந்த அபலையான இளம் பெண்ணை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘யார் உதவியுமில்லாமல் இந்தக் குழந்தையை எப்படிப் பாதுகாக்கப் போகிறாய்?’ சோசியல் சேர்விசிலிந்து வந்து மாது வித்தியாவைக் கேட்டாள்.

வித்திய மறுமொழி சொல்லவில்லை.

‘வித்தியா என்றால் ஞானம் என்று அர்த்தம் என்று உனக்குத் தெரியுமா’ அந்த மாது வித்தியாவைப் பேசவைக்கும் தோரணயுடன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

வித்தியாவின் மவுனம் மறுமொழியாகியது.

தனக்குப் பிள்ளை வயிற்றில் வந்தது,பிறந்தது, இப்போது தனது அருகிலிருந்து ஒரு சோசியல் வேர்க்கர் கேள்வி கேட்பதெல்லாம் அவளுக்கு நம்ப முடியாத விடயங்களாகவிருக்கின்றன.

வித்தியா பேயடித்த பெண்மாதிரி அந்த உத்தியோகத்தரைப் பார்த்தாள்.

‘உனக்கு வயது பதினாறுகூட இல்லை. அப்பா,அம்மா உதவியும் கிடையாது. உன்னையும் இந்தக் குழந்தையையும் நீ தனியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா?’

வித்தியாவிடமிருந்து எந்தப் பதில்களும் இல்லை. அந்த உத்தியோகத்தர் மாது தனது பைலில் ஏதோ எழுதிக்கொண்டீ போனாள்.

அடுத்த கட்டிலில், வித்தியாவை விட ஒன்றிரண்டு வயதான கறுப்பு இள இளம் தாயை, அவளின் தாய் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

அவர்களின் பேச்சிலிருந்து அந்தப் பெண்ணும் வித்தியாமாதிரித் திண்டாடும் ஒரு அபலை இளம் தாய் என்று தெரிந்தது.

‘குழந்தையைப் பற்றிக் கவலைப் படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்,உன்னையும் உனது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். நீ எப்படியும் படிப்பைத் தொடரப்பார்’

அந்தக் கறுப்புத்தாயின் பாசமான பேச்சு,அன்போ ஆதரவோ கொடுக்க யாருமில்லாமற் தவிக்கும் வித்தியாவின் கண்களில் நீரை வரவழைத்தது.வித்தியா தனது தாயைக் கண்டே மூன்று நாட்களாகின்றன.

இன்னுமொரு கட்டிலில் ஒரு இளம் ஆசியத் தம்பதிகளின் தங்களின் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கட்டிலைச்சுற்றி எத்தனையோ உற்றார் உறவினர்கள். குழந்தையின் அழகைப் பற்றிப் புழுகிக்கொண்டிருந்தார்கள்.

இந்தத் தம்பதிகளில், மனைவியான பெண் அவளது கணவனை விட இளமையாகத் தெரிந்தாள். கணவனைக் கொஞ்சம் அதட்டலாகப் பேசுவதை வித்தியா அவதானித்திருக்கிறாள்.

வித்தியாவுக்கு முன்னாலிருந்த கட்டிலில் குழந்தையுடனிருக்கும் தாய் அவள் கணவன் வந்தால் அவனை ஏறிட்டுப் பார்ப்பதே குறைவு ஒருத்தரை ஒருத்தர் ஏனோ தானோ என்று ஒருத்தரை ஒருத்தர் நடத்திக் கொள்கிறார்கள்.குழந்தை பெண்குழந்தையாயிருக்கலாம், அவர்களுக்கு அது பிடிக்காமலிருக்கலாம்?

அதைத் தாண்டியிருக்கும் கட்டிலில் உள்ள தாய் ஒரு வெள்ளைக்கார இளம் பெண்.அந்தத் தம்பதிகள்,அடிக்கடி நேர்சைக் கூப்பிட்டு ஏதோ பல கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற பயம் அவர்களின் முகத்தில் ஒட்டிக் கிடந்தது.

வித்தியா தனது குழந்தையை உற்றுப் பார்த்தாள்.தன்னைப் பெற்ற தாயின் வாழ்க்கை தலைகீழானதை அறியாத அந்த இளம் குருத்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

வித்தியா தனது கண்களை மூடிக்கொண்டாள். அவள் தலை விண் விண் என்று வலித்தது. அவளின் இளம் முலைகளும் வலித்தன.

கால்களுக்கு இடையில்,பெண்ணுறுப்பிற் போட்ட தையல்கள் உயிரை வதைக்கும் வேதனையைக் கொடுத்தன.

அவள் தன்தலையைத் திரும்பி ஒருதரம் தன்னை இவ்வளவு வேதனைக்கும் ஆளாக்கிய தனது குழந்தையைப் பார்த்தாள். அந்தக் குழந்தைக்கு இருபதுவயதாகி,உலகத்தை வலம் வரும்போது வித்தியாவுக்கு முப்பத்தைந்து வயதாக இருக்கும்.எனது அப்பா யார் என்று அவன் கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாள்?

‘எனது ஒன்றை விட்ட தமயன் உனது தகப்பன் என்று துணிவாக அவளாற் சொல்ல முடியுமா’?

அவள் நினைவின் வேதனை அவளின் உடலின் வேதனையுடன் போட்டி போட்டது.உடம்பில் சூடுபரவி தலையும் தாங்கமுடியமால் இடித்தது.

அன்று பின்னேரம் வித்தியாவின் தாய் வந்திருந்தாள். வித்தியா எப்படியிருக்கிறாள்? குழந்தை எப்படியிருக்கிறது? என்று ஒரு கேள்வியும் அந்தத் தாய் கேட்கவில்லை.

‘ மூதேவி, சண்டாளி, தேவடியாள், குடும்பத்தைக் கெடுக்கவந்த நாய்’ என்று விடாமற் திட்டிக் கொண்டிருந்தாள்.

குழந்தையைக் காட்டி,’ இந்தச் சவத்தை ஏன் சாக்காட்டாமல் வைத்திருக்கிறாய்’? என்று திட்டினாள்.தனது பாட்டியால்,’சவம்’ என்று திட்டப்பட்ட அந்தப் புதிய பிறவி உலகம் தெரியாது தூங்கிக் கொண்டிருந்தது.

தாய் பேசிக் கொண்டிருக்கும்போது, பெரிய மீசை வைத்த ஒரு தடியன் வந்தான்.

அவன் யார்? ஏன் வந்தான் என்று தெரியாமல் வித்தியா அவனைப் பார்த்தாள்.

‘ஏய் முண்டமே அப்படி என்ன பார்க்கிறாய்? எவனோடோ படுத்து இந்தப் பிணத்தைப் பெற்ற உனக்குச் ஊர்; சேர்ந்து செருப்பால அடிக்கவேணும், அப்படி என்னடி பார்வை?’ தாய் வெடித்தாள்.

அந்த மீசைக்காரன் வித்தியாவைப் பார்த்துச் சிரித்தான்.அவளைத் தன் உடமையாகப் பார்த்த சிரிப்பது.வித்தியாவுக்கு அவனைப் பார்க்க அருவருப்பு வந்தது.

‘கவலைப்படாதே, நான் உன்னையும் உனது பிள்ளையையும் கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன்’

அவன் இளித்தபடி சொன்னான்.

வித்தியாவுக்கு அடிவயிற்றில் ஏதோ பூச்சி நெளிவதுபோலிருந்தது.

‘என்னடி அப்படி முளிசுகிறாய்,உன்ர முண்டத்தை யாருடைய கையிலோ கொடுக்க அவர் உதவி செய்ய வந்திருக்கிறார்’ வித்தியாவின் தாய் கர்ச்சித்தாள்.

வித்தியா வழக்கம்போல் மவுனமாகவிருந்தாள்.

‘நான் உன்னை வீட்டுக்குக் கொண்டுபோக முடியாது.அப்படிச் செய்தால், உன்னையும் உனது முண்டத்தையும் என்னையும் கொலை செய்வதாக உனது தகப்பன் சொல்லியிருக்கிறார்.இந்த மனிதன் உனது முண்டத்திற்கு ஒரு வழி செய்ததும் உன்னை எனது சகோதரி வீட்டுக்குக்; கொண்டு போகிறேன்,அவளும் அவளது குடும்பத்தினரும் உன்னை அன்போடு பார்த்துக் கொள்வார்கள். நீ அவர்களுடன் ஸ்கொட்லாந்திலிருந்தே படிப்பைத் தொடரலாம்’ வித்தியாவின் தாய் பேசிக் கொண்டேயிருந்தாள்.’

தான் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையா என்று வித்தியாவால் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது.

‘ஸ்கொட்லாந்துக்காரருக்கு,உனக்கு அப்பெண்டிக்ஸ் ஒப்பரேசன் என்று சொல்லியிருக்கிறேன். குழந்தை பற்றி மூச்சு விடாதே.அத்தோட உனக்கு நீ லண்டனில் படிக்கிற பள்ளிக் கூடத்தில அவ்வளவு விருப்பமில்ல என்றும் சொல்லியிருக்கிறன். நீ வீட்டுக்குப் போகலாம் என்று டொக்டர் சொன்னதும் நான் மற்ற விடயங்களைப் பார்க்கிறேன்’தாய் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடிவு கண்ட தொனியில் பேசிக் கொண்டிருந்தாள்.

மீசைக்காரன் அருகில் வந்து,’ எப்படி சுகம்?’ என்று கேட்கும் சாட்டில் வித்தியாவைத் தடவிப் பார்த்தான்.

தாய் தெரிந்தும் தெரியாதமாதிரி நடந்து கொண்டாள். வித்தியாவை யார் தொட்டாலும் பரவாயில்லை என்ற பாவனை!

தாய் சொல்ல வந்த விடயங்களைச் சொல்லி விட்டு,ஒரு புயல் வந்தமாதிரி வந்து விட்டுப் போய்விட்டாள்.

அன்றிரவு, வித்தியாவுக்குச் சரியான காய்ச்சல்.பால் வலியால் முலைவேறு கனத்து வேதனை தந்தது.

அடுத்த நாள்; டாக்டர் வந்து அவளைப் பார்த்தார்.இவளுக்கு அப்போது கடுமையான காய்ச்சல் காரணம் கண்டு பிடிக்க இரத்தப் பரிசோதனை செய்தார்கள்.

யாருடைய உடம்புக்கோ ஏதோவெல்லாம் நடப்பதுபோன்ற பிரமையில்,தனது உடலும் மனதும் மரத்துப் போனமாதிரி வித்தியா வெறித்துப் படுத்திருந்தாள்.

குழந்தை அழுதபோது முலையை அந்தச் சிசுவின் வாயில் வைத்தாள். குழந்தை வயிறு நிறையத்தன் தாயின் பாலை உறிஞ்சித் தள்ளியது.

அன்றிரவு, குழந்தைக்கும் காய்ச்சல்!

நடுச்சாமத்தில் வித்தியாவுக்கு மருந்து கொடுக்க வந்த தாதி,வித்தியா தனது குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கண்டதும் பதை பதைத்து விட்டாள்.’உனக்குக் காய்ச்சல் இருக்கும்போது குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது என்று தெரியாதா’ தாதி வெடித்தாள் வித்தியா வழக்கம்போல் ஒன்றும் புரியாமல் விளித்தாள்.

‘ உனது உடம்பில் கிருமி; பரவியிருக்கிறது என்று இரத்தப் பரிசோதனை றிப்போர்ட் வந்திருக்கிறது. உனக்கு அந்தக் கிருமிகளை அகற்ற மருந்து கொடுக்கப் போகிறோம். பிள்ளை பிறக்கப் பல மணித்தியாலங்களுக்கு முன்னரே பன்னீர்க்குடம் உடைந்து ஒழுகிக் கொண்டிருந்ததாலும், இரத்தம் போய்க் கொண்டிருந்ததாலும் கிருமிகள் தொற்றியிருக்கலாம்.’

அந்தத் தாதி சொன்னது வித்தியாவுக்கப் பாதி புரிந்தது.

‘ காய்ச்சல் நேரத்தில் குழந்தைக்குப் பால் கொடுக்கக் கூடாது’ அந்தத் தாதி வித்தியாவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்

‘எனக்குக் காய்ச்சல் இருக்கும்போது பிள்ளைக்குப் பால் கொடுத்தால் என்ன நடக்கும்’? வாழக்கையில் முதற்தரமாக ஒரு உருப்படியாக கேள்வியைக் கேட்பதுபோல் வித்தியா கேட்டாள்.

‘உனது இரத்தத்தில்; பரவியிருக்கும் கிருமிகள்,உனது பாலின் மூலம் குழந்தையின் இரத்தில் பரவும். உனக்கே நூற்றி மூன்றுக்கு மேல் காய்ச்சலடிக்கிறது.இப்போதுதான் பிறந்த குழந்தைக்கு அதைத்தாங்கும் எதிர்ப்புத் தன்மை மிகக் குறைவு. இந்தப் பச்சை மண்ணுக்குகு; கிருமி தொற்றினால் பாதிப்பு சொல்லமுடியாது.இந்தப் பொல்லாத உலகத்திற்கு வந்த நான்கே நாளில் அந்தப் பிஞ்சுக்கு ஏன் கொடுமை செய்யவேண்டும, குழந்தைக்குக் கொடுக்க நான் புட்டிப் பால் கொணர்ந்து தருகிறேன்’

தாதி பொரிந்து தள்ளி விட்டுப் போய்விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் போத்திலில் குழந்தைக்குப் பால் வந்து கொடுத்தாள்.

வித்தியா கண்களை மூடிக்கொண்டு யோசனை செய்தாள்.

மீசைக்கரனின் காமச் சிரிப்பு நினைவிற் தட்டியது. தாய்ப்பாலில்லாமல்,புதிதாகப் போத்தல் பால் குடித்ததாலோ என்னவோ, வித்தியாவின் குழந்தை உடம்பை நெளித்து அழத் தொடங்கி விட்டது.

இன்னுமொரு தாதி வந்து ‘குழந்தைக்கு அம்மாவின் அணைப்புத் தேவைப்படுகிறதாக்கும’; என்ற சொல்லி விட்டுக் குழந்தையைத் தூக்கி வித்தியாவின் அணைப்பிற் கிடத்தினாள்.

தாயிடமிருந்து வந்த பாலின்; மணத்தை மோப்பம் கண்ட குழந்தை வழக்கம்போல் தாயின் முலையைத் தேடியது.

இரவு நிசப்தத்தில்,சில தாய்மார் சிலர் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் எந்தத் தாதியும் அந்த வார்ட்டின் பக்கம் வரவில்லை. வித்தியா,அவளுக்குக் கொடுத்த மருந்தை எப்போதோ டொய்லெட்டில் போட்டு விட்டாள். காய்ச்சல் கூடிக்கொண்டேயிருந்தது.குழந்தை பாலுக்கு முலையைத் தேடியபோது, வித்தியா தனது குழந்தையைப் பாசத்துடன் அணைத்துத் தன் பாலைக் கொடுத்தாள். அந்தப் பிஞ்சு தாராளமாகக் குடித்துத் தள்ளியது. வித்தியாவின் கண்களில் நீர் ஆறாக வழிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் டொக்டர் வந்தபோது,குழந்தைக்கும் சரியான காய்ச்சல் அத்துடன் வாந்தியும் எடுத்தது. குழந்தை அளவுக்கு மிறிய காய்ச்சலால் துவண்டு கிடந்த மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது.

குழந்தைக்கும் இரத்தப் பரிசோதனை செய்யப் பட்டது.அன்டிபயடோடிக் கொடுக்கத் தொடங்கினார்கள், பால் கொடுக்காமல் சேலைன் ட்ரிப் கொடுத்தார்கள்.

அன்று பின்னேரம் குழந்தைக்குக் காய்ச்சலின் கொடுமையால் வலி வந்தது.வலி வந்து குழந்தையின் கை கால்கள் விறைத்தபோது வித்தியா வாய்விட்டலறினாள்.

‘சிறு குழந்தைகளுக்குப் பெரிய காய்ச்சல் வந்தால், மூளை அளவுக்கு மீறிச்சூடாகி வலியைக் கொண்டுவரும்’ டாக்டர் விளக்கம் சொன்னார்.

எட்டுமாதத்தில் கிட்டத்தட்ட ஐந்து இறாத்தல் எடையிற் பிறந்த வித்தியாவின் குழந்தை, அளவுக்கு மீறிய காய்ச்சலால் உயிருக்குத் திணறியது.

எட்டு மாதத்தங்களுக்கு முன், தங்கள் வீட்டுக்க விருந்தினராக வந்திருந்து ஒன்றை விட்ட தமயனின் முகம் குழந்தையின் முகத்தில் படம் காட்டியது. அவன் இரவிற் தந்த முத்தம் இப்போது அவளுக்கு வலித்தது.

அப்பாவித்தனமாக வளர்ந்தவளுக்கு அவனின்’ விளையாட்டைப்’ புரிந்து கொண்டபோது அவள் நான்குமாதக் கர்ப்பிணி!

வித்தியா பதின்மூன்று வயதில் பருவமடைந்தவள். ‘பீரியட் ஒழுங்காக வரவில்லை’ என்று வித்தியா சொன்னபோது, ‘அது சிலவேளை அப்படித்தான் இருக்கும்’; என்றாள் வித்தியாவின் தாய்.

பதினான்கு வயதின் நடுப்பகுதியில்,ஸ்கொட்லாந்திருந்து, ஒன்று விட்ட தமயன் விடுமுறைக்கு லண்டன் வந்திருந்தான். தம்பிகளுடன் களங்கமின்றி விளையாடிய வித்தியா ‘அவனுடனும்’ பழகினாள்

நான்கு மாதம் பீரியட் வரவில்லை. இளமுலைகள் பருத்துக் காணப்பட்டன. கர்ப்பத்தால் கர்ப்ப்பை வீங்கும்போது முலைக்காம்புகள் வீரித்தன.

குளிக்கும்போது குனிந்து பார்க்கும்போது பெண் உறுப்பு தெரியாமல் வயிறு வளர்ந்து கொண்டு வந்தது. அவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பாடசாலையால் வந்ததும், யாருடனும் அதிகம் பேசாமற் தன் அறையில் அஞ்ஞாத வாசம் செய்யத் தொடங்கியதும் ‘மகள் படிப்பில் கவனம் செலுத்துவதாகப்’ பெற்றோர் பூரித்தனர். வயதுக்குரிய நாகரீக உடையணியாமல் வயிறு தெரியாமல்,தொள தொளவென்று உடுப்புக்கணை வித்தியா அணிந்தாள்.அதைப் பார்த்த தாய், ‘இளவயதுப் பெட்டைகள் தங்களுக்குப் பிடித்தமாதிரி உடுக்கிறார்கள்’ என்று சொன்னாள்.

தனது இரகசியத்தைக் காப்பாற்ற எட்டு மாதங்கள் நரகவேதனையனுபவித்தாள் வித்தியா. தாய் தகப்பனுக்குத் தெரிந்தால் தன்னைக் ‘கவுரவக்’கொலை செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும்.

இப்போது?

அடுத்த நாள் வித்தியாவின் குழந்தை,வைத்தியர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலிக்காமல் இறந்து விட்டது.

அளவுக்கு மீறிய காய்ச்சலால்,குறை மாதத்திற் பிறந்த குழந்தையின் மூளையிற் தாக்கம் ஏற்பட்டு அதனால் வலி வந்து குழந்தை இறந்து விட்டது என்று வித்தியாவுக்கு விளக்கம் சொன்னார்கள்.

இறந்த தன் குழந்தையை அணைத்துக் கொண்டு வித்தியா கேவியழுததைப் பார்த்வர்களின் கண்களில் நீர் துளித்தது. காய்ச்சலாக் இருக்கும்போது வேண்டுமென்றே தனது குழந்தைக்குப் பால் கொடுத்த ஞாபகம் அவளை நெருப்பாய்ச் சுட்டது.

வித்தியா,சூனியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உலகம் தெரியாமல் வளர்ந்த பதினான்கு வயதுப் பெண்ணான அவள், தனது குழந்தையையே கொலை செய்யுமளவுக்குக் கொலைகாரியாக மாற்றிய உலகத்தை மனதிற்குள் வைதாள்.

‘சனியன் செத்தது நல்லது’ வித்தியாவின் தாய் அவள் காதில் முணுமுணுத்தாள்.

அப்பா,கொஞ்ச நாளைக்கு முகத்தை நீட்டிக் கொண்டிருப்பார் அதன் பின் எல்லாம் சரியாகி விடும். யாரும் சினேகிதிகளின் சகோதரர்களுடன் பழகாதே. படிப்பு முடியவிட்டு அப்பா உனக்கு நல்ல இடத்தில் ஒரு நல்ல இந்துமத வரன் பார்ப்பார்.

வித்தியாவின் தாய் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *