மலரும் உறவுகள்

 

சொல்ல வந்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி. எதிரிக்கு….. யோசிக்க, நினைக்க அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் நாற்காலியில் அமர்ந்தான் நந்தகோபால்.

சற்றுத் தள்ளி…

‘இதற்காகவா இவ்வளவு கஷ்டம், எரிந்து விழுந்தோம், வாழ்க்கையை வீணாக்கினோம்..?’- தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து வெளியே வெறித்தாள் கவுசல்யா .

மனம் பின்னோக்கியது.

அன்றைக்கு விநாயகம் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான்.

“எங்கே போய்ட்டு வர்றீங்க..? “இவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மிரட்டலாய்க் கேட்டு பத்ரகாளியாய் நின்றாள்.

அவன் துணுக்குற்று நின்றான். புரியாமல் பார்த்தான்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில்…”

“என்ன கவுசி..? “திகைப்பாய்க் கேட்டான்.

“பேச்சு வேணாம். பதில் சொல்லுங்க..?”

இவள் குரலில் கடுமை குறையவில்லை.

“அலுவலகம் போய் திரும்பறேன்..!”

“அலுவலகம் விட்டதும் எங்கே போனீங்க..?”

“வீட்டுக்கு வர்றேன். !”

“பொய் ! “வெடித்தாள்.

‘ஆளுக்கு விசயம் விளங்கிவிட்டது. உண்மை தெரிந்து விட்டது.!’- இவனுக்குப் புரிந்தது.

பயம் விளக்கி மார்பை நிமிர்த்திக் கொண்டான்

“யாரவ..? “கவுசல்யா விடாமல் கேட்டாள்.

“எ…என்னோடு வேலை செய்யிறவ…”உண்மையைச் சொன்னான்.

“பேர்..?”

“பூங்குழலி”

“எத்தினை நாளாய்ப் பழக்கம்..?”

“நாளில்லே. வருசம்”

“எத்தினி…?”

“ஒரு வருசம் .”

“இன்னையோட அவளை நீங்க மறக்கனும்”

“முடியாது கவுசி…!”

துணுக்குற்றாள்.

“உங்களுக்குப் பொண்டாட்டி புள்ள வேணுமா, வேணாமா..?”

“எனக்கு எல்லாம் வேணும்”

“புரியல..?!”

“ப…பாவம். அவள் அநாதை ..”இழுத்தான்.

“”நான் செத்துடுவேன் !”

“என்னால அவளுக்குப் பேர் கெட்டுப் போயிடுச்சு கவுசி. என்னை விட்டால் அவளுக்கு வேறு கதி கிடையாது. திருமணமும் நடக்காது. யார் முன் வருவா…?”

“புள்ளைங்களுக்கு விசம் வைச்சுடுவேன் !”

“வேணாம். அதெல்லாம் தப்பு ..”

”அப்போ அவள் சகவாசம், தொடர்பை விடுங்க…”

“தொட்டவளை விடுறது பாவம் கவுசி . சரியோ, தப்போ . அவளையும் இந்த குடும்பத்துல ஒருத்தியா ஏத்துக்கிட்டு வாழலாம் கவுசி”

“இதுதான் உங்க முடிவா..?”

“ஆ…. ஆமாம். !”

எரித்து விடுவது போல் பார்த்தாள்.

“உனக்கும் எந்தவித குறையும் இருக்காது கவுசி…..”

மெளனமாக இருந்தாள்.

”ஒண்ணா கூட இருக்க வேணாம். அவளைத் தனிக்குடித்தனம் வச்சுடலாம். என் சம்பாத்தியம் அவளுக்குத் தேவை இல்லே. என்னைப் போல சம்பாதிக்கிறாள். எந்தவித கஷ்டமும் இருக்காது !”

“ஆக… அவளை விடுறதா இல்லே. உங்க முடிவுல மாத்தமில்லே. அப்படித்தானே..? !”

“அ… ஆமா…”

“அப்போ என் முடிவையும் கேட்டுக்கோங்க. என்னைக்கு நீங்க அவளை விட்டு வர்ரீங்களோ அன்னைக்குத்தான் நானும் என் புள்ளைங்களும் இந்த வீட்டுல அடியெடுத்து வைப்போம். அதுவரைக்கும் என் அம்மா வீட்ல இருப்போம். ! “கோபமாக சொன்னவள்….

அடுத்து இவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமல் அலமாரியைத் திறந்து துணிமணிகளை அள்ளி பெட்டியில் அடைத்தாள்.

அறையில் விளையாடிக்கொண்டிருந்த நிர்மல், விமலை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.

விநாயகம் அவளைத் தடுக்க, எதிர்க்க முடியாமல் அப்படியே சமைந்தான். அசையாமல் நின்றான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கவுசல்யாவிற்குப் பேரதிர்ச்சி.

விநாயகம் தற்கொலை ! என்று சேதி !

அலறி அடித்துக்கொண்டு ஓடினாள்.

அவன் கடைசியாக எழுதி வைத்திருந்த கடிதத்தை நீட்டினார்கள்.

‘அன்பு கவுசல்யாவிற்கு… உன்னை உதறவும் முடியாமல். பூங்குழலியை ஏற்கவும் முடியாமல்…. கோழை. என்னை மன்னித்துவிடு !’படித்தாள்.

உருண்டு புரண்டு அழுதாள்.

“அவளுக்குமில்லாம இவளுக்குமில்லாம இப்படிப் பண்ணிட்டானே பாவி ! கட்டினவள் ஒத்துப்போயிருந்தால்… இந்த நிலை வந்திருக்குமா…? பெண் எதிலும் நிதானிக்கனும். முறியிற மாதிரி இருந்தா விட்டுக் கொடுக்கனும்…”இப்படி பேசினார்கள்.

அது முடிந்து போன கதை.

இப்போது….

எந்த துரோகத்தை இவள் வேண்டாமென்று வெறுத்தாளோ, ஒதுக்கினாளோ.. கணவனுடன் சண்டை போட்டு வாழ்வையே இழந்தாளோ… அந்த அருவருப்பிற்கு இப்போது அடுத்தவன் இவளை அழைக்கிறான்.

“என்ன யோசனை கவுசல்யா ? “நந்தகோபால் சிறிது நேரத்திற்குப் பின் கேட்டான்.

கவுசல்யா பதில் சொல்லவில்லை.

“எனக்கொன்னும் அவசியமில்லே. உனக்கு ஒரு துணை தேவையாய் இருக்குமேன்னு கேட்டேன்.”

இதற்கும் பதில் சொல்லவில்லை.

“உனக்கு விருப்பமில்லேன்னா… வேணாம். தேவை இல்லே. விட்டுடலாம். பின்னால என்னை நீ தினைக்கும் சாதாரண ஜடமாய் வந்துவிட்டுப் போறேன்னு நினைச்சி வருத்தப்படக்கூடாது பாரு. அதனால கேட்டேன். உனக்கு சம்மதம்ன்னா எனக்கும் சம்மதம்.”

கவுசல்யா அவனைத் துணுக்குற்றுப் பார்த்தாள்.

“சத்தியமா நான் எந்தவித தப்பான எண்ணம் , நயவஞ்சகத்தோடும் தினம் உன் வீட்டுப் படி ஏறலை. என் உயிர் நண்பன் விநாயகத்தோட மனைவி மக்கள் என்கிற நினைப்பில்தான் தினம் வந்து உங்களுக்குத் தேவையான உதவிகள் செய்யிறேன். இதுக்காக உன்னிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. நான் இருக்கிறவரைக்கும் என் நண்பனுக்காக இந்த உதவிகள் செய்யவேன். இதுக்காக என்னை யார் எப்படி பேசினாலும் அதைப் பத்தி கவலைப் படமாட்டேன். நீ அதுக்காக கவலைப் பட்டால் வருத்தப்பட்டால் இந்த வீட்டுப் படி ஏற்கமாட்டேன். இது என்னைப் பொறுத்தவரைக்கும் உள்ள நிதர்சனமான உண்மை.”

“அப்புறம்… ஊர் உலகத்துக்குப் பயந்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கஷ்டப்படுறதுனால யாருக்கும் எந்தவித நன்மையையும் இல்லே. இதனால் மனம், உடல் ஆரோக்கியம்தான் கெடும். மனைவி இறந்து மறு வருடம் திரும்புறதுக்குள்ள ஆண் இன்னொரு பெண்ணைத் தேடிக்கலாம், மறுமணம் செய்துக்கலாம் என்கிற நியதி இருக்கும்போது பெண்ணுக்கு அப்படி மறுக்கப்படுறது சமூகம் தந்த சாபக்கேடு.”

இவள் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.

“கவுசல்யா..! நான் காதல் தோல்வியில் காயம் பட்டவன். ஐம்பது வயசான நான் இதுநாள் வரைக்கும் கலியாணம் வேணாம்ன்னு எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காதவன். இன்னைக்கு இறங்கி வந்து கேட்கிறேன்னா உங்க மேல உள்ள பரிவு, பச்சாதாபம். வேணும், வேணாம்ன்னு நீங்க எடுக்கிற எந்த முடிவும் எனக்கு சந்தோசம். ஆனா.. நீங்க எந்த முடிவு எடுத்தாலும் என் நண்பனுக்காக நான் என்னைக்கும் உங்களுக்கு உதவிகள் செய்துக்கிட்டிருப்பேன். இது சத்தியம் ! “சொல்லி எழுந்தான்.

“வர்றேன் ! “சொல்லி வாசல் நோக்கி நடந்தான்.

அதுவரை அமைதியாக இருந்த கவுசல்யா…

“ஒரு நிமிசம் ! “சொல்லி அவனை நிறுத்தினாள்.

நின்றான்.

“நான் மறுமணத்துக்கே சம்மதம். அதுக்கு அச்சாரமாய் உங்க நண்பர் போட்டோவுல பூவை எடுத்து என் தலையில் வச்சு குங்குமமும் விட்டுப் போங்க. நாளைக்கே நல்ல நாள் நாம முறைப்படி பதிவு திருமணம் செய்துக்கலாம்”, சொல்லி பூசை அறையில் இருக்கும் கணவன் புகைப்படத்தின் முன் நின்றாள்.

நந்தகோபால் முகத்தில் திருப்தி. மெல்லிசாய் புன்னகை. 

தொடர்புடைய சிறுகதைகள்
மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி. ''மன்னா !'' அழைத்தான். ''என்ன ? '' நிமிர்ந்தார். ''தங்கள் மனைவி, மக்கள், அந்தப்புரத்தில் ஏதாவது சிக்கல், பிரச்சனையா ? '' ''இல்லை.! ஏன் ? ...
மேலும் கதையை படிக்க...
மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. தலைக்கு இருநூறு ரூபாய் வீதம் ஆறு தங்கைகளுக்கும் மொத்தம் ஆயிரத்து இருநூறு ரூபாய் முழுசாய் தீபாவளி வரிசைப் பணம் கொடுக்க வேண்டும். மணியார்டர் செலவு தனி. கையில் பைசா இல்லை.!! வீட்டில் ஆண் பிள்ளையாய்ப் பிறந்தது பெரிய தப்பு. ...
மேலும் கதையை படிக்க...
உங்களுக்குச் சாமியைப் பிடிக்குமா ? எனக்குப் பிடிக்காது.!! - ஆத்திகமும் நாத்திகமும் எதிரெதிர் துருவங்கள் ஒன்று சேர முடியாத புகைவண்டி தண்டவாளங்கள், இணை கோடுகள். இருக்கு, இல்லை என்று எவரும் நிரூபித்தது இல்லை. இது இப்போதல்ல. ஆதி காலம் தொட்டே அப்படி. இருக்கிறவர்களுக்குக் ...
மேலும் கதையை படிக்க...
பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர், இன்னும் சில முக்கியமானவர்கள். கீழே.... வலப்பக்கம் ராமசாமி, அவர் மகன்கள் ராமு, சோமு, சிவா, சிங்காரம். அவர்களுக்கு நேரெதிர் இடப்பக்கம் கணேஷ். துபாய் ...
மேலும் கதையை படிக்க...
வெகு நாட்களுக்குப் பிறகு..... எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப் பயணம். அன்று என் எதிரில் அமர்ந்திருந்தவன் என் எதிரி.! சம வயது. இன்று அப்படி அமர்ந்திருப்பவர் அப்பாவின் எதிரி. எனக்குப் பிடிக்காதவர். ...
மேலும் கதையை படிக்க...
மந்திராலோசனை!
வரிசைப் பணம்..!
நாத்திகவாதி..!
பங்கு
வேண்டாதவர்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)