(அ)சாதாரண மனிதர்கள்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,288 
 

புதிதாக தார் ரோடு போடும் வேலை நடந்து கொண்டிருந்தது.
தெருவைக் கீறி, சமப்படுத்தி, பெரிய ஜல்லி கொட்டி, புல்டோசர் வைத்து மிதித்து, மண் நிரவும் வேலை நடந்து கொண்டிருந்தது.
தெருவின் இரண்டு பக்கமிருந்தும், மண்ணை வாரி தூவிக் கொண்டிருந்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நான். வழக்கம் போல, அந்த பால்காரப் பெரியவர், “டாண்’ என்று தெருவுக்குள் பிரவேசித்தார்.
(அ)சாதாரண மனிதர்கள்!தெரு ஓரமாக நடந்தவர், வேலை செய்பவர்களை பார்த்து, “”நிறுத்துங்க… என்ன வேலை பார்க்கறீங்க. சவுடு மண்ணை நிரவறீங்களே… இது மேல தார் ஊத்தினால் ஒட்டுமா… யார் உங்க கான்ட்ராக்டர். கூப்பிடுங்க அவரை!” என்றார் கோபமாக.
“”பெருசு… என்னா கலெக்டர்ன்னு நினைப்பா… பிரச்னை பண்ணாம போ. தெருக்காரங்களே கேட்கலை… எங்கிருந்தோ வந்துட்டியா, கேள்வி கேட்க!” என்றான் ஒருவன்.
“”கேட்க ஆளில்லைன்னா, என்ன வேணும்ன்னா பண்றதா… இன்னும் ஒரு பிடி சவுடு மண் கொட்டினீங்க, இங்க நடக்கறதே வேற… வரச் சொல்லு உங்க கான்ட்ராக்டரை!”
வேலைக் காரர்களில் ஒருவர், மண்வெட்டியைப் போட்டுவிட்டு, வேகமாகப் போய், ஒரு பிரமுகருடன் திரும்பினான்.
“”யார்ரா அது… வேலையை நிறுத்தறது!” என, ஆவேசமாக வேட்டியை உயர்த்திக் கட்டிக் கொண்டு வந்தார் அவர். உறுதியான கருஞ்சிலையாய் பாதை ஓரத்தில் நின்ற பெரியவரை, தொலைவிலிருந்தே பார்த்துவிட்டு, அங்கேயே நின்றுவிட்டார். அவர் ஆவேசம், போன இடம் தெரியவில்லை.
“அடடா… அவரா, பிடிவாதக்கார மனுஷனாச்சே! நான் பேசினால் சரி வராது; கான்ட்ராக்டரை கூப்பிட்டால்தான் சரிவரும்’ என்றபடி, மொபைலில் தொடர்பு கொண்டு பேச, சில நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்த கான்ட்ராக்டர்,””என்ன அண்ணே பிரச்னை?” என்று பெரியவரிடம் கேட்டார்.
“”நான் சொல்லணுமா… பார்த்தால் தெரியவில்லையா?”
கீழே பார்த்துவிட்டு, “”அறிவுகெட்டவங்களே… யார்ரா சவுடு மண் அடிக்கச் சொன்னது. மண் லாரி வர்றதுக்குள்ள என்னடா அவசரம். வேலை தெரியாத பசங்கள வச்சு மாரடிக்க வேண்டியிருக்கு. என் பேரை கெடுக்கறீங்களேடா… பெரியவர் மட்டும் பார்க்கலைன்னா, தாரை ஊத்தி மெழுகி, ரோடு போட்டுடுவீங்க போல இருக்கே… நம்பி விட்டுட்டு போனால், இப்படியா பண்ணி வைக்கிறது. எல்லாருக்கும் ரெண்டு நாள் கூலி, “கட்’ பண்ணால் தான் தெரியும். கொட்டின மண்ணெல்லாம் வழிச்செடுங்க…” என்று சத்தம் போட்டார் கான்ட்ராக்டர்.
உடனே, வேலையாட்கள் சரசரவென்று மண்ணை வழித்தனர்.
“”நீங்க போங்கண்ணா… இனிமே தப்பு நடக்காம பார்த்துக்குறேன்…” என்று பெரியவரை வழியனுப்பி வைத்தார்.
“”எனக்கு பயப்படாதீங்க… மனசாட்சிக்கு பயப்படுங்க…” என்றபடி, பால் தூக்குகளுடன் கட்டுப் போட்டிருந்த காலை ஊன்றி, என் வீட்டை கடந்து, நடந்து மறைந்தார்.
எனக்கு வியப்பாக இருந்தது.
நான் அந்த பகுதியில் குடியேறிய நாள் முதல், ஆறு மாதங்களாக, அந்த பெரியவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தினமும், காலையில் ஏழு மணிக்கும், மாலை நாலு மணிக்கும் அவர் தெருவைக் கடந்து செல்வார். இடுப்பில் அரை வேட்டி, தலையில் சுற்றியிருக்கும் துண்டு, கைகளில் நான்கைந்து சிறு தூக்குகளில் பால் எடுத்துக் கொண்டு, தெரு வழியே தாங்கி, தாங்கி நடந்து எங்கோ போவார். அவர் இடது கணுக்காலில் நிரந்தரமாக ஒரு கட்டு இருந்தது.
சில நாள் ஒரு சிறுவன் அவருடன் சேர்ந்து நடப்பான்.
அவன் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே போவான். அவர் சிரித்தபடி, பொறுமையாக பதில் கூறியபடி போவார். சிறிது நேரத்துக்குப் பின், காலி பாத்திரங்களுடன் திரும்புவார்.
இங்குதான் பக்கத்தில் எங்கோ வீடு இருக்கிறது, சொந்தமாக மாடுகள் வைத்திருக்கிறார், பால் கறந்து விற்று ஜீவிக்கிற ஆசாமி என்ற அளவில் மட்டும் அவரைத் தெரியும்.
வயதான காலத்திலும், தன்னால் இயன்ற வேலையை செய்து பிழைக்கிறாரே என்று, நெஞ்சுக்குள் ஒரு நெகிழ்வு.
ஒருமுறை பக்கத்தில் புதிதாக கோவில் ஒன்று எழுப்பப்படுவதாகவும், அது விசேஷமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது.
செவ்வாய் – வெள்ளிக்கிழமைகளில் எங்கிருந்தெல்லாமோ வரும் ஜனங்கள், எங்கள் தெரு வழியாக போய் தரிசித்து, திரும்புவதை கவனித்து, நானும் குடும்பத்துடன் அந்த கோவிலை தேடிப் போனேன்.
நகர் எல்லையில் இருந்த பழைய புற்றுக்கோவில் அருகில், புதிதாக அம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. விசாலமான கோவிலில் அம்மனின் விஸ்வரூப சிலை வைத்திருந்தனர்; வழிபாடு நடந்து கொண்டிருந்தது.
கடவுளை வணங்கியபின், பிரகாரம் சுற்றிக் கொண்டிருந்த போது, அங்கே பெரியவரை பார்த்தேன்.
ஆச்சரியமில்லைதான்… பால்காரர் கோவிலுக்கு போகக் கூடாதா… கோவிலுக்கும் பால் ஊற்றுபவராக இருக்கும் என எண்ணினேன். ஆனால், அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கவனத்தை ஈர்த்தது. அவர் பேசுவதை சுற்றி நின்று நாலு பேர் கேட்டு, அதன்படி செய்தனர்.
சாதாரண பால்கார கிழவருக்கு, இத்தனை மரியாதை எப்படி? ஒரு வேளை சொத்து, சுகம் நிறைய இருக்கப்பட்ட ஆளோ… பழைய பண்ணையோ என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன். அக்கம், பக்கத்தவரும் புதிதாக குடியேறியவர்கள் என்பதால், அவர்களுக்கும் அவரைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
இன்று கான்ட்ராக்டரை வரவழைத்து, தவறை சுட்டிக்காட்டி சரி செய்ய வைத்துவிட்டு போனதைப் பார்த்த போது, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.
மறுநாளே அவரை தெருவில் மடக்கினேன்.
ஆச்சரியமாக பார்த்து, “”என்னம்மா?” என்றார்.
“”பெரியவரே… காலில் என்னப் பிரச்னை… ரொம்ப நாளா கட்டோடு நடமாடறீங்களே…” என்றேன்.
“”மாடு மிதிச்சிடுச்சி தாயி… எனக்கு சுகர் வேற, எவ்வளவுதான் சிகிச்சை பண்ணாலும், கொஞ்சம் குணமாகுது, மறுபடியும் வந்திடுது. மருந்து மாத்திரை சாப்பிட்டுக்கிட்டுதான் வர்றேன். சுகர் இருந்தால், காயம் லேட்டாதானே ஆறும்!”
“”மழை, வெயில்ல நடந்துகிட்டே இருந்தால் எப்படி ஆறும்?”
“”காலைப் பார்த்தால் போதுமா… வயித்தைப் பார்க்கறது யாரு?” என்று சிரித்தார்.
“”பிள்ளைங்க இல்லையா?”
“”ரெண்டு பிள்ளைங்க அம்மா… கல்யாணம் முடிச்சு குழந்தை குட்டிகளோடு பக்கத்துலதான் இருங்காங்க. அவங்க மட்டும் என்ன பண்ணுவாங்க. கூலி வேலை செய்துதான் குடும்பத்தை காப்பாத்துறாங்க. நான் அவங்களுக்கு பாரமாயிருக்கலாமா… ரெண்டு கறவை மாடுங்க இருக்கு. அவைகளை பராமரிச்சிக்கிட்டு பாலைக் கறந்து வித்து, என் வயித்தையும், மாடுங்க வயித்தையும் கழுவறேன்!”
“”மனைவி…”
“”மகராசி… எப்பவோ போய் சேர்ந்துட்டா!”
“”அப்ப தனியாதான் இருக்கீங்களா?”
“”தனியா இருக்கோம்ன்னு நினைச்சுகிட்டால் தனிதான். ஆனாலும், சுற்றிலும் உறவுகள் இருக்காங்க!” என்றார்.
“”இவ்வளவு சிம்பிளா இருக்கீங்க. ஆனால், நீங்க பவர் உள்ள ஆள் போல தெரியுது. உங்க பேச்சுக்கு பெரிய, பெரிய ஆளுங்களே கட்டுப்படறத ரெண்டொரு சம்பவத்துல பார்த்தேன்; அதன் மர்மம் என்ன?”
“ஹஹ்ஹா…’ என்று சிரித்தார்.
“”மர்மம் ஒண்ணுமில்லை. ஏதாவது தவறு கண்ல பட்டால், நமக்கென்னன்னு போக மாட்டேன்; நின்று கேட்பேன். சில பேர் என் சொல்லை மதிச்சு திருத்திக்கறாங்க; அது, அவங்க பெருந்தன்மை. முடியாதுன்னு சொல்றவங்
களை நான் மட்டும் என்ன செய்ய முடியும்?” என்று சொல்லிவிட்டு போனார்.
அதற்கு மேலும் அவரிடம் சுவாரசியம் இருக்கக் கூடுமென்று நினைத்தேன். வற்புறுத்திக் கேட்க வேண்டாமே என்று இருந்தேன். ஆனால், பார்க்கும் போதெல்லாம் அவரை அங்கீகரிப்பது போல் புன்னகை செய்வேன். அவரும், “நல்லா இருக்கியாம்மா?’ என்று கேட்டுவிட்டு போவார்.
மழைக்காக ஒரு நாள், வீட்டு முன் ஒதுங்கி நின்றார்.
சூடாக டீ கொடுத்தேன்.
கணவர் வங்கியில் வேலை செய்வது,
இட மாறுதலில் இங்கு வந்தது, என் இரண்டு குழந்தைகள் ஸ்கூல் போவது, சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் என்று என் குடும்ப விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
“”என் சொந்தக்காரங்க சில பேர் அங்கே இருக்காங்க. எப்பாவது வருவாங்க, போவாங்க!” என்றார்.
தொடர்ந்து, அன்றைக்கு சொல்லிவிட்டுப் போனதை
தொடரும் விதமாக, தொண்டையை செருமிக் கொண்டு ஆரம்பித்தார்.
“”எனக்கு ஆரம்பத்திலிருந்தே பால் வியாபாரம்தான் தொழில். ஆனாலும், பொது விஷயத்துல ஆர்வமா இருப்பேன். எல்லா மக்களும் என் மேல் மரியாதையா இருப்பாங்க.
“”இந்த பனிரெண்டாம் வார்டுல முதன் முதலா எம்.சி., தேர்தல் வந்தப்ப என்னை நிறுத்தினாங்க; எதிர்ப்பே இல்லாம ஜெயிச்சேன். அப்ப நான் ரொம்ப துடியா இருப்பேன். யார் தப்பு செய்தாலும், தட்டி கேட்பேன். ஒருத்தரு பணத்துக்கும் ஆசைப்பட மாட்டேன். பேரு வேணும், புகழ் வேணும்ன்னு எதிர்பார்க்க மாட்டேன். சண்டை சச்சரவு வந்தால், தலையிட்டு நியாயம் சொல்வேன்…
“”லைட் போடறது, ஏரி, குளம் தூர் வாரி, செப்பனிட்டு வைக்கிறது. பள்ளிகூட வசதி பண்ணிக்குடுக்கறது, குடி தண்ணீர் பிரச்னை வராம கவனிக்கறதுன்னு எல்லாம் செய்தேன்…
“”அப்ப இருந்த அதிகாரிகள், ரொம்ப நேர்மையா இருந்தாங்க. மக்களுக்கு நல்லது பண்ணனும்ன்னு நினைச்சாங்க. சேவை செய்யதான் மக்கள் வரிப்பணத்திலிருந்து சம்பளம் வாங்கறோம்கிறத நினைச்சு, மனசாட்சியுடன் நடந்துகிட்டாங்க. அதனால், என் மாதிரி ஆட்களோட கோரிக்கைகளை நிறைவேத்தி கொடுத்தாங்க.
“”இரண்டாவது முறை எலெக்ஷன் வந்தப்ப பணக்காரங்க இறங்கினாங்க. அது நாள் வரைக்கும் சுத்தமாக, நேர்மையாய் இருந்த அதிகாரிங்க, கொஞ்சம் கொஞ்சமா தப்பு பண்ண ஆரம்பிச்சாங்க. அரசியலிலும், நீதி, நேர்மை குறைஞ்சு பண பலம், ஜாதி பேதம் தலை தூக்கிச்சு. மக்களுக்கும் காசு, பணத்து மேல ஆசை வந்தது…
“”எப்போ இதெல்லாம் தலை தூக்கிச்சோ, அந்த இடத்துல என்னை மாதிரி சாதாரண மனுஷனால் என்ன பண்ண முடியும். இரண்டாவது முறையா எம்.சி., தேர்தல்ல நின்னப்போ தோத்துட்டேன். ஆனாலும், பதவியிலிருந்து செய்த காரியங்களை இன்னைக்கும் நினைச்சு பார்க்கறாங்க. அதனால், நான் ஏதாவது சொன்னால், தட்ட மாட்டாங்க. பதவியில இருந்தப்ப எனக்குன்னு ஒண்ணுமே செய்துக்கல.
“”அதிகாரிங்க, தலைவருங்களுக்கு என் மேல மரியாதை இருந்தது. ஏன்னா, வெளியில் இருந்தாலும், ஏதாவது தப்புன்னா, வழி மறிச்சு கேட்பேன்; பயப்பட மாட்டேன்.
“”சாரங்கன்னு சொன்னா, மக்களுக்கு தெரியும். அதை, எப்பவும் என் சுயநலத்துக்கு பயன் படுத்தியதில்லை; அதான் என் பலம். எந்த சலுகையும் எதிர் பார்க்க மாட்டேன்; கையேந்த மாட்டேன். அதனால, என்னால, தவறை தைரியமா தட்டிக் கேட்க முடியுது.
“”அன்னையிலிருந்து இன்னை வரைக்கும் என் உழைப்புலதான் பிழைக்கிறேன். ஊர்க்காரங்க, “கோவிலை புதுப்பிக்கணும்; நீங்க முன் நின்று செய்யணும்…’ன்னாங்க. “எனக்கு வயசாச்சு. வேற துடியா இருக்கவங்க எடுத்து செய்யட்டும். என்னால, முடிஞ்ச ஒத்தாசை பண்றேன்…’ என்று சொன்னேன். 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வசூல் பண்ணிக் கொடுத்தேன். என் பங்குக்கு தினம் கால் லிட்டர் பால் காலையும், மாலையும் கொண்டு போய் கொடுப்பேன்… இன்னை வரைக்கும், 30 ஆயிரம் ரூபாய்க்கு பால் கொடுத்திருக்கேன். ஏதோ என்னால முடிஞ்சது,” என்று சொல்லிவிட்டு, விடைபெற்று சென்றார்.
தகுதியில்லாத, தன்னல ஆட்களெல்லாம், வெற்று கோஷம், வெட்டி பந்தா காட்டி, பெரிய புள்ளிகளாய் வலம் வரும் இந்த தேசத்தில், நேர்மையில் நம்பிக்கையும், பொது நலனில் ஆர்வமும் கொண்டு, முடிந்த வகையில் நல்லது செய்து, அது பற்றி அலட்டல் இல்லாமல், தன்னை சாதாரண மனிதனென்று, அடக்கத்துடன் கூறிக் கொள்ளும் இவரல்லவா அசாதாரண மனிதர் என, வியந்து நின்றேன்.
நாளை முதல் கவர் பாலை நிறுத்திவிட்டு, அவரிடம் பால் வாங்குவது என்றும், கோவிலுக்கு ஒரு தொகையை நன்கொடையாக அவரிடம் கொடுப்பது என்றும் தீர்மானித்தேன். ஏதோ என்னால் முடிந்தது.

– சு. ஏகலைவன் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *