ஐயம் இட்டு உண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2023
பார்வையிட்டோர்: 2,574 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள்.

ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது. நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான். இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் வயலின் இசையொன்று அந்த ஊர்ச் சிறுமிக்குச் சொந்தமானது என்பதும் அறிக.

வடக்கு மலையில் உற்பத்தியாகி, நாஞ்சில் நாட்டின் குறுக்கே பாயும் பழையாற்றின் அக்கரை அது. ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி அது. ஒருகாலம் என்பது அண்மையான ஐம்பது ஆண்டுகளே. இன்றும் அது வற்றாத நதிதான்., ஆனால் ஜீவநதி அல்ல. வடமேற்க்கு பருவ மழையும் தென்கிழக்கு பருவ மழையும் பொழிந்து வளமாக்கும், நீளமான நீல மலைக்காட்டில் ஊறி ஒழுகிவரும் ஆறு அது. பூதப்பாண்டியின் இறச்சகுளத்தின் புத்தேரியின் கீழ்புறமும் திருப்பதிசாரத்தின் மேற்புறமுமாக மிகுந்த கலகலப்புடன் ஓடிவரும் ஆறு, வீரநாராயண மங்கலத்தில் பாறையாறு என்றழைக்கப்பட்டது. வழியெங்கும் அந்த ஆற்றில் மாடு குளிப்பாட்டுவார், மனிதர் குளிப்பார், துவைப்பார், நெல்வயற் புரவுகளில் மிஞ்சும் தண்ணீர் ஓடையாகி வந்து கலக்கும். எனினும் ஆறு அசுத்தப்படுவதில்லை. அழுக்குகளை மீன்கள் தின்னும். கொழுப்புச் சேராத இளம்பெண்ணின் மென்மயிர் சிலிர்க்கும் அடிவயிற்றுப் பரப்புபோல நிரப்பாக வெளுத்துக் கிடக்கும் மணல் அரிக்கும். கரை ஓரங்களில் நிற்க்கும் நாணல், தாழை, பேய்க்கரும்பு, கோரை,ஆனைஅருக்கம்புல் புதர்கள் சலிக்கும். பிறவிப் பயன்போல ஆறு சுத்தமாக ஓடிவந்து கொண்டிருக்கும். நின்று கால் நனைத்தால் குனிந்து செம்பவள நகம் பார்க்கலாம். மேலும் குனிந்தால் முகம் பார்க்கலாம். காவிரிக்கு கொள்ளிடம் போல, பழையாற்றுக்கு நாகர்கோவில் வடிவீசுவரத் துக்கு கிழக்கே, மேலக்கருப்புக் கோட்டைக்கு சற்று முன்பு, பத்தடி கனசதுரத்தில் நகரத்து மொத்தத் தூம்பும் மல மூத்திர கழிவுக் கசட்டுக் கரைசலாகிக் கருத்து நுரைத்து அழுக்குத் திரண்டு, ரசத்து வண்டல் போலக் குறுகுறுனெக் கலந்து குமுகுமுவென வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது இன்று.ஆறு ஆவென வாய்பிளந்து செத்து மலந்து மிதக்கிறது இன்று.

இடலாக்குடியும் ஆசிராமமும் சுசீந்திரமும் அக்கரையும் அதைத் தாண்டி நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னையின் காலடி வரை இப்படித்தான் ஐயா ஆறு பாய்கிறது! எங்ஙனம் மாந்தர் ஆற்றில் இறங்கி, முகம் கழுவி, வாய் கொப்பளித்து, இரண்டு கை அள்ளிக் குடிப்பார்கள்?

சுவர் இருக்கும் இடமெல்லாம் அரசு விளம்பரம் எழுதி வைக்கிறது-

திறந்த வெளியில் மலம், மூத்திரம் கழிக்காதீர்!

தண்ணீரை வடிகட்டிக் காய்ச்சிக் குடியுங்கள்!!

சமைக்குமுன் காய்களையும் உண்ணுமுன் கனிகளையும் முழுதாக உப்பிட்ட தண்ணீரில் கழுவுங்கள்!!!

என்றெல்லாம்.

ஆனால் குடிநீராகப் பாயும் ஆற்றில் நகரத்து மொத்தச் சாக்கடையையும் கலக்கும் பஞ்சமா பாதகங்களைத் தோற்கடிக் கும் பெரும்பாவம் பற்றி நமக்கு என்ன கவலை? அரசுக்கு, முட் டாள்கள் உள்ளாடைகளினுள் ஒளித்து வைத்திருக்கும் வாக்கு களைக் களவாடினால் போதாதா? எனக்கு நாற்பது வயது கூட ஆகாதபோது எழுதினேன், வைகை எனும் பொய்யாக் குலக் கொடியைப் பார்த்தால் கிழட்டுத் தேவடியாளைப் பாப்பது போலுள்ளது என்று. இன்று என்ன எழுதுவது? அவளுக்கு எய்ட்ஸும் வந்துவிட்டது எனவா?

இன்றெனது கதைப்பொருள் அதுவல்ல. இதுவரை எழுதியது, சும்மா, மைக் டெஸ்டிங்.

ஆற்றுக்கு அக்கரையே ஆனாலும் அது அக்கரை எனும் பெயருடைய தனி ஊர். அக்கரையில் வலிய வீடு என்றால் சாமானியப்பட்டதல்ல. வலிய எனில் பெரிய, வலிந்து, திறமான எனும் பொருள்கள் உண்டு. திருவிதாங்கூர் மன்னராட்சிக் காலத் தில் நாஞ்சில் நாட்டின் பன்னிரு பிடாகைகளில் ஒன்றான சுசீந்திரம் பிடாகையில் பெருஞ்செல்வம், தென்னை வாழைத் தோப்புகள், நெற்கழனிகள் எனப் பெரிய குடும்பம் வலிய வீட்டில் வாழ்ந்திருந்தது.

பங்குனி – சித்திரை மாதங்களில் திருவிதாங்கூர் நாணயமான பச்சைக் களிம்பு பிடித்த செப்புச் சக்கரங்களை கம்பி அளி போட்ட வீட்டு முற்றத்தில் சாக்குச்சாக்காய் கொட்டி உலர்த்துவார்கள் என்றும் பொழித்தட்டுப் பலகை போன்று, ஆனால் பல்பல்லாய் அரம் வைத்த காம்பு நீண்ட பலகைகளால் காயும் சக்கரப் பரப்பைக் கிண்டி வெயில் முகம் காட்டி மறிப்பார்கள் என்றும் இன்றும் கதைகள் காற்றில் அலைகின்றன.

பண்பாடுகளை மட்டுமல்லாமல் பெரும் செல்வத்தையும் ஆற்றுவெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும்போல. காலம் என்பது கணக்கன் மட்டுமல்ல, காரியஸ்தனும் ஆவான்.

பெரும் முற்றமும் சிங்கங்கள் வெளியே வெறித்துப் பார்க்கும் உக்கிரமும் தீர்க்கமும் கொண்ட வாசல், தேக்குமர வாதில் கதவுகள், இரண்டடுக்கு தட்டட்டி போட்ட வீடு என்பன காலத் துக்குக் கணக்குச் சொல்லி நின்றன. அவகாசிகள் யாரும் தாமசம் இல்லை. கால்நடை மருத்துவ உதவியாளர் உத்தமசோழ நல்லூர் மீசைக்காரர் ஒருவர் குடும்பத்துடன் வாடகைக்குக் குடி இருந்தார். செம்பொற் காசுகள் களிம்பு மாறக் காய்ந்த முற்றத்தில் வெள்ளாடு கள் கட்டப்பட்டு புழுக்கைகளும் ஆல், அரசு, அத்தி, முள் முருங்கை, மரக் குழைகளும் குச்சிகளும் கிடந்தன.

வலியவீட்டுச் சந்ததிகள் அங்கண் மாநிலப் பரப்பெங்கும் பரவியும் விரவியும் கிடந்தனர். இங்கு மாநிலம் என்பது ஆழி சூழ் உலகம் எனும் பொருளே அல்லாது மொழிவாரி மாகாணம் எனும் பொருளில் அல்ல. கலிபோர்னியாவில் ஒருவர், நரோடாவில் ஒருவர், கல்பாக்கத்தில் ஒருவர், புனேயில் ஒருவர், பெர்த்தில் ஒரு வர், பெய்ஜிங்கில் ஒருவர் என எங்கும் கிளைகள் ஓடிக்கிடந்தனர்.

மார்த்தாண்டம் பிள்ளையும் கிளைத்துத் திரிந்த பரந்த வேர்ச் சல்லிகளில் ஒன்று. ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் இந்திய உபகண்டத்துத் துணைத் தலைவர். ஆறு கண்டங்களில் வாழும் ஏழரைக் கோடித் தமிழர் களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தானைத் தளபதி எனும் அடைமொழி போல.

மும்பை நேப்பியன் கடற்கரையில், அரபிக் கடலைப் பார்த்த படி மூவாயிரத்து அறுநூறு சதுரஅடி பங்களா. ஒரு ஒப்பீட்டுக்காக, உயரம் உணர்த்த, கோபுரத்தில் அடிவாரத்தில் மரம் ஒன்றின் சித்திரம் போடுவதைப் போல, மும்பையில் நூற்றறுபது சதுரஅடி வீட்டில் இரண்டு குடும்பங்கள் பொங்கித் தின்று, புணர்ந்து, உறங்கி வாழ்வதுண்டு.

மார்த்தாண்டம் பிள்ளையின் மகன், பண்டித நேரு காலத்திய சோசலிஸ்ட் தலைவரான டாக்டர் ராம் மனோகர் லோகியா நினைவு மருத்துவமனையில், தில்லியில், ஆன்காலஜி துறையில் தலைமை சர்ஜனின் மகளைத் திருமணம் செய்த உள்துறை செயலகத்தில் அன்டர் செக்ரட்டரியான இ.ஆ.ப.

மகள், டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில், மனித குலத்துக்கு அக்குளிலிலும் இன்னபிற மறைவிடங்களிலும் மயிர் வளராதிருப் பதற்கு உயராய்வு மேற்கொண்டிருப்பவள்.

மார்த்தாண்டம் பிள்ளை மனைவியுடன் ஊர் வரும் சந்தர்ப் பங்கள் அரிது. அவர் வான்வழி வரும் தினத்துக்கு முன்தினமே ஏ.சி. காரொன்று தயாராக நின்றிருக்கும். நாகர்கோயிலில் ஐந்து நட்சத் திரத்தரத்தில் விடுதிகள் இல்லை. ஏன், திருநெல்வேலியிலோ தூத்துக்குடியிலோ, கோவில்பட்டியிலோ, சாத்தூரிலோ, சிவகாசி யிலோ, ராஜபாளையத்திலோ, தென்காசியிலோ, அருப்புக் கோட்டையிலோ, சிவகங்கையிலோ, காரைக்குடியிலோ, தேவ கோட்டையிலோ, விருதுநகரிலோ இல்லை. மதுரையில் இருக்க லாம். எனவே விமானதளமும் ஐந்து நட்சத்திர விடுதியும் உள்ள திருவனந்தபுரத்தில் தங்குவார்.

எச்செலவும் நிறுவனம் தாங்கும் எனினும் முக்கியமான கல் யாணங்களுக்குத்தான் ஊர் வருவது. முக்கியமான கல்யாணங்கள் எனிலோ, அது தம்பி மகள், தங்கை மகன் என்ற முதல் சுற்றாக இருக்கும். காலை ஒன்பது -பத்தரை முகூர்த்தம் எனக் கொண் டால் பத்துமணி வாக்கில் வருவார். காலையில் காம்ப்ளிமென்டரி கான்டினன்டல் பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, பத்தரை மணிப் பந்தியில் உண்பது அசாத்தியம். மேலும் அவியல், எரிசேரி, புளிசேரி, ஓலன், துவட்டல், உப்பேரி, உப்பிலிடு, பிரதமன், சம்பாரம் எனக் காலை பத்தரை மணிக்கு காட்டுப்பயல்கள் தான் தின்பார்கள் என்பதில் அவருக்கு சர்வ நிச்சயமுண்டு. கரண்டி, கத்தி, முள்கரண்டி இல்லாமல் அவருக்குச் சாப்பிட்டுப் பழக்க மில்லை; வாழை இலையில் அதற்கு வகையும் கிடையாது.

தாலிகெட்டு முடிந்து, முதல் ஆளாகப் போய் நின்று, மணமக்களுக்குத் திருநீறு பூசி அன்பளிப்பாக குதிரைப்பவுன் ஒன்று கொடுப்பார். பவுன் தொண்ணூறு ரூபாய் விற்ற காலத்தில் தொடங்கி இன்று ஒன்பதாயிரம் விற்கும் போதும் அதுவே நியதி.

சம்பிரதாயமாக உறவினர்கள் பேசுவார்கள்.

“அவுனுக்கு எம்புட்டு சோலி? நம்மைப் போல கலியாண வீடு, காடாத்து வீடுண்ணு காவலு கெடக்க முடியுமா? காலம்பற ஏரோப்ளேன்லே வந்தானாம். இன்னா விசுக்குண்ணு மத்தியானம் பிளைட்டுலே போறானாம்… ஆனாலும் சும்மா சொல்லப்பிடாது. ஒரு கலியாணத்துக்கு வந்துட்டுப்போக பிளேனுக்கே இருவதினா யிரம் ஆகுமாமே! நமக்கு நாலு ரூவாயை எடுத்து முந்தியிலே முடிஞ்சுக்கிட்டு வந்தாப் போரும்… என்னா, நான் சொல்லுவது?”

மார்த்தாண்டம் பிள்ளை கொஞ்ச காலமாகப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றும் திகைந்து வரவில்லை. பொன்னும் பொருளும் விரிந்தகன்ற வீடும் விளை நிலமும் அவருக்கொரு பொருட்டில்லை. திருமண வரவேற்பை ஓபராய் ஷெரட்டனிலோ, அசோகாவிலோ, தாஜ் கொரமண்ட லிலோ காக்டெய்ல் பார்ட்டியாக வைக்க யோசனை உண்டு.

முக்காலே முண்டாணிக்கு மேல் தரங்களை பெண்ணே நிராகரித்தாள். இடது கை சுண்டுவிரல் மோதிர விரலிடுக்கில் நாலங்குல நீள சிகரெட்டும் பெருவிரலும் ஆட்காட்டி விரலும் பிடித்த கோனியாக் கோப்பையும் கிராப்புத் தலையும் தோளின் நாடாவில் தொங்கி முட்டுக்கு மேல் நிற்கும் ஆடையுமாக நடக் கும் பெண்ணுக்கு முற்றும் தீர்மானமாக நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவில் பச்சை அட்டை வைத்திருக்கும் இரு வழியும் தூய வந்த வெள்ளாளப் பையனாகத் தேடினார் மார்த் தாண்டம் பிள்ளை. ஈண்டு அறச்சீற்றம் கொண்ட பின்நவீனத்துவத் திறனாய்வாளருக்கு ஒரு சொல் – இருப்பதைச் சொன்னேன். அல்லாது இவண் தற்குறிப்பேற்றம் எதுவும் இல்லை. என்றாலும் சம்மந்தங்கள் தெரிசனங்கோப்பு, காட்டுப்புதூர், கடுக்கரை, தோவாளை, மைலாடி, நல்லூர், கொட்டாரம், இரணியல், களி யக்காவிளை, தேரூர், தெங்கம்புதூர் எனப்பட்ட ஊர்களிலிருந்தே வந்தன.

ஒன்றுகூட ஒத்துப்போகவில்லை.

இந்தப் பிள்ளை, தனது சொந்தப் பிள்ளை, நல்ல பிரபுக்கள் குடும்பத்து ஐரோப்பியனையோ, அமெரிக்கனையோ, ஆப்ரிக்

கனையோ, அராபியனையோ தேர்ந்தெடுத்திருந்தால் கூடப் பொருட்படுத்தி இருக்கமாட்டார்.

சினிமாவில் ரசித்துப் பார்ப்பதை வீட்டில் பார்க்க மக்கள் விரும்புவதில்லை. ஒரு கட்டத்தில் இந்த நாஞ்சில் நாட்டுப் பர தேசிகள் மீது மார்த்தாண்டம் பிள்ளைக்கு சலிப்பாக இருந்தது.கல் யாணம் என ஒன்று நடந்து சிலகாலம் சென்று மணமுறிவு ஆனால் கூட அவருக்கு சிக்கலில்லை. பண்பாடு நகர்ந்து நகர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து, நடந்து நடந்து இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது தலை தெறிக்க. சில சமயம் இரண்டு பாம்புகள் வளையமாக வால் கவ்விக்கொண்டு சுழல்வதாயும் தோன்றுகிறது.

எவர் எப்போது வி-ஜிக்ஷி பாடகராக, சனாதனப் பிழம்பாக அறிமுகம் ஆவார் என்பதை அறியக் கூடவில்லை.

குறுக்கிப் பார்த்தால் – ஆடையிலும் அணிகளிலும் உண்ப திலும் பருகுவதிலும் என்ன இருக்கிறது, அகம் பிரகாசமாக இருந்தால் போதாதா எனவும் தோன்றுகிறது!

கடைசியில் புளியங்குறிச்சிப் பண்ணையார், கரும்புலி முகத்துவீடு கனகசபாபதிப் பிள்ளையின் வாரிசொன்று வாய்த்தது மாப்பிள்ளைத் தரமாக. பையன் அரிசோனாவில் கம்ப்யூட்டர் வன்பொருட் பொறியாளர். டாலரை இந்திய ரூபாயில் பெருக்கிச் சொன்னால் மாதம் நாற்பது இலட்சம் ரூபாய், அமெரிக்கக் குடியுரிமை, பெரிய தோட்ட மாளிகை, மாளிகையைப் பராமரிக்க தோட்டக்காரர், ஓட்டுநர் எனப் பணியாட்கள். காவல் நாய் உள்பட எல்லோருக்கும் தனித்தனி ஊர்திகள்.

மாப்பிள்ளை வீட்டார் ஒரேயொரு நிபந்தனைதான் வைத்தார்கள். வரவேற்பு எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் திருமணம் சொந்த ஊரில்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.

“நம்ம ஆளுகளுக்கு ஒரு நேரத்துக்கு சாப்பாடு போடாண் டாமா? நாம எத்தனை கலியாணத்துக்குப் போயி சாப்பிட்டிருக் கோம்?”

கோரிக்கை நியாயமானதாகவே தோன்றியது.

மார்த்தாண்டம் பிள்ளையின் உள்ளூர் உறவினர்கள் ஏற்பாடு களைச் செய்து வந்தனர். சுத்தமான நாஞ்சில் நாட்டுச் சமையலாக இருத்தல் வேண்டும் என்றார். எத்தனை செம்பு அரிசி வைக்கலாம் என்ற கேள்வி வந்தது.

ஒரு காலத்தில் ஒரு செம்பு அரிசி வைத்தால் கடுக்கரை, ஆரல்வாய்மொழிக்காரர்கள் செம்புக்கு எண்பது பேரும் தேரூர், சுசீந்திரம், தாழக்குடிக்காரர்கள் செம்புக்கு நூறு பேரும், நகரவாசி கள் அனைவருக்கும் குறும வயிற்றுவலி என்பதால் செம்புக்கு நூற்றிருபது பேரும் சாப்பிடுவார்கள். ஒரு செம்பு என்பது ஏழு மரக்கால் அரிசி. அதாவது இன்றைய கணக்கில் முப்பத்தைந்து கிலோ. இன்று யாரும் செம்புக்கணக்குப் பார்ப்பதில்லை. ஒரு செம்பு என்பது இருபத்தைந்து கிலோ கொண்ட டொப்பி புழுங் கலரிசிப் பை என்றாயிற்று. வைப்புக்காரன் தாழக்குடி சாத்தாங் குட்டிப் பிள்ளை சொன்னார், இன்று ஒரு பை அரிசி போட்டால் இருநூறு பேர் சாப்பிடுவார்கள் என்று. பத்துப் பை பொங்குவது என உறுதியாயிற்று. தேங்காய், காய்கறிகள், பழக்குலை, இலைக் கட்டு, வெஞ்சண சாமான்கள்…

அவியல், துவட்டல், எரிசேரி,பச்சடி, கிச்சடிகள், உப்பேரி, ஆனைக்கால் பப்படம்,பருப்பு,சாம்பார், புளிசேரி,ஒலன், ரசம், சம்பாரம், கதலிப்பழம் அடக்கம் இருபத்திஒன்று கூட்டான்கள். சமையல் தனித் தேங்காய் எண்ணெயில். தேவைக்கு மட்டும் நெய்யும் நல்லெண்ணையும். சிறுபயிற்றம் பருப்பு பிரதமன், சக்கைப்பழம் பருவகாலம் இல்லை என்பதால் ஏத்தன் பழம் பிரதமன்,போளியுடன் பாலடைப் பிரதமன்.

வடக்கு மலையின் தாட்டு இலை. சம்மணம் போட்டு உட் கார்ந்தால் தொடை முட்டுக்கு முட்டு சரியாக இருக்கும். இன்று எந்தப் பந்தியிலும் பந்திப்பாய் விரித்த தரையில் அமர்ந்து எவரும் சாப்பிடுவதில்லை.

இந்த முறை திருவனந்தபுரத்தில் தங்கினால் ஆகாது என நாகர்கோயிலிலேயே உள்ளதில் தரக்கேடில்லாத விடுதியில் அறை போட்டிருந்தார். தனது உபயோகத்துக்கு ஒரு காரும் பாரி யாள் உபயோகத்துக்கு ஒரு காரும்.

எழுத்துக் கொடுத்து முடிப்பதற்குள் முதுகெலும்பும் இடுப் பெலும்பும் இற்றுவிடும் போலிருந்தது. மார்த்தாண்டம் பிள்ளை பிறந்து வளர்ந்ததில் இருந்து மாத்தாலும் சீதப்பாலும் கணியா குளமும் குருக்கள்மடமும் மருங்கூரும் இரவிபுதூரும் கருப்புக் கோட்டையும் காக்கம்புதூரும் தேரேகால்புதூரும் வீமநகரியும் பொதேரியும் நாவற்காடும் ஈசாந்திமங்கலமும் உறவினர் வாழும் இடங்கள் என்றாலும் வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்.

நல்லவேளையாக எழுத்துக் கொடுக்க, ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் கூடவே அலைந்தனர். கார் நுழைய இடமில் லாத முடுக்குகளில் நடக்க வேண்டியதிருந்தது. சிலசமயம் நன்னீர் போத்தல் தீர்ந்து போயிற்று, வாங்கவும் கிட்டவில்லை. சிலசமயம் அன்பு மீதுற உறவினர் தரும் பால் பற்றாத காப்பி போன்ற நூதனத்தைக் கண்மூடி ஒரு மிடறு விழுங்க வேண்டியதிருந்தது.

1962 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட, எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்த, திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர்.ப. நடராஜனுக்கு இந்த அவஸ்தை இருந்தது. நாய் வேடம் புனைந்தால் வாலாட்டாமல் ஒக்குமா?

பெருங்கூட்டம் வரும் என்று எதிர்பார்த்தார் மார்த்தாண்டம் பிள்ளை. ஆலப்புழை சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் நாடகத்தில் குடிலன் எனும் எதிர்பாத்திரத்தின் மூலம் சொல்லும் வரியொன்று உண்டு ‘நாஞ்சில் நாட்டான் நஞ்சிலும் கொடியோன்’ என. சிலசமயம் அதுவெனக்கு சரி எனப் பட்டதுண்டு. ஆனால் சத்தமாக வெளியே சொல்ல முடியாது. கருத்துச் சுதந்திரம் அது இது என்றாலும் ஊரில் நடமாட இயலாது.

எழுத்துக் கிடைத்தபின் மேற்சொன்ன ஊர்களில் சொந்தக் காரர், சொக்காரர், மாமன் மச்சினன் வீடுகளின் படிப்புரைகளில் கேட்ட சில உரையாடல்கள் காலத்தில் பதிவுபெறாமல் இன்னும் காற்றில் அலைதருபவை.

“ஆமா, இவங்கூப்பிட்ட ஒடனே போயிச் சாடீர வேண்டியது தான! சவம், சோத்துக்கு அலந்துல்லா கெடக்கோம்?”

“எங்க வீட்ல, ஒண்ணு ரெண்டுல்ல, நாலு கலியாணத்துக்கு எழுத்து குடுத்தோம்! எட்டியே பாத்தானில்லே! ஒரு தந்தி கூடக் குடுக்கல்லேண்ணா பாத்துக்கயேன்!”

“அவம் பணம் அவங்கிட்ட இருக்கும். மூணு பிரசமன் இல்லேண்ணா நமக்குச் சோறு ஏறங்காதா! எண்ணைக்கும் உள்ள பத்துந் தண்ணியும் இல்லாமலா போச்சு?”

“ஆமாமா! மூணு பாயசம்ணா அரை வேட்டி அவுந்தது தெரியாம ஓடி வந்திருவாம்ணு நெனைச்சான் போல்ருக்கு…”

“போன மொற, அவுனுக்கு மச்சினனுக்கு மகளுக்கு கலி யாணத்துக்கு வந்திருக்கச்சிலே, சின்னப் பயலக் கூட்டீட்டுப் போயி, காவலு கெடந்து, சொல்லீட்டு வந்தம் பாத்துக்கோ, இந்தப் பயலுக்கு ஒரு வேல பாத்துக் குடுண்ணு. ஈண்டு கேட்டாமில்லே…”

“அவ அம்மை இருக்கச்சிலே மகனுக்கு நாட்டுக்கோழி முட்டை அடிச்சுக் குடுக்கணும்ணு வந்த காவலு கெடப்பா. பொட்டக்கோழி முட்டை விடக்கூடப் பொறுக்காம, கோழிக்கு குண்டியிலேருந்து புடுங்கீட்டுப் போவா… அதெல்லாம் இண்ணைக்கு ஓர்மை இருக்கவா போகு?”

“எனக்க அக்கா மகன் பம்பாய்க்கு வேல கெடச்சுப் போயி, ஒரு நா வீட்டுக்குப் பாக்கப் போயிருக்கான். வந்த பயல வாண்ணு சொல்லல்லியாம். ஒரு மடக்கு தண்ணி போட்டுக் குடுக்கலியாம்!”

“அவ்வ வீட்லே ஆணும் பொண்ணும் சிகரெட்டு குடிப் பாளாமே!”

“சிகரெட்டா? நீ யொருத்தன்… தண்ணி அடிப்பாளாம் எல் லாரும் கூடி இருந்து, ”

“எங்க வீட்டுக்கு எளுத்து கொண்டுக்கிட்டு வரச்சிலே,பாலு கூட இல்ல பாத்துக்கோ! பொறவாசல் வழியாட்டுப் போயி, பங்கசக்கா வீட்ல வாங்கியாந்தேன். சுடச்சுட போட்டு ஆத்திக் குடுத்தா, ஒரு மடக்கு குடிச்சிட்டு அப்டியே வச்சுட்டு போயிட்டா பாத்துக்கோ.”

“சவம், அவ்வ அலங்காரத்துக்கு நாமோ பெறுவமா?”

“எங்க வீட்ல, தூசியாட்டு இருக்குண்ணு கசேரியில கூட இருக்கல்லே…”

கடைசியில் பெண்வீட்டு வாக்குப்பதிவு கவிழ்த்துவிட்டது. பெண்வீட்டு ஆட்கள் எண்ணி நூறு பேரில்லை. மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டு முடிந்த மூன்றாவது பந்திக்குப் பிறகு சாப்பிட ஆளில்லை. ஒன்றரை மணிக்கே பந்தி ஒதுங்கிவிட்டது.

பிந்திய முகூர்த்தம், பத்தரை – பதினொன்றரை. ஏகப்பட்ட மிச்சம், நாலு செம்பு அழியவில்லை.

அண்டா, அண்டாவாகக் கறிகள், குழம்புகள், பிரதமன்கள்.

மிச்சத்தை என்ன செய்வது?

மாற்றி மாற்றி ஆலோசித்து, மிச்சம் மீதியைப் பெரிய பெரிய போணிகளுக்கு மாற்றி, மினி லாரியொன்று பிடித்து, பாரம் ஏற்றி, சுங்கான்கடை மலை அடிவாரத்தில் இருக்கும் அனாதை ஆசிரமத் துக்குக் கொண்டு போய்ச்சேர்த்தபோது மணி மூன்றாகிவிட்டது.

அனாதை ஆசிரமத்தின் கேட் சாத்தியிருந்தது. தகவல் கேட்ட காவலாளி உள்ளே போனான். உணவெல்லாம் முடித்து சற்று ஓய் விலிருந்த சாமியார் அங்கி அணிந்து அதன்மேல் சின்னம் தொங்கிய துறவுமாலை அணிந்து கேட்டுக்கு நடந்து வந்தார். வெளியே வந்து விவரம் கேட்டார்.

“சாமி, அக்கரை வலியவீட்டு மார்த்தாண்டம் பிள்ளைக்கு மக கல்யாணம். ஒரு வாடு மிச்சம் பாத்துக்கிடுங்கோ… வம்பாக் களையாண்டாம்ணுட்டு எல்லாத்தையும் லாரியிலே ஏத்திக் கொண்டாந்தோம். எல்லாம் இருக்கு.. சவம், பாழாப்போறது பசு வயத்திலே போட்டும்… பாவப்பட்ட பிள்ளையோ திண்ணுட்டுப் போட்டும்ணு.. எங்கிண எறக்கட்டும்.. பாத்திரத்தை வேணும்ணா பொறவு வந்து வாங்கிக் கிடுகோம்…”

“இறக்கதுக்கு வரட்டும். உங்கள்ளே யாரு மார்த்தாண்டம் பிள்ளை?”

“சாமி என்ன கேக்கியோ? அவரெல்லாம் இங்க வருவாரா? சொல்லி அனுப்பினாரு…”

“ஓகோ… யாராம் செல்ஃபோன் வச்சிருக்கேளா? நம்பர் போட்டுக் குடுங்கோ… அவுருட்டே ஒரு வார்த்தை பேசட்டும்…” எண்ணை விரலால் குத்திக் கொடுத்தான் காரியஸ்தன்.

“நான் சுங்கான் கடை அனாதை ஆசிரமத்து சாமியாரு மார்த்தாண்டம் பிள்ளையா? சார், நீங்க ஒரு காரியம் மன சிலாக்கணும். எங்க பிள்ளையளுக்கு சாப்பாடு குடுக்கணும்ணா நீங்க தலைக்கா நாளே வந்து சொல்லணும். கஞ்சிண்ணாலும் நாங்க பிள்ளையளுக்கு ஒண்ணரை மணிக்குள்ளே குடுத்திரு வோம்… எல்லாம் இப்பம் சாப்பிட்டு முடிச்சு அடுத்த வேலைக் குப் போயாச்சு. பருப்பும் பாயாசமும் வரும்ணுட்டு நாங்கோ சொப்பனம் காணல்லேல்லா பாத்தேளா?”

“…”

‘ராத்திரி வச்சிருந்து குடுத்தா அது ஊசிப் போகாதா? பொறவு நாலு பெயக்களுக்கு வாந்தியோ வயத்துப்போக்கோ வந்தா அம்புடு பேரையும் ஆஸ்பத்ரிக்கு கூட்டீட்டப் போணும். பேப்பர் காரன் அனாதை விடுதி சாப்பாட்டிலே விஷம்ணு எழுதுவான்.”

“…”

“சார், தானம் குடுக்கப்பட்ட எண்ணம் இருந்தா, நீங்க முன் கூறாச் சொல்லி ஏற்பாடு செய்து, சமயத்துக்கு கொண்டுக்கிட்டு வரணும்.சவம், தூர ஊத்துகதை இதுக திண்ணுட்டுப் போட்டும்ணு நெனைக்கியோ பாருங்கோ, அதுதான் எனக்கு மனசிலாக மாட்டங்கு… எனக்க பிள்ளையோ, அனாதைதான். ஆனா பிச்சைக்காரங்க இல்ல பாத்துக்கிடுங்கோ….”

செல்ஃபோனை அமர்த்தி காரியஸ்தன் கையில் கொடுத்தார்.

“சாமி, அப்பம் எறக்கிரலாமா?”

“வேண்டாம். மண்டபத்துக்குப் போயி பொண்ணு மாப்பிள்ளைக்கு அம்மைமாரு அப்பன்மாரு தலைலே ஊத்துங்கோ…ம்…வண்டியைத் திருப்புங்கோ… போட்டும்… கொஞ்சம் பேரு இஞ்ச பெறப்பட்டிருக்கான் புதுசாட்டு, தர்மம் செய்யதுக்கு…”

சாமியார் கேட்டைத் திறந்து உள்ளே விரைந்து நடந்தார்.

வண்டியைத் திருப்பச் சொன்ன காரியஸ்தனுக்கு யோசனை. செம்மான் குளத்தங்கரையில் பாத்திரங்களைக் கவிழ்த்து விட்டுப் போகவா இல்லை மண்டபத்துக்கே கொண்டு சேர்ப்பதா என.

அடியந்திரக்காரர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று “மண்டபத்துக்குப் போ” என்றான் வாகன ஓட்டியிடம்.

– வார்த்தை ஏப்ரல் -2008.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *