குப்பைக்காரன்

 

முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் “உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் “என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் தேடி ஏமார்ந்து போனான்.

வில்லியம்ஸ் உலகப் புகழ் பெற்ற இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளிலேயே அதிபுத்திசாலியாக தானிருந்தும் மற்றவர்கள் “குப்பைக்காரன்” என்று தன்னை அழைப்பதை வில்லியம்ஸ் கொஞ்சமும் விரும்பவில்லை.இவனொன்றும் தெருவில் போடப்படுகின்ற குப்பைகளை அள்ளும் குப்பைக்காரன் அல்ல.

விண்வெளியில் பல நூறு கிலோ மீட்டர் உயரத்தில் சிறியதும் பெரியதுமாக பல லட்சம் ஓட்டை உடைசல்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் செயலற்றுப் போன செயற்கைக்கோள்களின் கழன்ற உறுப்புகள். செயற்கைக்கோள்களைச் செலுத்திய ராக்கெட்டுகளின் உடைந்த பாகங்களும் இதிலடங்கும். இந்த விண்வெளிக்குப்பைகளை லேசர் கற்றை மூலமாக இங்கிருந்தே அழிப்பதுதான் வில்லியம்ஸின் வேலை.

எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல ஜடாயுவில் பயணம் செய்யப்போகும் வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லாததால் அவர்கள் அனைவரையும் பழிவாங்கும் கொடூர எண்ணம் வில்லியம்ஸுக்கு தோன்றியது.

உடனடியாக செயலில் இறங்கிவிட்டான். விண்வெளியில் ஒரு ராக்கெட்டின் உடைந்த பாகம் சுற்றிக்கொண்டிருப்பதை தொலைநோக்கியில் பார்த்தவுடன் அவனது மூளைக்குள் குடிகொண்டிருந்த கொடூர எண்ணம் உடலெங்கும் பரவ ஆரம்பித்தது.

வழக்கமாக இது போன்ற குப்பைகளை லேசர் கற்றை செலுத்தி அழித்துவிடுவது இயல்பு. அதுதான் அவனது வேலையும் கூட. ஆனால் இப்போது அந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை செலுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான் வில்லியம்ஸ். இரு வார கடும் முயற்சிக்குப் பின் வில்லியம்ஸ் விரும்புகின்ற இடத்திற்கெல்லாம் அந்த ராக்கெட் துண்டு பயணித்தது.

இதற்கிடையில், இவன் செய்கின்ற வேலையைக் கண்காணிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ரோபோவுக்குத் தெரியாமல் இதனை செய்தாகவேண்டும். ஏனெனில், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை அந்த ரோபோ இவனது மேலாளருக்கு ரிப்போர்ட் அனுப்பும். ஆனால் அதிபுத்திசாலியான வில்லியம்ஸுக்கு அந்த இயந்திர மனிதனை கட்டுப்படுத்துவது பெரிய விசயமாக இருக்கவில்லை. ரோபோவுக்கு கட்டளைகளை பிறப்பிக்கும் கணினியில் புதிதாய் ஒரு புரோக்ராம் எழுதி ரோபோவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா விண்ணுக்கு செலுத்திய கொலம்பியா ஓடத்தின் இறக்கை மீது ஏதோ ஒரு பொருள் மோதியதால் ஒரு இந்திய வம்சாவளிப் பெண் உட்பட ஏழு விஞ்ஞானிகளின் உயிர் பறிக்கப்பட்டது. அது ஒரு தற்செயலான நிகழ்வு.

அதே போல் இந்த உடைந்த ராக்கெட் துண்டை லேசர் கற்றை மூலமாக செலுத்தி
இந்தியா விண்ணிற்கு அனுப்ப இருக்கும் “ஜடாயு” ஓடத்தில் மோதச்செய்துவிடுவதுதான் வில்லியம்ஸின் திட்டம். இதுவும் ஒரு தற்செயலான செயல் என்றே உலகம் எண்ணும். தனக்கு கிடைக்காத வாய்ப்பு தன்னை கேலி செய்யும் மற்றவர்களுக்கு கிடைப்பதா?

14/ஆகஸ்ட்/2053.

விண்வெளியில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உடைந்த ராக்கெட்துண்டு ஜடாயு மீது மணிக்கு 32 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் மோதும்படி கச்சிதமாக ஒரு புரோக்ராம் எழுதினான் வில்லியம்ஸ். அவனது இதழ்களில் கொடூரமான ஒரு புன்னகை உருவாயிற்று.

15/ஆகஸ்ட்/2053 அதிகாலை நான்கு மணி.

பெருத்த சத்தமுடன் விண்ணோக்கி கிளம்பியது ஜடாயு.

ஜடாயுவின் உள்ளே…

மெதுவாய் கண்விழித்த வில்லியம்ஸை சுற்றிலும் கவசமணிந்த சக பணியாளர்கள் விண்வெளி ஓடத்திற்குள் மிதந்தவாறு கண்ணடித்தார்கள். தன் காதுகளில் மாட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரில் அவர்களுடைய பாட்டுச் சத்தம் சன்னமாக கேட்டது. “ஹாப்பி பேர்த்டே டு யூ!!”.

(வலைப்பதிவர் சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது) 

தொடர்புடைய சிறுகதைகள்
கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது. அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத். "என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர். பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத். "சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே ...
மேலும் கதையை படிக்க...
1. கண்களை திறக்க முடியவில்லை.உடலெங்கும் பரவிய வலி கண்களில் குவிந்திருந்தது. பலமான காற்று வீசுவதும் மரக்கிளைகள் வேகமாய் அசைவதும் உணர முடிந்தது. மிகுந்த வலியுடன் கண்களை திறந்து பார்த்தான் இராவணன். தான் எங்கிருக்கிறோம் என்பது முதலில் புரிபடவில்லை. காய்ந்த புற்களும் இலவம் பஞ்சைப் ...
மேலும் கதையை படிக்க...
கையில் வெட்டரிவாளுடன் விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான் கந்தசாமி. அழுக்கு வேட்டியின் இடுப்பு முடிச்சிலிருந்து நைந்த பீடி ஒன்றை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். தலைப்பாகைக்குள் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து குலுக்கிப்பார்த்து திறந்தபோது உள்ளே ஒரே ஒரு உடைந்த தீக்குச்சி மட்டுமே ...
மேலும் கதையை படிக்க...
குளிச்சு ரெண்டு வாரமாச்சு...பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும். அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம். போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்... என் நேரம் அப்பவும் சாவு ...
மேலும் கதையை படிக்க...
"அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன். "சொல் நரசிம்மா" "நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில் ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
கண்ணே தேன்மொழி!
சித்திர வதனி
தாய்மை
எம் பொழப்பு!
விசித்திர உருளைch2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)