கிரகப் பிரவேசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 3,107 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மறுநாள் பொழுது விடிந்தால், ராவ்பகதூர் நரசிம்ம ஐயருடைய வாழ்நாட்களிலேயே முக்கியமான நாள். அந்தத் தினம், அவர் வாழ்க்கைக்கே ஒரு சிகரம் போல் அமைய இருந்தது.

எந்தக் காலத்திலேயோ-சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் யாரும் கேள்விப்பட்டிராத ஒரு தாழ்ந்த இலாக்காவில் ஒரு தாழ்ந்த குமாஸ்தாவாக ஆரம்பித்த நரசிம்மன், இப்போது ராவ் பகதூர் நரசிம்ம ஐயர் ஆகியிருக்கிறார். மயிலாப்பூரில் சொந்தமாகப் பங்களாக் கட்டிக்கொண்டு, அதில் குடியேற இருந்தார்- நாளைக்குப் பொழுது விடிந்தால் கிரகப்பிரவேசம்.

முந்திய இரவு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் அவரே நேரில் நின்று கவனித்தார்; அப்படிக் கவனிக்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்றாலும், தாமே செய்தார். ராவ்பகதூருக்கு ஓடியாடிப் பணிவிடை செய்யப் போதிய ஆட்கள் – ஒரு பிள்ளையும் உள்பட இருந்தார்கள். ஆனால், எல்லாவற்றையும் தாமே செய்தால் தான் திருப்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில், ராவ்பகதூரே வேலைகள் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார். பந்தல் போட்டுத் தோரணம், வாழைகள் முதலியவை கட்டுவது முதல், வைதிக காரியங்களுக்கு ஏற்ற சாஸ்திரிகளாகப் பொறுக்கி எடுப்பது வரையில், விருந்துக்குச் சமையல் திட்டம் போட்டுச் சாமான்கள் சேகரிப்பது முதல், அழைப்பிதழ்கள் அனுப்புவது வரையில், எல்லாக் காரியங்களையும் அவரே முன்னின்று பார்த்தார், பகல் முப்பது நாழிகை நேரமும் ஓடியாடி உழைத்து அலுத்தவர்; இரவிலும் வெகுநேரம் கழித்தே படுக்கை போட முடிந்தது.

உடம்பு அயர்ந்து படுத்தவர், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாரே தவிர , சரியானபடி தூங்க முடியவில்லை. பல தினுசான சிந்தனைகள் அவர் மனசில் புகுந்து குழப்பின. ஓடிக் கொண்டிருந்த எஞ்ஜினைத் திடுதிப்பென்று பிரேக் போட்டு நிறுத்தியது போன்றதோர் உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று. உடம்பையும் மனசையும் என்னவோ செய்தது.

பொழுது எப்பொழுது விடியும் என்று அவர் தம்மையே கேட்டுக்கொண்டார். ‘விடியுமா, விடிந்து விடாதா’ என்றிருந்தது அவருக்கு.

தம்மை அறியாமலே சற்றுக் கண் அயர்ந்துவிட்டார். மணி மூன்றடித்தது தெரியாது. ஆனால், நாலடிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பே விழிப்புக் கொடுத்துவிட்டது. நாலடிக்கும் வரையில், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே யிருந்தார். பிறகு, இனியும் படுத்திருப்பதில் சாரமில்லை என்று எழுந்து, தாம் அப்போது குடியிருந்த வீட்டில் மாடி வெளி வராந்தாவில் ஓர் ஈஸிச்சேரைக் கொண்டுபோய்ப் போட்டுக் கொண்டு, “அப்பாடா!” என்று அதில் சாய்ந்தார்.

வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். வேலைக்காரர்கள் நிஷ்கவலைகளாகத் தூங்கினார்கள். எந்தப் பட்டணம் எப்படிக் கொள்ளைப்போனால் தான் அவர்களுக்கென்ன? ராவ்பகதூரின் சொந்தக்காரர்கள் இருந்தவர்கள் ஒரு சிலரே-முந்திய தினம் அவருடன் ஓடியாடி உழைத்தவர்கள்; அவர்களுக்கு அந்த அலுப்பு! தவிரவும் பொழுது விடிந்தால், மறுபடியும் பூராத் திட்டம் வேலையிருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தூங்காமல் என்ன செய்வார்கள்? மனகவக சங்க காலம்

ஈஸிச்சேரில் சாய்ந்தபடியே, எதிரே நோக்கினார் ராவ் பகதூர் நரசிம்ம ஐயர். இப்போது அவர் குடியிருந்த இந்தச் சிறு வீட்டுக்கு எதிரேதான் இருந்தது. அவர் புதுசாகக் கட்டியிருந்த பங்களா. இருளில் பங்களாத் தெரியவில்லை ; தவிரவும், அதைச் சுற்றிலும் அடர்ந்த தென்னந்தோப்பு இருந்தது. ஒருவிதத்தில் சென்னையில் சிறந்த மயிலாப்பூரில் சிறந்த இடம் அது என்றே சொல்லவேண்டும். பெருமையுடன் இருளில் எதிரே நோக்கியவராக, ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், தமது ஈஸிச்சேரில் வீற்றிருந்தார்.

அவருடைய வாழ்க்கை ஜியார்ஜ் டவுனில் ஏதோ ஒரு சாக்கடைச் சந்தில் ஆரம்பமாயிற்று. சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூரில் கீழண்டைக்கோடி முதலிய இடங்களிலெல்லாம் தங்கிவிட்டு, அவர் தம்முடைய லட்சிய பூமியாகிய மயிலாப்பூரை – அசல் மயிலாப்பூரை அடைந்துவிட்டார். இங்கே அவர் குடியேறி ஐந்தாறு வருஷங்கள் ஆகிவிட்டன. நாளைக்குச் சொந்த வீட்டில் குடிபுக இருந்தார்.

புதுப் பங்களா- ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் கௌரவத்துக்கும் பதவிக்கும் உத்தியோகத்துக்கும் ஏற்ற பங்களா. கட்டிடம் கட்ட மட்டுமே எத்தனையோ ஆயிரக்கணக்காய்ப் பிடித்தது என்று, இந்த விஷயத்தில் கணக்கெடுப்பவர்கள், கணக்கெடுத்திருந்தார்கள். அதைச்சுற்றி அடர்ந்த விசாலமான தென்னந்தோப்பும் தோட்டமும்.

இவ்வளவுக்கும் வேண்டிய பணமெல்லாம் சென்ற ஏழெட்டு வருஷங்களுக்குள்ளாகவே சேர்த்ததுதான் என்பதை ராவ்பகதூர் எண்ணிப் பார்த்தார். அதற்கு முன் அவருக்குச் சம்பளமாகக் கிடைத்துக் கொண்டிருந்த இருநூறு, இருநூற்றைம்பது – பிச்சைக்காசில் அவரால் அதிகமாய் மீதம் பிடித்திருக்க முடியாது. சென்ற ஏழெட்டு வருஷங்களாகத்தான் நரசிம்ம ஐயர், பெரிய உத்தியோகஸ்தர் – அவர் பெயர் அடிக்கடி சர்க்கார் கெஜட்டுகளில் வெளிவர ஆரம்பித்தது. அவர் இலாக்கா விஸ்தரிக்கப்பட்டது. அவர் உத்தியோகப் பதவி, தாண்டிக் குதித்துக் குதித்து உயர்ந்தது. கேட்பானேன்? சம்பளமும் உயர்ந்தது. தனி ஓர் இலாக்காவுக்கே தலைவரானார் அவர். ஒரு குட்டிச் சர்வாதிகாரியானார். ராவ்பகதூர் பட்டமும் கிடைத்தது. தமக்கென்று சொந்தமாக ஒரு பங்களா மயிலாப்பூர் நிர்மாணித்துக் கொள்ள வேண்டும் என்று ஓர் ஆசை அவர் உள்ளத்தில் உதித்ததும், சற்றேறக்குறைய இதே காலத்தில்தான். நாலைந்து வருஷங்களுக் குள்ளாகவே அந்த ஆசை நிறைவேறும் காலம் வந்துவிடும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை .

ஆனால், அவர் ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. பொழுது விடிந்தால் கிரகப் பிரவேசம். ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், மறுநாள் தம் சொந்த வீட்டில் குடி புகுந்து விடுவார்.

தனது என்று ஒரு வீடு இல்லாதவனுக்குத்தான் இந்த ஆசையின் முழுவேகமும், இந்தச் சிந்தனையின் கொந்தளிப்பும் தெரிய முடியும். ஆயுள் பூராவும் வாடகை வீடுகளிலேயே குடியிருந்து விட்டு, இறந்த பின்பும் மயானத்தில் எட்டு மணி நேரத்துக்கு ஆறடி நிலத்தைக் குத்தகை எடுத்துக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்திலிருந்து வெளியேறும் பிரக்ருதிகளின் மனம் எப்படிப் பட்டது என்று யாருக்கும்- ஏன், அவர்களுக்கே சரியாகத் தெரியாது. எவனாவது புது வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கிறான் என்று கேள்விப்பட்டால், அவர்கள் மனசு பொங்கும்; வயிறு எரியும். வீடு கட்டிக் கிரகப் பிரவேசம் செய்கிறவர்கள், இந்த விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவேதான் இருக்க வேண்டும். வீடில்லாத வர்களைத் தங்கள் கிரகப் பிரவேச மகோத்ஸவத்துக்கு அழைக்கா திருப்பதே நல்லது.

ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் கிரகப் பிரவேசத்துக்கு ஆயிரக் கணக்கானவர்கள் வருவார்கள். அநேகமாக அவர்கள் எல்லோருமே சென்னையில் வெவ்வேறிடத்தில் நல்ல நல்ல பங்களாக்கள் உடையவர்களாகத்தான் இருப்பவர்கள் – நல்ல நல்ல கார்களில் தான் வந்து இறங்குவார்கள். யார் யார் வருவார்கள் என்று எண்ணிப் பார்த்தார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர். ஸர் சீனிவாசன், ஸ்டோன் துரை, திவான் பகதூர் லட்சுமி காந்தம், மிஸஸ். பார்வதி – இப்படியாக அவர்கள் பெயரை உச்சரித்துப் பார்ப்பதிலேயே எவ்வளவு ஆனந்தம் இருக்கிறது என்று எண்ணினார் அவர். அவரது முகம் இருளிலே மலர்ந்தது.

ஆனால், அது சட்டென்று இருண்டது. வேண்டுமென்றே, தம்மை அவமரியாதை செய்யவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகச் சிலர் வராமலும் இருக்கக் கூடுமே! பெரிய மனிதர்கள் பலருக்கு இந்த வக்கிர புத்தி உண்டு என்று எண்ணியபோது, ராவ்பகதூர் நரசிம்ம ஐயருக்குக் கோபம் கோபமாக வந்தது. ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் அவர் தமக்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டார்.

இந்த பாவம் இரண்டே விநாடியில் மாறிவிட்டது. காரண காரியமில்லாமல் திடீரென்று அவருக்கு அவர் மனைவியின் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகம் வருவது அவருக்குச் சகஜமான காரியம் அல்ல. அவர் கூடியவரையில் அவளைப் பற்றி நினைப்பதையே விட்டுவிட்டார். இப்பொழுது ஏனோ தெரியவில்லை; இந்தப் புனிதமான தினத்தின் அதிகாலையில் அவள் ஞாபகம் வந்தது. இது சுப சூசகம் அல்ல என்று எண்ணினார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர்.

மனைவி உயிருடன் இருக்கும்போது அவளைப் படாத பாடெல்லாம் படுத்தி வைப்பவர்கள், அவள் போனபின் அவளைப் பற்றி இரக்கத்துடனும் ஆசையோடும் – சில சமயம் அன்பும் காதலும் ததும்ப – சிந்திப்பது மனித இயற்கை. உண்மையில் அப்படி இருந்திராவிட்டாலும், ஞாபகத்திலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை கட்டித் தங்கமாக மாறிவிடும். ஆனால் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர், இந்த விதிக்கு விலக்கானவர். அவள் உயிருடன் இருந்தபோது தம்முடைய சகல உரிமைகளையும் பூராத் திட்டமும் கொண்டாடி அவளைப் படுத்தி வைத்தவர், அவள் இறந்த பின் அவளைப் பற்றிய ஞாபகத்தையே தம் மனத்திலிருந்து ஒதுக்கி வைத்து விட்டார். வேறு ஸ்திரீக்கும் அவர் அங்கே இடம் கொடுத்து விடவில்லை. ராவ்பகதூர் நரசிம்ம ஐயரை, அன்பென்னும் உரிமையுடன் யாரும் அணுகி விடுவது அவ்வளவாகச் சுலபமான காரியம் அல்ல. இருந்த வரையில் வீட்டில் மற்ற வேலைக்காரிக் ளிடையே ஒரு வேலைக்காரியாக – முக்கியமான வேலைக்காரியாக – இருந்தாள் அவர் மனைவி. அவள் போனபின், வேறு வேலைக்காரி வந்தாள் இவளுக்கு வீட்டிலே முக்கியத்துவமோ, உரிமைகளோ இல்லவே இல்லை.

தம்முடைய மனைவி போய்விட்டது தம்மைப் பிடித்த சனியன் ஒழிந்தமாதிரி என்றுதான், நரசிம்ம ஐயர் எண்ணினார், அப்படி அவர் எண்ணுவதற்குக் கடவுளே உதவி புரிந்தார் என்றுதான் சொல்லவேண்டும். நரசிம்ம ஐயரின் உத்தியோகம், சம்பளம் எல்லாம் உயர்ந்ததும், அவருக்குப் பட்டம் கிடைத்ததும், எல்லாம் அவள் போன பின்தான். இப்படி இருக்கையில் அவள் இறந்தது பற்றி, சனியன் தொலைந்தது’ என்று நரசிம்ம ஐயர் எண்ணியது பூராவும் தவறு என்று யார்தான் சொல்லமுடியும்?

அவருக்கு மனைவியாக இருந்தவளைக் கெட்டவள் என்றோ, நல்லவள் என்றோ சொல்லமுடியாது. அவள் இரண்டும் இல்லை. மிகவும் சாதாரணமான ஒரு ஸ்திரீ. கிராமத்தில் ஏழ்மையில் பிறந்து, பட்டணத்துக் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டு, அன்பு ஒளியோ, ஆதரவோ இல்லாமல் நாற்பது வருஷ காலம் வாழ்ந்துவிட்டு, ஏன் பிறந்தோம், ஏன் வாழ்ந்தோம்?’ என்ற சஞ்சலங்கூடக் கொள்ளப் போதிய அறிவோ, மனத்தெம்போ இல்லாத ஓர் அற்பப் பிராணி அவள். அவள் வாழ்க்கை , அவளுக்குப் பிறந்த ஒரே குழந்தையால், கொஞ்சகாலம் பளிச்சென்று பிரகாசம் பொருந்தியாக ஆயிற்று. அந்த ஒளி நீடித்ததெல்லாம் ஒரு விநாடியே என்று அவள் எண்ணினாள். அந்த விநாடி, உண்மையில் காலண்டர்க் கணக்கில், பதினாறு வருஷங்கள் என்பதை அவள் உணரவேயில்லை. அவள் உணர்ந்த தெல்லாம் ஒரு கண இன்பம்தான். பிறகு, தன் பதினாறு வயதுப் பிள்ளையை விட்டு விட்டு, அவள் உயிர் நீத்தாள். அந்தப் பிள்ளையும் ராஸ்பகதூர் நரசிம்ம ஐயரின் உள்ளத்தைத் தொடவில்லை.

ராவ்பகதூர் நரசிம்ம ஐயரை உண்மையிலேயே அசாதாரண மான பிறவியாகத்தான் சொல்லவேண்டும். அன்பின் தேவைகளை, அவர் என்றுமே கண்டதில்லை. அன்பைப் பற்றிக் கேட்டறிந்தது, ஒரு காலத்தில் உண்டோ , என்னவோ? இப்போது அதை மறந்து விட்டார். தம் காரியாலயத்தில் ஆகட்டும், வெளியே நண்பர்களிடை யேதான் ஆகட்டும், வீட்டில் தம் பிள்ளையுடன்தான் ஆகட்டும் – அவர் என்றுமே யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை . இதற்கு மற்றவர்கள் மேல் பிசகு சொல்ல முடியாது. உதாரணமாக, பிள்ளையை எடுத்துக் கொள்வோம். அவன் என்ன பாவம் செய்தான்? ஒன்றுமில்லை . அதாவது ராவ்பகதூர் நரசிம்ம ஐயரின் பிள்ளையாக வந்து அவதரித்துவிட்ட ஒரு பாவத்தைத் தவிர, அவன் வேறு ஒரு பாவமும் அறியான். சர்க்கார்க் காரியாலயத்திலே, அவர் இலாக்கா நாணயத்துக்கும் யோக்கியதைக்கும் பேர் போனது. ஆனால், அதிலுள்ள குமாஸ்தாக்களையோ, உத்தியோகஸ்தர்களை யோ, அவர் என்றுமே தம்மை அணுகவும் விட்டது கிடையாது. ஏன்? ஏனோ, யார் சொல்ல முடியும்?

மறுநாள் – அதாவது இன்று – பொழுது விடிந்தால், புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம். எதற்காக, யாருக்காக, அவர் புது வீடு கட்டிக் குடி போகிறார்? யாருக்காகவும் இல்லை . ராவ் பகதூர் நரசிம்ம ஐயர் – தாம் – புது வீட்டில், சொந்த வீட்டில் குடி புக இருந்தார் – அவ்வளவுதான் ராவ்பகதூரின் உள்ளத்திலே உறைத்தது. இந்தக் காரியத்துக்கு வேறு காரணம் தேவையாய் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை.

ஐம்பத்து நாலு வருஷங்கள் தாம் வாழ்ந்தது யாருக்காக, எதற்காக?

ஈஸிச்சேருக்கு அண்டையில் யாரோ வந்து நின்று லேசாக நகைப்பது போன்ற உணர்ச்சி, ராவ்பகதூர் நரசிம்ம ஐயருக்கு ஏற்பட்டது. சட்டென்று பதறித் திரும்பிப் பார்த்தார். காளி சொரூபமாகத் தம் மனைவி தலை விரித்துப் பல்லை இளித்துக் கொண்டு அண்டையில் வந்து நிற்பது போல, ஒரு விநாடி அவர் கண்ணில் பட்டது. அடுத்த விநாடி பிரமை நீங்கிவிட்டது. அண்டையில் யாரும் இல்லை. என்ன பைத்தியக்காரச் சிந்தனைகள் இன்று’ என்று எண்ணியவராக, ஈஸிச்சேரில் அசைந்து நிமிர்ந்து உட்கார்ந்தார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர்.

வானம் வெளிரிட்டுக் கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து சிலர் அவசரமான தங்கள் அலுவல்களைப் பார்க்கத் தெருவோடு விரைந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழைகள்! கூலி வேலை செய்பவர்கள் : ரிக்ஷா இழுப்பவர்கள்; அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது வேலை செய்து அன்றாடம் சம்பாதித்துப் பிழைப்பவர்கள். இவர்களைப் போன்றவர்கள் பலர் சேர்ந்துதான், தமது புதுப் பங்களாவைக் கட்டி முடித்தார்கள் என்று எண்ணினார் ராவ்பகதூர். ஆனால், அதற்குமேல் அவர்களைப் பற்றிச் சிந்திக்க, அவருக்குத் தேவையில்லை. அவர்களுக்குச் சேர வேண்டிய கூலியெல்லாந்தான் ஜாடாவும் கொடுத்துப் பட்டுவாடா ஆகிவிட்டதே!

எதிரே தமது புதுப்பங்களாவின் பக்கம் திரும்பினார் ராவ் பகதூர் நரசிம்ம ஐயர். மரங்களினூடே புலர்ந்து கொண்டிருந்த இளம் ஒளியில் தெரிந்தது பங்களா. ‘மிகவும் அழகாகத்தான் கட்டியிருக்கிறது!’ என்று எண்ணினார். வீட்டை வந்து பார்த்த ராவ்பகதூர் சீனுவும் அப்படித்தான் சொன்னார். இன்று வரும் மற்றவர்களும் தம்மிடம் அப்படியேதான் சொல்லுவார்கள் என்று நினைத்தபோது, ராவ்பகதூரின் உடல் புளகித்தது.

மறுபடியும் யாரோ அண்டையில் வந்து நின்று நகைப்பது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது நரசிம்ம ஐயருக்கு. ஆனால் இந்தத் தடவை அவர் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . தமது பிரமையை அடுத்த விநாடியே தீர்த்துக் கொண்டுவிட்டார் அவர்.

இதற்குமுன் எவ்வளவோ நாட்கள் அவரது வாழ்க்கையின் சிகரங்கள் என்று சொல்லக்கூடியவை – வந்து போய்விட்டன. முக்கியமாக, அவருக்கு ராவ்பகதூர்ப் பட்டம் வந்த செய்தி பத்திரிகையில் வெளிவந்திருந்த அன்று காலை முதல் இரவு தூக்கம் வந்தது வரையில் நடந்த எல்லா விஷயங்களும், அற்பமான சிறு விஷயங்கள் கூட, அவருக்கு நன்றாக ஞாபகமிருந்தன. அதே போன்ற இன்னொரு நாள், இன்று இதோ அவர் கண்முன் உதயமாகிக் கொண்டிருந்தது.

வானத்திலே விசித்திரங்கள் – ஏக வர்ண விசித்திரங்கள் – நிறைந்திருந்தன.

வீட்டிலும் வெளியேயும் ஜன சந்தடி கேட்க ஆரம்பித்து விட்டது. நாதசுரக்காரர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஐந்து நிமிஷத்தில் அவர்கள் ஊத ஆரம்பித்துவிடுவார்கள். அவர்கள் வாசிக்க ஆரம்பித்தவுடனே எழுந்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிப்பது என்று எண்ணினார் ராவ்பகதூர் நரசிம்ம ஐயர்.

இந்த எண்ணம் அவர் மனத்தில் தோன்றியவுடனே, யாரோ குனிந்து அவர் காதண்டையில் வந்து, “ஹோ! ஹோ!” என்று நகைப்பதுபோல் கேட்டது. அந்த நகையொலி காதின் வழியாகப் புகுந்து தம் உள்ளத்தைப் பற்றிக்கொண்டது போலவும், தம் உடலில் இருந்த ரத்தத்தை எல்லாம் உறிஞ்சிவிட்டது போலவும், அவர் உணர்ந்தார். கைகளையும் கால்களையும் உதறிக்கொண்டு ஈஸிச் சேரிலிருந்து எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை . யாரோ மார்பிலே ஆணி அடித்து அவரை அசைய வொட்டாமல் தடுப்பது போல் இருந்தது.

புதுப் பங்களாவிலிருந்து மெல்லிய இனிய நாதசுர கானம், காலைக் காற்றிலே மிதந்து வந்தது.

– 1955, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *