அவளுக்கு யார் இருக்கா?

 

”என்னங்க நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா…” காபி டம்ளருடன் கேள்வியையும் வைத்த மனைவியை ‘வந்தது வராததுமா ஆரம்பிச்சுட்டியா..?’ என்பது போல் ஏறிட்ட பரமன். காபி டம்ளரை கையில் எடுத்துக் கொண்டு ”போய் ப்ரிச்சுல தண்ணி எடுத்துட்டு வா” என்றபடி டிவி முன் கிடந்த சேரில் உட்கார்ந்தான்.

அவ்வளவுதான்!

”உங்களுக்கு என்னப்பாத்தா கிறுக்கச்சி மாதிரிதான் தெரியும். அதான் ஒனக்கெல்லாம் எதுக்குடி பதில் சொல்லனும்னு பேச்ச மாத்துறீங்க.செய்ங்க அள்ளி அள்ளி, நானும் ஏம்புள்ளையும் நடுத்தெருவுக்கு வந்த பெறகாவுது யோசிப்பீங்களா?” அவளுக்கு விசும்பலும், கண்ணீரும் காத்திருந்தது போல் வந்து விட்டது.

எதையும் காதில் வாங்காதவனாய் காபியை குடித்ததும் கைலிக்கு மாறி, வாஷ்பேஷனுக்குப் போய் முகம் கழுவி வந்ததும் “மல்லிகா… என்ன விட்டா அவங்களுக்கு யார் இருக்கா அதுவுமில்லாம சங்கரோட படிப்பு விஷயம் கல்பனாவோட நல்ல காரியப் பிரச்சனை. என்னால முடியாதுன்னு சொல்ல வாய் வராது, அதான் வீட்டுக்கு வாமானு தங்கச்சிட்ட …” வார்த்தையை முடிக்கவில்லை.

“வருவா,வருவா நான் ஊமையா இருக்கப் போய்தானே இதெல்லாம் நடக்குது இன்னிக்கு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுடுறேன் ” ஆக்ரோசமானாள் மல்லிகா.

“எங்கே தனது தங்கை இப்போது வந்துவிட போகிறாளோ?” என பயந்த பரமன் வாசலைப் பார்த்துக் கொண்டான். அவனுக்குத் தெரியும் இதுமாதிரி நேரங்களில் பொறுமையின் வட்டத்திலேயே இருந்தால்தான் பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும் என்று.

மல்லிகா கொஞ்சம் அமைதிக்கு வரவும். பக்கத்தில் போய் அவளின் தோளில் கைபோட்டு “உருப்படி இல்லாத புருசன வச்சிக்கிட்டு அவ என்ன செய்வா நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு ” என்றான் பக்குவமாக.

அவளோ “எதுக்கும் ஒரு அளவிருக்கு போனமாசந்தான் உங்க மூத்தக்கா கேட்டாங்கனு லோன் போட்டு இருபதாயிரம் கொடுத்தீக. சம்பளம் வந்த அன்னிக்கு இதே தங்கச்சி வீட்டுச் செலவுக்கு இல்லேனு ரெண்டாயிரம் வாங்கிட்டுப் போனா இப்ப என்னடானா பையனுக்கு பீஸ் கட்டனும். மகளோட பேறு காலச் செலவுக்கு வேணுமுன்னு வாறானு சொல்றீங்க இங்க என்ன கொட்டியா கிடக்கு…கையில பணமில்லேனு சொல்லி அனுப்புங்க” வார்த்தையில் கறார் காட்டினாள்.

பரமனுக்கு சற்று வேகம் எழுந்தது, ஆனாலும் தன்னைஅடக்கி “என்னமா பேசுற அவ யார்ட போய் நிப்பா ஆம்பள பொறப்புனு நான் ஒருத்தந்தானே ”

“அதுக்குத்தானே நெறைய செஞ்சாச்சு. மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு அவங்களுக்கு உணர்த்தனும். இப்ப நீங்க நான் சொல்றபடிதான் கேட்கனும் மீறிப் பணம் தந்தீக நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” கணவனின் கையை விலக்கி விட்டு சமையலறைக்குள் நடக்க முயன்ற மனைவியை கேள்வியாகப் பார்த்தான்.

மனசு படபடக்க மறுபடியும் வாசலுக்கு பார்வையை ஓடவிட்டான் பரமன்.

அவன்தான் அதிகமான பொறுமைக்காரனாச்சே… வேலை பார்க்கும் இடத்தில் கூட சக ஊழியர்கள் ஏதாவது சண்டையிட்டுக் கொண்டால் அங்கே வரும் மேனேஜர், “எதுக்குப்பா இப்படி மல்லுக்கட்றீங்க சகிச்சுப்போங்க… பரமன மாதிரி இருக்கப் பாருங்க “என்பார் அப்படி எடுத்துக்காட்டானவனா கோபப்படுவான்.

கூடப்பொறந்தவளின் நிலையை யோசித்தான். அதே சமயம் மனைவிக்குத் தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தான்.

இரவு தூங்குவதற்கு முன்னும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தான். தளர்ந்து கொடுக்கவே இல்லை, மல்லிகா.

மனசு மொத்தமும் கனமாகிப் போன பரமன் அடுத்து வந்த நாட்களில் மெளனமாகவே வேலைக்குப் போய் வந்தான்.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஏனோ தானோனு இருப்பது பிள்ளையின் வளர்ச்சியை, மனதைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து இருவரும் பெயரளவில் பேசிக் கொண்டனர்.

என்ன காரணத்தினாலோ தங்கை வரவில்லை. கணவன் தனக்குத் தெரியாமல் பண உதவி செய்திருக்க மாட்டார் என்ற முழு நம்பிக்கை இருந்தாலும் அவளிடமிருந்து எவ்விதத் தகவலும் இல்லை என்றதும் சின்னதான சந்தேகம் மல்லிகாவினுள்.

பரமனுக்கோ வாசல்வரை வந்தவள் மனைவியின் பேச்சைக் கேட்டு, நொந்து போயிருப்பாளோ…அண்ணனை சிரமப்படுத்த வேண்டாமென ஒதுங்கி விட்டாளோ…

உண்மையாகவே துடிதுடித்துப்போனான். ஆனாலும் ஏனோ அது பற்றி வலியப் போய் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

அக்காவும், தங்கையும் அவன்மேல் ரொம்ப,ரொம்ப பாசம் வைத்திருப்பார்கள். இவனும் அதற்கு ஈடாகத்தான் காட்டுவான். உறவின் முடிச்சு வலிமையானது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்குள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்கூட வாயாரிப் போவார்கள்.

மல்லிகா துணைவியாக வந்தாள்.அவளையும் குறைசொல்லக் கூடாது கணவனின் உறவுக்கு விழுந்து செய்தாள். ஒரு பெண் குழந்தை பிறந்தது, தேவைகள் பொருளாதாரத்தைச் சுட்டது. உள்ளுக்குள்ளேயே வெதும்பிக கொண்டிருந்தது இப்போது வெளியாகி விட்டது.

அன்று-

பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வந்து, சிற்றுந்துக்காக நிருத்தத்தில் காத்திருந்தாள் மல்லிகா.

சைக்கிள் கடை… வேலையாட்கள் பஞ்சர் பார்ப்பதிலும், வீல் பெண்டு எடுப்பதிலும், காற்றுப் பிடிப்பதிலும் கவனமாயிருந்தனர்.

அப்போது ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்தான். கடையில் உள்ளவர்களுக்கு தெரிந்தவன்போல…

“டேய்.வாடா வாடா பொடியா ரொம்ப நாளா ஆளையேக் காணோம்” கல்லாவில் அமர்ந்திருந்தவர் உரிமையுடன் கேட்கவும் “சிவகாசில ஓட்டல இருக்கேன் மொதலாளி ” என்றவனின் அம்மா அவன் கைப்பிள்ளையாக இருக்கும் போதே இறந்து விட்டாள்…

அப்பனோ இதுதான் சமயமென இன்னொருத்தியுடன் ஒதுங்கிப் போய்விட்டான். வயதுக்கு வந்த அக்காக்காரிதான் அவனை வளர்த்தாள். நாட்களின் நகர்வில் சொந்தமெல்லாம் சேர்ந்து அவளை தாய் மாமனுக்கே கட்டி வைத்தது.

இந்த சைக்கிள் கடைக்கு நாலுகடை தாண்டி உள்ள டீக்கடையில்தான் எடுபுடி வேலை செய்து கொண்டிருந்தான். சிறுவனாயிருந்தாலும் ஒழுக்கம் நிறைந்த துறுதுறு… எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுவான். திடீரென அவனைக் காணவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறான்.

“என்னடா அக்காவை பாக்க வந்தியா ” வீல்பென்டு எடுத்தவர்.

“ஆமண்ணே…”

“உன் அக்காவுக்கு கொழந்த பொறந்துருக்கு தெரியுமாடா…”

இன்னொருவர் கேட்கவும் “அதுக்குத்தாணே வந்தேன்…” சிறுவனின் வார்த்தையில் ஆர்வம் நிறைந்திருந்தது.

“சரிடா…உன் மருமகளுக்கு என்னடா வாங்கி வந்த..” அந்த முதலாளி இதை கேட்டதுதான் தாமதம்.

“இதோ பிஸ்கட் வாங்கிட்டு வந்துருக்கேன் மொதலாளி ..”

ஒரு நிமிடம் எல்லா இயக்கமும் அந்த இடத்தில் நின்று போன மாதிரி அனைவரும் உணர்ந்தனர். அவரவர் வேலை அப்படியே நின்றது.

எந்திரத்தனமாக திரும்பிப் பார்த்தாள்,மல்லிகா புன்னகைத்த முகத்துடன் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் நின்றிருந்தான்,சிறுவன்.

கல்லாவிலிருந்து சட்டென எழுந்து வந்த முதலாளியோ அவனின் தலையைப் பற்றி தன்னோடு சேர்த்துக் கொண்டார். வார்த்தை எதுவும் அவருக்கு வரவில்லை.

பிறந்த பச்சைக் குழந்தை பிஸ்கட் சாப்பிடுமா? இல்லை அதற்கு கொடுக்கத்தான் முடியுமா? அக்கா, அவளுக்கான தொடர்பில் தனக்கும் பங்குண்டு என்ற உணர்வுப் பூர்வமான எண்ணம்.

அறியாத வயதில்தான் இவனுக்கு எத்தனை உறவு… அக்கா, அவளின் பிள்ளைக்கு செய்ய வேண்டுமென்ற மனசு, தெளிந்த நிலையான உறவு. இது காட்சியல்ல… இக்கலியுகத்திலும் தொப்புள்கொடி இணைப்பு தூர்ந்து போகாது உள்ளது என்ற கல்வெட்டு.

உடன் வந்தவள் பிடித்து உலுக்கவும்தான் சுயத்துக்கு வந்தாள் மல்லிகா. உள்ளுக்குள் இனம் புரியாத பிசைவு… சின்னதான மனசாட்சியின் சவுக்கடி.

பேருந்து வரவும் ஏறிக்கொண்டனர்.

மாலையில் கணவன் வரவும் “என்னங்க உங்க தங்கச்சி வருவானு சொன்னிங்க… ”

புருவங்கள் விரித்து மனைவியை பார்த்தான் பரமன்.

“ஏன் அவ வரனும்னு காத்திருக்கீங்க ஒரு எட்டு நீங்க போய்ப் பாத்து பணத்தைக் கொடுத்துட்டு வர வேண்டியதுதானே?”

மொத்த அதிர்வுக்கு ஆளானான்.

“அவளுக்குனு யார் இருக்கா? நமக்குனு யார் இருக்கா? ஒருத்தருக்கு ஒருத்தரா இருந்தாத்தான் உறவுங்குறது கடைசி வரைக்கும் நிசமா நிலைக்கும்ங்க. நீங்க மனசுல என்ன நெனச்சிங்கலோ அதத் தாராளமா செய்யலாம். சீக்கிரமா குளிச்சுட்டுக் கிளம்புங்க.”

மல்லிகாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த சிறுவனின் புன்னகை பொதிந்திருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
சற்றுமுன் வரை தன்னில் அலங்காரமாயிருந்த அத்தனையும் மெத்தையில் கலைந்து கிடந்தது.சுடிதாருக்கு மாறினாள். இது எத்தனையாவது அலங்காரம்?அவளுக்கே ஞாபகமில்லை. மனமெங்கும் குமுறல், அழுகையாக உருவெடுக்கும் முன் நிதானத்தை பற்றிக் கொள்ளனும் என்று எண்ணியவாறே துண்டை எடுத்துக் கொண்டு, பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சுபத்ரா. சுபத்ரா,சாமுத்ரிகா லட்சணம் ...
மேலும் கதையை படிக்க...
எத்தனை நகரங்களுக்குப் போனாலும் மதுரையின் அனுபவமே தனிச்சிறப்பானது. உணர்ந்த மாதிரி தெளிவாகத்தான் இருந்தார், கார்த்திகேயன். அவரின் மனைவிதான் இனம் புரியாத குழப்பத்திலிருந்தாள். புதிய வீட்டில் சாமான்களை ஆங்காங்கே எடுத்து வைத்தபடியே கவனித்தவர் மெல்ல அவளருகே போய் 'நானிருக்கேமா...' என்பதாக இடது தோள்ப்பற்றினார், ...
மேலும் கதையை படிக்க...
வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார். “ம்...என்ன கோரிக்கையோ ?” இன்று கடைசி வெள்ளி ,மாலையில் மனைவியைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போகலாம், அப்படியே பர்மாக் கடையில் டிபன் செய்யலாம்னு மனசுக்குள் போட்ட திட்டம் சட்டென ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி ஒன்று... விழிகளில் சொட்டுத் தூக்கமின்றி ஈஸிச்சேரில் சாய்ந்திருந்தார், நாதன். மனசு மொத்தமும் கனமாயிருந்தது. மாடியறையில்...தொடர் இருமல், கடுமையான அனத்தல், கொஞ்சமும் முடியாமையின் வெளிப்பாடு... "அய்யோ ஏதாவது கொடேன்..." ஈசானமான கெஞ்சல் டானிக், தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் சத்தம்னாலும் குறையாத இருமல். எதுவுமே நாதனை ...
மேலும் கதையை படிக்க...
கல்யாணக் குருவி
கவலைப்பட வேண்டாம்…!
வெளியேறிச் செல்லும் மகன்
கடைசி வரை கணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)