விநாயகன் ஒற்றைக்கொம்பன் ஆன கதை

 

பிருகு வம்சத்தில் ஜமதக்கினி முனிவருக்கும் அவரது மனைவி ரேணுகாவுக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அவதரித்தவர் பரசுராமர் .தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதிற்கிணங்க ஒரு முறை அவரது தந்தையாரின் ஆணைப்படி தாயார் ரேணுகாவை சிரச்சேதம் செய்தார் .மகனின் செயலை மெய்ச்சிய தந்தை என்ன வரம் வேண்டும் என்று கேட்க தன் தாயார் ரேணுகா உயிரோடு வர வேண்டும் என்று பரசுராமர் கேட்டுக் கொண்டார். ஜமதக்கினியும் மகிழ்ந்து மகனின் ஆசையை நிறைவேற்றினார் .ரேணுகாவுக்கு உயிர் கொடுத்தார். இந்த செயலின் மூலம் தந்தையின் மதிப்பையும் தாயின் அன்பையும் உலகிற்கு உணர்த்தியவர் பரசுராமர் ஆவார் .இவர் ஒரு மிகுந்த சிவ பக்தர் .கடுமையான தவம் புரிந்து சிவனின் அருளைப் பெற்றவர் .சிவனே இவருக்கு குருவாய் இருந்து போர் வித்தைகளில் பயிற்சி அளித்து மழு என்கிற ஆயுதத்தை அவருக்குப் பரிசாக அளித்தார். வடமொழியில் பரசு என்றால் மழு என்று பொருள் .பரசுராமர் ஒரு சிரஞ்சீவி. சிரஞ்சீவி என்றால் இறப்பில்லாதவர் அழிவில்லாதவர் என்று பொருள். மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் பரசுராம அவதாரமே சிரஞ்சீவித்தன்மையுடையது .இன்றும் பரசுராமர் மகேந்திர மலையில் தவம் புரிந்து கொண்டிருப்பதாக ஐதீகம் .

ஒரு முறை பரசுராமர் தனது குரு சிவபெருமானுக்கு மரியாதை செலுத்த கைலாயம் சென்றார்.அப்போது அங்கு இருந்த விநாயகர் பரசுராமரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தார். விநாயகர் பணிவுடன் பரமன் உறங்கிக் கொண்டிருப்பதாகவும் தற்போது அவரைப் பார்க்க முடியாது என்றும் கூறினார் .ஆனால் பரசுராமர் உடனே பரமனைப் பார்க்க விரும்பி உள்ளே செல்ல முயன்றார். விநாயகர் தடுக்க இருவருக்கும் விவாதம் முற்றியது .விவாதம் முற்றி சண்டை மூண்டது.கோபம் கொண்ட பரசுராமர் தனது மழுவை விநாயகர் மீது வீசினார் .பரசுராமருடைய மழு தனது தந்தை சிவன் பரசுராமருக்கு கொடுத்தது என்று அறிந்த விநாயகர் அந்த மழுவை மிக்க மரியாதையுடன் தனது தந்தத்தினால் பெற்றுக்கொள்ள விரும்பினார் .ஆனாலும் மழு ஒரு தந்தத்தை வெட்டிச்சென்றது. இரத்தம் சொரிந்தது .இரத்தம் சொரிய நின்ற தனது மகன் விநாயகனைக் கண்ட பார்வதி மிக்க துயரம் கொண்டாள் .கோபம் கொண்டாள். சக்தி ரூபம் எடுத்து பரசுராமனின் இரண்டு கைகளையும் வெட்டி அவரைக் கொல்ல விரும்பினாள். நல்லவேளையாக அங்கு சிவன் வந்து பார்வதியின் கோபத்தைக் குறைத்து சாந்தப்படுத்தினார். பரசுராமரும் நமது பிள்ளை மாதிரி. நமது பிள்ளை தவறு செய்தால் மன்னிப்பது போல் நீயும் பரசுராமரை மன்னிக்கவேண்டும் என்று சிவன் பார்வதியை கேட்டுக்கொண்டார். பார்வதியும் பரசுராமரை மன்னித்து, விநாயகன் ஒரே சமயத்தில் பல பரசுராமர்களைக் கொல்லும் சக்தியுடையவனாக இருந்தபோதும் உன்னை ஒன்றும் செய்யாததிற்க்கு காரணம் அவன் மிகவும் கட்டுப்பாடுடையவன் என்று பரசுராமருக்கு எடுத்துரைத்தார் .

பரசுராமரும் தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுவிநாயகருக்கு பூசை செய்து அவரை மகிழ்வித்தார்.விநாயகரும் பரசுராமரை மன்னிக்கும்படி பார்வதியிடம் கூறினார் . பரசுராமரும் தனக்கு சிவன் அளித்த மழுவை விநாயகருக்கு அளித்து வாழ்த்தி விடை பெற்றார் .

http://www.storiesinpuranas.com/2012/11/blog-post_7792.html

ஒரு முறை விநாயகர் பக்தர்கள் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டார்.மிகப்பெரிய விருந்து .பலகாரங்களையும் இனிப்புகளையும் நிறையவே சாப்பிட்டார் விநாயகர் .அதிக அளவு உட்கொண்டதால் ஜீரணமாவதற்கு சற்று சிரமமாக இருந்தது.முன்னிரவு நேரம்.நிலவு பட்டப்பகல் போல் காய்ந்து கொண்டு இருந்தது.காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.எனவே தனது வாகனமான எலி மீதேறி ஒரு வலம் வர நினைத்துப் போகும் வழியில் எங்கிருந்தோ ஒரு பாம்பு வந்து எலியைப் பயமுறுத்தியது .பாம்பைப் பார்த்த எலி நிலை தடுமாறியதில் விநாயகர் தலைகுப்புற விழுந்து அவரின் பெருத்த வயிறு தரையில் மோதி பிளந்து, சாப்பிட்ட உணவெல்லாம் வெளியே வந்து விழுந்தது. விநாயகர் தனக்கு வந்த கோபத்தை சாமார்த்தியமாக அடக்கிக்கொண்டு குறுக்கே வந்த அந்தப் பாம்பைப் பிடித்து அதை தனது வயிற்றில் கயிறு போல் இறுக்கமாக கட்டிக்கொண்டு தனது எலி வாகனத்தின் மீதேறி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரனுக்கு சிரிப்பு கொப்பளித்துக்கொண்டு வந்தது.விநாயகரை எள்ளி நகையாடினான்.இதனால் கோபமுற்ற விநாயகர் தனது இரண்டு தந்தங்களில் ஒன்றை ஒடித்து மமதை கொண்ட சந்திரனின் மீது வேகமாக வீசினார்.சந்திரன் இரண்டாக உடைந்தான்.மேலும் சந்திரனைப் பார்ப்பவர்களுக்கு கெட்டதே நடக்கும் என்றும் சாபம் கொடுத்தார்.சாபத்தைக் கேட்ட சந்திரன் மிகவும் வருத்தமுற்றான்.தன் தவறை உணர்ந்தான்.விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு கொடுத்த சாபத்தை நீக்குமாறு வேண்டிக் கொண்டான்.ஆனால் விநாயகரோ தான் கொடுத்த சாபத்தை தானே நீக்கமுடியாது என்றும், வேண்டுமானால் பரிகாரமாக சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாக வளர்ந்து பின் பதினைந்து நாட்கள் தேய்பிறையாக தேய்ந்து போகலாம் என்று கூறி தனது சாபத்தின் வீர்யத்தைக் குறைத்தார்.மேலும் சந்திரனைப் பார்ப்பவர்களுக்கு கெடுதல் நடக்கும் என்பதை மாற்றி சதுர்த்தசி அன்று நிலவைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் கெடுதல் நடக்கும் என்று கூறி சந்திரனை மன்னித்து அனுப்பி வைத்து தனது பயணத்தை தொடர்ந்தார் .

மற்றொரு கதை
வியாசர் மகாபாரதத்தை எழுதினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர் மகாபாரத சுலோகங்களைச் சொல்ல அதை ஓலைச்சுவடியில் எழுத ஒரு உதவியாளர் தேவைப்பட்டார். எனவே வியாசர் விநாயகரை அணுகி மகாபாரதத்தை எழுதும் பணியில் தமக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.விநாயகரும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார்.அந்த நிபந்தனையானது என்னவென்றால் வியாசர் சுலோகங்களைச் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதிக்கொண்டே இருப்பார் .வியாசர் சொல்வதை நிறுத்தினால் மேற்கொண்டு விநாயகர் எழுதமாட்டார் என்பதுதான்அது. வியாசரும் ஒரு நிபந்தனை இட்டார் விநாயகருக்கு.அதாவது வியாசர் சுலோகங்களைச் சொல்லச் சொல்ல அந்த சுலோகங்களின் பொருளை உணர்ந்தபிறகே அவர் எழுதவேண்டும் என்பதுதான் அது.இப்படியாக மகாபாரதத்தை வியாசர் சொல்ல விநாயகர் எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் விநாயகரின் எழுத்தாணி உடைந்தது.வியாசரோ நிபந்தனையின்படி சுலோகங்களை சொல்லிக்கொண்டே இருந்தார் .விநாயகரும் நிபந்தனையின்படி எழுதிக்கொண்டே இருக்கவேண்டும்.இதற்காக தன் தந்தங்களில் ஒன்றை உடனடியாக ஒடித்து ,அதை எழுத்தாணியாக உபயோகித்து, தொடர்ந்து எழுதி மகாபாரதத்தை எழுதி முடித்தார் நிபந்தனையின்படி.இப்படியாக அவர் ஒற்றைக்கொம்பன் விநாயகன் ஆனார்.

இந்தக்கதை முற்றியது.

- நன்றி (http://www.storiesinpuranas.com) 

தொடர்புடைய சிறுகதைகள்
சனி ஊனமான கதை
சூரிய குடும்பத்தில், சனி சூரியனிலிருந்து ஆறாவது கிரகமாகவும் இரண்டாவது பெரிய கிரகமாகவும் உள்ளார்.அவருக்கு அறுபத்திரண்டு உபகோள்கள் உள்ளன.சூரிய குடும்பத்தில் சூரியனைச்சுற்றி வரும் கிரகங்களில் மிகவும் மெதுவாகச் சுற்றி வரும் கிரகம் சனி ஆகும். சனி ,சூரியனை ஒரு முறை சுற்றி வலம் வர ...
மேலும் கதையை படிக்க...
சனி ஊனமான கதை

விநாயகன் ஒற்றைக்கொம்பன் ஆன கதை மீது 2 கருத்துக்கள்

  1. பாரதி says:

    சதுர்த்தி அன்று விநாயகரை பார்க்க கூடாது.
    சதுர்த்தசி இல்லை.

  2. Tamil Saravanan says:

    மிக நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)