விசுவாசம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 3,086 
 

“கண்ணப்பா….என்ன மசமசன்னு நிக்கிற…போய் அந்த சமாசாரங்கள எல்லாம் கொண்டா….ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது…”

“எத சொல்றீங்க சார்…?”

“தெரியாத மாதிரி நடிக்காத..என்னோட பீரோவுல துணிக்கு பின்னாடி வச்சிருக்கிற சாமானத்தான் சொல்றேன்.”

“சார்..இது கொஞ்சம் ஓவராத்தோணுது.அம்மா பிளேன் கூட இன்னும் கெளம்பி இருக்காது…”

“இதப்பாரு.. அவுங்க போர்டிங் பாஸ் வாங்கிட்டு , ‘பிளேன்ல ஏறி உக்காந்திட்டேன்’ னு சொன்னப்புறம்தானே நாம கெளம்பினோம்…

ஏதாச்சும் பிரச்சனையிருந்தா நம்பளத்தான் கூப்பிடப்போறா… அதுக்குள்ள இதெல்லாம் எடுத்து வைக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் ?

பேசாம போய் இரண்டு கிளாஸ், ஐஸ் , இத்தியாதி, இத்தியாதியெல்லாம் எடுத்திட்டு வா..!

கடைசியில நீதான் ‘போதாது சார்.. இன்னொரு ரவுண்டு’ ன்னு சொல்லுவ.உன்னத் தெரியாதா…?”

அசட்டு சிரிப்பு சிரித்தான் கண்ணப்பன்..

சகாதேவனின் மனைவி திலகா ஆறுமாசம் அமெரிக்காவில் இருக்கும் பெண் மஞ்சுவின் வீட்டுக்கு கிளம்பி போய் முழுசாக மூணு மணிநேரம் கூட ஆகவில்லை..

அதற்குள் சகாதேவனுக்கு அவசரம்…

சமையலுக்கோ கண்ணப்பன் இருக்கிறான்..அவனே சாரதி..அப்புறம் வேறென்ன வேண்டும்?

ஆறு மாதத்துக்கு அறுநூறு திட்டம் கைவசம் தயாராய் இருக்கிறது…

கண்ணப்பன்’ பார்ட்னர் இன் க்ரைம்..’ இரண்டு பேருக்குமே…

“கண்ணப்பா . நாளைக்கு முழுசும் உனக்கு ஹாலிடே..

காலைல சங்கீதாவுக்கு போய் மூணு மசால் தோசை , மூணு சாம்பார் வடை…

லஞ்சுக்கு ‘ தலப்பாக்கட்டு பிரியாணி ‘ யிலேயிருந்து இரண்டு சிக்கன் பிரியாணி , பரோட்டா.. சாப்ஸ்…

ராத்திரி டின்னர் ‘ ஆனந்த பவன் நெய் ரோஸ்ட் , தயிர் வடை…”

“சார் ஆறுமாசம் இருக்கே.. எதுக்கு ஒரே நாள்ல….?”

நிறைய வேலை இருக்கு…சொன்னத செய்…. இன்னிக்கு ஒரு நாள்தான் ஃப்ரீ…ப்ளேன்லேயிருந்து கூப்பிட முடியாதே..!

போய்ச்சேந்ததும் உனக்கு அங்கேயிருந்தே மெனு வந்துடும்..

சப்பாத்தி , ராகி கஞ்சி , பாவக்கா ஜூஸ் .. , கோதுமை சாதம்… ஆர்டர் வந்திட்டே இருக்கும்…போதும்டா சாமி…”

‘யாரை நம்பி நான் பொறந்தேன்.. போங்கடா போங்க…!’

விசிலடித்துக்கொண்டே உள்ளே போனான் கண்ணப்பன்…

சகாதேவன் அளவுக்கு கண்ணப்பனுக்கு விவரம் போதாதுதான்..!

***

விதவிதமான சாப்பாடு , நண்பர்களுடன் சீட்டு , கண்ணப்பனுடன் இரண்டு ரவுண்டு என்று எதெற்கெல்லாம் திலகா தடா போட்டுவிட்டு போயிருந்தாளோ , அதையெல்லாம் வெற்றிகரமாய் செய்து முடிக்கும்போது இரண்டு மாசம் முழுசாய் பறந்து போனது..

“என்னங்க… எப்பிடி இருக்கீங்க..?? காலைல ஓட்ஸ் தானே..? மறக்காம இஞ்சி கஷாயம் குடிக்கிறீங்க இல்ல..?? அர உப்பு போட்டுதானே சாப்பிடறீங்க..??”

“ம்ம்ம்…நீ சொன்னது சொன்னபடி …”

“உங்கள கேட்டா சரிவராது…கண்ணப்பாவ கூப்பிடுங்க…

கண்ணப்பா..சக்கர போடாத காப்பிதானே….?”

“ஆமாம்மா… அதெல்லாம் மறப்பேனா…?”

அதெல்லாம் சரிதான்.. அதற்கப்புறம் விழுங்கும் லட்டு , அதிரசம் , அல்வா இதெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது??

இரண்டு மாசம் ஓடியே போய்விட்டது…

“ஏன் சார்..ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னீங்களே..இதுதானா..?”

இதுவுந்தான்… இன்னும் நாலு மாசம் இருக்கே கண்ணப்பா…!”

இங்கு நடப்பதெல்லாம் எப்படியோ திலகாவுக்கு தெரிந்துவிட்டதோ…?

அணுகுண்டு போட்ட மாதிரி ஒரு ஃபோன்..

“நம்ப மஞ்சுவும் , மோகனும் வேலை விஷயமாக இரண்டு மாசம் டூர் போறாங்களாம்.. அதுனால் நான் இந்த மாசக் கடைசியிலையே பொறப்பட்டு வரேன்..

மஞ்சுவே டூர் முடிஞ்சதும் இங்க வரேன்னு சொன்னா..!”

“கண்ணப்பா.. இன்னும் பத்து நாள்ல அம்மா வராங்களாம்..இனிமே ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது..நாளைக்கே நம்ப மாஸ்டர் பிளான ஆரம்பிச்சாகணும்….

அது என்ன மாஸ்டர் பிளான்..?

***

“கண்ணப்பா.. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் டுடே…நௌ…”

“என்ன சார் சொல்றீங்க?? புரியும்படி சொல்லுங்க..”

“நம்ப திட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்…”

“பெரிய திட்டமா இருக்கும்போலியே…!”

“நீ என்ன பண்ற..போயி அம்மா ரூம்ல ஒரு மர அலமாரி இருக்குதில்ல..அதோட சாவிய எடுத்துட்டு வா..! அவதான எங்கியோ ஒளிச்சு வச்சிருப்பாளே…”

“சார்.. அவுங்க சம்மதமில்லாம யாரும் தெறக்கக் கூடாதுன்னு கண்டிஷணா சொல்லிட்டுத்தான் போயிருக்காங்க…”

“அடப்போடா…எனக்கில்லாத உரிமையா..?? போய் எடுத்துட்டு வா…”

எஜமான விசுவாசம் ஒரு பக்கம் இருக்கட்டும்..இரண்டு மாசமாய் உள்ளே தள்ளியிருந்த சரக்குக்காவது விசுவாசமாயிருக்க வேண்டாமா….?

“இந்தாங்க சாவி….!”

“நீயே திற…”

“சார்..என்ன மாட்டிவிட தீர்மானம் செஞ்சுட்டீங்க! “

சொர்க்கவாசல் கதவு திறந்தால் ஏற்படும் பரவசம் உடலெங்கும் பரவியது சகாதேவனுக்கு…

பீரோவில் அப்படி என்னதான் இருக்கிறது..??

உள்ளே ஒரே அடைசல்…

“உம்..ஒண்ணொண்ணா எடு வெளியே..பாத்து..உடையாம எடு…”

“சார்.என்னிய பாங்க் கொள்ளைக்காரன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே…!!”

“எந்த பாங்கில கொள்ளையடிச்ச…?”

“சார்..நீங்களே என்ன போலீசுல பிடிச்சு குடுத்திடுவீங்க போல இருக்கு… நான் இப்பவே ஊருக்கு கெளம்பறேன்..!!”

இப்படி பேசிக்கொண்டே பீரோவைக் காலி செய்ய ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆகி விட்டது.

அந்த அறையே நிரம்பி வழிந்தது…

விதவிதமான போஸில் பிள்ளையார் சிலை மட்டும் இருபது தேறும்..

படுத்துக் கொண்டு , நடனம் ஆடிக்கொண்டு , ஸ்கேட்டிங் , ஃபுட்பால் , பாராசூட் என்று ..! பாவம்.பிள்ளையார் ஒருவர்தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார் என்று தெரியும்…

நாலைந்து நடராஜர் சிலைகள் , ஏழெட்டு தஞ்சாவூர் ஓவியங்கள் , ரவி வர்மாவின் தமயந்தி, சீதை , சகுந்தலை..கோவில் மணியிலிருந்து பூஜையறை மணிவரை, ஆளுயர சிற்பங்கள் (பாவைவிளக்கு , ராதா கிருஷ்ணன்) கலம்காரி படுக்கை விரிப்புகள்…மண்குதிரை பொம்மைகள்……..!!!

“சார்..இதெல்லாத்தையும் தொடச்சு வைக்கணுமா…? சார் அம்மா மேல இத்தன பிரியம் வச்சிருக்கீங்களே…கொடுத்து வச்சவங்க சார்…”

“ஆமா..சுத்தமா தொடச்சுவை… நாளைக்கு மீதிய சொல்றேன்….

விழுந்து விழுந்து சுத்தம் செய்தான் கண்ணப்பா..

தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாய் இருந்துவிட்டு போகட்டுமே…

மறுநாள் தான் சகாதேவனின் சுய சொரூபம் வெளிப்பட்டது…

***

“கண்ணப்பா..இங்க வா.. அமீர் பாய் கடை தெரியுமில்ல?”

“எந்த அமீர் பாய் சார்..??”

“உனக்கு எத்தன அமீர் பாய் தெரியும்..சொல்லு பாக்கலாம்…”

“அது வந்து. சார்…..”

“தலைய சொறியாத..அதிகப் பிரசங்கி…

என்ன குறுக்கு விசாரண பண்றதே உனக்கு வேலையாப் போச்சு.. எல்லாம் அவ ட்ரெயினிங் தானே..!!”

“சார்..இப்போ அம்மாவ எதுக்கு இழுக்குறீங்க..?? சொல்லுங்க..என்ன செய்யணும்…?

“அவர கையோட கூட்டிட்டு வரணும்.. ஏன் எதுக்குன்னு கேட்ட…”
“அவர் கேப்பாரே…”

“முக்கியமான பிஸினஸ் விஷயம்னு சொல்லு…ஓடி வருவார்….”

சொன்னபடியே பத்து நிமிடத்தில் அமீர் பாயுடன் பிரத்யஷமானான் கண்ணப்பன்..

“சலாம் அலைக்கும் சாப்”

“அலைக்கும் சலாம் அமீர் பாய்.. உங்க வியாபாரமெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு..?”

“சாப். உண்மைய சொன்னா கடையில ஈ , காக்கா இல்லை..இப்படியே போனா , இழுத்து மூட வேண்டியதுதான்…!”

“பாய் சாப்… உங்களுக்கு நல்லநேரம் பொறந்தாச்சு…! உள்ள வாங்க….! பாத்தீங்களா..?? எல்லாமே விலை மதிக்க முடியாத பழைய சாமான்கள். மொத்தமா ஒரு தொகை சொல்லிட்டு அள்ளிட்டு போங்க…இந்த மாதிரி சான்ஸ் வாழ்க்கையில திரும்பி வராது….”

“சார்.. சார்.. கொஞ்சம் பொறுங்க.. அம்மாவுக்கு தெரிஞ்சுது…..அவ்வளவுதான்…!”

கண்ணப்பாவுக்கு பொறுக்கவில்லை…

“அவளுக்கு தெரிஞ்சாத்தானே…?

நீ வாயத் தொறக்காம இருந்தாலே போதும்..

அமீர் பாய் நரி முகத்தில் தான் முழித்திருக்க வேண்டும், சும்மா கேட்டால் கூட கொடுத்துவிடுவார் போலிருந்தார் சகாதேவன்..

பாவம் மனிதர் ரொம்பவே நொந்து போயிருக்க வேண்டும்..திலகா மீது அப்படி என்ன கோபம்?

நாம் திலகாவின் குணாதிசயங்களை தெரிந்து கொண்டால் ஒருவேளை அவர் தரப்பு நியாயம் புரியுமோ…??

***

சாதாரணமாய் சகாதேவன் திலகாவை அநாவசியமாய் கேள்வி கேட்க மாட்டார்..

கண்ணப்பனுடன் காரில் ஏறி வெளியே போனால் கையிலிருக்கும் காசும் , பெட்ரோலும் தீரும்வரை கடைகடையாய். ஏறி இறங்குவாள்..

அவள் மறந்தாலும் , கண்ணப்பன் கிளறி விடுவான்..

“அம்மா.இன்னைக்கு ‘. கனி ஸ்டோர்ஸ் ‘ மறந்திட்டீங்களே….!”

ஒரு நாள் ஸ்டோர் ரூமைத் திறந்தவர் அப்படியே பிரமித்துப் போனார்..சூப்பர் மார்க்கெட் தோற்றது…

வரிசையாய் அடுக்கி வைத்திருந்த பொருட்களைப் பார்த்தால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கு அறிகுறிகள் போல தோன்றின.பதுக்கி வைக்கிறாளா….?

வீடு முழுவத பூம்புகார் போல் சிலைகளும் , ஓவியங்களும் , விரிப்புகளும்..கால் இடறினாலும் ஏதாவது ஒரு சிலை மீதுதான் விழவேண்டும்..

போனமாசம் வாங்கினதெல்லாம் இந்த மாசம் மறந்துவிடுவாள்..

மறந்து விட்டது என்று ஒத்துக் கொள்ளவே மாட்டாள்…

“எதுக்கும் இருக்கட்டும்னுதான் வாங்கி வச்சேன்..”

இதுதான் அவளது தாரக மந்திரம்.

சரி ! ஏதோ ஆசைப்படுகிறாள்.. இனிமேல் வாங்கினாலும் வைக்க இடமில்லை..சரி என்று விட்டு விட்டார் சகாதேவன்…

ஆனால் விதி வேறு ருபத்தில் விளையாடியது…

***

இப்போதெல்லாம் திலகா ரொம்பவே மாறிவிட்டாள்.

இன்னர் வீல் க்ளப் மெம்பர் ஆனதிலிருந்து நடை, உடை , பாவனை எல்லாமே மாறிவிட்டது..

நுனிநாக்கு ஆங்கிலம், மெல்லிய உடலைத் தழுவும் ஷிஃபான் புடவைகள் , குதிகால் உயர்த்த செருப்பு, அழகு நிலைய அப்பாயின்ட்மென்ட்ஸ், அடிக்கடி நடக்கும் விருந்துகளில் காக்டெய்ல், பாஸ்த்தா, மெக்சிகன் குவாக்கமோல், இன்னும்.. இன்னும்..!

போகட்டும்..அனுபவிக்கத் தெரிந்தவள்..

ஆனால் கடைசியாக அவள் செய்த காரியம்….

ஒருநாள் பெரிய வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது…மூன்று பெரிய அலமாரிகள்..

“திலகா…! என்ன இதெல்லாம்…?”

“இருங்க முதல்ல எறக்கி வைக்கட்டும்…!

“கண்ணப்பா..! வீட்டுக்குள்ள இருக்கிற அத்தனை சாமான்களையும் எடுத்து அலமாரிக்குள்ள வை…”

எல்லாவற்றையும் அடைத்து வைத்தான்..

மூன்று நாள் விடாத ஷாப்பிங்…

பீங்கான் ஜாடிகள் , ஆளுயர வீனஸ் , டேவிட் , ஈராஸ் சிலைகள் , வான்கோ , டாவின்சி , மோனே ஓவியங்கள்….! பூங்கொத்து கள்…!!

வீட்டை லூவர் மியூசியம்போல மாற்றிவிட்டாள்…

“திலகா.!! நடராஜர் சிலை நடுவீட்ல அழகா , அம்சமா இருந்துதே….!

“அன்னைக்கு பெல்ஜியத்திலேயிருந்து பிரசிடென்ட் மார்க்ரெட் வந்தாங்க இல்ல.. நம்ப மிதிலா வீட்லதானே கெட்டுகெதர்..!

ஒவ்வொரு தடவ வெளிநாடு போகும்போதும் மிதிலா வாங்கிட்டு வந்து சாமான்கள பாத்தீங்கன்ன அசந்து போயிடுவீங்க.

மார்கரெட் இந்த மாதிரி அழகான வீட்ட பாத்ததேயில்லைன்னு அப்படியே புகழ்ந்து தள்ளிட்டாங்க…!!

அடுத்த மீட்டிங் நம்ப வீட்ல தானே?

“எப்படி கண்டுபிடிச்சீங்க…?”

***

திலகா புறப்பட்டு விட்டாள்.

ஜஸ்ட் லாண்டட்..! குறுஞ்செய்தி….!

“கண்ணப்பா..அம்மாவ கூட்டிட்டு வரவழியில நடந்ததெல்லாம் உளறி வைக்காத…!! உனக்கு சீட்டு கிழிச்சிடுவேன்..ஜாக்கிரதை….!”

வீட்டிற்குள் நுழைந்ததுமே திலகா வீட்டை மூன்று நாலு தடவை சுற்றி சுற்றி வந்தாள்..

சகாதேவனைக்கூட அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை..

கேட்ட கேள்விக்கெல்லாம் ஒற்றை வார்த்தையில் பதில்..

வந்த அலுப்பில் தூங்குவான் என்று பார்த்தால்.. ஊஹூம்…

கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்…

மூன்றாம் நாள்..!

“கண்ணப்பா..இங்க வா..அந்த அலமாரியத் தொற….

கண்ணப்பன் கைகாலெல்லாம் உதறியது…. யார் சொல்லியிருப்பார்கள்..??

“அப்பாடா..பீரோ காலியாதான் இருக்கு… நல்லதா போச்சு…இந்த ரூம்ல இருக்கற சாமானெல்லாம் தூக்கி அதுக்குள்ள வை…!”

சகாதேவன் சொன்னது சரிதான்.. அதற்குள் என்ன வைத்தோமென்றே நினைவில்லை திலகாவுக்கு…

“நாளைக்கு எனக்கு வெளியே முக்கியமான வேலை இருக்கு…எல்லாம் கண்ணப்பன் காலைல எழுந்து ரெடியா மேசைமேல வச்சிடுவான்…எடுத்து போட்டு சாப்பிட்டுக்குங்க..வர நேரமாகும்….”

எங்கெல்லாமோ சுற்றினாள்.கடைகடையாய் ஏறி இறங்கினாள்..

“என்னம்மா வாங்கப்போறீங்க..??”

“பொறுமையா இரு…”

“நல்லவேளை.. நான் என்ன தேடிக்கிட்டிருந்தேனோ எல்லாமே ஒரே இடத்தில கெடச்சிருச்சு…”

ஒரு சின்ன சந்துக்குள் கடை இருந்ததால் கண்ணப்பனுக்கு காரை தள்ளித்தான் நிறுத்தமுடிந்தது..

பெட்டி பெட்டியாய் இரண்டு பேர் சாமான்களைக் கொண்டு அடுக்கினார்கள்…

“இந்தாங்க… ஆளுக்கு நூறூ ரூபா…”

“கண்ணப்பா.. நான் நெனச்சதவிட சுலபமா வேல முடிஞ்சுது.. அதுவும் ரொம்ப சீப்பா….”

“என்னம்மா இருக்குது பெட்டியில..?”

“வீட்டுக்கு வந்து பாரு..நீதானே அடுக்கி வைக்கப்போற….!”

“என்ன திலகா.?? நேரமாகும்ன ? இவ்வளவு சீக்கிரத்தில் வீடு திரும்பி நான் பாத்ததேயில்ல…??”

“சொன்னா நம்பமாட்டீங்க….எம்மனசுல என்ன இருந்ததோ எல்லாமே ஒரே எடத்துல….!”

(மனசுலயா? வீட்டிலயா..?)

கண்ணப்பன் ஓரொரு பெட்டியாய் பிரிக்க பிரிக்க சகாதேவன் முகம் பேயறைந்தமாதிரி ஆனது..கண்ணப்பனுக்கோ மயக்கம் வராத குறைதான்..

“இருபது முப்பது விநாயகர் , நடராஜர் , கோவில் மணியிலிருந்து பூஜையறை மணிவரை….! ரவிவர்மா ஓவியங்கள்…. தமயந்தி, சீதை, சகுந்தலை..! கலங்காரி விரிப்புகள்….

போன மச்சான் திரும்பி வந்தான்….!

“இதெல்லாம் எங்க வாங்கின ?”

“சொல்றேன்..கேளுங்க…நான் மஞ்சு வீட்ல நொழஞ்சதும் அப்படியே நம்ம ஊருல இருக்காமாதிரி….என்ன அழகா வீட்ட அலங்காரம் பண்ணியிருக்கா தெரியுமா..??

அவ வீடு மட்டுமில்ல..அவ ஃப்ரெண்ட்ஸ் வீடுங்க எல்லாமே கலைக்கோவில் மாதிரி..! நாமதான் வெளிநாட்டு மோகம் பிடிச்சு அலையறோம்…

மஞ்சு சொன்னா..”மார்கரெட் பாத்தா அசந்து போயிடுவாங்கன்னு! ‘நீதான் அடுத்த பிரசிடென்ட்’னு அடிச்சு சொல்றா..

தேடித்தேடி அலஞ்சப்புறம்தான் நம்ப மூலக்கட சையது பாய் கடை நெனவுக்கு வந்தது…”

“எந்த சையது பாய்….? நம்ப அமீர்பாயோட மச்சானா…?

“அவரேதான்…. எல்லாத்தையும் எடுத்துக்குங்க….மொத்தமா இருபதாயிரம் குடுத்தா போதும்..உங்க முகத்துக்காகத்தான் இத்தன கம்மியா தரேன்னாரு…அவர மாதிரி நல்ல மனுஷன இந்த காலத்துல பாக்க முடியாது…மஞ்சு மூணு லட்சம் செலழவழிச்சு வாங்கியிருக்கா!! என்னோட அதிர்ஷ்டம் இருபதாயிரத்துக்கு கெடச்சுது..!”

“சார்..மொத்தமா ஐயாயிரத்துக்கு மேல தேறாது.. இதெல்லாம் இப்போ யார் சாப் வாங்கறாங்க…?”

அமீர் பாயின் வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது…

இதோ. வாங்க ஒரு ஏமாளி இருக்கிறாளே!

“கண்ணப்பா..வா..எல்லாத்தையும் பளிச்சுன்னு தொடச்சு வை.. அடுத்த வாரம் மீட்டிங்…”

கண்ணப்பன் சகாதேவனையும் , திலகாவையும் மாறிமாறி பார்த்தான்…!

சகாதேவன் மேலிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதுபோல தோன்றியது…!
அதே வேளை திலகாவைப் பார்த்தால் பாவமாயிருந்தது..!

எசமான விசுவாசம்…? யாருக்கு..??

லாபம் யாருக்கு..??

கண்ணப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை…..

‘யாரை நம்பி நான் பொறந்தேன்…..?’

பாடிக்கொண்டே எல்லா சாமானையும் பளிச்சென்று துடைத்துக் கொண்டிருக்கிறான்!

அடுத்த மாஸ்டர் பிளான் என்னவாயிருக்கும் என்று யோசித்தபடி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *